Advertisement

அத்தியாயம் 9
என்னவளின் இதயத்தில்
அழகான காதலனாக
வீற்றிருக்கும் நான், கல்வெட்டு
நினைவுகளை உருவாக்குவேனா?!!!
 
“ராம், நாம இப்ப ஊருக்கு கிளம்புறோம்”, என்றான் முகில். அவன் சொன்னதை கேட்டு கொண்டே தன்னுடைய அறைக்கு சென்றாள் ராதிகா.
 
அவன் சொன்னதை கேட்ட ராம்க்கு தன்னால் பார்வை அகிலாவை  நோக்கி சென்றது. அவள் முகம் முழுவதும் அதிர்ச்சியை தேக்கி அவனை பார்த்தாள். அப்படியே, அவள் முகம் ராம் மனதில்  பதிந்தது.
 
“என்ன முகில்? இப்படி சொல்ற? ராதிகா  என்ன சொன்னா?”, என்று கேட்டான் ராம்.
 
“அவ ராதிகாவாம். நேவா இல்லையாம். நான் இங்க இருக்க கூடாதாம். அதான் போகலாம் ராம்”
 
“சரி டா”, என்று கிளம்ப போனான் ராம்.
 
“ஏன் பா நாங்க எல்லாரும் பேசுறோமே?”, என்றாள் வள்ளி.
 
“இல்லை மா, வேண்டாம்”
 
“என்ன முகில்? அவ ரொம்ப கோபமா பேசிட்டாளா?”, என்று கேட்டார் தனா.
 
“அப்படி எல்லாம் இல்லை பா”, என்றவன் அப்போது தான், அங்கு இருந்த அனைவரின் சோக முகத்தை பார்த்தான்.
 
“ஐயோ, நீங்க எல்லாரும் எதுக்கு இப்படி பீலிங்ஸ்சா பேசுறீங்க? நான் ஒரு வாரத்தில் வந்துருவேன். நீங்க எல்லாரும் ஒரு வாரம் என் பொண்டாட்டியை பத்திரமா பாத்துக்கோங்க போதும்”, என்று சிரித்தான் முகில்.
 
எல்லாருக்கும், அப்போது தான் நிம்மதியாக இருந்தது.
 
சந்தோசமாகவே இருவருக்கும் விடை கொடுத்தார்கள் அனைவரும். அறைக்கு போன ராதிகா,  குப்புற படுத்து அழுது கொண்டே இருந்தாள், அவன் எழுதிய கவிதை பேப்பரை கையில் வைத்து கொண்டு.
 
சிறிது நேரம் அழுது விட்டு கீழே வந்து பார்த்தாள். வெறுமையாக இருந்தது. “போய்ட்டான் என்னை விட்டுட்டு. என்கிட்ட சொல்லாம கூட போய்ட்டான்ல”, என்று மனதுக்குள் குமைந்தாள்.
 
எதிலுமே கவனம் செலுத்த முடியாத படி அனைத்து நினைவிலும் அவனே இருந்தான். அப்போது தான், அவளுக்கு அவார்ட் கிடைக்க போகுது  என்று சொன்னார் தனா.
 
அவர் சொல்வதை அவள் காதில் வாங்கினாள் அவ்வளவே. வேறு எதுவும் முக்கியமாக அவள் கவனத்தில் பதியவில்லை. 
 
“என்ன மா ராதிகா? நான் நீ தீவிர வாதிகளை பிடிச்சதுக்கு அவார்ட் கிடைக்க போகுதுனு, சொல்லிட்டு இருக்கேன். நீ கனவுலகில் இருக்க?”
 
“கேட்டுட்டு தான் இருக்கேன் மாமா”
 
“உனக்கு சந்தோசம் இல்லையா ராதிகா?”
 
“இதில் நான் என்ன செஞ்சேன் மாமா? அவங்களை பத்தி இன்பர்மேஷன் தான கொடுத்தேன்? நீங்க தான அவனை கைது செய்தீங்க?”
 
“ஆமா மா, எனக்கும் அவார்ட் உண்டு தான். ஆனா, அவ்வளவு ரிஸ்க் எடுத்து ரெண்டு வருசமா, அந்த காட்டில் தங்கி இருந்து அவனை பிடித்தது எவ்வளவு பெரிய விஷயம்?”
 
“என்ன செஞ்சு என்ன செய்ய? வாழ்க்கையில் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், என்னோட வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்குறேனே”, என்று மனதில் நினைத்து கொண்டு வெறுமையாக சிரித்தாள்.
 
