Advertisement

மெல்லிசை ?? – 17

அன்பே உன்  இதயத்தை
தென்றலாய்  தீண்டிட
என்னவனின் வரவிற்காக
இதயத்தில் அன்பையும்
விழிகளில் காதலையும்
தேக்கிவைத்து காத்திருக்கிறேன்..!

மாமனவன் வரவிற்காக
இதோ அந்த நொடிகள்
வந்துவிடும் தருணம்
நேரில் பார்த்து காதலை
உதடுகள் காதலை உச்சரிக்குமா?
நாணத்தால் வார்த்தைகள் ஊமையாகுமா?.. மாமா..!

என இசையின் உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தது

இசையின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்ட வருணின் மனமோ

உந்தன்  விழியினில்
என் இதய துடிப்பும்
உறைந்து போனதடி..!
உனக்காக காத்திருந்தேன்
உன்னில் நான் மொத்தமாய்
தொலைந்தது தெரியாமலே
என் காதலை அறிவாயோ?..!

ஏக்கத்தோடு இசையை பார்த்தான்.  வருணின் காதல் இசையின் மனதிற்கு கடுகளவும் தெரியவில்லை.  கடலில் கரைந்த மழைத்துளி போல காணாமல் போயிருந்தது வருணின் காதல்.

ஆதியின் வருகை கேட்ட அந்த நொடியிலிருந்து இசையின் மனம் மகிழ்ச்சியில் முன்பைவிட வேகமாக தவிப்போடும் ஏக்கத்தோடும்  துடித்துக் கொண்டிருந்தது.

அப்பொழுது கதிரேசன் சொன்னா ஆள்  வேலைக்கு வந்து இருக்க.  ஜெய் உள்ளே அழைத்துச் சென்றான்.

இவர்தான் நான் சொன்னேன்ல. வந்துட்டாரு சம்யு.  எதை எங்க வைக்கலாம்னு சொல்லு.

“நான் சொன்னபடி தான் கிச்சன்ல மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் எல்லாம் வைக்க சொல்லிடுங்க” என்றாள்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த
லட்சுமி,  உங்க மாமாவுக்கு இதெல்லாம் பிடிக்காதும்மா.  இதையெல்லாம் பார்த்தா  அவருக்கு சோறு இறங்காது.  அப்புறம் என்னையும் புடிச்சிட்டு பேசுவாரு.

அத்தை  இதெல்லாம் யூஸ் பண்ணாம இந்த காலத்துல ஒன்னுமே பண்ண முடியாது.

“நாம சொல்றத உங்க மாமா கேட்க மாட்டாரு.  சொன்னா கேளும்மா.  தப்பா எடுத்துக்காத.  இதையெல்லாம் நீங்க உங்க அறையிலேயே வெச்சுக்கோங்க. உங்களுக்கு வேணும்னா பயன்படுத்திக்கோங்க”  என்றாள்.

“அதற்கு மேலும் எதுவும் பேசாத சம்யுக்தா இந்தப் பொருள் எல்லாம் அந்த ரூம்ல கொண்டு போயி வைங்க” என்றாள்.

முனுசாம் அங்கிருந்த பொருட்களை எல்லாம் தேவையான இடத்தில் இடம் மாற்றி வைத்துக் கொடுத்தார்.  டிவியையும்  தங்களது அறையிலேயே வைத்துக் கொண்டனர்.

முனுசாமிக்கு தர வேண்டிய கூலியை ஜெய் கொடுத்து அனுப்பினான்.

“எனக்கு ஒரு டிஷ் வாங்கனும். இல்லன்னா கேபிள் கனெக்சன் தரனும்” என்றாள்.

டிவி சத்தம் கேட்டா  அப்பா திட்டுவாங்க. என் தம்பி மட்டும்தான் அவர் கூட சண்டை போடுற ஒரே ஆளு.

அடுத்து இரண்டாவது ஆளா என்னையும்  நினைச்சுக்கோங்க.   டிஸ்க் வாங்குங்க,  இல்லையா கேபிள் கனெக்சன் குடுங்க.  பசங்களால  டிவி பார்க்காம இருக்க முடியாது. அதுவும்  ஆரவ்  கார்ட்டூன் பார்த்தாதான் தூங்குவான்.

நீ நெனச்ச உடனே எல்லா வேலையும் நடக்குறதுக்கு இது சிட்டி இல்லனு ஏற்கனவே சொன்னேன்.  இது வில்லேஜ்.  மெதுவாத்தான்  பண்ண முடியும்.

