Advertisement

அடுத்து, ஒரு வாரம் கழித்து சிக்கன் மரம் வெட்ட காட்டுக்கு போக கிளம்பினான். அவனுடனே சரகாவிடம் சொல்லி விட்டு முகிலை மெதுவாக நடக்க சொல்லி, போட்டோ எடுக்க கூட்டி சென்றார்கள் நேவாவும்,  தருவியும்.
அதன் பின், தினமும் இதுவே தான் நடந்தது. அவர்களுடனே ஒன்றி போனான் முகில். தருவி அவனுக்கு உதவி செய்தாலும், அவனை முறைத்து கொண்டே திரிவாள். ஆனால், அவன் அதை கண்டு கொள்ளாமல், “வாலு  வாலு!”,  என்று தான் அவளை கூப்பிடுவான். முறைத்து விட்டு செல்வாள் தருவி.
பகல் முழுவதும் சுற்றி விட்டு, சாயங்காலம் அங்கு உள்ள அருவியில் சிக்கனுடன் சேர்ந்து  குளிப்பது, பின் காட்டை  ரசிப்பது, இரவு அவர்கள் கொடுக்கும் ஏதாவது உணவை வயிற்றுக்குள்  அடைப்பது, அடுத்து அவனுக்கு அமைக்க பட்டிருக்கும் குடிலுக்குள் சென்று நிம்மதியான உறக்கம், இதுவே தொடர்ந்தது. சந்தோசமான வாழ்வை அனுபவித்தான் முகில்.
அங்கு உள்ள அனைவரும், அவன் மேல் அன்பு வைத்தனர். எது கிடைத்தாலும் அவனுக்கு என்று எடுத்து வந்து தருவார்கள். அவர்கள் சில நேரம் பேசும் பாஷை மட்டும் புரியாமல் இருந்தது.
இயற்கையின் உண்மையான அழகையும், அவர்கள் தரும் உண்மையான நேசத்தையும் ரசித்தான் முகில். கூடவே நேவாவையும். அவள் செய்யும் ஒவ்வொரு செயலையும் ரசித்து பார்ப்பான்.
தோள் பட்டை, பாதி முதுகு, எல்லாம் தெரியும் படி  அவர்கள் அனைவரும், உடை அணிந்திருந்தாலும், நேவாவின்  நேர்த்தியான உடை அணியும் விதத்தை ரசித்தான்.
அவனுக்கு, காலையில் வெந்நீர் போட்டு வைப்பது ஆகட்டும், அவன் காயத்தில் மருந்திடும் போது, “வலிக்குதா?”, என்று கண்களில் கனிவோடு  கேட்கும்  விதம், எல்லாவற்றிலும் தடுமாறினான். தன் தாய், தன்னை பார்த்து கொள்வதை காட்டிலும், அதிகமான நேசத்தை தந்தாள் நேவா.
நேவா, மனதிலும்  முகில் முக்கிய இடம் பிடித்தான். அவன் பார்வை, அவளுக்கு ஒரு விதமான புரியாத உணர்வை தந்தது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் வரும் கவர்ச்சிக்கு, காரணத்தை யாரால் தான் அறிய முடியும். நாம் கும்பிடும் சாமிக்கே காதல் வரும் என்னும் போது, நாம் எல்லாம் எம்மாத்திரம்?
ஒரு நாள், தருவி, நேவா, முகில் மூவரும் போட்டோ  எடுக்க சென்றார்கள். அப்போது, நேவா முன்னால் நடந்தாள். முகில் நடுவிலும் தருவி பின்னாலும் வந்தாள்.
“நேவா, உனக்கு ஒரு விசயம் தெரியுமா?”, என்று சிரித்து கொண்டே கேட்டான் முகில்.
“என்ன எனக்கு தெரியாதே. நீங்க சொன்னா தான தெரியும்?”
“நேத்து, நைட் தூக்கம் வரலைன்னு வெளிய எழுந்து வந்தேன்”, என்று ஆரம்பித்தான் முகில்.
“தனியா எங்கயும் வர கூடாதுன்னு, சொல்லிருக்கேன்ல?”, என்றாள் நேவா.
“நான் வெளிய எல்லாம் போகலை. சும்மா குடிலுக்கு வெளிய தான் நின்னேன்”
“அப்ப சரி, என்னனு சொல்லுங்க!”, என்றாள் நேவா.
இங்க தருவிக்கு வியர்த்து ஓடியது. “ஐயோ பாத்துட்டானோ?”, என்று நினைத்து நடுங்கி போனாள்.
