Advertisement

அத்தியாயம் 8
மழை பெய்யும் தருணம்,
மேலே எழும்
மண் வாசனை போல்
உன் நினைவுகளை எழுப்புகிறது!!!
 
“என்ன மாமா, பிளாக்மெயில் பண்றீங்களா?”
 
“எப்படி வேணும்னாலும் நினைச்சிக்கோ.  ஒண்ணு அவன் கூட வாழணும். இல்லைன்னா, இன்னொரு கல்யாணம் பண்ண சம்மதிக்கணும். அப்ப தான், அவன் இங்க இருந்து போவான்”
 
“இல்லை மாமா, என்னால முடியாது. அவரை நான் இங்க இருந்து போக வைப்பேன். கடைசி வரைக்கும், உங்க கூடவும், அத்தை  கூடவும் இருந்துருவேன். இது தான் என்னோட முடிவு”, என்று சொல்லி விட்டு எழுந்து போனாள் .
 
அவள் போன பிறகு உள்ளே வந்தான் கார்த்திக். “நினைச்சேன், என்ன டா நம்ம அப்பா புதுசா ரெண்டு பேரை கூட்டிட்டு வந்துருக்காரேன்னு. இப்ப தான புரியுது? என்ன பா ராதிகா இப்படி சொல்றா? என்ன செய்ய?”, என்று கேட்டான்.
 
“நாம ஒண்ணும் செய்ய முடியாது பா. ஆனா, அவங்க ரெண்டு பேரும் பிரிய மாட்டாங்க.  ராதிகா முகிலை விட்டு கொடுக்க மாட்டா. நீ போய் தூங்கு. அப்புறம், வித்யா கிட்ட இந்த  விசயத்தை சொல்லிறாத கார்த்திக்”, என்று சொன்னார்.
 
“நான் எதுக்கு பா, அவ கிட்ட சொல்ல போறேன்? நான் அவ கிட்ட பேசவே மாட்டேனே”, என்றான் கார்த்திக்.
 
“டேய் போதும் டா, உன் நடிப்பு. எங்க முன்னாடி அவளை முறைச்சிட்டு திரியுறது. தனியா பாத்தா கொஞ்சிறது. போ போ போய் தூங்குற வழியை பாரு. ராதிகா முகில் கூட சேந்த உடனே, இவன் கல்யாணத்தை முடிக்கணும்ங்க”, என்று தனாவை பார்த்து சொன்னாள் வள்ளி.
 
“ஹி ஹி “, என்று அசடு வழிந்தாவாறே வெளியே வந்த கார்த்திக், நேராக வித்யாவை தேடி மொட்டை மாடிக்கு சென்றான்.
 
அங்கே அவனுக்காக காத்து கொண்டிருந்தாள் வித்யா. இவனை பார்த்ததும் முகத்தை திருப்பி கொண்டாள் அவள்.
 
“சாயங்காலம் அவளை பாக்காத மாதிரி போனதுல, மேடம் கோபமா இருக்காங்களே”, என்று தனக்குள் சொல்லி விட்டு அவள் கைகளை பற்றினான். கைகளை தட்டி விட்டாள் அவள்.
 
“ஏய் என்ன டி இப்படி பண்ற? நான் பாத்ததும் தலையை கீழ தொங்க போட்டுக்குற. பின்ன நான் என்ன செய்ய சொல்லு?”
 
“நான் பாக்காம இருந்தா, நீங்க அப்படி தான் போவீங்களோ? போங்க அத்தான் உங்க கூட சண்டை”
 
“இந்த சண்டையை சமாதான படுத்த தான், எனக்கு தெரியுமே!”, என்று சொல்லி கொண்டே அவளை இழுத்தான் கார்த்திக். அடுத்த நொடி, அவன் மார்பில் விழுந்தாள் வித்யா.
 
அவளை இறுக்கி கொண்டவன், அவளுடன் காதல் விளையாட்டை ஆரம்பித்தான். கடைசியில் “முகில் தான் ராதிகாவோட புருஷன்”, என்று சொல்லவும் செய்தான்.
 
விழி விரித்தாள் வித்யா. “நான் நினைச்சேன் அத்தான். மாமா எப்படி புதுசா இப்படி ஆளுங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்காருனு? ஆனா, இப்ப தான் புரியுது. எனக்கு சந்தோசமா இருக்கு அத்தான். முகில் அத்தான் அக்காக்கு நல்ல பொருத்தம். கண்டிப்பா அவங்க சேருவாங்க”, என்று சொல்லி சந்தோச பட்டாள் வித்யா.
 
