Advertisement

அத்தியாயம் 11
பனித்துளி தீண்டிய புது மலரே
உன் வாசனை என்னுள்
மொத்தமாக பரவிச் செல்கிறது!!!
 
“எத்தனை நாள் முகில், நாம இங்க இருக்க முடியும்? நம்ம வீட்டுக்கு போகணும் தானே? இது என்ன தான் மாமா வீடா இருந்தாலும், இது அடுத்தவங்க வீடு. உங்களுக்கு எப்படினாலும், இங்க கம்பர்ட்டபுளா இருக்காது”, என்று ஆரம்பித்தாள் ராதிகா.
 
“ஆமா மா, இங்கயே நாம இருக்க முடியாதே! அதான், என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்”, என்றான் முகில்.
 
“நியாயமா பாத்தா, நாம உங்க வீட்டுக்கு தான் போகணும் முகில் ஆனா…..”
 
“எனக்கு புரியுது ராதிகா. என் மேல உள்ள காதலுக்காக, நீ என்னோட வீட்டுக்கு வந்தாலும் அங்க உன்னால சந்தோசமா இருக்க முடியாது. நாம அங்க போக வேண்டாம். நீ இங்க தான வேலை பாக்குற? என்னோட வேலையும் இங்க தான் ஆரம்பிக்க போறேன்”, என்று சொல்லி அவள் வயிற்றில் பாலை வார்த்தான்.
 
அதிர்ச்சி மற்றும் சந்தோசத்தோடு அவனை பார்த்தாள் ராதிகா.
 
“நிஜமாவா முகில்?”
 
“ஹ்ம்ம் ஆமா”
 
“எனக்காகவா?”
 
“ஹ்ம்ம் நமக்காக. இந்த ஐடியா கொடுத்ததே அப்பா தான். எனக்கு உன்னோட மனசு புரிஞ்சது ராதிகா. அங்க வந்தா, உனக்கு பழைய நினைவுகள் இருந்துட்டே இருக்கும். நம்ம எல்லாம் மனுசங்க தான? வாழ போற கொஞ்ச நாளில் நிம்மதி இல்லாமல் வாழுறதை விட, சந்தோசமா இருந்துட்டு போயிறலாமே?”
 
“என் மேல உங்களுக்கு கோபம் ஏதும் இருக்கா? என்ன இருந்தாலும், இது தனி குடுத்தனம் மாதிரி தான். அதாவது, உங்க வீட்டில் இருந்து உங்களை பிரிக்கிற மாதிரி தான். எப்படினாலும், உங்க அம்மா என்னை அப்படி தான் சொல்லுவாங்க”
 
“அம்மா வயசானவங்க. அவங்களை நாம மாத்த முடியாது. அவங்க சொல்படி நம்மளால நடக்கவும் முடியாது. கொஞ்ச நாளில் அவங்களே உணருவாங்க. இப்ப என்ன? வேலைக்காக நிறைய பேர், பெத்த பிள்ளைங்களை பிரிஞ்சு இருக்குறது இல்லையா? நினைச்சா வந்து நம்மளை பாத்துட்டு போக போறாங்க? அவங்களுக்கு என்னோட பிரசன்ஸ் தேவைன்னா, அங்க போக போறேன் அவ்வளவு தான?”
 
அவன் பதிலில், அவனை நெருக்கமாக அணைத்து கொண்டாள் ராதிகா. “ஆனா வீடு, நாம இங்க தங்க முடியாதே முகில்”, என்று கேட்டாள்.
 
“ஹ்ம்ம் தெரியும் மா, இங்க இருக்க முடியாது. ஆனா, ராதிகா வீட்டில் இருக்கலாமே? என்ன முழிக்கிற? நாம நாளைக்கே உன்னோடே வீட்டுக்கு போகலாம்”
 
“நிஜமாவா முகில்?”, என்று கண்களை விரித்தாள் ராதிகா.
 
“உனக்கு நிறைய டவுட் வருது, வா ப்ரூவ் பண்றேன்”, என்று சொல்லி கொண்டே அவளை தன்னை நோக்கி இழுத்தான்.
 
அடுத்து எல்லா வேலையும் துரிதமாக நிகழ்ந்தது. அடுத்த நாளே, அந்த வீட்டுக்கு சென்றார்கள். அங்கேயே எல்லா பொருள்களும் இருந்ததால், எதுவும் வாங்க வேண்டியது இல்லை.
 
