Advertisement

 
வசந்தி அவன் கிட்ட இப்படி செய்யாத டான்னு சொல்லு வசந்தி,! இந்த பொண்ணு இங்க இருக்கட்டும்னு சொல்லு!”, என்றார் மேகநாதன்.
 
அவன் சொன்னதுல என்ன தப்பிருக்கு? இவ தப்பானவ தான். இனி இங்க இருக்க கூடாது”, என்றாள் வசந்தி.
 
வசந்தியை வெறித்து பார்த்தாள் நேவா. “இது தப்பு மா! அவனுக்கு தான் இவ அவன் பொண்டாட்டின்னு நினைவு இல்லை. ஆனா, நமக்கு தெரியும் தான? இது அவன் குழந்தையா கூட இருக்கலாம்” , என்று வாதாடினார். அவருக்குள்ளேயும் அந்த குழப்பம் இருந்தது.
 
சும்மா இருங்க, கல்யாணம் ஆன அன்னைக்கு இவ இங்க வந்தா. அன்னைல  இருந்து ரெண்டு பேரும் சேரவே இல்லை. அப்ப இது எப்படி? இவ அதுக்கு முன்னாடியே, எவன் கிட்டயோ கெட்டு போயிருக்கணும். அதுக்கு தான் என் பையனை பிடிச்சிருக்களோ! என்னவோ?”, என்று அவள் சொல்லி முடிப்பதற்கும் முகில் அவள் பையை எடுத்து வருவதற்கும் சரியாக இருந்தது.
 
பேச்சை நிறுத்தாமல் மேலும் தொடர்ந்தாள் வசந்தி. “இந்த மானங்கெட்டவஇனி இந்த வீட்டில் இருக்க கூடாது, ஒழுங்கா எங்கயாட்டும் போய் விட்டுட்டு, தலை முழுகிட்டு வாங்க”, என்று அவள் சொல்லி முடிப்பதற்குள், “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனீங்க மரியாதை கெட்டுரும், ச்சி நீயெல்லாம் பொம்பளையா? என்ன பேச்சு பேசுற? நான் எப்படின்னு அந்த கடவுளுக்கு தெரியும். என் வாழ்க்கையில் இனி உன் முகத்தை பாக்க கூட நான் விரும்பலை”, என்று கம்பீரமாக உரைத்தாள் நேவா.
 
அப்படி ஒரு ஆளுமையான குரலில், வசந்தியே அமைதியாகி விட்டாள்.
 
ஏய் என்ன திமிரா? எங்க அம்மாவை நீ எப்படி இப்படி பேசலாம்?”, என்று கத்தினான் முகில்.
 
உங்களுக்கும், எனக்கும் இனி எந்த பேச்சும் இல்லை. இப்ப என்ன? நான் இந்த வீட்டை விட்டு போகணும். அப்படி தான? போறேன்”, என்றவள் முகில் கீழே  வைத்த பையை எடுத்து கொண்டாள்.
 
எங்க மா போவ? வேண்டாம் மா. இவங்களுக்கு நான் புரிய வைக்கிறேன்”, என்றார் மேகநாதன்.
 
வேண்டாம், நீங்க எதுவுமே புரிய வைக்க வேண்டாம். எப்ப என் கற்புக்கும், என் பெண்மைக்கும் களங்கம் வந்ததோஇனி நீங்களே சொன்னாலும், இந்த வீட்ல நான் இருக்க மாட்டேன். அப்படி என் அந்தரங்கத்தை சொல்லி தான் இந்த வீட்டில் இருக்கணும்னா, அதை விட கேவலம் வேற  எதுவும் இல்லை. இனி எப்போதும், இந்த வீட்டு வாசலை மிதிக்க மாட்டேன். நான் செத்தா என் பொணம் கூட இங்க வராது. மேடம், இந்தாங்க, என்னோட பையை நல்லா சோதனை போட்டுக்கோங்க. உங்க பொருள் ஏதாவது காணும்னா, அடுத்து என்னை சொல்ல கூடாது பாருங்க”, என்று நக்கல் சிரிப்பு சிரித்தாள் நேவா.
 
