Advertisement

நீ இப்படி செய்வேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ஜெய்.  உனக்கு  மரியாதை கொடுக்கக் கூட தோணல.

“சாரி சார்.  இந்த ஒரு முறை மட்டும்” என ஜெய் பேச முடியாமல் விக்கித்து நின்றான்.

குடும்ப சூழ்நிலை சார்.  உங்ககிட்ட கேக்க முடியல. ஏதோ ஒரு வேகத்துல தப்பு பண்ணிட்டேன் சார்.  இந்த ஒரு முறை மட்டும் மன்னிச்சிடுங்க.

மன்னிக்கிற அளவு பெருந்தன்மை எல்லாம் எனக்கு இல்ல ஜெய். ஒருமுறை நம்பிக்கை போயிடுச்சுன்னா திரும்ப எப்போதுமே வராது.  உங்கள நம்பி உங்க கிட்ட மட்டும் சொல்லிட்டு தான இந்த பணத்தை வச்சிட்டுப் போனேன்.  இங்கே எவ்வளவு அமௌன்ட் இருக்கிற விஷயம் ஆஃபீஸ்ல வேற யாருக்கும் தெரியாது. அப்ப எந்த அளவுக்கு  உங்க மேல நம்பிக்கை வச்சிருப்பேன்.

உண்மை தான் சார். ப்ளீஸ். சாரி சார்.

எனக்கு ஒரு  பர்சனல் பிராப்ளம்.  அதுக்காக  தான் இந்த பணம் இங்க வைக்கிறேன்னு சொன்னேன்ல.  உனக்கு தெரிஞ்சும் இப்படி ஒரு தப்பு பண்ணிருக்க.

சாரி சார். ப்ளீஸ்.

உங்க சாரி எனக்கு தேவையில்ல. தயவு செஞ்சு நீங்க வேற வேல பாத்துக்கோங்க.  உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை  செட்டில் பண்ண சொல்லிட்டேன். நீங்க என்கிட்ட எடுத்தது போக மீதியை தர சொல்லி இருக்கேன். தயவு செய்து வாங்கி விட்டு கிளம்பு ஜெய்.

“சார் சார்.. ப்ளீஸ் சார்”  என வார்த்தைகளில் அவரிடம்  போராடினான்.

“நீங்க இங்க நின்னு பேசுறது டைம் வேஸ்ட்.  கெட் அவுட்” என்றார் பரந்தாமன்.

‘அதற்கு மேலும் அவரிடம் கெஞ்சினாலும் வேஸ்ட்’  என்று நினைத்தவன் அமைதியாக வெளியே வந்தான்.  தனக்கு கொடுக்க வேண்டிய மீதித் தொகையை கணக்கு முடித்து வாங்கிக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.

“வரும் வழியில் அவனது எண்ணங்கள்  முழுவதும் தன் பிள்ளைகளை வந்து போனார்கள்.  சிட்டி லைஃப் இங்கே ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு கிராமத்தில் போயி இந்த பசங்களால இருக்க முடியுமா?  அந்த சூழ்நிலையை இவங்களால ஏத்துக்க முடியுமா? பேசாம சம்யுக்தா  சொன்ன மாதிரியே இங்கேயே அடுத்த வேலைக்கு ட்ரை பண்ணலாமா?  உடனே வேலை கிடைக்கலனா எல்லா பக்கமும் நெருக்கடி ஆகிடும். அதுக்கு கிராமத்துக்கு போயிட்டா அம்மா அப்பா பாத்துப்பாங்க. கொஞ்ச நாள் இருப்போம்.  பொறுமையா நல்ல வேலையா தேடுவோம்.  எவ்வளவு கஷ்டம் வந்தாலும் இனிமே கம்பெனி பணத்துல கை வைக்க கூடாது” என பலவாறான சிந்தனைகளோடு வந்தவன் வழியில் பேக்கிரியை பார்த்தவுடன் வண்டியை நிறுத்தி கொஞ்சம் ஸ்பீட் வாங்கிக்கொண்டான். மல்லிகை பூவும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தான்.

சம்யுக்தாவின்  முகத்தை பார்க்கும் போதே அவளின் கோபம் நன்றாக தெரிந்தது.

ஆரவும்,  மித்ராவும் ஜெயின் மீது கொண்ட அதீத அன்பினால் ஓடிவந்து கட்டிக் கொண்டனர்.

