Advertisement

பெங்களூர் நகரம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

“ஜெய் ஆர்டர்  போட்ட உணவை முழுங்க முடியாமல் கஷ்டப்பட்டு தண்ணீரை  குடித்து முழுங்கி விட்டு, நான் கிளம்புறேன் சம்யு” என்றான்.

“என்ன முடிவெடுத்து இருக்கீங்க” என  சம்யுக்தா கேட்டாள்.

கிளம்பும்போதே ஆரம்பிக்காத.  எல்லாம் உன்னால தான்.  வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன். என் பேச்சை கேட்காம ஆத்தூரில அத்தைவீடு இருக்கு. எங்கப்பா பாத்துப்பாங்க. மெயின்ல இருக்கு. லேண்ட வாங்கிப் போட்டா  நல்ல லாபம் வரும்னு சொல்லி என்னைய முடிச்சிட்ட.

நான் நல்லது தான ஜெய் சொன்னேன்.

இப்படியே  பேசிட்டு  15 லட்ச ரூபா கடன் வாங்கி நிலத்தை வாங்கி இப்போ இஎம்ஐ கட்ட முடியாம கஷ்டப்படுறது யாரு?

“அதுக்கு என்ன இப்போ? கஷ்டப்பட்டு தான் ஆகனும்.  அந்த பட்டிக்காட்டில போயி இருக்க  சொல்றீங்களா?”

கடன் வாங்கி ஒரு இடம் நமக்கு தேவையா? சம்யு. கொஞ்சம் யோசிச்சி இருக்கலாம்.

யோசிக்க வேண்டிய அவசியம் இல்ல ஜெய்.  கடன் பட்டாலும் சொந்த ஊரில கௌரவமாக வாழலாம். நிம்மதியா  போய் வரலாம்.

நாலு வருஷத்துக்கு ஒருமுறை போனா என்ன? போகலைன்னா என்ன? உன்னோட வரட்டு கௌரவத்துக்கும்,  பிடிவாதத்துக்கு நாம் பலிகடா ஆயிட்டேன்.

உங்கள நான் கடன்தான் வாங்க சொன்னேனே தவிர உங்க ஆபீஸ்ல கையாடல் பண்ண சொல்லலையே.

கடனுக்கு இஎம்ஐ, புள்ளைங்க ஃபீஸ்,  வீட்டு வாடகை, நல்லது கெட்டதுனு என்னால சமாளிக்க முடியல.  எத்தனை முறை சொன்னேன். கேட்டியாடீ.

கடனை கட்ட முடியாதவங்க ஊர் உலகத்துல யாரும் இல்லையா?  உங்கள மாதிரி பயந்து பயந்து வாழ முடியாது ஜெய்.  சொந்தமா ஒரு வீடு  கண்டிப்பா வேணும்.  அது கூட இல்லன்னா வாழ்ந்து என்ன பிரயோஜனம்.

அதான் ஊருல நமக்குனு தோட்டம், வீடு எல்லாமே இருக்கே.

அது இன்னும் பங்கு பிரிக்கல. நீங்க, உங்க தம்பி ஆதி இதுல உங்க அத்தை வீடு வேற. இத எத்தனை பேருக்கு பங்கு போட்டு அதுல ஒரு பங்கு நமக்கு வந்து அந்த பட்டிக்காட்டுல அத வச்சிட்டு எப்படி வாழ்க்கைய நடத்தறது. கொஞ்சம் யோசிங்க ஜெய்.

பேசுனும்னு தான பேசுற.  இவ்வளவு பேசுறயே.  தினமும் வீட்டுல ஒழுங்கா சமைச்சாச்சா என்ன? பசங்க ஸ்கூல்க்கு, டிஃபன், லன்ஞ்ச்னு நாள் தவறாமல் வெளிலயே   ஆர்டர் பண்ணிட்டு திரியற.

வேலைக்கும் போய்ட்டு வீட்டுலயும் வந்து வேல செய்ய முடியாது. நான் ஒண்ணும் செக்கு மாடு இல்ல ஜெய். எனக்கும் கஷ்டமா தான் இருக்கும்.

உன்ன மாதிரி வேலைக்கு வேற லேடீஸ் யாரும் வீட்டுல சமைக்கிறது இல்லையா?. நீ மட்டும் தான் அதிசயமா வேலைக்கு போறவளாட்டம் பேசற.

எங்கயோ யாரோ செஞ்சா நான் என்ன பண்றது. அவங்க சூழ்நிலை என்னமோ? யாருக்கு தெரியும்.  எல்லாரும் செய்ய வேண்டிய அவசியம் இல்ல.   இவ்வளவு பேசறிங்க. நீங்க வந்து சமைச்சா என்ன?