யாரு யாரை, சோதனை போடுறது, அப்படியே நீ ஏதாவது எடுத்துட்டு போனாலும், அது உனக்கு உரிமையானது மா!”, என்றார் மேகநாதன்.
 
உரிமை”, என்று சொல்லி ஒரு வெற்று புன்னகையை உதிர்த்தவள், முகிலை கூர்மையாக ஒரு பார்வை பார்த்து விட்டு வீட்டை விட்டு கிளம்பியே விட்டாள்.
 
கேட் அருகே, சென்று கொண்டிருந்தவளின்பின்னே ஓடி வந்தார் மேக நாதன்.
 
இரு மா! நீ எங்க போவ? உனக்குன்னு யாரும் இல்லைன்னு சொன்னியே!”, என்றார்.
 
உலகம் ரொம்ப பெருசு சார், அதுல எனக்கு ஒரு இடம் இல்லாமலா போயிரும்?”
 
இங்க ஏதாவது வேலை வாங்கி தரேன் மா. உனக்கும் இங்லீஸ் எல்லாம் தெரியுமே மா? ஆமா, அன்னைக்கு  நீ வாசிச்சு சொன்னதை பார்த்தேன். கொஞ்ச நாள் அந்த வேலையை பாரு. அவனுக்கு நினைவு திரும்பின  பிறகு எல்லாம் சரியாகிரும் மா!”
 
அது சும்மா தெரிஞ்சி கிட்டது சார். எனக்கு இங்க இருக்க விருப்பம் இல்லை. நீங்க எல்லாம் பெரிய ஆளுங்க சார். அவருக்கும், எனக்கும், எப்படினாலும் பொருத்தம் இருக்காது. அவருக்கு உடனே வேற பொருத்தமான பொண்ணை  கட்டி வச்சிருங்க”
 
இந்தா மா, இந்த பணத்தையாவது வச்சிக்கோ!”
 
இல்லை, எனக்கு வேண்டாம்”, என்று உறுதியாக சொல்லி விட்டாள்.
 
சரி, எங்க போறேன்னு சொல்லு. காரில் விட சொல்றேன். இந்த உதவியாவது ஏத்துக்கோ மா”, என்றார்.
 
சரி காரில் ஏறுறேன். ஆனா, எங்கன்னு கேக்காதீங்க”, என்று சொல்லி விட்டு  காரில் ஏறி அமர்ந்தாள். டிரைவருடன் அவளை அனுப்பி வைத்தார் மேகநாதன். 
 
மேகநாதன், வசந்தி, முகில் மூவரும் வீட்டு ஹாலில் அமர்ந்திருந்தார்கள்.
 
அவள் போன கார், போய் அரை மணி நேரத்தில் திரும்பி வந்தது. “அவங்க பஸ் ஸ்டாண்ட்ல இறங்கிட்டாங்க சார்”, என்று சொன்னான் டிரைவர் முத்து.
 
அப்பாடி, இன்னையோட வீட்டுக்கு பிடிச்ச சனியன் ஒழிஞ்சது”, என்றாள் வசந்தி.
 
எங்க போனாலும், அந்த பொண்ணு நல்லா இருக்கட்டும்”, என்று மனதுக்குள்  வேண்டி கொண்டார் மேக நாதன்.
 
அடுத்த நாள் வீட்டுக்கு வந்தான் ராம். எப்போதும் அவனுக்கு ஜூஸ் கொடுக்கும் நேவாவை இன்று கண்ணில் காணவில்லை. “எப்படி கேப்பது”, என்று தெரியாமல் இருந்தான். ஆனால், கிட்ட தட்ட  நான்கு மணி நேரம், அவள் கண்ணில் படாததால், முகிலிடம் வாய் விட்டே கேட்டு விட்டான்.
 
நேவா எங்க டா?”
 
