Advertisement

அத்தியாயம் 3
வண்டின் ரீங்காரம் கூட
எப்போதும் உன் நினைவில்
இருக்கும் என்னை அசைத்து தான்
பார்க்கிறது என்னவளே!!!
“என்ன?”, என்று எடுத்து பார்த்தான் முகில். அதில் ‘தனசேகரன், டி . ஐ . ஜி இன் மும்பை’ என்று போட்டிருந்தது.
“என்ன டா இது? போலீஸ் ஆபிசர் கார்டு எல்லாம் இருக்கு”, என்றான் முகில்.
“எங்க காட்டு”, என்ற படியே அதை வாங்கி பார்த்தான் ராம்.
அப்போது, தருவி உள்ளே வருவது கண்ணில்  பட்டது. இதை பற்றி பேசி, அவளை குழப்பாமல், அதை சட்டைக்குள் ஒளித்து வைத்தான் ராம்.
“இந்தாங்க, இதை சாப்பிடுங்க. பசியோட இருப்பீங்க, சாயங்காலம் என்னோட வீட்டுக்காரரை ஆத்துக்கு குளிக்க கூட்டி போக சொல்றேன்”, என்றாள் தருவி.
சாயங்காலம் தருவியின் கணவன், சிக்கன் அவர்களை குளிக்க, கூட்டி சென்றான். குளித்து முடித்தவர்கள் தருவியை, தேடி சென்றார்கள்.
“ப்ளீஸ் மா! இதுக்கு மேல எதையும் சொல்லாம இருக்காதே, என்னோட நிலைமை உனக்கு தெரியும் தானே? காதலிச்சு கல்யாணம் செஞ்சு, அந்த நினைவுகளை மறந்து, கடைசியில் பொண்டாட்டியையும் தொலைச்சு நொந்து போய் இருக்கேன். நீ சீக்கிரம் சொன்னேன்னா, அவளை தேட முடியும். வயித்தில் எதுவோ கட்டினு வேற சொல்ற. சீக்கிரம் சொல்லு மா”, என்றான் முகில்.
“சரி சொல்றேன்”, என்று சொல்லி அவர்கள் அருகில், அமர்ந்தாள் தருவி.
தன்னுடைய வாழ்க்கை கதையை கேக்க, ஆவலாக இருந்தான் முகில். “அப்படி என்ன தான் நடந்துருக்கும்?”, என்று அறிய ராமுக்கும் ஆசை.
“நீங்க, இங்க வந்து ஏழு மாசம் இருக்கும். முதல் நாள் உங்களை நாங்க எங்க பாத்தோம் தெரியுமா?”, என்று ஆரம்பித்தாள் தருவி.
ஏழு மாதம் முன்பு, இதே காட்டில், ஒரு பாறைக்கு அருகில், ஒரு இடத்தில் மயங்கி கிடந்தான் முகில்.
தருவிக்கு, அப்போது கல்யாணம் ஆக வில்லை. அப்போது நேவாவும், தருவியும் அந்த காட்டில் சும்மா அலைந்து கொண்டிருந்தார்கள்.
எங்கேயோ யாரோ முனங்கும் சத்தம் கேட்டது. “யார்?”, என்று சுற்றி அவர்கள் பாக்கும் போது தான், மயங்கி கிடந்த முகில் அவர்களின் கண்ணில் பட்டான்.
“அங்க பாரு தருவி, அங்க தான் சத்தம் கேக்குது!”, என்று கூட்டி சென்றாள் நேவா.
“எப்படியோ, தப்பி வந்துருக்கான் போல நேவா. நல்ல அடி பட்டிருக்கு, நாம  எப்படி இவனை கூட்டிட்டு போவ?”, என்று கேட்டாள் தருவி.
“ஆமா தருவி, இவனை மேல தூக்கிட்டு போறது கஷ்டம்.  பை வேற இருக்கு, நீ போய், உன் பின்னாடியே, அலையும் சிக்கனை இங்கன  கூட்டிட்டு வா!”