அவர்களிடம் ஸ்ட்டை கொடுத்து விட்டு சமயுக்தாவிடம் மல்லிகை பூவை  கொண்டு வந்து கொடுத்தான்.

 அவனது முகத்தை பார்க்க விரும்பாமல் திரும்பி அமர்ந்து கொண்டாள்.

நான் வேணும்னு பண்ணல சம்யு. என் மேல கோவ படாத டியர்.  ப்ளீஸ். எனக்கு  நேரம் சரியில்ல போல. என்ன பண்றது.

“ஓஹோ!  நேரம் தான் உங்கள கம்பெனி பணத்துல கை  வைக்க சொன்னதா?”

இல்ல.  குடும்ப சூழ்நிலை தான் கை வைக்க சொன்னது.

நான் உங்ககிட்ட கேட்டானா?  எனக்கு திருடி கொடுங்கன்னு.

“ப்ளீஸ் சம்யு.  என்னைய  கேவலமா பேசாத. இந்த மல்லிகைப்பூ.  ஆசையா வாங்கிட்டு வந்திருக்கேன். வெச்சி விடவா?” என்றான்.

நான் என்ன பேசிகிட்டு இருக்கேன். நீங்க என்ன பேசிகிட்டு இருக்கீங்க. இந்த மாதிரி சூழ்நிலை கூட உங்களால் எப்படி பூ  வாங்கிட்டு வர முடியுது.

குடும்பம்னா ஆயிரம் இருக்கதான் செய்யும்.  அதுக்குன்னு பூ வாங்க கூடாதா?  இது என்னடீ  அநியாயமா இருக்கு.

உங்கள பத்தி எனக்கு தெரியாதா?  நீங்க எப்ப போவ வாங்கிட்டு வருவீங்கனு.

சரி .  அப்படி தான் நினைச்சுக்கோ. அதனால என்ன தப்பு.

“நீங்க எல்லாம் மனுஷன் தானே. பண்றதெல்லாம் பண்ணி அசிங்கப்பட்டு வேலைய விட்டுட்டு வந்து நிக்கிறீங்க.  இப்ப இது  ஒண்ணு தான் குறைச்சலா?” என கோவமாக  கேட்டாள்.

அவனுக்கு  சம்யுக்தாவின்  வார்த்தை மெழுகுவர்த்தியில் தீ கொழுந்து விட்டு எரிவது போல அடிமனதில் இருந்தது.

ஒரு நொடியில் அவனது அன்பு  தீயில் விழுந்த விட்டில் பூச்சியாய் அடிமனதில் எரிந்து கொண்டிருந்தது.

நிதானமிழந்த ஜெய்  ஒருகணத்தில் ஏற்பட்ட வோதனையில் அவனையும் அறியாமல் அவனது கரங்கள் சம்யுக்தாவின் கன்னத்தை பதம் பார்த்தது.

இதைப் பார்த்த பிள்ளைகள் இருவரும் பயந்து போய் இரண்டு அடி பின்னால் தள்ளி நின்றார்கள்.

சம்யுக்தா தனது மெல்லிய கரங்களால் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கண்கள் கலங்க அவனை பார்த்தாள்.

நான் என்ன தப்பா சொல்லிட்டேன்னு இப்போ என்னை அடிச்சிங்க.

எல்லாத்தையுமே யோசிடீ.  கொஞ்சமாவது  என்னைய புரிஞ்சுக்கோ.  ஏதோ  கொஞ்சம் பூ வாங்கிட்டு வந்தேன்.  அதை இவ்வளவு கேவலப்படுத்தி பேசிட்டு இருக்க.

“ஒரு  மூலம் பூ வாங்கி கொடுத்தா பிரச்சினை  சரியாகிடுமா?

எல்லாத்தையும் மறந்துட்டு எழுந்து உங்க பின்னாடியே வரணுமா?”

நீ வரவே வேண்டாம்.  நீ சண்டை போடணும்னு முடிவோட இருக்க.  நான் சண்டை வரக் கூடாதுனு  பார்க்கிறேன்.

போதும் நிறுத்துங்க.  உங்க நடிப்பை எல்லாம் இதுக்கு மேல நம்ப தயாராக இல்ல.

ஏதோ குடும்ப சூழ்நிலையால ஒரு தப்பு பண்ணிட்டேன். அந்த தப்ப நான் சரி பண்ணிக்கறேன்.  இனிமே பண்ண மாட்டேன். அதுக்காக இப்படி என் கேரக்டர அசிங்கப்படுத்துவ. அதை என்னால தாங்கிக்க முடியாது.