நானா? நான் சமைக்கனுமா? உனக்கு ரொம்ப தாண்டி கொழும்பு.

இவரு பெரிய மகாராஜா. வீட்டு வேல செய்யமாட்டாரு. ஆம்பள வேலைக்கு போனா போய்ட்டு வந்து குளிச்சிட்டு , சாப்பிட்டு  சாப்ட்ட தட்ட கூட கழுவாம உட்கார்ந்த இடத்திலயே கைய கழுவிட்டு போய் தூங்கலாம். அதுவே பொம்பளங்க வேலைக்கு போனா காலைலயும் வீட்டு வேல மொத்தமும் செஞ்சிட்டு வேலைக்கு போய்ட்டு நைட் வந்தும் எல்லா வேலையும் செய்யனும். இது என்ன லாஜிக். பொம்பளைங்க மட்டும் என்ன மிஷினா?

போதும் போதும். ரொம்ப ஓவரா பேசாத. காலம்காலமா பொப்பளைங்க தான் செஞ்சிட்டு இரேக்காங்க. ஏதோ பாவம்னு இப்போ நாங்களும் கூட ஹெல்ந் பண்றோம். பெருசா பேசறவ. நீ சம்பாதிக்கிற காசு  உன்னோட மேக்கப் செட்க்கும், டிரஸ்சுக்குமே போய்டும்.  அப்ப நான் எங்க இருந்து என் வீட்டு வாடகை,  இஎம்ஐ, பசங்க ஃபீஸ் னு  கட்டமுடியும்.

அதுக்கு ஆபீஸ்ல  கைய வைக்க சொன்னாங்களா?.  நீங்க பண்ணது தப்புதான்.

ஒரு ரோடேஷன் பண்ணிட்டு திரும்ப வெச்சிடலாம்னு இருந்தேன். அதுக்குள்ள இந்த மேனேஜர் கண்டுபிடிச்சு தொலைச்சிட்டான். எல்லாம் என் நேரம்.

நேரம் இல்லங்க. உங்க கொழுப்பு.

குடும்பத்துக்காக தன்மானத்த விட்டு செஞ்சி அசிங்கப்பட்டு நிக்கறேன். இதுக்கு நீ கொடுக்கற பட்டம் இதானாடீ.

ஆமா. இவரு பண்ண வேலைக்கு பட்டம் வேற கேட்குது. அதான்  செட்டில் பண்ணி அனுப்பறேன்னு சொன்னாங்கள்ல.  என்னன்னு தெரிஞ்சுட்டு சீக்கிரம் வந்து சேருங்க.

சீக்கிரமா வந்தா மட்டும் என்ன பண்ண போற?

இப்பவே அடுத்த வேலைக்கு ட்ரை பண்ணா தான் சமாளிக்க முடியும் ஜெய்.  ஏதோ  டைட்டன் கம்பெனிக்கு போயிட்டு என்னால முடிஞ்ச அளவு சம்பாதிச்சு நானும் இஎம்ஐ  கட்டுறேன்.

என்னமோ  உலக அதிசயத்தில ஒண்ணா  காஃபி மட்டும் போட்டுக் கொடுக்கிற.  இல்லன்னா அதுக்கும் ஃப்ளாஸ்க்கு தூக்கிட்டு அலையணும்.

எல்லாம் உங்களால வந்ததுதான். தேவையில்லாம பேசாதீங்க. கிளம்புங்க.  வந்து அடுத்த கம்பெனிக்கு அப்ளை பண்ணலாம்.

இப்போதைக்கு அந்த ஐடியா இல்லைய.  நான் கிராமத்துக்குப் போகலாம்னு முடிவு பண்ணிட்டேன். எனக்கு இந்த வறட்டு கௌரவமும்,  நாகரீக உணவு ஒத்துவராது.  என்னோட பிள்ளைகளை இந்த பாழும் கிணத்துல தள்ள விரும்பல.

என்ன ஜெய் வேலை போய்டுச்சினு தெரிஞ்ச  உடனே நீங்க மென்டலாகிட்டீங்களா? அந்த கிராமத்துக்கு போய் பசங்க எதிர்காலம் என்ன ஆகறது.

நீங்க பண்ணின தவறுக்கு பிள்ளைகள தண்டிக்கிற மாதிரி நடந்துக்காதிங்க.

ஏன் கிராமத்தில் இருக்க பிள்ளைகள்லாம்  படிக்கலையா?  எல்லா கவர்மெண்ட் போஸ்ட்லயும்  வந்து உட்காரலையா?  கிராமம்னா கேவலமா பேசிட்டு இருக்க.

