Advertisement

மெல்லிசை ??  – 19

“அதை பார்த்த மித்ரா சித்தப்பா சித்தி ஓடுறாங்க. பாருங்க” என்று கூற.

இதை சற்றும் எதிர்பாராத ஆதி,  ‘எங்க போனாலும் நமக்கு ஏழரையாவே  வருதே.  உண்மையை சொன்னாலும் தப்பு.  பொய் சொன்னாலும் தப்பு’ என நினைத்துக் கொண்டு,  “இசை..  இசை..  நில்லுடீ” என சொல்லிக் கொண்டே அவளை தடுத்து நிறுத்த ஓடினான்.

“ஏய்!  நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்.  இசை.. இசை”  என கத்தினான்.

அதைக் கேட்ட இசை  அந்த இடத்திலேயே நின்றாள்.

அவளருகில் சென்றவுடன் இசையின் கையை பிடித்து இழுத்து வந்து  இசையின் கன்னத்தில் பளாரென அறைந்தான்.

கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டே நின்றாள்.

“என்னடீ கொழுப்பா? நீ செத்துப் போனா வீட்டுக்கு  யார் பதில் சொல்றது.  கிளம்பி வீட்டுக்கு போடீ” என்றான்.

“நீங்க என்ன லவ் பண்றீங்களா? இல்லையா? அதுக்கு பதில் சொல்லுங்க.”

“இப்ப பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல.  முதல்ல வீட்டுக்கு கிளம்பு”  என்றான்.

இசை அடியை வாங்கிக் கொண்டு அமைதியாக வீட்டிற்கு கிளம்பினாள்.

‘இந்த பசங்க வேற வீட்டில் ஏதாவது சொல்லிட்டா  என்ன பண்றதுன்னு தெரியலையே’ என நினைத்தான்.

“சித்தப்பா எதுக்கு இசை சித்திய  அடிச்சிங்க.”

“அவளுக்கு நீச்சல் தெரியாதுடா.  நீச்சல் அடிக்குறேன்னு  கிணத்துக்கு போனா.  அதான் நான் அடிச்சிட்டேன்.”

“அப்ப அடிக்கலாம்.”

“சரி வாங்க நாம வீட்டுக்கு போலாம்” என பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.

அப்பொழுது ஜெய் தனது தாயிடம் தீவிரமாக பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தான்.

“என்னடா அம்மாவ மிரட்டிட்டு இருக்க.”

“போடா.  நீ வேற. எனக்கு வேலை போயிடுச்சு. அதான் இங்கே வந்துட்டேன்.”

“வேல போற அளவுக்கு என்னடா பண்ண?”

“என் பொண்டாட்டி தொல்லை தாங்கல.  இஎம்ஐ கட்ட முடியல. அதனால ஆபீஸ் பணத்தில கை வெச்சிட்டேன்.  தெரியாம திரும்பி வச்சிடலாம்னு நினைச்சேன்.  அதுக்குள்ள மேனேஜர்  பார்த்து தொலைச்சிட்டான்.  அதனால  வேலையை விட்டு அனுப்பிட்டாங்க.”

இதைக் கேட்டு லட்சுமி கண் கலங்கினார்.  “நான் உன்னைய இப்படியாடா வளர்த்தேன்” என துடித்துப் போனார்.

“வெளியில நாலு பேருக்கு தெரிஞ்சா என்ன ஆகும்.”

“வெளியில எல்லாம் சொல்லாதம்மா.  அப்பாகிட்டயும் சொல்ல வேணாம்.”

“சரிடா.  அடுத்து என்ன  பண்ணலாம்னு இருக்க”  என ஆதி கேட்க.

ஆத்தூரில வாங்கிய நிலத்துக்கு இஎம்ஐ கட்ட முடியாலடா.  அதனால நம்ம பூர்வீக சொத்து  அந்த அஞ்சு  செண்ட் நிலத்த வித்து  கொடுக்க சொல்லி  அம்மாகிட்ட  சொல்ல சொன்னேன். அதான் அப்பா என்ன சொன்னாங்கனு  கேட்டுட்டு இருக்கேன்.  அப்பா முடியாதுன்னு சொல்லிட்டாராம்.  அந்த பணத்த கட்டலனா  என்னால சமாளிக்க முடியாது.  கண்டிப்பா நான் உயிரோடு இருக்க மாட்டேன்டா.  பிள்ளைகளை கொன்னுட்டு நானும்  செத்துடுவேன்.  இது தவிர எனக்கு வேற வழியே இல்ல ஆதி.

