Advertisement

“என்னமோ, மாடு புல்லை அசை போட போற மாதிரியே சொல்றியே டா? மனசுக்கு எதுவும் கஷ்டமா இருக்கா முகில்?”
 
“எதுவுமே சீக்கிரம், ஈஸியா நமக்கு கிடைச்சா அதோட மதிப்பு தெரியாது ராம். இனி தான் அவளோட காதலை அனுபவித்து அவளிடம் இருந்து வாங்க போறேன்”
 
“கடன் கேக்குற கடன் காரன் மாதிரியே பேசுறியே டா. ஏன் டா முகில், ஒரு வேளை அந்த சார் நமக்கு ஹெல்ப் பண்ணலைன்னா என்ன செய்ய?”
 
“என்ன செய்ய? அவர் காலில விழுந்துற வேண்டியது தான்”, என்ற படியே படுத்து விட்டான் முகில்.
 
நினைவுகளை அசை போட்டு கொண்டே படுத்திருந்தான் முகில். அவனுடைய சாதாரண தொடுகையில் சொக்கி போகும் நேவா,  அவன் கண்களில் வந்தாள்.
 
“அப்படி நளினமான நேவா, இப்ப கம்பீரமாய் ஒரு ராணி மாதிரி இருக்கிறா. என்னோட ஒற்றை பார்வைக்காக தவம் இருந்த நேவா, இன்னைக்கு என்னோட கண்ணை பார்த்து நேருக்கு நேர் சலனமே இல்லாமல் பேசுறா. அவ மனசில் இருந்த, அந்த நளின காதல் எனக்கு வேணும். ஊருக்கெல்லாம் கம்பீரமாய் இருக்கும் ராதிகா, எனக்கு என் நேவாவா வேணும். கிடைப்பாளா? எழுதி கொடுத்த கவிதைக்கு என்ன பதில் இருக்குமோ தெரியலையே!” என்று சிரித்து கொண்டே கண்களை மூடி நிம்மதியாக உறங்க ஆரம்பித்தான் முகில்.
 
தலையில் போர்வையை மூடி, முக்காடிட்டு அமர்ந்து கொண்டு அவனையே பார்த்து கொண்டிருந்தான் ராம்.
 
“தன்னால புலம்புறான், தன்னால சிரிக்கிறான், கண்ணை மூடுறான், தூங்குறானு பாத்தா திடிர்னு முழிச்சி சிரிக்கிறான். காதல் வந்தால், நட்டு கழண்டுரூமோ? நல்லதா போச்சு பா, என் வாழ்க்கையில் எந்த காதலும் வரலை”, என்று சந்தோசமாக படுத்தான் ராம்.
 
கண் முன் இருந்த பேப்பரில், படுத்து கொண்டே பார்வையை ஓட்டினாள் நேவா.
 
நினைவுகள் மறந்த வேளையில்
உன் நேசத்தை மறந்து
உன் உருவம் மறந்து
உன் காதலையும் மறந்தேன்!!!
 
உடலும் உயிரும் தந்து
பிழைக்க வைத்தது நீ
மறுபடி பிறந்திருக்கிறேன் வாழ அல்ல
காதலிக்க. உன் காதலை சுவாசிக்க!!!
 
காதல் யாசகம் கேட்டு
மீண்டு வந்திருக்கிறேன்
காதல் அமுதம்  கொடுத்து
உயிர் கொடு என்னவளே!!!
 
எப்போதும் உன் நினைவில் முகில்!!!
அவள் உதடுகளில் அழகான புன்னகை,கூடவே சிறு வலி. நிம்மதியாக கண் மூடி தூங்க ஆரம்பித்தாள் ராதிகா.
 
காலையில் எப்ப டா ஒன்பது மணி ஆகும்? என்று காத்து கொண்டு அமர்ந்திருந்தான் முகில். அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, மறுபடியும் போர்வையை மூடி உறங்கினான் ராம்.
 
அடுத்த நொடி, அவன் மேல் தலையணை வந்து விழுந்தது. திடுக்கிட்டு போர்வையை விலக்கி பார்த்து “என்ன முகில்?”, என்று கேட்டான் ராம்.
 
