Advertisement

சந்தோசமான விஷயத்தை விட இவ்வளவு மெதுவா சொல்ற.  நம்ம புள்ளைங்க ஊருக்கு வந்தா நமக்கு சந்தோஷம்தான்.  பிள்ளைங்க தான் வரமாட்டேனு  முரண்டு பிடிக்கறதுங்களாம்.

டவுன்லயே வளந்த  புள்ளைவ. பட்டிக்காட்டுக்கு வர பிடிக்காது தான்.

“என்னங்க செய்ய.ஆனாலும்  பிள்ளைங்க ரெண்டும் கண்ணுக்குள்ளேயே நிக்குதுங்க. இப்படியாச்சம் வரமாட்டாங்களானு மனசு காத்துக் கிடக்கு…”

“லட்சுமி புலம்பாத. வராம எங்க போவாங்க. இத்தனை நாள் காத்துக் கிடந்தே. இன்னும்  கொஞ்சம் பொறுத்துக்கோ…”

“என்னமோ போங்க.  நானும் கேட்டு  கிட்டே தான் இருக்கேன்.  ரெண்டு புள்ளைகளுமே பள்ளிக்கூடம் போவுது.  இப்ப வரைக்கும் முகத்தைக்கூட கண்ணுல காட்ட மாட்டேங்கறாங்க”  என லட்சுமி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போதே கதிரேசனிடம் இருந்து  செல்போன் ஒலிக்கத் தொடங்கியது.

இந்தாடி உன் மகனுக்கு  நூறு ஆயுசு. அவன் தான் பேசுறான்.

அது எப்படிங்க படிக்க தெரியாமயே மகன் தான்னு சரியா சொல்றிங்க.

இது என்னடி பிரமாதம்.   ஒன்னாம் நம்பர் பெரிய மகன்.  சின்னவனுக்கு ரெண்டாம் நம்பர்னு போட்டு கொடுத்து இருக்கானுங்க.  அத வச்சி தான் கண்டு பிடிக்கிறேன். இப்ப  பாரு ஒன்னாம் நம்பர் தான் வந்து இருக்கு.

நீ பெரிய கேடி தான்யா.

“ஆமா. இந்தா பேசு லட்சமி.. பேசு.. அவன்  உன் கூட தான் பேசுவான்.  நீயே ஒரு வார்த்தை கேளு” என லட்சுமியிடம் செல்போனை நீட்ட.

லட்சுமி மிக ஆசையோடு ஃபோனை  வாங்கினாள்.

“எதிர்முனையில் ஜெய்யின் குரல் கேட்டது.  அம்மா நல்லா இருக்கிங்கிளா?” என பேச்சைத் தொடங்க.

“ஏண்டா தினமும் இதே கேள்விய தான் கேட்பியா?…”

“அப்படிலாம் இல்லம்மா…”

பிள்ளைங்க  சௌக்கியமா?  பிள்ளைகள எப்படா ஊருக்கு கூட்டிட்டு வர.

எல்லாரும் சூப்பரா இருக்காங்கம்மா.  ஒரு பத்து நாளைல  ஊருக்கு வரலாம்னு இருக்கேன். உங்களுக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லையேம்மா.

“எனக்கு நீங்க வந்தா போதும் கண்ணு. சீக்கிரம் கிளம்பி வந்துருங்க” என கண் கலங்க.

உறுதியா ஊருக்கு வந்துடுவோம்மா.

உன் பொண்டாட்டியும் வரலாப்பா.

“வராம எங்க போவா. அதுவும் தவிர  ஊருக்கு வந்து ரொம்ப நாள் ஆகுது.  உன்ன பாக்கணும் போல நினைப்பாய் இருக்கும்மா” என்றான்.

“நீங்க எப்ப வருவீங்கனு நான் காத்து கிடக்கேன்.  நீங்க வந்தா போதும்.  இப்பத்தான் உங்க அப்பா கிட்ட சொல்லிகிட்டு இருந்தேன். அதுக்குள்ள நீயே பேசிட்ட…”

“தம்பி ஃபோன் பேசினானாம்மா…”

“அவன் பேசவே இல்லப்பா.  பேசி பத்து நாளைக்கு மேல இருக்கும். ஃபோனே பண்ண மாட்டேங்கிறான். எங்களுக்கும் பண்ண தெரியல. யாராவது பண்ணி கொடுத்தா தான் பேச முடியும்…”

சரிம்மா.  நான் தம்பி கிட்ட பேசுறேன். உங்களுக்கு கால் பண்ண சொல்றேன்.

சரி ஜெய். இனிமேல்  எப்ப வருவீங்கனு  ஒவ்வொரு நிமிஷமும் கண்ணு வாசல பார்த்துட்டு தான் கிடக்கும்.

