Advertisement

முகில், ராதிகா வீட்டுக்கு செல்வதுக்கும் ராம் அவனை போனில் அழைப்பதுக்கும் சரியாக இருந்தது.
 
“எங்க டா முகில் இருக்குற? ரெண்டு நாளா உன் போன் போகவே இல்லை”, என்று கேட்டான் ராம்.
 
“நான் தருவியை பார்த்து, நேவா உயிரோட தான் இருக்கான்னு சொல்ல போனேன் டா”
 
“ஓ அப்படியா? சரி இப்ப எங்க இருக்க? நான் வீட்டுக்கு வரவா?”
 
“இல்லை டா, நான் இப்ப தான் ராதிகா பாக்க அவ வீட்டுக்கு வந்தேன்”
 
“என்னது மும்பைலயா? எதுக்கு டா என்கிட்டே சொல்லல?”, என்று அதிர்ச்சியாக கேட்டான் ராம்.
 
அவன் அதிர்ச்சியை பார்த்து சிரித்து கொண்டு “சரி டா ராம், எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, அப்புறம் பேசுறேன்”, என்று சொல்லி விட்டு வைத்தான்.
 
“அட பாவி, என்னை விட்டுட்டு போய்ட்டானே!”, என்று சோகமாக அமர்ந்தான் ராம். அவனுக்கு ஊரில் இருந்து வந்ததில் இருந்தே அகிலா முகம் நினைவில் வந்தது.
 
“எப்ப முகில் திரும்ப போவான்? அவன் கூடவே சேந்து போகணும், அவளை பாக்கணும்”, என்று காத்திருந்தான். சீதாவிடம் கூட “எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருக்கு”, என்றும் சொல்லிட்டான். ஆனால் கடைசி நேரத்தில், இந்த முகில் இப்படி இவனை கழட்டி விட்டு போவான் என்று கனவா கண்டான்.
 
சோகத்தில் அமர்ந்திருந்த ராமின் கைபேசி மறுபடியும் ஒலித்தது. முகில் தான் அழைத்தான்.
 
“என்ன டா சொல்லு?”, என்று சோகமாய் கேட்டான் ராம். அந்த பக்கம் அமைதியாய் இருந்தது.
 
முதல் தடவை ராமிடம் பேசி விட்டு போனை வைத்த முகில், எதிரில் வரும் அகிலாவை பார்த்து சிரித்து விட்டு, ராமை மறுபடியும் அழைத்து விட்டு, “இந்தா மா உனக்கு வேண்டிய ஆள், இப்ப இதில் பேசுவாங்க”, என்று சொல்லி சிரித்தான்.
 
“எனக்கு வேண்டிய ஆள் யாரு அண்ணா?”, என்று கேட்டாள் அகிலா.
 
“இப்ப நான் வந்த உடனே, உன் கண்ணு எனக்கு பின்னாடி யாரும் வாரங்களான்னு தேடுச்சுல்ல? அந்த ஆள்”, என்று கொடுத்தான்.
 
“அண்ணா”, என்று சந்தோசத்துடன் வாங்கினாள் அகிலா.
 
“தனா அப்பா கிட்ட நான் எல்லாம் பேசிட்டேன். நீ படிச்சு முடிச்ச உடனே ராமுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கிறேன்னு சொல்லிட்டார். நீ பேசு, நான் உள்ளே போறேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான்.
 
மனம் முழுக்க சந்தோசத்துடன் ஒரு எதிர்பார்ப்புடன், போனை காதில் வைத்தாள் அகிலா.
 
முதல் பார்வையிலே மனதை கொள்ளை கொண்டவனின் குரல் அவள் காதில் விழுந்தது.
 
“ஹலோ என்ன டா பண்ற? எனக்கு போன் செஞ்சிட்டு பேசாம இருக்க? பேசு டா”, என்றான் ராம்.
 
சந்தோசத்துடன் அவன் குரலை கேட்டு கொண்டிருந்தாள் அகிலா.
 
