Advertisement

அத்தியாயம் 2
வானவில்லின் வண்ணங்களும்
மலரின் வாசனைகளும் கொண்டவளே
எப்போதும் உன் நினைவில் நான்!!!
 
“எப்ப டா வந்த?”, என்று சாதாரணமாக கேட்ட ராம், அவன் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்திருந்ததும், திடுக்கிட்டு அவன் அருகில் சென்றான்.
 
“பார்த்திருப்பானோ?”, என்ற கேள்விக்கு விடையாய், அவன் அதை பார்த்து கொண்டிருப்பதே தெரிந்தது.
 
“அப்பாடி பாத்துட்டான்”, என்ற நிம்மதியும், “அடுத்து என்ன?”, என்ற குழப்பமும் ஒரே நேரத்தில் ராமுக்கு வந்தது.
 
அதே குழப்பத்தில் இருந்தவனின் காதில் விழுந்தது முகிலின் கேள்வி, “நேவா யாரு?”
 
மெதுவாக ராமின் அருகில், நெருங்கிய முகில், அவன் சட்டையை பிடித்து கேட்டான். “என்ன டா இதெல்லாம்? ஒழுங்கா உண்மையை சொல்லு, நேவா யாரு? இதுல இருக்கிறதை எல்லாம் பாத்தா, அந்த போட்டோவில் இருக்குறது  நான் தானா? அப்ப! நேவா, என்னோட பொண்டாட்டியா? எதுக்கு டா என்கிட்ட சொல்லலை?”
 
….
 
“சரி போனதை விடு! இப்பவாது  சொல்லு. நேவாவை, எப்படி டா நான் கல்யாணம் செஞ்சேன்? நான் எதுக்கு கோபமா, காரை ஓட்டிட்டு போனேன்? நான் எப்படி இந்த மலைஜாதி பொண்ணை பாத்தேன்? ப்ளீஸ் டா சொல்லு டா. போகும் போது, அப்படி ஒரு பார்வை பாத்துட்டு போனா டா. அவளை போய் என்னவெல்லாம் பேசிட்டேன், ப்ளீஸ் ராம், சொல்லு ராம்”
 
“இல்லை! முகில். டாக்டர் உனக்கு எதையும், நினைவு படுத்த கூடாதுன்னு  சொல்லிருக்கார்”
 
“அவர் என்னையும் தான், ரொம்ப யோசிக்க கூடாதுன்னு சொல்லிருக்கார். உண்மை தெரியலைன்னா யோசிச்சே செத்துருவேன் டா. ப்ளீஸ் சொல்லு”
 
“எனக்கு எதுவும், முழுசா தெரியாது முகில். தெரிஞ்சதை சொல்றேன். உனக்கு படிச்சு முடிக்கிற, வரைக்கும் தான் நினைவு இருக்கு. அதுக்கு பிறகு என்ன நடந்தது தெரியுமா? நீ உங்க அப்பா வேலையை, பாக்க மாட்டேன்னு சொல்லிட்ட. உனக்கு சினிமா படம், புரொடியூஸ் பண்ணனும்னு தான் ஆசை. ஆனா, உங்க அப்பா பணம் தரலை. அப்ப தான், நீ நிறைய போட்டோஸ் எடுத்து, ஒரு பாரின் கம்பெனிக்கு அனுப்புன. அவங்களும் உனக்கு அந்த ஜாபை கொடுத்தாங்க”
 
…….
 
“ஒரு வருஷம், நீ அந்த வேலை தான் செஞ்ச. உன்னோட தயாரிப்பில், உன்னோட திறமையை வச்சு, உன்னோட பணத்தை வச்சு, நீ படம் எடுக்கணும்னு நினைச்சு, ஏதோ கதை எல்லாம் எழுதி வச்ச டா. ஒரு வருஷம் வரைக்கும்,  உன்னோட டார்கெட் மாறலை. உடனே தான் உங்க அப்பா, பாதி பணம் தரேன்னு சொன்னார். நீயும் சந்தோஷத்தோட என்கிட்ட சொன்ன. இப்ப ஆறு மாசத்துக்கு முன்னாடி தான், அந்த பாரின் கம்பெனி, பாரஸ்ட் ஏரியால போட்டோஸ் எடுத்து, அனுப்ப சொன்னாங்க!”
 
