என்ன மாமா நான் பேசிகிட்டு இருக்கேன்.  நீங்க ஏதோ பகல் கனவு கண்டுட்டு இருக்கீங்க.

‘என்னுடைய  காதல வெளிப்படுத்த முடியாத பகல் கனவாகவே போய்விடுமோ?’ என மனதில் நினைத்து கொண்டான்.

“மாமா..  ஹலோ” என அவன் முகத்தின் முன் கைகளை ஆட்ட.

“என்ன இசை” என தடுமாற்றத்துடன் கேட்டான்.

அத்தை  வர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியல. நான் போயிட்டு அப்புறமா வரேன் மாமா.

“உன்னோட விருப்பம் இசை” என உதடுகள் கூறினாலும் உள்ளமோ, “இன்னும் கொஞ்ச நேரம் இருக்க கூடாதா?” என ஏங்கியது.

“சாப்டீங்களா?  இல்லையா? மாமா”

இன்னும் இல்ல  இசை.

“சாப்பாடு போட்டு தரவா? சாப்பிடுறீங்களா?”

“காலம் முழுக்க போட்டு தரமாட்டியா? இசை” என மனம் ஏங்கியது.

என்ன மாமா கேட்டுட்டு இருக்கேன். ஏதோ பலத்த யோசனையிலேயே இருக்கீங்க.

‘மனசுல வச்சிட்டு கஷ்டப்படுறத விட நேரடியா இசைய கேட்டு நிம்மதியா இருக்கலாம்’  என நினைத்தவன், இசை உங்கிட்ட கொஞ்சம் பேசனும்.

இத கேட்கனுமா? பேசுங்க மாமா.

நான் சொல்றத கேட்டு கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பதில் சொல்லு இசை.

முதல்ல விஷயத்தை சொல்லுங்க மாமா.

அது.. வந்து.. நான்.. இசை…

“என்ன மாமா புதுசா பேசற மாதிரி தடுமாற்றம். பட்டுனு சொல்லுங்க” என்றாள்.

“இசை..”

“ம்ம்ம்ம்…”

“நான்…”

“நீங்க..”

“உன்னை…”

“என்னை…”

“வந்து.. என்னைய தப்பா எடுத்துக்காத இசை.”

“இல்ல மாமா.  என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்.”

“நிஜமாவே நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியலையா?”

“சத்தியமா புரியல மாமா…”

“காதல பத்தி என்ன நினைக்கிற இசை…”

அது ஒரு உன்னதமான அழகான உணர்வு மாமா. அத வார்த்தையால விவரிக்க முடியாது.

“ஆமாம் இசை…”

“மாமா. திடீர்னு கேட்கறிங்க. யாரையாவது லவ் பண்றிங்களா?” என இசை படக்கென்று கேட்டு விட்டாள்.

இசையின் இந்த வெளிப்படையான கேள்விக்கு பதில் கொடுக்க திணறினான் வருண்.

“ஆ..ஆமா இசை” என்றான்.

“சூப்பர்.. யாரு மாமா அந்த பொண்ணு..”

“அது வேற யாரும் இல்ல இசை” என வருண் தன் காதலை சொல்ல வரும் முன் மஞ்சுவின் குரல் வெளியே கேட்டது.

“பகுமான கோழி பறந்து கிட்டே முட்டை போட்டுச்சா” ங்கிற  கதையா இல்ல இருக்கு.  “என்கிட்ட வேலைய காட்டாதடீ.  வீட்டு பக்கம் வா உன்னை பேசிக்கிறேன்” என மஞ்சு பேசிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.

“என்னங்கத்தை.  உள்ள  வரும்போதே  பேச்சு எல்லாம் பலமா இருக்கு” என இசை கேட்க.

மருமகளே!   நீ எப்ப வந்த.  பக்கத்துவீட்டு சித்தரா ரொம்ப தான் ஓவரா பேசுறா.  அவள தான் திட்டிகிட்டு வந்தேன்.