“பாவி இப்படியா டா, என்னை விட்டுட்டு போவ? உனக்கு தான் அகிலா என்னை லவ் பன்றான்னு தெரியும் தான? எனக்கும் அவளை பாக்கணும் போல இருக்கு. உன்கூட வரலாம்னு நினைச்சா, நீ சொல்லாம கொள்ளாம போய்ட்ட. என்னையும் கூப்டுட்டு போயிருக்கலாம்ல?”, என்று அவளிடம் உளறினான் ராம்.
 
கண்களில் நீரோடு, உதட்டில் புன்னகையோடு, மனம் முழுக்க சந்தோசத்தோடு “ராம்”, என்று அழைத்தாள் அகிலா.
 
ஒரு நொடி அசைய மறந்தான் ராம். “அகிலா நீயா?”
 
“ம்ம்”
 
“நான் சொன்ன எல்லாத்தையும் கேட்டுட்டியா?”
 
“ஆமா”, என்றவள் ஏங்கி ஏங்கி அழுதாள்.
 
“அழாத மா!”, என்று சொல்லி அவளை சமாதான படுத்த துவங்கினான் ராம்.
 
உள்ளே போன முகிலை வர வேற்றது, வள்ளி தான்.
 
“வாங்க தம்பி. மேல அவ ரூம்லயே உங்க பேக் வச்சிக்கோங்க”
 
“சரி மா. ராதிகா எங்க?”
 
“ராதிகா, அவ அம்மா அப்பா வீட்டுக்கு போயிருக்கா? மாசம் ஒரு தடவை அங்க போயிட்டு வருவா”
 
“நான், அங்க எப்படி போறது?”
 
“இருங்க கார்த்திகை கொண்டு போய் விட சொல்றேன்”, என்றாள் வள்ளி.  அப்போது கார்த்திக்கே “ஹாய் முகில் அண்ணா”, என்ற படியே அங்கு வந்தான்.
 
“ஹாய் கார்த்திக், டியூட்டிக்கு போகலையா?”
 
“இனி தான் போகணும் அண்ணா”
 
“கார்த்திக்”, என்று அழைத்தாள் வள்ளி.
 
“சொல்லுங்க அம்மா”
 
“முகிலை, ராதிகா வீட்டில் விட்டுட்டு நீ போ”
 
“ஹ்ம்ம் சரி மா, அப்பா எங்க?”
 
“அப்பா கிளம்பி அப்பவே போய்ட்டாரு. நீயும், முகிலும் குளிச்சிட்டு வாங்க. நான் டிபன் எடுத்து வைக்கிறேன்”, என்று சொல்லி விட்டு கிட்சன் உள்ளே சென்று விட்டார்.
 
“வாங்க அண்ணா, ராதிகா ரூம்ல குளிச்சு கிளம்புங்க. நான் கிளம்பிட்டு வரேன், அப்புறம் போகலாம்”, என்று சொல்லி விட்டு அவன் அறைக்கு சென்றான்.
 
அவள் அறையை பார்த்த  முகில் “இப்படி ராஜகுமாரி மாதிரி வாழ்ந்த ராதிகாவா, அங்கே எங்க வீட்டில் வேலைக்காரியா வாழ்ந்தா”, என்று நினைத்து கொண்டு குளிக்க சென்றான்.
 
குளித்து முடித்தவன், அவளுடைய துண்டில் முகம் துடைத்தான். அவள் வாசனை அந்த அறை எங்கும் இருப்பது போல் அவனுக்கு தோன்றியது.
 
“சீக்கிரம், அவளை போய் பாக்கணும்”, என்று நினைத்து கொண்டு கீழே வந்தான். கார்த்திக் இன்னும் வர வில்லை.
 
“பொண்டாட்டியை பாக்க போற நானே, சீக்கிரம் கிளம்பிட்டேன். இவன் ஏன் இவ்வளவு நேரம் ஆக்குறான்?”, என்று மனதில் கார்த்திகை திட்டினான் முகில்.
 
அதே நேரம், தனக்கு பொண்டாட்டியாக ஆக போறவளை, இறுக்கி கட்டி பிடித்து கொண்டு நின்றான் கார்த்திக்.
 
