Advertisement

அத்தியாயம் 6
உன் மீதான அழகான
நினைவுகளை சுமக்கவே
என் இதயம் இன்றும்
துடித்துக் கொண்டிருக்கிறது!!!
 
அவளுடைய ஷூ சத்தம், அந்த இடத்தையே அமைதி படுத்தி, எல்லாரையும்  அவளை பார்க்க வைத்தது.
 
நேராக வர்ஷினி அருகில் வந்து நின்றாள் ராதிகா.
 
“குட் மார்னிங் மேம்”, என்று காலை வணக்கம் சொன்னாள் வர்ஷினி.
 
“குட் மார்னிங் வர்ஷினி, யாராவது கம்பளைண்ட் கொடுத்தாங்களா?”
 
“இல்லை மேடம், யாரும் வரலை”
 
“ஓகே யாரும் வந்தா, என்னோட கேபின்க்கு அனுப்பு. அப்புறம் ஒரு இன்ஸ்பெக்டர், மதியம் ஒரு மணிக்கு வருவார். டீடெயில்ஸ் கேட்டு உள்ளே அனுப்பு”, என்று நகர பார்த்தாள் ராதிகா.
 
“மேடம்”
 
“என்ன வர்ஷினி?”
 
“உங்களை பாக்க இவங்க ரெண்டு பேரும் வந்துருக்காங்க. நேத்து வந்தாங்க. சாரை கேட்டாங்க, இன்னைக்கு உங்களை பாத்து கம்பளைண்ட் பண்ணணுமாம்”
 
“ஓ!”, என்ற படி அவர்களை திரும்பி பார்த்து, அவர்கள் அருகில் சென்றாள். வியர்த்து விறு விறுத்து  நின்றான் ராம்.
 
அன்பையும், பாசத்தையும் முகத்தில் தேக்கி இருக்கும் நேவாவுக்கும், ஆளுமையும், கம்பீரத்தையும் கொண்டிருக்கும் இந்த ராதிகாவுக்கும், எப்படி ஒரே உருவ அமைப்பு இருக்க முடியும்?
 
கண்களை கசக்கி கொண்டு மறுபடியும் பார்த்தான்.
 
எந்த வித்தியாசத்தையும், கண்டு பிடிக்க முடிய வில்லை. காதில் ஒரு சின்ன கம்மல் மட்டும் தான் அணிந்திருந்தாள். நெத்தியில் பொட்டு கூட இல்லாமல் இருந்தாள் ராதிகா.
 
“தனக்கே இப்படி இருந்தால், முகிலுக்கு எப்படி இருக்கும்?”, என்று நினைத்து கொண்டு முகிலை பார்த்தான் ராம்.
 
அவன், கண் இமைக்காமல் அவளை தான் பார்த்து கொண்டிருந்தான்.
 
இவர்கள் பார்வையை எல்லாம் கண்டு கொள்ளாது, “நீங்க யாரு? என்னை எதுக்கு பாக்கணும்?”, என்று ஆங்கிலத்தில் கேட்டாள் ராதிகா.
 
ஏதோ சொல்ல போன ராமை கை பிடித்து தடுத்த முகில், “என்னோட மனைவியை காணும். அதான் கம்பளைண்ட் கொடுக்க வந்தேன்”, என்றான்.
 
“இதை நீங்க உங்க ஏரியா இன்ஸ்பெக்டர் கிட்ட தான கம்பளைண்ட் கொடுக்கணும். ஐ. ஜி ஆபிஸ் எதுக்கு வந்தீங்க? சரி உள்ளே வாங்க”, என்று சொல்லி விட்டு கம்பீரமாக நடந்து போனாள்.
 
பின்னாடியே போக போன முகில், கையை பிடித்து தடுத்த ராம், “முகில் எனக்கு ஒரு சந்தேகம் டா”, என்றான்.
 
“அதே சந்தேகம் தான் எனக்கும், நீ வா”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான்.
 
“உக்காருங்க. உங்க மனைவி டீட்டெயில்ஸ் சொல்லுங்க. எங்க காணாமல் போனாங்க?”, என்று கேட்டாள் ராதிகா.
 
இருவரும் பேச்சு வராமல், அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தார்கள்.
 
“ஹலோ! எனக்கு நிறைய வேலை இருக்கு. நீங்க பேசாம மௌனமா இருந்தா என்ன அர்த்தம்?”, என்று கேட்டாள் ராதிகா.
 
ஒரு வழியாக தொண்டையை செருமி கொண்டு பேசினான் முகில்.  “அவ பேரு நேவா. மலைஜாதி பொண்ணு. என்னை காதலிச்சு கல்யாணம் செஞ்சிகிட்டா!”
 
“ஓ காதல் கல்யாணமா? சரி எந்த இடத்தில காணாம போனாங்க?”
 
“ஊட்டில!”
 