“என்ன, என்ன முகில்? எந்திச்சு கிளம்பாம, மறுபடியும் இழுத்து மூடி படுக்குற. போக வேண்டாமா? எந்திரி டா”
 
“உனக்கே, இது நியாயமா டா? மணி ஆறு தான் ஆகுது. பத்து மணிக்கு பாக்க போறவங்களை, ஒன்பது மணிக்கு போகணும்னு சொன்ன. சரி ஒன்பது மணிக்கே ஆபிஸை கூட்டும் ஆயா வந்துருவா. அதனால, சரி கிளம்புறேன்னு சொன்னேன். ஆனா, பத்து நிமிசத்துல போக போற இடத்துக்கு, எதுக்கு டா மூணு மணி நேரத்துக்கு முன்னாடியே எழுப்புற?”
 
“ஓ, ரொம்ப நேரம் இருக்கா? சாரி டா”, என்ற முகில் “அப்படி எல்லாம் சொல்லுவனு நினைக்காத ஒழுங்கா போய் கிளம்பு. நாம எட்டு மணிக்கே, அங்க இருக்கணும். நிறைய விசாரிக்க வேண்டி இருக்கு”, என்றான்.
 
“போலீஸ் தான் டா, திருடனை விசாரிக்கும்? நீ போலீசை விசாரிக்க போறியா? அதெல்லாம் விட, எட்டு மணிக்கே போய் நின்னா, ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துற மாதிரி இருக்கும் டா”
 
“ஒரு நாள், என் பொண்டாட்டிகிட்ட சொல்லி, உன்னை என்கவுன்டர்ல போட சொல்றேன் பாரு!”
 
“சொல்லுவ டா சொல்லுவ. ஏன் சொல்ல மாட்ட? லவ்வை பண்ணி தொலைச்சு, கல்யாணத்தையும் முடிச்சு, காலா காலத்துல பிள்ளைகளை  பெத்து, அது கூட விளையாடுறதை விட்டு என்னை போட்டு தள்ளி விளையாட போறானாம். நல்லா வருவீங்கடா”, என்று சொல்லி கொண்டே எழுந்தான் ராம்.
 
“எங்க டா ராம் போற?”
 
“எங்க போக சொல்ற? குளிக்க தான் போறேன். இனியும் நீ என்னை தூங்க விடுவ? இவங்க போதைக்கு நம்மளை சைட் டிஸ்சா ஆக்குறாங்க. அந்த அம்மா, அங்க என்ன ஆப்பு நமக்கு வைக்க போறாளோ? இதுக்கு தான், லவ் பண்றவங்களை கண்டாலே தெறிச்சு ஓடுறாங்களோ? கல்யாணம் முடிஞ்சிட்டேன்னு, நம்பி இவன் பின்னாடி வந்தேன். பாத்தா இவன் முதலில இருந்து லவ் கதையை தொடங்குறானே. இப்ப தான், ஹீரோயின் என்ட்ரி, இன்னும் என்ன அவஸ்தை எல்லாம் நான் அனுபவிக்கணுமோ?”, என்ற படியே குளிக்க சென்றான்.
 
குளித்து முடித்து வெளியே வந்த ராம், இமைக்க மறந்து முகிலை பார்த்தான். நன்றாக உடை அணிந்து, முகம் முழுவதும் சிரிப்புடன் கண்ணாடி முன்பு நின்று, விசில் அடித்து கொண்டே தலை சீவி கொண்டிருந்தான்.
 
“நேத்து அழுது வடிஞ்சி கிளம்புனது என்ன? இன்னைக்கு,  மாடல் மாதிரி கிளம்புறது என்ன?”, என்று சொல்லி கொண்டே சிரித்தான் ராம். ஆனால், மனதில் “இவன் இப்படியே சந்தோசமா இருக்கணும். அப்படியே, காலேஜ்ல பாத்த முகிலை கண் முன் பார்ப்பது போல இருக்கு”, என்று நினைத்து கொண்டே கிளம்பினான்.
 
ஒரு வழியாக நேரத்தை தேச்சு தேச்சு, எட்டு அரை மணிக்கு  போய், ஐ. ஜி ஆபிஸ் முன்பு நின்றார்கள் இருவரும்.
 