“விடுங்க அத்தான். அத்தை கூப்பிடுவாங்க”, என்றாள் வித்யா.
 
“அதுக்கு நீ, என் கையில் சிக்காமல் இருந்துருக்கணும்”, என்று சொல்லி கொண்டே அவள் இதழ்களை சிறை செய்தான் கார்த்திக்.
 
“ராதிகாவை எப்போது பாப்போம்?”, என்று காத்து கொண்டு அமர்ந்திருந்தான் முகில். அவனை ஒரு முறை பார்த்த வள்ளி, “கார்த்திக், முகில் கிளம்பியாச்சு. நீ சீக்கிரம் வா”, என்று குரல் கொடுத்தாள்.
 
“ஐயோ, அத்தை”, என்ற படியே ஓடி போனாள் வித்யா.
 
“இதோ கிளம்பிட்டேன் மா”, என்ற படியே வந்தான் கார்த்திக்.
 
ஒரு வழியாக மூன்று தோசையை பிய்த்து வாயில் போட்டு விட்டு, கார்த்திக் காரில் அமர்ந்தான் முகில். அங்கே அகிலா போனில் பேசுவது தெரிந்தது. இவனை பார்த்த அகிலா, “போன் கொடுக்கணுமே”, என்று நினைத்து ஓடி வந்தாள்.
 
அவளை பார்த்த முகில், “நீ பேசு மா. போன் உன்கிட்டயே இருக்கட்டும். இப்போதைக்கு உன் அண்ணியை பாக்க போகும் போது, எனக்கு அது இடைஞ்சலா தான் இருக்கும்”, என்று சிரித்தான்.
 
“சரி அண்ணா”, என்ற படியே சிரித்து கொண்டு சென்றாள் அகிலா.
 
“இவ யார் கிட்ட இப்படி சிரிச்சு சிரிச்சு பேசுறா?”, என்று கேட்டு கொண்டே காரை எடுத்தான் கார்த்திக்.
 
“வேற யார் கிட்ட பேசுவா? உங்க வீட்டுக்கு வர போற மாப்பிளை கிட்ட தான் பேசுறா”, என்றான் முகில்.
 
“என்ன அண்ணா சொல்றீங்க? எங்க வீட்டு மாப்பிள்ளை யாரு? யாரையும் விரும்புறாளா?”
 
“ஆமா, என்னோட பிரண்ட் தான்”
 
“ஓ, ராம் அண்ணாவையா?”
 
“ஆமா, ஆனா உனக்கு ராம் அண்ணா இல்லை அத்தான். நான் அப்பா கிட்ட எல்லாம் பேசிட்டேன்”, என்றான் முகில்.
 
“வாவ், ராம் அத்தான் ரொம்ப ஸ்வீட். நிறைய காமெடி பண்ணி சிரிக்க வைப்பாங்க”
 
“நீ வியந்தது போதும் கார்த்திக். எல்லாரும் அவங்க அவங்க லவ்வர் கூட கடலை போட்டுட்டு இருக்கீங்க. நான் என் பொண்டாட்டியை பாக்க கூட இல்லாம இருக்கேன். கொஞ்சம் சீக்கிரம் காரை எடேன்”
 
காரை எடுத்து கொண்டே,”ஐயையோ உங்க பொண்டாட்டியை பாக்க இன்னும் ரெண்டு மணி நேரம் போகணுமே”, என்றான் கார்த்திக்.
 
“என்னது ரெண்டு மணி நேரமா?”, என்று அதிர்ச்சியானவனை பார்த்து சிரித்த கார்த்திக், அடுத்த பத்து நிமிடத்தில் ஒரு வீட்டின் முன்பு போய் நிறுத்தினான்.
 
“போங்க, போங்க. இது தான் உங்க தேவதை இருக்கும் வீடு”, என்று சிரித்தான் கார்த்திக்.
 
“உள்ள வா கார்த்திக்”, என்றான் முகில் இறங்கி கொண்டே.
 
“எதுக்கு, என்னை நீங்க கரடின்னு திட்டவா? நான் ஆபிஸ் போறேன் பை. வரும் போது அவ கூடவே வீட்டுக்கு போயிருங்க”, என்று சொல்லி விட்டு காரை கிளப்பினான்.
 