கார்த்திக் பணி புரியும் கம்பெனியில், வேலைக்கு அப்ளை செய்தான் முகில்.
 
“படம் எடுக்க போறேன்னு சொன்னீங்க”, என்று கேட்டாள் ராதிகா.
 
“அது என்னோட ஆசை. ஆனா, அதுக்கு உழைக்கவும் செய்யணும்ல? என்ஜினீயர் வேலை என்னோட உழைப்பா இருக்கட்டும். படம் எடுக்குறது என்னோட ஹாபியா இருக்கட்டும்”, என்று சொல்லி விட்டான்.
 
அடுத்து ஒரு பெரிய டேரக்டரை பிடித்து, அவனுக்கு தேவையானதை கற்று கொண்டு, அவரையும் சேர்த்து கொண்டு பட வேலையை ஆரம்பித்தான்.
 
எல்லாம் நல்ல படியாக போய் கொண்டிருக்கும் போது தான், ஒரு நாள் மேகநாதன் போன் செய்தார். “வானதி  படிச்சு முடிச்சிட்டா, அவ விரும்புற பையன் வீட்டில் இந்த மாசமே கல்யாணம் வைக்கலாம்னு சொல்றாங்க. நான் நாள் எல்லாம் குறிச்சிட்டேன். ரெண்டு நாள் சொன்னாங்க. உனக்கு எது வசதி படும்னு சொல்லு பா, அதில வைப்போம்”, என்றார் அவர்.
 
“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை பா. உங்க வசதி படி வைங்க”, என்று சொல்லி விட்டான். “ஆனால், எப்படி அங்க போறது? நான் மட்டும் தனியா போக முடியாது. ராதிகாவை எப்படி அங்க கூப்பிட முடியும்?”, என்று இப்போது முகில் தவிக்க ஆரம்பித்தான்.
 
இது எதுவும் தெரியாமல் இருந்தாள் ராதிகா.  அப்போது தான், அவளுக்கு வசந்தி போன் செய்தாள்.
 
“யாரோ”, என்று நினைத்து “ஹலோ”, என்று சொன்னாள் ராதிகா.
 
“நான் வசந்தி பேசுறேன் மா. உன்னை நான் நடத்துன விதம் தப்பு தான். பணக்கார இடத்தில வானதிக்கு நிச்சயம் ஆகி இருந்தது. அவனுக்கும் அதே மாதிரி இடத்தில் கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு நினைச்சேன். உங்க கல்யாணம் எனக்கு அதிர்ச்சி தான். உங்க கல்யாணத்தால வானதி கல்யாணத்திலும் ஏதும் பிரச்சனை வருமோன்னு பயந்தேன். அதனால் தான், உன்னை வீட்டை விட்டு அனுப்பணும்னு நினைச்சு அப்படி செஞ்சிட்டேன்.
 
உன்னை கஷ்ட படுத்துனதுக்கு, என்னை மன்னிச்சிக்கோ மா. அதுக்கு தான் என் பிள்ளையை நினைச்ச நேரத்தில் பாக்க முடியாம தவிக்கிறேன். பரவால்ல, எங்க இருந்தாலும் நீயும் அவனும் நல்லா இருங்க. ஆனா, வானதிக்கு அடுத்த வாரம் கல்யாணம்னு உனக்கு தெரியும் தான மா? அவன் சொல்லிருப்பான். இங்க வீட்ல சொந்த காரங்க எல்லாம் வர ஆரம்பிச்சிட்டாங்க. பையனையும், மருமகளையும் எங்கன்னு கேக்குறாங்க.
 
இப்பவும் சுயநலமா பேசுறேன்னு நினைக்காத மா. என் தப்பை உணர்ந்து தான் மன்னிப்பு கேக்குறேன். கல்யாணம் முடியுற வரைக்கும், இங்க அவனை கூட்டிட்டு வா மா. ரெண்டு வாரமா அவன் கிட்ட நானும் உங்க மாமாவும் கெஞ்சிட்டோம். எதுவுமே சொல்ல மாட்டிக்கான். நீயாவது கோபத்தை மறந்துட்டு வா மா. நான் வைக்கிறேன்”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டாள்.
 
