Advertisement

“ஓ இவ தான், உன் மச்சினி போல டா முகில்”
“அப்ப, இது யாரு டா?”
“தெரியலை, வா உள்ள போவோம்”, என்று சொல்லி கொண்டே உள்ளே வந்து அமர்ந்தார்கள் இருவரும்.
இவர்கள் போய் அமர்ந்ததும், வள்ளி ஜூஸ் கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்து விட்டு, “அவர் உங்களை பத்தி சொன்னார். நீங்க வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசம். அதோ, அந்த ரூம்ல தங்கி கோங்க”,  என்று சிரித்த முகத்துடன் சொன்னாள்.
“பாத்தியா டா முகில்?  போன்ல  தெண்டம்னு சொல்லிட்டு, இங்க இந்த அம்மா என்ன சீன போடுது?”
“சரி சரி அமைதியா இரு”, என்று சொன்னான் முகில். இருவரும் உள்ளே சென்றார்கள்.
கதவு வரை சென்ற ராம், திரும்பி ஹாலை பார்த்தான். அந்த பெண், அப்போதும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தது. “என்ன டா இது, வம்பா போச்சு”, என்று நினைத்து கொண்டு உள்ளே போய் விட்டான்.
“ஏய்! அகிலா, என்ன மச மசனு நின்னுட்டு இருக்க? வித்யா நீயும் தான், ரெண்டு பேரும் சேந்து மதியம் ரசம் வச்சிருங்க சரியா?”, என்றாள் வள்ளி.
“அதுக்குள்ளே, அம்மா வேலை சொல்லி முடிக்க மாட்டாங்களே!”, என்று நினைத்து கொண்டு அமைதியாய் நின்றாள் அகிலா, தனசேகரின் மகள்.
“ரசம் மட்டும் தான?”, என்று நினைத்து கொண்டு “சரி அத்தை!”, என்று சொல்லி விட்டு, வித்யா உள்ளே நகர போனாள்.
“இரு வித்யா. அப்புறம்,  பருப்பு வேக வச்சிட்டேன். நீங்க ரெண்டு பேரும் காய் வெட்டி, சாம்பார் வச்சிருங்க”
“சரி அத்தை”
“அப்புறம், வெங்காயம் வெட்டிட்டேன். நீங்க பீன்ஸ் வெட்டி கூட்டு  வச்சிருங்க. அப்புறம், அப்பளம் நான் வந்து பொறிச்சுக்குறேன். வேலை செஞ்சு ரொம்ப அலுப்பா இருக்கு, செத்த நேரம் படுக்கிறேன்”,  என்று சொல்லி விட்டு உள்ளே போய் விட்டாள் வள்ளி.
“எங்க அம்மாவ பாத்தியா வித்யா? வெறும் வெங்காயம் வெட்டி வச்சிட்டு,  எப்படி ரொம்ப வேலை செஞ்ச மாதிரி, பேசிட்டு போறாங்க பாரு”
“சரி சரி வா அகிலா, நம்ம போய் மிச்ச வேலையை முடிப்போம்”, என்று அழைத்தாள் வித்யா. அங்கு போன பிறகு திகைத்தார்கள்.
“மிச்ச வேலை பாப்போம்னு சொன்னேன்ல அகிலா. அது உண்மை  இல்லை,  இனிமே தான் வேலையே ஆரம்பிக்கணும் போல அகிலா, அங்க பாரேன்”, என்று காட்டினாள். வெங்காயம் வெட்ட கூட  இல்லாமல்,  உரிச்சு வைக்க பட்டிருந்தது. அப்போது தான் பருப்பு அடுப்பில் வைக்க பட்டிருந்தது,  தண்ணீர் கூட கொதிக்காமல்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு, வேலையை ஆரம்பித்தார்கள்.
“இப்ப வந்துருக்குற ரென்று பேரில், ஒருத்தன் அழகா இருக்கான்ல டி வித்யா”, என்றாள் அகிலா.
“ரெண்டு பேருமே அழகா தான் இருக்காங்க. நீ யாரை சொல்ற? கொஞ்சம் வளத்தியா  இருக்கானே, அவனையா?”