இன்னும் பத்து  நாள்தான் அம்மா. பொறுத்துக்கோங்க.

“பெங்களூரில இருந்து சேலம் வர பத்து  நாளாகுமா?…”

அப்படி இல்லம்மா.  இங்கே இருக்கிற வேலைய முடிச்சுட்டு தான் கெளம்பனும்.  அதுக்குத்தான் இந்த பத்து  நாள்.  இவ்வளவு நாள் தாங்கிட்ட. இன்னும் பத்து நாள் தானே.

சரிப்பா.  அதுக்குள்ள நான் ஆடு,  கோழி எல்லாம் பிடிச்சி வைக்கிறேன். நீங்க  வந்தீங்கன்னா பெரிய விருந்தே வைக்கனும். வாய்க்கு ருசியா சமைச்சு போடனும்..  குலதெய்வம் கோயிலுக்கு போய் பொங்க வச்சி அப்படியே அந்த வேண்டுதலையும் முடிச்சிடலாம் .

சரிம்மா.  கொஞ்ச நாளைக்கு அங்க தான் இருப்பேன். எல்லாமே செஞ்சிடலாம்.  உங்க ஆசை எல்லாம் நிறைவேத்தறேன்.

“எனக்கு இது போதும் ஜெய்” என லட்சுமி கண்கலங்கினார்.

“சரி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கும்மா.  நான் அப்புறமா பேசறேன்” என  போனை கட்  பண்ணினான்.

லட்சுமியின் முகத்தில் மகிழ்ச்சியின் உச்சம் தென்பட்டது.

“மகன் ஊருக்கு வரேன்னு  சொன்ன உடனே என்ன ஒரு சந்தோஷம். அப்படியே முகமே ஜொலிக்குது லட்சுமி…”

இருக்காதா பின்ன.  குலதெய்வத்துக்கு போயி நேர்ந்துவிட்ட ரெண்டு  கிடாவும் இந்த முறை வெட்டி  ஊரையே கூப்பிட்டு விருந்து வச்சிடணும்.

“வச்சிடுவோம் லட்சமி…”

ரொம்ப வருஷங்களுக்கு அப்பறமா  நம்ம பேரப் பிள்ளைகள் வராங்க. பெரிமவன் உறுதியா சொல்லிட்டான்.

அந்த சின்ன தருதல தான் எங்க சுத்திட்டு இருக்கோ  தெரியல.

அவங்க கிட்ட இருந்து ஒரு ஃபோனையும் காணோம்.

“கண்டிப்பா சின்னவனும் வந்துடுவான். அவனும் இங்கயே தங்கினா நல்லா இருக்கும்” என லட்சுமி சொல்லி சந்தோஷப்பட்டாள்.

‘லட்சுமியின் முகத்தில் சந்தோஷம் இருந்தாலும் அதைப் பார்த்த கதிரேசன் புயலே வரப் போவுது. இது  தெரியாம இப்படி சந்தோஷப்படுறாளே.  இனி என்னவெல்லாம் நடக்க போகுதோ தெரியலையே’ என மனதிற்குள் வருத்தத்தை வைத்துக் கொண்டு முகத்தில் புன்னகையை வெளிப்படுத்தினான்.

அப்போது கதிரேசனின் தங்கை மல்லிகாவும் அவளது ஒரே மகள் இசைப்பிரியாவும் அங்கு வந்தனர்.

“என்ன மல்லிகா பக்கத்துல இருக்க கோவிலுக்கு போயிட்டு வர இவ்வளவு நேரமா?”  என லட்சுமி கேட்க.

“இல்ல அண்ணி.  இசையால தான் கொஞ்சம் நேரம் ஆகிடுச்சு. கோவிலுகு உள்ள போய் உட்கார்ந்துட்டு  வரவே மாட்டேங்குறா…”

“என் மருமகளுக்கு உங்க அண்ணனை போலவே பக்தி அதிகம். நல்லதுதான் விடு மல்லிகா” என லட்சுமி கூறினாள்.

“இப்படியே விட்டா  சாமியாரா போய்டுவாளோனு தான் சின்ன பயம் அண்ணி” என மல்லிகா கண்களில் கோபத்தை காட்டினாள்.

மல்லிகா திருமணம் முடிந்த இரண்டு ஆண்டுகளில் கணவனை இழந்து கைக்குழந்தை இசையோடு தனது அண்ணன் வீட்டிற்கு வந்து சேர்ந்தவள் தான்.  இன்றளவிலும் இங்கேயே தனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.  தனது கணவனின் மேல் கொண்ட அன்பினால் இன்னொரு திருமணத்தை நினைத்து கூட பார்க்காத பெண்ணவள்.

