Advertisement

நல்ல உயரமான மரங்களால், நிறைந்திருந்தது அந்த வனம்.
 
“நீ முன்னாடி நட டா! எனக்கு சுச்சு வருது!”, என்று பின் தங்கினான் முகில். “சரி”, என்று சொல்லி முன்னே நடந்தான் ராம்.
 
ஒரு பத்து அடி எடுத்து வைத்திருப்பான், அதுக்குள்ளே! அவன் முன்னே, ஒரு மலைவாசி ஈட்டி வைத்து கொண்டு நின்றிருந்தான். “ஐயோ!”, என்று அலறினான் ராம்.
 
“எதுக்கு டா இப்படி கத்துற?”, என்று பேண்ட் ஜிப்பை போட்ட படியே, கேட்டான் முகில்.
 
அவனிடம் இருந்து பதில் வராததால், தலையை தூக்கி பார்த்த அவனுக்கும், பயம் தொற்றி கொண்டது.
 
“தைரியமா வந்துட்டோம். ஆனா, இவங்க என்ன செய்வாங்கன்னு யோசிக்கலையே!”, என்ற படியே ராம் அருகில் போய் நின்றான்.
 
“ஏன் டா ராம்? இவங்க நர மாமிசம் எல்லாம், சாப்பிடுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன், நம்மளையும் சாப்பிடுவாங்களோ?”
 
“ஐயோ! பயமுறுத்தாத முகில். நீயாவது ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி, குழந்தை அளவுக்கு வந்துட்ட. நான் இன்னும் எதையுமே பாக்கலை டா. என் வாழ்க்கை இதோடாவா முடியனும்?”
 
“உனக்கு, இது தான் கவலையா ராம்? இப்ப தப்பிக்க ஐடியா சொல்லு”, என்றான்.
 
ஆனால், அதுக்கு அவசியமே இல்லாமல், அந்த மலைவாசி அருகில் வந்து முகிலை, அணைத்து கொண்டான்.
 
உடனே அவனுக்கு ச்சி என்று தான் தோணிச்சு. ஆனால், இப்போது அப்படி சொன்னால், உயிருக்கு ஆபத்து வந்து விட கூடாதே என்று நினைத்து அமைதி காத்தான்.
 
அடுத்து அவனிடம் இருந்து பிரிந்த, அந்த மலைவாசி, அவனுடைய பையை வாங்கி கொண்டு, அவன் கையை பிடித்து கொண்டு நடந்தான்.
 
“எங்க டா கூட்டிட்டு போறான்?”, என்று கேட்டு கொண்டே, அவர்கள் பின்னால் நடந்தான் ராம்.
 
அந்த மலைவாசி கூட்டி போன, இடத்தை பார்த்தார்கள். ஆங்காங்கே மலைவாசிகள், எதாவது வேலையை செய்து கொண்டிருந்தார்கள்.
 
“இங்க தான் நேவா இருக்காளா?”, என்ற படியே கண்களை சுழல விட்டான் முகில். “அவளிடம் சீக்கிரம் போனும், அவளை பேசிய பேச்சிக்கு, மன்னிப்பு கேக்கணும்”, அது தான் அவன் எண்ணம். ஆனால், அவன் கண்களில் அவள் படவே இல்லை.
 
அந்த மலைவாசி, அவனை கூட்டி சென்று  ஒரு இடத்தில், நிறுத்தியதும் ஆங்காங்கே வேலை செய்து கொண்டிருந்தவர்கள், இவர்களை சுற்றி வளைத்து விட்டார்கள்.
 
அப்போது ஒரு முதியவர், ஒரு குடிலுக்குள் இருந்து வெளியே வந்தார். அவரை பாத்ததும், அவன் உதடுகள் தன்னால் பிரிந்து “சரகா” என்று சொன்னது.
 
ராம்க்கு விஷயம் புரிந்தது. “இவன் இங்க தான் வந்துருக்கான். இங்க இருக்க, எல்லாருக்கும் இவனை தெரிஞ்சிருக்கு. இவனுக்கும் சில விஷயம் நினைவு வருது. கூடிய சீக்கிரம் நேவாவை அழைச்சிட்டு, இந்த காட்டில் இருந்து போயிரணும்”, என்று நினைத்து கொண்டான்.
 
