Advertisement

 
அங்கே போனில், ஏறக்குறைய அலறினான் ராம், “என்ன டா சொல்ற?”, என்று.
 
அதை விடு”, என்று சொல்லி விட்டு வேறு எதுவோ பேசி விட்டு வைத்தான் முகில்.
 
குழப்பத்துடனே அவர்கள் வீட்டு கீழே  உள்ள, வீட்டு எண்ணுக்கு அழைத்தான் ராம். வசந்தி தான் போனை எடுத்தாள்.
 
அம்மா, அவன் என்ன மா சொல்றான்? அவளை பிச்சைக்காரின்னு  சொல்றான், எனக்கு ஒண்ணுமே புரியலை”, என்றான்.
 
பிச்சைக்காரியை, பிச்சை காரின்னு தான சொல்லணும்?”, என்றவள், “இங்க பாரு ராம், அவனுக்கு ரெண்டு வருசம் நடந்த நிகழ்ச்சிகள் எதுவுமே நினைவு  இல்லை. அவனோட படம் எடுக்கும் கனவு, அதுக்காக காட்டுக்கு போட்டோ எடுக்க போனது, அவன் போட்டோ எடுத்து அனுப்புவான்ல அந்த வேலை, அவளை பாத்தது, கல்யாணம் செஞ்சது எதுவுமே அவனுக்கு தெரியாது. டாக்டர்  சொன்னது நினைவு இருக்கு தான? அவன் உயிரோட விளையாடுற மாதிரி எதையும் உளறி வைக்காதே. அவளே அவனோட நிழல் போதும்னு வேலைக்காரியா மாறிட்டா”, என்ற படியே வைத்து விட்டாள்.
 
அவர் வைத்ததைக் கூட உணராமல் சுய நினைவு இழந்து, காதில் போனை வைத்தவாறே நின்றான் ராம்.
 
கண் முன்னே இருந்த கம்பியூட்டரில் அழகாய் சிரித்து  கொண்டிருந்தார்கள் நேவாவும், முகிலும். அதை மூடி வைத்தவன் கண் முன் இருந்த ஆல்பத்தையும் அப்படியே அங்கு உள்ள டிராயரில் வைத்தான்.
 
கடவுளே அந்த மெயிலை எப்படியாவது, அவன் பாக்கணும்”, என்ற வேண்டுதலோடு அவனும் ஒரு விரக்தி சிரிப்பை உதிர்த்தான். “இந்த நேவா முகில் கண்ணில் படாமலே இருந்துருக்கலாம்”, என்று நினைத்து!
 
நேவா, இங்கே வந்து ஒரு மாதம் இருக்கும் நேரத்தில், ஒரு நாள் முகில் சாப்பிட்டு கொண்டிருந்தான். கொஞ்சம் தள்ளி ஜன்னலை துடைத்தவாறே அவனை பார்த்து கொண்டிருந்தாள்  நேவா.
 
இப்படி தான் ஒளிந்து நின்று அவனை ரசிப்பாள் நேவா. அதில் அவளுக்கு ஒரு திருப்தி.
 
தண்ணீர்  குடிக்க டம்ளரை  எடுத்தவன் அது காலியாக இருந்ததால், சுற்றி பார்வையை ஒட்டும் போது அவளையும், அவள் பார்வையும் பார்த்து  விட்டான். அடுத்த நொடி “ச்சி”, என்று அருவருத்த குரலில் சொல்லி விட்டு கை கழுவ சென்று விட்டான். ஊமையாக கண்ணீர் வடித்தாள் நேவா.
 
அடுத்து ஒரு நாள் தன்னுடைய அறையில் அவனுடைய போட்டோவைவைத்து ரசித்து பார்த்து கொண்டிருந்தாள் நேவா.
 
வீட்டில் யாரும் இல்லாததால், “எல்லாரும் எங்கே?”, என்று அவளிடம் கேட்க வந்தவன், அவள் எதுவோ ஒரு போட்டோவுக்கு  முத்தம் கொடுத்து கொண்டிருந்ததை பார்த்து உள்ளே வந்தான்.
 
அவள் முதுகு கட்டி அமர்ந்திருந்ததால், அவளுக்கு அவன் வந்தது தெரிய வில்லை. ஆனால், அதில் இருந்த தன் முகத்தை பார்த்து, அதிர்ந்தவன் அடுத்த நொடி அதை பிடுங்கினான்.
 
அவன் வருவான் என்று தெரியாமல் யாரோ என்று பயந்து திடுக்கிட்டு திரும்பினாள் நேவா.
 
