Advertisement

“பிளாக்கி என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கியா?” என  ஆதி இசைக்கு மெசேஜ் அனுப்பி இருந்தான்.

கோபப்பட்ட இசை,  உடனே ஆதிக்கு கால் பண்ணினாள்.

‘மெசேஜ் அனுப்புனா லூசு கால் பண்ணது பாரு’ என நினைத்துக் கொண்டு, பிளாக்கி எதுக்கு கால் பண்ற”  என கேட்க.

“என்னைய அப்படி கூப்பிடாதீங்கனு பல முறை சொல்லி இருக்கேன்.  கருப்புனா உங்களுக்கு என்ன கேவலமா?  இஷ்டப்பட்டா பேசுங்க. இல்லன்னா பேசாம போங்க.  அவ்வளவுதான் சொல்லிட்டேன்.  அப்புறம் வாயிலிருந்து வேற மாதிரி வார்த்தைகள் வந்துடும்.

இப்ப என்ன சொல்லிட்டேன்னு பெரிய இவ மாதிரி பேசுற.

நான் அப்படித்தான். என் தன்மானத்தை சீண்டிப் பார்த்து கேவலப்படாதீங்க.  எனக்கு இசைப்பிரியானு பேரு வச்சிருக்காங்க.

“ஹா ஹா ஹா” என சிரித்தான்.

அதற்கு இசை,  “நான் ஒன்னு சொல்லவா?” எனக் கேட்டாள்.

“சொல்லு..சொல்லு” என்றான்.

எங்க கிராமத்துல ஒரு பழமொழி இருக்கு.  “காக்கா கரிச்சட்டிய பழிச்சிதாம்னு”  சொல்லுவாங்க.

ரொம்ப ஓவரா பண்ணாத.  உன்னை விட நான் கலரா தான் இருக்கேன்.

உங்க கலர நீங்களே வெச்சுக்கோங்க. நான் கேட்கல. இன்னொரு வாட்டி அப்படி சொன்னீங்க. அப்புறம் நான் வேற மாதிரி சொல்ல வேண்டி இருக்கும்.

“உன்கிட்டலாம் பாட்டு வாங்கனும்னு என் தலையெழுத்து பாரு.  எங்க அம்மா ஏதோ ஒரு உளறிட்டு இருந்தாங்க. எனக்கு சரியா புரியல.

அத்தை சொன்னது உங்களுக்கு உளரலாம தெரியுதா? நம்ம ரெண்டு பேருக்கும்  கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்றாங்க. சின்ன வயசுலயே பேசி முடிவு  பண்ணது தானே.  ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்கிறீர்களே மாமா.

அடியேய்!  அது சின்ன வயசுல பேசுனது. இன்னுமா அதையே  நினைச்சுட்டு இருக்காங்க.

சின்ன வயசோ? பெரிய வயசோ? நினைப்பு எப்பவும் ஒன்னு தான மாமா.

காலத்துக்கு ஏத்த மாதிரி நாம தான் மாத்திக்கணும் பிளாக்கி.

ஓஹோ! சரிடா ப்ளாக்கா.

என்னது பிளாக்கா?  ரொம்ப தாண்டி கொழுப்பு.  நான் ஆம்பள பேசலாம். நீ பேசக்கூடாது.

இப்பதான் சொன்னீங்க.  காலத்துக்கு ஏத்த மாதிரி மாத்திக்கணும்னு. அதான் நானும் கொஞ்சம் மாத்திக்கலாம்னு.

“நீ ஒண்ணும் பண்ண வேணாம்.   அப்படியே இரு” என்றான்.

“அப்புறம் மாமா.”

அப்புறம் என்ன? அவ்வளவு தான். போனை வை. எனக்கு வேலை இருக்கு.

நிஜமா அவ்வளவுதானா?

ஆமா. இன்னும் என்ன சொல்லனும்னு எதிர்பாக்கிற.

நீங்க எப்ப ஊருக்கு வருவீங்க மாமா.

எதுக்கு வரணும்.