“வா பா! முகில் வேந்தன்”, என்று அழைத்தார் சரகா. அவருடைய தமிழில் ராமும், முகிலும் வியந்தார்கள்.
 
முகிலும் அவரை பார்த்து, பேருக்கு சிரித்து வைத்தான். “இவங்களுக்கு தமிழ் தெரியுது. அப்ப,  அவனை கூட்டிட்டு வந்த மலைவாசி, எதுக்கு பேசலை?”, என்று நினைத்தான். அதுக்கு விடையை சரகாவே சொன்னார்.
 
“ஊமையன் சரியா, உன்னை கூட்டிட்டு வந்துட்டான்”, என்று அந்த மலைவாசியின் தோளில் தட்டி சிரித்தார் சரகா.
 
“ஓ! ஊமை போல, அதான் பேசலை. சரி நேவாவை கேப்போம்”, என்று அவன் வாயை திறக்கையில், அவரே குண்டை தூக்கி போட்டார். “நேவா எப்படி இருக்கா? அவளையும் அழைச்சிட்டு வந்துருக்கலாமே”, என்று.
 
அதிர்ச்சி அடைந்தார்கள் ராமும், முகிலும். ஆனால், அவர்கள் அதிர்ச்சியை வித்தியாசமாக பார்த்தாள், அங்கு இருந்த தருவி என்ற பெண். அவளுக்கு, இந்த முகிலை பார்க்க, எதுவோ தப்பாக பட்டது.
 
இவன் பதிலை எதிர்பார்க்காமல், சரகா பேசி கொண்டே இருந்தார். “மறுபடியும் படம் பிடிக்க வந்துட்டியா? சரி உள்ள போய் சாப்பிடு. தருவி உன் சினேகிதியின் கணவனுக்கு சாப்பிட எதாவது கொடு. எல்லாரும் அவங்க அவங்க வேலையை பாருங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.
 
“யார் அந்த தருவி?”, என்று விழித்து கொண்டிருந்தார்கள் இருவரும்.
 
எல்லாரும் போன பின்பு, ஒரு இளம் பெண் மட்டும் அங்கு நின்றாள். அவளும் முறைத்து கொண்டே, “வாங்க!”, என்று சொல்லி விட்டு ஒரு குடிசைக்கு, அழைத்து சென்றாள்.
 
“என்ன டா, இந்த பொண்ணு இப்படி முறைச்சிட்டே கூப்பிடுது?”, என்று கேட்டான் ராம்.
 
“எனக்கு மட்டும் தெரியுமா என்ன? வா அவ கிட்ட நேவாவை பற்றி கேப்போம்”, என்று சொல்லி விட்டு அவள் பின்னே சென்றான்.
 
ஆனால், அவன் கேட்பதுக்கு அவசியம் இல்லாமல், உள்ளே சென்றவுடன் அவளே கேட்டாள். அதுவும் கண்ணில் கனலோடு, முகத்தில் கொலை வெறியோடு கேட்டாள் தருவி, “நேவா எங்கே?”, என்று!
 
அதை கேட்ட இவர்களுக்கு அதிர்ச்சி தான். “எப்படி இந்த பொண்ணு கண்டு பிடிச்சது என்று.
 
“என்ன நான் கேக்குறது புரியலையா? சொல்லுங்க நேவா எங்க? ஓ! எனக்கு எப்படி தெரியும்னு பாக்குறீங்களா? நீங்க வந்ததில் இருந்தே இயல்பா இல்லை. யாரையோ தேடுனீங்க. ஐயா நேவாவை பற்றி கேட்டதுக்கும், நீங்க அதிர்ச்சியானீங்க. சொல்லுங்க நேவா எங்க? அவ எப்படி இருக்கா?”
 
“நேவாவை காணும். அவளை தேடி தான் இங்க வந்தோம்”, என்றான் முகில்.
 
