Advertisement

மெல்லிசை ?? – 21

“ஆதி கிட்ட நடந்தத அப்படியே சொல்லலாமா?”

“சொல்லித்தான் ஆகணும் லட்சுமி. அவன் முடிவு பண்ணட்டும்” என்றார்.

அங்கு ஜோசியர் சொன்ன விஷயத்தை ஆயை தனியாக அழைத்துக் கூறினார்.

“என்னது வெள்ளிக்கிழமைனா நாளைக்கு ஒரு நாள் தான் இருக்குப்பா. எனக்கு இசை வேணும்னு முடிவு பண்ணிட்டேன். அது எப்போ எப்படி நடந்தாலும் எனக்கு சந்தோஷம் தான்” என்றான்.

“அப்போ இன்னைக்கே  தாலி, மெட்டி எல்லாம் வாங்கிட்டு வந்துடலாம்.  பெருசா யாரையும் கூப்பிட போறதில்ல.  போற வழியில் இரண்டு மாலையும், பூஜ சாமான்களும்  மட்டும் வாங்கணும். கல்யாணத்த முடிச்சுட்டு வந்துடலாம். அவ்வளவு தாண்டா”  என்றார்.

“என்  கல்யாணத்தை இவ்வளவு சர்ப்ரைஸா நானே எதிர்பார்க்கலப்பா. எனக்கே சர்ப்ரைஸா தான் இருக்கு.”

“உங்க சித்தப்பா கிட்ட சொல்லணும். சித்தப்பா கிட்ட சொல்லாம  பண்ண முடியாது.”

“இசைக்கு மட்டும் தெரிய வேணாம். சர்ப்ரைஸாக இருக்கட்டும் அப்பா.  ப்ளீஸ்” என்றான்.

“குடும்பத்துக்கே தெரிஞ்சு அவளுக்குத் தெரியாம எப்படிப்பா பண்றது.”

“அதெல்லாம் நான் தெரியாம  பார்த்துக்குறேன்” என்றான்.

சரியென  ரகுராம் மஞ்சுவைப் பார்க்க  அவர்களது  அறைக்கு சென்றார்கள்.

“ரகுராம்  அங்கு அமர்ந்து இருக்க. தம்பி ஒரு விஷயம் பேசலாம்னு வந்தோம்.”

“சொல்லுங்க அண்ணா” என ரகுராம் கேட்க.

” நம்ம இசைக்கும் ஆதிக்கம் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கோம். தீடீர்னு பண்ண முடிவு தான்.”

“ரொம்ப சந்தோஷம்  அண்ணா. நல்ல முடிவுதான்.  கல்யாணம் தேதி  முடிவு பண்ணியாச்சா?”

“அது விஷயமாக தான் ஜாதகம் பார்க்க போகனோமா”  என ஜோசியர் சொன்னதை  ராமிடம் கூற.

“அப்ப பேசாம காதும் காதும் வச்ச மாதிரி வெள்ளிக்கிழமையே  கல்யாணத்தை முடிச்சிடுவோம்” என்று கூறினார்.

“அப்புறம் தம்பி இன்னொரு விஷயம்.  ஆதி இசைக்கு இந்த விஷயம் தெரிய வேணாம்னு சொல்றான்.  திடீர்னு கோவில்ல போய் சொல்லி இசையோட சந்தோஷத்த பாக்கனும்னு ஆசபடுறான்.”

“அதனால என்ன?  பாத்துக்கலாம். நீங்க ஆக வேண்டியதை பாருங்கண்ணா.”

“பாக்குறதுக்கு என்ன இருக்கு?  அதான் எதுவுமே பண்ண கூடாதுன்னு சொல்லிட்டாங்களே.  பூசாரிய பாத்து மத்த ஏற்பாடுகள  நான் பண்றேன் அண்ணா” என ரகுராம் கூற.

மஞ்சு வருணின் முகத்தைப் பார்த்தாள்.  வருணின் இதயம் சுக்கு நூறாக உடைந்தது.  அவனுக்கு  இருந்த கொஞ்ச நம்பிக்கையும் உடைந்தது.

ரகுராம் பூசாரியை சந்திப்பதாக கூற வெளியே கிளம்ப.  இவர்கள்  ஜெய்யின் அறைக்கு சென்று விஷயத்தைச் சொல்லியே மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தனர். மல்லிகாவும் அவர்களோடு கலந்து கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாள்.