என்ன மாமா இப்படி கேக்குறீங்க. கொஞ்சம் முன்னாடி தானே அத்தை சொன்னாங்க.  நீங்க வந்தா தான  நிச்சயதார்த்த தேதிய குறிக்க முடியும்.

எங்க அம்மாவுக்கு வேற வேலையே இல்ல.  எனக்கு லீவு எல்லாம் கிடையாது.

அப்போ உங்களுக்கு எப்ப லீவோ அப்போ நிச்சயதார்த்தம் வச்சிக்கலாம் மாமா.

‘இவ ஒரு முடிவோட தான் இருப்பா போலவே’ என நினைத்தான்.

என்ன மாமா சைலண்ட்டா இருக்கீங்க.  அதுக்குள்ள நம்ம லைஃப் பத்தி இமேஜின் பண்றீங்களா?

‘ஹிக்கும்.  நேரிலேயே பாக்க முடியல  இதுல இமேஜின்ல வேற பார்க்கணுமா? என்ன கொடுமை சரவணன்’ என நினைத்துக் கொண்டவன்,  ஆமா..   ஆமா..  அது ஒண்ணுதான் குறைச்சலா இருக்கு

என்ன மாமா பொசுக்குனு இப்படி சொல்றிங்க.

நான் வேலையா இருக்கேன்.

அப்புறம் பேசுறேன்.

மாமா.. மாமா.. ஒரு நிமிஷம்..

இன்னும் என்ன ப்ளாக்கி.

அப்படி கூப்பிடாதிங்கனு சொல்லி இருக்கேன்.

சரி. சொல்லு இசை.

நான் உங்ககிட்ட ஒண்ணு  சொல்லணும்.

எனக்கு இப்ப வேலை இருக்கு.  அப்புறமா பேசறேன்

ப்ளீஸ்.  ஒண்ணே  ஒண்ணு தான் மாமா.

சரி சீக்கிரம் சொல்லு

சின்ன வயசுல நாம ரெண்டு பேரும் எப்படி எல்லாம் விளையாடினோம்.

அதுக்கு என்ன இப்போ?

அதெல்லாம் எப்பவாது நினைச்சு பாக்குறீங்களா?

‘அச்சோ!  கடுப்பேத்துறாளே. நான் எதுவும்  நினைச்சது இல்லனு  சொன்னா விட மாட்டா.  ஓகேன்னு சொன்னா விட்டுடுவா’  என நினைத்தவன், “நான்  அடிக்கடி நினைச்சுட்டு தான் இருக்கேன் இசை. அதை எல்லாம் மறக்க கூடிய நினைவுகளா?”  என்றான்.

அப்படின்னா அந்த அம்மன் கோவில்ல ஆலமரத்தடியில் அந்த அறியாத வயசுல எது கல்யாணம்னு தெரியாம ரெண்டுபேரும் கையைப் பிடிச்சுக்கிட்டு  பாராங்கல்ல

அக்னினு  சொல்லி   சுத்தி வந்தமே அது நெனப்பிருக்கா? மாமா.

“அடிப்பாவி விவரம் தெரியாத வயசுல ஏதோ தெரியாம உன் கைய புடிச்சி சுத்தி இருப்பேன்.  அதை இப்ப நினைவுபடுத்தறாளே.  இவளை என்ன சொல்லி கட் பண்றது” என யோசித்தான்.

“மாமா உங்கள தான் கேட்கிறேன். ஒவ்வொரு விஷயமாக நினைவுபடுத்த கற்பனை உலகத்துக்கே போயிட்டீங்க போல” என்றாள்.

ஆமா இசை.  ( மனசாட்சி : அதெல்லாம் மறக்கக் கூடிய நிகழ்வுகளா?  இப்ப நினைச்சா லும் சபக்குனு இருக்கே என நினைத்து) இசை எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.

எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கேன்.

நான் ஃப்ரீ ஆகிட்ட பேசவா?

எவ்வளவு ஆசையா பேசுறேன்   நீங்க என்ன மாமா எப்படி இருக்கீங்க. கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணா எவ்வளவு ஜாலியா இருக்கும்.