“டேய்! என்ன வார்த்தை பேசுற.  அப்பாகிட்ட பொறுமையா எடுத்து சொன்னா கேட்பாங்க.  முட்டாள்தனமான முடிவு பண்ணாம வேலையை பாரு.  சமயம் பார்த்து அப்பா கிட்ட நான் பேசறேன்.  நிலத்த வித்தா உன் கடனை விட பணம் அதிகமா கிடைக்குமேடா. மீதிய என்ன செய்யலாம்னு இருக்க.”

“அந்த  பணத்தை கட்டிட்டு மீதி பணத்த வச்சி  ஏதாவது பிசினஸ் பண்ணலாம்னு நினைக்கிறேன்டா.”

” அத அப்புறமா யோசிக்கலாம்” என்றான்.

“சின்னவன் இருக்க எப்படி முழு பணத்தையும் உனக்கே தரமுடியும்” என  லட்சுமி கேட்க.

“அம்மா எனக்கு ஒன்னும் தர வேண்டாம்.  அவன் பிரச்சனைய முதல்ல  முடிச்சிடுங்க.  இல்லன்னா அவன் தொல்லை தாங்காது.  அவன் பொண்டாட்டி அதுக்கு மேல. இதுங்களால இம்சை தான். இதுங்களும்  நிம்மதியே இருக்காது. நம்மளையும் நிம்மதியாக இருக்க விடாது.  நீ அப்பாகிட்ட பேசும்மா”  என்றான்.

“நான் பேசினா அப்பா அடிக்க வாராங்க. திரும்ப போய் என்னன்னு பேசுறது.”

” சரி.  அப்பா கிட்ட நானே பேசறேன்”  என கூறிவிட்டு ஆதி இசையை தேடி அவளது அறைக்கு போனான்.

இசை  தரையில் படுத்து அழுது கொண்டிருந்தாள்.

” நீ என்ன லூசாடீ. உனக்கெல்லாம் சொந்த புத்தி கிடையாதா?  ஒரு விஷயத்தை சொன்னா புரிஞ்சிக்க பாரு.  தேவையில்லாம சீன் போடாத” என்றான்.

அவனிடத்தில் இசை  ஒரு பேப்பரை நீட்டினாள்.

“என்ன லெட்டர் இசை”  எனக் கேட்டான்.

இசை எதுவும் பேசாமல் மௌனமாக நின்றாள்.

பேப்பரை வாங்கி விரித்து பார்த்தான்.  அதில் ரத்தத்தால் “ஐ லவ் யூ ஆதி” என எழுதப்பட்டிருந்தது.  அதைப் பார்த்து ஆதிக்கு கோபமாக வந்தது.

“ஏண்டி.  நீங்கலாம் திருந்தவே மாட்டீங்களா?  எத்தனை நாளைக்கு இரத்தத்தில எழுதுறது, கிணத்துல குதிக்கிறது,  கட்டி இருக்க  துணியக் கிழிச்சி  கட்டுறதுனு இன்னும்  பழைய ஸ்டைல்லயே  இருப்பீங்க.  கொஞ்சமாவது  பிராக்டிகலா இருக்க  பாருங்க.  இப்படி எல்லாம் எழுதிட்டு யாருக்கும் வராது பட்டிக்காடு” என்றான்.

“அப்போ என் மேல உங்களுக்கு லவ் இல்லையா?”

“இந்த பாரு.  நீ கிணத்துல குதிக்க வேணாம்னு தான் நான் விளையாட்டுக்கு சொன்னேன்னு   பொய் சொன்னேன்.  இப்ப இல்ல.  நீ எப்ப கேட்டாலும் நான் சொன்னதுதான் உண்மை.  அப்பா சொல்றாங்க. ஆட்டுக்குட்டி சொல்றாங்கன்னு நம்பிக்கிட்டு இருக்கு.  யார் சொன்னாலும் இந்த கல்யாணம் நடக்காது.  ஒழுங்கா நீயே ஆதிய  எனக்கு பிடிக்கலன்னு சொல்லி கல்யாணத்தை நிறுத்திடு.  இதான் ரெண்டு பேருக்குமே நல்லது.”