“அவன் இல்ல டி, அவனை விட கொஞ்சம் உயரம் கம்மியா இருக்கான்ல  அவன்”
“பாரு டா , அம்மணி ஸைட் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க? பாத்து டி, கல்யாணம் முடிஞ்சவனா இருக்க போறான்”, என்று சிரித்து  விட்டு வேலையை ஆரம்பித்தாள் வித்யா.
குளித்து விட்டு அமர்ந்த ராம்க்கு, சற்று முன்பு தன்னை வைத்த விழி எடுக்காமல் பார்த்த, அந்த பெண்ணின் முகம் மட்டுமே நினைவில் வந்தது.
“சும்மா பாத்துருப்பா டா”, என்று மனதுக்குள் நினைத்து கொண்டாலும், ஏதோ உள்ளே குறு குறுப்பாய் இருந்தது. “வேண்டாம் டா ராம், இனி அதை நினைக்க கூடாது”, என்று நினைத்து கொண்டு முகிலை பார்த்து, “நெக்ஸ்ட் என்ன டா செய்ய போற? ராதிகா வந்த உடனே சார் கிட்ட, நம்மளை காட்டி  குதிக்க போறா”, என்றான்.
“விடு டா பாத்துக்கலாம்”, என்று நினைத்து கொண்டு படுக்கையில்  சாய்ந்தான் முகில். அவன் கண்களுக்குள் அருவியில் நீந்தும் நேவா தெரிந்தாள். ஈர உடை உடலை சுற்றி இருக்க, அவனுடைய லேசர்  பார்வையை தாங்க முடியாமல், அப்படியே அவனிடம் அடைக்கலமான  நேவா, அவனுடைய அணைப்பில் மெய் மறந்து நின்ற நேவா அவன் மனதில் வலம் வந்தாள்.
மதிய உணவை முடித்து விட்டு, இருவரும் மற்றொரு தூக்கம் போட்டார்கள்.
ஒரு வழியாக சாயங்காலம் வந்தது. ராதிகா  அவர்களை எதுவும் சொல்லி விட கூடாது, என்பதால் அவளுக்கு முன்னமே வீட்டுக்கு வந்தார் தனசேகரன்.
அதே போல், சாயங்கால காஃபியை, அனைவரும் ஹாலில் அமர்ந்து குடித்து  கொண்டிருந்தார்கள். வள்ளி அவளுடைய அறையில் இருந்தாள். தனசேகரன் முகிலிடம்  பேசி கொண்டிருந்தார்.
ராம், அகிலாவின் காதல் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் முள் மேல் அமர்ந்திருப்பது போல அமர்ந்திருந்தான்.
வித்யா முகிலையும் , தன் மாமாவையும் வித்தியாசமாக, அதே நேரம் ஆராய்ச்சியாக பார்த்தாள்.
“மாமா, இப்படி யாரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வர மாட்டாரே? அதுவும் இவங்களை, இங்க வயசு பொண்ணுங்க, மூணு பேர் இருக்குற வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்கார். அது மட்டும் இல்லாமல், இவ்வளவு குளோசா, அவங்க கிட்ட பேசுறார். இவங்க யாரா இருக்கும்?”, என்று நினைத்து கொண்டே அவர்களை பார்த்து கொண்டிருந்தாள் வித்யா.
அப்போது அழைப்பு மணி சத்தம் கேட்டது, வித்யா தான் போய் கதவை திறந்தாள். அங்கே கார்த்திக் நின்றிருந்தான்.
அவனை பார்த்ததும், அவள் தலை தன்னால் குனிந்தது. சிறு சிரிப்புடன் அவளை பார்த்தவன், பார்க்காதது போலவே உள்ளே போய் விட்டான். “எப்படி போறான் பாரு, லூசு அத்தான்”, என்று நினைத்து கொண்டே கதவை பூட்டி விட்டு உள்ளே வந்தாள் வித்யா.
உள்ளே போன கார்த்திக், தன் அப்பாவின் அருகில் அமர்ந்தான். “இது என்னோட பையன். இங்க ஐ டீ கம்பெனியில் வேலை செய்றான்”,  என்று ராம்க்கும், முகிலுக்கும் அறிமுக படுத்தினார்.