“ஐயையோ! அவனையா? நான் போகலை நேவா. அவன் என்னை பாத்தாலே, வழி வழின்னு வழிவான்”
வெறுப்பு மாதிரி சொன்னாலும், அவள் குரலில் சிறு பெருமை வெளி பட தான் செய்தது.
“நீ அவனை, வெறுக்குற மாதிரியே பேசிட்டு,  அப்புறம் அவனுக்கு சமமான பார்வை பாக்குறது, எங்களுக்கும் தெரியும். ஒழுங்கா சீக்கிரம் போய் கூட்டிட்டு வா. இவன் தண்ணீல  வேற கிடக்கான், குளிர போகுது”, என்று அவனை எழுப்ப குனிந்தாள்.
“நான் சிக்கனை பாக்குறதை, இவ எப்படி கண்டு பிடிச்சா?”, என்று  நினைத்து கொண்டு  “சரி போறேன்”, என்று கிளம்பினாள் தருவி.
“சீக்கிரம் வந்துரு தருவி. அப்புறம் இருட்டிரும், மழை வேற வர மாதிரி இருக்கு”, என்று எச்சரித்தாள் நேவா.
அவளும் “சரி”, என்று சொல்லி விட்டு சென்றாள். எந்த நேரத்தில், நேவா மழை வரும் என்று சொன்னாளோ, அதே போல மழை வந்தது. தருவி, குடிலுக்கு பாதி வழி போகும் போதே மழை வலுத்தது. “ஐயோ! இப்படி பெய்யுதே!”, என்ற படியே ஓடி போனாள்.
சரகா ஐயாவிடம், விசயத்தை சொன்னாள் தருவி. அவரும் “சிக்கனை கூட்டிக்கிட்டு போ தருவி. நான் மருந்து எடுத்து வைக்கிறேன்”,  என்று சொல்லி விட்டு அடி பட்டு கிடப்பவனுக்கு மருந்துகளை தயாரிக்க உள்ளே சென்றார்.
உடலுடன் ஒட்டிய ஈர உடையுடன், சிக்கன் முன்பு போய் நின்றாள் தருவி.
ஈர சேலை மட்டும், அவள் உடையை மூடி இருந்தது. அதுவும் வஞ்சனை இல்லாமல், அழகை காண்பித்தது. அப்படி ஒரு கோலத்தில் அவளை இது வரை பார்த்திராத, சிக்கன் முதல் முறை தடுமாறினான்.
அவனுடைய பார்வையில் தலை குனிந்த தருவி, அவனுக்கு முதுகு காட்டி நின்றாள். பின் “அங்கன ஒரு ஆள் விழுந்து கிடக்கான். உன்னை உதவிக்கு கூட்டி போக சொல்லி, ஐயா சொன்னாரு வா யா”, என்றாள் தருவி.
“இதோ வறேன் புள்ள”, என்ற படியே அவளுடன் நடந்தான். அங்கு முகிலை, அவன் மழையில் நனையாதவாறு இருக்க, அவனை மெதுவாக இழுத்து, ஒரு பாறை மறைவில், உக்காற வைத்தாள் நேவா. நனைந்த அவன் உடை, அவனுக்கு நடுக்கத்தை கொடுத்தது போலும், உடம்பை முறுக்கினான்.
தருவியும், சிக்கனும் வந்து அந்த இடத்தை பார்த்தார்கள். நேவாவும், அவனும் அவர்கள்,  கண்ணில் பட வில்லை.
“ஏன் புள்ள, என்கிட்டே தனியா பேசணும்னா கண்ணை காட்டிருந்தா, ஓடி வந்துருக்க மாட்டேனா? அதுக்கு இப்படி சாக்கு சொல்லி கூப்பிடணுமா?”, என்றான் சிக்கன்.
“ஏய்யா, நான் எதுக்கு உன்கிட்ட தனியா பேச போறேன்? ஐயோ! இவன் பார்வையே சரி இல்லை!”, என்று நினைத்து கொண்டு,  பதட்டத்துடன் “நேவா!”, என்று சத்தம் கொடுத்தாள்.