“சரி நீ இதை யார் கிட்டயும் சொல்லிறாத. அம்மா உன்கிட்ட கூட சொல்ல கூடாதுன்னு சொன்னாங்க!”
 
“ஹ்ம் சரி!”, என்றவள், உடனடியாக கீழே போனாள். அங்கே அகிலா தூங்கி கொண்டிருந்தாள். “ஏய் அகி எந்திரி டி. உனக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்”, என்றாள் வித்யா.
 
“சும்மா இரு டி. நான் இப்ப தான், என் ஆள் கிட்ட காதலை சொல்லி கிட்டு இருக்கேன், நீ வேற”, என்று சலித்து கொண்டாள் அகிலா.
 
“ஓ அந்த அளவுக்கு வந்தாச்சா?”, என்று நினைத்து கொண்டு, “நம்ம வீட்டுக்கு வந்துருக்க, அந்த முகில் யாரு தெரியுமாடி? ராதிகாவோட வீட்டுக்காரராம் டி”, என்று அகிலாவின் காதில் சொன்னாள் வித்யா.
 
“என்னது”, என்று அலறி அடித்து கொண்டு எழுந்தாள் அகிலா.
 
கடைசியில் குடும்பத்துக்கே உண்மை தெரிந்து, முகிலை அனைவரும் அந்த வீட்டின் மாப்பிளையாக ஏற்று கொண்டார்கள்.
 
காலையில் எழுந்த வள்ளி, “இந்தாங்க மாப்பிளை காபி குடிங்க. நீங்க தான் ராதிகா வீட்டுக்காரர்னு, எனக்கு மட்டும் தெரியும்”, என்றாள்.
 
அவளை பார்த்து சிரித்த முகில், “தேங்க்ஸ் மா. மாப்பிளைன்னு சொல்ல வேண்டாம். கார்த்திக் மாதிரி என்னையும் உங்க பையனா நினைச்சுக்கோங்க”, என்றான்.
 
அடுத்து கொஞ்ச நேரத்தில், “ஹாய் முகில் அண்ணா, நீங்க தான் ராதிகா வீட்டுக்காரர்னு எனக்கு மட்டும் தெரியும்”, என்றான் கார்த்திக். அவனை பார்த்தும் சிரித்தான் முகில்.
 
கடைசியில், “குட் மார்னிங் அத்தான்”, என்று வித்யாவும், “குட் மார்னிங் அண்ணா!”, என்று அகிலாவும் வந்தார்கள். அவர்களும் “நீங்க தான் எங்க ராதிகாவை கல்யாணம் செஞ்சீருக்கீங்களாம். எங்களுக்கு தெரிய கூடாதுன்னு எல்லாரும் பிளான் செஞ்சாங்க. ஆனா, எங்களுக்கும் தெரிஞ்சிட்டு”, என்றார்கள்.
 
அவர்களை பார்த்து அடக்க மாட்டாமல் சிரித்தார்கள் ராமும், முகிலும்.
 
“என்ன செய்ய? எப்படி ராதிகா மனதை மாற்ற?”, என்று யோசித்து கொண்டே படுத்திருந்தான் முகில்.
 
“எப்படி, அவனை என் வாழ்க்கையை விட்டு விரட்ட?”, என்று யோசித்து கொண்டிருந்தாள்  ராதிகா.
 
காலையில் தோட்டத்தில் அமர்ந்திருந்தான் ராம். இரவு முழுவதும், ஒழுங்காக தூங்காமல் உருண்டு கொண்டிருந்த முகிலை நினைத்து கொண்டு, அமர்ந்திருந்தவன் அருகே வந்தாள் அகிலா.
 
அவளை பார்த்ததும், இயல்பாக எழுந்தான் ராம். “எதுக்கு, காலைலே இப்படி சோகமா உக்காந்துருக்கீங்க?”, என்று கேட்டாள் அகிலா .
 
“ஒண்ணும் இல்லை”
 
“இல்லை, எனக்கு தெரியும். உங்க ப்ரண்ட் பத்தி தான கவலை படுறீங்க?  அண்ணி, முகில் அண்ணனை கண்டிப்பா விட்டு தர மாட்டாங்க. சும்மா கொஞ்சம் கோபத்தில் இருக்காங்க. நீங்க வேணா பாருங்க, சீக்கிரம் ரெண்டு பேரும் சேந்துருவாங்க”,  என்றாள் அகிலா.
 
