Advertisement

இதற்கு மேலும் அவனிடம் பேசிப் பயனில்லை என்று தெரிந்து கொண்டு அமைதியாக யாதவ் அவனுடன்  கிளம்பினான்.

ரகசியா ஒவ்வொரு நிமிடமும் செல்லச் செல்ல மனதில் பதட்டத்தோடு கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

“காதலை விட்டு தரவும் முடியாமல், தனது  தந்தையை எதிர்த்து பேசவும் முடியாமல் மனதுக்குள் ஒரு போராட்டமே நடத்தினாள்.  எப்படியும் ஆதி வருவான்” என்ற நம்பிக்கையோடு காத்திருந்தவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

மாப்பிள்ளை வீட்டாரும் குறித்த நேரத்தில் வர.  ரகசியா எதுவும் பேசமுடியாமல் மௌனமாக இருந்தாள்.

மாப்பிள்ளை வீட்டாருக்கு பெண்ணை பிடித்திருக்க.  இருவரும் கலந்து பேசி நிச்சயதார்த்த தேதியை குறித்தனர்.

மாப்பிள்ளை வீட்டார் சென்றபிறகு ரகசியா  தன் தோழி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே வந்து  மீண்டும் ஆதிக்கு ஃபோன் பண்ணினாள்.

ஆதி  மறுநிமிடமே ஃபோனை எடுத்தவன்,  “ரகசியா என்னைய மன்னிச்சிடு” என  தனது குரலில் நடுக்கத்தை வரவழைத்துக் கொண்டு பொய்யான  அழுகையோடு அவளிடம் பேசத் தொடங்கினான்.

இதைப் பார்த்த யாதவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

நீங்க ஏன் அழறிங்க.  நான்தான் அழனும்.

நீ  காலைல பேசிய   பிறகு நான்  உங்க வீட்டுக்கு வரணும்னு   நெனச்சு குளிக்கப் போனேன்.  அப்பதான் நான் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை அம்மா சொன்னாங்க.

என்ன சொன்னாங்க.

எனக்கே தெரியாம எங்க அத்த பொண்ணை எனக்கு பேசி முடிச்சிட்டாங்க.  இன்னைக்கு நிச்சயதார்த்த தேதியை முடிவு பண்ண போறாங்களாம். தீடீர்னு காலைல  கிளம்பி வாடான்னு சொல்லிட்டாங்க.

அதுக்கு நீங்க என்ன சொன்னிங்க.

திடீர்னு சொன்னாதனால என்னால அம்மா வார்த்தைய மீறி  எதுவுமே சொல்ல  முடியல.

“என்ன சொல்றீங்க ஆதி?”  என ரகசியா உடைந்து போனாள்.

“நான் எவ்வளவு சொல்லியும் எங்கம்மா என்னோட மனசை புரிஞ்சுக்கத் தயாரா இல்ல. அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கலனா செத்துடுவேன்னு சொல்றாங்க. எனக்கு வேற வழி தெரியாம”  என வார்த்தையை நிறுத்தினான்.

வழி தெரியாம. சொல்லுங்க ஆதி.

நானும்…

நீங்களும்…

அவங்களோட போயிட்டேன்.

ரகசியாவின் இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. அப்போ நம்ம லவ்?  அவ்வளவுதானா?

நீ தான்  எனக்கு உயிர் ரகசியா. உன்ன பிரிஞ்சி  என்னால எப்படி வாழ முடியும்னு எனக்கு தெரியல.

எனக்கும் தான் ஆதி.  உங்கள பிரிஞ்சு என்னால வாழ முடியாது. அப்படி ஒரு வாழ்க்கையை நினைச்சிக் கூட பார்க்க முடியாது.