அவளை எதுக்கு நீ கேக்குற?”
 
இல்லை, வந்த உடனே ஜூஸ், இல்லை காஃபி தருவா. இன்னைக்கு காணுமேன்னு  கேட்டேன்”
 
அது ஒரு பெரிய கதை டா. அந்த அமுக்குனி  மாசமா இருக்கா டா. அதான், வீட்டை விட்டு துரத்திட்டோம்”
 
என்னது?”, என்று அலறினான் ராம்.
 
இப்ப எதுக்கு, நீ இவ்வளவு சாக் ஆகுற?”, என்று சந்தேகமாய் முறைத்தான் முகில்.
 
எதுக்கு டா அவளை போக சொன்னீங்க? அவ பாவம் டா. இங்க அவளுக்கு யாரையும் தெரியாது”, என்று கத்தினான் ராம். “அவளுக்கு என்ன ஆனதோ” என்று பயந்தான் ராம்.
 
அவளுக்கு ஒண்ணு னா, நீ எதுக்கு இவ்வளவு சாக் ஆகுற? உனக்கு ஏன்  கோபம் வருது? அப்ப அந்த குழந்தைக்கு நீ தான் காரணமா?”, என்றான் முகில்.
 
அவனை அதிர்ச்சியோடு நோக்கிய ராம் “ச்சி! வாயை மூடு”, என்றான்.
 
ராம்?”
 
என் பேரை இனி சொல்லாத. உனக்கு பழைய விசயங்கள் எல்லாம், மறந்து போனது நல்லதுக்கு தான். உன் அடி மனசுல இருக்குற அழுக்கெல்லாம், இப்ப தான வெளியே வருது. இப்ப நல்லா  கேட்டுக்கோ. நேவா எனக்கு, எப்பவுமே தங்கச்சி மாதிரி தான். அவளை அனுப்புனதுக்கு, நீ ஒரு நாள் வருத்த படுவ. அந்த நாள் வர கூடாதுன்னு வேண்டிகிறேன். அவளை பாக்காம இனி உன் முகத்துல கூட முழிக்க மாட்டேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான் ராம்.
 
இவன் இவ்வளவு ஆர்வமா கேட்டதும், சந்தேகத்தில் தான கேட்டேன். அதுக்கு ஏன், இப்படி கோப பட்டுட்டு போறான்? எப்படி நாளும் திரும்பி வருவான்ல? அப்ப சாரி கேட்டு சமாதான படுத்திறலாம். எல்லாம், அவளால  வந்தது. என் பெஸ்ட் பிரண்டும், அவளால என்கிட்ட கோப பட்டு போய்ட்டான்”, என்று நினைத்து கொண்டான் முகில்.
 
ஆனால் போன ராம், அதன் பின்பு வரவே இல்லை. முகிலுக்கு கவலையாக இருந்தது. ராம் இப்படி பேசாமல் இருக்கவே மாட்டான். காலேஜ் படிக்கும் போதில் இருந்தே, இரண்டு நாளுக்கு மேல, இப்படி பேசாம இருக்க மாட்டான்.
 
இப்ப ஒரு மாசம் ஆக போகுது. என்னை பாக்கவும் வரலை. போன் செஞ்சாலும் எடுக்கலை. சரி நம்மளே போய் பாப்போம். அவன் அம்மாவையும் பாக்கவே போகலை. ஒரு வேளை அவங்களுக்கு முடியலையோ?”, என்று நினைத்து கொண்டே அவன் வீட்டுக்கு சென்றான் முகில்.
 
வீட்டுக்கு போனவனை வரவேற்றது, அவன் தாய் சீதா லக்ஷ்மி தான்.
 
வா பா முகில், எப்படி இருக்க? தலைல வலி  எதுவும் இப்ப இருக்கா? நானும் உன்னை பாக்கவரணும்னு நினைக்கிறேன், ஆனா எங்க முடியுது? இப்ப சரி ஆகிட்டு தானே?”
 