“ஆதியின் மனமோ கடைசியாக இந்த பிளாக்கியவே  கல்யாணம் பண்ணிக்க போறேனே.  நினைச்சு கூட பாக்கல.  இது தான் விதினு சொல்லுவாங்களோ?” என நினைத்துக் கொண்டு  தனது நண்பன் யாதவிற்கு  ஃபோன் பண்ணி நடந்த விஷயத்தை கூறினான்.

ஒரே நாள்ல கல்யாணமா ஆதி.  சந்தோஷம்தான்.  வாழ்த்துக்கள் மச்சி.

“நீ வந்து தான் ஆகனும் யாதவ்.”

“முடிஞ்சா கல்யாணத்துக்கு வரேன்டா.”

“டேய்! வந்து தான் ஆகணும். வேற  யாரையுமே கூப்பிடல.  நீயாவது வாடா” என்றான்.

ஓவரா எனக்குனு ஒரு டிக்ஷனரி இருக்கு. அது இது ப்ராக்டிகல்னு பீலா உடுவ. இப்ப என்ன ஞானோதயம். ஒரே நாள்ல கல்யாணம் பண்ற அளவுக்கு ரெடி ஆகிட்ட.

“எல்லா இம்சைகளுக்கும் முழுக்கு போட்டுட்டு எவ தொல்லையும் இல்லாம நிம்மதியா வாழனும்னு யோசிச்சு தாண்டா இந்த முடிவெடுத்தேன். இசையும் என் மேல உயிரா இருக்காடா” என்றான்.

“அப்போ நீ இதுவரைக்கும் லவ் பண்ண பொண்ணுங்க.”

அவளுங்களாம் ஒரு ஆளு. அததெல்லாம் ஒரு லவ்வா. போடா . சும்மா டைம் பாஸ்க்கு தான். எதையும் ப்ராக்டிகலா யோசிக்கணும்டா.

“அவங்கள்ல ஒரு பொண்ணு கூடவா உன்னைய உண்மையா லவ் பண்ல.”

“உண்மையா லவ் பண்ணி இருக்கலாம்டா. ஆனா அவளுங்க கேரக்டர் எனக்கு பிடிக்கணும்ல. அதுக்காக தெய்வீக காதல்னு அவளுங்க பின்னாடி போக சொல்றியா? அத பத்தி இனி பேச வேணாம். நாளைக்கு கிளம்பி வாடா” என்றான்.

“சரி மச்சி. நான் இல்லாம உன் கல்யாணம் எப்படி நடக்கும். கண்டிப்பா வரேன் டா “என்று கூறிவிட்டு கட் பண்ணினான்.

அனைவரின் முடிவும் ஒன்றாக இருக்க.  வருணின் முடிவு மட்டும் வேறு மாதிரியாக இருந்தது.

நேரம் கடந்து கொண்டிருந்தது. அன்றே நல்ல நாள் என்பதால் அன்று  மாலைக்குள் தாலி, மெட்டி வாங்கப் போனார்கள்.  மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

வருண் மிகுந்த மனவருத்தத்தோடு அமர்ந்திருந்தான்.

அதைப் பார்த்த மஞ்சு “வருண்” என  தன் மகனை கூப்பிட.

“அம்மா எல்லாமே கையை மீறி போய்டுச்சிம்மா.  இதையெல்லாம் பார்க்க சத்தியமா நான் இருக்கக்கூடாது. இருக்கவும் மாட்டேன்” என மனமுடைந்து அழுதான்.

“நான்தான் அப்பவே கேட்கிறேன்னு சொன்னனேடா.   நீ தானே வேண்டாம்னு தடுத்த.  இப்போ அழுது என்ன ஆகப்போகுது.  திடீர்னு நாளைக்கே கல்யாணம் என்ன சொல்றாங்க. இதுக்கு மேல என்னால  எதுவுமே செய்ய முடியாது. உனக்குனு  ஒருத்தி எங்காவது பிறந்து இருப்பா.  அடுத்த முகூர்த்தத்திலேயே நல்ல பொண்ணா பாத்து உனக்கும் கல்யாணம் பண்ணிடலாம் பா.  அதுக்குள்ள படிச்சு நீ வேலை வாங்கிடு”  என ஆறுதல் கூறினார்.

” எனக்கு தலை வலிக்குதும்மா.  ஒரு காஃபி போட்டு குடுங்க” எனக் கேட்க.

“இதோ போட்டுட்டு வரேன் பா”  என மஞ்சு சமையலறைக்குப் போனாள்.

