Advertisement

அத்தியாயம் 7
நந்தவனத்தின் மலர்களே
பனித்துளியை சுமந்து நிற்பது
கூட உன் முகத்தின் பருக்களை
நினைவு படுத்துகிறது!!!
“அவங்க மேலயும் தப்பு இல்ல சார். என்னோட உடல் நிலை நினைத்து தான் அமைதியா இருந்தாங்க”, என்றான் முகில்.
“என்னோட கார்ட் எப்படி உங்க மனைவி கிட்ட வந்துருக்கும்? அதுவும் கேரளால இருந்த பொண்ணு கிட்ட? ரொம்ப குழப்பமா இருக்கே? அந்த கார்ட் கொண்டு வந்தீங்களா?”
“இதோ இருக்கு சார்”, என்று சிரித்து கொண்டே கொடுத்தான் முகில்.  அவன் சிரிப்பையும், அந்த கார்டையும் புரியாமல் பார்த்தார் தனசேகரன்.
“என்ன இவன் சிரிச்சிகிட்டே, இதை கொடுக்கிறான்?”, என்று பார்த்து கொண்டே அதை வாங்கியவர் திகைத்தார்.
ஏனெனில், அந்த கார்டுக்கு பின்னால் ‘தனசேகரன்’ என்ற பெயர் லேசாக அடிக்க பட்டு, அதில் ‘மீசை மாமா’ என்று எழுதி இருந்தது.
அவரையே பார்த்து கொண்டிருந்தார்கள் இருவரும். முகில் சிரிப்போடும், ராம் கலவரத்துடனும்.
அதையே பார்த்து கொண்டிருந்தவருக்கு, எல்லாமே ஒரு நொடியில் விளங்கியது.
“நீங்க, நேத்து ராதிகா கிட்ட கம்பளைண்ட் எழுதி கொடுத்தீங்களா முகில்?”
“ஆமா சார், நேத்து எழுதி அவங்க கிட்ட தான் கொடுத்தேன்.  எல்லா டீடைல்ஸ்சும் சொல்லி, அவங்க கிட்ட எழுதி கொடுத்தேன். இந்த கேஸை அவங்களே கேண்டில் செஞ்சா, நல்லா இருக்கும். அவங்க தான், சுலபமா என்னோட மனைவியை கண்டு பிடிக்க முடியும்”, என்றான் முகில்.
“ஓ!”, என்றவர், அங்கு இருந்த கம்பளைண்ட் புக் எடுத்து பார்த்தார். அதில் அவன் எழுதியது, எதுவும் இல்லை.
“இனி என்னை சார்னு கூப்பிட கூடாது”, என்று முகிலை சொந்த பார்வை பார்த்து கொண்டே சொன்னார் தனசேகரன். அவர் குரலில் சிரிப்பு இருந்தது.
அவர் சிரிப்பையும், முகில் சிரிப்பையும் பார்த்த ராம் “என்னங்கடா நடக்குது இங்க?”, என்று முழித்து கொண்டிருந்தான்.
“ஹா ஹா, திருடியே திருடியை கண்டு பிடிக்க போறாளா?”, என்று சொல்லி கொண்டே சிரித்தார் தனா.
“நான் கணக்கு கிளாஸ்ல கூட இவ்வளவு புரியாம உக்காந்துருந்தது இல்ல யா? என்னை இப்படி புரியாத பாஷை பேசி கொடுமை படுத்துறாங்களே? எதுவும் கேக்க முடியாம, அடிக்கடி முறைச்சு முறைச்சு பாக்குறார். ஒரு வேளை போன ஜென்மத்தில், இவர் எனக்கு முறை பொண்ணா பொறந்திருப்பாரோ? மீசையை பாரு? டேப் வச்சு தான் அளக்கணும் போல? தயவு செஞ்சு, இந்த முகில் லூசு பய கிட்ட இருந்தும், இந்த மீசை காரர் கிட்ட இருந்தும் காப்பாத்திரு முருகா”, என்று வேண்டி கொண்டான் முகில்.