குழப்பத்தில் இருந்தவனுக்கு, அவள் சொன்ன வார்த்தைகள் ஆறுதலை தந்தது. சந்தோசமாக அவளை பார்த்த ராம் அடுத்த நொடி, அவள் கைகளை பற்றி கொண்டான். “மனசுக்கு சந்தோசமா இருக்குங்க. நீங்க சொன்னது மட்டும் பலிச்சதுனா, எனக்கு அதை விட ஒண்ணுமே இல்லை”, என்று கண் கலங்க சொல்லி விட்டு அவளை கடந்து போனான்.
 
முதல் தொடுகையில், சிலிர்ப்புடன்  நின்றாள் அகிலா. “சொன்னதுக்கே சந்தோச படுறான்னா, அப்ப அவங்க ரெண்டு பேரும் சேர்ந்தால் எப்படி சந்தோச படுவான்? இவனோட சந்தோஷத்துக்காக  நானும் ஏதாவது செய்றேன்”, என்று நினைத்து கொண்டே உள்ளே போன அகிலா, நேராக ராதிகா அருகில் சென்று அமர்ந்தாள்.
 
அவளை பார்த்ததும், “காஃபி குடிக்கலையா அகிலா?”, என்று கேட்டாள் ராதிகா .
“இதோ குடிக்கிறேன் அண்ணி”, என்று சொல்லி விட்டு அவள் அருகே அமர்ந்து, “அண்ணி உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்”, என்றாள்.
 
“என்ன அகிலா, இந்த செமஸ்டர் அரியரா? ஆனா ரிசல்ட்  இன்னும் வரலையே?”, என்று சிரித்தாள் ராதிகா.
 
“அதெல்லாம் தேரிருவேன் அண்ணி. இப்ப நம்ம வீட்டுக்கு வந்துருக்காங்கல்ல,  அவங்க யாரு? எதுக்கு வந்துருக்காங்க?”
 
ஒரு நொடி ராதிகாவுக்கு,  இதயம் நின்று துடித்தது. அடுத்த நொடி தன்னை சமாளித்தவள், “முகிலோட மனைவியை தேடி வந்துருக்காங்க”,  என்றாள்.
 
“ஓ”, என்ற அகிலா, “அந்த தொலைஞ்சு போனவ, கிடைக்கவே கூடாது அண்ணி”, என்றாள்.
 
“எதுக்கு அகிலா அப்படி சொல்ற?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் ராதிகா.
 
“எவ்வளவு அழகா இருக்காரு? என்னோட பிரண்ட்ஸ் அவரை பார்த்தா கொத்திட்டு போயிருவாங்க, தெரியுமா?”
 
இருவர் பேச்சையும் கவனித்து கொண்டிருந்த வித்யாவுக்கு  குழப்பமாக இருந்தது.
 
“அகிலாக்கு தான் உண்மை தெரியுமே? இவ எதுக்கு முகில் அத்தான் பத்தி,  அக்கா கிட்ட பேசிட்டு இருக்கா?”, என்று நினைத்து கொண்டே ராதிகவை பார்த்தாள். ராதிகா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
 
“ஓ! கோபத்தை உண்டாக்க தான் அகிலா  இப்படி பேசுறா போல?”, என்று நினைத்து கொண்டு அவர்கள் அருகில் போய், “இந்த அகிலாவை  பாருக்கா. அவங்க வந்ததில் இருந்து, இப்படி தான் புலம்புறா. போற போக்கை பார்த்தா, அவரோட பொண்டாட்டி கிடைக்கவே கூடாதுன்னு, இவ விரதம் இருப்பா போல”, என்று சொல்லி சிரித்தாள்.
 
“ரெண்டு பேரும் வாயை மூடுங்க. கொஞ்சமாவது வயசுக்கு தகுந்த மாதிரி பேசுங்க. இன்னொரு தடவை முகில் பத்தி பேசினா, நான் என்ன செய்வேன்னு தெரியாது”, என்று கத்தி விட்டு எழுந்து போய் விட்டாள் ராதிகா.
 
“அப்பாடி முதல் டெஸ்டில், பாஸ் ஆகிட்டோம் டி வித்யா. அண்ணிக்கு  கோபத்தை பாரேன்?”, என்றாள் அகிலா.
 
“ஆமா வித்யா, அப்படியே பொங்கி எழுந்துட்டா. இதையே கன்டினியூ பண்ணனும்”, என்று சிரித்தாள் வித்யா.
 
“தேங்க்ஸ், எனக்காக நீங்க ரெண்டு பேரும், அவளோட கோபத்துக்கு ஆளாகுறீங்களே மா”, என்ற படி அங்கு வந்தான் முகில். அவனும் ராதிகாவின் கோபத்தை பார்த்து திகைத்தான்.
 