‘ ஆரம்பிச்சிட்டாடா. இந்த டயலாக்கை காலங்காலமாக சொல்றாளுங்க’ என மனதில் நினைத்துக் கொண்டு,  “இப்போ என்ன பண்றதுனே எனக்கு தெரியல ரகசியா.  ஒரு பக்கம்எங்கம்மா.  இன்னொரு பக்கம் உயிரான காதலி. நான் என்ன  முடிவெடுக்கட்டும்.  நீயே சொல்லுடீ” என குரலில் சோகத்தை வரவழைத்து கொண்டு பேசினான்.

என்ன நடந்தாலும் எனக்கு நீ வேணும் ஆதி.

எனக்கும் ஆசை தான் ரகசியா. ஆனா அப்படி ஒரு விஷயம் நடக்காது . இன்னைக்கு நான் வரமாட்டேன்னு சொன்னதுக்கே  எங்க அம்மா தற்கொலை பண்ணிக்க போயிட்டாங்க.

அச்சோ! என்ன சொல்றிங்க ஆதி.

உண்மைய தான் சொல்றேன்.  எங்க அம்மாவை மீறி என்னால எதுவும் பண்ண முடியாது. என்ன மன்னிச்சிடு ரகசியா.

நீங்க ஆம்பள தானே.  லவ் பண்ணும் போது இதெல்லாம் யோசிக்க மாட்டீங்களா?

எப்படியும் சமாளிச்சிடலாம்னு தான்  நினைச்சேன்.  ஆனா எங்கம்மா இப்படி பண்ணுவாங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல.

என்னால உங்கள மறந்துட்டு இன்னொருத்தரோட வாழ முடியாது.  எனக்கு நீங்க தான் வேணும்  ஆதி. நான் உங்க அம்மாவை  நேர்ல பார்த்து  பேசுறேன்.

உங்க அப்பாகிட்ட பேசி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரதையே  உன்னால தடுத்து நிறுத்த முடியல.  இதுல நீ எங்க அம்மா வேற பார்த்து பேச போறியா?

எங்க அப்பா கிட்ட பேசுற தைரியம் எனக்கு இல்ல தான்.  ஆனா உங்க அம்மா கிட்ட என்னால பேச முடியும்.

எல்லாமே காலம் கடந்து போச்சு ரகசியா.  நாம இனி ஒண்ணு  சேருவோம்னு நம்பிக்கையே இல்ல.  நிச்சயதார்த்த தேதியும் குறிச்சிட்டாங்க.

எனக்கும்தான் ஆதி.  நம்ம சேர்ந்து வாழ வேற வழியே இல்லையா?

நானும் காலைல இருந்து இதையேதான் யோசிச்சேன்.  ஆனா எங்க அம்மாவை மீறி  எந்த முடிவும் எடுக்க முடியாம துடிக்கிறேன் ரகசியா.

எங்கப்பா கௌரவத்திற்காகவே  வாழற மனுஷன்.  நீங்க வந்து பேசினா ஏதாவது முயற்சி பண்ணலாம்னு நினைச்சேன். நீங்களே இப்படி சொல்லிட்டா நான் என்ன பண்ணுவேன்.

“எனக்கும் அதான் புரியல ரகசியா.  நாம ஒண்ணு சேரவே முடியாதா?” என ஏக்கமான குரலில் அவளிடம் நடித்து பேசினான்.

அதுக்கு ஒரு வழி இருக்கு ஆதி.

“அடிப்பாவி! இதுக்கு மேலயும் வழி இருக்குனு சொல்றாளே.  இவள எப்படிதான்  சமாளிக்கிறது” யோசித்தவன்,  “என்ன வழி சொல்லு ரகசியா” எனக் கேட்டான்.

பேசாம நாம ரெண்டு பேரும் சேர்ந்து செத்துடலாம். அப்போ நாம ஒண்ணு சேருவதை யாராலும் தடுக்க முடியாது ஆதி.

‘அடிப்பாவி!  ஒருநாள் கூட நேரில பார்த்தது இல்ல.  பார்க்காமலே என் வாழ்க்கையே முடிச்சிடுவா போல இருக்கே’  என நினைத்துக் கொண்டு, நாம ஏன் தப்பான முடிவுக்கு போகணும்.