அப்போ ஒரு ஆறு மாசம் ஆகுமா?  கனெக்ஷன் கொடுக்க.

“கொஞ்சம் பொறுமையா இரு சம்யு.  நான் பண்றேன்.  அவ்வளவுதான்” என்றான்.

என்னமோ பண்ணுங்க.  இன்னைக்கு நைட்டு பசங்க தூங்காம ஆட்டம் கட்டுவாங்க. அப்ப தெரியும் நான் சொன்னதோட அர்த்தம் என்னன்னு யோசிப்பிங்க ஜெய்.

“அவ்வளவு  சீன்லாம் உனக்கு இல்ல சம்யு.  இங்க எங்க அம்மா,  அப்பா இருக்காங்க.  அவங்க கிட்ட கதை கேட்டு தான் நாங்க  வளர்ந்தோம்.  டிவில பாக்குற கார்ட்டூன விட அவங்க சொல்ற கதை நல்லாவே இருக்கும்.  பசங்க அடம்பிடிக்க மாட்டாங்க” என்றான்.

“சரி அதையும்தான் பார்க்கலாமே” என கூறிவிட்டு உள்ளே சென்றாள்.

நேரம் போவது தெரியாமல் போனது.  அன்று இரவு உணவை முடித்துக் கொண்டு அனைவரும் நிலா வெளிச்சத்தில் கயிற்றுக் கட்டில் போட்டும் பாயை விரித்து போட்டும்  சுற்றி அமர்ந்து உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தனர்.

“ஆரவ்  மெதுவாக தன் வேலையை ஆரம்பித்தான்.  மம்மி கார்ட்டூன் பாக்காம ரொம்ப போரடிக்குது.  எப்போ டிவி செட் பண்ணுவீங்க” என்றான்.

“என்னடி தங்கம்.  தூக்கம் வருதா?” என பாட்டி லட்சுமி கேட்க.

அவன் டிவில கார்ட்டூன் பார்த்தாதான் தூங்குவான் அத்தை. அதைத்தான் உங்க புள்ளைக்கிட்ட  மதியத்திலிருந்து  சொன்னேன்.  அவர் கேட்கவேயில்ல.

பொம்மைய  பாக்கறதுல  என்ன இருக்கு.  எங்க காலத்துல எல்லாம் அதெல்லாம் எதுவும் கிடையாது.  எங்க ஐய்யா கதை சொல்லுவாங்க.  அதை கேட்டுட்டு நாங்க தூங்கவோம்.  உங்க காலத்தில்தான் இந்த டிவி சினிமா கூத்து  எல்லாம்.  ஆறு நம்ம தாத்தா நல்ல  நல்ல கதையா  சொல்லுவாங்க.  நீங்க கதை கேட்டுட்டு தூங்கறீங்களா?

என்ன கதை பாட்டி?

“என்னங்க!  பசங்களுக்கு ஒரு கதை சொல்லுங்களேன்”  என கேட்க.

“இங்க வாடா பேராண்டி” என கதிரேசன் ஆரவை கூப்பிட்டு தனது மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.  மித்ராவை  கூப்பிட்டு அருகில் அமர வைத்துக் கொண்டார்.

“இப்ப தாத்தா ஒரு கதை சொல்லு வேணாம். அதைக் கேட்டுட்டு நீங்க  தூங்கறீங்களா?”  என்றார்.

“சரிங்க தாத்தா” என்றான் ஆரவ்.

கதிரேசன் மெதுவாக கதையை சொல்லத் தொடங்கினார்.

முட்டாள் முனிகள் கதை சொல்றேன் கேளுங்க.

ஒரு ஊர்ல ஒருத்தர் பெரிய மரத்தடியில் மரம் அறுத்து விற்கும் வேலையை ஆள் வைத்து செய்து கொண்டிருந்தார்..

அங்கு இருந்த மரத்தில் நீண்ட நாட்களாக 8 முனிகள் மிகவும் மகிழ்ச்சியாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்தது..

இந்த முனிகள் ஏதோ அந்த தொழிலாளர்களோடு விளையாடுவதாக எண்ணி, அவர்களை மிரட்டுவதும், அவர்கள் மேல் எதையாவது போடுவதுமாக அவ்வப்போது அவர்களை சீண்டி விளையாடின..

“இதைப் பொறுக்க முடியாத அவர்கள் தன் முதலாளியிடம் இதற்கு ஏதாவது ஒரு வழி செய்தே ஆக வேண்டும்” என்று கூறினார்கள்..