“என்னது காணுமா? ஐயோ! அவளுக்கு என்ன ஆச்சு? எங்க போனா? நீங்க அவளை என்ன செஞ்சீங்க? அவ கிட்ட தலை பாடா அடிச்சிகிட்டேன், உங்களை நம்ப கூடாதுன்னு,.கேட்டாளா? எப்ப இருந்து அவளை காணும்?”, என்று கேட்டாள்.
 
அவள் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், கல்யாணம் முடிந்து கூட்டிட்டு போனது முதல், அவளை வீட்டை விட்டு அனுப்பினது வரை, எல்லாவற்றையும் சொன்னான் முகில். முடிவில் “நான் சொல்றதை எல்லாம் நீங்க நம்புறீங்க தான?”, என்று கேட்டான் முகில்.
 
“நம்புறேன். நீங்க புதுசா பேசுறதை வச்சே எனக்கு தெரியுது, என்னை நீங்க வாங்கன்னு பேசுறதே, உங்களுக்கு நினைவு இல்லைனு தெரியுது!”, என்றாள் தருவி.
 
ராம் இருவரின் உரையாடலை கவனிக்கும், பார்வையாளனாக மட்டும்  இருந்தான்.
 
“நான், நேவா இங்க இருப்பான்னு நினைச்சு தான், அவளை தேடி வந்தேன். வீட்ல இருந்து கிளம்பி இங்க, வந்துருப்பானு நம்புனேன்”, என்று சொல்லி தலையில் கை வைத்து, அமர்ந்து விட்டான் முகில்.
 
“உங்க வீட்ல இருந்து கிளம்பி, நேவா இங்க தான் வந்தா”, என்றாள் தருவி.
 
ஒரு வித எதிர்பார்ப்போடு, ஆவலாக கேட்டான் முகில். “என்ன? இங்க தான் வந்தாளா? அடுத்து எங்க போனா?”, என்று கேட்டான்.
 
“அவ அன்னைக்கு வந்தப்ப, ரொம்ப களைப்பா இருந்தா! வந்த களைப்புன்னு நினைச்சேன். ஆனா, இப்ப தான் தெரியுது, அவ அழுது, ஒஞ்சி, ஒழுங்கா சாப்பிட கூட இல்லாம, அப்படி வந்துருக்கானு”
 
“ப்ளீஸ் மா! உன்னை என் தங்கச்சியா நினைச்சி கேக்குறேன். அவ அன்னைக்கு,  எப்ப வந்தா? என்ன சொன்னா? அடுத்து என்னைக்கு இங்க இருந்து கிளம்புனா? நீ சீக்கிரம் சொன்னீன்னா, அவளை கண்டு பிடிக்க, வசதியா இருக்கும்”, என்று அவனை அறியாமலே தருவியை  ‘வா! போ!’ என்று அழைத்தான்.
 
அவனையே பார்த்து கொண்டிருந்தாள் தருவி. அவள் பார்வையை கூட, உணராமல் புலம்பி கொண்டிருந்தான். “மாசமா வேற இருந்தாளே! வயித்துல பிள்ளையை வச்சிட்டு, எங்க போய் என்ன கஷ்ட படுறாளோ தெரியலையே! அவளுக்கும் என் குழந்தைக்கும் எதுவுமே ஆக கூடாது!”
 
“அவ வயிற்றில் இருந்தது, குழந்தை இல்லை!”, என்று  சொல்லி அடுத்த குண்டை தூக்கி போட்டாள் தருவி.
 
“என்ன?”, என்று அவளை பார்த்தான்.
 
“இப்ப முழு விவரமும் சொல்ல முடியாது, இருட்டின பின்னாடி எல்லாத்தையும் சொல்றேன். இப்போதைக்கு அவ வந்ததை சொல்றேன். அன்னைக்கு! அவ வந்த உடனே, எல்லாரும் நல்ல படியா நலம் விசாரிச்சோம். எங்களை மாதிரி உடுப்பு போடாம, வேற மாதிரி சேலை கட்டிருந்தா. உங்க இடத்துல எல்லாம் அப்படி தான் கட்டுவீங்க  போல? புதுசா தான் எல்லாம் போட்டிருந்தா. நிறைய நகை அணிஞ்சிருந்தா. அவள் முகமும், கண்களும் மட்டும் தான் வாடி இருந்தது. ஆனால், அவள் அலங்காரம் செழிப்பா தான் இருந்தது”, என்றாள் தருவி.
 