“என்ன சார் நீங்க? அங்க காணாம போனவங்களை நீங்க தமிழ்நாட்டில் தேடணும். இல்லைன்னா கேரளால தேடணும். இங்க மும்பை வரைக்கும் வந்துருக்கீங்க? ஒரு வேளை நீங்க இங்க வந்தப்ப காணாம போனாங்களா?”
 
“இல்லை, அங்க தான் காணாம போனா”
 
“அப்ப எதுக்கு இங்க வந்து தேடுறீங்க? உங்க ஸ்டேட்ல  முதலில் கம்பளைண்ட் பைல் பண்ணுங்க!”
 
“இல்ல, அவ இங்க தான் இருக்கா”
 
“இங்க இருக்காங்கன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”
 
“என்னோட மனசு சொல்லுது”
 
“ஹலோ சார், நீங்க கனவு காணுறதுக்கு, இங்க இடம் இல்லை. உங்க ஸ்டேட்ல போய் தேடுங்க. எதுக்கும், அந்த கம்பளைண்ட் கொடுங்க. நாங்க பாத்தா சொல்றோம்”
 
“சரி”, என்ற முகில் ராமை பார்த்தான்.  உடனே ராம் கையில் இருந்த, எழுதி வைத்திருந்த பேப்பரை கொடுத்தான். “அதை வேண்டாம்”, என்றவன், “ஒரு பேப்பர் தாங்க கம்பளைண்ட் எழுத”, என்று ராதிகாவிடம் கேட்டான்.
 
அவனை ஒரு பார்வை பார்த்தவள், தன்னுடைய பைலில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து, அவன் கையில் கொடுத்தாள்.
 
எதுவுமே நடக்காதது போல மறுபடியும் எழுத ஆரம்பித்தான்.
 
அதை எழுதி, அவள் கையில் கொடுத்தவன், அடுத்த நொடி வெளியே வந்து விட்டான். மந்திரிச்சு விட்ட ஆடு மாதிரி, அவன் பின்னே வந்தான் ராம்.
 
“முகில் குழப்பத்தில் இருக்கிறான், இப்படியே விட்டா ரொம்ப மன வருத்த படுவான் என்ன செய்ய?”, என்று யோசித்து கொண்டே வெளியே வந்த ராம் புன்னகையுடன் அமர்ந்திருந்த, முகிலை பார்த்து திகைத்தான்.
 
“என்ன ஆச்சு இவனுக்கு? இப்படி சிரிச்சிட்டு இருக்கான்? ஒரு வேளை மெண்டல் ஆகிட்டானோ? கூடிய சீக்கிரம், இங்க நடக்குறதை பார்த்தால் நானே ஆகிருவேன் போல? பின்ன அவன் ஆக மாட்டானா?”, என்று மனதில் நினைத்து கொண்டு “முகில்!”, என்று அழைத்தான்.
 
“என்ன டா மச்சான்?”, என்று சிரித்து கொண்டே கேட்டான் முகில்.
 
“என்ன டா கவலைல இருப்பேன்னு நினைச்சேன். அது கூட இல்லாம குழப்பத்திலாவது, இருப்பனு நினைச்சேன். ஆனா, நீ சிரிக்கிற? வாயெல்லாம் பல்லா இருக்கு”
 
“வாயெல்லாம் பல்லு இல்லாம வேற என்ன டா இருக்கும்? சிரிக்காம என்ன செய்ய?”
 
“நேவாவை, எப்படி கண்டு பிடிக்கன்னு கவலை இல்லையா? இங்க வேற இந்த மேடத்தை பாத்தா, அவ மாதிரியே இருக்கு? எனக்கு குழப்பமா இருக்கு டா முகில்”
 
“முதலில் நானும் குழம்புனேன் டா! ஆனா, இப்ப குழப்பம் இல்லை. என் பொண்டாட்டி கிடைச்சாச்சு”, என்று சொல்லி மறுபடியும் சிரித்தான் முகில்.
 
முகில் எழுதி கொடுத்த கம்பளைண்ட்டை விரித்து பார்த்தாள் ராதிகா. அவள் முகத்தில், தன்னால் புன்னகை வந்து அமர்ந்தது.
 
அதை பைல் பண்ணாமல், கையோடு எடுத்து கொண்டு வெளியே வந்தவள், அங்கு சிரித்து கொண்டிருந்த முகிலை ஒரு வினாடி பார்த்து விட்டு சென்றாள்.
 
ஆனால், அவளை அவன் பார்க்க வில்லை. ராமிடம் கதை பேசி கொண்டே, அந்த இடத்தை விட்டு நகர்ந்து ஹோட்டலுக்கு சென்றான்.
 
ஆழ்ந்த யோசனையில் இருந்தான் முகில், அவன் அருகில் பாவமாய் போய் அமர்ந்தான் ராம்.
 
அவன் பார்வையை பார்த்து, “என்ன ராம்?”, என்று கேட்டான் முகில்.
 
“நிஜமாவே, எனக்கு குழப்பமா இருக்கு டா!”
 
“எதுக்கு குழப்பம்?”
 
“நேவா, எப்படி டா கமிஷனர் ஆக முடியும்?”
 
