Advertisement

?? மெல்லிசை? ?– 03

கிழக்கு வானம் மெல்ல மெல்ல சிவக்க தொடங்கியது.  அழகான அதிகாலை வேளையில் பச்சைப் புல்லின் நுனியில் இதழ் பதித்துக் கொண்டிருந்த  பனித்துளிகள் பகலவனின் வரவை எண்ணி உருகிய பின்னும் உதிராமல் தவமிருந்தது.

விடியலை அறிவிக்க செஞ்சி சேவல் ஒன்று அந்தப் பழமையான தொட்டி கட்டு  வீட்டின் உச்சியில் ஒய்யாரமாக நின்று பொழுது புலர போவதை தன் குரலால் குறி சொல்லியது.

கதிரவனும் நிலமகளின் முகவரிக்கு தன் ஒளிக்கற்றை எனும் அஞ்சலை அனுப்பி விடியலை பறைசாற்றினான்.

கீழ்வானில் பொழுது உதயமாகும் பூமி விடியலை காண்கிறது. சின்னஞ்சிறு பறவைகள் தமது கூட்டைவிட்டு  கீச்சிடும் ஒலிகளோடு இறைதேடப் புறப்பட்டது.

அழகான மல்லிகைப்பந்தல் எனும் கிராமத்தின் நடுவில் உள்ள மாரியம்மன் கோவிலில் அதிகாலை பூஜைக்கு எழுப்பப்படும் மணி ஓசை கூட விடியலை பறைசாற்றியது.

சேவலின் கூக்குரலும் கோவிலின் மணியோசையும் தான் அந்த கிராமத்து மக்களுக்கு உற்சாகம் கொடுத்து எழுப்பி விடும் ஆதவன்.

மக்கள் அன்றும் அதே உற்சாகத்தோடு எழுந்து தங்கள் அன்றாடப் பணிகளை  வழக்கம் போல தொடங்கியிருந்தனர். ஆடு, மாடுகளின் குரல்கள் அதிகாலை பாடும்  சுப்ரபாதம் போல எல்லா திசைகளிலும் ஒலித்துக் கொண்டிருந்தது.

மிகவும் பழமையான பாரம்பரியத்திற்கு பெயர்போன அந்த தொட்டிகட்டு வீட்டில் இருந்து சாம்பிராணி மணம் கமழ்ந்து கொண்டிருந்தது.

வாசலில் சாணம் தெளித்து பச்சரிசி மாக்கோலம் போட்டுக் கொண்டிருந்த மகாலட்சுமி,  ஐய்யா! மகராசா.  இந்தச் செல்லமாவையும் பொன்னம்மாவையும் அங்கிட்டு புடிச்சு  கட்டி  பால கறந்துட்டு  வான்னு எவ்வளவு நேரமா சொல்றது.

இதோ வாரேன் லட்சுமி” என அடுக்களையில் இருந்து கதிரேசன் குரல் கொடுக்க.

அடுக்களை பக்கத்திலேயே உட்கார்ந்துகிட்டு என்னதான் பண்றீங்க.

“எப்பவும் மோரோ,  கூழோ தான் வச்சி கொடுப்ப.  எப்பவாது தான்  உளுத்தங்கஞ்சி வைக்கிற.  கொஞ்சம்  குடிச்சிட்டு பொறவு வரேனே.  செத்த பொறு லட்சுமி”  என  இருந்து கொண்டே மகாலட்சுமிக்கு பதில் கொடுத்தார் கதிரேசன்.

“காணாத கழுதை  கஞ்சியைக் கண்டதாம்  ஓயாம ஓயாம ஊத்தி குடிச்சதா” ங்கிற கதையா இல்ல இருக்கு.  “ஏழு கழுத வயசாகுது. இன்னும்  சின்னப்புள்ளத்தனமா பண்ணிக்கிட்டு இருக்கீங்க.  வயலுக்கு போகணும். நேரம் ஆகலையா?” என கணவனை திட்டிக் கொண்டு இருந்தாள்.

“ஒரு கஞ்சிக்கு போய் செத்த நேரத்துல என்னைய கழுதைனு சொல்லிட்டியே.  இதெல்லாம் சரி இல்ல லட்சுமி…”

“நீங்க செஞ்சது சரின்னா நான் சொன்னதும் சரிதான். குழந்தைக்கு பால் வாங்க  வந்துடுவாங்க. பாவம் பச்ச புள்ளைங்க. பாலுக்கு அழும்ல. சீக்கிரம் பாலை கறந்து குடுங்க” என  சொல்லிக் கொண்டே உள்ளே சென்றாள் மகாலட்சுமி.