ச்சி! உன்னை பாத்தாலே அருவருப்பா இருக்கு. நீயும் உன் மூஞ்சியும். அங்க அங்க நின்னு கேவலமா என்னை பாக்க  மட்டும் தான் செய்றேன்னு நினைச்சா, இப்ப என் போட்டோவுக்கு முத்தம் கொடுக்குற. இவ்வளவு கீழ்த்தமானவளா நீ? என்ன உடம்பை காமிச்சு மயக்க பாக்குறியா?”, என்றவன் அந்த போட்டோவை சுக்கல் சுக்கலாக கிழித்து, அவள் அறையில் இருந்த குப்பை தொட்டியில் வீசி விட்டு சென்று விட்டான்.
 
ஏதோ திராவகத்தை, முகத்தில் வீசினது போல துடித்து போனாள் நேவா.
 
அவன் போன பின்பு, அந்த குப்பை தொட்டியில் இருந்து, அந்த சில்லுகளை எடுத்தவள் வரிசை படுத்தினாள். அடுத்து, கொஞ்ச நேரம் கழித்து மேகநாதன் அறைக்கு வெளியே நின்று கொண்டு “ஒட்டுறதுக்கு பசை தாங்களேன்”, என்று கேட்டாள்.
 
சும்மா வாங்க போங்கன்னு சொல்றியே மா. மாமான்னு சொல்லலாம்ல!”, என்று சொல்லி கொண்டே பசையை கொடுத்தார் மேகநாதன்.
 
நீங்க இப்படி சொன்னதே போதும். அவர் நல்ல படியா குணமாகி என்னை மனைவினு சொல்லட்டும். பிறகு அப்படி கூப்பிடுறேன்!”, என்றவள் வேகமாக அவள் அறைக்கு சென்றாள்.
 
போட்டோவை ஒட்டிய பின்பு அதை காய வைத்தாள். கண்களில் மட்டும் கண்ணீர் வழிந்தது. இதயம் முழுவதும் வலித்தது. “இதுவே நிரந்தரமா ஆகிருமா? முகிலுக்கு நினைவே வரலைனா, இப்படியே வேலைக்காரியாவே என் காலம் முடிஞ்சிருமா? இப்படியே காலம் முடிஞ்சாலும் பரவால்லை.  அவர் நல்லா இருக்கிறதை பார்த்துட்டு இருந்தாலே எனக்கு போதும்”, என்று நினைத்து கொண்டு அவன் சிரிப்பை அந்த போட்டோவில் ரசித்து பார்த்தாள். 
 
என் புருசனுக்கு நான் முத்தம் கொடுப்பேன். அப்போது, கன்னத்தில் தான் கொடுக்க வந்தேன், இப்ப உதட்டிலே கொடுப்பேன்”, என்று வாய் விட்டே சொன்னவள் முகிலின் படத்துக்கு முத்தத்தை கொடுத்தாள்.
 
அடுத்து ஒரு நாள் போஸ்ட்‌மேன், ஒரு லெட்டரை கொண்டு வந்திருந்தார்.
 
நேவா தான், அதை கை எழுத்து போட்டு வாங்கினாள். அதை கொண்டு போய் மேகநாதனிடம் கொடுத்தாள். அவளை ஒரு புரியாத பார்வை பார்த்தவர் சாதாரண குரலில் “யார் கிட்ட இருந்து மா வந்திருக்கு?”, என்று கேட்டார்.
 
அதை திருப்பி ஒரு பார்வை பார்த்தவள், “யாரோ! ராஜேந்திரனாம்”, என்றாள். அவரும் “சரி”, என்று சொல்லி அதை வாங்கி கொண்டார்.
 
அடுத்து ஒரு நாள் வசந்தி முகிலுக்கு ஜூஸ் செய்ய சொன்னாள். இவளும் செய்து எடுத்து வைத்தாள். ஆனால், அதை கொடுக்க வசந்தியை காண வில்லை. இவள் தான் அவன் அறைக்கு செல்ல கூடாதே. என்ன செய்ய என்று தெரியாமல் விழித்தாள். அப்போது அங்கு வந்த மேகநாதன் “நீயே கொண்டு போ மா”, என்று சொன்னார்.
 
அவளும் ஆசையாக அதை எடுத்துச் சென்றாள். அவனை பார்க்க, அவன் அறையை பார்க்க அதிக ஆவல் இருந்தாலும், ஒரு விட நடுக்கத்துடன் கதவை தட்டினாள். அவன் கதவை திறந்ததும் அவனை ஆசையாக பார்த்தாள். ஆனால், அவன் முகம் சுளித்து “அம்மா”, என்று கத்தினான்.
 
என்ன பா?”, என்று ஓடி வந்தாள் வசந்தி.
 
நான் உங்களை தான, ஜூஸ் கொண்டு வர சொன்னேன்? இவளை எதுக்கு அனுப்புனீங்க?”
 
ஏய், உன்னை செஞ்சு வைக்க தான சொன்னேன்? உன்னை யாரு மேல வர சொன்னது?”, என்று திட்டினாள் வசந்தி.
 