வேற என்ன பண்றது ஆதி.

யாரு எந்த மூலையில  இருந்தாலும் எங்க எப்படி வாழ்ந்தாலும் நம்ம மனசுல நம்ம காதல் என்னைக்கும் வாழ்ந்துகிட்டு தான் இருக்கும்.  அதை யாராலும் தடுக்க முடியாது. எனக்கு நீ..  உனக்கு நான்.. நம்ம காதல்  நம்ம மனசுல இருந்த போதும்.  அதுக்காக சாக வேண்டிய அவசியமில்ல ரகசியா.

எந்த முயற்சியுமே பண்ணாம இப்படி சொன்னா நான் என்ன முடிவு பண்றது ஆதி.

“உங்க வீட்டிலயும்  நிச்சயதார்த்த தேதி குறிச்சிட்டாங்க.  எங்க வீட்டிலேயும் திடீரென தேதி நிச்சயம்னு சொல்லிட்டாங்க.  இதுக்குமேல எப்படி நாம ரெண்டு பேரும் ஒண்ணு  சேர முடியும்.  எங்க அம்மா கண்டிப்பா உயிரோட இருக்க மாட்டாங்க ரகசியா. என் குடும்ப சூழ்நிலையை புரிஞ்சுக்க.  அம்மாவுக்கு எதாவது ஆகிட்டா  நான் என்னடீ பண்ணுவேன்”  என மாயா அழுகையை அவளிடம் கொட்டினான்.

அப்போ நம்ம காதல் பார்க்காமலே முடிஞ்சிடுச்சா ஆதி.

“நல்ல வேள.  பார்த்து இருந்தா சத்தியமா உன்ன என்னால விட்டுக்கொடுக்க முடியாதுடீ. அந்த நிமிஷமே செத்துருவேன்”  என டயலாக் விட்டான்.

இவ்வளவு உயிராய் இருக்க நீங்க எப்படி என்னைய  பிரிஞ்சு இருப்பீங்க ஆதி.

‘வளவளனு பேசியே கொல்றாளே. சரி இன்னும் கொஞ்சம் நேரம் தானே. நடிச்சு வைப்போம்’  நினைத்தவன், “எல்லாம் விதி ரகசியா.  நம்ம தலையெழுத்து இவ்வளவுதான் போல.  நம்ம வீட்டில பார்க்கிறவங்களையே  கல்யாணம் பண்ணிட்டு நாம இப்படியே பிரிஞ்சு போவது தான் நம்முடைய வாழ்க்கைக்கு நல்லது.

நம்மாள பிரிஞ்சு இருக்க முடியுமா? ஆதி.

அது முடியாது தான்.  உன் குரலை கூட கேட்காம என்னால இருக்கவே முடியாதுடீ.  ஆனா எப்படி இருக்க போறோம்னு  தான் எனக்கும் தெரியல ரகசியா.  ஆனா வேற வழியில்ல.  நம்ம வாழ்க்கையை எப்போதும் பிராக்டிகலா தான் யோசிக்கணும்.

பிராக்டிகலானா?  என்ன சொல்ல வரீங்க ஆதி.

இப்போ இருக்க  காலகட்டத்துக்கு ஏத்த மாதிரி நம்மள நாம மாத்திட்டு போயிட்டே இருக்கணும்.  இல்லனா இந்த காலத்தோட நம்மளால வாழவே முடியாது.

என்ன சொல்ல வரீங்க?. தெளிவா சொல்லுங்க.

எதையும் டேக் இட் ஈசியா  எடுத்துட்டு போயிட்டே இருக்கணும்.  அவ்வளவுதான். கவலையே இல்லாத வாழ்க்கை வாழணும்.

கவலை இல்லாத வாழ்க்கையா?

ஆமாடீ. அதான் ஹக்கூனா மட்டாடா. கவலை இல்லாத வாழ்க்கைனு டிமான் அண்ட் பூம்பா பேசும் போது சொல்லிக்குமே..

நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன். நீங்க சின்ன புள்ளத்தனமா பேசறிங்க.

அது அப்படி இல்லடீ.  இந்த தெய்வீக காதல்..  நீ இன்றி நான் இல்லை என்பதெல்லா அந்த காலம்.  அதையெல்லாம் தூக்கி போட்டுட்டு  அடுத்து நம்ம லைஃப் என்னன்னு பார்த்து போயிட்டே இருக்கணும். இதுதான் இந்த காலம்.

எப்படி ஆதி  உன்னால ஒரு நிமிஷத்துல இப்படி காதலை தூக்கி போட்டுட்டு பேச முடியாது.

வேற வழி இல்ல.  என்ன பண்ண சொல்ற.  ரெண்டு பேரும் மாறி மாறி உட்கார்ந்து நாள்கணக்கில அழுதாலும் எங்க வீட்டுல எங்க அம்மா ஒத்துக்க போறது இல்ல. உங்க வீட்டில உங்க அப்பா ஏத்துக்க மாட்டார்.  ரெண்டு பேரையும் எதிர்த்து நாம மேரேஜ் பண்ணிக்கலாம். ஆனா  நம்மளால நிச்சயமா நல்ல லைஃப வாழ முடியாது.

வீட்ட விட்டு வர  நான் தயாரா இருக்கேன்.  நீங்க உங்க அம்மாவை மீறி வந்தா போதும்.

வரலாம் தான் ரகசியா. ஆனா அதுல ஒரு சிக்கல்.

அதுல என்ன சிக்கல்?

எனக்கு  தான்  வேலை போயிடுச்சே.

எப்போங்க?

நேத்து நடந்த ஒரு பிரச்சனைல  என் வேலையும் போயிடுச்சு.  இத இன்னும்  நான் எங்க வீட்டிலயே சொல்லல. அடுத்து என்ன பண்ணப் போறேன்னு எனக்கே தெரியல. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உன்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் எப்படி வாழ வைக்க முடியும்.

நீங்க சரின்னு மட்டும் சொல்லுங்க. இப்போதைக்கு வீட்டிலிருந்து பணமும் நகையும் கொஞ்சம் எடுத்துக்கலாம்.  எப்படியாவது இரண்டு பேரும் ஒரு வேலையை தேடிக்கலாம் ஆதி.

இப்பதானடீ  சொன்னேன்.  இந்த முடிவு எல்லாம் வார்த்தைக்கு தான் நல்லா இருக்கும்.  வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது.  பிராக்டிகலா யோசிடீ.

இதுபோல  லவ் பண்ணி வீட்டை விட்டு போனவங்க எல்லாம் வாழலையா?

அவங்க எல்லாம் எப்படியோ தெரியாது.  என்னால அப்படி வாழ முடியாது ரகசியா. என்னைய  நம்பி வரவள  கடைசி வரைக்கும் நான் கண் கலங்காம வெச்சு காப்பாத்தணும்.  எனக்கு மனைவியாக வரப் போறவ

என்னைய தெய்வமா கொண்டாடணும். எனக்கு ஒன்னுனா அவன் துடிக்கணும். இப்படிலாம்  நினைக்கிறவள என்  உள்ளங்கையில வச்சு  தாங்கணும்.

இது மட்டும் ப்ராக்டிகலா? ஆதி.

ஆமாடீ. ப்ராக்டிகல் தான். ஆனா நீ சொல்ற மாதிரி நடந்தா இதெல்லாம் எதுவுமே நடக்காது.  இரண்டு பேரும் வாழ்க்கையும் நரகமாகிடும்.  இந்தப் பிரிவு கொஞ்ச நாளைக்கு கஷ்டமாக இருக்கும்.  உனக்கு நிச்சயமானவரோட  அவரோட பேச தொடங்கினா எல்லாம் சரியா போயிடும்.  அப்புறம் நீயே என்னைய மறந்திடுவடீ.

நீங்க என்னைய மறந்துடுவிங்களா?  மறக்க முடியுமா? ஆதி.