நீங்க பண்றது  அசிங்கமா தான் இருக்கு. அப்படியே  ஒரு வேலை போயிருச்சுனா இன்னொரு வேலை உங்களால பிடிக்க முடியாதா? இதுக்காக புள்ளைங்க படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு என் வேலைய விட்டுட்டு கிராமத்தில் போய் என்னத்தை சாதிக்க போறீங்க. இப்பவும் சொல்றேன். அங்க போய் இதை விட அசிங்கப்படுவிங்க.  கஷ்டப்படுவிங்க.  திரும்பவும் இதே பெங்களூருக்கு வரத்தான் போறீங்க.

“என்ன சாபம் விடுறியாடி. நான் என்ன  அங்கேயே நிரந்தரமா தங்கிடனும்னு  சொல்லலையே சம்யு. புரிஞ்சிக்கோடீ. ப்ளீஸ். கொஞ்ச நாளைக்கு சூழ்நிலை சரி ஆகட்டும். அப்புறம் வந்துடுவோம்.

பிள்ளைங்க படிப்ப உங்க இஷ்டத்துக்கு இங்க ஒரு  வருஷம் அங்க ஒரு வருஷம்னு  மாத்த முடியாது.  உங்களுடைய சுயநலத்துக்காக அவங்களும் கஷ்டப்படணும். அப்படித்தானே.

சூழ்நிலை தான் நம்ம வாழ்க்கைய தீர்மானிக்குது.  சூழ்நிலை போற போக்குல தான் நாம போக முடியும். அத முதல்ல புரிஞ்சுக்கோ சம்யு.

எனக்கு  புரிஞ்சுக்க வேண்டிய அவசியமில்ல.  பிள்ளைகள  பத்தி நீங்க தான் யோசிக்கணும்.

பிள்ளைகள எனக்கு பாத்துக்க தெரியும்.

“அங்க போனா மட்டும் உங்க கடன் எல்லாம் தீர்ந்திடுமா?  உங்க லைஃப்  ஸ்டைல் மாறிடுமா?”

நிச்சயமா மாறும்.   நான் எங்கம்மா கிட்ட நிலத்தை வித்து  கொடுக்க சொல்லி கேட்டு இருக்கேன். அங்க  தனியா ஒரு வீட்டுமனை இருக்கு. அது பதினைந்து லட்சத்துக்கு போகும்.  அதை வித்து நம்மளோட கடன் எல்லாம் கட்டிட்டு அப்புறம் ஒரு நல்ல வேலைய தேடி கிட்டு அப்புறமா நீ ஆசைப்பட்டபடி பெங்களூருக்கே வரலாம்.

“நீங்க கேட்ட உடனே அவங்க வித்து கொடுத்துட்டு தான் மறுவேல பாப்பாங்க.  நீங்க மட்டும் தான் அவங்களுக்கு  பிள்ளையா?  உங்க தம்பி இல்லையா?”

என் தம்பி எனக்காக எவ்வளவு வேணா விட்டுக் கொடுப்பான்.

நீங்க நினைக்கிற மாதிரி உங்க தம்பி வேணாம் நல்லவனா இருக்கலாம். விட்டுக் கொடுக்கலாம்.  உங்க ஆத்தா ஒண்ணும் நல்லவங்க கிடையாது. உங்க அப்பா அதுக்கு மேல.

“என்னடீ. விட்டா ஓவரா வார்த்தைய விடுற.  ஜெய்யின் கண்களில் கோபம் அணலாய் பறக்க.  ஓங்கிய கைமாறாமல் சம்யுக்தாவை  அறைந்தான்.  எங்க அம்மாவ பத்தி உனக்கு என்னடி தெரியும்.  எங்கம்மாவ பேச நீ யாரு?  என்னோட வாழ்க்கை எப்படி கொண்டு போகணும் எனக்கு தெரியும்.  பத்து நாள்ல ஊருக்கு வரேன்னு சொன்னேன்.  இப்ப அது கூட கிடையாது.  ஹவுஸ் ஓனர் கிட்ட சொல்றேன். வீடு காலி பண்ற.  இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு போய் சேர ரெடியா இரு” என கூற.

குழந்தைகள் மிரண்டு போய் அவனைப் பார்த்துக் கொண்டு நிற்க. சம்யுக்தா அழுதபடியே மயங்கி சரிந்தாள்.

மெல்லிசை தொடரும்….

Advertisement