நான் வந்து ரொம்ப நேரம் ஆகுது.  உங்களை காணோம். அதான் மாமா கிட்ட பேசிட்டு இருந்தேன்.

உனக்கு பிடிக்குமேன்னு லட்ட உருண்ட பிடிச்சி வெச்சேன். சாப்டியா? மருமகளே.

வந்தவுடனே அதைத்தான் முதல் வேலையா செஞ்சேன்.  எனக்கு பிடிக்கும்னு தானே மாமா கிட்ட சொல்லி அனுப்பி இருக்கீங்க.

ஆமா மருமகளே. கொஞ்சம் மல்லிகாவுக்கும் எடுத்துட்டு போய் கொடு. நீயே எல்லாத்தையும் திண்ணுடாத.

அத்தை மாமா என்ன சாப்பிடலை போல.  நான் சொன்னேன் என் பேச்சை கேட்கல.

அவன் அப்படி தான். நான் பாத்துக்கறேன்.

சரிங்க அத்தை. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. போயிட்டு அப்புறமா வரேன்.

அயிரை மீன் கொஞ்சம் கிடைச்சதுனு  கொண்டு வந்தேன்.  அம்மியில அரைச்சு மணக்க மணக்க கொளம்பு  போறேன். ஒரு எட்டு வந்து சாப்பிட்டு போ மருமகளே.

அயிரை மீனு குளம்பு தித்திப்பா இருக்கும். எங்க அத்தை கைப் பக்குவத்தை யாராலும் மிஞ்ச முடியாது. நீங்க மீன் குழம்பு வச்சா வாசம் தூக்குமே.

“அட ரொம்ப புகழாதே புள்ள.  ரொம்ப வெட்கமா இருக்கு” என தன் முகத்தை மூடிக்கொள்ள.

“மாமா இந்த வயசுலேயும்  வெட்கத்த பாருங்களேன். அப்படியே ஒரு போட்டோ எடுங்க. சுவத்துல மாட்டி வைக்கலாம்” என்ற இந்த கிண்டல் செய்தாள்.

பெரிய அத்தை கிட்ட ஒரு வார்த்தை சொல்லு புள்ள. அவங்க எதுவும் செஞ்சுகிட்டு கிடக்க போறாங்க. எல்லாருக்கும் சேர்த்து மீன் குழம்பு வைக்கிறே. நைட் சாப்பாடு இங்கேதான்.

சரிங்க அத்தை. உங்க பேச்சை மீற முடியுமா?  தினமும் கொடுத்தாலும் நான் சாப்பிடுவேன்.

“நான் செஞ்சு தாரேன். நீ இங்கயே இருந்துடு” என்று கூறிய  மஞ்சு இசையை ஓரக்கண்ணால் பார்க்க.

நான் நூலகத்துக்கு போறேன். நீங்க குழம்பு வைங்க.  வந்து சாப்பிடுறேன்.  அத்தை  மீன் குழம்பு வைக்க போறாங்கன்னு தெரிஞ்சு தான் சாப்பிடாம இருக்கீங்களா? நீங்க ஏன் சாப்பிடலனு இப்பதான் தெரியுது. மீன் குழம்புக்காக யாராவது பட்னி கிடப்பாங்களா?

என்னைய  பத்தி இப்படி நினைச்சிட்டியே இசை.  சரி விடு. பரவால.

இனிமே பெருசு பெருசா நெனச்சுட்டா போகுது. மாமா ஏதோ பேசனும் சொன்னிங்க.

வருண் தடுமாறி சமாளித்தான்.

வரப்போற எக்ஸாம் பத்தி தான் பேச  இருந்தேன் இசை.

“நீங்கதான் ஹார்டு வொர்க் பண்ணுறீங்களே. நிச்சயமாக உங்களுக்கு ஜாப் கிடைக்கும் மாமா. நீங்க உங்க கடமையை மட்டும் செய்யுங்க” என  புன்னகை மாறாமல் கூறினாள்.