இதற்குள் மனமுடைந்து வருண், “இசை  இல்லாத வாழ்க்கைய என்னால  நினைச்சிக் கூட பார்க்க முடியாது”  என்ற முடிவுக்கு வந்தவனாய் அம்மாவின் சேலையை எடுத்து அவசரமாக ஃபேனில்  கட்டிக் கொண்டிருந்தான்.

மகனின் முகத்தில் இருந்த மாற்றத்தை யோசித்த மஞ்சு மீண்டும் அறைக்கு வந்தவள் மகனின் செயலைப் பார்த்து அதிர்ந்து போனாள்.

“கல்யாணத்தை அடுத்தநாள் வைத்துக் கொண்டு கத்தவும் முடியாம வருணை பிடித்து  கீழே இறங்குடா” என இழுத்து விட்டாள்.

“என்னைய விட்டுட்டு போகணும்னு  முடிவு பண்ணிட்டா

இந்த அம்மாவை சேர்த்துக் கூட்டிட்டு போடா.  நீ மட்டும்  தனியா போக வேணாம்” என  அழுதாள்.

“இசை இல்லனா உன்னால வாழ முடியாது. நீ  இப்படி அவ மேல  பாசமா உயிரா இருக்க.  உன்னோட மனசு அவளுக்கு புரியலையேடா.

அவளுக்காக நீ ஏண்டா சாகணும்.”

“என் மனசு முழுதும் இசை தான் இருக்காம்மா.  அவ இல்லனா சத்தியமா என்னால வாழ முடியாது.  என்ன விட்டுருங்கம்மமா.  ப்ளீஸ்.  நீங்களே உங்க கையால என்னைய கொன்னுடுங்க” என்றான்.

“சத்தம் வெளில கேக்கப் போகுது.  மனச தேத்திக்கோ வருண்.”

“எப்படிம்மா முடியும்.”

“இந்த கல்யாணம் நல்லபடியா முடியட்டும்.  நம்மாள  இந்த கல்யாணத்துல  எந்த கெடுதலும் நடக்கக்கூடாது.  ஒரே ஒரு நாள் பொறுத்துக்கோ”  என்று அவள் எவ்வளவோ ஆறுதல் கூறியும்  முடியவில்லை. ழருண்  உடைந்துபோய் கண்ணீருடன் அமர்ந்திருந்தான்.

ஆதி தனது பெற்றோருடன் சென்றவன் தாலி, மெட்டி  வாங்கி வந்த புது புடவையை  எடுத்துக் கொண்டு வந்து இசை தெரியாமல் ஒரு மணி நேரத்தில் பிளவுஸ் தைத்துக் வாங்கிக் கொண்டு வந்தான்.

நடப்பது எதுவுமே தெரியாமல் இசை ஆதியின் வார்த்தையால் மனமுடைந்து யோசித்தவாறே இருந்தாள்.

மல்லிகாவோ தனது  அண்ணனுக்கு  சம்பந்தியாகப்  போவதை எண்ணி மகிழ்ச்சியில் இருந்தாள்.

நாள் நகர்வது தெரியாமல் நகர்ந்துவிட.  மறுநாள் வெள்ளிக்கிழமை அனைவரும் குலதெய்வம் கோயிலுக்கு போக வேண்டும் என்றும் விடியற்காலை நேரமாக கிளம்ப வேண்டும் என்றும் கதிரேசன் அனைவரிடத்திலும் கூறியிருந்ததால் நேரமாகவே கிளம்பிக் கொண்டிருந்தனர்.

“இந்த புடவையை கட்டிட்டு வாம்மா” என புது புடவையை மல்லிகா நீட்ட.

“இது எப்ப எடுத்தீங்க.  என்கிட்ட காட்டவே இல்ல”  என்றாள்.

“கோவிலுக்கு போறதுக்காக வாங்கினேம்மா.  அதுக்குள்ள ப்ளவுஸ் தைக்கனும்னு  கடையில கொடுத்துட்டேன்.  வாங்கிட்டு வந்து காட்டலாம்னு நினைச்சேன்.  மறந்துட்டேன்.”

“சூப்பரா இருக்கும்மா”  என புடவையை கட்டிக் கொண்டு வந்தாள்.

லட்சுமி அவளுக்கு தலை நிறைய பூ வைத்து விட்டாள்.

“எதுக்கு இவ்வளவு பூவு அத்தை”  என்றாள்.

