Advertisement

“இத்தனை நாள் விலகி இருந்ததுனால மேடம், அவங்க கொள்கையை எல்லாம் மறந்துட்டு, இப்படி என்னை இறுக்கி பிடிச்சிருக்காங்க. இதுவும், நல்லா கிக்கா தான் இருக்கு!”, என்று நினைத்து கொண்டவன், முதல் முறை அவள் வெற்றிடையில் கை வைத்தான்.
 
“இப்ப என்னை விட்டு விலகிருவா!”, என்று நினைத்து தான் கை வைத்தான் முகில். ஆனால், அவள் நெருக்கம் இன்னும் அதிகமாக தான் ஆனது. அதில் முகிலுமே, தன் கட்டுப்பாட்டை இழந்து, அவள் மேனியில் கைகளை படர விட்டான்.
 
கடைசியில், அவளிடம் இருந்து விலகியது முகில் தான். அடுத்த நொடி, அவன் முகத்தை கூட பார்க்காமல், அவள் குடிலுக்குள் மறைந்தாள் நேவா.
 
அவளுடைய இத்தனை நாள் விலகலுக்கும், இப்போது கொடுத்த நெருக்கத்துக்கும் காரணம் தெரியாமல், புருவம் உயர்த்தினான் முகில் வேந்தன். அவளுடைய வாசனை, அவனை சுற்றி இருப்பது போலவே உணர்ந்தான்.
 
அடுத்து வந்த நாள்களும், நேவா ஒதுங்கியே இருந்தாள்.  தருவி பல தடவை கேட்டு பார்த்தும், பதில் சொல்லாததால், முகிலை போய் நாலு கிழித்தாள். “நீங்க தான், எதுவோ அவளை சொல்லிட்டீக. அதான், அவ என்கிட்ட கூட பேச மாட்டிக்கா. அதுக்கு தான் இந்த டவுன் காரவுகளை நம்ப கூடாது!”, என்றாள் தருவி.
 
காரணம் தெரியாமல், ஏற்கனவே குழம்பி கொண்டிருந்த முகிலுக்கு, தருவியிடமும் அவள் விலகி இருப்பது, எதுவோ புதுசாக இருந்தது. கூட கொஞ்சம் தான் குழம்பினான்.
 
ஆனால், அவனுக்கு தெரிய வில்லை. அவன், அவள் உணர்ச்சிகளுடன் விளையாடி இருக்கிறான் என்று. அதை தாங்க முடியாமல் தான், அவள் தவிக்கிறாள் என்று.
 
நேவாவின் மன குழப்பம், முகிலுக்கு தெரிய வரும் நேரமும் வந்தது.
 
“ஒரு வாரம் கழிச்சு வீட்டுக்கு போகணும். நேவா பத்தி வீட்ல  சொல்லி, உடனே கல்யாணம் பண்ணனும்”, என்று நினைத்து கொண்டு, அன்று இரவை கழித்தான் முகில்.
 
அடுத்த நாள், பறவைகளின் சத்தத்தில் கண் விழித்தான். போய், அருவியில் ஒரு குளியல் போட்டு விட்டு, குடிலுக்கு வர திரும்பினான்.
 
அப்போது, எல்லாருமே அன்று வேலைக்கு போகாமல், அங்கே தான் இருந்தார்கள். அதை விட அவன் பார்வையில் பட்டது, பல வண்ண காட்டு பூக்களால், ஆங்காங்கே அலங்காரம் பண்ணி கொண்டிருந்தார்கள்.
 
முகத்தில், சிரிப்புடன் சிக்கன் அருகில் சென்று, “என்ன நடக்க போகுது?”, என்று கேட்டான் முகில்.
 
“இன்னைக்கு கன்னி பூஜை. எல்லா கன்னி பெண்களும், பூஜை செய்வாங்க”, என்றான் சிக்கன்.
 
“இது எதுக்காக?”, என்று கேட்டான் முகில்.
 
“இங்க பக்கத்து சரிவுல இருக்குற, எல்லா மக்களும் கலந்துக்குவாங்க. அப்படி அந்த பொண்ணுங்க பூஜை செஞ்சா, அவங்களை பாக்குற யார் வேணாலும், அந்த பொண்ணை கல்யாணம் செஞ்சிக்க கேக்கலாம். வருசத்துல ஒரு முழு நிலவு அன்னைக்கு இது நடக்கும். அன்னைக்கு ஐயா, சொல்லிட்டு இருந்தாங்களே அது இது தான்”
 
“அப்ப, நீ இன்னைக்கு தருவியை கேப்பேன்னு சொல்லு!”, என்று சிரித்தான் முகில்.
 
