Advertisement

“ஹ்ம்ம் ஆமா, உனக்கு என்ன ஆச்சுன்னு எப்படி கோப பட்டா தெரியுமா? அப்ப அங்க தான் உன்னோட டிரஸ் ஆசையா தொடும் போது, தனா அப்பா வோட கார்டு கீழே விழுந்தது. நீ எனக்கு கிடைக்கணும்னு ரொம்ப அழுதேன் தெரியுமா?”
 
இப்போது அவனை இறுக்கி கொண்டாள் ராதிகா.
 
“அப்புறம் இங்க வந்து, அவர் கிட்ட பேசி சரி செஞ்சேன். ஆனாலும், உனக்கு லெட்டர் கொடுத்தபோது எனக்கே பயம் தான்”
 
“எதுக்கு?”
 
“என்கவுன்டர்ல போட்டு தள்ளிட்டேனா? அதுக்கு தான்”
 
“ஆமா ஆமா அதை செஞ்சிருக்கணும். கமிஷனருக்கே கவிதை எழுதி கொடுத்தீங்க தான?”
 
“நான் கமிஷனருக்கு கொடுக்கலை. என்னோட காதலிக்கு கொடுத்தேன்”
 
“இப்படி சொல்றவர், அன்னைக்கு எதுக்கு போனீங்களாம்?”
 
“நீங்க தான மேடம் போக சொன்னீங்க?”
 
“அது சும்மா சொன்னது”
 
“இல்லை ராதிகா. எனக்கு அன்னைக்கு, உன்னோட அருகாமை ரொம்ப பாதிப்பை ஏற்படுத்திடுச்சு. என்னால உன்னை விலக்கி நிறுத்த முடியலை. நீ வேற அப்படியே சமத்தா என்கிட்ட ஓட்டிகிட்டியா? என்னால முடியவே இல்லை. அதான், ஊருக்கு போனேன்”, என்று சொல்லி மண்டையில் ஒரு கொட்டு அவளிடம் இருந்து வாங்கினான்.
 
“அப்புறம் தருவி கிட்ட, நீ கிடைச்சிட்டேன்னு சொல்லணும்னு அங்க போனேன். அப்ப தான் சரகா ஐயா, நீ இப்ப சொன்ன விஷயங்களை சொன்னார். அன்னைக்கு, உன்னை டிவி ல பாக்கும் போது, ரொம்ப பிரமிப்பா இருந்தது. உன்னோட அம்மா, அப்பா ஆத்மா சாந்தி அடைஞ்சிருக்கும் மா”, என்றான் முகில்.
 
“ம்ம்”, என்று சொல்லி அவன் மேல் சாய்ந்து கொண்டவளை இறுக்கி கொண்டான் முகில்.
 
“அம்மா, அப்பாக்கு எல்லாம் ரொம்ப அதிர்ச்சி தெரியுமா, உன்னை பற்றி தெரிஞ்சு?”, என்று கேட்டவனிடம் இருந்து விலகினாள் ராதிகா.
 
அவள் மனநிலை புரிந்தவன், அவள் கையை பிடித்து இழுத்து, “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? தருவி இப்ப மாசமா இருக்காளாம்”, என்றான்.
 
கோபத்தை மறந்து சந்தோஷத்தோட “நிஜமாவா?”, என்று கேட்டாள் ராதிகா.
 
“ஆமா. சிக்கனும், அவளும் ஒரே வெக்கம். உன்னை அங்க கூட்டிட்டு வர சொன்னாங்க. நீ பிரீ டைம் சொல்லு, போகலாம்”
 
“ஹ்ம்ம் சரி”, என்றவள், அவன் தோளில் சாய்ந்தாள். “நம்ம எப்ப ஜுனியரை ரிலீஸ் பண்றது?”, என்று கேட்டான் முகில்.
 
“ஆமா, என்னமோ ஒன்னும் செய்யாத மாதிரி தான்”, என்றவளை, தூக்கி கொண்டு படுக்கையில் விட்டான்.
 
அவன் கழுத்தில் கை போட்டு, தன்னை நோக்கி இழுத்து கொண்டாள் ராதிகா.
 
அடுத்த இரண்டு நாளில், ராம் தன்னுடைய அம்மாவுடன் கிளம்பி டெல்லி வந்தான்.
 
அதே நேரம், முகில் வீட்டில் இருந்தும் எல்லாரும் வந்தார்கள். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ராதிகா திகைத்தாள் கூட்டத்தை பார்த்து.
 