உள்ளே டைனிங் டேபிள் மீது கவிழ்ந்து படுத்திருந்தாள் ராதிகா.
 
“எதுக்கு மா அப்பாவும் நீங்களும் என்னை விட்டுட்டு போனீங்க? நீங்க இருந்திருந்தா எனக்கு இப்படி கஷ்டமா இருக்காதே. என்னை விட்டுட்டு போய்ட்டான் மா அவன்”, என்று புலம்பி கொண்டிருந்தாள்.
 
அழைப்பு மணி சத்தத்தில், கண்களை திறந்து பார்த்த ராதிகா “இங்க யார் வந்திருப்பா?”, என்று நினைத்து கொண்டே போய் கதவை திறந்தாள்.
 
அங்கே அவளை காண ஆவலாக, “தன்னை பார்த்தால் அவள் முகம் எப்படி மலரும்?”, என்ற கற்பனையோடு நின்றிருந்தான் முகில்.
 
கதவை திறந்த ராதிகா, “உனக்கு வேற வேலையே இல்லையா டா? எப்ப பாத்தாலும், என் கண்ணு முன்னால வந்து என்னை தொல்லை செய்ற. ஆசையோட பக்கத்துல நான் வந்தா மட்டும், மறைஞ்சு போயிருவ. என்னால எவ்வளவோ விஷயங்களை தாங்க முடிஞ்சது. ஆனா, உன்னோட பிரிவை தாங்க முடியலை. இனியும் கனவுல வந்து என்னை கொல்லாத”, என்று பேசி கொண்டே உள்ளே சென்றாள் ராதிகா.
 
அவள் தன்னை கனவு என்று நினைத்து, உளறுவதை பார்த்த முகிலுக்கு கண்களில் நீர் கோர்த்தது. “இவளுடைய காதலுக்கு நான் என்ன செஞ்சிருக்கேன்?”, என்று தனக்குள்ளே கேட்டு கொண்டவன், கதவை சாத்தி விட்டு அவள் பின்னே சென்றான்.
 
மறுபடியும் அதே இடத்தில் போய் அமர்ந்தாள் ராதிகா. அவள் அருகே சென்று அமர்ந்தான் முகில்.
 
“நீ என்ன இன்னும் மறையாம இருக்க?”, என்று கேட்டு கொண்டே கையை அவன் அருகில் கொண்டு சென்றாள்.
 
அடுத்த நொடி அவள் கைகளை பிடித்து கொண்டான் முகில். “இன்னைக்கு என்ன உடனே மறையாம இருக்க?”, என்று கேட்டு சிரித்தாள் ராதிகா.
 
“ஏண்டி, பாக்கும் போது வாங்க போங்கன்னு சொல்ல வேண்டியது. இதே கனவுல, வா டா போடானு பேச வேண்டியது”, என்று சிரித்த முகில், அடுத்த நொடி அவளை தன்னை நோக்கி இழுத்தான்.
 
அப்படியே அவன் மடியில் போய் விழுந்தாள் ராதிகா. அவளை தன்னுடைய மடியில், அமர வைத்து இறுக்கி கொண்டான் முகில்.
 
அதிர்ச்சியில் கண்களை இமைக்க கூட இல்லாமல், அவனை பார்த்தாள் ராதிகா. இன்னும் இது நினைவு தான் என்று நம்ப முடிய வில்லை அவளால். மெதுவாக தன்னுடைய கைகளை அவனை நோக்கி கொண்டு சென்றவள், அவன் கன்னத்தில் வைத்தாள். அப்படியே அவன் முகத்தை தடவினாள் ராதிகா. அவள் கை மேல தன் கையை வைத்து, அழுத்தி கொண்டான் முகில்.
 
அவள் கண்களில் பிரமிப்பை கண்டவன், “இது கனவு இல்லை ராதிகா. உண்மை தான். நான் நேவா வோட புருஷன். ஐ லவ் யு ராதிகா”, என்றான்.
நினைவுகள் தொடரும்…..

Advertisement