இசைப்பிரியா  பி எஸ் சி பிசிக்ஸ் முடித்துவிட்டு மேற்படிப்பில் சேர ஆசை இருந்தாலும் அதை விட்டுவிட்டு  குரூப் டூ எக்ஸாம் எழுதி செலக்ட் ஆகவேண்டும் என்ற வைராக்கியத்தோடு அதற்காக படித்துக் கொண்டிருப்பவள்.

என்ன மாமா அத்தை ரொம்ப சந்தோசமா இருக்காங்க போல தெரியுது.

ஆமா மருமகளே.  ஊர்ல இருந்து உன் மாமா வரப்போறான் இல்ல. அத சந்தோசமா இருக்கா.

“ஆதி மாமா வராங்களா.  சொல்லவே இல்ல” என இசை துள்ளி குதித்தாள்.

“அப்படியே அவன்  வந்துட்டாலும் வானமே இடிஞ்சி  விழுந்துடும்…”

“என்ன மாமா  இப்படி சொல்றீங்க”  என இசை முகம் வாடினாள்.

பெரியவன் தான்  வரேன்னு சொல்லிருக்கான்.  இந்த தருதல தான் போனே பண்ண மாட்டேங்குறானே.

“மாமா அவர்  பண்லனா  என்ன.  நாம ஃபோன் பண்ணி பேசலாமே” என இசை மனதிற்குள் சிரித்துக் கொண்டும் உரிமையோடு கேட்க.

“உனக்குத்தான் போன் பண்ண தெரியுமே.  நீ பண்ணி பேச மருமகளே” என கதிரேசன் கூற.

“மல்லிகாவோ வார்த்தைக்கு வார்த்தை அண்ணனும் அண்ணியும் தனது மகளை மருமகளே” என்று அழைப்பதைக் கேட்டு பூரித்துப் போய் நின்றாள்.

‘கடவுளே! இது உண்மையாவே நடக்கனும்.  எனக்கு இந்த ஒரு  வரம் மட்டும் கொடுத்துடு’  மனதிற்குள் வேண்டிக் கொண்டாள்.

இசை  தனது செல்போனில் இருந்து ஆதிக்க கால் பண்ணினாள்.  ஆனால் ஆதி  எடுக்கவில்லை.

தனது மாமா கதிரேசனின் ஃபோனை வாங்கி அதில் இருந்து ஆதிக்கு கால் பண்ணினாள்.

ஆஃபீஸில் யாதவுடன் பேசிக் கொண்டிருந்த ஆதி போனை எடுத்தான்.

“என்னது அப்பா நம்பர்ல இருந்தும்  வருது. யாருக்காவது எதுவும் உடம்பு சரியில்லையோ?” என்று பதட்டத்துடன் ஆதி ஃபோனை எடுத்தான்.

“அப்பா.  என்னப்பா இந்த நேரத்தில கால் பண்றிங்க” என ஆதி  குரல் கொடுக்கு.

“மாமா நீங்க பேசுங்க”  என இசை கதிரேசனிடம் ஃபோனை நீட்ட.

“உங்க அத்தை கிட்டயே கொடு” என கதிரேசன் சொல்ல. இசை லட்சுமியிடம் ஃபோனை நீட்டினாள்.

லட்சுமி ஃபோனை வாங்கிக் கொண்டு பேசத் தொடங்கினாள்.

“ஆதி என்னடா பண்ற.  நல்லா இருக்கியாப்பா…”

“நல்லா இருக்கேம்மா.  உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே..”

“எங்களுக்கு ஒண்ணும் இல்ல. நாங்க  நல்லா தாண்டா இருக்கிறோம்…”

“ரெண்டு நம்பர்ல இருந்தும் கால் வந்துச்சா.  என்னமோ ஏதோன்னு பதறிப் போயிட்டேம்மா”  என்றான்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லடா.  நாங்க நல்லா தான் இருக்கிறோம்.  அண்ணன் பெங்களூரில் இருந்து குடும்பத்தோட ஊருக்கு வரேன்னு சொல்லி இருக்கான்.  நீ எப்படா வர…”

“அம்மா நெனச்ச உடனேலாம் லீவ் போட்டு வர  முடியாதும்மா. ஏதாவது முக்கியமான விஷயம்னா  சொல்லு. வரேன். சும்மா  லீவு போட முடியாது” என்றான்.

“சரிடா. அப்படினா உனக்கு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்றேன். உடனே நீ  கண்டிப்பா லீவ் போடுவ” என லட்சுமி கூற.

“அப்படி என்ன முக்கியமான விஷயம்”  என ஆதி கேட்டான்.

அடுத்த லட்சுமி சொன்ன விஷயம் ஆதியின் காதுகளில் இடியாக இறங்கியது.  மறுவார்த்தை வராமல் விக்கித்து போய்  நின்றான்.

தொடரும்….

Advertisement