Advertisement

 
“இதுக்கு மேல ஒரு வார்த்தை, என் பொண்டாட்டியை பத்தி தப்பா பேசுன, அம்மான்னு கூட பாக்க மாட்டேன் கொன்னுருவேன். அவ வயித்தில் குழந்தை இருந்தா, அது என்னோட குழந்தை. என்ன பாக்குற? அவளுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகி, மூணு மாசம் ஆகிட்டு போதுமா?  ஆனா, அவ வயிற்றில் இருந்தது குழந்தை இல்லை. அது கட்டியாம்”
 
“என்ன பா சொல்ற? அவ மாசமா இருக்கான்னு, அந்த ஜோசியர் சொன்னாரே? உனக்கு எப்படி அது கட்டினு தெரியும்?”, என்று கேட்டார்  மேகநாதன்.
 
“நான் இப்ப அவளை தேடி, அவ இடத்துக்கு தான் போய்ட்டு வந்தேன். அங்க இருக்குறவங்க தான், நேவா இங்க இருந்து, அங்க போனதாகவும், மறுபடியும் எங்கயோ போய்ட்டானும், அவ வயிற்றில் கட்டி இருக்குன்னும் சொன்னாங்க. அதனால தான், அங்க இருந்தும் எங்கயோ போய்ட்டாளோ என்னவோ?”, என்று அழுதான் முகில்.
 
“அழாத முகில், அவளுக்கு ஒன்னும் ஆகாது. உனக்கு எல்லாம் நினைவு வந்துருச்சா?”
 
“நினைவு முதலில் வரலை. ஆனா, அங்க அவ பிரண்ட் சொல்லும் போது, எனக்கு எல்லா காட்சியும் நினைவு வந்தது. நீங்க எனக்கு பணம் தரலைனு தான, நான் அங்க போனேன். ஏன் பா, இப்படி செஞ்சீங்க? நீங்க என்னோட படம் எடுக்குற கனவை ஆதரிச்சிருந்தீங்கன்னா, நான் அங்க போய் அவளை பாத்துருக்க மாட்டேன். இப்ப, இங்க தொலைச்சிருக்கவும் மாட்டேன். அங்கேயே நிம்மதியா இருந்துருப்பா. 
 
ஏன் வானதி, உனக்கு கூட அவ என் பொண்டாட்டியா தெரியலைல. ஓ சாரி, உனக்கு அம்மாக்கு எல்லாம், பணக்காரங்க தான பிடிக்கும். என்னோட கனவையும் நீங்க ஆதரிக்கல, என்னோட காதலையும் நீங்க ஆதரிக்கல.  இதுக்கு, நான் இந்த வீட்டில் பிறக்காமலே இருந்துருக்கலாம்.
 
உங்களை எல்லாம் குறை சொல்லி என்ன பயன்? எல்லாத்துக்கும் காரணம் நான் தான். என்னோட வீடு, என்னோட அம்மா அப்பானு நினைச்சு, இங்க அவளை கூட்டிட்டு வந்தேன். இப்ப தொலைச்சிட்டேன். நான் தான, அவளை வெளிய போக சொன்னேன்.  நானே போய் தேடுறேன். அவ கிடைக்காம நான், இங்க வர மாட்டேன்”, என்றவன், அப்படியே அவன் அறைக்குள் போய், சில உடைகளை எடுத்து கொண்டு சென்று விட்டான். அவர்கள் தடுத்ததையும் கேக்காமல், அவன் காதலை தேடி சென்றே விட்டான்.
 
“எப்படி போறான் பாருங்க? அவ தான் எங்கயோ போய் தொலைஞ்சிட்டா. அப்புறம், எதுக்கு அவளை போய் தேடணும்?”,  என்றாள் வசந்தி.
 
“சும்மா புலம்பாத வசந்தி. எனக்கே அந்த பொண்ணு எங்க போச்சுன்னு, பயமா இருக்கு. கொஞ்சமாவது, உன் பையனோட ஆசைக்கு மதிப்பு கொடு”, என்று சொல்லி விட்டு உள்ளே போய் விட்டார் மேகநாதன்.
 
தாயும், மகளும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.
 
நேராக, ராம் வீட்டுக்கு தான் சென்றான் முகில். அவனை அந்நேரம், அவன் எதிர்பார்க்கவே இல்லை.
 
“என்ன டா முகில், இப்ப தான வீட்டுக்கு போன? அதுக்குள்ள வந்து நிக்குற!”, என்று கேட்டான் ராம்.
 