“இவங்க யாரு பா?”, என்றான் கார்த்திக்.
“இவர் பேர் முகில் வேந்தன். இவருடைய மனைவியை காணுமாம். இது ராம், அவருடைய பிரண்ட். நான் தான் இந்த கேஸை எடுத்துருக்கேன். எங்க தங்கனு முழிச்சாங்க. அதான் கூட்டிட்டு வந்தேன்”, என்றார் தனசேகர்ன்.
அப்பாவை ஒரு பார்வை பார்த்து விட்டு, இருவருக்கும் கை கொடுத்து விட்டு உள்ளே சென்றான்.
“என்ன பா, உங்க பையன் ஒண்ணுமே சொல்லாம போறாரு?”, என்று கேட்டான் முகில்.
“கொஞ்ச நேரத்தில், அவனே என்னை தேடி வந்து விசாரிப்பான். அப்ப  பேசிக்கிறேன்”, என்று சிரித்தார் தனா.
அதே நேரம் அகிலாவுக்கு, நெஞ்சில் பாறாங்கல்லை தூக்கி வைத்தது போல இருந்தது. “அவனுக்கே கல்யாணம் ஆகி இருந்தா, அப்ப இவனுக்கும் ஆகியிருக்கும் தானே?”, என்று நினைத்து கொண்டு ராமை முறைத்து விட்டு உள்ளே சென்றாள்.
குழம்பி போன ராம்,”இப்ப எதுக்கு முறைச்சிட்டு போறா?”, என்று நினைத்து கொண்டு முகில் காதருகே  குனிந்து “இந்த பொண்ணு, என்னை முறைச்சிட்டு போகுது டா முகில். ஒண்ணும் புரிய மாட்டிக்கு.  இந்த பொண்ணு எப்ப அவ வீட்டுக்கு போவா?”, என்று கேட்டான்
“அவ ஏன் டா போகணும்? தனா அப்பா சொன்னதை கவனிக்கலையா? இது தான் அவ வீடு”, என்று குண்டை தூக்கி போட்டான் முகில்.
“என்ன டா சொல்ற?”
“ஆமா டா, அவ இவரோட பொண்ணு”, என்று தனாவை காட்டி சொன்னான்.
“என்னது, இந்த மீசைக்காரர் பொண்ணா?”, என்று மனதுக்குள் அலறி விட்டு அதிர்ச்சியாய் முகிலை பார்த்தான்.
“என்ன? அங்க ரெண்டு பேரும் குசு குசுன்னு பேசுறீங்க?”, என்று கேட்டார் தனா.
“இல்லை, ராம்க்கு தண்ணி வேணுமாம்”, என்று சொன்னான் முகில்.
“நான் எப்ப டா தண்ணி கேட்டேன்?”
“நான் அதை சொல்லலைனா, நீ அவரை மீசை காரர்னு சொன்னதை சொல்ல வேண்டியிருக்கும் பரவால்லயா?”
“இல்லை, எனக்கு நிஜமாவே தாகமா தான் டா இருக்கு முகில்”
மறுபடியும் அழைப்பு மணி சத்தம் கேட்டது. “ராதிகாவா தான் இருக்கும் மாமா. அகிலா, இந்த அண்ணனுக்கு தண்ணி கொண்டு வா”, என்று சொல்லி விட்டு கதவை நோக்கி சென்றாள் வித்யா.
வேண்டா வெறுப்பாக, கொண்டு வந்து கொடுத்தாள் அகிலா.
கதவை திறந்ததும் அங்கே ராதிகா தான் நின்றாள். “புக்ஸ் வாங்கிட்டியாக்கா?”, என்று கேட்டு கொண்டே ராதிகாவை விசாரித்து கொண்டு உள்ளே வந்தாள்  வித்யா.
“ம்ம், இந்தா வித்யா”, என்று கொடுத்த ராதிகா சிரித்து  கொண்டே உள்ளே வந்தாள்.  இங்கே தனா, முகில், ராம் மூவரும் அவள் என்ன சொல்லுவாள் என்று, அவள் முகத்தையே பார்த்தார்கள்.