“அது என்னால முடியாது மாமா. நீங்க தான் என் உயிர்.  எனக்கு நீங்க தான் முக்கியம் மாமா”  என்றாள்.

ஆதி “பளாரென”  கன்னத்தில் அறைந்தான்.

“நீங்க எத்தனை முறை என்னை அடிச்சாலும் சரி.  நம்ம கல்யாணம் நடந்தே தீரும் மாமா.  இதை யாராலும் நிறுத்த  முடியாது.”

“திரும்பத் திரும்ப இந்த வார்த்தைய சொல்லாத.  கேட்கவே கேவலமா இருக்கு. லவ் பண்ற மூஞ்ச பாரு.”

“ஏன் மாமா.  இந்த மூஞ்சி லவ் பண்ண கூடாதா?”

“ஐய்யோ! அந்த வார்த்தை சொல்லாத. என்னால கேட்க முடியல.”

“ஐ லவ் யூ மாமா” என மீண்டும் கூறினாள்.

ஆதி மீண்டும் அறைய.  கன்னத்தைப் பிடித்துக் கொண்டு மீண்டும் “ஐ லவ் யூ மாமா”  என்றாள்.

மீண்டும்  மீண்டும் ஆதி அடிக்க.

நீங்க எத்தனை முறை அடித்தாலும் என் வாயிலிருந்து “ஐ லவ் யூ” மாமானு தான் வரும்.  “ஐ லவ் யூ..  ஐ லவ் யூ மாமா” என அழுது கொண்டே கூறினாள்.

“உனக்கும் எனக்கும் கொஞ்சம் ஆவது  பொருத்தம் வேண்டாமா?

எத்தனை நாளைக்கு தான் சொந்தம் விட்டுப் போயிடும்னு  இப்படியே கழுத்து அறுப்பீங்க. வெளி உலகத்துக்கு வந்து பாருங்க.  என்ன நடக்குதுன்னு.  என் முன்னாடி வந்து நிக்காத” எனக் கூறி விட்டு கதவை சாத்தி விட்டு தனது அறைக்கு சென்றான்.

விழிகளில் கண்ணீர் திரண்டு முத்துக்களாய்  கொட்டிக் கொண்டிருந்தது .

“என் ஆசைகள்  மொத்தமும் கனவாகி போயிடுமா?  நான் என் மாமாவை கல்யாணம் பண்ணிக்க முடியாதா?  ஆதி இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது”  என அழுது கொண்டே படுத்திருந்தாள்.

அப்போது கதிரேசன் வீட்டிற்குள் வந்தார்.  தனது தந்தையின் குரலை கேட்ட ஆதி மீண்டும் வெளியில் வந்தான்.

“அப்பா  உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்” என்றான்.

“என்னப்பா சொல்லு.”

“அப்பா நான் சுத்தி வளர்ச்சி எல்லாம் பேச மாட்டேன்.  நேரடியா விஷயத்துக்கு வரேன்.”

“என்ன விஷயம் ஆதி?”

“அந்த அஞ்சி  செண்ட் நிலத்த அண்ணனுக்கு வித்து  கொடுத்துடுங்கப்பா.”

“டேய்!”  என அவர் தொடங்கும் முன்பாகவே,  “அப்பா உங்க காலம் வேற.  எங்க காலம் வேற.  உங்க வரட்டு  கௌரவத்தையும் பிடிவாதத்தாலயும்  அவன் வாழ்க்கைய இல்லாம  பண்ணிடாதீங்க.”

“அவனோ வாழ்க்கைல  கௌரவமா  இருக்கணும்னு  தான கடன் வாங்கினான்.”

“அவனோட கெட்ட நேரம். நெனச்சது ஒன்னு. நடந்தது ஒன்னு. அதுக்கு யார் என்ன செய்ய முடியும்?”

“நான் எதையும் விக்க  முடியாது டா. நீங்க என்ன வேணா பண்ணுங்க” என்றார்.

“அப்போ அவன்  குடும்பத்தோட தற்கொலை பண்ணிட்டு சாகுறேன்னு  சொல்றான்.