அடுத்த நொடி பதில் எதுவும் சொல்லாமல் கீழே நடந்தாள் நேவா.
 
இனி இவளை அனுப்பாதீங்க மா. இவ பார்வையே சரி இல்லை!”, என்று முகில் சொல்வதும், அதுக்கு “சரி பா”, என்று வசந்தி  சொன்னதும் கேட்டது.
 
தன் அறைக்குள் சென்று, ஒரு மூச்சு அழுது தீர்த்தாள் நேவா.
 
இப்படி மனதுக்கு கஷ்டமாக இருக்கும், பல விசயங்களை பொறுத்து போனாள் நேவா. அவனுக்காக அவனுக்காக மட்டுமே.
 
இடையில் ராம் சில முறை வரும் போது, அவனுக்கு சாப்பிட ஏதாவது தருவாள். அங்கு அவள் நடத்த  படுவதை பார்த்து அவனுக்கு கஷ்டமாக இருக்கும். ஆனால், அவனும் வாய் இருந்தும் ஊமையாகி போனான்.
 
ஆனால், கொஞ்சம் செலவுக்கு மட்டும் பணம் கையில் கொடுத்தான். “என் தங்கச்சின்னு நினைச்சு கொடுக்குறேன் மா. வாங்க பிடிக்கலைன்னாகடனா கூட வச்சிக்கோ. ஆனா, எப்ப வேணும்னாலும் உனக்கு இது தேவைபடும் மா”, என்று வற்புறுத்தி கொடுத்தான்.
 
நேவா இங்கே வந்து, ஒண்ணரை மாதம் ஆன போது, ஒரு நாள் அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்தாள் நேவா.
 
அங்கே ஒரு வயதான மனிதர் நின்றிருந்தார். “யாரு வேணும் உங்களுக்கு?”, என்று கேட்டாள் நேவா.
 
வசந்தி அம்மா, இருக்காங்களா?”
 
உள்ள வாங்க, உக்காருங்க”, என்றவள் “நான் போய் அம்மாவை கூட்டிட்டு வரேன்!”, என்றாள்.
 
உங்களை பாக்க ஒருத்தர் வந்துருக்கார். உக்கார வச்சிருக்கேன்”, என்று வசந்தியிடம் சொன்னாள் நேவா.
 
சரி போ, நான் வரேன்”, என்று சொல்லி அவளை அனுப்பி விட்டு கீழே  வந்தாள் வசந்தி.
 
வந்தவரைப் பார்த்ததும் விசயம் புரிந்தது வசந்திக்கு. கல்யாண புரோக்கர் அவர். முகிலின் ஜாதகத்தை கொடுத்து அவனுக்கு பெண் பார்க்க சொல்லி இருந்தாள். 
 
எப்படியாவது இந்த நேவாவை வீட்டை விட்டு அனுப்பனும். இன்னைக்குஇவர் வந்ததும் நல்லதுக்கு தான். இன்னைக்கே, இந்த சனியனை தொலைச்சு கட்டணும்”, என்ற முடிவோடு அவர் எதிரே போய்  அமர்ந்தாள் வசந்தி.
 
யாரு வசந்தி இது?”, என்ற படியே அங்கு வந்தார் மேகநாதன்.
 
வணக்கம் ஐயா, நான் சோமேசுவரன். நான் ஜாதகம் பாப்பேன். இங்க நீல மலையில் இருக்கேன். உங்க பையனுக்கு பொண்ணு பாக்க சொல்லி அம்மா சொல்லிருந்தாங்க. அதான், ரெண்டு மூணு வரன் காட்டிட்டு போகலாம்னு வந்தேன்”, என்றார் அவர்.
 
கண்ணாடி டம்ளர் உடையும் சத்தத்தில், மூவரும் திரும்பி பார்த்தார்கள்.
 
அவர் சொன்னதை கேட்டு, ஜூஸ் டம்ளரை தவற விட்ட நேவா அப்படியே மயங்கி விழுந்தாள்.
 
ஐயோ, அந்த பொண்ணு மயங்கிட்டா. வசந்தி அந்த தன்ணியை கொஞ்சம் எடு”, என்ற மேகநாதன் அவள் அருகே ஓடி, அவள் தலையை தூக்கி பிடித்தார்.
 
வேண்டா வெறுப்பாக வசந்தி கொண்டு வந்த தண்ணீரை வாங்கி, அவள் முகத்தில் அடித்தும் அவள் கண் விழிக்க வில்லை.
 
அப்போது, சோமேசுவரன் அமர்ந்து அவளுடைய நாடியை பிடித்து பார்த்தார்.
 
அவரை குழப்பமாக மேகநாதனும் வசந்தியும் பார்த்தார்கள். அவர்கள் பார்வையை உணர்ந்து “நான் வைத்தியமும் பாப்பேன் மா”, என்றார்.
 