ஆமா மா! எனக்கு சரி ஆகிருச்சு. நானும் உங்களை பாக்க வர நினைப்பேன். ஆனா, இப்ப தான் எங்க அம்மா வெளியவே விடுறாங்க அதான்!”
 
ஹ்ம்ம்! அவங்களுக்கும் பயம் இருக்குமே!”
 
ராம் எங்க மா?”
 
கீழ புது வேலிக்கு(கீழே பள்ளத்தாக்கில் உள்ள தேயிலை காடு) போயிருக்கான் பா! நீ உள்ள உக்காரு, இப்ப வந்துருவான்”
 
ஹ்ம்ம்! சரி மா!”
 
ராமின் அறையில் அமர்ந்தான் முகில். “முன்னாடி வந்தது, இந்த வீட்டுக்கு! அதுக்கு பிறகு இங்க, வந்தனான்னு கூட தெரியலை”, என்று நினைத்து கொண்டே பார்வையை ஓட்டினான்.
 
சீதா அவனுக்கு காபி போட்டு கொடுத்தார்.
 
வாங்கி கொண்டவன், “எதுக்கு மா சிரம படுறீங்க ?”, என்று கேட்டான்.
 
இதெல்லாம் சிரமம் இல்லை. வீட்டில் எல்லாம் நடமாட முடியும் பா. வெளிய எங்கயும் தான் போக முடியாது. அவனுக்கு போன் போட்டேன், கால் மணி நேரத்தில் வந்துருவேன், அவனை இருக்க சொல்லுங்கன்னு சொன்னான். அங்க இருந்து ஏறி வரனும்ல அதான்”
 
ஹ்ம்ம்! சரி மா! இருக்கேன்”
 
காலைல சாப்பிட்டியா பா? மதியத்துக்கு புளி குழம்பு வச்சிருக்கேன் சாப்பிடுறியா?”
 
காலைல சாப்பிட்டேன் மா! அவன் வந்த பிறகு சேந்து சாப்பிடுறேன்”
 
இப்படி தரா தரம் பாக்காம, பழகுற நல்ல பிள்ளை நீ! இப்படி கோபத்தில் காரை, வேகமா ஓட்டிட்டு போகலாமா? இப்ப உள்ள பிள்ளைங்களுக்கு எல்லாத்துலயும் அவசரம். சரி நீ அந்த டிவி யை போட்டு பாரு, நான் செத்த படுக்கிறேன். பாதி நேரம் படம் கூட வராது, இப்ப வருதான்னு பாரு!”, என்ற படியே உள்ளே போனார்.
 
கோபத்தில், காரை வேகமா ஓட்டிட்டு போனேன்னு சொல்றாங்க, எனக்கு எதுக்கு கோபம் வந்தது? இன்னைக்கு அம்மா கிட்ட போய் கேக்கணும்!”, என்று நினைத்து கொண்டே டீவியை போட்டான் முகில்.
 
சீதா சொன்ன படியே அதில் கேபிள் வரலை. “இந்த மலைல இருந்துட்டு பாதி நேரம் கரண்டும் இருக்க மாட்டிக்கு, கேபிளும் இருக்க மாட்டிக்கு!”, என்ற படியே அதை அணைத்து விட்டு, ராமின் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்தான்.
 
சரி ஆபீஸ்க்கு வந்த மெயிலாவது பாப்போம்”, என்ற படியே அதை ஆன் செய்தான். அது பாஸ் வேர்ட் கேட்டது.
 
இது வேறையாஎன்னது போட்டுருக்கானு தெரியலையே! எங்கயும் எழுதி வச்சிருக்கானா?”, என்ற படியே அவன் டேபிளை திறந்தான்.
 
அடுத்த நொடி அதிர்ந்தான். அதில் தான் அவனுடைய திருமண ஆல்பத்தை வைத்திருந்தான் ராம்.
 
கண் முன் தெரிந்த, தன் முகத்தை பார்த்து அவனுக்கு வியர்த்து விட்டது.
 