அண்ணனோட  பிடிவாதம் உங்களுக்கு தெரியும் இல்ல.  அப்ப அவ செத்துட்டா நீங்க சந்தோசமா வாழ்ந்திடுவிங்களாப்பா?”

“செத்தா  சாகட்டும். இந்த பூச்சாண்டிக்கெல்லாம் இந்த கதிரேசன் பயப்பட மாட்டான்டா.”

“அது என்னோட சொத்து டா. நான் தரமாட்டேன்.”

“புள்ளைங்க செத்து நீங்க வாழனுமாப்பா.  இதுதான் ஒரு அப்பாவோட கடமையா?”

“ஆதி  பேசி மூளைய சலவை பண்ணனும்னு நினைக்காத.  அந்தப் பிள்ளைங்களோட முகத்தை பாருப்பா. அவன்  ஏதாவது தப்பா யோசிச்சி சொன்ன மாதிரி  ஏதாவது பண்ணிகிட்டானா நாளைக்கு இதுகள யாரு வளர்க்குறது. நீங்க எத்தனை வருஷத்துக்கு உயிரோடு இருக்க முடியும்.  கொஞ்சம் அவங்க  வாழ்க்கைய நெனச்சு பாருப்பா” என்றான்.

“நீ சொல்றதெல்லாம் நல்லாத்தான் இருக்கு.  அதே  சமயம் அது பூர்வீகம்டா.”

“சரிப்பா. அத விக்க வேணாம்.”

“நல்லது. இப்பவாது புத்தி வந்துச்சே” என்றார்.

“அவசரப்படாதிங்கப்பா. அப்போ காட்ட வித்து  இரண்டு பேருக்கும் பங்கு பிரிச்சு  கொடுத்துடுங்க.”

“இதுக்கு என்னைய கொன்னுடுங்கடா.  நமக்கெல்லாம் சோறு போடுற பூமிடா. அதையா  விக்க  சொல்ற. தப்பு என்னோடது தான் டா. நம்ம ஊருல ஒரு பழமொழி இருக்கு.”

“பழமொழி சொல்ற நேரம் இது இல்லப்பா.”

சொல்ல வேண்டிய இடத்தில சொல்லி தான் டா ஆகணும். “சும்மா இருக்குற சேவலுக்கு ஏன் சோத்த போடுவானே அது கொண்டைய கொண்டைய ஆட்டிக்கிட்டு ஏன் கொத்த வருவானே”

“அப்பா இதுக்கும் இங்க நடக்கிற சம்பவத்துக்கும் என்னப்பா சம்மந்தம்.”

“அப்படி தான என் நிலமையும் இருக்கு. சும்மா கிடக்கிற உங்களுக்கு இத்தனையும் கஷ்டப்பட்டு சேர்த்து வச்சேன்.  இப்ப என்னையவே கொத்தி புடுங்க பாக்கறிங்களே. சோறு போடுற நிலத்தை வித்தா  அடுத்தவேள சாப்பாட்டுக்கு நடுத்தெருவுலதான் நிக்கணும்.  அதையும் தரமாட்டேன்”   என பிடிவாதமாக மறுத்தார்.

“இப்படி பிடிவாதம் பிடிச்சா என்ன பண்ண முடியும்.  அண்ணனை பொறுத்தவரைக்கும் கண்டிப்பா சொன்னா  செஞ்சுடுவான்.  செத்துட  போறான். உங்க  பிடிவாதத்த கொஞ்சம் விட்டு குடுங்கப்பா.  எனக்கு அதுல எதுவும் பங்கு வேணாம்.  அவன் குடும்பத்துக்குனு ஏதாவது ஒன்னு பண்ணட்டுமே.”

“ஓஹோ! எல்லாரும் சேர்ந்து ஒத்துமையா முடிவெடுத்து இருக்கீங்களா? அது எங்க அப்பா கஷ்டப்பட்டு எனக்காக சேர்த்து கொடுத்தது. என்னோட உழைப்பும் அதுல இருக்கு. அத போய் விக்க  சொல்றீங்க” என சொல்லிய கதிரேசன் அப்படியே மயங்கி விழுந்தார்.

தொடரும்..

Advertisement