Advertisement

மெல்லிசை?? – 18

என்னில் துளிர்விட்ட காதலை

உன்னிடம் சொல்லிவிட

ஆயிரம் முறை ஒத்திகை

பார்த்தேனடா என் காதலனே

உன் ஒற்றை பார்வையில்

உதடுகள் உச்சரிக்க

முயன்றும் தோற்றதடா…

என இசையின் இதயத்தில் வார்த்தைகள் கவிதையாய் உருவெடுக்க. உதடுகள் மட்டும் உச்சரிக்க முடியாமல் ஏனோ தோல்வியடைந்து நின்றது.

“பிளாக்கிங் என்ன சிந்தனையிலேயே நிக்கிற” என கேட்க.

“ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கீங்களே.  இப்ப மட்டும் எப்படி வர தோணுச்சுனு தான் யோசிச்சேன் மாமா.”

“இசைப்பிரியானு   நல்ல பேரா வச்சிருக்கா.  அது என்ன டா ப்ளாக்கினு.”

“அது செல்ல பேரும்மா”

“நீயாச்சு அவளாச்சு என்னமோ  பண்ணுங்க.  இசை உங்க மாமாவ  வரும் போது வெடக்கோழியா பிடிச்சிட்டு வர சொல்லு.  இன்னைக்கு கறி சோறு ஆக்கி போடலாம்.”

“அத்தை. நானே தான் போகணுமா?”  என்றாள்.

“சரி விடு.  பெரியவன போக சொல்றேன்.  பெரியவனே நீ போய் உங்க அப்பாகிட்ட சொல்லி கோழிய புடிச்சிட்டு  வாடா.”

“இவனுக்கு சமைச்சுப் போட நான் போகணுமா? எல்லாம் நேரம்டா” என சொல்லிக் கொண்டு ஜெய் கிளம்பினான்.

“என்னோட ரூம் சுத்தம் பண்ணி வச்சிங்கலாம்மா?” என கேட்டான்.

“உன் ரூமுக்கு யாரும் போறது இல்ல. அப்படியே தான் கிடக்கு.  சுத்தமா தான் இருக்கும்” என லட்சுமி கூற.

ஆதி இசையை கண்டுகொள்ளாமல் சூட்கேசை எடுத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்றான்.

“மாமா கொஞ்சமாவது அறிவு இருக்கா?  என்ன பாக்கணும்னு கூட தோணலையா?” ஏனோ மனதிற்குள் வருந்தினாள்.

வருணோ இசையின்  முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

மனதில் லேசான கலக்கத்துடன் தனது அறைக்கு சென்றான்.

தன் மகனின் வருத்தத்தை முதல் முறையாக மஞ்சு  கவனித்தாள்.  தங்கள் அறைக்கு சென்ற வருணிடம் “என்னப்பா முகம் ஒரு மாதிரியா வாடி இருக்கு” எனக் கேட்க.

“நல்லாத்தான் இருக்கேன்.”

“நான் உன்ன பெத்த வாடா.  என் பிள்ளை முகம் எப்போ எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும். என்னப்பா ஆச்சு. உடம்பு ஏதும் சரியில்லையா?”

“இல்லம்மா.  நல்லாத்தான் இருக்கேன்.”

“அப்போ மனசு சரியில்லையா? வருண்” எனக் கேட்க.

தாயின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்.  வருணிற்கு  தாயின் மடியில் படுத்து கதறி அழவேண்டும் போல் தோன்றியது.

“அம்மா!”  என அழைக்கும் போதே  அவனது கண்கள் குளமாகியது.

“என்ன கண்ணா ஆச்சு?. ஏண்டா கண்கலங்கற.”

“மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு மா.”

“எதுவா இருந்தாலும் அம்மா கிட்ட மனச விட்டு பேசுப்பா.  நான் சரி பண்றேன்.”

“அது உன்னால முடியாதும்மா. என்னை எதுக்குமா பெத்து வளர்த்த.  அப்பவே கொன்னு  இருக்கலாம் இல்ல.”

“என்னடா ஆச்சு. பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசற.”

“நானும் எல்லாரு மாதிரியும் இருந்திருந்தா  சந்தோஷமா இருந்திருப்பேன் இல்லம்மா. இசைக்கும் என்னை பிடிச்சிருக்குமோ?”

“இப்ப எதுக்குடா இப்படி எல்லாம் பேசுற”

“அம்மா” என்று சொன்னவனின் உதடுகள் தாயிடம் உண்மையை கூறுமளவிற்கு தைரியம் இல்லாமல் துடித்தது.