“நீ ஆகுற வேலைய பாரு.  பத்து நிமிஷத்துல பால கறந்துட்டு வரேன்” என கையில் பாத்திரத்துடன் சென்றார்.

சொன்னது போலவே சற்று நேரத்திற்கெல்லாம் பால் கறந்து பொங்க பொங்க எடுத்துக் கொண்டு  வந்தார்.

இதற்குள் மகாலட்சுமி வீட்டின் மேற்கூரையில் தொங்கும் கயிற்றுக்கு இடையில் இருக்கும் உறியை கீழே கீழே இறக்கி அதில் இருக்கும் தயிரை மோராக்கி உப்பு போட்டு,   முற்றத்தின் பின்னால் சென்று கருவேப்பிலை கொத்தமல்லி இலையை கொண்டு வந்த கழுவி மோரோடு சேர்த்து, சிறு துண்டு இஞ்சி சேர்த்து பழைய சாதத்துடன் ஊத்தி வைத்தார்.  கூடவே ஒரு துணியில் சின்ன வெங்காயம், உப்பு முடிந்து வைத்தார் லட்சுமி.

“அக்கா நேரமாகுது. புள்ள வகுத்து பசிக்கு கத்திட்டு கிடக்கு. கொஞ்சம் வந்து பால ஊத்திட்டு போங்களேன்” என வெளியே இருந்து மங்களத்தின் குரல் கேட்க.

“இந்த வந்துட்டேன் மங்களம்” என குரல் கொடுத்துக் கொண்டே லட்சுமி வெளியில் வந்தாள்.

இதற்குள் இன்னும் நாலைந்து பேர் பால் வாங்க வந்துவிட்டார்கள்.

குழந்தைக்கு தானே  பால்  வாங்குகிறோம். கொஞ்ச நேரமா கொடுக்க கூடாதா?  வெயில் வெளிய வந்து பல்ல காட்டுன பிறகுதான் பாலை ஊத்துறிங்க.  அதுவரைக்கும் குழந்தை பசி தாங்குமாக்கா.

நான் என்ன மங்களம்  பண்றது.  இந்த மனுஷன் சொல்றதை காது கொடுத்து கேட்டாத்தானே. இங்குட்டு  இருக்கிறத அங்கிட்டு எடுத்து வைக்கிறது இல்ல. கத்தி கத்தியே தொண்டை தான் வீணாப்போகுது.

“சும்மா காரணம் சொல்லாத லட்சுமிக்கா.  ஏதோ வழியே இல்லாமல் தான் உன்கிட்ட வந்து பால வாங்குறதா இருக்கு. பேசாம டவுனுக்கு போயி பால் பவுடர ஒரு டப்பா வாங்கிட்டு வந்துடலாம். இங்கே வந்து காத்துக் கிடக்க வேண்டிய அவசியம் இல்லை பாரு” என மங்கலம் தன் ஆதங்கத்தை வார்த்தையாக கொட்டினாள்.

“இந்தா பாருடி யம்மா. மருமக மேலயும் பேரப்பிள்ளை மேலயும் அம்புட்டு அக்கறை வந்துருச்சு. இத என்னைற நம்பச் சொல்றியா?” என லட்சுமி கேட்க.

“எனக்கும் என் மருமகளுக்கும்  ஆயிரம் சண்டை இருக்கும். அதுக்குனு  பேரப்பிள்ளைய  பட்டினி போட முடியுமா?..”

“இந்த ஏச்சுப்பேச்சு கேட்கறதுக்கு பேசாம டவுனுக்கு போறப்ப பால் டப்பா  வாங்கிட்டு வந்துட்டு போறேன். ஹிக்கும்” என பழிப்பு காட்டினாள் மங்கலம்.

“உள்ளூர்ல ஊசிப்போன மொச்ச விலைக்கு வாங்காதவ பாம்பே அல்வால பத்து டன்னு போடுன்னானாம். அப்படி தான் இருக்கு நீ பேசறது…”

“ஏன்?  நாங்கல்லாம் டவுனுக்கு போய் வாங்க மாட்டோம்னு நினைச்சியா?…”

“சரிடியம்மா.  உனக்கு இந்த பால்  வேண்டாம். நீ டவுனுக்கே போய் வாங்கிக்கோ.  ஆனா புள்ளைக்கு உடம்பு கெட்டுப் போகும். அதெல்லாம் உடம்புக்கு நல்லது இல்ல. ஒரு நாள் செத்த நேரம் ஆயிடுச்சு. அதுக்கு இப்படியா பேசுவ.  இங்க பேசிட்டு நிக்கற நேரம் பாலக்காய்ச்சி பிள்ளைக்கு கொடுக்கற வேலைய பாரு. போ” என பாலை ஊற்றி அனுப்பி வைத்தார் லட்சுமி.