“எனக்கு என் நேவா வேணும். நான் அவளை தேடணும். அன்னைக்கு, அவ டிரஸ்ல இருந்து விழுந்த அந்த விசிட்டிங் கார்டு, உன்கிட்ட தான இருக்கு? அந்த டி. ஐ. ஜி தேடி போகணும்”
 
“இரு டா, இன்னைக்கு, தான வந்தோம்? ரெண்டு நாள் கழிச்சு, போகலாம்”, என்றான் ராம்.
 
“இல்லை நீ வேணா இரு, நான் போறேன். எப்படியும் போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணனும்னு தான் நினைச்சேன். சரி இவரை போய் விசாரிச்சிட்டு பண்ணுவோம்னு வந்துட்டேன். நான் இன்னைக்கே, இப்பவே கிளம்புறேன்”, என்றான் முகில்.
 
“சரி, நீ என்ன சொன்னா கேக்கவா போற? சரி கிளம்புவோம்”, என்று ராம் சொன்னதும் ராம் அம்மாவிடமும் சொல்லி விட்டு மும்பை நோக்கி கிளம்பினார்கள்.
 
டிரைனில் ஏறி அமர்ந்தவனுக்கு, அவள் முகமே நினைவு வந்தது.  “அவள் பார்க்கும், அந்த காதல் பார்வை வேணும். என்னோட நேவா எனக்கு வேணும்”, என்று நினைத்து கொண்டே, அவன் பையில் இருந்த ராம் வீட்டில் இருந்து எடுத்து வந்த, ஆல்பத்தை வெளியே எடுத்து ஒவ்வொரு போட்டோவையும் பார்த்தான். அழகாக சிரித்து கொண்டிருந்தாள் நேவா. மெதுவாக அவள் உதடுகளை வருடினான் முகில்.
 
நண்பனை பார்த்து கொண்டிருந்த ராமுக்கு, மனது கஷ்டமாக இருந்தது. “எப்படியாவது நேவா, கிடைக்கணும்!”, என்று கடவுளிடம் வேண்டுதல் வைத்தான்.
 
மும்பை வந்து இறங்கினார்கள் இருவரும். ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்தான் ராம். “நேவாவை பாக்கணும்”, என்ற நினைவுகளுடன் அவனுடன் சென்றான் முகில்.
 
குளித்து உடை மாற்றி விட்டு, பெயருக்கு இரண்டு இட்லியை வாயில் பிய்த்து போட்டு விட்டு, அந்த போலீஸ் ஆபிஸ் சென்றார்கள் இருவரும். நெஞ்சம் முழுவதும், பட பட வென்று இருந்தது முகிலுக்கு.
 
ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம், “டி. ஐ. ஜி தனசேகர் சாரை பாக்கணும்!”, என்று ஆங்கிலத்தில் கேட்டான் ராம்.
 
“சாரி சார், அவங்க ஒரு கேஸ் விஷயமா ஹைதெராபாத் போயிருக்காங்க. நீங்க என்ன விஷயமா பாக்கணும்? உள்ளே டி. சி இருக்காங்க. அவங்களை மீட் பண்றீங்களா?”, என்று பதிலுக்கு கேட்டாள் அந்த பெண்.
 
முகிலை ஒரு பார்வை பார்த்தவன், “இல்லை சாரை தான் பாக்கணும். அவங்க எப்ப வருவாங்கனு சொல்ல முடியுமா?”, என்று கேட்டான்.
 
“ஒரு நிமிஷம் இருங்க!”, என்றவள், போன் எடுத்து நம்பரை சுழற்றினாள்.
 
“சொல்லுங்க வர்ஷினி? என்ன விசயம்?”, என்று அந்த பக்கம் கம்பீரமான ஒரு பெண் குரல் கேட்டது.
 
“மேம், சாரை பாக்க ரெண்டு பேர் வந்திருக்காங்க. சார் இல்லைனு சொன்னேன். சார் எப்ப வருவாங்கனு, கேட்டாங்க. அதான், உங்க கிட்ட கேக்க கால் பண்ணேன்”
 
“ஏதும் அவசரமான விஷயம்னா, உள்ளே அனுப்புங்க வர்ஷினி”
 
“இல்லை மேடம், நான் கேட்டேன். சாரை தான் பாக்கணுமாம்”
 
“சரி ஓகே. சார் பிரைடே மார்னிங் ஆபிஸ் வருவாங்க”
 
“ஓகே மேம். நான் இன்பார்ம் பண்ணிறேன். தேங்க் யு”, என்று போன் வைத்த வர்ஷினி ராமிடம் திரும்பி “பிரைடே வருவாங்க சார்”, என்றாள்.
 