அவள் நாடியை சோதித்தவர், “நல்ல விசயம் தான், இந்த பிள்ளை மாசமா இருக்கு. நல்ல சகுனம் தான். நான் இங்க ஜாதகம் போட்டோ  எல்லாம் வச்சிட்டு போறேன். நீங்க பாத்துட்டு போன் பண்ணுங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.
 
அதிர்ச்சியில் சிலையாக இருந்தார்கள் இருவரும்.
 
அப்போது மேலே இருந்து “என்ன மா ஆச்சு?”, என்ற படியே அங்கு வந்தான் முகில் வேந்தன்.
 
இந்த பொண்ணு மாசமா இருக்காம் பா. இப்ப தான் வைத்தியர் சொல்லிட்டு போனார். அதனால் தான், மயங்கி விழுந்துட்டா போல”, என்றார் மேகநாதன்.
 
ஒரு வித அருவருப்பொடு “ச்சி!”, என்று சொன்னான் முகில்.
 
அப்போது தான் கண் விழித்தாள் நேவா. குழப்பமாக அனைவரையும் பார்த்தாள். அப்போது தான் அவளுக்கு மயங்கி விழுந்த காரணமே, நினைவு வந்தது. “முகிலுக்கு இன்னொரு பொண்ணு பாக்க போறாங்களா? ஐயோ, இப்ப நான் என்ன செய்வேன்?”, என்ற பதட்டத்தோடு அனைவரையும் பார்த்தாள்.
 
அப்போதும், கண் முன்னே நின்ற முகிலை பார்த்ததும், அவளுக்கு அவனுடன் ஒன்ற தான் தோன்றியது. “என்னை விட்டுட்டு இன்னொரு பொண்ணை, கல்யாணம் பண்ண போறியான்னு”, அவன் சட்டையை பிடித்து கேட்கத் தோன்றியது. ஆனால், எதுவுமே செய்ய இயலாமல் பார்வையால் அவனை வெறித்தாள்.
 
யாருமே இல்லாத அனாததைன்னு சொன்னீங்க? இப்ப பாருங்க கல்யாணம் ஆகாமலே, வைத்துல  குழந்தையை வாங்கிட்டு வந்துருக்கா!”, என்றான் முகில் தன் தந்தையை நோக்கி! 
 
அவன் சொன்னதில், அதிர்ச்சியாகி தன் வயிற்றை  தடவி பார்த்தாள் நேவா. “என்னது பாப்பாவா?”, நேவாவுக்கு அவள் தேகம் முழுவதும் புல்லரித்தது.
 
அம்மா, இவ இங்க இருக்குறதே எனக்கு பிடிக்கலை. அப்பா, நீங்க உடனே இவளை வேற எங்கயாவது அனுப்பிருங்க. நம்ம வீட்டிலேயும் ஒரு வயசு பொண்ணு இருக்கு. இந்த மாதிரி பொண்ணு, இங்க இருந்தா சரி வராது. இவளை ஏதாவது ஆசிரமத்தில் சேத்துருங்க பா!”, என்றான் முகில்.
 
முகத்தில் புன்னகையுடன் ஒரு வக்கிர சிரிப்பை உதிர்த்தாள் வசந்தி.
 
முகில் என்ன பேசுறஎது பேசுறதா இருந்தாலும், கொஞ்சம் யோசிச்சு பேசு, அபாண்டமா அந்த பொண்ணு மேல பழி போட கூடாது!”, என்றார் மேக நாதன்.
 
அப்பா ப்ளீஸ், இது வரைக்கும் நான் யாரையாவது குறை சொல்லி, நீங்க பாத்துருக்கீங்களா? இவ அன்னைக்கு என்னோட போட்டோக்கு முத்தம் கொடுத்துட்டு இருந்தா தெரியுமா? இவ தப்பானவ பா. இப்ப அதுக்கு சாட்சியா வயித்துல வாங்கிட்டு வந்துருக்கா. ஒழுங்கா இவளை அனுப்பிருங்க”
 
அனுப்புன்னு சொல்ற, அவ எங்க போவா முகில்? அவளுக்கு யாரும் இல்லை”, என்றார் மேகநாதன்.
 
சரி அனுப்ப வேண்டாம். அவள் வயித்துல இருக்கும் குழந்தைக்கு, அப்பா யாருன்னு சொல்ல சொல்லுங்க. அவன் கூட சேத்து வச்சிரலாம்”, என்றான்.
 
எல்லாரும் அமைதியாய் இருந்தார்கள். “இவள் இப்பவே இந்த வீட்டை விட்டு போகணும்.  இருங்க அவ பையை எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு எடுக்க போய் விட்டான் முகில்.

Advertisement