“ஆமாங்க ஐயா, ஆனா, அவ பூஜை பண்றதுக்கு முன்னாடியே கேட்டுறனும். இல்லைன்னா, அதுக்கு பிறகு வேற யாரும் கேட்டா, அப்புறம் போட்டி, பந்தயம்னு ஆகி போகும். அதனால, ஆரம்பிக்கும் போதே ஐயா கிட்ட சொல்லி புடுவேன். இல்லைன்னா, அங்கன இருக்கானே அந்த ஊமையன் போட்டிக்கு வந்துருவான். அவனுக்கு, தருவி மேல ஒரு கண்ணு”, என்று சொல்லி சிரித்தான் சிக்கன்.
 
சிரித்து கொண்டே, அவர்கள் வேலையில் கலந்து கொண்டான் முகில்.
 
காலையில் இருந்தே, கண் விழிக்காமல் படுத்திருந்தாள் நேவா.
 
அவள் அருகே சென்ற தருவி, “எந்திரி நேவா, சூரியன் உச்சிக்கு வர போகுது, இன்னும் கொஞ்ச நேரத்துல, பக்கத்து இறக்க காட்டுல இருந்து, ஆளுங்க வர ஆரம்பிச்சிருவாக. நாம அதுக்குள்ள போய் குளிச்சிட்டு, அருவில தண்ணி எடுத்து வைக்கணும். நீ இன்னும், எந்திக்காமல் படுத்திருக்க? ஐயா தப்பா நினைப்பாக வா நேவா!”, என்று அழைத்தாள்.
 
திடுக்கிட்டு எழுந்து அமர்ந்த நேவா, “தருவி இன்னைக்கு கன்னி பூஜையா?”, என்று கேட்டாள்.
 
“ஆமா, நேவா! மறந்துட்டியா? இன்னைக்கு தான முழு நிலவு? அன்னைக்கே, ஐயா சொன்னாக தான? நீ இருந்தியே!”
 
அவள் எங்கே அதை கவனித்தாள்? எப்போதும் மனதுக்குள்ள குழப்பத்துடன் இருந்த நேவா, இதை கவனிக்க தவறினாள்.
 
தலையில் அறைந்து அழும், நேவாவை பாத்து தருவி திகைத்தாள்.
 
“என்ன ஆச்சு நேவா? எதுக்கு இப்படி அழுற?”
 
“நான், இந்த பூஜைல கலந்துக்க முடியாது தருவி.  ஐயோ! இப்ப நான் என்ன செய்வேன்?”, என்று சொல்லி தலையில் அடித்து அழுதாள்  நேவா.
        
அவள் சொன்ன உண்மையில், அதிர்ச்சியாகி அவளை பார்த்தாள் தருவி.
 
“என்ன சொல்ற நேவா? ஐயோ, நீ கலந்துக்க முடியாதுனா என்ன அர்த்தம்?”
 
“நான் கன்னி இல்லை தருவி. அதில், என்னால கலந்துக்க முடியாது?”
 
“ஐயோ, என்ன சொல்ற? கன்னி  இல்லைன்னா, எல்லார் முன்னாடியும், அவமான படணுமே? யாரு காரணம் நேவா? அதுக்கு தான், நீ இப்படி என்கிட்ட கூட பேசாம இருந்தியா?”, என்று அவளை இழுத்து பிடித்து கேட்டாள் தருவி.
 
“அன்னைக்கு… அன்னைக்கு, பயங்கர குளிரில், அவரை காப்பாத்த எனக்கு வழி தெரியலை தருவி. அதான் அவருக்கே நினைவு இல்லாமல் ….”
 
“நினைவு இல்லாமலா? ஐயோ,  அந்த ஆளை நம்பலாமானு கூட தெரியலையே? பூஜைக்கு முன்னாடியே, இந்த பொண்ணு எனக்கு தான்னு,  உறுதி படுத்துனா தான் பூஜைல கலந்துக்க முடியாது. இல்லைன்னா, கலந்துக்கணும். அப்படி கலந்து கிட்டா, கை கால் எல்லாம் நடுங்கி, காட்டி கொடுத்துருமே. அப்புறம், எல்லாரும் தப்பா பாப்பாங்க, இது நடக்க கூடாது. நீ அவர் கிட்ட பேசுனியா?”
 