இதைக்கேட்ட ரவியும் முனியிடம் நாம மோத முடியுமா? அதுங்க எல்லாம் பல வருஷமா இங்க இருக்குதுங்க. எனக்கும் என்ன பண்றதுனு தெரயாம தான் யோசிக்கிறேன்.

எதாவது மாந்திரீகன் கிட்ட போய் செய்வினை செய்து வைக்கலாம் என்றார் ராஜா.

அதுவும் சரி தான்.. இன்னைக்கு அமாவாசை தான்.. எனக்கு தெரிஞ்ச ஒரு மந்திரவாதி இருக்கார். பயங்கரமானவர்.. பில்லி, சூனியத்தில கை தேர்ந்தவர். நான் இன்னைக்கு இரவே போறேன் என்றார் ரவி.

அண்ணே! நல்ல முடிவு. முதல்ல இத பண்ணுங்க..

“சரிப்பா. நீங்க வேலைய முடிச்சிட்டு கிளம்புங்க. நான் அங்க போய்ட்டு நாளைக்கு வரேன்” என ரவி கிளம்பினார்.

மாந்திரீகனை சந்தித்து முனிகள் அந்த இடத்தை விட்டு போகும்படி எதாவது செய்ய சொன்னார் ரவி..

மாந்திரீகனும் தனக்கு தெரிந்த அனைத்து விதத்திலும் பலமுறை பலவாறாக முயற்சி செய்தும் முனிகளை அந்த இடத்தை விட்டு விரட்ட முடியவில்லை..

இதற்கு மேலும் மாந்திரீகத்தை நம்பி பயனில்லை. இனி புத்தியை தான் நாம பயன்படுத்தனும். அதான் சரி. புத்திமான் பலவான் ஆவான்னு சொல்லுவாங்க. அதனால கொஞ்சம் நிதானமா யோசிக்கலாம் என்று இரவு வெகு நேரம் தூங்காமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு யோசித்தவர் ஒரு முடிவுக்கு வந்தவராய் சிரித்துக்கொண்டே உறங்கினார்.

மறுநாள் காலை ஆதவன் அழகாய் சிரிக்க. ரவி உற்சாகத்துடன் குளித்து சாப்பிட்டு விட்டு கிளம்பினார்..

உடன் வேலை செய்பவர்களை போனில் தொடர்பு கொண்டு வயலுக்கு வரச் சொன்னார். அவர்களிடம் சில விஷயங்களை பேசி விட்டு வேலை செய்ய அவர்களை முதலில் அனுப்பி வைத்தார்..

அவர்கள் எப்போதும் போல உற்சாகமாக வேலையைத் தொடங்க. முனிகள் அவர்கள் மேல் தன் விளையாட்டை தொடங்கியது..

இந்த மனிதர்கள் ஏன் இப்படி இருக்காங்க. இவர்கள் செயலைக் கண்டு கோபம் கூட வரவில்லை. சிரிப்பு தான் வருகிறது என சிரித்துக்கொண்டே அவர்கள் மேல் காய்ந்த சருகுகளை அள்ளி வீசி விளையாடியது.

“அவர்களோ இதெல்லாம் தினமும் நடப்பது தானே. வேலைய பாருங்க” என வேலையை தொடர்ந்தனர்.

அன்று மாலை ரவி அங்கு வந்தார்.. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் கொஞ்சம் இருந்து வேலைய முடிச்சிட்டு போங்கப்பா. நாளைக்கு இந்த மரங்களை எல்லாம் அனுப்பியே ஆகனும். இரவு டிபன் கூட வாங்கிட்டு வந்துட்டேன் என்றார்.

இரவு மணி எட்டை நெருங்கி கொண்டு இருந்தது.

அதனாலென்ன. செஞ்சிட்டா போகுது என்று சொல்லிக்கொண்டு அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். சாப்பிட்டு முடித்து மீண்டும் 10 மணி வரை வேலையை செய்தனர்.

இதைப் பார்த்த முனிகள் இந்த மனிதர்களுக்கு என்ன ஆச்சி.. இன்னைக்கு இப்படி வேலை வாய்ப்பு செய்யறாங்க என்று தங்களுக்குள் பேசிக் கொண்டது.. சிறிதுநேரத்தில் முனிகள் உறங்கியது.

சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கு வேலை செய்தவர்களிடம் இருந்து பயங்கரமாக சத்தம் வந்தது.. எதையோ பயங்கரமாக அடிக்கும் சத்தம் கேட்டது.