“என்ன மா, முகில் பத்தி யோசிச்சிட்டு இருக்கியா? நான் வேணா அவங்க வீட்டில் பேசவா?”
 
“வேண்டாம் மாமா”
 
“என்னமோ மா, அவனும் கிளம்பி போய் ரெண்டு நாள் ஆகுது. இன்னும் போன் கூட செய்யலை”, என்று சலித்து கொண்டார்.
 
அவள் எதுவும் சொல்லாமல், அமைதியாக இருந்தாள்.
 
“சரி மா நாளைக்கு டெல்லி போகணும். எல்லாம் எடுத்து வச்சிரு சரியா?”
 
“சரி மாமா”, என்று சொல்லி விட்டு தன் அறைக்குள் சென்று படுத்து விட்டாள்.
 
அவள் போன உடனே, முகிலை அழைத்தார் தனா.
 
“என்ன பா முகில்? இங்க உன் பொண்டாட்டி பாதியா மாறிருவா போல? எப்ப வர?”
 
“ரெண்டு நாளில் வரேன் பா”, என்றான் முகில்.
 
“சரி பா, நாளைக்கு அவளுக்கு அவார்ட் கொடுக்குறாங்க. லைவ் தான். நீ டிவில பாரு சரியா?”
 
“சரி பா நான் பாக்குறேன். நீங்க எதுக்கும், அப்ப அப்ப எனக்கு போன் பண்ணுங்க”
 
“சரி”, என்று சொல்லி விட்டு வைத்தார் அவர்.
 
அடுத்த நாள் மதியம் இரண்டு மணிக்கு ஹாலில் உள்ளே, டிவி முன்பு போய் அமர்ந்தான். எல்லாரும் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்.
 
முந்துன நாள் தான் ஊருக்கு வந்தார்கள் ராமும், முகிலும். ராமை அவன் வீட்டுக்கு போக சொல்லி விட்டு, தன்னுடைய வீட்டுக்கு முகில் வரும் போது இரவு எட்டு ஆகி விட்டது. நேராக உள்ளே வந்தவன் யாரிடமும் பேசாமல் தன்னுடைய அறைக்குள் சென்று பூட்டி கொண்டான்.
 
வசந்தி கதவை பல முறை தட்டியும் திறக்காமல் படுத்திருந்தான்.
 
ஆனால், இன்று அவனே டிவி முன்னே வந்து அமரவும், ஆச்சர்யத்துடன் ஒருவர் ஒருவராக அந்த ஹாலில் வந்து அமர்ந்தார்கள்.
 
யாரையும் பார்க்காமல் டிவி மட்டுமே பார்த்து கொண்டிருந்தான் முகில்.
 
“என்ன பா, முகில் அமைதியா இருக்க?”, என்று கேட்டார் மேகநாதன்.
 
“ஒன்னும் இல்லை பா”
 
“சாப்பிட்டியா?”
 
“இல்லை பா, பசிக்கல”
 
“எதுக்கு இப்படி இருக்க? அந்த பொண்ணை காணும்னு கம்பளைண்ட் பண்ணுவோம். கண்டிப்பா கிடைப்பா. அதுக்காக, நீ இப்படி சாப்பிடாம இருக்குறது கஷ்டமா இருக்கு பா. கம்பளைண்ட் கொடுப்போமா?”
 
“வேண்டாம் பா”, என்றான் முகில்.
 
“அப்பாடி, அவன் அவளை கண்டு பிடிக்க வேண்டாம்னு சொல்லிட்டான்”, என்று நிம்மதியாகி “சும்மா இருங்க. அவனே, அவளை தேட வேண்டாம்னு சொல்றான், நீங்க இப்படி பேசி அவனை குழப்பாதீங்க!”, என்று மேகநாதனை திட்டினாள் வசந்தி.
 
“சும்மா இரு வசந்தி”, என்று அவளை அடக்கியவர் மறுபடியும் முகிலிடம் பேச துடங்கினார்.
 
“எங்களுக்கு நீ தான் முகில் முக்கியம். உனக்கு பிடிச்ச விசயம் செய்ய விடாம செஞ்சது தப்பு தான். இப்ப உனக்கு பிடிச்ச படம் எடுக்குற வேலையே செய். எவ்வளவு பணம் வேணாலும் எடுத்துக்கோ. முதலில் அந்த பொண்ணை கண்டு பிடிப்போம்”, என்றார் மேகநாதன்.
 
“காணாம போனா தான பா தேடணும்?”, என்றான் முகில்.
 