வள்ளியுடன் காதல் செய்து கொண்டிருக்கும் முருகர், இவன் சொன்னதை “அவங்க கூட இருக்கணும்னு நினைக்கிறான்”, என்று மாற்றி புரிந்து கொண்டு, “உன் காலம் முழுவதும், இவர்களுடன் இருப்பாய்”, என்று சொல்லி விட்டு காதலை கண்டின்யு செய்தார்.
விதி மாறியது தெரியாமல், தலையில் கை வைத்து அமர்ந்தான் ராம்.
“நேத்து உங்களை பாத்ததும், என்ன சொன்னா முகில்?”, சிரித்து கொண்டே கேட்டார் தனா.
“நீங்க இவ்வளவு ஜீனியஸா இருப்பீங்கனு நினைக்கவே இல்லை சார். அவ எங்களை, கண்டுக்கவே இல்லை”, என்று சோகமாக சொன்னான் முகில்.
“என்னை சார்னு கூப்பிட வேண்டாம்னு சொன்னேன்ல? அப்பா, இல்லை பெரியப்பா அப்படினு கூப்பிடுங்க முகில்”
“அப்ப நீங்களும் வா, போன்னே பேசுங்க அப்பா”, என்றான் முகில்.
“எங்க வீட்டு மாப்பிளையை, எப்படி மரியாதை இல்லாமல் கூப்பிட?”, என்று சிரித்தார் அவர்.
அதிர்ச்சியில் வாயை பிளந்தான் ராம். “அட பாவிகளா? இது எப்படி தெரிஞ்சது இவருக்கு,  இவர் மாப்பிளைனு சொல்றாரு. அவனும் அப்பான்னு சொந்தம் கொண்டாடுறான். இப்ப தான, இவங்க ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சாங்க. அதுக்குள்ள எப்படி அவர் புரிஞ்சிக்கிட்டாரு? அந்த கார்டில் எதாவது எழுதி கொடுத்துருப்பானோ? இல்லையே, அதும் வெள்ளையா தான இருக்கு. என்ன நடந்ததுன்னு தெரியலையே”, என்று  முழி பிதுங்கினான் ராம்.
“ஆனா, நீங்க அவ மனசை ரொம்ப நோகடிச்சிருக்கீங்கன்னு தெரியுது முகில். அதனால, அவ ஒத்துக்க மாட்டா. நான் வேணா, அவ கிட்ட பேசவா?”, என்று கேட்டார் தனா.
“வேண்டாம் பா, அவ உங்களுக்கு தெரியாம கல்யாணம் செஞ்சிருக்கா. இப்ப இது உங்களுக்கு தெரிஞ்சதுன்னு தெரிஞ்சா, அவ உங்க கிட்ட மறைச்சதுக்கு ரொம்ப பீல் பண்ணுவா. நானே அவ கிட்ட பேசிக்கிறேன். ஆனா, எனக்கு அவளை பத்தி விஷயம் தெரியனுமே. இவ்வளவு நல்ல வேலையில் இருந்துட்டு, பணக்காரங்களா இருந்துட்டு, எதுக்கு அவ அந்த மலைஜாதி பொண்ணா மாறனும்? எதனால, அவ அங்க போனா? எப்ப இங்க திரும்பி வந்தா? அவளை பத்தி எனக்கு சொல்றீங்களா?”
“அவ போனது, அவளோட அம்மா அப்பாக்காக முகில்”
“அம்மா அப்பாவா? அவங்க எங்க இருக்காங்க?”
“அவங்க, இப்ப உயிரோட இல்லை முகில். அவங்க சாவுக்கு காரணமானவனை கண்டு பிடிக்க தான், அவ ரெண்டு வருசமா அங்க இருந்தா”
“கொஞ்சம் விவரமா சொல்றீங்களா அப்பா?”
