Advertisement

சம்யுக்தா மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெய் சமையல் காட்டிற்குச் சென்று தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து முகத்தில் தெளித்தான்.

“ஹேய்! சம்யு..  சாரிடி.. சாரிடி.. கண்ணை முழிச்சு பாரு” என அவளைத் தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு கன்னத்தை தட்டி எழுப்பினான்.

“பிள்ளைகள் இருவரும் பயந்து போய் அம்மா” என அழ ஆரம்பித்தனர்.

“சம்யுக்தா  மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள்.  அவனது முகத்தைப் பார்த்தவள் மீண்டும் அதே கோபம் குறையாமல் அடிச்சுட்டு பாசமா இருக்கற மாதிரி வேற வேஷம் போடுறிங்களா?  எல்லாமே போதும்” என அவனை விட்டு விலகி அமர்ந்தாள்.

“மித்ராவும்,  ஆரவும் சம்யுக்தாவை மம்மி”  எனக்  கட்டிக் கொண்டனர்.

“மம்மி..  என்ன  ஆச்சு மம்மி. டாடி அடிச்சது வலிக்குதா மம்மி” என  மித்ரா தன் தாய் அவளின் கண்ணீரை தனது பிஞ்சு கரங்களால் துடைத்துவிட்டாள்.

மித்ராவின் அன்பான   குரலைக் கேட்ட சம்யுக்தா  உடைந்து போய் அழத் தொடங்கினாள்.

இந்த பிள்ளைகளுக்காக தான் நான் உயிர வச்சிட்டு இருக்கேன்.  இல்லனா  நான் உங்களோடு எதுக்கு இத்தனை போராட்டத்தோடு குடும்பம் நடத்தனும்.  எப்பவோ  தூக்கி வீசிட்டு போயிருப்பேன்.

நீ பேசினா வார்த்தையோட வலி அப்படி. அதான்  கோபப்பட்டு அடிச்சுட்டேன்.  அடிச்சதுது தப்புதான். அதேசமயம் நீ எங்க அம்மாவ  அப்படி பேசி இருக்க கூடாது.  அவங்க எனக்காகவே வாழறவங்கடி.  எங்க அம்மாவோட பாசத்தை பத்தி உனக்கு என்ன தெரியும்.

“அய்யா சாமி.   உங்க அம்மாவ பத்தி இனி  வாயே  திறக்க மாட்டேன்.  வாழ்க்கைய அழிக்க முடிவு பண்ணிட்டீங்க.  நீங்க நடத்துங்க”  என்றாள்.

வாழனும்னு தான் நான் இந்த முடிவ எடுத்திருக்கேன்.

உங்க வாழ்க்கைக்கு நீங்க முடிவு எடுங்க.  என் பிள்ளைகளோட எதிர்காலத்துக்கு நீங்க முடிவு எடுக்கத் தேவையில்ல.

மேலமேல பேசினா சண்டை வந்துட்டே தான் இருக்கும்.  நீ என்ன சொன்னாலும் நான் கேட்க போறது இல்ல.  என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்ல.

அங்க போய் கஷ்டப்படுறதுனு  முடிவ எடுத்துட்டா  நீங்க மட்டும் போங்க.  எங்கள இழுக்காதிங்க.

உங்களை எப்படி இங்க தனியா விட்டுட்டு போக முடியும்.  தேவை இல்லாத வார்த்தைக்க விளக்கம் கொடுக்க நான் தயாரா இல்ல.  நான் போய் வீட்டை காலி பண்ணி பேசிட்டு வரேன்.

எக்கேடோ கெட்டு போங்க.

பசங்களோட ஸ்கூல்ல நான் பேசிட்டேன்.  டீசி  கொடுக்க ஒத்துக்கிட்டாங்க. நாளைக்கு போய்ட்டு டீசி வாங்கிட்டு அங்க மாத்தி  சேர்த்துக்கலாம்.

பாதியில் கூட்டிட்டுப் போன யாரு சேர்த்துப்பாங்க.

எனக்கு எங்க ஊர்ல செல்வாக்கு இருக்கு.  அது என் பொறுப்பு. அதை பத்தி நீ யோசிக்க வேண்டாம்.

இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.

“ப்ளீஸ் சம்யு. என் தங்கம்ல. சூழ்நிலையை புரிஞ்சுகோடி.  நீ இப்படிப் பிடிவாதம் பிடிச்சா  மனசு உடைஞ்சு போயிடுவேன். எனக்கு வேற வழி தெரியல சமாயு” ”  என கண் கலங்க.