‘உனக்கு நலீலா தாண்டி இருக்கும். நான் ரொம்ப பாவம்’ என நினைத்து கொண்டு,  “அதுக்கெல்லாம் இப்போ நேரம் இல்ல”   என்றான்.

கல்யாணம் முடிஞ்ச பிறகு லைஃப் எப்படி இருக்குமோ  தெரியாது. இப்பவே ஆசை தீர லவ் பண்ணனும் மாமா.

‘அடிப்பாவி! அதுக்குள்ள கல்யாணம் வரைக்கும் போயிட்டியா?’  என நினைத்துக் கொண்டு,  அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். இங்க வேலை முடிக்காம நான் இப்படியே  பேசிட்டு இருந்தாமேனேஜர்  திட்டுவாங்க. புரிஞ்சிக்கோ இசை.

ஓகே மாமா.  நீங்க வேலைய முடிங்க.

“சரி இசை. பை” என கட் பண்ண போனான்.

“மாமா. இன்னும் ஒண்ணே ஒண்ணு  மட்டும் சொல்லவா?” என கேட்க.

“எப்படியும் இவ  ஐ லவ் யூ மாமானு தான்  சொல்ல போறா.  அந்த வார்த்தையை அவ வாயிலிருந்து சொல்லி நாம கேட்க கூடாது.  அப்படி ஒரு வார்த்தையை அவர் வாயிலிருந்து வரவே கூடாது. ஆதி  உஷாரா  இருடா” என அவனுக்கு ஆதி தனக்குத்தானே சொல்லிக் கொண்டு,  “சாரி பிளாக்கி.   மேனேஜர்  வந்துட்டாரு. நான் அப்புறம் பேசுறேன்” இணைப்பை துண்டித்தான்.

“இந்த மாமா ஏன் தான் இப்படி இருக்கு.  என்னோட மனச கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேங்குது. இவங்க இஷ்டத்துக்கு முடிவு பண்ணிக்கிறாங்க.  நான் என்ன பண்றது.  ஊருக்கு வாங்க  பேசிக்கிறேன்” என புலம்பி கொண்டிருந்தாள்.

“என்னடா மச்சி ஆட்டை பலி கொடுக்க உங்க வீட்டில தயாராகிட்டாங்க போல”  என சிரித்தான்.

உனக்கு என்னடா நீ சிரிப்ப.  கஷ்டப்படுறவன்  நான்தானே.

நான் உன் நல்லதுக்கு தாண்டா  சொல்றேன்.  இதுங்களயெல்லாம் கட் பண்ணிட்டு வீட்ல சொல்ற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோ. நிம்மதியா இருப்படா.

ஆமாடா. இந்த  யாஷிகா சரியில்ல. எப்ப பார்த்தாலும் நைநைனு காத்துக்கிட்டே இருக்கா.  எனக்கு அவ சரிப்பட்டு வர மாட்டா.  அதனால நான் அவகிட்ட ஒரு சண்டை போட்டு முதல்ல அவள  கட் பண்றேன்.

இதெல்லாம் ஒரு பொழப்பா டா.

ஆமாடா.  இது என்னோட லைஃப். என்னை பொருத்த வரைக்கும் நான் பண்றது சரி.

இப்படி எல்லாம் தேடி நீ செலக்ட் பண்ணிட்டா லைஃப்ல உனக்கு சண்டையே வராது.  நீ நிம்மதியா வாழ்ந்திடுவ.  அப்படித்தானே.

“ஆமா மச்சி. என்னோட செலக்சன் சரியா இருந்தா லைஃப் சரியா இருக்கும்” என்றான்.

அப்போது மிர்த்திகாவிடம் இருந்து கால் வந்தது.

மிர்த்திகா தான் கால் பண்றா.  இவ வேற நேரம் காலம் தெரியாம கால் பண்றா.

நீ எவ கால் பண்ணாலும் இதே டயலாக் தான் டா சொல்ற.