“இங்கன, இருக்கேன் தருவி!”, என்று சத்தம் கொடுத்தாள் நேவா. அடுத்து, அவனை தூக்கி கொண்டு மேலே, ஏறினான் சிக்கன். முகிலுடைய பையை, நேவா தூக்கி  கொண்டாள்.
“இவ்வளவு பெரிய ஆளை, எப்படி சுலபமா சிக்கன் தூக்கிட்டான் பாரேன் நேவா”, என்று சொல்லி நேவாவின் முறைப்பை, பெற்று கொண்டாள் தருவி.
அங்கு போய் சரகா அறையில், அவனை படுக்க வைத்தான் சிக்கன். சரகா அவனுக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார். எல்லாரும் வெளியே வந்தனர்.
நேவா, அவனுடைய பையை அங்க வைத்து விட்டு, அவளுடைய குடிலுக்குள் சென்றாள். பின்னாடியே வந்த தருவி ஒரு துணியை, எடுத்து கொண்டு போய், நனைந்து நின்ற சிக்கனுக்கு கொடுத்தாள்.
“இவ யாருக்கு இப்படி அவசரமா கொண்டு போறா?”, என்று வெளியே எட்டி பார்த்தாள் நேவா. தருவி சிக்கனிடம் வெட்க பட்டு  கொண்டே, அதை கொடுத்து கொண்டிருந்தாள். நேவா அதை பார்த்து, ஒரு சிரிப்பை சிந்தி விட்டு, உடை மாற்ற உள்ளே சென்றாள்.
அவள் முகத்தையே ஆசையாக பார்த்து கொண்டே, அதை வாங்கினான் சிக்கன். அப்போது, அவள் கைகளில் தவறி போய், அவன் கை பட்டது. ஒற்றை தீண்டலில்,  உடம்புக்கே தீ வைத்தது போல கண்களை மூடி கொண்டாள்.
அவளை பார்த்து, சிரித்து கொண்டே, தலையை துடைத்த சிக்கன், அந்த துணியை தருவியின் மேல், போர்த்தினான். கண் விழித்து அவனை பார்த்தாள் தருவி.
“நீயும் நேவா மாதிரியே, மேல சட்டை போடு புள்ள, மழையில்  நனைந்தால் எதுவோ போல் இருக்கு!”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
“இவன் என்ன சொல்றான்?”, என்ற படியே  தன்னை குனிந்து பார்த்தாள் தருவி. அவன் சொன்னதின் அர்த்தம் புரிய கைகளை மார்புக்கு, குறுக்காக வைத்து கொண்டே, உள்ளே ஓடி விட்டாள்.
“எப்படி பாத்திருக்கான் பாரு? நானும் வெக்கமே இல்லாமல், அவன் முன்னாடி அப்படி நின்னுருக்கேன். சும்மாவே, மாடு மேயுற  மாதிரி பாப்பான்”, என்று நினைத்து கொண்டே வெட்கத்தோடு சிரித்து கொண்டிருந்தாள் தருவி.
உடை மாற்றி  வந்த நேவா, தருவியின்  தலையில் ஒரு கொட்டு வைத்து விட்டு  “வெக்கபட்டது போதும்! சீலைய மாத்திட்டு வா! நான் அங்கன போறேன்.  ஐயா தேடுவாக”, என்ற படியே வெளியே சென்றாள்.
சிக்கன் உடை மாற்ற, சொன்ன படியே ஒரு துணியை எடுத்து மார்புக்கு மேல  கட்டியவள், பின்னே சேலையை எடுத்து கட்டி விட்டு, சரகா  குடிலை அடைந்தாள்.
தருவி, உடை மாற்றி கொண்டு போகும் போது நேவாவும், சிக்கனும் சரகாக்கு உதவி கொண்டிருந்தார்கள். சரகா, அவனுக்கு தலையில் எதுவோ மருந்து அரைத்து வைத்து கொண்டிருந்தார்.