“ஓகே மேடம், நாங்க அன்னைக்கே வந்து பாக்குறோம். ரெண்டு நாள் தான இருக்கு?”, என்று சொல்லி விட்டு முகிலை அழைத்து கொண்டு வந்தான்.
 
அறைக்குள் வந்து, அவளுடைய புகை படத்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்த முகிலின் மேல், கை வைத்தான் ராம்.
 
“நேவா கிடைச்சிருவா டா முகில். நீ இப்படி சோகமா இருக்காத. கஷ்டமா இருக்கு டா”
 
“இல்லை டா, எனக்கு என்னமோ பயமா இருக்கு”
 
“ச்ச என்ன டா நீ. கண்டிப்பா கிடைச்சிருவா. வேணும்னா, அந்த ஆபிசர் கிட்ட போன் பண்ணி கேப்போமா?”
 
கண்களில் ஒரு வித ஒளியுடன், “நல்ல ஐடியா டா ராம். ஆனா, எல்லாரோட போன் கால்சை எடுப்பாங்களான்னு தெரியாதே!”, என்றான் முகில்.
 
“டிரை பண்ணி பாப்போம் முகில்”, என்று சொல்லி கொண்டே அந்த கார்டில் இருந்த நம்பரை அழுத்தினான் ராம்.
 
“இந்தாங்க சார். நீங்க கேட்ட கேஸ் பைல். எல்லாத்தையும் கம்ப்ளீட்டா முடிச்சு, அக்கியூஸ்டை அரெஸ்ட் பண்ணி, உங்க கிட்ட ஒப்படைச்சிட்டேன். ஆர் யு ஹாப்பி நௌ?”, என்று மற்றொரு அதிகாரியிடம் சொன்னார் தன சேகர்.
 
“தேங்க்ஸ் தனா சார். ரொம்ப நாள் இந்த கேஸ், இழுத்துட்டே இருந்தது. நீங்க முடிச்சு தந்துருக்கீங்க”
 
“இது எங்க கடமையும் கூட சார். அப்புறம் இதை முடிச்சது, நான் இல்லை என்னோட மருமகள் ராதிகா தான்”
 
“வாட் உங்க மருமகளா? அவங்க என்ன செய்றாங்க?”
 
“ராதிகா ஐ. பி. ஸ். கமிஷனர் இன் மும்பை”
 
“வெரி குட்! வெரி குட்! நான் இதை சென்ட்ரல் கவர்ன்மென்ட்க்கு இன்பார்ம் பண்ணிறேன். கண்டிப்பா உங்களுக்கு அவார்ட் கிடைக்கும்”, என்று கை கொடுத்தார் அவர்.
 
“ஓகே. நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு வெளியே வந்தவரின் போன் அடித்தது.
 
“என்ன, தெரியாத நம்பர்ல இருந்து போன் வருது!”, என்று நினைத்து கொண்டே, அதை காதில் வைத்தார்.
 
“ஹலோ சார், அங்க தனசேகரன் சார் இருக்காங்களா?”, என்று தமிழில் உளறி, கடைசியில் ஆங்கிலத்தில் கேட்டான் ராம்.
 
“நீங்க தமிழே பேசலாம் மிஸ்டர். நான் தனசேகரன் தான், நீங்க யாரு?”
 
“சார்! சார்! நீங்க தானா? உங்க கிட்ட எங்களுக்கு ஒரு ஹெல்ப் வேணும் சார்!”
 
“எஸ் சொல்லுங்க!”
 
“சார், ஒரு பொண்ணை பத்தி தெரியணும்!”
 
“அடி செருப்பால! யாரு கிட்ட என்ன கேக்குற? எங்க இருந்து டா பேசுற ராஸ்கல்? யார் கிட்ட பேசிட்டு இருக்கன்னு தெரியுமா? நீங்க லவ் பண்ணி விளையாடுறதுக்கு, நாங்க தான் கிடைத்தோமா?”, என்று கர்ச்சித்தார்.
 
உடனடியாக போனை, முகிலிடம் கொடுத்து விட்ட ராம் “எப்பா என்ன மாதிரி கத்துறாரு?”, என்று காதை தேய்த்து விட்டு கொண்டான்.
 