எல்லாரும் அதிர்ச்சியாக அவனை பார்த்தார்கள். “என்ன முகில் சொல்ற?”
 
“ஆமா பா, அவ எங்க இருக்கான்னு தெரியும்”
 
“தெரியுமா? அப்ப அவளை இங்க கூட்டிட்டு வர வேண்டியது தான?”
 
“இப்ப எதுக்கு நீங்க அவனை குழப்பி விட்டுட்டு இருக்கீங்க. அவ எல்லாம் இந்த வீட்டுக்கு வர வேண்டாம். ஆமா, அப்படி தான பா முகில்?”, என்றாள் வசந்தி.
 
“ஆமா மா”, என்றான் முகில்.
 
“அப்ப உனக்கு, வேற பொண்ணு பாக்கட்டுமா பா?”
 
“எதுக்கு மா?”
 
“எதுக்கா, உனக்கு கல்யாணம் செய்ய தான்”
 
“எனக்கு தான் கல்யாணம் முடிஞ்சிடுச்சே”, என்றான் முகில்.
 
“அவ தான் எங்கயோ இருக்காள்ல? நீ ஏன் அவளை நினைக்க?”
 
“அவளை நினைக்காம, வேற என்ன செய்யணும்?”
 
“என்ன பா முகில் சொல்ற? அந்த பொண்ணு இருக்குற இடம் தெரியும்னு சொல்ற. அவளை மறக்க மாட்டேனும் சொல்ற. அப்ப,  அவளை இங்க கூட்டிட்டு வர வேண்டியது தான?”, என்று இடையில் புகுந்து சொன்னார் மேகநாதன்.
 
“நான் கூப்பிட்டேன். அவ வர மாட்டேன்னு சொல்லிட்டா”
 
“பாத்தீங்களா, அவளுக்கு திமிரை. என் பிள்ளை தேடி போய் கூப்பிட்டிருக்கான். வர மாட்டேன்னு சொல்லிருக்கா. எனக்கு அப்பவே தெரியும்ங்க. அவ எல்லாம் நல்ல பொண்ணே இல்லை”, என்றாள் வசந்தி.
 
தன் அம்மாவை ஒரு பார்வை பார்த்தவன், டிவி புறம் திரும்பி விட்டான்.
 
“முகில் நீ அவ எங்க இருக்கான்னு சொல்லு பா. நான் போய் கூட்டிட்டு வரேன்”, என்றார் மேகநாதன்.
 
“யார் கூப்பிட்டாலும் வர மாட்டா பா”, என்றான் முகில்.
 
“அதெல்லாம் வருவா, அந்த பொண்ணு நல்ல பொண்ணு பா. நீ அவ எங்க இருக்கான்னு மட்டும் சொல்லு. நான் கூட்டிட்டு வரேன்”, என்றார்.
 
டிவி யை நோக்கி ஒற்றை விரலை நீட்டினான் முகில். எல்லாரும் டிவி பக்கம் பார்த்து அதிர்ச்சியானார்கள்.
 
“முகில் இது நேவா தான?  இவ எப்படி பா போலீஸ் ஆனா?”, என்று கேட்டார் மேகநாதன்.
 
“நேவா போலீஸ் ஆகல. கமிஷனர் ராதிகா தான், நேவா மாதிரி காட்டில் தங்கி தீவிர வாதியை பிடிச்சு கொடுத்துருக்கா. அதுக்கு தான், அவளுக்கு, ஜனாதிபதி அவார்ட் கொடுக்குறாரு”
 
“அந்த பொண்ணு, அன்னைக்கு இங்கிலீஸ் வாசிச்சப்ப, இங்கிலீஸ் தெரிஞ்சிருக்கு போலன்னு நினைச்சேன். ஆனா, இப்படி இவ்வளவு பெரிய பதவியில் இருப்பான்னு நினைக்கவே இல்லை முகில்”
 
“நானும் நினைக்கலைப்பா, இவ்வளவு உயரத்தில் இருக்குறவ, என்னோட காதலுக்காக இங்க வந்து பிச்சைக்காரி மாதிரி, நம்ம வீட்டில் வேலைக்காரியா இருந்துருப்பான்னு. இப்ப சொல்லேன் மா, அவ பிச்சைக்காரி, வேலைகாரி, யாரும் இல்லாத அனாதைன்னு. கெட்டவனு சொல்லு, எதுக்கு வாயடைச்சு போய் இருக்குற? இப்ப அப்படியே என் மருமக பெரிய போலீஸ் ஆபிசர்னு பெருமை பீத்தணும்னு தோணுமே? ஆனா, அவ என்னை  வேண்டாம்னு சொல்லிட்டா. இங்க இருந்த நேவா அவ இல்லையாம். அது ராதிகா மட்டும் தானாம்”
 
“நான் பேசுனது தப்பு தான், நான் வேணா அவ கிட்ட மன்னிப்பு கேக்குறேன் முகில்”, என்றாள் வசந்தி.
 