“நேவா! கொஞ்சம் சுடு தண்ணி கொண்டு வா”, என்றார் சரகா. அவள் எடுக்க போனதும் “நான் சொன்ன படியே சீலை கட்டிட்ட  புள்ள”, என்றான் சிக்கன். “என்ன சொல்ல?”, என்று தெரியாமல் அமைதியாக நின்றாள் தருவி. “எல்லாரும் இருக்கும் போது, இப்படி கட்டுனா, தான் நல்ல இருக்கு. ஆனா, நான் மட்டும் இருந்தா! அப்ப கட்டுன  மாதிரி கட்டிருந்தா தான், நல்லா  இருக்கு”, என்றான் சிக்கன்.
அவன் பேச்சை ரசித்து கொண்டு, தலை குனிந்தே நின்றாள் தருவி. அடுத்த நாள், காலையில் கண் விழித்து அதிர்ச்சியோடு எழுந்து அமர்ந்தான், முகில் வேந்தன்.
“ஐயா! யாரு? இங்கன எதுக்கு வந்தீக!”, என்று கேட்டார் சரகா.
“என் பேரு முகில் வேந்தன், போட்டோ எடுக்குறது, என்னோட தொழில். நேத்து, அந்த அருவில, போட்டோ  எடுக்கும் போது! ஒரு குரங்கு கிட்ட வந்திடுச்சு. சரிவில் அப்படியே விழுந்துட்டேன்”, என்றான் முகில்.
“நல்லதா போச்சு, இந்த பிள்ளைக கண்ணில பட்டிருக்கீக. இல்லைன்னா மழையில், குளிரில் விரைச்சிருப்பீக.  ஒரு குரங்குக்கு பயப்படுறவுக, இங்கன எப்படி வந்தீகளோ?”
“இல்லைங்க ஐயா, இது தான் என்னோட கனவு, அதான் கஸ்ட பட்டு வந்தேன். நீங்க என்னை காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி!”, என்ற படியே  எழுந்தான்.
“எங்க எந்திக்கீக? நீங்க ரெண்டு நாள் ஓய்வு எடுக்கணும்”
“உங்களுக்கு ஏற்கனவே சிரமம் கொடுத்துட்டேனே!”, என்றான் முகில்.
“பரவால்ல, எந்த சிரமமும் இல்லை, இங்கனையே தங்கிகோங்க, உங்க வேலை முடிஞ்ச பிறகு போங்க!”
“ரொம்ப நன்றீங்க ஐயா. ஆனா, வேலை முடிய,  மாச கணக்கு  ஆகுமே!”
“எத்தனை நாள் ஆனாலும், இங்கனயே இருங்க. நேவாவும், தருவியும் உங்களுக்கு காட்டை சுத்தி காட்டுவாக. இன்னைக்கு அப்படி சுத்தும் போது தான், உங்களை  பாக்க  முடிஞ்சது!”, என்றார் சரகா.
நன்றியோடு இருவரையும் பார்த்தான் முகில். “சிக்கா!”, என்று அழைத்தார் சரகா.
“சொல்லுங்க ஐயா!”
“உன் குடில் பக்கத்துல, இவருக்கும் குடில் உருவாக்கிரு. அது வரைக்கும் உன்னோடவே  இருக்கட்டும்!”
“சரிங்க ஐயா”, என்றான் சிக்கன்.
“என்னை வா போன்னே!  கூப்பிடுங்க ஐயா!”, என்றான் முகில்.
“சரி மேக ராஜா!”, என்றார் அவர் சிரித்து  கொண்டே. புரியாமல் அவரைப் பார்த்தான் முகில்.
“முகில் வேந்தனுக்கு, அர்த்தம் மேகத்தின் ராஜா தானே? அதான்  அப்படி சொன்னேன்”, என்றவர் தருவியிடமும்,  நேவா விடமும்  திரும்பி “நேவா, முகில் வேந்தனுக்கு குளிக்க ஏற்பாடு பண்ணு. பாத்து, காயத்தில் தண்ணீர்  படாமல் பாத்துக்கோ. தருவி, எல்லாருக்கும் கிழங்கு அவிச்சு கொடுத்துரு”, என்றார்.