“அவ கிட்ட, நான் கொடுத்த ரூபாயை தவிர, எதுவுமே இல்லையே டா!  அப்புறம் எப்படி நகை போட்டிருப்பா?”, என்றான் ராம்.
 
“எனக்கும் தெரியலை டா”, என்றான் முகில்.
 
அவர்கள் பேச்சை கவனித்தாலும், எதுவும் குறுக்கிடாமல்  அமைதியாக இருந்தாள் தருவி.
 
“அடுத்து என்ன மா நடந்தது?”, என்று கேட்டான்.
 
“உங்க வீட்டில் அவளை ராணி மாதிரி வச்சிருக்குறதாவும், சந்தோசமா இருக்குறதாவும் சொன்னா. எங்களை எல்லாம் பாத்துட்டு ரெண்டு நாள் இங்க இருந்துட்டு போறேன்னு சொன்னா. மறக்காம தேடி வந்துருக்கான்னு ரொம்ப சந்தோச பட்டோம். அன்னைக்கு, இருட்டுன பின்னாடி எல்லாரும் பேசிட்டு இருக்கும் போது தான் மயங்கி விழுந்தா? சோதிச்சு பாத்ததுல தான் தெரிஞ்சது, அவள் வயித்தில் எதுவோ கட்டி வளருதுன்னு. சரகா  ஐயா தான் கண்டு பிடிச்சி சொன்னாங்க. அப்புறம், அவ ரெண்டு நாள் எங்க கூட இருந்துட்டு அடுத்த நாள் கிளம்பி போய்ட்டா”
 
“அவ வரும் போது, எதாவது எடுத்துட்டு வந்தாளாமா?”
 
“இல்லையே, ஒண்ணுமே கொண்டு வரலை. போகும் போது தான், அவள் பொருள் கொஞ்சம் எடுத்துட்டு போனா!”
 
“ஓ! அப்ப அவ பழைய பொருள், எதுவும் இங்க இருக்கா?”
 
“ஹ்ம்ம் இருக்கே. வாங்க காட்டுறேன்”,  என்று மற்றொரு குடிலுக்குள், அழைத்து சென்றாள்.
 
“இங்க தான், நீங்க தங்கி இருந்தீங்க. நீங்க போகும் போது, அவ பொருள் எல்லாத்தையும், இங்க தான் வச்சிட்டு போனா. சரி நீங்க இதை பாருங்க, நான் நீங்க குடிக்க கஞ்சி கொண்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் தருவி.
 
“எதாவது இருக்கா?”, என்று நினைத்து அவளுடைய பொருளை பார்த்தார்கள். அவள் உபயோகித்த, உடைகள் தான் இருந்தது.
 
“ஒண்ணுமே இல்லையே டா ராம். இங்க இருந்து எங்க போயிருப்பா? நகை எல்லாம் எப்படி வந்துச்சு? குழப்பமா இருக்கு டா”, என்றான் முகில்.
 
“எனக்கும் தான் டா முகில். ஆனா, எங்க போனாலும் அவ நல்லா தான் இருப்பா. நாம கண்டு பிடிப்போம் வா”, என்று அவன் அழைக்கும் போது, முகிலின் கால் பட்டு நேவாவின் உடை, கீழே விழுந்தது.
 
“இது என்னோட மனைவி போட்டது”, என்று ஆசையோடு எடுத்தவன், அதை மென்மையாக வருடினான்.
 
 “எனக்கு எதுவுமே நினைவு வர மாட்டிக்கு. அப்படி நினைவு இருந்தா, இன்னைக்கு என் பொண்டாட்டியை இப்படி தொலைச்சிருப்பேனா? எங்க போய் கஷ்ட படுறாளோ?”, என்று ராமிடம் சொல்லி கொண்டே உடையை அங்கு வைக்கும் போது, அவன் காலடியில் ஒரு கார்டு விழுந்தது.
நினைவுகள் தொடரும்…..

Advertisement