……..
 
“அப்ப தான், திருவனந்தபுரம் ஏரியால இருக்குற, பாரஸ்ட்க்கு நீ போன. போகும் போது, என்னையும் கூப்பிட்ட. அம்மாவை, தனியா விட முடியாததுனால, நான் வரலை. அங்க போய்ட்டேன்னு, எனக்கு போன் செஞ்ச. அதுக்கு பிறகு எனக்கு எதுவுமே தெரியாது. இப்ப உனக்கு ஆக்சிடென்ட் ஆகுறதுக்கு, முன்னாடி  எனக்கு போன் செஞ்ச! “நான் ஒரு பொண்ணை விரும்புறேன் டா! எனக்கு இன்னைக்கு தான், கல்யாணம் ஆகிட்டு, நாளைக்கு அவ கூட, வீட்டுக்கு போறேன். நீ அம்மா அப்பா கிட்ட, கொஞ்சம் எடுத்து சொல்லு டா. லவ் பண்ணி கல்யாணம் செஞ்சிகிட்டான்னு சொல்லுன்னு சொன்ன. நானும் போன் பண்ணி, உங்க வீட்டில் பொது படையா சொல்லிட்டு வச்சிட்டேன்”
 
……
 
“அப்புறம் அன்னைக்கு நைட், மறுபடியும் போன் செஞ்சு, “இங்க இருந்து கிளம்பிட்டோம் டா, உனக்கு மெயில் அனுப்பிருக்கேன், நிறைய போட்டோஸ் இருக்கும், அதை ஒழுங்கா வரிசை படுத்திரு! அப்புறம் கல்யாண போட்டோஸ் இருக்கும், ஆல்பம் போட்டுருனு சொன்ன.  அப்புறம் அன்னைக்கு தான், அந்த நேவா பொண்ணு, என்னை அண்ணனு சொல்லி, என்கிட்டே பேசுச்சு. அம்மாவை தவிர, எந்த உறவும் இல்லாத எனக்கு, அவ அண்ணனு கூப்பிட்டது, மனசுக்கு நிறைவா இருந்துச்சு டா முகில். நானும் ஆர்வமா தான் அந்த போட்டோஸ் பாத்தேன். ஆனா, பாத்த பின்னாடி தான் தெரிஞ்சது, அவ மலை வாசின்னு, கொஞ்சம் அதிர்ச்சி தான்!”
 
…..
 
“அப்புறம் அடுத்த நாள், தான் உனக்கு ஆக்சிடென்ட், உடனே வாங்கனு, எனக்கு போன் பண்ணாங்க. உங்க வீட்டுக்கும் தகவல் சொல்லிட்டு, நான் கிளம்பி போனேன். அங்க தான் நீ பயங்கர வேகத்தில், வந்திருக்கன்னு சொன்னாங்க. அப்புறம் உங்க அம்மா தான், நீ கோபமா போனன்னு சொன்னாங்க. அடுத்து நேவாவை, வீட்ல விட்டுட்டு வந்துருப்பாங்க. அவளுக்கு நீ சரியானது தெரியணும்னு, உன் வீட்டுக்கு போன் செஞ்சு, அவ கிட்ட சொன்னேன். அவ உன்னை பாக்கணும்னு அழுகை. உங்க அம்மா அவளை ஒரே திட்டு, அதனால, இப்ப வேண்டாம் மா, சரியான பிறகு, நான் அவன் கிட்ட சொல்லி, உன்கிட்ட பேச சொல்றேன்னு சொல்லிட்டு வச்சேன்”
 