“அப்ப, நம்ம சிக்கன் குடிலுக்குள்ள இருந்து ஏதோ சத்தம் வந்தது”
“ஐயோ! பாத்துட்டான்”, என்று வாய்க்குள்ளே சொல்லி கொண்டு நடந்த தருவி, “நேவா அவுகளை சும்மா இருக்க சொல்லு!”, என்று கத்தினாள். பின்னால் திருப்பி, “நீ ஏன் இப்படி கத்துற?”, என்று கேட்டாள் நேவா.
“நீ இவுகளை சும்மா இருக்க சொல்லு நேவா”
“நீ எதுக்கு இப்படி கெஞ்சிற? சரி இல்லையே? நீங்க சொல்லுங்க. நேத்து என்ன ஆச்சு?”, என்று முகிலிடம் கேட்டாள் நேவா.
“அப்ப குடிலுக்குள்ள இருந்து, சத்தம் வந்துச்சு நேவா. ஐயோ! நம்ம சிக்கனுக்கு தான் ஏதும், பூச்சு கடிச்சிட்டு போலன்னு நினைச்சு, என்னனு பாக்க பக்கத்துல போனேன். அப்ப உள்ளே இருந்து வளையல் சத்தம் கேட்டுச்சு. சரி தான், அங்க எதுவோ நடக்குன்னு நினைச்சு, நானும் திரும்பி என் குடிலுக்குள்ள போகும் போது தான், திரும்பி பாக்குறேன். ஒரு ஆள் அவன் குடிலுக்குள்ள இருந்து வெளியே ஓடுது. அது யாரு தெரியுமா? அது அச்சு அசல், பாக்க நம்ம தருவி மாதிரியே இருந்தது”, என்று சொல்லி சிரித்தான் முகில்.
நேவாவுக்கு, அனைத்தும் விளங்கியது. மெதுவாக சிரித்தாள்
“நீ அப்ப அங்க போனியா தருவி?”, என்று வம்புக்கென்றே கேட்டான் முகில். அவனை முறைத்தவள் அமைதியாக வந்தாள்.
அடுத்து, எல்லாரும்  நடக்க ஆரம்பித்தார்கள். தருவி மனதுக்குள்ளே, சிக்கனை திட்டி கொண்டே வந்தாள். நேத்து சாப்பாடு கொடுக்க போகும் போது, அவள் கையை பிடித்து கொண்டு “ஊட்டி விடு” என்று சொன்னான் சிக்கன்.
“யோவ் விடுயா, நீயே சாப்டுக்கோ. உனக்கு பிடிச்ச மாதிரி தான் செஞ்சிருக்கேன்!”, என்று கையை விட போராடினாள் தருவி.
“இங்க பாரு, கை எல்லாம் பொத்து போச்சு! அதான் கேட்டேன். சரி நீ சாப்பாடை கொண்டு போ. எனக்கு வேண்டாம்!”, என்றான் சிக்கன்.
இது, அப்ப அப்ப நடப்பது தான் என்பதால், எதுவும் சொல்லாமல் அவனுக்கு ஊட்ட துடங்கினாள். ஆனால், அதுக்கு பிறகு தான், அவன் அலும்பு செய்ய துடங்கி விட்டான்.
ஊட்டிய கைகளை, அப்படியே வாய்க்குள் வைத்து கொண்டு, மெதுவாக விடுவது என்று செய்த அவன் செய்கைகளை, தடுக்க முடியாமல் தவித்தாள் தருவி.
“அதை தான் இந்த ஐயா கேட்டுருக்காக. சும்மாவே, எதாவது சொல்லி கேலி செய்வான். இதையும் பாத்துட்டானா? எல்லாம் அந்த சிக்கனால வந்தது!”, என்று வாய்குள்ளே முனங்கி கொண்டே, சென்றாள் தருவி.
அப்போது, யாரோ அவள் வாயை யாரோ பின்னால் இருந்து பொத்தினார்கள். திரும்பி பார்த்த தருவி, விழி விரித்தாள். அடுத்த நொடி, அப்படியே அவளை தூக்கி சென்றான் சிக்கன்.
கொஞ்ச தூரம் நடந்து சென்ற முகிலும், நேவாவும் தருவி சத்தம் வராததால் திரும்பி பார்த்து திகைத்தார்கள். “கூட தான வந்தா? எங்க போனா?”, என்று கேட்டாள் நேவா.
“எனக்கும் தெரியலையே. நான் சொன்னதுல கோப பட்டுட்டாளோ? வா தேடுவோம்!”, என்று வந்த பாதையே திரும்பி நடந்தார்கள்.