“அவருக்கு, நினைவே இல்லை தருவி. அப்புறம், எப்படி இதை பத்தி பேச முடியும்? ஒரு வேளை சொன்னா, அவர் அப்படி இல்லைனு சொல்லிட்டா, அதை விட என்னை தப்பா நினைச்சா என்ன செய்ய?”
 
“இல்ல நேவா, இனி கண்டிப்பா சொல்லியே ஆகணும். இரு வரேன்”, என்று சொல்லி விட்டு வெளியே போன தருவி, அவனை தேடினாள். சிக்கனுடன் சிரித்து பேசி கொண்டிருந்தான். உடனே அவங்க அருகில் ஓடினாள்.
 
அவ பேச ஆரம்பிக்கும் போது, அங்க இருந்து “தருவி!”, என்று சத்தம் கொடுத்தார், சரகா.
 
“என்னங்க ஐயா?”, என்று அங்கு ஓடினாள், சொல்ல வந்த விசயத்தை சொல்லாமலே.
 
“வெரசா போய், தலை முழுகி கிளம்புங்க!”, என்று அவளை அனுப்பினார் சரகா.
 
வேறு வழி இல்லாமல், நேவாவை அழைத்து கொண்டு, குளிக்க சென்றாள். குளித்து முடித்த பின்னும் முகிலிடம் பேச, ஒவ்வொரு நொடியையும், எதிர் பார்த்து கொண்டிருந்தாள் தருவி. ஆனால், சந்தர்ப்பம் வாய்க்காமலே இருந்தது. பக்கத்துக்கு காடுகளில் இருந்து, மக்கள் அணிவகுக்க ஆரம்பித்தார்கள்.
 
நேவா, அழுகையில் கரைந்தாள். “இனி இங்க இருக்க கூடாது”, என்று நினைத்து, தன்னுடைய பையில் எல்லா பொருளையும் எடுத்து வைத்தாள்.
 
ஆனால், அதுக்குள்ளே பூஜைக்கு அழைத்து விட்டார்கள். தருவியே தான், நேவாவை அலங்கரித்து, தயார் படுத்தினாள்.
 
இங்கே முகிலும், அவள் வரவை எதிர் பார்த்து கொண்டிருந்தான். சிக்கனுடன் சென்று, அவளை பெண் கேட்க.
 
நேவாவை அழைத்து வந்த தருவி, மற்ற பொண்ணுங்களை முன்னால் விட்டு கடைசியாக நிற்க வைத்தாள்.
 
அவளை நிற்க வைத்து விட்டு, முன்னால் போன தருவி, சிக்கனை “சீக்கிரம்”, என்று கண்களால் சைகை செய்தாள். அவனும், உடனே போய் அவளை பெரியவர்களிடம் கேட்டான். அவளும், சம்மதம் சொல்லவே, அவளை பூஜையில் இருந்து விலக்கினர்.
 
அடுத்த நொடி, தனிமையில் பேச காத்திருந்த சிக்கனை கூட தள்ளி விட்டு விட்டு, முகில் அருகே ஓடினாள்.
 
“நீங்க இப்பவே போய், நேவாவை பொண்ணு கேளுங்க!”, என்றாள் தருவி முகிலிடம்.
 
எப்போதும், அவளிடம் விளையாடுபவன், “நான் எதுக்கு அவளை கேக்கணும்?”, என்று சிரித்து கொண்டே கேட்டான்.
 
“தயவு செஞ்சு விளையாடாதீங்க. அவ இந்த பூஜைல கலந்துக்க முடியாது. நீங்க போய் கேளுங்க!”
 
“ஏன், இப்படி சொல்ற? அவ பூஜை செய்யட்டும். அவ செஞ்ச பிறகு, அவளை வேறு யாருக்கும் பிடிச்சிருந்தா, அவங்க கூட சண்டை போட்டு, அப்புறம்  கல்யாணம் செய்றேன்”, என்றான் முகில்.
 