……
 
“ஆனா! டாக்டர், நாங்களா எதுவுமே சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார். நீயும் அவளை எதுவுமே கேக்கலை. சரி வீட்டுக்கு போய் பாத்துக்கட்டும்னு, விட்டுட்டு அவளுக்கு மட்டும் அடிக்கடி போன் செஞ்சு, உனக்கு நல்லா இருக்குனு சொல்லுவேன். அப்புறம் நீ வீட்டுக்கு போகுற, அன்னைக்கு அப்பா தான், உங்க அம்மா பாவம்! போய் பாத்துட்டு வான்னு என்னை எங்க வீட்டுக்கு அனுப்புனாரு. நானும் போய்ட்டேன். ரெண்டு நாள் அங்க அம்மாக்கு முடியலை. அப்புறம் தான், உன்னோட போட்டோ ஆல்பம் கொண்டு வந்து, கடைக்காரர் தந்துட்டு போனார். உடனே போன் பண்ணி உன் கிட்ட பேசுனப்ப தான், நீ பிச்சை காரின்னு சொன்ன. எனக்கு அதிர்ச்சியா இருந்தது. உடனே உங்க அம்மாக்கு போன் பண்ணி, என்னமான்னு கேட்டேன். அவனுக்கு ரெண்டு வருஷம் நினைவு இல்லை. நினைவு படுத்தி, அவன் உயிரோட விளையாடாதே. அவளே அவன் நிழல் மட்டும் போதும்னு, வேலைக்காரியா இருக்க ஒத்துகிட்டான்னு சொன்னாங்க!”
 
…..
 
“அப்புறம்! சும்மா அன்னைக்கு உங்க ரெண்டு பேரையும், பாக்க வந்தப்ப தான், நீ அவளை விரட்டியாச்சுன்னு, குண்டை தூக்கி போட்டுட்ட. பத்தாததுக்கு  மாசமா இருக்கான்னு சொல்லி, நீ காரணமான்னு வேற கேட்ட. உன் பொண்டாட்டி, எனக்கு தங்கச்சி டா!”, என்று சொல்லி விட்டு முகிலை பார்த்தான் ராம்.
 
“சாரி டா ராம், அவ வீட்டை விட்டு போய்ட்டான்னு சொன்ன உடனே, நீ ரொம்ப அதிர்ச்சியா ஆன? அதான் அப்படி அறிவு இல்லாம, கேட்டுட்டேன் டா மன்னிச்சிரு!”
 
“ப்ச் விடு டா, இப்ப தான்  உனக்கு எல்லாம் தெரிஞ்சிட்டே?”
 
“எங்க டா தெரிஞ்சிருக்கு? என் பொண்டாட்டியை,  நானே கேவல படுத்தி அனுப்பிருக்கேன். ஹாஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு போன உடனே, அவ எப்படி ஆசையா பாக்க ஓடி வந்தா தெரியுமா? ச்ச அவ மனசை, நானே நோகடிச்சிட்டேன். இப்ப அவ எங்க போயிருப்பா ராம்?”
 
“எனக்கு நிஜமாவே தெரியலை டா. நைசா உன் வீட்டு,  டிரைவர் கிட்ட தான் விசாரிச்சேன். ஆனா அவர் பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் போய் விட்டேன்னு சொல்லிட்டார். ஒரு வேளை அவ இடத்துக்கே போயிருப்பாளோ டா? உன்கிட்ட கேக்க முடியாததுனால, அங்க தான் போயிருப்பான்னு, நானும் விட்டுட்டேன். அந்த இடம் தெரியுமா? தெரிஞ்சா சொல்லு. போய் தேடி பாப்போம் முகில்”
 
“எனக்கு தான், எதுவுமே நினைவு இல்லையே டா. ஹ்ம்ம் ஒரு ஐடியா அந்த போட்டோவில் எதாவது ஐடியா கிடைக்கான்னு, பாத்துட்டு நீ சொன்ன இடத்துக்கு போய் தேடி பாப்போமா ராம்?”
 
“நல்ல ஐடியா டா முகில், வா பாக்கலாம்!”, என்று ராம் சொன்னதும் அதை பார்த்தார்கள்.
 
