Advertisement

” ரொம்ப வலிக்குது மாமா.  போய் கட்டில்ல படுத்துக்கோங்க. நான் கஷாயம் போட்டு கொண்டு வரேன்” என்றாள்.

‘இந்த காயத்துக்கு எல்லாம் அழுவாங்களா? எங்க அம்மா புத்தி அப்படியே இருக்கு. அப்பா சொன்னது நிஜம் தானோ’ என நினைத்தான்.

“ஏண்டா பார்த்து வர மாட்டியா?”  என ஜெய் திட்ட.

“நாய் குறுக்கே வந்துடுச்சுடா” நான் என்ன பண்றது” என்றான்.

“சரி வந்து படு வா” என  அவனது அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்தான்.

இதற்குள் கேபிள் கனெக்சன் கொடுக்கும் பையன் வந்திருக்க. சம்யுக்தா  தங்களது அறைக்கு சென்று அங்கிருக்கும் டிவிக்கு கேபிள் கனெக்சன் கொடுக்க சொன்னாள்.

அவள் சொன்னது போலவே கேபிள் கனெக்சன் கொடுத்தாயிற்று.  தற்காலிகமாக பழைய ஃபேனை மாற்றிவிட்டு புது ஃபேன் போட்டிருந்தார்கள்.

“அண்ணி குடிக்க கொஞ்சம் ஐஸ் கிடைக்குமா?” ஆதி சம்யுக்தாவிடம் கேட்க.

சம்யுக்தா ஐஸ் வாட்டர் கொண்டு வந்து கொடுத்தாள்.

“ஐஸ் வாட்டர் கொடுக்க வேணாம் அத்தை.  இந்த கஷாயத்தை கொடுக்கலாம்” என தடுத்துவிட்டு கஷாயத்தை கொடுத்தாள்.

“இந்த காயத்துக்கு எதுக்கு கஷாயம்” என்றான்.

“உங்க பாஷையில பிராக்டிகலா சொல்லனும்னா செப்டிக் ஆகாம இருக்க,  காயம் ஆற,  தலைவலி காய்ச்சல் ஏதும் வராம இருக்க தான் மாமா.  குடிங்க”  என்றாள்.

அவனது தலையை அடிக்கடி தொட்டுப் பார்த்தாள்.

“எனக்கு ஒன்னும் இல்ல ப்ளாக்கி” என்றான்.

“அப்போது அங்கு வந்த கதிரேசன் ஏண்டா வண்டிய கூட பார்த்து ஓட்ட மாட்டியா?”  என திட்டினார்.

“நாய் குறுக்க வந்துடுச்சிப்பா.”

“நாய்  குறுக்க வரது கூட தெரியாம  அப்படி என்ன யோசிச்சி  கிழிக்கிறவன்”  என்றார்.

“என்னத்த யோசிப்பாங்க.  யோசிக்க வச்சதே  நீங்க தானே”  என்றான்.

“மாமா இவருக்கு  அடிபட்டது மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கு.  குலதெய்வம் கோயிலுக்கு போயி ஒரு பொங்கல் வச்சிட்டு வரலாமா?”  என இசை கேட்க.

“வர  வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்த நாள் தான்.  அன்னைக்கே போலாம்மா” என்றார்.

“இதுக்கெல்லாமா வேண்டுதல் வெப்பாங்க.  நீ ஏன் இப்படி இருக்க ப்ளாக்கி”  என்றான்.

“உங்கள  ரத்த காயத்தோட பார்த்து மனசு உடைஞ்சு போச்சு மாமா.  அதனால  வேண்டுதல் வச்சுக்கிட்டேன்.”

“அவ்வளவுதானா?  இன்னும் வேற ஏதாவது இருக்கா?”

“அம்மன் கோயில்  திருவிழா அப்போ தீ  மிதிக்கிறேன்னு வேண்டிக்கிட்டேன்.”

“இதெல்லாம் எப்ப வேண்டின.”

“உங்க காயத்த பார்த்தவுடனே தான் மாமா.”

“நீங்க எல்லாம் என்னைக்குமே மாற மாட்டீங்களா?  ஒருத்தர் கூட பிராக்டிகலா யோச்க்க மாட்டேங்கறீங்க.  இன்னும் பழைய காலத்திலேயே இருக்கீங்கன்னு எனக்கு தெரியல.”