அவன் கலங்கிய கண்களைப் பார்த்த சம்யுக்தா மனசு கேட்காமல் எதுவும் பேசாமல் அமைதியாக தனது அறைக்குச் சென்றாள்.

ஆரவ்,  மித்ரா ரெண்டு பேரும் டிவி பார்த்து கொண்டிருக்க.

நான் மம்மிய சமாதானப்படுத்திட்டு  வரேன். நீங்க டிவி பாருங்க செல்லம்குட்டீஸ்..

“மம்மி பாவம் டாடி.  இனிமே அடிக்காதீங்க. ப்ளீஸ்” என  ஆரவ்  சொல்ல.

“மித்ராவும் ஆமாம் டாடி. மம்மி  பாவம்” என்றாள்.

“சரிடா இனி டாடி  மம்மிய அடிக்க மாட்டேன்.  டாடி சாரி கேட்டுக்குறேன்”  என குழந்தைகளை அன்போடு தடவி கொடுத்து விட்டு  தனது அறைக்கு  சென்றான்.

“சம்யு.. சத்தியமா நான் வேணும்னு பண்ணல டா. ப்ளீஸ் சாரி” என அவளது  கரங்களை பிடித்தான்.

அவனது கரங்கள் வேகமாக தட்டிவிட்டு திரும்பி அமர்ந்தாள்.

“இந்த ஒரே ஒரு தடவை மட்டும் எனக்காக விட்டுக்கொடு சம்யு. இதுக்கு மேலயும் நான் சரி இல்லைன்னு நினைச்சேனா  நீ கொடுக்கிற தண்டனைய  நான் ஏத்துக்கிறேன்.  ப்ளீஸ்” என்றான்.

“அவன் என்ன சமாதானம் கூறினாலும் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படுமே. டான்ஸ் க்ளாஸ், யோகா , கராத்தேனு இத்தனையும் விட்டு போகனுமே” என்று மனதிற்குள் அஞ்சினாள்.  ‘இன்னொரு காரணம் கிராமத்திற்கு சென்றால் பிள்ளைகளை நாகரீகம் போய்விடும்’ எனவும் நினைத்தாள்

மனதில் ஆயிரம் யோசனைகள் சிந்தனைகள் வந்தாலும் இறுதியில் அவனது முடிவு கட்டப்படும் சூழ் நிலைக்கு தள்ளப்பட்டாள்.

“சம்யு  கொஞ்ச நாளைக்கு மட்டும் எனக்காக பொறுத்துக்கோடா.  ப்ளீஸ்” என அவளது கைகளை பற்றினான்.

அவளது மனம் வேதனையில் இறுகிப்போய் இருந்தாலும் வேறு வழியின்றி தலையசைத்தாள்.

தேங்க்ஸ் டார்லிங்.

சம்யுக்தா வேண்டா வெறுப்பாக அவன் முகத்தை பார்க்க விருப்பமில்லாமல் திரும்பிக் கொண்டாள்.

இப்பவாச்சும் இந்த பூ வச்சு விடவா சம்யு.

“திரும்பி அவனை பார்த்து முறைத்தாள்.  இதுக்கு மேல என் பொறுமைய சோதிக்காம எந்திரிச்சு வெளியில் போயிடுங்க” என்றாள்.

இவ்வளவு சொல்லியும் உன் கோபம் குறையலையா?

“தயவு செஞ்சு எதுவும் பேசாதிங்க. வெளியில போங்கனு  சொன்னேன்”  என தனது குரலை உயர்த்த.

ஜெய்  அமைதியாக வெளியே வந்தான்.

“மித்ரா இங்க வாடா” என தனது செல்ல மகளை அருகில் அழைத்தான்.

மித்ராவும் அருகில் வந்து நின்றாள்.

“நான் போய் ஹவுஸ் ஓனர பாத்துட்டு வந்தர்றேன்.  நாளைக்கு நம்ம பாட்டி வீட்டுக்கு போயிடலாம்”  என்றான்.

“மித்ராவுக்கு  என்ன சொல்லுவது” என்று தெரியவில்லை.  தனது தந்தையை மிரள மிரள பார்த்தாள்.

“என்னடா அப்படி பார்க்கிற?”

“நத்திங் டாடி” என்றாள்.