அப்போது, அங்கு கண்ட காட்சியில் திகைத்த நேவா, முகிலையும் வாயை மூடி, ஒரு மரத்தின் மறைவுக்கு இழுத்து சென்று, அந்த மரத்தோடு அவனை சாய்த்து வைத்தாள்.
“என்ன?”, என்று கண்களால் கேட்டான் முகில்.
“ஸ்ஸ்! அமைதி”, என்று சொன்னாள் நேவா.
தலையை மட்டும் திருப்பி, அங்கு பார்த்தான் முகில். அங்கே தருவியை கட்டி அணைத்து, உதட்டில் முத்தமிட்டு கொண்டிருந்தான் சிக்கன்.
தலையை எட்டி பார்த்து கொண்டிருந்த, முகிலின் தலையை இழுத்து பிடித்து, இந்த பக்கம் திருப்பிய நேவா அவன் கண்களை, மற்றொரு கையால் மூடினாள்.
பார்த்த காட்சியும், அவளுடைய அருகாமையும், முகிலை என்னவோ செய்தது.
மெதுவாக, நேவாவின் இடுப்பை சுற்றி கைகளை போட்டான் முகில்.  ஒரு கையை அவன் கண்களிலும் இன்னொரு கையை, அவன் வாயிலும் வைத்திருந்த நேவா கண்களை, பொத்திய கைகளை எடுத்து விட்டு அவனை பார்த்தாள். அவன் கண்களில் இருந்து வந்த, காந்த பார்வையை பார்க்க முடியாமல் தலை குனிந்த நேவா, அவன் உதட்டில் இருந்தும் கைகளை எடுத்து விட்டு விலக பார்த்தாள்.
நகன்று விடாத படி, அவளை இறுக்கி பிடித்திருந்தான் முகில்.
அவளுடைய வெட்கமும், அவளுடைய அருகாமையும், மனதுக்குள் காதலை விதைக்க, மெல்ல அவள் தலையை தூக்கியவன், அவள் உதடுகளை சிறை செய்தான். 
அவனுடைய, ஆழ்ந்த முத்தத்தை ஏற்ற நேவா, அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
“இந்த உலகத்தில், நான் இருக்கும் கடைசி நொடி வரைக்கும், நீ எனக்கு வேணும் நேவா!”, என்றான் முகில்.
‘சம்மதம்’ என்று வாயில் சொல்லாமல், அவள் முகத்தை இன்னும் இன்னும், அவன் மார்பில் புதைத்து, செய்கையில் காதலை சொன்னாள் நேவா.
அவளுடைய நெருக்கத்தை உணர்ந்த முகில், இன்னும் அவளை தன்னோடு இறுக்கினான்.  பக்கத்தில் கேட்ட பறவையின் சத்தத்தில், அவனை விட்டு விலகினாள் நேவா.
அடுத்து மெதுவாக நடக்க ஆரம்பித்தவர்களுடன், இணைந்து கொண்டாள், தருவி.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, ஒரு ஆள் நம்ம கூட வந்தது நேவா. திடிர்னு  காணாமல் போய், மறுபடியும் வந்துட்டாங்க”, என்று அவளை கிண்டல் செய்தான் முகில்.
வெட்க பட்டு கொண்டே அமைதியாய் வந்தாள் தருவி.
முகில் வேந்தன், இந்த காட்டுக்கு வந்து ஐந்து மாதம் ஆகி விட்டது. காலத்தை போல, அவர்கள் காதலும் வளர்ந்தது.
அப்படி  இருக்கும் போது, ஒரு நாள், எப்போதும் போல் போட்டோ எடுக்க கிளம்பினான்.  கிளம்பி, நேவாவை அழைத்தான் முகில்.
இருவரும் கிளம்பி, தருவியை கூப்பிட சென்றார்கள். அங்கே, இழுத்து மூடி படுத்திருந்தாள் தருவி.
“என்ன ஆச்சு தருவி?”, என்று கேட்டு கொண்டே, அவள் அருகில் அமர்ந்தாள் நேவா.
“உடம்பு எல்லாம் நோவெடுக்கு நேவா. குளிர் அடிக்கிற மாதிரி இருக்கு, நான் வரலை. இன்னைக்கு, நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க”, என்றாள் தருவி.
“நேத்து மழையில், சிக்கன் கூட ஆட்டம் போட்டா, இப்படி தான் ஆகும். சரி, ஆயம்மாவை கஷாயம் வச்சு தர சொல்றேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பினாள் நேவா.