“இதெல்லாம் உங்களுக்கு சொன்னாலும் புரியாது  மாமா. உங்க நாகரீகம் உங்க கண்ணை மறைக்குது. ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க” என கூறி விட்டு வெளியே சென்றாள்.

அன்று இரவு சம்யுக்தா பிள்ளைகளை உறங்க அழைக்க.

“தாத்தா நிறைய கதை சொல்லுவாங்க.  நான் தாத்தா கூட படுத்துகிறேன் மம்மி” என்றான் ஆரவ்.

“தோட்டத்துல  ஃபேன்  கூட கிடையாது”  என கூற.

“அங்கு நேச்சுரா காத்து  சூப்பரா வருது மம்மி” என அடம் பிடித்தான். “மித்ராவும் நானும் போவேன்” என அடம்பிடிக்க.

யோசித்து பார்த்த கதிரேசன், ‘சின்ன பிள்ளைகள அங்க ஏன்  கூட்டிட்டு போகணும்’ என நினைத்து,  “நானும் இங்கேயே படுத்துகிறேன்.  இன்னைக்கு எல்லாரும் இங்கயே தூங்கலாம். நீ போம்மா. நான் என் கூட படுக்க வச்சிக்கிறேன்” என்று கூறிவிட்டு பிள்ளைகளை தன்னுடன் அழைத்துச் சென்றார்.  லட்சுமியும் அவர்களுடன் சென்றார்.

“ஜெய் நான் நெனச்சது ஒன்னு. ஆனா இங்க நடக்கறது வேறயா இருக்கு. புள்ளைங்க கிராமத்து வாழ்க்கையில் ஒன்று போயிடுவாங்க  போல.  அதே சமயம் நான் பயந்தது போல எதுவும் ஆகல. இப்போதான் மனசுக்கு நிறைவா இருக்கு.  உண்மையை சொல்லனும்னா இவ்வளவு நாளா இந்த இயற்கையான வாழ்க்கையை நாம ரொம்ப மிஸ் பண்ணிட்டேனு இப்ப எல்லாம் தோணுது.  உங்க அம்மா மேல முன்னாடி ரொம்ப கோபப்படுவேன்.  நான் எவ்வளவு கோவமா பேசினாலும் ஒரு வார்த்தை கூட உங்க அம்மா உங்க கிட்ட சொன்னது இல்ல.  எனக்கு இன்னொரு அம்மாவா தான் இருக்காங்க. என்ன இருந்தாலும் கிராமத்து வாழ்க்கையே ஒரு தனி அழகுதான் ஜெய்”  என அவனது மார்பில் சாய்ந்தாள்.

“சிட்டி லைஃப் தான் சந்தோஷம் தான் எல்லாரும் நினைக்கிறாங்க  சம்யு. ஆனா இந்த இயற்கையான வாழ்க்கையே கடவுள் நமக்கு கொடுத்த வரம் தான்.  உண்மையாகவே  சிறந்த வாழ்க்கை கிராமத்து வாழ்க்கை தான்” என்று அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் வாழ்க்கையின் உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்கத்  தொடங்கியிருந்தாள்.

இசை அன்று இரவு முழுக்க அவனது அறைக்கும் தனது அறைக்கும்  நடந்து கொண்டிருந்தாள்.

ஆதிக்கு தலைவலி காய்ச்சல் லேசாக இருக்க. சுடுதண்ணீர் வைத்து மாத்திரை கொடுத்து படுக்க வைத்தாள். தலைவலிக்கு பற்று போட்டாள்.

“என்னடி இதுக்கும் இதுக்கும் நடந்துக்கிட்டே இருக்க” என மல்லிகா கேட்க.

“மாமாவுக்கு லேசா தலைவலி காய்ச்சல். அதாம்மா மாத்திரை கொடுத்தேன்.”

மறுநாள் காலை பொழுது விடிந்தது.  இசை மாத்திரை கொடுத்தது அப்பொழுதுதான் அவனது நினைவுக்கு வந்தது.  ‘நான் அவகிட்ட இவ்வளவு கடுமையா பேசியும்  எப்படி இவளால  இவ்வளவு அன்பா நடந்துக்க முடியாது.  அம்மா சொன்ன மாதிரி உண்மையாக இசை ரொம்ப  நல்லவ தான்’ என அவனது  எண்ணங்கள் அப்பொழுது தான் இசையை பற்றி எண்ணத்  தொடங்கியது.