“அவங்க பெரிய மனுஷ தனமா மன்னிப்பு கேட்டுட்டாங்க. நான் தான் இன்னும் கோபத்தில் இருக்கேனோ? என்ன செய்ய?”, என்று தெரியாமல் ஒரு நிமிடம் யோசித்தவள், “பிறகு யோசிக்கலாம். இப்ப அங்க கிளம்பனும்”, என்று நினைத்து ஒரு வாரத்திற்கான துணிகளை எடுத்து வைத்தாள் ராதிகா.
 
டிராவல்ஸ் அழைத்து டிக்கட் புக் செய்து விட்டு அவனுக்காக காத்திருந்தாள்.
 
முகில் வந்த உடனே “என்ன ராதிகா, எங்க போறோம்?”, என்று கேட்டான்.
 
“நீங்க, எதுக்கு முகில் என்கிட்ட சொல்லலை? உங்க தங்கச்சி கல்யாணத்துக்கு உங்களை போக விட மாட்டேன்னு நினைச்சு சொல்லலையா?”
 
“ஓ அம்மா சொன்னாங்களா? வேற எதுவும் உன்னை ஹர்ட் பண்ற மாதிரி பேசினாங்களா? மறைக்கணும்னு நினைக்கல மா. என்ன செய்யனு தெரியாம தான், அமைதியா இருந்தேன் சாரி”
 
“சரி அதெல்லாம் அப்புறம் பேசலாம். முதலில் கிளம்புவோம் வாங்க”, என்று கிளம்பினாள் ராதிகா. சந்தோசத்துடன் கிளம்பினான் முகில்.
 
ஒரு நொடி அவன் முகத்தில் வந்த சந்தோசத்தை இமைக்க மறந்து பார்த்தாள் ராதிகா.
 
ஒரு வழியாக இருவரும், இங்கே வந்து சேர்ந்தார்கள். உள்ளே வரும் போதே இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்றாள் வசந்தி.
 
“இந்த வரவேற்பு நேவாவா இருந்தா கிடைச்சிருக்குமா?”, என்று குதர்க்கமாக யோசித்தாள் ராதிகா. எந்த வீட்டுக்கு வரவே மாட்டேன் என்று சொல்லிவிட்டு போனாளோ, அதே வீட்டில் கால்கள் நடுங்க அடி எடுத்து வைத்தாள். மனம் முழுவதும் பாரம் ஏறி அமர்ந்தது. “அவனுக்காக வந்துட்டேன். ஆனா, எனக்கு கஷ்டமா இருக்கே”, என்று நினைத்து கொண்டு அவனை பார்த்தாள்.
 
முகிலும் வேதனையான முகத்தோடு, அவளை தான் பார்த்து கொண்டிருந்தான். அவனுடைய அறைக்கு சென்றவுடன் “உன்னை கஷ்ட படுத்திட்டேன்ல, இங்க வர வச்சு. சாரி ராதிகா”, என்றான் முகில்.
 
அவன் வருந்துவது பிடிக்காமல் சகஜமாக இருக்க முயற்சி செய்தாள் ராதிகா. ஆனாலும், மனம் என்னும் குரங்கு கண்டதையும் யோசித்து அலைபாய்ந்தது. “இந்த ரூம்க்கு தான என்னை வர கூடாதுன்னு சொன்னாங்க”, என்ற நினைப்பு வந்தது.
 
முகிலையும், ராதிகாவையும் அமர வைத்து வசந்தி சாப்பாடு பரிமாறும் போது, “இந்த சாப்பாட்டை கூட என்னை அவனுக்கு, பறி மாற விடாம செஞ்சாங்களே”, என்று தோன்றியது.
 
இப்படி ஒவ்வொரு நினைவுகளாலும் அலைக்கழிக்க பட்டாள்.
 
“கடைசியா, நான் தப்பானவளா தான இந்த வீட்டை விட்டு போனேன்”, என்று நினைத்து அவளுடைய உயிர் துடித்தது.
 