அழகாய் சிரித்து கொண்டிருந்தான் முகில், அவன் அருகே வெட்க புன்முறுவலோடு நேவா.
 
கைகள் நடுங்க அதை வெளியே எடுத்தான் முகில்.
 
அந்த ஆல்பம், நம்மிடையே நடக்கும் திருமணம் மாதிரி இல்லாமல், ஒரு காட்டில் நடந்திருந்தது.
 
ஒவ்வொரு பக்கத்தையும் திருப்பி பார்த்தான். பக்கத்தில் பல மலைவாசிகள் இருந்தார்கள். இதில் அதிசயம் என்னவென்றால், மாப்பிளை கோலத்தில் நிற்கும் முகிலும் கூட! அதே ஆதிவாசி கெட்டப்பில் தான் இருந்தான்.
 
கழுத்தில் கருகுமணி மாலையை, போடும் போட்டோவை  உற்று பார்த்தான், முகம் முழுக்க சந்தோசத்துடன் அவள் கழுத்தில் அணிவித்து கொண்டிருந்தான் முகில்.
 
ஒவ்வொரு போட்டொவையும் பார்க்க பார்க்க! முகிலுக்கு  இதய துடிப்பு அதிகமானது. எல்லாவற்றையும் பார்த்து விட்டு, அதே இடத்தில் வைத்து விட்டு, அதை மூடும் போது, அதில் இருந்து ஒரு பேப்பர் விழுந்தது. அதில் “பாஸ் வேர்ட் ராம்பிரசாத்”என்று எழுதி இருந்தது.
 
அதையும் உள்ளே வைத்து பூட்டி விட்டு யோசித்தான் முகில்.
 
அப்போது “ஒரு நாள் நீ கேட்டது, உனக்கு மெயில் அனுப்பிட்டேன் டா!”, என்று சிரித்து கொண்டே ராம் சொன்னதும், “பிச்சை காரி”, என்று  சொன்னதுக்கு, அவன் அதிர்ச்சியும் நினைவு வந்தது. “அப்படி என்ன அனுப்பிருப்பான்?”, என்ற படியே பாஸ் வேர்ட் போட்டு, அதை ஓபன் செய்தான்.
 
மெயிலை பாக்க அவசியம் இல்லாமல், கண் முன்னே “முகில்”, என்ற போல்டர் அதில் இருந்தது, நெஞ்சம் முழுக்க ஒரு வித பதட்டத்தோடு, அதை ஓப்பன் செய்தான் முகில்.
 
அதில் இருந்த புகை படங்களை, பார்த்தவனுக்கு மயக்கம் வராத குறை தான். அதில் கல்யாண போட்டோவும் இருந்தது, அதை விட அதிகமாக இவனும் நேவாவும் நெருக்கமாக இருக்கும் புகை படங்கள்.
 
எல்லாமே காதலர்கள்என்று சொல்லும் விதமாக இருந்தது. அவள் கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்றும், அவள் நெற்றியில் முத்தம் குடுப்பது போன்றும், அவள் தோளோடு கை வைத்து அணைப்பது போன்றும், அங்கு உள்ள மக்களுடன் இவன் இருப்பது போன்றும் இருந்தது.
 
ஆனால்! ஒரு வித்தியாசம், என்ன வென்றால் கல்யாண போட்டோ தவிர! மற்ற அனைத்திலும், அவன் சாதாரண உடை தான் அணிந்திருந்தான். இல்லை என்றால் அவனே “இது என்னை மாதிரியே, ஆதிவாசி ஒருத்தன் இருக்கான் போல!”, என்று நினைத்திருப்பான்.  அது “தான் தான்”, என்று முகிலுக்கு தெளிவாக புரிந்தது.
 
என்ன? எப்படி?”, என்ற விடை தெரியாத கேள்விகளோடு, அதை பார்த்து கொண்டிருந்தவனை கலைத்தது ராமின் குரல்.
 
நினைவுகள் தொடரும்…..
 

Advertisement