இதுவரை அவன் மனதில் ப்ளாக்கியாக இருந்தவள் இப்போது இசையாக மாறி இருந்தாள்.

அப்பொழுது இசை காஃபி கொண்டு வந்து கொடுத்தாள். இசையின் கண்கள் சிவந்து முகம் வீங்கி காணப்பட்டது.  “இப்போ எப்படி மாமா  இருக்கு” என கேட்டாள்.

“இப்ப பரவால்ல இசை.  தேங்க்ஸ் இசை” என்றான்.

“வார்த்தைக்கு வார்த்தை இசை” என்று கூறிய அவனது மாற்றத்தை இசை கவனிக்க தவறவில்லை. ஆனாலும் அதைப்பற்றி அவனிடம் கேட்கவில்லை.

“என்ன இசை முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு” எனக் கேட்டான்.

“நைட் தூங்காம கண்ணு முழிச்சது அப்படி இருக்கு மாமா. சரியா போய்டும்” என்றாள்.

“நான் பேசுனது எதையும் மனசுல வெச்சுக்காம எனக்காக ஹெல்ப் பண்ணினதுக்கு தேங்க்ஸ்.”

“அது என்னோட கடமை” என்றாள்.  இசை மேற்கொண்டு அவனிடம் எதுவும் பேசாமல் அவளது வேலையை பார்க்க தொடங்கினாள்.

“அப்பொழுதுதான் வருணின்  முகத்தை கவனித்தாள்.  என்ன மாமா கொஞ்ச நாளா உங்க முகமே சரியில்ல.  உங்க முகத்துல சந்தோஷமே இல்ல” என கேட்டாள்.

“அப்படியெல்லாம் எதுவுமே இல்லையே இசை.  நல்லாத்தானே இருக்கேன்.  எக்ஸாமுக்காக கொஞ்சம் ஹார்ட் வொர்க் பண்றேன்.”

“அதான் ரொம்ப கண்ணு முழிச்சி படிக்காதீங்க மாமானு சொன்னேன்.  ஹெல்த் பாத்துக்கோங்க.  காஃபி  எதுவும் வேணும்னா கூப்பிடுங்க. நான் போட்டு தரேன்”  என்றாள்.

“சரி இசை” என்றான்.

“அடுத்து அடுத்து சில நாட்களில்  இசையின் ஒவ்வொரு செயலிலும் அவளது அன்பிலும் ஆதி ஆச்சரியமடைந்தான். அவள் மீது அவனையும் அறியாமல் காதல் வந்தது.  அவன் தனது தந்தையிடம் அவனாகவே கூப்பிட்டு  எனக்கு இசையை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்.  நீங்கள் நல்ல நாள் பாருங்க” என்றான்.

சந்தோஷத்தின் உச்சத்துக்கே சென்று வந்த கதிரேசன் அமைதியாக லட்சுமியை கூப்பிட்டு ரெண்டு போரோட  ஜாதகத்தையும் எடுத்துக் கொண்டு ஜோசியரைப் பார்க்க  கிளம்ப.

“ஒரு நிமிஷம் அப்பா. இந்த விஷயம் இசைக்கு இப்போது தெரிய வேணாம். சர்ப்ரைஸா நானே சொல்றேன்” என்றான்.

சரியென  இருவரும் கிளம்பினார்கள்.

ஜோசியரைப் பார்த்து இருவரின் ஜாதகத்தையும் கொடுத்து பார்க்கச் சொல்ல.

சற்று நேரத்தில் இருவரின் ஜாதகத்தையும் கணித்தவர், “இந்த ஜாதகம் நிச்சயமாக ஒன்னு சேராது” என்றார்.

இருவரும் அதிர்ச்சியோடு பார்க்க.

“அப்படியே நீங்க கல்யாணம் பண்ணனும்னு நெனச்ச ஊரைக்கூட்டி மேலதாளமெல்லாம்  எதுவும் வைக்காம  உங்க குல தெய்வம் கோயிலுக்கு போயி அதிரடியா  எதுவுமே இல்லாம சிம்பிளா பண்ணுங்க. அது  கூட நடக்கும்னு உறுதியாக சொல்ல முடியாது. நிச்சயமாக தடைகள் வரும்.”