“என்னடா டாடி கிட்ட பயமா?”  என்றான்.

“நோ டாடி”  என தலையசைத்தாள்.

மம்மி  தப்பா பேசினா. அதனால டாடி அடிச்சுட்டேன்.  நீங்க ரெண்டு பேரும் என் செல்லம்டா.  உங்கள அடிக்கமாட்டேன்.

இரு பிள்ளைகளும் மௌனமாக நின்றனர்.

பாட்டி வீட்டுக்கு  வந்து பாருங்க. உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.  திரும்ப சிட்டிக்கு வரணும்னு நீங்க ஆசைப்பட மாட்டீங்க.

“ஓகே டாடி” என்றனர்.

ஜெய் கிளம்பி ஹவுஸ் ஓனரைப் பார்க்க சென்றான்.  அவரிடம் பேச வேண்டிய விஷயங்களை பேசி விட்டு மறுநாள் வீட்டை காலி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு  வீட்டிற்கு வந்தவன்,  கையோடு தனது அம்மா லட்சுமிக்கு கால் பண்ணினான்.

சொல்லுடா ஜெய்.  பசங்க எப்படி இருக்காங்க. நீ நல்லா இருக்கியாப்பா. சம்யுக்தா என்ன பண்றா?

எல்லாம் நல்லா தான் இருக்கோம்மா. அம்மா ஒரு விஷயம் சொல்ல தான் கால் பண்ணேன்.

என்ன ஜெய். சொல்லுப்பா?

அது வந்தும்மா.  நாளைக்கு வீட்ட காலி பண்ணிட்டு ஊருக்கு வரதா முடிவு பண்ணிட்டேன்.

நாளைக்கே வரீங்களா? ரொம்ப சந்தோஷமா இருக்குடா. நீ வர பத்து நாள் ஆகும்னு நெனச்சேன்.

இல்லம்மா.  உங்க கிட்ட நான் எதையும் மறைக்க மாட்டேன்னு உங்களுக்கே தெரியும்.

ஆமாடா. இப்போ அதுக்கு என்ன?

“உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என ஜெய் தயங்க.

என்கிட்ட சொல்ல என்னடா தயக்கம்.

நான் வெளிப்படையாவே சொல்கிறேம்மா.  எனக்கு இங்கே வேலை போயிடுச்சு.

அச்சோ! என்னடா சொல்ற.

ஆமாம்மா. கொஞ்சம் சமாளிக்க முடியல. கஷ்டமா இருக்கு.

புள்ளைங்கள வச்சிட்டு கஷ்டப்பட வேணான்டா. நீ கிளம்பி வந்துடு ஜெய்.

“ஆத்தூரில வாங்குன நிலத்துக்கு பத்து லட்ச ரூபாய் கட்டணும். அது என்னால முடியல.  அதனால” என தயங்கி வார்த்தையை நிறுத்த.

அதனால.. என்னப்பா பண்ண போற. சொல்லு.

ஊருக்குள்ள இருக்க அந்த அஞ்சு சென்ட் நிலத்த வித்து கொடுத்தா எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்மா.

என்னடா சொல்ற. தெரிஞ்சி தான் பேசறியா?

வேற வழி இல்லாம்மா.  கடனுக்கான வட்டி ரொம்ப அதிகமாகிடும்.

அதுக்குனு காலங்காலமா வெச்சிருந்த நிலத்தை வித்து கொடுனு  கேட்டா  உங்க அப்பா உசுரையே விட்டுறுவாருடா.

அம்மா ப்ளீஸ். எனக்கு வேற வழி தெரிலம்மா. நீங்க சொன்னா அப்பா நிச்சயமா கேட்பாங்க.

என்னை என்னடா பண்ண சொல்ற.

அம்மா  வேலையும் போயி அங்க வந்து உட்கார்ந்துட்டு எப்படி நான் வாங்கின கடன  கட்ட முடியும்.

நிலத்தில  இறங்கி பாடுபட்டு கஷ்டப்பட்டு தான் குறைந்த கட்டணும்.

அம்மா நான் என்ன சொன்னாலும் அப்பாவுக்குத்தான் புரியாது.  உங்களுக்கு கூடவா புரியாது.  எனக்காக பேசி ஏற்பாடு பண்ணி குடுங்கம்மா.

“நீ முதல்ல ஊருக்கு கிளம்பி வா.  நான் பேசுறேன்”  என லட்சுமி கூறினார்.