அவனது மனதின் ஆசைகளை  மஞ்சுவால்  புரிந்து கொள்ள முடிந்தது.

“வருண் நான்  ஒன்னு கேக்கட்டா.”

“கேளுங்கம்மா.”

“உனக்கு இசைய  புடிச்சிருக்கா?”

“அம்மா”  என மஞ்சுவை பார்த்தான்.

“பதில் சொல்லுடா. உனக்கு இசைய  பிடிச்சிருக்கா?”

“ரொம்ப பிடிக்கும்மா.  ஆனா…”

“பிடிக்கும் இல்ல.  அப்புறம் என்னடா ஆனா..”

“என்னைய  எப்படி அவளுக்கு பிடிக்கும்.”

“அவ்ளோ  பாசம் அவ மேல உனக்கு  இருக்குடா. உன்னோட பார்வையிலேயே நான் புரிஞ்சுகிட்டேன்.”

“ஆனா  இசைக்கு புரியலையேம்மா.”

“நான் நேரடியா பேசி பார்த்துடவா வருண்.”

“வேண்டாம்மா.  அவசரப்பட்டு தப்பு பண்ணிடாதீங்க . கொஞ்சம் பொறுமையா இருங்க.”

“இதுல என்ன தப்பு இருக்கு. கேட்டு பார்த்துடுவோமே. மல்லிகா என்ன மாட்டேன்னா  சொல்ல போறா.”

“உறவு வேற. வாழ்க்கை வேறம்மா.  இரண்டையும் சேர்த்து முடிச்சு போடாதீங்க.”

“இந்த தத்துவம் எல்லாம் எனக்கு தெரியாது வருண்.  புள்ளையோட ஆசையை நிறைவேத்தறது பெத்தவங்க கடமை.”

“இது பத்தி  எதுவும் பேச வேண்டாம்மா.  தயவு செஞ்சு அமைதியா இருங்க.”

“நீ  கஷ்டபடுறத  என்னால பாக்க முடியலடா.”

“என்னோட காதல புரிய வைப்பேன்.  அவளே  எல்லார்கிட்டயும் சொல்ற நாள் வரும்மா.  அதுவரைக்கும் பொறுமையா இருங்க.”

“என்னமோ நீ சொல்ற.  நான் கேட்கிறேன்.  நான் போய் இருக்கிற வேலையை பாக்குறேன்.  மனசு கலங்காத வருண்.”

“சரிம்மா.  நீங்க போங்க” என்றான்.

ஜெய் தனது தந்தையுடன் கோழியைப் பிடித்துக் கொண்டு வந்தான்.  அதை சுத்தம் செய்தும் வெட்டும் பணியில் கதிரேசன் ஈடுபட. ஜெய் அதற்கு உதவியாக இருந்தான். குழந்தைகள் இருவரும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

மஞ்சு,  லட்சுமி, மல்லிகா மூவரும் கோழி குழம்பு வைப்பதற்கான மசாலா அரைத்து தயார் செய்து கொண்டிருந்தனர்.  மண்சட்டியில் மணக்க மணக்க கோழி குழம்பு தயாராகிக் கொண்டிருந்தது.

“பாட்டி வாசம் சூப்பரா இருக்கு” என ஆரவ்  கூறினான்.

‘இதுங்க பட்டிக்காட்டு வாழ்க்கைக்கே  மாறிடும் போல இருக்கே.  இப்படியே விட்டா சரிப்படாது’  என சம்யுக்தா நினைத்துக் கொண்டாள்.

ஒட்டுமொத்த குடும்பமே மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்க.  சமையல் முடிந்து சாப்பாடு பரிமாறும் வேலை தொடங்கியிருந்தது.

இசை ஆதிக்கு  பார்த்து பார்த்து பரிமாறினாள்.

“நான் உன்னை கேட்டனா? ஏன் இப்படி எல்லாத்தையும் வாரி  கொட்டுற.”

“நல்லா சாப்பிடுங்க மாமா” என்றாள்.

“இசை எனக்கு கொஞ்சம் குழம்பு” வருண்  கேட்க.

“அத்தை இந்தாங்க  மாமாவுக்கு குழம்பு ஊத்துங்க” என  லட்சுமியிடம் குழம்பு பாத்திரத்தை நீட்டினாள்.