“என்னய்யா இப்படி சொல்லிடீங்க. அந்த பொண்ணு என் பையன் மேல உயிரையே வச்சிருக்கா. நீங்க இப்படி சொல்றிங்க.”

“நான் எங்க சொன்னேன். ஜாதகத்துல இருக்கு கட்டம் சொல்லுது” என்றார்.

“அப்போ பந்தல் போட்டு பத்திரிக்கை அடிச்சு எதுவும் பண்ண கூடாதா?”

“அததான இவ்வளவு நேரமா சொன்னேன். நேரா குலதெய்வம் கோவிலுக்கு போங்க.  அப்பவே தாலியை கட்டி கல்யாணத்த முடிச்சி  கூட்டிட்டு வந்துடுங்க.”

“இந்த ஜாதகம் ஒன்று சேராதுனு  சொல்றீங்களே.  அப்புறம் எப்படி கல்யாணம் பண்றது.”

“கடவுள் மேல பாரத்த போட்டு பண்ணுங்க. நடக்க வேண்டியது தானா நடக்கும். ஊரைக்கூட்டி பண்ணாதனு கட்டம் சொல்லுது. குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுள் இல்ல. உங்க ஆசைப்படி ஒருவேல  நடந்தா சந்தோஷம் தானே. முயற்சி பண்ணி பாருங்க.”

“அப்படி செஞ்சா உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லையே.”

“உயிருக்கு எந்த ஆபத்தும் நிச்சயம் வராது” அதுக்கு நான் கேரண்டி.”

“அப்போ அதுக்கு ஒரு நல்ல நாள் பார்த்து குறிச்சி  கொடுங்க” என்றார்.

“வர வெள்ளிக்கிழமையே  முகூர்த்த நாள் தான். அன்னைக்கு போய் முடிச்சுட்டு வந்துருங்க.”

“வேண்டப்பட்டவங்கள  மட்டும் கூப்பிடலாமா?”

“அதெல்லாம் எதுவுமே பண்ண வேண்டும்” நீங்க மட்டும் போங்க” கல்யாணத்த முடிச்சுட்டு வர பாருங்க” என்றார்.

“என்ன இப்படி சொல்லிட்டீங்களே” என யோசித்தார்.

“உங்க தங்கச்சி பொண்ண கல்யாணம் பண்ணி வைக்க ஏன் இப்படி யோசிக்கிறீங்க. உயிருக்கு எல்லாம் ஒரு ஆபத்தும் இல்ல. தைரியமா பண்ணுங்க” என்றார்.

“என்னங்க பண்ணலாம்.  ரெண்டு ஜாதகமும் ஒன்று சேராதுனு வேற சொல்லிட்டாரு.”

“குலதெய்வத்து  மேல பாரத்தை போட்டுட்டு வெள்ளிக்கிழமையே  கல்யாணத்தை முடிப்போம். அப்படி யாரையும் கூப்பிடாம அதிரடியா செஞ்சா கெட்ட நேரம் அதுல அடிச்சிட்டு போய்டும். எத்தனையோ காதல் கல்யாணம் இப்படி பண்ணவங்க ஓஹோனு வாழ்ந்துட்டு தான இருக்காங்க. அவிக எந்த நேரம் காலம் பாத்தாங்க. எல்லாம் என் சாமி பாத்துக்கட்டும்” என்றார்.

“வீட்ல எல்லார்கிட்டயும் சொல்லலாமா? வேண்டாமா?” என லட்சுமி கேட்க.

“ஆதி கிட்ட சொல்லுவோம்.  பசங்க கிட்ட சொல்லாம எப்படி மறைக்கிறது.  என் தம்பி வீட்லயும் சொல்லிதான் ஆகணும்.  இசை கிட்ட மட்டும் சொல்ல வேணாம்.   என்ன செய்யலாம்னு ஆதிய கேட்டு  முடிவெடுக்கலாம்.  வா போகலாம்” என அவரிடம் பணத்தை கொடுத்து விட்டு இருவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

தொடரும்….

Advertisement