தேவையில்லாம உங்ககிட்ட பேச விரும்பல.  அந்த பட்டிக்காட்டுக்கு  நான் வரமாட்டேன்.  உங்களுக்கு இன்னொரு வேலை கிடைக்கிற வரைக்கும் ட்ரை பண்ணுங்க.  நாம இங்கேயே  இருக்கலாம்.

ஓஹோ.  அது வரைக்கும் நீ வேலைக்கு போவ.  உன்னோட  சம்பாத்தியத்தில நான் உட்கார்ந்து இருக்கணுமோ? அப்படி  கேவலப்பட்டு வாழ வேண்டிய அவசியமே எனக்கு இல்ல.

எது கேவலம்னு நினைக்கிற ஜெய்.

பொண்டாட்டி வேலைக்கு போயி புருஷன் வீட்டில இருக்கிறத தான்  கேவலம்னு சொல்றேன்.

உங்களுக்கு வேலை கிடைக்கிற வரைக்கும்  தானே. ஒரு பத்து நாளைக்கு தானே.  வீண் பிடிவாதம் பண்ணாதீங்க.

போதும் சம்யு. உன் பிடிவாதத்தை கேட்டு கேட்டு தான் இன்னைக்கு நடுத்தெருவில் வந்து நிற்கிறேன். இதுக்கு மேல உன் பேச்சைக் கேட்கத் தயாரா இல்ல. நான்  ஆஃபிசுக்கு போயிட்டு கணக்க முடிச்சிட்டு வரேன்.  ஊருக்கு கிளம்ப தயாரா இரு.  மனச தயார்படுத்திக்கோ.

நீங்க வேணா உங்க ஊருக்கு கிளம்புங்க.  நானும் பிள்ளைகளும்  வரமாட்டோம்.

ஏண்டி இப்படி பிடிவாதம் பிடிச்சி  என்னைய கொடும பண்ற.

அங்க போனா மட்டும் இஎம்ஐ கட்டிடு வாங்கலாம்.  அங்க போய் மாடுமேய்க்க, ஆடுமேய்க்கனு  அப்படியே ஆளை ஏமாத்திட்டு  சுத்திட்டு வரலாம்.

ஆடு மாடு மேய்க்கறதுனா  உனக்கு அவ்வளவு கேவலமா போயிடுச்சா?  கிட்டத்தட்ட குழந்தைய பார்க்கிற மாதிரி தான் அதையும் பார்த்துக்கணும். அதுல எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?

உங்க மாட்டு புராணத்த  நீங்களே வெச்சுக்கோங்க.

எவன் முன்னாடியும் கைய கட்டி நிக்க தேவையில்லை.  ராஜா மாதிரி இருப்பேன்.

அது சரி.  அங்க போனா  நான் என்ன வேலைக்கு போக முடியும்.  பிள்ளைகளை எப்படி படிக்க வைக்கிறதுனு   யோசிக்கிறீங்களா?

எங்களுக்கும் பொறுப்பு  இருக்குடீ.  அங்கேயும் நல்ல பிரைவேட் ஸ்கூல் சிபிஎஸ்சி இருக்கு.

ஆக மொத்தம் முடிவோட தான் இருக்கீங்க.

ஆமா நான் தெளிவா யோசிச்சு தான் முடிவெடுத்து இருக்கிறேன்.  கொஞ்ச நாளைக்கு இந்த பிரச்சனை எல்லாம் முடியட்டும்.  ஒரு ஆறு மாசம் மட்டும் அங்கு இருப்போம்.

அந்த ஆறு மாசத்துக்கு எல்லாரும் கஷ்டப்படனும்.  புள்ளிங்க இங்க ஆறு  மாசம் அங்க ஆறு  மாசம்னு  விட முடியுமா?  அவங்க மன நிலைய கொஞ்சம்  யோசிச்சிப் பாருங்க ஜெய்.

அவங்கள  எதுக்கு இங்க திரும்ப கூட்டிட்டு வரப் போறோம்.   அவங்க இனிமே எங்க அப்பா அம்மா கூடவே இருந்து வளரட்டும்.

டாடி நாம எங்க போறோம்” என ஆரவ் கேட்க.

நாம நம்ம வீட்டுக்கு போகப்போறோம் செல்லம்.

“வில்லேஜ் போகப்போறோமா? டாடி”  ஆரவ்  கேட்க.

“ஆமாடா செல்லம்.  நம்ம பாட்டி ஊருக்கு போக போறோம்” என்றான் ஜெய்.

டாடி அங்க கார்ட்டூன் சேனல் எல்லாம் வருமா?  கேம் விளையாடலாம் தானே.