எல்லாரையும் வர வேற்றவள், வசந்தியிடம் “என்ன பேச?”, என்று தெரியாமல் விலகி நின்றாள். வசந்தியும் “அவள் பேசணும்”, என்று எதிர் பார்க்க வில்லை.
 
அடுத்த நாள் வள்ளி உதவியுடன், அலங்கரிக்க பட்டு கோயிலுக்கு அழைத்து செல்ல பட்டாள் ராதிகா.
 
அங்கே, மாப்பிள்ளையாக முகில் அமர்ந்திருந்தான்.
 
ஏற்கனவே  “இப்படி தான் இருக்கும்”, என்று அனுமானித்தவள், அவனை காதலுடன் பார்த்தாள்.
 
கண்களை சிமிட்டினான் முகில். அவன் அருகே சிரித்து கொண்டே அமர்ந்தவள், “மூணு மாசம் முன்னாடியே மேட்டர் முடிச்சிட்டு, இப்ப நல்ல பையன் மாதிரி மாப்பிள்ளையா உக்காந்துருக்கீங்க”, என்று அவன் காதில் கேட்டாள்.
 
“அது நான் முடிக்கலை, நீ தான் என்னை சுவாகா பண்ணிட்ட. அன்னைக்கு தான் என்ன நடந்ததுன்னே எனக்கு தெரியலையே”, என்று சிரித்தான். அவன் கைகளில் கிள்ளினாள் ராதிகா.
 
இப்போது, எல்லா சொந்தங்கள் முன்பு அவளுக்கு மறுபடியும் தாலி அணிவித்து மனைவியாக்கி கொண்டான்.
 
அடுத்து இரண்டு நாளில், ஹனி மூன் என்று சொல்லி விட்டு அவளை அழைத்து கொண்டு சென்று விட்டான்.  அவன் கூட்டி போகும் இடத்தை புரிந்து கொண்டாள் ராதிகா.
 
அந்த காட்டுக்கு தான் கூட்டி சென்றான். அவனுடன் சந்தோசமாக பேசி கொண்டு தான் ராதிகா வந்தாள். ஆனால், அவள் மனதில், ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. அடுத்து அவன் வீட்டுக்கு செல்வதை பற்றி.
 
“இங்கே தான் தன்னுடைய வேலை என்றாலும், கல்யாணம் முடிந்து ஒரு பெண் கணவன் வீட்டுக்கு போவது தான இயல்பு. அந்த இயல்பான செயலை என்னால் செய்ய முடியுமா? அவன் வீட்டுக்கு என்னால் போக முடியுமா?”, என்று தனக்குள்ளே கேட்டு கொண்டாள்.
 
இந்த கேள்வியை அவனிடம் கேக்க, அவளுக்கு பயமாக இருந்தது. “ஆமா, எங்க வீட்டுக்கு தான் நீ வரணும்னு முகில் சொல்லிட்டா, என்னால என்ன செய்ய முடியும்?”, இந்த குழப்பம் மனதில் இருந்தாலும், வெளியே காட்டாமல் இருந்தாள்.
 
காட்டுக்கு சென்றவுடன் எப்பவும் போல், அனைவரும் அவர்களை வர வேற்றார்கள். தருவி ஓடி வந்து இவளை கட்டி அணைத்து கொண்டாள். அவர்களுடைய நேவாவாகவே, அவர்களுடன் பேசினாள் ராதிகா.
 
அங்கே போய் ரெண்டாவது நாள், அவளை அந்த இடத்துக்கு அழைத்து சென்றான். அவர்கள் அன்று ஒரு நாள் மாட்டிக்கொண்ட இடம்.
 
“இங்க எதுக்கு வந்துருக்கோம்?”, என்று கேட்டாள் ராதிகா.
 
“நினைவு சின்னத்தை பார்க்க”, என்று சொல்லி அவளை வெட்க பட வைத்தான் முகில்.
 
அடுத்து வந்த நாட்களில், அவன் கைகளுக்குள்ளே தான் இருந்தாள் ராதிகா. அவனும், அவளை விலக்க வில்லை. ஒரு வாரம் கழித்து ஊருக்கு சென்றார்கள். மனதில் எழுந்த குழப்பம் ராதிகாவை ஆட்டி படைத்தது.
 