வருணுக்கு  மிகவும் வருத்தமாக இருந்தது.  அதற்கு மேல் எதுவும் பேசாமல் மௌனமாக சாப்பிட முயற்சித்தான்.  ஆனால் அவனால் ஒரு வாய் கூட முழுங்க முடியாமல் எழுந்து கை கழுவி விட்டு தனது அறைக்கு சென்றான்.

மஞ்சு இதை கவனிக்க தவறவில்லை.

பிள்ளைகள் இருவரும் ஆதியை சுற்றி சுற்றி வந்தனர்.  குழந்தைகளிடம் பாசம் காட்ட ஆதி தவறவில்லை.

சாப்பிட்டு முடித்த ஆதி, “அம்மா நான் தோட்டதுக்கு போயி சுத்திப் பார்த்துட்டு வரேன்.  அங்க போய் ரொம்ப நாள் ஆகுது” என கூற.

“சித்தப்பா நாங்களும் வரோமே” என குழந்தைகள் ஆட்டம் போட்டனர்.

“சரி வாங்க.  ஜெய் நீயும் வரியா?” எனக் கேட்க.

“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.  நீ பசங்கள கூட்டிட்டு போடா” என சம்யுக்தாவை பார்த்தான்.

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை”  என சம்யுக்தா திரும்பிக் கொண்டாள்.

“அம்மா நானும் மாமா கூட போறேன்மா” என இசை மல்லிகாவிடம் கேட்க.

“உன் மாமன் கூட போறதுக்கு யாரை கேக்கணும்.  போயிட்டு வாம்மா. அதான் பிள்ளைங்க கூட வரங்களே”  என்றாள்.

இசையும்  சந்தோஷமாகவே அவர்களுடன் புறப்பட.

“ஏய்!  லூசு.  நீ எதுக்கு இப்ப கிளம்புற” என்றான்.

“நானும் உங்க கூட வர்றேன் மாமா.”

“இது என்ன?  சின்ன பிள்ளையாட்டம்.  இப்படி இருக்க. சரி வா.  ஆடு மாடெல்லாம் கூட வந்தா வர வேணாம்னா சொல்ல முடியும்.”

“அப்போ நான் என்ன ஆடு மாடா.”

“சும்மா காமெடிக்கு சொன்னேன்.  உடனே அழுது தொலைக்காத. கெளம்பு” என்றான்.

மெதுவாக தோட்டத்தை வந்தடைந்தனர்.  “சித்தப்பா நாங்க அந்த மரத்தடியில விளையாடட்டுமா?” என மித்ரா கேட்க.

“விளையாடுங்கடா”  என்றான்.

“மாமா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள் இசை.

‘ஏதாவது லவ்வு, கல்யாணம்னு   சொல்லி தொடங்கிடுவாளோ?’ என நினைத்தான்.

“மாமா உங்கள தான்.”

“இப்ப என்ன சொல்லணும்.  இதுக்கு தான் கூட வந்தியா?.”

“என்ன சொல்றேன்னு  முதல்வ  கேளுங்களேன் மாமா.”

“சொல்லி தொலை” என்றான்.

அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வெறுப்பை நெருப்பாய்  கொட்டியது.  அவள் மேல் இருந்த வெறுப்பை காட்டியது.  அவளுக்கும் கொஞ்சம் புரியத்தான் செய்தது.

“இசை எப்படி தொடங்குவதென தயங்கி தயங்கி ஆரம்பித்தாள்.  “மாமா அத்தை சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.”

“என்ன சொன்னாங்க?”

“நம்ம கல்யாணத்தைப் பத்தி…”

“என்ன நம்ம கல்யாணமா? நீ என்ன காமெடி எல்லாம் பண்ற. நான் இப்ப  சிரிக்கிற நிலைமைல  இல்ல”  என்றான்.

“என்ன மாமா இப்படி சொல்றீங்க.”

“உன் மூஞ்சிக்கு  நான் கேக்குதா?  அடியேய்!  பட்டிக்காடு உனக்கும் எனக்கும் செட்டாகாது.  உனக்கெல்லாம் சொந்தமா யோசிக்க தெரியாதா?” என  மூஞ்சில் அடித்தவாறு கூற.

இசையின் கண்கள் கலங்கியது. “மாமா விளையாட்டுக்கு தானே பேசுறீங்க.”

“இந்த மூஞ்சி கிட்ட விளையாட வேற செய்யனும்னு எதிர்பார்க்கிறியா?”

“போதும் மாமா.  விளையாடாதீங்க.”