“சொல்றேன் பா. ராதிகாவோட அப்பா அம்மா ஸ்கூல் டீச்சர். அவங்க ரெண்டு பேரும், தன்னோட பொண்ணுங்க  மேல உயிரையே வச்சிருந்தாங்க. ராதிகாக்கு, ஒரு தங்கை இருக்கா. வித்யா அவளோட பேர். அவளோட அம்மா சாவித்ரி, என்னோட கூட பிறந்த தங்கை தான். அவளோட அப்பா பேர் விசுவநாதன். எனக்கு நல்ல நண்பனும் கூட. நல்ல சந்தோசமா வாழ்ந்துட்டு இருந்தவங்களுக்கு, மூணு வருஷம் முன்னாடி அந்த விபத்து நடந்தது. அதில் இருந்து அவங்க குடும்பம் சிதைஞ்சிட்டு.
மூணு வருஷம் முன்னாடி, ஹைதெராபாத்ல ஒரு ட்ரைன் குண்டு வெடிச்சு சிதறினதுனு பேப்பர்ல படிச்சிருப்பீங்க. அந்த ட்ரைன்ல தான்  எங்க சாவித்திரியும், விசுவும் ஒரு கல்யாணத்துக்கு போனாங்க.
அவங்க ரெண்டு பேரோட இழப்பு, எங்களுக்கு அதிகமான வலியை கொடுத்தது. அப்ப தான், ராதிகாக்கு கமிஷ்னரா புரோமோஷன் கிடைச்சது. அவளோட வேலை திறன் அப்படி.
நிறைய கேஸ் கண்டு பிடிச்சிருக்கா. அப்ப தான், ஹைதெராபாத்ல இருந்து எனக்கு போன் வந்தது, அந்த ட்ரைன்ல குண்டு வச்சவன் மும்பைல இருக்குறதா. உடனே அவனை பிடிக்க முயற்சி செஞ்சோம். ஆனா, அவன் இங்க இருந்து, கேரளாக்கு தப்பிச்சி போய்ட்டான். ராதிகாவும், இப்ப புரோமோஷன் வேண்டாம். என் அம்மா அப்பா சாவுக்கு காரணமானவனை பிடிச்சிட்டு, அந்த பதவியில் அமருவேன்னு சொல்லிட்டு அவ தங்கச்சியை எங்க வீட்டில் விட்டுட்டு போய்ட்டா.
அப்புறம், அந்த காட்டில் தான் அவ தங்கி இருந்தா. அவங்களோடவே இருந்தா போல. அப்ப தான் உங்க கல்யாணம் நடந்துருக்கணும். அங்க இருந்த ரெண்டு வருசமும், அவனை பற்றிய நிறைய விஷயங்கள் சேகரிச்சு வச்சிருந்தா.
அப்புறம், ஒரு நாள் நைட், எனக்கு போன் செஞ்சு ஸ்டேஷன்ல இருக்கேன்னு சொன்னா. நானும் போய் பார்த்தேன். ஆனா, மலை வாசி மாதிரியே வந்துருந்தா”
என்ன மா இப்படியே வந்துட்டேன்னு, கேட்டேன் சிரிச்சிட்டே ஒன்னும் சொல்லலை. அப்புறம், வீட்டுக்கு போய், டிரஸ் எல்லாம் மாத்திட்டு, உடனே கிளம்பி போகனும். நீங்க போலீஸோட அங்க போய் அவனை அர்ரெஸ்ட் பண்ணுங்க. எனக்கு வேலை இருக்குனு சொல்லிட்டு போனா.
அப்புறம் தான், அவனை கைது பண்ணுனோம். அவளும், ரெண்டு நாளில் இங்க வந்துட்டா. ஆனா பாரேன், உன்னை பத்தியும், கல்யாணம் முடிஞ்சதையும் சொல்லவே இல்லை”,  என்று முடித்தார்.
“அப்பா, அவள் வயிற்றில் கட்டி இருக்காம். அது உங்களுக்கு தெரியுமா?”