அவர்களை பார்த்த ராதிகா, அதிர்ச்சியில் ஒரு நிமிடம் சிலையாய் நின்றாள், அடுத்த நிமிடம் சாதாரணமாக காட்டி கொண்டு,  “யார் மாமா இவங்க?”, என்று விசாரித்தாள்.
“என்ன மா, அதுக்குள்ள மறந்துட்டியா? நேத்து இவங்க உன்கிட்ட கம்பளைண்ட் கொடுத்தாங்களாமே? நான் பைலில் தேடி பாத்தேன், கம்பளைண்ட் ஃபைல் பண்ண மறந்துட்டியா? அதை காணுமே”, என்று கேட்டு கொண்டே அவளை கூர்மையாக பார்த்தார்.
அவர் பார்வையை தாங்க முடியாமல் “இல்லை, அது அது வந்து”,  என்று விழித்தாள் ராதிகா.
அவள் விழிப்பதை, சிறு சிரிப்புடன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் முகில்.
“சரி விடு மா, இன்னொரு தடவை எழுதி கொடுக்க சொல்றேன். அப்புறம், இவங்க இனி இங்க தான் இருப்பாங்க”
“எதுக்கு…. இங்க இருப்பாங்க மாமா?”, என்று குரலே வெளியே வராத குரலில் விசாரித்தாள் ராதிகா.
“இந்த கேஸை, நான் பெர்சனலா விசாரிக்க போறேன் மா, அதான்”
“எதுக்கு அப்படி விசாரிக்க போறீங்க மாமா?”
“அந்த பொண்ணோட பையில், என்னோட விசிட்டிங் கார்ட் இருந்துருக்கு மா. இங்க பாரு நீயே அதை”, என்று அவளிடம் கொடுத்தார்.
கைகளில் ஒரு நடுக்கத்துடன், அதை வாங்கி பார்த்தவள் திகைத்தாள். பின் அதை அவர் கையில் கொடுத்து விட்டு, அறைக்குள் வந்து கட்டிலில் விழுந்தாள்.
“பாருங்க முகில், எப்படி உண்மையை மறைச்சிட்டு போறா பாரு? கூடிய சீக்கிரம் ஒத்துக்குவா. சரி ராம், நீங்க எப்ப கல்யாணம் பண்ணிக்க போறீங்க?”, என்று ராமிடம் கேட்டார் தனா.
இப்போது தான் போன உயிர் திரும்ப வந்தது, அகிலாவுக்கு.
“எங்க அம்மான்னா எனக்கு ரொம்ப பிரியம் சார். அவங்களை பாத்துக்க ஒரு பொண்ணு கிடைச்சா, உடனே செஞ்சுப்பேன்”, என்றான் ராம்.  அப்போது, அகிலா முகம் தன்னால் ஒளிர்ந்தது. அவளை வித்தியாசமாக பார்த்தான் ராம்.
அடுத்து அவர்கள் சும்மா பேசி கொண்டிருந்தார்கள். இரவு உணவை வித்யாவை, அறைக்கே எடுத்து வர சொல்லி சாப்பிட்டாள் ராதிகா.  தூங்கும் முன், ஒரு முடிவுடன்  தன் மாமாவின் அறை கதவை தட்டினாள் ராதிகா.
கதவை திறந்த வள்ளி “என்ன மா உள்ள வா?”, என்றாள்.
“மாமா தூங்கிட்டாங்களா அத்தை?”
“இல்லை, நீ வா. அவர் எப்ப ஒன்பது மணிக்கே தூங்கினார்?”, என்று சொல்லி அவள் கையை பிடித்து இழுத்து போனாள் .
ஒரு வித நடுக்கத்துடன், உள்ளே போனாள் ராதிகா. அவளை எதிர்பார்த்தவர் போன்று சிரிப்புடன், அவளை பார்த்தார் தனா.