சிக்கன் முன்னால் நடக்க, இவர்கள் இருவரும் பின்னால் சென்றார்கள். போகும் போது, எப்பவும் கூட வருவான் சிக்கன். பின் “வரும் போது சீக்கிரம் குடிலுக்கு போயிருங்க”, என்று சொல்லி விட்டு வேலைக்கு  போவான் சிக்கன்.
இன்றும், அதே போல் சொல்லி விட்டு, சென்றான் சிக்கன். அவன் போன பிறகு, இருவரும் பேசி கொண்டும், சிரித்து கொண்டும் நடந்தார்கள்.
மதியம் மூன்று மணி போல், மழை பயங்கரமாக பெய்தது. “இதுக்கு மேல, எங்க வேலை செய்ய?”, என்று நினைத்து கொண்டு, சிக்கன் குடிலுக்குள் வந்தான்.
ஈர உடையை, எல்லாம் மாற்றி விட்டு, தரையில் ஓலை பாயை விரித்து படுத்தான். நாலு மணிக்கு, தேயிலை தண்ணி கொண்டு வரும் தருவியை, அவன் கண்கள் தேடியது. அப்போது தான், காலையிலே “அவளுக்கு உடம்பு சரி இல்லை!”, என்று நேவா சொன்னது நினைவு வந்தது.
அவளை பற்றிய, இனிய நினைவுகளுடன், இருக்கும் போது தான், ஆயாம்மா, அவனுக்கு தேயிலை தண்ணீர் கொண்டு வந்தாள்.
அவள் முகம் சிறிது பதட்டத்தில் இருந்தது. “என்ன ஆயாம்மா?”, என்று கேட்டான் சிக்கன்.
“நம்ம நேவாவையும், அந்த தம்பியையும் இன்னும் காணும் சிக்கா. மழை வேற வலுவா பெய்யுது. அதான், எங்க மழையில் மாட்டி கிட்டாகளோன்னு, மனசு பதறுது!”
“என்னது அவுக, இன்னும் குடிலுக்கு வரலையா? நான் வெள்ளானமே மழை வந்ததும், இங்கன வந்துருப்பாங்கன்னு நினைச்சுல, அசதியா படுத்துட்டேன். இந்தா ஐயா கிட்ட சொல்லிட்டு ஓரெட்டு பாத்துட்டு வரேன், ஆயாம்மா!”, என்று சொல்லி விட்டு சரகாவை தேடி சென்றான்.
“மேகம் மேற்க, நல்ல கூடாரம் போட்டுருக்கு சிக்கா. விடாம பெய்யும். பாரு  வெள்ளானமே இருட்டிட்டு. இவுக, எங்கன மாட்டிகிட்டாகன்னு  தெரியலை. பாத்து சூதனமா போய்ட்டு வா. நீயும் சீக்கிரம் வந்துரு!”, என்று அனுப்பி வைத்தார் சரகா.
மழையில், தேடி சென்ற சிக்கன் திகைத்தான். அங்கு, தொங்கு பாலம் கழண்டு கிடந்தது. “அதான், இவுக வரலை போல”, என்று நினைத்து கொண்டு “ஆத்து வழியா, இறங்கி போவோம்”, என்று நினைத்து கால் வைத்தான்.
காலை வைத்தவன், உடனடியாக காலை எடுத்து விட்டான். மண் சரிந்து விழுந்தது. “சரி இப்ப அவுகளை கூட்டிட்டு இந்த பக்கம் வரவும் முடியாது. ஆத்துல ஓதம் பெருகிட்டுனா, இன்னும் கஷ்டம்”, என்று நினைத்தவன், குடிலுக்கு திரும்பினான்.
“பாலம் அறுந்து கிடக்குங்க ஐயா. அப்படியும், ஆத்து வழி போலாம்னு கால் வச்சேன். மண்ணு கரைஞ்சு ஓடுது. அதான், என்னனு கேக்க வந்தேன்!”, என்றான் சிக்கன்.
“பாலம் அருந்ததுனால தான், அவுக வரலை போல. சரி சிக்கா இப்ப ஆத்துல தண்ணியும் பெருகி ஓடும். இப்ப போய், அவுகளை தேட முடியாது. காலைல போய் தேடுவோம். நேவா பாத்துக்குவா, பத்திரமா ஒதுங்கி இருப்பாங்க. நீ மழையில் நனையாத”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டார்.
ஆனால், அவர்கள் அங்கு பத்திரமாக இல்லாமல், தண்ணீரில் அலைக்கழித்து கொண்டிருந்தார்கள்.
நினைவுகள் தொடரும்…..

Advertisement