“அப்படி தான் நல்லா அடிங்க. விடாதிங்க. புடிச்சி கட்டுங்கடா. நல்லா அடி. அந்த கம்பிய எடுடா. இன்னைக்கு இழுக்கற இழுப்புல இந்த ஊருலயே இருக்க கூடாது” என்று ரவியின் குரல் ஆவேசமாக ஒலிக்க.

“அண்ணே! இன்னைக்கு இதுகள விடக்கூடாது.. ரெண்டு முனிங்க மாட்டிகிச்சி. விட்றாதிங்க” என சத்தம் போட்டுக்கொண்டு அடிக்க..

“உடன் இருந்தவன் அடேய்! அப்ப மீதி இருக்க முனிங்களையும் பிடிச்சிடலாம் இப்பவே. வாங்கடா” என குரல் கொடுக்க.

“இதைக்கேட்ட மற்ற முனிகள் அடேய்! நம்ம கூட்டத்துல எவனோ ரெண்டு பேர் சிக்கிட்டான். நம்மளையும் பிடிக்க வராங்க. சீக்கிரம் ஓடுங்க. ஓடுங்க” என ஒரு முனி சொல்ல. மற்ற முனிகள் யோசிக்காமல் விழுதடித்து ஓடத் தொடங்கியது.

“வெகு தூரம் ஓடிய முனி ஒரு இடத்தில் சற்று களைப்பாற நிற்க. மற்ற முனிகளும் மூச்சு வாங்க நின்றது. நம்ம கூட இருந்த யார் ரெண்டு பேர் மாட்டினாங்க. அது யாருனு  பாக்கலையே” என யோசித்தது. அப்போது தான் முதலில் நின்ற முனி அனைவரையும் பார்த்தது.. உடனே திடிக்கிட்டது. கண்கள் விரிய மற்ற முனிகளை பார்த்தது. அதன் கண்கள் சிவந்தது..

“இதைப்பார்த்த மற்ற முனிகள் என்ன ஆச்சி. ஏன் இவ்வளவு கோவம். கண்களில் அனல் வீசுகிறது” என்று கேட்க.

ஒரு முறை அனைவரையும் எண்ணி பார் என்றது.

அந்த முனியும் எண்ணிப்பார்க்க.. அதற்கும் பயங்கரமாக கோபம் வந்தது.

அட என்னப்பா. ஆளாளுக்கு கோவப்படுறிங்க. என்ன விஷயம்னு சொல்லிட்டு கோவப்படுங்க என்று ஒரு முனி முறைக்க.

ரெண்டு முனிய பிடிச்சிட்டோம்னு தான அவனுங்க அடிச்சு ஆர்ப்பாட்டம் பண்ணாங்க. அத பார்த்து தான நாம ஓடி வந்தோம்.

ஆமா. இப்போ அதுக்கென்ன.

நாம எட்டு பேரும் சரியா தான் இருக்கோம். யாரையுமே அவங்க பிடிக்கல.. பாருங்க என்றது.

அதைக்கேட்ட மற்ற முனிகள் மாறி மாறி பார்த்துக் கொண்டது. அட ஆமா. நல்ல வேள. நாம யாரும் சிக்கல. எல்லாரும் தப்பிச்சி ஓடி வந்துட்டோம். முட்டாள் பசங்க அவங்க என்றது.

இதைக்கேட்ட பெரிய முனி அருகில் நின்ற முனியை ஓங்கி காது மேல் ஒரு அப்பு விட்டது.

“அவன ஏன் அடிக்கறிங்க. அவன் என்ன இப்ப தப்பா சொல்லிட்டான்” என்று கேட்க.

பின்ன அடிக்காம என்ன செய்ய. நாம தான் முட்டாள். அந்த மனுஷங்க நம்மள நல்லா ஏமாத்திட்டாங்க. அந்த இடத்தை விட்டு நம்மள துரத்த தான் இப்படி செய்து இருக்காங்க. நம்மள ரெண்டு பேர பிடிச்சு அடிக்கற மாதிரி நாடகமெல்லாம் போட்டு துரத்திட்டாங்க. ஆனா நாம எல்லாரும் இங்க தான இருக்கிறோம். யாருமே அவங்க கிட்ட மாட்டலையே. இப்ப சொல்லங்க. முட்டாள் யார்? என்றது.

“மற்ற முனிகள் அமைதியாக நின்றது. இப்போ என்ன செய்யலாம்” என ஒரு முனி கேட்க.