“இந்த அழகான இதழ் சிந்தும் புன்னகைக்கு  சொந்தக்காரன் நானா  இருக்க முடியாதா? இது கொஞ்சமாவது நியாயமா?” என நினைத்து மனதிற்குள் புழுங்கினான்.  காதலை கூட அவனால் வெளிப்படுத்த முடியாமல் வேதனையோடு அவள் முகத்தைப் பார்த்தான்.

“பேசிக்கிட்டே இருந்தா நேரமாகும். நான் வேலைய முடிச்சிட்டு நூலகத்துக்கு போயிட்டு வரேன்”  என இருவருக்கும் டாடா காட்டிவிட்டு கப்பை  எடுத்துக் கொண்டு இந்த வீட்டிற்கு வந்தாள்.

இசையின் ஒவ்வொரு செய்கையையும் அணு அணுவாக ரசித்துக்ஸகொண்டிருந்தாள் மஞ்சு.

“நம்ம புள்ள மட்டும் ஊனம் இல்லாம சரியா இருந்திருந்தா பொண்ணு குடுங்கனு  தைரியமா கேட்கலாம். இப்போ இப்படி ஒரு குறையை வச்சுக்கிட்டு எப்படி நான் அவகிட்ட பொண்ணு  கேட்கிறது.  இசையா பார்த்து மனசு வச்சா உண்டு. வார்த்தைக்கு வார்த்தை மருமகளனு கூப்பிடுறேன்.  கொஞ்சமாவது அடி மனசுல அந்த வார்த்தை உட்கார தானே தெரியலையே” என மனதிற்குள் கவலை கொண்டார்.

இசை அந்த இடத்தை விட்டு நகர்ந்து இருந்தாலும் வருணின்  மனதில் ஆழமாக வேரூன்றியிருந்தாள்.

மனதில்  வெளிப்படையாக கூறவும் முடியாமல் உள்ளுக்குள் வைத்துக் கொள்ளவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்துக் கொண்டிருந்தான்.

இசை எனும் பதுமையை முழுவதுமாக படம்பிடித்து விழியில் சிறைப்பிடித்து வைத்தான்.

தன் மகனிடம் இதைப் பற்றி வெளிப்படையாக பேச முடியாமல் தனது ஆசைகளை உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு மஞ்சு மீன் குழம்பு வைப்பதற்கான வேலையை தொடங்கினார்.

வீட்டிற்குள் வந்த இசை அனைவருக்கும் லட்டை அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தாள்.

“மஞ்சு  ஏதாவது சொன்னாளா? இசை” என லட்சுமி கேட்க.

மீன் குழம்பு வைக்கிறேன் எல்லாரும் இங்க தான்  வந்து சாப்பிடனும்னு சொன்னாங்க.

வேற எதாவது கேட்டாளா?

வேற எதுவும் கேக்கல அத்தை.

நீ ஏதாவது கல்யாண விஷயத்தை பத்தி சொன்னியா?

அவங்க எதுவும் கேட்கல. நானும் எதுவும் சொல்லல.

அப்படியே இருக்கட்டும்.  பெரியவனும்  வரட்டும். அப்புறமா சொல்லலாம்.  வருண  மனசுல நினைக்கிறப்போ கொஞ்சம் கவலையாக இருக்கு. அதான் இப்போதைக்கு தெரிய வேண்டாம்னு நினைக்கிறேன்.

“அதுவும் சரிதான் அண்ணி.  நானும் அதைத்தான் நினைச்சேன்” என மல்லிகா தன் பங்கிற்கு கூறினாள்.

எனக்கு ஒரு விஷயம் புரியல. நீங்களே மாமாவை இப்படி நினைக்கிறீங்களே.  அவரும் எல்லார் போலவும் சக மனுஷன் தானே. ஊனம்னா அது ஒரு பெரிய குறையே நினைச்சு அவங்கள ஒதுக்கி வைக்காதிங்க.  இது எனக்கு சுத்தமா பிடிக்கல.