குழப்பத்துடன் இருவரையும் பார்த்தாள் வள்ளி. “சரி எதுவோ தனியா பேச நினைக்கிறாங்க போல?”, என்று நினைத்து கொண்டு, “நீங்க பேசுங்க, நான் பால் எடுத்துட்டு வறேன்”, என்று சொல்லி விட்டு நகர போனாள் வள்ளி. அவள் கையை பிடித்த ராதிகா, “நீங்களும் இருங்க அத்தை”, என்று சொல்லி அமர வைத்தாள்.
“என் மேல கோபமா மாமா?”
“கொஞ்சம் கோபம் இல்லை. நிறைய கோபமே இருக்கு மா”
“என்னங்க, அவளே பயந்து போய் கேக்குறா. நீங்க, ஆமான்னு சொல்றீங்க, நீ வா ராதிகா”, என்று சொல்லி பக்கத்தில் அமர வைத்து கொண்டாள்.
தன் அத்தையின் தோளில் தலை சாய்த்த ராதிகா, “ரெண்டு பேரும் என்னை மன்னிச்சிருங்க”, என்று ஆரம்பித்து  அங்கு நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.
எல்லாம் தெரிந்த தனா, அமைதியாக இருந்தார். எதுவும் தெரியாத வள்ளி, திகைத்து போய் அமர்ந்திருந்தாள்.
“எனக்கு, அப்ப அவரை ரொம்ப பிடிச்சிருந்தது மாமா. அதனால் தான், அப்படி செஞ்சிட்டேன். ரெண்டு பேரும் என்னை மன்னிப்பீங்களா?”
“எல்லாம் சரி மா. உன்னோட காதல், உன்னோட கல்யாணம் எல்லாமே எங்களுக்கு சந்தோசம் தான். முகில் ரொம்ப நல்ல பையன். ஆனா, அவங்க வீட்டில் உன்னை அப்படி நோகடிச்சு,  அனுப்பி இருக்காங்க. அப்படி பட்ட மன நிலையில் வந்த நீ, எங்க கிட்ட சொல்லி அழுதுருக்க வேண்டாமா? உங்க அம்மா, அப்பா உயிரோட இருந்துருந்தா, அவங்க கிட்ட சொல்லிருப்ப தான?”, என்று கேட்டார் தனா.
“அப்படி சொல்லாதீங்க மாமா. இப்போதைக்கு எங்களுக்கு அம்மா, அப்பா நீங்க தான். அவங்க உயிரோட இருந்திருந்தாலும், நான் அவங்க கிட்டயும் சொல்லிருக்க மாட்டேன். உலகத்தில்  ரொம்ப கொடுமையான் விசயம், நம்ம உயிரையே வைத்திருக்கும் ஒருத்தர் நம்மளை யார்னு கேக்குறது தான். அந்த வலி பெருசு மாமா. அதை சொல்லி நீங்களும், அத்தையும் என்னோட வாழ்க்கையை பத்தி  கவலை பட கூடாதுன்னு  நினைச்சு தான் சொல்லலை”
“சரி மா ராதிகா. போனதெல்லாம் போகட்டும். நானும், மாமாவும் அவங்க வீட்டில் போய் பேசுறோம். அவங்க வீட்டில் புதுசா பேசுற மாதிரி பேசி, கல்யாணம் செய்யலாம். எனக்கும், அந்த தம்பியை ரொம்ப பிடிச்சிருக்கு”, என்றாள் வள்ளி.
“இல்லை அத்தை. என்னோட வாழ்க்கையில் அவருக்கான இடம் முடிஞ்சிருச்சு. இப்ப போய் பேசினா, அவங்க ஏத்துப்பாங்க தான். ஆனா, அது எனக்காக இருக்காது. இப்ப  நம்மளோட  ஸ்டேட்டஸ்  பாத்து தான் இருக்கும். பிச்சைக்காரின்னு சொன்னவங்க வீட்டில், எனக்கு வாழ விருப்பம் இல்லை விட்டுருங்க”
“சரி மா, விட்டுறலாம். ஆனா, அவன் உன்னை விட்டு போகணும்னா, நீ வேற பையனை கல்யாணம் செய்ய சம்மதிக்கணும்”, என்று அவள் தலையில் கல்லை தூக்கி போட்டார்.
நினைவுகள் தொடரும்…..

Advertisement