“பாத்தீங்களா அப்பா, இந்த அம்மாவை, உடனே எப்படி மாறிட்டாங்கன்னு. ஆனா, அவ சொல்லிட்டு போனது நினைவு இருக்கா? செத்தாலும், அவ பொணம் கூட இந்த வீட்டுக்கு வராதுன்னு சொன்னா. இப்படி பட்டவங்க இருக்குற வீட்டுக்கு, அவ எப்படி பா வருவா? வரவே மாட்டா”
 
“உங்க அம்மா பத்தி தான், உனக்கு தெரியுமே பா. சந்தர்ப்ப வாதி. நீ எதை பத்தியும் யோசிக்காத. அவ தான இங்க வர மாட்டா. ஆனா, நீ அங்க போ. அவ கூட சேர்ந்து வாழு. நாங்க உன்னை பாக்கணும்னு தோணுச்சுனா, வந்து பாத்துட்டு வரோம்”, என்றார் மேகநாதன்.
 
“அப்பா”, என்று விழி விரித்தான் முகில். அவனே அந்த குழப்பத்தில் தான் இருந்தான் “என்ன செய்ய?”, என்று தெரியாமல்.
 
“என்ன பா அதிர்ச்சியாகுற? அந்த பொண்ணோட வலி அதிகம் பா. அவ உன் மேல உள்ள காதலுக்காக இங்க வந்தாலும், அப்ப அப்ப பழசு நினைவு வந்து அவளை நிம்மதியா இருக்க விடாது. உனக்கும் படம் எடுக்குற வேலை தான பிடிச்சிருக்குன்னு சொன்ன? அப்ப இங்க இருந்து என்ன பண்ண போற? அங்கேயே போய், உனக்கு விருப்ப பட்டதை செய்”
 
“நல்லா இருக்குங்க, உங்க நியாயம். அவனை நீங்களே நம்ம கிட்ட இருந்து பிரிக்கிறீங்க”, என்று கத்தினாள் வசந்தி.
 
“அவ கிடக்கா முகில், நீ உனக்கு விருப்ப பட்டதை செய்”
 
“தேங்க்ஸ் பா”, என்று சொல்லி விட்டு, அந்த நிகழ்ச்சியை கவனித்தான்.
 
கம்பீரமாக பேசி கொண்டிருந்தாள் ராதிகா. அவளுடைய ஆளுமையான குரலில், வசந்தியே ஒரு நிமிடம் அசந்து போய் பார்த்தாள்.
 
அப்போது வந்த பார்த்த வானதிக்கும் அதிர்ச்சியே. “அத்தனை பேரின் வீட்டிலும், கண்ணீர் குரல் கேக்க வைத்தவனை பிடிக்கிறது தான் என்னோட குறிக்கோள்ன்னு நினைச்சேன். அதுக்காக தான் மலைவாசியா அங்க போனேன். அந்த காட்டில் இருந்த மக்கள், அவனை பிடிக்க, அவனை பற்றிய விஷயங்களை சொல்லி நிறையவே உதவுனாங்க. இந்த ஐடியா கொடுத்தது டி.ஐ .ஜி சார் தான். எல்லாருக்கும் வணக்கம்”, என்று பேசி விட்டு கீழே இறங்கினாள் ராதிகா.
 
அடுத்து இரண்டு நாள், அப்பாவிடம் பல ஏற்பாடுகள் சொல்லி விட்டு அங்கே தனாவுக்கும் சில வேலைகள் சொல்லி விட்டு, தருவியை காண காட்டுக்கு சென்றான் முகில்.
 
அவனை பார்த்ததும், சரகாவுக்கு எதுவோ குழப்பத்தை தந்தது.
 
தருவி ஆவலோடு விசாரித்தாள். நடந்த உண்மைகள் அனைத்தையும் சரகாவிடம் சொன்னான் முகில்.
 
அனைத்தையும் கேட்ட சரகா, அவரும் சில உண்மைகளை அவனுக்கு சொன்னார்.
 
கடைசியில் அங்கு எல்லாரிடம் விடை பெற்று மும்பை நோக்கி பயணமானான் முகில்.
 

Advertisement