போனை வாங்கிய முகில், “சாரி சார். என்னோட பிரண்ட் தெரியாம பேசிட்டான். என்னோட பேர் முகில் வேந்தன். ஊட்டில பிஸ்னஸ் மேன். என்னோட மனைவியை காணும். அவ பேர் நேவா.  அவளை தேடி தான் மும்பை வந்தோம். நீங்க இங்க இல்லைன்னு சொன்னாங்க. அதான் கால் பண்ணோம். நீங்க ஹெல்ப் பண்ண முடியுமா?”, என்று கேட்டான்.
 
“ஓ மிஸ்ஸிங் கேசா?”, என்று கேட்ட தனசேகர் “அவங்க எங்க காணாம போனாங்க?”, என்று கேட்டார்.
 
அவளை பார்த்தது முதல், தொலைந்தது வரை அனைத்தையும் சொன்னான் முகில்.
 
“ஆமா நீங்க எதுக்கு, அவங்களை தமிழ் நாட்டில் தேடாம, என்கிட்ட கேக்குறீங்க? என்னோட, நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சது?”
 
“சார், அவளோட டிரஸ் கூட உங்க கார்டு இருந்தது அதான்”
 
“என்னது, என்னோட கார்டா? இது எதுவோ பெரிய விசயம் மாதிரி இருக்கு. இப்ப நீங்க எங்க இருக்கீங்க?
 
“நான் மும்பைல தான் சார் இருக்கோம்”
 
“சரி, நீங்க டைம் வேஸ்ட் பண்ணாம, என்னோட ஆபிஸ்ல கமிஷனர் ராதிகா இருப்பாங்க. அவங்க கிட்ட, உடனே போய் ஒரு டீடைல் கம்பளைண்ட் எழுதி கொடுங்க. நான் வந்த உடனே என்னை வந்து பாருங்க”
 
“சரி சார்”
 
“நேவாவை காணும்!”, என்று காலையில் முதல் வேலையாக, கம்பளைண்ட் எழுதி கொண்டு அந்த போலீஸ் ஆபிஸ்க்கு வந்தனர் ராமும், முகிலும். அங்கே, அதே பெண் தான் இருந்தாள்.
 
“சார் நாளைக்கு வருவாங்கன்னு சொன்னேனே? நீங்க இன்னைக்கே வந்துட்டீங்க”, என்று கேட்டாள் அந்த வர்ஷினி.
 
“இல்லை, ராதிகா மேடம் பாக்க வந்தோம். ஒரு கம்பளைண்ட் கொடுக்கணும் அதான்”, என்று இழுத்தான் ராம்.
 
“அதான், நேத்தே அவங்களை பாருங்கன்னு சொன்னேன். சரி வெயிட் பண்ணுங்க. மேடம் இப்ப வந்துருவாங்க!”, என்று சொல்லி விட்டு தன் வேலையில் மூழ்கினாள்.
 
இருவரும், அங்கு இருந்த சேரில் அமர்ந்தார்கள். அப்படியே, சுவரில் சாய்ந்து கண்களை மூடி கொண்டான் முகில்.
 
அங்கு இருந்த ஓவியங்களையும், சுற்றி நின்றிருந்த மக்களையும் பார்வையிட்டு கொண்டிருந்தான் ராம்.
 
அப்போது, ஒரு போலீஸ் ஜீப் அங்கு வந்து நின்றது. யாருமே அதை கவனிக்க வில்லை. ஆனால், வர்ஷினி மட்டும் எழுந்து நின்றாள்.
 
“இந்த பொண்ணு, எதுக்கு இப்ப அட்டேன்ஷன்ல நிக்குது?”, என்ற படியே அவள் பார்த்த திசையில் பார்வையை பதித்தான் ராம்.
 
அடுத்த நொடி, தன்னாலேயே எழுந்து நின்றன அவன் கால்கள். சுற்றி நடக்கும் எதையுமே கவனிக்காமல், தன் உலகத்தில் மூழ்கி இருந்த, முகிலின் தோளில் தட்டினான்.
 
“என்ன டா?”, என்ற படியே அவனை பார்த்தவன், திகைத்த அவன் முகத்தை பார்த்து விட்டு, அவன் கண்கள் பார்க்க சொன்ன திசையில் பார்த்தான். அடுத்த நொடி அவனும் எழுந்து நின்றான். கண்கள் அங்கு வந்து கொண்டிருந்த ராதிகாவையே வெறித்தது.
 
அங்கே போலீஸ் உடையில், இடுப்பில் துப்பாக்கி சொருகி கையில் லத்தியுடன் கம்பீரமாக நடந்து வந்தாள் ‘ராதிகா ஐ. பி. எஸ்’. இல்லை அவனுடைய மனைவி நேவா.
நினைவுகள் தொடரும்…..

Advertisement