“விடுங்க அண்ணா, அண்ணிக்கு இப்படி சாக் டிரீட்மென்ட் கொடுத்தா தான், சரி வருவாங்க”, என்றாள் அகிலா.
 
“ஆமா மாமா, அவ எப்பவும் இப்படி தான், நீங்க எங்க அக்காவை எப்படி தான், லவ் பண்ணி கல்யாணம் செஞ்சீங்களோ?”, என்று சிரித்தாள் வித்யா.
 
இருவரையும் பார்த்து பாசமாக சிரித்தவன், இருவரையும் தலையை வருடிவிட்டு சென்றான்.
 
“என்ன பேசுகிறார்கள்?”, என்று தெரியாமல், “என்ன நடக்கு?”, என்று பார்த்து கொண்டிருந்த ராதிகா, அவர்கள் சிரித்து பேசுவதையும், அவன் அவர்கள் தலையை வருடுவதையும் பார்த்தவள், அவனை முறைத்து கொண்டே உள்ளே சென்றாள். அவளின் முறைக்கும் பார்வையை கண்டவனுக்கு குதூகலமாக இருந்தது.
 
அடுத்து இரண்டு நாள்களுக்கு பின்னர், எல்லாரையும் கோயிலுக்கு அழைத்தாள் வள்ளி. சரி என்று சொல்லி பெண்கள் மூவரும் சேலை அணிந்தார்கள்.  ஒரு சின்ன ஆரத்தை மட்டும் அணிந்திருந்தாள் ராதிகா , கூடவே அவன் அணிவித்த தாலியும்.
 
அவள் அருகில் வந்த வித்யா, “அக்கா இந்த பாசி அழகா இருக்கு. எனக்கு தாயேன், இன்னைக்கு நான் போடுறேன். நீ இந்த மாலையை போட்டுக்கோ”, என்று அவள் தாலியை காட்டி சொன்னாள்.
 
அவளை முறைத்த  ராதிகா, “இந்த பாசியை  தர மாட்டேன். நீ என்னோட நகை வேற எதையாவது போட்டுக்கோ”, என்று சொல்லி விட்டு இறங்கி போய் விட்டாள் .
 
ஒரு சின்ன சிரிப்புடன், அவளை பின் தொடர்ந்தாள்  வித்யா. கீழே “எப்படி அண்ணா, அண்ணியை சமாளிச்சு கல்யாணம் செஞ்சீங்க?”, என்று சிரித்து  கொண்டே கேட்டு கொண்டிருந்தாள் அகிலா. அதை நினைத்து, அழகாக சிரித்தான் முகில்.
 
இப்போதும் “என்ன பேசுறாங்க?”, என்று தெரியாமல், அவர்கள் சிரித்து  பேசுவது ராதிகாவுக்கு உடம்பெல்லாம் எரிந்தது. உடனே அவன் அணிவித்த பாசியை, எல்லாருடைய கண்ணுக்கும் தெரியும் படி தூக்கி வெளியே போட்டாள் ராதிகா.
 
இவளை கவனிக்காமல், வெளியே சென்றான் முகில். அவன் பார்க்காததில் முகம் சோர்ந்தது ராதிகாவுக்கு.
 
அப்போது வள்ளி, அவளுக்கு தலையில் மல்லிகை பூவை வைத்து விட்டாள்.
 
ராம் உடன் பேசி கொண்டிருந்த முகில், அங்கு வந்து கொண்டிருந்த ராதிகாவை  பார்த்து இமைக்க மறந்தான்.
 
அழகான காட்டன் புடவையில், தலை நிறைய மல்லிகை பூவுடன் கழுத்தில் அவன் அணிவித்த தாலியோடு, அவன் பொண்டாட்டியாக வந்தாள். அப்படியே, அவளை பார்த்து, அவன் நாடி நரம்பு எல்லாம் சிலிர்த்தது.  அதுக்கு மேல் அவன் உணர்வுகளை மறைக்க முடியாமல், கார் உள்ளே சென்று அமர்ந்து விட்டான்.
 
வெளியே வந்தவுடன் அவன் பார்வையை பார்த்த ராதிகாவுக்கு, உள்ளே குதூகலமாய் இருந்தது. “அப்படியே முழுங்குற மாதிரி பாக்குறான் பாரு”, என்று நினைத்து கொண்டிருக்கும் போதே, அவளை கண்டு கொள்ளாது உள்ளே அமர்ந்து விட்டான். அது அவளை வாட்டியது. 

Advertisement