“திரும்ப அங்கயே போகலாம் வாங்க. இனி அவங்க என்ன செய்தாலும் நாம பயப்படாம தெளிவா இருக்கனும்” என்று அனைத்து முனிகளும் கிளம்பி அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது..

ஆனால் முனிகள் இங்கு வருவதற்குள் இவங்க ஏற்கனவே போட்ட திட்டப்படி அந்த மரத்தை அறுத்து கீழே சாய்த்து விட்டனர்..

அதைப்பார்த்த முனிகள் மிகவும் வருந்தியது.. அவசரப்பட்டு அவங்க சொன்னத கேட்டு சிந்திக்காம ஓடிட்டோமே. இனி இங்கு நாம வாழ முடியாது. வேற இடம் தேடிக்கொள்ள வேண்டியது தான். வேற வழி இல்லை. நாம யோசிக்காம பண்ண தப்புக்கு கிடச்ச தண்டனையா இத ஏத்துக்க வேண்டியது தான் என்றது.

“நாம என்ன தப்பு பண்ணினோம். இப்படி நீங்களே சொல்லலாமா?”  என்று ஒரு முனி கேட்க.

“அந்த மனிதர்கள் அவங்க வேலைய அமைதியா செஞ்சிட்டு இருந்தாங்க. நாம தான அவங்கள சீண்டி விளையாடினோம். சும்மா இருக்கவங்கள சீண்டினா இதான் தண்டனை. நாம மட்டும் அமைதியா இருந்திருந்தா அவங்க ஏன் நம்மள துரத்த போறாங்க. தவறு செஞ்சா கடவுளே ஆனாலும் தண்டனை நிச்சயம். வாங்க வேற இடம் தேடலாம்” என்று கிளம்ப.

தங்கள் தவறை உணர்ந்து வேறு இடம் தேடி அனைத்து முனிகளும் சென்றது.

ரவியும் மற்றவர்களும் நிம்மதியாக அவர்கள் வேலைகளை இனிதாக தொடங்கினார்கள்.. ரவியின் புத்திசாலித்தனத்தை பாராட்டினார்கள்.
மந்திரதந்திரங்கள் கூட செய்ய முடியாத வேலையை ரவியின் புத்திசாலித்தனம் செய்தது.. அவர்கள் இனி மகிழ்ச்சியாக தங்கள் பணியை செய்வார்கள்…

இக்கதையின் நீதி

“மாமா நீதி கருத்தை நான் சொல்றேன் ப்ளீஸ்” என்றாள்.

“சரி மருமவளே சொல்லும்மா” என்றார்.

இசை நீதிக்கருத்துகளை சொல்லத் தொடங்கினாள்.

1.அமைதியாக இருக்கும் யாரையும் நாம் விளையாட்டாக எண்ணி கூட தொந்தரவு செய்ய கூடாது..

2 .பிறரை எதற்காகவும் துன்பப்படுத்தக் கூடாது.. மீறி செய்தால் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்..

3. பிரச்சினை சிறியதோ, பெரியதோ தெளிவாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்..

4 .அவசரத்தில் எடுக்கும் முடிவு தவறாக தான் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..

5 .எந்த ஒரு சம்பவமாக இருந்தாலும் பார்த்தோ, கேட்டோ முடிவுக்கு வராமல் தீர விசாரித்து உண்மை எது என ஆராய்ந்த பின்பு தான் முடிவு எடுக்க வேண்டும்.
(இந்த முனிகள் ரெண்டு பேர பிடிச்சிட்டாங்கனு சொன்னத காதுல கேட்டுட்டு அந்த இடத்தை விட்டு ஓடியது தவறு. அது போல ஓடாமல் நிதானமாக அங்கு நடப்பது உண்மை தானா என தெளிந்த பின் முடிவெடுத்து இருக்கலாம்)

6 .ஒரு பிரச்சினைக்கு  பில்லி சூனியத்தில் நிரந்தரமான முடிவு இல்லை.. நாம் நிதானமாக சிந்தித்து முடிவெடுத்தால் இறுதி முடிவாக தெளிவாக எடுக்கலாம்.

7 .மனிதர்களின் வாழ்க்கையில் சிந்தித்து முடிவெடுக்கும் திறன் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.. இதே போல நீங்களும் உங்கள் வாழ்க்கையில் எந்த முடிவுகளாக இருந்தாலும் தெளிவாக சிந்தித்து பின் முடிவெடுங்கள். அது சிறந்த தீர்வாக இருக்கும்..