“ஹ்ம்ம் தெரியும் முகில், அது அவ வந்து அடுத்த வாரமே சொன்னா. உடனே, அதை ஆபரேஷன் செஞ்சி எடுத்தாச்சு. அப்புறம் பிரச்சனை இல்லை. ஆனா, இப்ப அவ உன்னை எப்படி ஏத்துக்குவானு தான் பிரச்சனை”
“அதை விடுங்க, நான் பாத்துக்குறேன். அவ என்னோட பொண்டாட்டி, அவளை என்னால சமாளிக்க முடியாதா? ஆமா, இன்னைக்கு எதுக்கு அவ ஆபிஸ் வரலை”
“நான் அவ கிட்ட கேட்டேன். நான் வரலை, ரெஸ்ட் எடுக்க போறேன்னு, சொன்னா. உடம்பு சரி இல்லையான்னு கேட்டேன். இல்லைனு சொன்னா. ஆனா, இப்ப தான் காரணம் தெரியுது. உங்களை பார்க்க முடியாம தான் வீட்ல ஒளிஞ்சு இருக்கா போல?”
“சரி, நாங்க அப்ப ஹோட்டலுக்கு கிளம்புறோம்”, என்று எழுந்தான் முகில். கூடவே, ராம் எழுந்தான்.
“என்னது, எங்க வீட்டு மாப்பிளை ஹோட்டலில் தங்க போறீங்களா? ஒழுங்கா வீட்டுக்கு போங்க, சொல்லிட்டேன்”
“நான் எப்படி அங்க வர முடியும் பா? வீணா, அவளுக்கு சந்தேகம் வருமே!”
“அதெல்லாம் வராது. நான் பாத்துக்குறேன்”, என்றவர் போன் எடுத்து நித்யாவை அழைத்தார்.
“சொல்லுங்க மாமா”
“ராதிகா என்ன செய்றா மா? “
“அவ ரூம்ல, எதுவோ பேப்பர் எடுத்து பார்த்துட்டு படுத்துருந்தா. சாப்பிட கூப்பிட்டேன். வேண்டாம்னு சொல்லிட்டு, நான் வெளிய போறேன்னு, கிளம்பி போனா. அப்புறம், நானும் சில புக்ஸ் வாங்க சொல்லி அனுப்புனேன் மாமா”
“சரி மா. உங்க அத்தை என்ன செய்றா?”
“அத்தை, இப்ப தான் சாப்பிட்டு அவங்க ரூம்க்கு போனாங்க”
“சரி மா வைக்கிறேன்”, என்று சொல்லி வைத்து விட்டு முகிலை பார்த்தார்.
“உங்க பொண்டாட்டி, நீங்க நேத்து எழுதி கொடுத்த கம்பளைண்ட் பேப்பர் வச்சு, கனவு கண்டுட்டு  இருந்தாங்களாம். இப்ப தான் வெளிய கிளம்பினாளாம். நீங்க  வீட்டுக்கு  போங்க. நான் என்  மனைவி கிட்ட சொல்லிறேன். அப்புறம், என்  மனைவி  கொஞ்சம் ஒரு மாதிரி. அதனால, கொஞ்சம் கவனமா இருங்க”
“ஒரு மாதிரினா லூசா சார்?”, என்று கேட்டான் ராம்.
அவனை ஒரு முறை முறைத்த தனா, “லூசா இருந்தா தான், பரவால்லயே பா. இப்ப பாரு”, என்று சொல்லி, அவருடைய மனைவி  வள்ளியை போனில் அழைத்தார். அடுத்து அவர்களுக்கு கேட்குமாறு ஸ்பீக்கரில் போட்டார்.
“வீட்டில இருந்து தான், உங்க கொடுமை தாங்க முடியலைனு வேலைக்கு பத்தி விட்டா, அங்க இருந்துட்டு நொச்சு நொச்சுனு போன் பண்ணிக்கிட்டு. சொல்லுங்க என்ன விசயம்?”, என்று கேட்டாள் வள்ளி.
“இல்லை வள்ளி, நம்ம வீட்டுக்கு, ரெண்டு கெஸ்ட் வருவாங்க. அவங்களை ஒழுங்கா கவனிச்சிக்கோ என்ன?”
“நீங்களே தெண்டம். இதுல கண்டவங்களுக்கு எல்லாம், வடிச்சு கொட்ட முடியாது சொல்லிட்டேன்”
“அவங்க, ரொம்ப முக்கியமானவங்க வள்ளி”
“சரி சரி அழாதீங்க. ஆனா, ஒரு கண்டீசன்”
“என்ன மா?”