என்னோட உடம்புல உயிர் இருக்க கடைசி நிமிஷம் வரைக்கும்  என்னோட துடிப்பு ஒவ்வொன்னும் ரகசியானு  உன் பேர தான் சொல்லும்.  ஆனா விதி கடவுள் என் தலையெழுத்தை மாத்திடுச்சு ரகசியா” முடியும் வரை முதலைக் கண்ணீர் வடித்தான்.

“ஆதியின்  ஒவ்வொரு வார்த்தையையும் உண்மை” என நம்பிய ரகசியா என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீர் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

ரகசியா நம்ம ஒருமுறை கூட மீட் பண்ணது கிடையாது. ஜஸ்ட் ஃபோன்ல பேசி இருக்கிறோம். அவ்வளவுதான்.  நீ படிச்ச பொண்ணு. உனக்கு நான் சொல்ல தேவையில்லனு  நினைக்கிறேன். உன்னைவிட எனக்கு தாண்டி வலியும், வேதனையும் அதிகம். என்னோட கஷ்டம் உனக்கு புரியும்னு நினைக்கிறேன்.

புரியுது ஆதி.  ரெண்டு பேரும் ஒரே சூழ்நிலையில தான்  இருக்கிறோம்.  இது சந்தோசமா கடக்க ஒரே வழி நம்ம வீட்டுல பார்த்தவங்களையே  நம்ம கல்யாணம் பண்ணிக்கிறது தான்.  பொறுமையா யோசிச்சு பாரு. உனக்கே சரின்னு தோணும்.

ரகசியா மௌனமாக இருந்தாள்.

என் நம்பர டெலிட் பண்ணிடு. உன்னோட வாழ்க்கைய நல்லவிதமா அமைச்சுக்கோ.

ஒரே நாள்ல இதையெல்லாம் மொத்தமா மாத்திக்க முடியும்னு எனக்கு நம்பிக்கை இல்ல ஆதி.

ஆனா இதெல்லாம் நடந்து தான் ஆகணும் ரகசியா.  வேற வழியே இல்ல.  நானே காலைல இருந்து அழுதுகிட்டே  தான் இருக்கேன். கண்ணெல்லாம் வீங்கி போய்டுச்சி. உன்னைய நெனச்சிட்டு  இன்னும் சாப்பிட கூட முடியாம தவிச்சிட்டு இருக்கேண்டீ.  இதுக்கு மேல என்னால முடியாது.

நான் உன் நம்பர டெலிட் பண்ணி விடுறேன்.  நீயும் என் நம்பரை பண்ணிடு.

ஆதி.. ஆ.. ஆதி.. ” என ரகசியா குரல் உடைந்து அழுதாள்.

“கடைசியா ஒரே ஒரு முறை சொல்லனும் போல இருக்குடீ. ‘ ஐ லவ் யூ’  ரகசியா.  ஒரே ஒருமுறை மாமான்னு சொல்லேன்” என அழுதான்.

உதடுகள் துடிக்க உள்ளம்  நொறுங்க “ஐ டூ லவ் யூ மாமா”  என்றாள்.

“இந்த ஒரு வார்த்தைலயே என் வாழ்க்கைய  வாழ்ந்து  முடிச்சிடுவேன்.  என்ன மன்னிச்சிடு ரகசியா’ என கூறிவிட்டு ஃ போனை கட் பண்ணினான்.

“அப்பாடா. ஒண்ண வெட்டி விட எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கு.  ஒரு தொல்ல ஒழிஞ்சது”  என சொல்லிக் கொண்டே ரகசியாவின்  நம்பரை பிளாக் லிஸ்டில் போட்டு டெலிட் பண்ணினான்.

“உன்னைய மாதிரி கேடுகெட்டவன நான் எங்கயுமே பார்த்ததில்லடா. ச்ச்சீ” என்று கூறிய யாதவ்  முதல் முறையாக  ஆதியை அறைந்தான்..

மெல்லிசை தொடரும்…..

Advertisement