அடுத்து தருவியும், நேவாவும் போன பின்பு, கைத்தாங்களாக முகிலை, அழைத்து கொண்டு குடிலுக்குள் வந்தான் சிக்கன்.
அப்போது “வெந்நீர்  வச்சிட்டேன், அவுகளை குளிக்க வச்சிடு சிக்கா. அவுக   உடுப்பெல்லாம்  இங்கன  வச்சிட்டேன் ”  என்ற படியே,  அங்கு வந்தாள்  நேவா.
அவள் குரலில் திரும்பிய முகில், நேவாவை  பார்த்து “தேங்க்ஸ்”, என்றான். புரியாத விதமாய், அவனை பார்த்தாள் நேவா.
“நன்றி சொன்னேன், என்னை காப்பாத்துனதுக்கு”,  என்றான் முகில்.
“நாங்க ஒண்ணும் செய்யலை. சிக்கன் தான் உங்களை, கீழ இருந்து தூக்கிட்டு வந்தான். ஐயா தான் காப்பாத்துனாக”, என்றவள் சிக்கனிடம் திரும்பி  “சிக்கா உன் ஆளு, கிழங்குக்கு உனக்கு காரம் போடனுமான்னு கேட்டுட்டு வர சொன்னா”,  என்று சிரித்தாள்.
சிக்கனும்,  வெட்க  பட்டு  கொண்டே  “காரம்  குறைச்சலா,  போட்டா  போதும்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான். சிரித்து  கொண்டே வெளியே போன நேவா, மறுபடியும் உள்ளே வந்து “உங்க சொந்தக்காரங்க,  எல்லாம் வராக, உங்களை  நலம் விசாரிக்க!”, என்றாள் முகிலை பார்த்து.
“என்னோட சொந்தக்காரங்களா யாரு?”, என்ற படியே  எட்டி  பார்த்த முகில் திகைத்தான். அங்கு ஒரு குரங்கு வந்தது.
“இவங்க என்னோட சொந்தக்காரங்களா?”
“ஆமா, இவுகளை பாத்து பயந்து தான, அருவில குதிச்சீக?”, என்று சொல்லி கொண்டே, வெளியே போன நேவா மறுபடியும் உள்ளே வந்தாள்.
“இப்ப என்ன?”, என்ற படியே அவளை, பார்த்தான் முகில்.
“உங்களை பாக்க, ஆயா எல்லாம் வந்துருக்காக!”, என்றாள்.
“அப்படின்னா யாரு?”, என்ற படியே வெளியே வந்தான் முகில். அங்கு நிறைய பாட்டிகள், அவன் கையை பிடித்து பேசினார்கள்.
என்ன வென்று, புரியாமல் விழித்தான். “புதுசா இங்க வந்துருக்கீக, அதான் யாருன்னு பாத்துட்டு, உடம்பு எப்படி இருக்குனு, விசாரிக்க வந்துருக்காக”, என்றாள் நேவா.
இவனும் அவர்களை பார்த்து சிரித்தான். அப்போது, ஒரு பாட்டி அவன் முகத்தை தடவி, எதுவோ சொன்னது.
“என்ன சொல்றாங்க?”, என்று நேவாவிடம் கேட்டான். “நீங்க அந்த வானத்துல இருந்து இறங்கி வந்த, ராஜா மாதிரி இருக்கீங்களாம்!”,  என்று சொல்லி  கண்ணடித்தாள்.  அவள், அப்படி கண்ணடித்து, சொல்லிய விதத்தை, ரசித்தான் முகில்.
கண்ணடித்து விட்டு, குறும்பாய் அவனை பார்த்து சிரித்தாள் நேவா.
அதுக்கு பின், சிக்கனின் உதவியால் குளித்தான் முகில். சுட சுட கிழங்கும், களியும்  சாப்பிட கொடுத்தாள் தருவி.
இதை எல்லாம், இதற்கு முன்பு அவன்  சாப்பிட்டா தானே இப்போது சாப்பிடத் தோன்றும்? வேறு வழியில்லாமல் பசிக்கு மட்டும் அதை  சாப்பிட்டான் முகில்.

Advertisement