“உன்கிட்ட நான் ஏண்டி விளையாட போறேன்.  வீணா மனசுல ஆசை வளத்துட்டு திரியாத. ஆரம்பத்திலேயே உண்மையை சொல்லி கட் பண்ணனும்னு தான் நான் வெளிப்படையா சொல்றேன்.  நீ எல்லாம் என்னைக்குமே என் வாழ்க்கையில வர முடியாது” என்றான்.

“மாமா நிஜமாத்தான் சொல்றீங்களா?.”

“இதுல என்னடி பொய்யா வேற

சொல்றதுக்கு இருக்கு.  நீ எல்லாம் ஒரு ஆளு.  உன் கிட்ட பொய் சொல்லி வேற நடிக்கணுமா? இதோ பாரு.  எங்க வீட்ல தான் புத்தி கெட்டுப் போய் பேசிட்டு இருக்காங்க.  நீ படிச்சவ தானே.  கொஞ்சம் யோசி.  உனக்கும் எனக்கும் ஏணி வச்சா  கூட எட்டாது.  உன் கேரக்டர் வேற.  என் கேரக்டர் வேற” என ஆதி சொல்ல சொல்ல இசைக்கு  அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

“மாமா விளையாடாதீங்க.   சத்தியமா என்னால தாங்க முடியாது.  சின்ன வயசுல இருந்தே நீங்கதான் எனக்குனு  நான் உங்களையே உயிரா நினைச்சுட்டு  வாழ்ந்துட்டு இருக்கேன்.  இனிமே இப்படி பேசாதீங்க மாமா.”

“உண்மைய எப்பவும் வலிக்கத்தான் செய்யும். நீ நம்பளனாலும் இதுதான் பிளாக்கி  நிஜம். ஒழுங்கா உனக்குத் தகுந்த மாதிரி எவனையாவது  கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டிலாக பாரு.”

“இப்பவும் கேட்கிறேன்.  உண்மையாதான் சொல்றீங்களா? மாமா.  ஒவ்வொரு நிமிஷமும் உங்ககிட்ட என் காதலை சொல்ல தவிச்சிட்டு இருக்கேன்.  உங்கள பார்த்த அந்த நிமிடத்தில் இருந்து நான் சுய நினைவிலயே இல்ல.  என் மனசு முழுக்க நீங்கதான் மாமா இருக்கீங்க.  நீங்கதான் எனக்கு உயிர் மாமா.  நீங்க உங்க லவ்வ சொல்லுவீங்கன்னு இவ்வளவு ஆசையா காத்துக்கிட்டு இருந்தேன்.  வந்து கொஞ்ச நேரத்திலேயே இப்படி என்னைய  அழவைக்கிறீங்களே.”

“ஆமாடீ. உன்ன அழ  வைக்கணும்னு எனக்கு வேண்டுதல் பாரு.  போடீ.  போய் வேற ஏதாவது வேலை இருந்தா பாரு.”

“மாமா நான் சீரியஸா பேசுறேன்.

நீங்க எனக்கு கிடைக்க மாட்டீங்கனு   தெரிஞ்சா சத்தியமா நான் உயிரோடு இருக்க மாட்டேன்.”

“என்னடி பண்ணுவ.”

“எனக்கு நீச்சல் தெரியாதுனு  உங்களுக்கு தெரியும்.  ஒரு நிமிஷம் கூட யோசிக்க மாட்டேன்.  அந்த கிணத்துல ஓடிப்போய் குதிச்சிடுவேன்”  என்றாள்.

“உன்னோட உயிர் மேல உனக்கு ஆசை இல்லனா  நீ என்ன வேணா முடிவு பண்ணிக்கோ.  ஐ டோன்ட் கேர்”  என ஆதி  பிள்ளைகளை நோக்கி சென்றான்.

இசை மொத்தமாக நொறுங்கிப் போனாள்.  ‘இத்தனை வருஷமா நாம கண்ட கனவு  எல்லாமே பொய்யா?  ஒரு நொடியில் எல்லாமே முடிஞ்சி  போயிடுச்சா.  மாமா  இப்படி  சொல்றாங்களே. மாமாவே இப்படி சொன்ன பிறகு இதுக்கு மேல நாம உயிரோட இருக்கவே கூடாது.  யாருக்காக வாழனும்’  என நினைத்தவள்,  அந்த நிமிடம் எடுத்து ஒரு தவறான முடிவின் காரணமாக அருகிலிருந்த கிணற்றை நோக்கி ஓடினாள்.

தொடரும்…

Advertisement