மீதி பாலைக் கொண்டு வந்து விறகடிப்பில்  மண் சட்டியை வைத்து அதில் ஊற்றி சுண்டக்காய வைத்தாள்.

இத பாருங்க. தயிர் போடத்தான் இந்த பால காயவச்சிருக்கேன்.

“அதை ஏண்டி என்கிட்ட சொல்ற…”

“உங்கள பத்தி தெரிஞ்சு தான் சொல்றேன்”  என தன் கணவனின் குறுகுறு கண்களை பார்த்தாள்.

அப்படி எல்லாம் பாக்காத லட்சுமி.  அதுல கை வைக்க மாட்டேன். மோரும் சோறும் எடுத்து வச்சிட்டியா?

“அதெல்லாம் அப்பவே எடுத்து வச்சிட்டேங்க” என்றாள்.

அவர கொடி வேலைக்கு ஆள வரச்சொன்னேன்.  நெல்ல

வயலுக்கு தண்ணி எடுத்து விடனும். நெல்லு  அறுவடைக்கு வந்துடுச்சு.  நீ வந்து பார்த்து ஒரு வார்த்தை சொன்னா கருதறுப்புக்கு சொல்லிடுவேன்.

சரிங்க. கொஞ்சம் வேலைய முடிச்சிட்டு வாரேன்.

காய்கறி சந்தைக்கு கொண்டு போகனும்.  நீங்க போயி வயலுக்கு தண்ணி எடுத்து விடுங்க. நான்  கம்பு இடிச்சு போட்டு கொஞ்சம் காண பயிறு துவையல் அரைச்சு எடுத்துகிட்டு வரேன்.

சரி நான் வேலைக்கு போறேன் நீ வேலையை பாரு லட்சுமி என்ன தூக்குவாளி எடுத்துக் கொண்டு நகர முற்பட்டாள்

இந்தா லட்சுமி வரும் போது கருப்பனுக்கும் சேர்த்து கொண்டு வா.

“இத நீங்க சொல்லனுமாக்கும்” என்றாள்.

அப்படியே அந்த ராசாத்தி வீட்டில வெடக்கோழி சொல்லி வச்சிருந்தேன். ஒரு வார்த்த அவ காதுல போட்டுட்டு போங்க.

அவ கிட்ட எதுக்குடி கேட்டவ.  இங்க இருக்கிறது என்னாச்சு.

வாரத்துக்கு ரெண்டு அடிச்சி தின்னா அப்படியே இருக்கும் பாருங்க.

இருக்கிற இரண்டு கோழியும்  முட்டை வச்சி அடைகாக்க வச்சாச்சி.

பசங்க ஊர்ல இருந்து  வந்தாலும் வருவாங்க.  நேத்து பெரியவன் போன்ல பேசும்போது சொன்னான்.

ஓம் மகனாச்சே. ஒங்கிட்ட மட்டும் ரகசியமா பேசுவான். எனக்கு சொன்னாதானே தெரியும்.

ரகசியம் எல்லாம் ஒண்ணும் இல்லங்க.  அவன் வேலை செய்யற இடத்தில ஏதோ பிரச்சினை போல.

“வேலைனா பிரச்சினை வரத்தான் செய்யும். இதுக்கெல்லாம் வேலைய விட்டு வரலாமா? என்னடி பிரச்சனையாம். கேட்டியா?…”

எனக்கு தெரியலங்க. அவன் சொல்றது எனக்கு ஒரு மண்ணும் புரியல. ஆனா   ஒரு ரெண்டு, மூனு மாசத்துக்கு இங்க தான் வந்து இருக்க போறாங்களாம்.

“அங்க இருக்க முடியலனா  ஊருக்கு வரச் சொல்லு. இங்க இவ்வளவு காடுகரை கெடக்கு. இத விட்டுட்டு வரட்டு கௌவரவத்துக்கு அங்கிட்டு போய் கண்டவன்கிட்ட கைகட்டி நிக்கறானுங்க. என்ன பசங்களோ” என சலித்துக் கொண்டார். ஒரு வகையில சந்தோஷம் தான்.

“அவனுக்கு என்ன பிரச்சனையோ வரட்டும் விடுங்க” என்றாள்.

Advertisement