“அங்க போன உடனே என்ன சொல்லுவான்? அவனுடைய அம்மா இங்க கல்யாணத்துக்கு வந்த போது, முதல் நாள் ஒழுங்கா பேசலை தான். ஆனா, அடுத்த நாளில் இருந்து சகஜமாக பேசினார்கள். ஆனால், என்னால் தான் அவங்களுடன் ஒன்றை முடிய வில்லை. இப்ப எல்லாத்தையும் மறந்துட்டு அவங்க பேசினாலும் எனக்குள்ளே நெறிஞ்ச முள்ளாய் குத்துதே.
 
அவங்க வீட்டை விட்டு விரட்டுனது, நானா இல்லாமல் நிஜமாவே ஒரு மலைஜாதி பொண்ணா இருந்திருந்தா. படிப்பறிவில்லாத பொண்ணு, அந்த ஊரில் என்னவாகி இருக்கும்? முடியாது, என்னால சத்தியமா அவங்களை மன்னிக்க முடியாது. கொலை செய்வதும் ஒன்று தான். அடுத்தவங்க மனதை காய படுத்துவதும் ஒன்று தான். முகில் கிட்ட பேசியே ஆகணும். என்ன சொல்லுவான்? எனக்கு என் குடும்பம் தான் முக்கியம்னு சொல்லுவானோ? அப்படி சொன்னாலும் அது நியாயம் தான். அவனுக்கு அவன் குடும்பம் முக்கியம் தான? ஆனா, என்னால அவன் கூட அங்க போக முடியாதே.
 
முகிலை விட்டு கொடுக்கணுமா? இல்லை, என்னோட பொணம் கூட இந்த வீட்டுக்கு வராதுன்னு சொன்ன என்னோட தன்மானத்தை விட்டு கொடுக்கணுமா?  நியாயமா பாத்தா காதலுக்காக, என் தன்மானத்தை விட்டு தரணும் தான். ஆனால், என்னால முடியுமா?”, இந்த குழப்பத்தில் நிம்மதி இல்லாமல் தவித்தாள் ராதிகா.
 
ஆனால், எந்த குழப்பமும் இல்லாமல் தெளிவாக இருந்தான் முகில். “காதலுக்காக, அவள் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து விட்டாள். இனியும் அவளை கஷ்ட படுத்த கூடாது”, என்று நினைத்து கொண்டான் முகில்.
 
ஹனிமூன் முடித்து விட்டு மும்பை வந்து இறங்கினார்கள். எல்லாரும், இவர்களை சந்தோசமாக வரவேற்றார்கள். அடுத்து நாள்களும் மெதுவாக நகர்ந்தது. கல்யாணம் முடிந்து இரண்டு வாரம் முடிந்த பின்னர், வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள் ராதிகா.
 
முகில் எதுவும் செய்யாமல் இருந்தான். அவனிடம் இது பற்றி பேசணும் பேசணும் என்று நினைத்தாலும், “எனக்கு என் குடும்பம் தான் முக்கியம். நீ வேண்டாம்னு சொல்லிருவானோ?”, என்ற பயம் அவளை பேச விடாமல் செய்தது. “இன்னைக்கு கண்டிப்பா பேசணும்”, என்று நினைத்து கொண்டு, அவன் வரவுக்காக அவளுடைய அறையில் காத்திருந்தாள் ராதிகா.
 
கீழே, “என்னைக்கு வேலையை ஆரம்பிக்கலாம்”, என்று தனசேகரிடம் பேசி கொண்டிருந்தான் முகில்.
 
அவரும் சில ஐடியா சொல்லவே, எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து முடிவு செய்தார்கள்.
 
எல்லாவற்றையும் பேசி முடித்து விட்டு, அவர்கள் அறைக்கு வந்தான் முகில்.
 
அங்கே குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள் ராதிகா. “ஹாய் பொண்டாட்டி, என்ன செய்ற?”, என்று சொல்லி கொண்டே வந்தவன், அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.
 
அவனை தன்னிடம் இருந்து விலக்கியவள் “கொஞ்சம் பேசணும் முகில்”, என்றாள்.
 
“ஓ பேசலாமே”, என்றவன், அவளை கை வளைவில் அணைத்து கொண்டான்.
 
“இப்ப பேச ஆரம்பிச்ச உடனே, என்கிட்டே இருந்து விலகிருவான்”, என்று நினைத்து கொண்டே தன் பேச்சை ஆரம்பித்தாள் ராதிகா.
நினைவுகள் தொடரும்…..

Advertisement