செக்யூரிட்டி அவர்களை ஒரு மார்கமாக பார்த்தான். கேட்கவும் செய்தான். “என்ன சார் இவ்வளவு சீக்கிரம் வந்துடீங்க?”
 
“கமிஷனரை பாக்கணும்”, என்றான் முகில்.
 
“அவங்க, பத்து மணிக்கு தான வருவாங்க”
 
“டி. ஐ. ஜி யும் பாக்கணும்”
 
“அவங்க ரெண்டு பேரும், ஒரே காரில் ஒண்ணா தான வருவாங்க?”, என்று வெள்ளந்தியாக சொன்னார் செக்யூரிட்டி.
 
“எதுக்கு ஒரே காரில் வராங்க? பெட்ரோல் மிச்சம் பண்றங்களோ?”, என்று கேட்டு செக்யூரிட்டியிடம் இருந்து ஒரு முறைப்பை பெற்று கொண்டான் ராம்.
 
“அவங்க எதுக்கு சார் பெட்ரோல் மிச்சம் பண்ணனும்? அவங்க நினைச்சா, பெட்ரோல் கிணறே வெட்டுவாங்க”
 
அவர் சொன்னது புரியாமல், “என்ன சொல்றீங்க?”, என்று கேட்டான் முகில்.
 
“ராதிகா அம்மா, டி. ஐ. ஜி யோட மருமக சார். ரொம்ப பணக்காரங்க. ஒரே வீட்டில் இருந்துகிட்டு, எதுக்கு ரெண்டு கார்? அதனால தான், ஒண்ணா வருவாங்க. சரி உள்ளே போய் உக்காருங்க”, என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டார்.
 
“இது என்ன டா புதுக்கதை?”, என்று கேட்டு கொண்டே முகிலுடன் உள்ளே நடந்தான் ராம்.
 
“இந்த விசாரணை நடத்த தான் டா சீக்கிரம் வந்தேன். ஆனா, மருமகன்னா  எனக்கும் புரியலை டா. ஆனா, என்னோட குழப்பம் எல்லாம் ஒன்னு தான் ராம்”
 
“என்ன முகில்?”
 
“இவ என்னோட காதலை ஏத்துக்குவாளான்னு தான்?”
 
“உனக்கு உன் கவலை”, என்று பெரு மூச்சு விட்டு கொண்டே அங்கு அமர்ந்தான் ராம்.
 
அவன் அமர்ந்து, பத்து நிமிஷம் கழித்து, “சார் கொஞ்சம் எந்திரிங்க கூட்டணும்”, என்று வந்தாள் அங்கு வேலை செய்யும் பெண்.
 
“பாவி, கூட்டி பெருக்கும் ஆயா கூட, இப்ப தான் வாரா. இவ்வளவு சீக்கிரம் கூட்டிட்டு வந்து, உயிரை வாங்குறான் பாரு?”, என்று திட்டி கொண்டே முகிலை  பார்த்தான் ராம்.
 
முகில் அங்கே, ராதிகா என்று அறை கதவில் எழுதி இருந்த எழுத்தை, தடவி பார்த்து கொண்டிருந்தான்.
 
“அம்மா பெயரில் தூசி இருக்கா சார்? ஐயையோ, சுத்தமா இல்லைன்னா, அந்த அம்மா திட்டுவாங்க”, என்ற படியே அந்த கதவை துடைத்தாள் வேலைக்காரி.
 
“ஏன், அவங்க ரொம்ப கண்டிப்பானவங்களா?”, என்று கேட்டான் முகில்.
 
“ஐயோ, அப்படி எல்லாம் இல்லைங்க. ரொம்ப நல்லவங்க. எங்களுக்கு கூட நிறைய நல்லது பண்ணுவாங்க. யாரு பிரச்சனைன்னு வந்தாலும், உடனே தீத்து வைப்பாங்க. ஆனா, சுத்தமா இருக்கணும்னு நினைப்பாங்க”, என்று சொல்லி  கொண்டே தன் வேலையை தொடர்ந்தாள் அவள்.
 