இது போல அந்த காலத்துல ஏட்டில் எழுதப்படாம வாய்வழியா மட்டுமே முன்னோர்கள் காலத்துல சொன்ன கதைகள் நிறைய இருக்குடா கண்ணுங்களா. எல்லா கதைலயும் நமக்கான வாழ்க்கை பாடம் நிறைய இருக்கும்.

“கதை சூப்பரா இருக்கு தாத்தா.  எனக்கு ரொம்ப பிடித்திருக்கு” என்றான் ஆரவ்.

ஜெய் பெருமிதத்தோடு  காலரை தூக்கி விட்டு தன்  மனைவியைத் திரும்பிப் பார்த்தான்.

“ரொம்பத்தான்” எனக் கூறிவிட்டு,  “போதும் வாங்க நாளைக்கு கதை கேட்கலாம்.  டைம் ஆகுது.  தூங்க போகலாம்” என சம்யுக்தா கூற.

“மம்மி ப்ளீஸ்.  இன்னும் ஒரு  கதை கேட்டுட்டு வரோமே” என மித்ரா கூறினாள்.

“தாத்தா இங்க தான் இருப்பாங்க.  நாளைக்கு கதை  கேட்கலாம்.  வாங்க” என சொல்லிக் கொண்டே குழந்தைகளை தனது  அறைக்கு அழைத்துச் சென்றாள்.

“சரி லட்சுமி.  நானும் தோட்டத்துக்கு போறேன். ஆதி  காலைல தான் வருவானா?” என கேட்டார்.

“அப்படித்தான்  பெரியவன் கிட்ட சொல்லி இருக்கான். காலைல  வந்துடுவான்”  என லட்சுமி கூற.
அனைவரும் உறங்கச் சென்றனர்.

அன்றிரவே ஆதி தனக்கு தேவையான உடைகளை மட்டும் எடுத்துக் கொண்டு யாதவை ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்துவிட சொல்லி சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு அதிகாலை வந்து சேர்ந்தான்.

அங்கிருந்த கால் டாக்ஸி பிடித்து மல்லிகை பந்தல் கிராமத்திற்கு சொன்னபடியே  அதிகாலை வந்து சேர்ந்தான்.

அவனது வரவிற்காக உறங்காமல் காத்துக் கொண்டிருந்த இசை கதவு தட்டும் ஓசை கேட்டு உடன் முதல் ஆளாக ஓடி வந்து கதவை திறந்தாள்.

அவனைப் பார்த்து அந்த நொடி அவனது மனதில் ஆயிரம் வண்ண வண்ண பூக்கள் பூத்தது.

“ஏய்!  பிளாக்கி முதல் ஆளா  வந்து கதவ திறக்கிற.  நல்லா வளந்துட்டியே “என்றான்  ஆதி.

ஆதியின் குரல் கேட்ட அனைவரும் எழுந்து வந்தனர்.

“லட்சுமி தன் மகனை பூரிப்போடு பார்த்தாள். எப்படிப்பா இருக்க”  என உள்ளே அழைத்துச் சென்று அமர வைக்க.  வருணும் அங்கு வந்தான்.

“ஹாய் வருண்”  என்றான்.

“ஹாய் ஆதி.  இப்பத்தான் ஊருக்கு வழி தெரிஞ்சுதா”  என சாதாரணமாக  பேசினாலும் வருணின்  மனதிற்குள் ஏதோ ஒரு எண்ணம் அவனை வாட்டத் தொடங்கியது.

“ஏற்கனவே நம்ம காதலை வெளியே சொல்ல முடியாம தவிச்சிட்டு  இருக்கிறேன்.  இதுல ஆதியும் இங்கே வந்துட்டான். இசை  அவன் பக்கம் சாஞ்சிடுவாளா?  இனி நான் என் காதலை எப்படி சொல்ல போறேன்.  என்னால சொல்ல முடியுமா?  என்னுடைய ஊனம்  எல்லாத்துக்கும் தடையா இருக்கு.  ஆதி ஹீரோ மாதிரி இருக்கான்.  அவன விட்டுட்டு என்னைய  இசை ஏற்றுக்கொள்வாளா?”  என ஏக்கத்தோடு இசையின் முகத்தைப் பார்த்தான்.

இசையின் விழிகள் இரண்டும் ஆதியின் உருவத்தை மொத்தமாக படம் பிடித்து இதயத்திற்குள் உள்வாங்கிக்  கொண்டிருந்தது.தொடரும்..

Advertisement