அந்த அழகான அரக்கு வண்ண புடவையில் எளிமையான தோற்றத்திலும்  தேவதையாக தெரிந்தாள்.

“இது தான் இயற்கை அழகோ?” என ஆதி நினைத்தான். தனக்குள் இசையை கரம்பிடிக்கப் போகும் தருணத்தை எதிர்பார்த்து கனவுகளோடு காத்திருந்தான்.

‘தாலிய கட்டிய அந்த நிமிடம் இசை ஆசைப்பட்டது போல லவ் யூ டி பொண்டாட்டினு கத்தி சொல்லணும். அவளுக்கு செம சர்ப்ரைஸா இருக்கும். இசை.. உன்னோட இதழில் இதழ் பதிக்கும் நேரம் எப்போது வரும். உன்னை எனக்குள் சிறைபிடிக்கும் நேரம் வெகுதூரம் இல்லடி. நீ ஆசைப்பட்டபடி இந்த ஆதி மொத்தமா உனக்கு சொந்தமாக போறேன்டி கள்ளி. எதுக்கும் அசையாத இந்த ஆதிய உன் அன்பால சாச்சிட்டியேடி. உன் விரல் பிடிக்கும் அந்த தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கேன்’  என நினைத்தான்.

“ஒரு நாளைக்கு தான. கோவிலுக்கு போறோம்ல.  வெச்சுக்கோம்மா”  என்றாள்.

நேரம் கடந்து கொண்டிருக்க.  என அனைவரும் கிளம்பினர்.

வருண்  மட்டும் தனது அறையிலேயே அமர்ந்திருந்தான்.  “வருண்  எல்லாரும் போறாங்கப்பா.  ஏதாவது நினைக்க போறாங்க. வாடா கண்ணு.  போயிட்டு வந்துருவோம்”  என மஞ்சு அழைக்க.

“அங்க  வந்து ஆதி இசை கழுத்துல தாலி கட்டுறத  பார்க்க சொல்றயாம்மா.  அந்த இடத்திலேயே செத்துரலாம். அதை பார்க்கிற சக்தி எனக்கு இல்லம்மா.  தயவு செஞ்சு என்னை விட்ரும்மா” என அழுதான்.

“நீ என்ன சொன்னாலும் நம்ம அங்க போய்த்தான் ஆகணும் வருண். நிலைமைய புரிஞ்சுக்கோப்பா” என மகனை சமாதானப்படுத்தி அழைத்து சென்றாள்.

போகும் வழியில் இரண்டு பூமாலையை வாங்கிக் கொண்டு,  பூஜைக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டார்கள்.

பூசாரி குறித்த நேரத்திற்கு வந்து சேர்ந்தார்.  கல்யாணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும்  நடந்து கொண்டிருந்தது.

“சாமியா நல்லா வேண்டிக்கிட்டு பிரகாரத்தை ஒரு முறை சுத்தி வாங்க” என்று ஐயர் கூற.

அனைவரும் பிரகாரத்தை  சுற்றி வந்து கொண்டிருக்கும் பொழுது அறிமுகமில்லாத ஒரு நபர் கதிரேசன் இடம் வந்து பேசினார்.

“யாருங்க இவங்க” என லட்சுமி கேட்க.

“தெரிஞ்சவங்கதான்.  நீ போய் ஆக வேண்டியத  பாரு  லட்சுமி. நான் கொஞ்சம் பேசிட்டு வந்துடறேன்” என  அந்த நபருடன் கதிரேசன் தனியாக சென்று பேசிக் கொண்டிருந்தார்.

“முகூர்த்த நேரம் தொடங்கறது.  பொண்ணு மாப்பிள்ளைக்கு மாலைய போட்டு உட்கார வைங்கோ”  என ஐயர் குரல் கொடுக்க.

ஆதி மாப்பிள்ளையாக  ஜெய் மாலையை போட்டு விட.

இசை அதிர்ச்சியோடு பார்த்தாள். ‘ஆதி மாப்ளையா?’ என நினைத்தாள்.

இன்னொரு  மாலையை எடுத்து இசையின்   கழுத்தில் போட்டு அமர வைக்க சொல்ல.

“அதை இசை கழுத்துல நானே போடுறேனே”  என மாலையை ஆதி  வாங்கிக் கொள்ள.

இசைக்க அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது.  “என்ன கல்யாணமா? எனக்கா?”  என்றாள்.

Advertisement