ஒரு வழியாக மணி பத்தை நெருங்க ஆரம்பித்தது. வழி மேல் விழி வைத்து பார்த்து கொண்டிருந்தான் முகில்.
 
காரும் வந்தது. உள்ளே இருந்து தன சேகரன் இறங்கினார்.
 
அவருக்கு பின்னால், அவள் வருகிறாளா? என்று பார்த்தவன் இல்லை என்றதும், பார்க்க முடிய வில்லை என்ற சிறு வருத்தமும், “இதை தான், நானும்  எதிர் பார்த்தேன்”, என்ற நிம்மதியும் ஒருங்கே தோன்றியது. ஒரு சிரிப்புடன் அவரை பார்த்தான் முகில்.
 
அவரை பார்த்ததும், ராம் நடுங்கியே விட்டான். ராதிகாவை  போல், அனைவருக்கும் வணக்கம் சொல்லி கொண்டே வந்தவர், இவர்களை பார்த்து புருவம் உயர்த்தினார்.
 
“நான் அன்னைக்கு போன்ல பேசினேன்ல சார். என்னோட பேர் முகில் வேந்தன்”
 
“ஓ எஸ், நினைவு இருக்கு”, என்று முகிலிடம் சொன்னவர், ராமிடம் திரும்பி “நீதானே மேன், அன்னைக்கு ஒரு பொண்ணு பத்தி தெரியணும்னு கேட்டது?”, என்று அவனை முறைத்தார்.
 
“இவர் ஞாபக சக்தியில் இடி விழ”, என்று நினைத்து கொண்டே அசடு வழிந்தான் ராம்.
 
“ரெண்டு பேரும் உள்ளே வாங்க”, என்று அழைத்து கொண்டு போனார்.
 
கை கால் நடுக்கத்துடன், அவர் எதிரே அமர்ந்தான் ராம். அவனை பார்த்து சிரித்தான் முகில்.
 
“எப்படி சிரிக்கிறான் பாரு? இப்ப அவளை, இவன் பொண்டாட்டின்னு அவர் கிட்ட சொல்ல போறான். அவர் கன் எடுத்து சுட போறார்”, என்று நினைத்து கொண்டே அவர்கள் பேசுவதை கேட்டான்.
 
“அன்னைக்கு ஒரு முக்கியமான கேஸ் விசயம் யோசிச்சிட்டு இருந்தேன், உங்க கிட்ட டீடெயில்ஸ் கூட ஒழுங்கா கேக்கலை. இப்ப சொல்லுங்க முகில் வேந்தன். என்ன பிரச்சனை? எதுக்கு உங்க மனைவி கோப பட்டு போனாங்க?”
 
“அவ போகலை சார், நான் தான் அவளை விரட்டிட்டேன்”, என்றான் முகில்.
 
“முழுக்கதையையும் சொல்லாமல், சுருக்கமா சொல்லி அவர் கோபத்தை கிளப்புறான் பாரு”, என்று பல்லை கடித்தான் ராம்.
 
அவர் முறைப்பை பார்த்த முகில், “கோப படாதீங்க சார். நான் விவரமா சொல்றேன். அப்புறம், கோப படுங்க. அன்னைக்கு சொன்னேன்ல, அது எல்லாம் உண்மை தான். அவளை காதலிச்சு கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்த பிறகு, எனக்கு ஆக்சிடெண்ட்ல எல்லாம் மறந்துட்டு சார். அவ யாருன்னே எனக்கு தெரியலை. எங்க வீட்டில் வேலை காரி மாதிரி தான் இருந்தா. நான் யாருனு கேட்டேன். எங்க அம்மா அவளை, அனாதைன்னு சொல்லிட்டாங்க சார்”, அப்புறம், நடந்த எல்லா விஷயத்தையும் அவரிடம் சொன்னான்.
 
பொறுமையாக கேட்டவர், ராமை பார்த்து “நீயாவது சொல்லிருக்கலாம்ல?”, என்று அரட்டி கேட்டார்.
 
திடீரென்று, அவர் அரட்டலில் பயந்து போய் திரு திருவென்று விழித்தான் ராம்.
நினைவுகள் தொடரும்…..

Advertisement