எல்லாவற்றையும் மறந்து, ராதிகா ராதிகா என்று தாங்கும் மாமியார் மேல் எந்த ஒரு புதிய உணர்வும் தோன்றவே இல்லை. வானதி அண்ணி என்று அழைத்தால் மட்டும் முன்னாடி முகத்தை திருப்பி கொண்டு போனது மறந்து விடுமா? “இங்க இருந்து எவ்வளவு சீக்கிரம் போக முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் போகணும்”, என்று நினைத்து கொண்டாள் ராதிகா.
 
அவளுடைய ஒவ்வொரு யோசனையையும், பார்த்து கொண்டு தான் இருந்தான் முகில். ஒரு வழியாக திருமண நாளும் வந்தது. மும்பையில் இருந்து, தனா மற்றும் வள்ளி வந்திருந்தார்கள்.
 
அகிலா வருவாள் என்று நினைத்து ஏமாந்தான் ராம். இப்போது எல்லாம் அகிலா அவனிடம் பேசுவதை விட அவன் அம்மா சீதாவிடம் பேசுவது தான் அதிகம். அவள் காலேஜ் முடிக்க ஆறு மாசம் இருந்தது. காலேஜ் முடிந்து வரும் முதல் முகூர்த்தத்தில் ராம் மற்றும் அகிலா கல்யாணமும், அடுத்த முகூர்த்தத்தில் கார்த்திக் மற்றும் வித்யா கல்யாணமும் முடிவு செய்ய பட்டிருந்தது. “எப்போது டா முடியும்? எப்ப அவளை கல்யாணம் செஞ்சு இங்க கூட்டிட்டு வருவோம்”, என்று காத்து கொண்டிருந்தான் ராம்.
 
கல்யாணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து செல்ல பட்டாள் வானதி. போகும் போது வசந்தியும், அவளும் கட்டி கொண்டு ஒரே அழுகை. வானதி போன பின்னும், வசந்தி கவலையாக தான் இருந்தாள்.
 
வசந்தியை பார்த்து ராதிகாவுக்கு கஷ்டமா இருந்தாலும், ஆறுதல் சொல்ல மட்டும் முடியவே இல்லை அவளால். கல்யாணம் முடிந்த அன்று இரவு, ராதிகாவையும் முகிலையும் சேர்த்து வைத்து சுற்றி போட்டாள் வசந்தி. “எல்லாரும் உங்க  ஜோடி பொருத்தத்தை பார்த்து தான் கண்ணு வச்சாங்க அதான்”, என்று காரணமும் சொன்னாள் வசந்தி.
 
ராதிகாவுக்கு  “பிச்சை காரியை, பிச்சை காரின்னு சொல்லாமல் வேற என்ன சொல்லணும்?”, என்று வசந்தி சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்தது. “அன்று அப்படி பேசின வாய், இன்று இப்படி பேசுது”, என்று நினைத்து கொண்டாள்.
 
கல்யாணம் முடிந்து இரண்டு நாள் ஆகி விட்டது. திரும்பி போகணும் என்பதை பற்றி, முகில் எதுவுமே பேச வில்லை. “எப்போது போவோம்?”, என்று ராதிகாவுக்கு கேட்கவும் தயக்கமாக இருந்தது.
 
அன்று இரவு சாப்பிடும் போது, முகிலே சொன்னான் “நாளைக்கு கிளம்புறோம் மா ஊருக்கு”, என்று.
 
“அப்பாடி”, என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள் ராதிகா. மறுபடியும் தன் கண்ணீர் டேமை திறந்தாள் வசந்தி. முகில் தான் சமாதான படுத்தினான். “பேசாம ரெண்டு பேரும் அங்க வாங்க”, என்று அப்பா அம்மாவை அழைத்தான்.
 
“இவ்வளவு பெரிய எஸ்டேட் விட்டுட்டு, எங்களால அங்க வர முடியாது பா. நமக்கு கீழ வேலை பாக்குறவங்க எல்லாம் பாவம். நீ தான் கவனிக்கலை. நானாவது இருந்து பாக்கணுமே”, என்று சொல்லி விட்டார் மேகநாதன்.
 
அடுத்த நாள் மும்பை கிளம்பி விட்டார்கள். வீட்டுக்கு வந்த ராதிகாவுக்கு கிளம்பும் போது அழுத வசந்தியின் முகமும், கசங்கின முகிலின் முகமும் நினைவு வந்தது. அதையே யோசித்து கொண்டிருந்தாள்.
 

Advertisement