ராமின் அம்மாவை, அவனுடைய பக்கத்து வீட்டினரிடம் பார்த்து கொள்ள சொல்லி, ஒப்படைத்து விட்டு, முகிலின் வீட்டிலும், ராமுக்கு உதவி செய்ய ஒரு இடத்துக்கு போறோம் என்று பொய் சொல்லி விட்டு இருவரும் கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
 
சீதா எழுந்து வந்து “எப்ப வந்த ராம்? சரி ரெண்டு பேரும் சாப்பிடுங்க!”, என்று எடுத்து கொடுத்தார்.
 
“சரி”, என்று இருவரும் அமர்ந்தார்கள். பேருக்கு சாப்பிட்டு கொண்டிருந்த முகிலை பார்த்த ராமுக்கு மனசு கஷ்டமாக இருந்தது.
 
அங்கு இருந்து சென்ற முகில் நேராக தன் வீட்டுக்கு சென்றான். அங்கு யாருமே இல்லை. அப்பா எஸ்டேட் போயிருப்பார். வானதி காலேஜ்க்கு, அம்மா எதுவோ கல்யாணத்துக்கு, போக போறேன்னு சொன்னது, நினைவு வந்தது.
 
மெதுவாக நடுங்கும் கால்களுடன், நேவா தங்கி இருந்த அறைக்குள் சென்றான். அங்கு எந்த பொருளும் இல்லை. அதான், மொத்தமாக அவளை துரத்தி விட்டுட்டானே!
 
“படிப்பறிவு இல்லாத பொண்ணை ஆசை கட்டி கல்யாணம் செஞ்சு, கடைசியில் பிச்சைக்காரி, கேவலமானவள்ன்னு சொல்லி வீட்டை விட்டே அனுப்பிட்டனே”, என்று நினைத்து தன்னையே நொந்து கொண்டான். இப்போது அவள் பார்த்த, காதல் பார்வைகளுக்கு அர்த்தம் விளங்கியது.
 
“கட்டுன பொண்டாட்டி, தன்னோட புருஷனை ஆசையா பாக்காம எப்படி இருப்பா? என் போட்டோக்கு முத்தம் கொடுத்ததும், என்ன பேச்சு பேசிட்டேன்?”, என்று நினைத்து கொண்டு, “அவள் தொட்ட தன் போட்டோ குப்பையில் இருக்கா”, என்று பார்த்தான்.
 
“இன்னுமா அது குப்பையில் இருக்கு?”, என்று நினைத்தாலும் அவன் கால்கள், தன்னால் குப்பை பாக்ஸ் அருகே சென்றது. ஆனால், அப்போது அவன் கண்ணில் விழுந்தது, செல்ப்பில் இருந்த அவனுடைய ஓட்ட பட்ட புகை படம். அதை பார்த்ததும் அவன் கண்கள் கண்ணீரை சிந்தியது.
 
தன்னுடைய போட்டோவை ரசித்தவளை நார் நாராக கிழித்து அனுப்பியிருக்கிறான். அவளோ கிழிந்த போட்டோவை ஒட்டி வைத்திருந்தாள். 
“இது வரைக்கும் உன்னை விரும்புனது, எனக்கு நினைவு இல்லை நேவா. ஆனா, இனிமே இப்ப இந்த நொடியில் இருந்து,  உன்னை மனசார விரும்புறேன். உன் மனசை கொன்ன நானே அதுக்கு உயிர் கொடுப்பேன். இந்த உலகத்தில், நீ எந்த மூலையில் இருந்தாலும்! உன்னை கண்டு பிடிப்பேன் நேவா. பிச்சைக்காரின்னு சொன்ன நானே, உன்னை மஹாராணி மாதிரி, வாழ வைப்பேன்”, என்றவன் அவனுடைய அறைக்கு சென்றான்.
 
“நான் போட்டோ எடுத்தேனாம், கதை எழுதுனேனாம், படம் எடுக்குற கனவு, எனக்கு எப்ப வந்தது? நேவா எப்படி என் வாழ்க்கையில் வந்தாள்?”, என்று யோசித்து கொண்டே அந்த அறையை தலைகீழாய் குடைந்தான்.
 
எது தெரிந்ததோ  இல்லையோ? ஆனால் நேவா இருக்கும் இடம் மட்டும் தெரிந்தது. ஆறு மாதம் முன்பு அங்கு போக, அவன் பல அட்ரஸ் எழுதி, அதில் அந்த திருவனந்தபுரம் காட்டை மட்டும், வட்டம் போட்டு வைத்திருந்தான்.
 