“வாரம் வாரம், நீங்க தான ஞாயிறு அன்னைக்கு சமைப்பீங்க? இனி சனிக்கிழமையும் நீங்களே சமைச்சிருங்க என்ன?”
“அட பாவி வள்ளி, ஒரு நாளே மாட்டிகிட்டு முழிக்கிறேன். இதுல இன்னொரு நாளுமா? தங்காது மா”
“இந்த வள்ளி சொன்னா, சொன்னது தான். நீங்க இந்த கண்டிஷனுக்கு சரின்னு சொன்னா, அந்த தெண்டங்களை  வீட்டுக்கு அனுப்பி வைங்க. அப்புறம், ரெண்டு பேருக்கும்  ஒரு ரூம் தான் கொடுப்பேன்”
“ஏன், இன்னொரு கெஸ்ட் ரூம் என்ன ஆச்சு?”
“அது என்னோட மேக்கப் ரூமா, மாத்தி வச்சிருக்கேன். எல்லா  ஐட்டமும் அங்க தான் இருக்கு”
“அட பாவி, ஒரு ரூம் முழுவதும் மேக்கப் சாமான் வச்சிருக்கியா? இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்லை?”
“என்ன ரொம்ப கேள்வி கேக்குறீங்க? ஒரு டி. ஐ. ஜி பொண்டாட்டி இது கூட செலவு பண்ணலைன்னா  எப்படி? வரும் போது, ஸ்ட்ராபெரி புரூட் வாங்கிட்டு வாங்க. அதை வச்சு பேசியல் செய்யணும்.  சரி சரி வீணா பேசிட்டு இருக்காதீங்க. பைசா தான் போகும் வைங்க”, என்று சொல்லி விட்டு அவருடைய பதிலை கூட எதிர் பார்க்காமல் வைத்தே விட்டாள்.
பாவமாய் இருவரையும் பார்த்தார் தனா. “பாத்தியா பா முகில்? என்னோட நிலைமையை. இங்க என்னை பாக்குற, ஒவ்வொருத்தனும் நடுங்குறாங்க. ஆனா, இவ என்னை வச்சு காமெடி பண்றா”
“விடுங்கப்பா. எல்லார்  வீட்டிலேயும்  இதே நிலைமை தான். கவலை படாதீங்க. இங்க இருக்குற வரைக்கும் உங்க கூட நாங்களும் சேந்து, சமையலுக்கு ஹெல்ப் பண்றோம்”, என்றான் முகில்.
“நீங்க வீட்டில எலி, வெளிய புலியா சார்?”, என்று  கேட்டான் ராம்.
ஒரு வழியாக இருவரும் கிளம்பி, அவருடைய வீட்டுக்கு சென்றார்கள்.
அங்கு வீட்டுக்கு சென்றதும், கதவை தட்டினார்கள். ஒரு இளம் பெண் கதவை திறந்தாள். “ஓ, இவ தான் வித்யா போல?”, என்று நினைத்து கொண்டு “ஹாய்”, என்று சொன்னான் முகில்.
“ஹாய்”, என்று முகிலிடம் சொன்னவள், ராமை இமைக்காமல் பார்த்தாள்.
“என்ன டா முகில்? உன்னோட மச்சினி , என்னை இந்த பார்வை பாக்குறா?”, என்று கேட்டான் ராம்.
“எனக்கும் புரியலை ராம்.  அதுவும் உன்னை முழுங்குற மாதிரி பாக்குறா?  இது சரி இல்லையே”
இவர்கள் இங்கு குசு குசு  என்று பேசி கொண்டிருக்கும் போதே, உள்ளே இருந்து மற்றொரு இளம்பெண் வந்தாள். “உள்ள வாங்க, என்ன அங்கயே நின்னுட்டிங்க? அத்தை சொன்னாங்க”, என்று இருவரையும்  அழைத்தாள்.

Advertisement