டேய்!  நான் பேசணும்னு ஆசைப்படும் போது தான் பேசுவேன். இவளுங்க இஷ்டத்துக்கு கால் பண்ணாலாம் பேச முடியாது.

நீ நினைக்கிற மாதிரி தான அவங்களும் நினைப்பாங்க.

மத்தவங் எண்ணங்களுக்கு என்னால மதிப்பு கொடுக்க முடியாதுடா.

நீ எக்கேடோ கெட்டு போ. இதுக்காக  ஒரு நாள் நீ  வருத்தப்படுவ.

“அப்படியே வருத்தப்பட்டாலும் உன்கிட்ட சொல்ல மாட்டேன். போடா” என்றான்.

மீண்டும்  மிர்த்திகா விடாமல் போன் செய்து கொண்டே இருக்க.

“ஆதி போனை எடுத்தான்.  என்னடி சும்மா கால் பண்ணிட்டு இருக்கே” என கோவமாக கேட்க.

ஈவினிங் வெயிட் பண்ண சொன்னேன் இல்ல.  நீ மறந்துட்டா என்ன பண்றது. அதான் ஞாபகப்படுத்துலாம்னு தான் கால் பண்ணுனேன்.

ஈவினிங் மீட் பண்ணனும். அவ்வளவுதான.  நான் கரெக்டா அஞ்சு மணிக்கு நீ சொல்ற இடத்துல இருப்பேன்.

நான் சொல்ற ஷாப்பிங் மால் வந்துருடா. எங்க போலாம்னு டிசைட் பண்ணிட்டு மெசேஜ் பண்றேன்.

என்னது ஷாப்பிங் மாலுக்கா.

ஆமாடா.

இப்ப அங்க எதுக்கு?

ஆல்ரெடி இருக்க டிரஸ் எல்லாம் பழசாகிடுச்சி.  அதான் புதுசு எடுக்கலாம்னு.

ரீசண்ட்டா  தானே எடுத்த மாதிரி ஞாபகம் இருக்கு.

அது எடுத்து மூணு மாசம் ஆகுது டா.

ஏண்டி.  மூணு மாசம் தான ஆகுது.

போடா.  ஒரு டிரஸ்  மூணு மாசத்துக்கு தான் போட முடியும்.  நமக்குனு ஒரு  ஒரு கெத்து இருக்கு.

மேடம் மூணு மாசத்துக்கு மேல  போட மாட்டீங்களா?

அப்படினு  சொல்ல முடியாது.  அப்ப அப்பபோ  புதுசு புதுசா போடணும்னு கொஞ்சம் எதிர்பார்ப்பேன்.  ஐடி ஃபீல்டு இல்ல.  அப்ப தாண்டா மரியாதை இருக்கும்.

“அது சரி சரி.  மெசேஜ் பண்ணு வரேன்” என்றான்.

கரெக்டான டைமுக்கு வர.  வெயிட் பண்ண வச்ச.  அவ்ளோ தாண்டா. நான் எப்படி பேசுவேன் தெரியுமில்ல.

“நீ முதல்ல கரெக்ட் டைமுக்கு வா” என்றவன் ஃபோன் இணைப்பைத் துண்டித்தான்.

“லைஃப் பார்ட்னர செலக்ட் பண்றேன்  செலக்ட் பண்றேன்னு கடைசியாக கடங்காரனா தான் போக போற பாரு” என்றான் யாதவ்.

நான் எதுக்குடா கடன்காரன் ஆகப்போறேன்.

“அவ கூப்பிடுறானு ஷாப்பிங் அவ கூட போனா மொத்த செலவையும்  உன் தலையில தான் கட்டுவா. பாத்துக்கோ”  என்றான் யாதவ்.

“அது நடக்காது மச்சி. இந்த ஆதி யாருனு நினைச்ச. இவ்வளவு தான் என்னைய நீ புரிஞ்சிக்கிட்டதா? ஹாஹாஹா” என சிரித்தான்.

மெல்லிசை தொடரும்….

Advertisement