“சரி” என மனதில் ஒரு நம்பிக்கையுடன்  வேண்டா வெறுப்பாக அன்றைய பொழுதை ஓட்டினான்.  “எப்ப  பொழுது விடியும்” என்று காத்திருந்தான்.

ஆதவன் ஒளிக்கற்றைகளை  பூமியில் பரவவிட்டு ஒளி  கொடுத்து விடியலை பறைசாற்றினான்.

தனது பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு சென்று சரியானதொரு காரணத்தை சொல்லி பேசி டிசி வாங்கினான்.

சம்யுக்தா  வழக்கம்போல ஆர்டர்  செய்துவிட்டு வேலைக்கும் செல்லாமல் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதை அறிந்து கொள்ளவும் முடியாமல் அமர்ந்திருந்தாள்.

தனது பெற்றோருக்கு மொபைல் மூலமாக தொடர்பு கொண்டு நடந்த விஷயங்களைக் கூறினாள்.

மாப்ள சொல்ற மாதிரி ஏதாவது ஒரு மூலைய வித்து   கடன  கட்டிட்டு அப்புறமா கூட நம்ம வீட்டுக்கு வந்துருமா?  அதான் புத்திசாலித்தனம்.

நான் வீட்டுக்கு வரக்கூடாதாம்மா?

“நான் வீட்டுக்கு வர வேண்டாம்னு சொல்லல.  அவசரப்பட்டு இப்ப நம்ம வீட்டுக்கு வந்தா சூழ்நிலையை மாறிப் போய்டும்.  கொஞ்சம் அனுசரிச்சு கொஞ்ச நாளைக்கு மட்டும் அங்கு இரும்மா” என  சம்யுக்தாவின்  அம்மா மங்களம் கூறினாள்.

நான் இங்க இருந்து கஷ்டப்படணும். அப்படி தான.

புரிஞ்சிக்கோமா. வீட்டுக்கு வந்தா நீயும் மாப்ளையும் சேர்ந்து தான் வரணும்.

உங்க வரட்டு கௌரவம் தடுக்குதுனு சொல்லுங்க.

நீ மட்டும் வந்தா ஊர்ல நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க சம்யுக்தா.

அப்போ ஊருல இருக்க நாலு பேருக்காக தான் நீங்க வாழறிங்க.

“அப்படி இல்ல சம்யுக்தா. நான் சொல்றத கேளு. உன் நல்லுதுக்கு தான் சொல்லுவேன்” என சம்யுக்தாவை அங்கு இருக்க வைக்க தங்களால் கூற முடிந்த காரணங்களை எல்லாம் கூறி அவளை சமாதானப்படுத்தி மருமகனுடன் போகச் சொன்னார்.

சம்யுக்தாவும் வேறுவழியின்றி கிராமத்திற்கு செல்வதற்காக தன்னுடைய மனநிலையை தயார்படுத்திக் கொண்டாள்.

ஜெய், சம்யுக்தா இருவரிடமும் மௌனமே அதிகமாக இருந்தது.. ஆர்டர் செய்த உணவு வந்தும் இருவரும் சாப்பிடாமல் இருந்தனர். நிமிடங்கள் கரையத் தொடங்கியது.

இங்கு இசையின் சித்தி மஞ்சு மணக்க மணக்க மீன் குழம்பு வைத்து மொத்த குடும்பத்திற்கும் விருந்து வைத்துக்கொண்டிருந்தார்.   கூட்டுக்குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவில்லாமல் இருந்தது.

“எல்லோரும் இருக்கும்போது பெரியவன் ஜெய் சொன்ன விஷயத்தை தனது கணவரிடம் கூறினால் ஏற்றுக்கொள்ள மாட்டார்” என்ற லட்சுமிக்கு நன்றாகவே தெரியும்.

‘தனது கணவர் மிகுந்த மகிழ்ச்சியான இந்த தருணத்தில் இருக்கும் போதே  தனியாக அழைத்துச் சென்று  கூறினால் சம்மதிப்பார்’ என நினைத்தாள்.

தனது கணவரை வெளியில் அழைத்தாள்.

“இதைப்பார்த்த இசை அத்தை மாமா கிட்ட ஏதோ இரகசியம் பேச போறாங்க” என சத்தமாக கூற.

மல்லிகை அவளது வாயை அடக்கினாள்.

மெல்லிசை தொடரும்….

Advertisement