எதுவோ! ஒரு நிம்மதி, மனம் முழுவது பரவியது. “உன்கிட்ட வந்துட்டே இருக்கேன் நேவா!”, என்று வாய் விட்டே சொன்னான். மனசுக்குள்ள சிறு பயமும் வந்தது.
“ஒரு வேளை! அவள் அங்கே போகாமல் இருந்திருந்தால், அவளுக்கு எதுவும் ஆயிருந்தால்!”, இன்னும் என்ன என்ன கற்பனையோ! அவனை வதைத்தது.
 
“இதுக்கு மேல தாமதிக்க முடியாது!”, என்றவன் ஒரு பையில் உடை மற்றும்  அந்த அட்ரஸ் எல்லாம் எடுத்து வைத்தான்.
 
அன்று மாலை வீட்டுக்கு வந்த அனைவரிடமும், “ராம்க்கு ஒரு லேண்ட் பிரச்சனை! அதை சரி பண்ண போறோம். வர ரெண்டு மூணு நாள் ஆகும்”, என்று பொய் சொல்லி விட்டு, கிளம்பி விட்டான்.
 
“பாத்து பத்திரம் பா!”, என்று மட்டும் சொல்லி விட்டு, அவன் சொன்ன பொய்யை நம்பி வழி அனுப்பினார்கள்.
 
அன்று இரவே, கிளப்பி காலையில், அங்கே இறங்கினார்கள் இருவரும்!
 
புது ஊரில்! இறங்கியவுடன் “என்ன செய்ய?”, என்று இருவருக்குமே புரிய வில்லை.
 
ஆனாலும், அந்த காட்டை பற்றி விசாரித்தார்கள். “எப்படி போவது?”, என்று தெரியாமல் குழம்பும் போது, அங்கு ஒருத்தர் சொன்னார் “ஜீப்பில் தான் போக முடியும்”, என்று!
 
நன்கு வழி தெரிந்த, ஜீப் டிரைவர்  ஒருவரை அழைத்து கொண்டு, கிளம்பினர் இருவரும்.
 
“நீங்க சொன்னது, இந்த காடு தான் நினைக்கிறேன் சார்!”, என்றார் ஜீப் டிரைவர்.
 
“இல்லை! இங்கே ஒரு அருவி இருக்கும். அது வழியாக தான். ஒரு பாதை போகும்”, என்றான் முகில்.
 
அவனை அதிர்ச்சியாக, திரும்பி பார்த்தான் ராம். முகிலுக்கு கொஞ்ச கொஞ்சமாக, நினைவு வருவது புரிந்தது, “எதையும், அதை பற்றி பேசி! அவனை குழப்ப வேண்டாம்”, என்று நினைத்து கொண்டு அமைதியாக பின்னால் சென்றான்.
 
“அருவியா? ஆமா சார் இருக்கு! வாங்க போகலாம்”, என்று கூட்டி சென்றான்.
 
“இதுக்கு மேல, ஜீப் போகாது சார்! ஒத்தையடி பாதை தான் இருக்கு. நடந்து தான் போகணும். ஆனா, நீங்க கேட்ட இடம், இது தான் சார்”, என்று சொல்லி விட்டு பணம் வாங்கி கொண்டு, சென்று விட்டான் டிரைவர்.
 
அந்த காட்டை பார்த்து, ராமுக்கு பயமாக இருந்தது. “நைட் எல்லாம், இங்க வந்தோம் செத்தோம்!”, என்று நினைத்து கொண்டான்.
 
ஒரு வழியாக, அந்த பாதையில் நடக்க ஆரம்பித்தார்கள். ராமுக்கு இருந்த பயம், முகிலுக்கு சுத்தமாக இல்லை. பல முறை, அந்த இடத்துக்கு வந்து போன நினைவு அவனுக்கு இருந்தது. தைரியமாக முன்னேறி சென்றான். அவன் பின்னே சென்றான் ராம்.
 

Advertisement