நீ சின்ன பொண்ணு. உனக்கு இதெல்லாம் சொன்னா புரியாது. விடு.

எனக்கு புரியும் அத்தை.

“ஆதிய விட வருண் ரெண்டு வருஷம்  மூத்தவன்.  அவனுக்கு முன்னால உனக்கு கல்யாணம் பண்ணினா அவ மனச கஷ்டப்படாதா?.  என்ன இசை பேசுற”  என லட்சுமி கேட்க.

கல்யாணம் ஒருத்தரோட தனிப்பட்ட விருப்பம். வருணுக்கு நல்லாவே புரியும். அதை அவர் கிட்ட சொல்லாம எத்தனை நாளைக்கு மறைச்சி வைக்க முடியும்.  இது தப்பு இல்லையா?

ஒரு தப்பும் இல்ல இசை.

நீங்க சொல்லாம செஞ்சாதான் அவர் மனசு வேதனைப்படும். வெளிப்படையாக சொல்லிட்டா அவங்களும் சந்தோஷப்படுவாங்க.

“அவ கிடக்கிறா.   சின்ன புள்ள. அவளுக்கு ஒண்ணும் தெரியாது. எல்லாரும் கூட்டுக்குடும்பமாக ஒண்ணு மண்ணா இருக்கிறோம்.  அந்த உறவு அப்படியே நிலைக்கணும். எதுக்காகவும் சண்டை வரக்கூடாது” என  மல்லிகா கூறினாள்.

அத்தை இன்னைக்கு வரைக்கும் நாம எல்லாரும் தெரியாமல் சந்தோசமாத்தான் இருக்கோம்.

இவ்வளவு பெரிய வீட்ல இன்னைக்கு வரைக்கும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

மாமாவுக்காக அடிக்கடி அத்தை ஏதாவது தனியா செஞ்சி கொடுப்பாங்க.  அதை யாரும் எப்பவும் பெருசா நெனைச்சது இல்ல. அதே மாதிரி தான் இதுவும்.

“அடியேய்! சாப்பாடும் கல்யாணமும் ஒண்ணா” என மல்லிகா கோபப்பட.

நான் அப்படி சொல்ல வரலம்மா.

இசை போதும்.  தேவையில்லாம பேசாத.  நிச்சயதார்த்தத்துக்கு நல்லநாள் எப்போன்னு பார்த்து வைக்கணும். ஆதி  எப்ப வரான்னு கேட்கணும்.  உன் மாமா கிட்ட ஃபோனை போட்டு நைசா பேச்சுக் கொடுத்து பாரு.

“அத்தை நானே கால் பண்ணனுமா?”

“அம்மா தாயே. உன்  மாமா மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கேனு தெரியுது. விடு. நீயே தான்.  ஆதிக்கு ஃபோன் பண்ணி கேளு” என்றார் லட்சுமி.

‘என் உயிரே ஆதி தான். எப்ப வருவாங்கனு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டு இவர்களிடத்தில் பதிலேதும் கூறாமல் சிரித்துக் கொண்டே தனது அறைக்குள் ஓடினாள்.

ஆதியைப் பற்றிய ஆயிரம் கனவுகளுடன் தனது செல்போனில் இருந்த அவனது போட்டோவை எடுத்து பார்த்துக்கொண்டு இமைகளை மூடினாள்.

“ஐ லவ் யூ ஆதி”

என மனதிற்குள் ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.

‘நான் உன் மேல பைத்தியமா இருக்கேன்.  இது எப்படா உனக்கு புரிய போகுது’ என தன் மனதிற்குள்  தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

அப்பொழுது அவளது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதை பார்த்ததும் அவளது கண்களில் கோபம் பொங்கியது.