“லூசு ராம், நேவா கமிஷனர் ஆக முடியாது தான். ஆனா, கமிஷனர் ராதிகா, நேவா ஆகலாமே!”
 
“ஆனா, இந்த ராதிகா நேவாவா இல்லாமலும் இருக்கலாமே!”
 
“இருக்கலாம் டா! இந்த ராதிகா வேற யாரோன்னு தான் நினைச்சேன் நானும் முதலில். ஆனால், என்னோட மோதிரத்தை கையில் போட்டிருக்கும், ராதிகா என்னோட நேவாவா தான இருக்க முடியும்?”
 
“என்ன டா, முகில் சொல்ற?”
 
“ஆமா டா! காலேஜ்ல, முதல் வருஷம் சேரும் போது, அப்பா எனக்கு வாங்கி தந்த மோதிரம் தான், இப்ப ராதிகா கையில் கிடக்குது”
 
“அப்ப இவ தான் நேவாவா? எப்படி டா இப்படி எல்லாம்?”
 
“அவளே சொன்னால் தான் டா ராம் தெரியும். ஆனா, அவ நடந்துக்குறதை  பார்த்தால் அவள் நேவான்னு ஒத்துக்குவே மாட்டா”
 
“அப்புறம் என்ன முகில் செய்ய?”
 
“ஒத்துக்க வைக்க வேண்டியது தான்”
 
“எப்படி?”
 
“அதுக்கு தான், கை வசம் ஆள் இருக்கே ராம்”
 
“யாரு டா?”
 
“டி. ஐ. ஜி சார் தான்”
 
“ஐயோ, நான் அந்த ஆளை பாக்க வரலைப்பா. சிங்கம் மாதிரி கர்ச்சிக்கிறார் போன்ல. நான் நடுங்கிட்டேன் தெரியுமா?”
 
“பின்ன, நீ அவர் கிட்ட போய் ஒரு பொண்ணை கண்டு பிடிக்கணும்னு, மொட்டை கட்டையா சொன்னா, அப்படி தான நினைப்பார்? நீ நாளைக்கு வா, அதெல்லாம் அவர் ஒன்னும் சொல்ல மாட்டார். நாளைக்கு அவரை போய் பாக்கணும். நாளைக்கே உண்மை தெரிஞ்சிரும்”
 
“ஆனா, இந்த ராதிகா, ஒரு வார்த்தை கூட உங்க மனைவி போட்டோ காட்டுங்கனு சொல்லவே இல்லை பாரேன் முகில்?”
 
“எப்படி டா கேப்பா? அவ போட்டோவை அவளே”
 
“சரி, நீ தான நேத்து கம்பளைண்ட் எழுதி வச்ச? இன்னைக்கு, அதை கொடுக்காம வேற எதையோ எழுதி எதுக்கு கொடுத்த?”
 
“முதல் நாள் எழுதினது, நேவா காணும்னும், அவளை கண்டு பிடிக்கணும்னும். அவளே கிடைச்ச பிறகு அதை எதுக்கு கொடுக்கணும்னு தான், அதை கொடுக்கலை”
 
“அப்ப இன்னைக்கு எழுதி கொடுத்தது என்னது டா?”
 
“அது கம்பளைண்ட் இல்லை டா. காதல் கடிதம்”
 
“என்னது கமிஷனருக்கு காதல் கடிதமா? ஊரை விட்டு போகுறதுக்குள்ளே, என் தோலை உரிக்காம விட மாட்டியா டா நீ? அதான், எழுதி கொடுத்துட்டு வெளிய ஓடி வந்தியா?”
 
“பின்ன, அங்க நின்னு யாரு வாங்கி கட்டுறது அவ கிட்ட?”
 
“அட பாவி, என்னையும் கூட்டிட்டு வந்தியா டா? நான் பலியாடு மாதிரி அவளை பார்த்துட்டு நின்னேன். நான் கூட ஓவர் பீலிங்ஸ் ஆகி, ஓடி வரியோன்னு நினைச்சேன் டா”
 
“பீலிங்ஸ்சா இல்லை ராம். இனி எங்க காதல் வாழ்க்கையில் சந்தோசம் மட்டும் தான். என்னோட நிழல் கூட அவளை காய படுத்தாது”
 
“நம்ம அடுத்த பிளான் என்ன முகில்?”
 
“என்ன டா, கொள்ளை கூட்ட தலைவன் கிட்ட கேக்குற மாதிரி கேக்குற?”
 
“எனக்கு என்னமோ, அப்படி தான் டா தெரியுது. சுத்தி போலீசா இருக்காங்க. போலீஸ் கூட குடும்பம் நடத்த போறோம் போல? நாளைக்கு அந்த ஆள் வேற, என்ன சொல்ல போறாரோ?”
 
“நீ ஏன் அதை பத்தி கவலை படுற? நிம்மதியா படுத்து தூங்கு”
 
“நீ என்ன செய்ய போற முகில்?”
 
“மறந்த அவளுடைய நினைவுகளை, அசை போட போறேன்”
 

Advertisement