உங்க  இஷ்டப்படி விளையாடலாம் செல்லம்.  அங்க இதை விட இன்னும் நிறைய விளையாட்டு இருக்கு. அங்க ரொம்ப ஜாலியா இருக்கும்.

“டாடி..  டாடி..  அங்க ஃபுட்  ஆர்டர் பண்ண முடியுமா? டோர்  டெலிவரி கொடுப்பாங்களா?”  என மித்ரா கேட்க.

பாரு  திங்கறதுலயே  தான் குறியா  இருக்கு.  எப்படி வளத்து வச்சிருக்க பாரு.

ஹிக்கும். உங்க பொண்ணு  உங்கள மாதிரிதான் இருப்பா ஜெய்.

“அங்க பாட்டி விதவிதமா சமைச்சுக் கொடுப்பாங்க.  விளையாட நிறைய பேர் இருக்காங்க.  அங்க போனா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்”  என்றான் ஜெய்.

பிள்ளைங்களோட ஃப்யூச்சரையாவது கொஞ்சம் யோசிங்க.  உங்க பிடிவாதத்தை விடுங்க.  கொஞ்ச நாளைக்கு உங்களுக்கு வேலை கிடைக்கிற வரைக்கும் சமாளிப்போம்.

அது ரொம்ப கஷ்டம் சம்யு. நான் சொன்னா சொன்னது தான்.  இரண்டு பேர் சம்பளம் வாங்கும் போதே இஎம்ஐ  கட்ட முடியல. ஒரு ஆள்  சம்பளத்தில் குடும்பம் நடத்தினா  வட்டி  குட்டி போட்டு வாழ்க்கையே  நாசமாகிடும்.  எங்க அப்பா அம்மாகிட்ட நான் பேசுறேன்.  ஏதோ ஒரு மூலைய வித்து கடன கட்டிட்டு  நிம்மதியான வாழ்க்கைய வாழலாம்.  புரிஞ்சுக்கோ  சம்யு.

நீங்கதான் புரிஞ்சுக்காம பேசுறீங்க.  நீங்க முதல்ல கிளம்புங்க.

ஓகே.  நான் போயிட்டு எல்லாம் செட்டில்மெண்ட் முடிச்சிட்டு வரேன். ஒருநாள்ல ஊருக்கு கிளம்பற மாதிரி ரெடி பண்ணு.

முடியாது ஜெய்.

யார் யாருக்கு எங்கே என்ன செட்டில் பண்ணனுமோ  எல்லாத்தையும் பண்ணிட்டு உங்க  கம்பெனில சொல்லிடு சம்யு.

“உங்க மனசு மாறுமானு பாக்குறேன்.  நீங்க முதல்ல கிளம்புங்க ” என்றாள்.

ஜெய் அரைமனதோடு அங்கிருந்து கிளம்பினான்.

சம்யுக்தா பலத்த யோசனையுடன் அங்கேயே அமர்ந்தாள். அதற்கு மேல் எந்த வேலையிலும் அவளது கவனம் போகவில்லை.

“மம்மி நாம வில்லேஜிக்கு போகப் போறோமா? இனி அங்க தான் ஸ்டே பண்ண போறோமா?” என மித்ராவும், ஆரவும் மாறி மாறி கேள்வி கேட்டனர்.

உங்கப்பா என்னைக்கும் நம்ம சந்தோஷத்தை பத்தி யோசிக்க மாட்டாங்கடா. உங்கப்பா ஒரு செல்ஃபிஷ்.

மித்ராவும், ஆரவும் ஒருவர் முகத்தை ஒருவர் பாத்துக் கொண்டனர்.  எப்போ மம்மி ஊருக்கு போறோம்.

“தெரியாதுடா…”

அங்க போனா எந்த ஸ்கூல்ல விடப்போறிங்க.

“டேய்! வாய மூடிட்டு உள்ள போடா. இருக்கு டென்ஷன்ல நீ வேற கேள்வி கேட்டு டென்ஷன் பண்ணாத” என ஆரவிடம் கோபத்தை காட்டினாள்.

“ஆரவ் வாடா. நாம கேம் விளையாடலாம்” என மித்ரா அவனை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து சென்றாள்.

நியூ பெல் ரோட்டின் அருகில் பிரம்மாண்டமாக ஓங்கி உயர்ந்திருந்த கட்டிடத்தின்  உச்சியில் “அபி இன்ஃபோடெக்” என்ற பெயர் பெரியதாக மினுமினுத்துக் கொண்டிருந்தது.

ஜெய் உள்ளே  நுழையும் போதே மேனேஜர் பரந்தாமனி குரலில் சற்றே கடுமை தெரிந்தது.

மெல்லிசை தொடரும்….

Advertisement