“அவ, பூஜைலே கலந்துக்க முடியாதுன்னு சொல்றேன். நீங்க, அதுக்கு பிறகு நடக்க போறதை பத்தி பேசுறீங்க. உங்களை கை எடுத்து, கும்பிடுறேன். அவளால, கலந்துக்க முடியாது. இன்னும் அவ முறை வந்தா, எல்லாரும் அவளை அசிங்கமா பாப்பாங்க. சீக்கிரம் போய், ஐயா கிட்ட பேசுங்க”, என்று சொல்லி அழுதாள் தருவி.
 
“என்ன ஆச்சு தருவி? நீ ஏன் அழுற? அவ ஏன் பூஜைல கலந்துக்க முடியாது? ஏன் அசிங்கமா பாப்பாங்க?”
 
“ஐயோ! நான் அதை எப்படி சொல்லுவேன்? அவ கன்னியே இல்லை, போதுமா? தயவு செஞ்சு நீங்க போய் பேசுங்க!”
 
குழப்பத்துடன் அவளை பார்த்தான் முகில். “என்ன தருவி சொல்ற?”
 
“ஆமா, அன்னைக்கு, நீங்க அந்த ஆத்துல மாட்டிக்கிட்ட அன்னைக்கு, அவ அவளையே உங்க கிட்ட கொடுத்து தான், உங்க உயிரை காப்பாத்துனா. இல்லைன்னா,  நீங்க அன்னைக்கே அந்த குளிரில் ஜன்னி வந்து மரிச்சிருப்பீங்க. இன்னைக்கு, அவ நெருப்பு மேல நிக்குற மாதிரி நிக்குறா. தயவு செஞ்சு சீக்கிரம் பேசுங்க”, என்று அவன்  காலிலே விழுந்து விட்டாள் தருவி.
 
அடுத்த நொடி, அவளை எழுப்பி நிறுத்திய முகில், “இந்த ஜென்மத்தில் மட்டும் இல்லை. எத்தனை ஜென்மம் வந்தாலும், அவ தான் என் பொண்டாட்டின்னு, முடிவு பண்ணி ரொம்ப நாள் ஆச்சு. நானே, இப்ப கேக்கணும்னு தான் நினைச்சேன். ஆனா, நீ தான் அவளை கடைசியில் நிப்பாட்டின. அதுக்கு தான், உன்கிட்ட விளையாடுனேன். ஆனா, அன்னைக்கு நடந்தது எனக்கு தெரியாது மா. இப்பவே ஐயா கிட்ட பேசுறேன்”, என்றவன், அவர்களுடன் நின்றிருந்த சிக்கனை “வா சிக்கா”, என்று அழைத்து கொண்டு அவர் அருகில் சென்றான்.
 
இவன் போய் கேட்டதும், அங்கே அவர்களுக்குள் சல சலப்பு கேட்டது.  இவன் அவர்கள், இனம் இல்லை என்ற கருத்தை முன் வைத்தார்கள். “ஐயையோ! இப்ப என்ன செய்ய?”, என்று தெரியாமல் விழித்தான்.
 
சரகா, அவனிடம் திரும்பி, “நேவாவை இங்க அழைச்சிட்டு வா முகில் வேந்தா!”, என்றவர் அவன் போன பின்பு கருத்து சொன்னவர்களிடம், ரகசியம் பேசினார். முடிவில், அவளிடம் சம்மதம் கேட்டார்கள். கண்ணீருடன் தலை அசைத்தாள் நேவா.
 
“அடுத்த பவுர்ணமிக்கு, கல்யாணம்”, என்று இரண்டு ஜோடிகளை பார்த்து சொன்னார்.
 
“முதலில் நேவாவுக்கு கல்யாணம் ஐயா! எனக்கு கொஞ்ச மாசம் போகட்டும்!”, என்றாள் தருவி. அவளை முறைத்து பார்த்து கொண்டிருந்தான் சிக்கன்.
 
குறும்புடன் அவனை பார்த்து கண் சிமிட்டினாள் தருவி. அதில், அவன் முகம் பூவாக மலர்ந்தது.
 
அதே நேரம், முகம் முழுவதும் சந்தோசத்துடன் முகிலை நிமிர்ந்து பார்த்தாள் நேவா. ஆனால், அவன் அவளை முறைத்து பார்த்து விட்டு, முகத்தை திருப்பி கொண்டான்.
நினைவுகள் தொடரும்…..

Advertisement