Advertisement

அதே நேரம் “எப்படியாவது எனக்கு அவரை பற்றி தெரிந்து விடாதா?”, என்று வேண்டி கொண்டிருந்தாள் நேவா.
 
அழைப்பு மணி சத்தத்தில் பாய்ந்து சென்று அதை எடுத்து “ஹெலோ”, என்றாள்.
 
நேவா எப்படி இருக்க மா? அழாத மா, அவனுக்கு சரி ஆகிருச்சு. ஒரு வாரம் கழிச்சு வீட்டுக்கு வந்துருவான் சரியா”, என்றான் ராம்.
 
அண்ணா, நிஜமாவே அவருக்கு ஒண்ணும் இல்லை தான? ரொம்ப  பயந்துட்டேன் அண்ணா. அவரை பாக்கணும் போல இருக்கு எனக்கு”, என்று அழுதாள்
 
உன் மாமியார் திட்டிட்டே இருக்காங்க நேவா. இப்ப நீ வந்தாலும் உன்னை, அவனை பாக்க  விட மாட்டாங்க. அவன் கொஞ்சம் நல்லா ஆனதும் உன்கிட்ட பேச சொல்றேன்”, என்று சொல்லி விட்டு வைத்தான் ராம்.
 
ஆனால், அவனுக்கு அடுத்த அரை மணி நேரத்தில் டாக்டர் சொன்ன விசயத்தில் அந்த நேரம் வராமலே போக போகிறது‘, என்று புரியவே இல்லை.
 
உங்க பையன் உயிர் பிழைத்து வந்ததே, பெரிய விசயம் மேகநாதன். ஆனால் ஸ்கேன் ரிப்போர்ட்டில் அவருடைய மூளையில் ஒரு சிறு தேய்வு  ஏற்பட்டிருக்கு. அதனால், என்ன பக்க விளைவுகள் வரும்னே தெரியலை. போக போக தான் தெரியும். எதுக்கும், நீங்க எந்த அதிர்ச்சியான விசயத்தையும், அவருக்கு சொல்லாதீங்க. அவரா நார்மலா பேசுற வரைக்கும், நீங்களா எதையாவது பேசி, அவருக்கு யோசனையை உண்டாக்காதீங்க!”என்று இடியை இறக்கினார்.
 
அதை கேள்வி பட்ட அனைவருக்கும் அதிர்ச்சி தான். ஆனாலும், கண் முன்னே நன்றாக இருக்கும், அவனை பார்த்து ஒரு நிம்மதி.
 
ஒரு வாரமும் ஹாஸ்பிட்டலில் தான் இருந்தான். ராம் தவித்து போனான். ஒரு வாரமும் நேவாவை சமாளிப்பது அவனுக்கு பெரும் பாடாயிற்று. அவளுக்கு தினமும் போன் செய்து அவனை பற்றி சொல்லுவான்.
 
அவள் அவனிடம் பேச வேண்டும் என்று  சொல்லுவாள். ஆனால், முகில் அவளை பற்றி ஒரு வார்த்தை கூட பேச வில்லை. அவனாகவும் நினைவு படுத்த விடாமல் வீட்டு  ஆள்கள் ஒருவர் மாற்றி ஒருவர் அவனுடன் இருந்தார்கள், என்ன செய்ய என்று தெரியாமல் “உன் மாமியார் பேச விடலை”, என்று சொல்லி சமாளித்தான்.
 
அவன் அம்மா, தங்கை எல்லாரும் வீட்டுக்கு போவார்கள். குளித்து முடித்து விட்டு வந்து விடுவார்கள். அவளை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை.
 
மேகநாதன்  மட்டும் ஒரு நாள் அவள் கேட்டதுக்கு “நல்லா இருக்கான் மா!”என்று சொன்னதோடு முடித்து கொண்டார்.
 
அடுத்து “உங்க பையன் என்னை கேட்டாரா?”, என்று கேட்க அவளுக்கு தயக்கம் இருந்ததால் அவளும் அடுத்து ஊமையாகி போனாள்.
 
ஆனால், ஒவ்வொரு முறை அவர்கள் கார் வரும் போது, சுற்றி திரியும் அவள் பார்வை, தன்னவனைத் தேடி!!!
 
ஒரு வாரம் கழித்து, அவனை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். ஹாஸ்பிட்டலில் இவர்களுடன் கிளம்பிய ராமை “வீட்டுக்கு போய்ட்டு வா பா. உங்க அம்மாவையும் நீ பாக்கணுமே!”, என்று அனுப்பி வைத்தார் மேகநாதன். அதனால் இவர்களுடன் ராம் வரவில்லை.
 
காரில் இருந்து இறங்க வேண்டாம் பா. நான் ஆரத்தி கரைச்சிட்டு வரேன்”, என்று உள்ளே சென்றாள் வசந்தி.
 
கார் சத்தம் கேட்டு ஆவலாக ஓடி வந்தாள் நேவா, அவளை ஒரு பார்வை பார்த்த வசந்தி, “வந்த உடனே உன் மூஞ்சியை போய் காட்டாதே, இப்ப தான் நல்லா ஆயிருக்கான்”, என்று சொல்லி நெருப்பை கக்கினாள்.
 
அப்படியே விலகி போனாள் நேவா. “எப்படியும் என்னை கேப்பார்ல? அப்ப  போய் அவரை கட்டி பிடிச்சு அழலாம்”, என்று கண்ணீரை சேர்த்து வைத்தாள் நேவா.
 
ஆரத்தி கரைக்க பட்டு, உள்ளே அழைத்து வர பட்ட முகில் வேந்தன் சோபாவில் அமர்ந்திருந்தான்.
 
அதுக்கு மேல் முடியாமல், அழுகையோடே அவன் எதிரே வந்தாள் நேவா.
 
கண்களில் ஜீவனை தாங்கி அவனை பார்த்தாள். நெற்றியில் ஒரு கட்டும், வலது கையில் ஒரு கட்டும் போட்டிருந்தார்கள். “ஐயோ வலிச்சிருக்குமே? துடிச்சிருப்பாரே”, என்று மனதுக்குள் மருகினாள் நேவா.
 
அவன் வலியை நான் தாங்கிருக்க கூடாதா? அப்படியே அவனை தன் நெஞ்சோடு அணைக்கும் தருணம் எப்போது வரும்? அவனை நான் மடி தாங்கணும், அவன் வலியை போக்கணும். என் மொத்த  காதலையும் அவன் காலடியில் கொட்டணும். இந்த ஒரு வாரம் அவனை நினைத்து தவித்த தவிப்பை சொல்லணும். அவனுக்கு என் கையால் ஊட்டி விடணும், என் முகில்”, என்று நினைத்து கொண்டே எதிரே வந்தாள் நேவா.
 
அவளை ஏறெடுத்து பார்த்தவன் அதிர்ந்தான். ஆனால், அடுத்து அவன் கேட்ட கேள்வியில் மொத்த வீடே அதிர்ந்தது.
 
எதுக்கு மா, பிச்சை காரியை எல்லாம் வீட்டுக்குள்ள விட்டுருக்கீங்க?”, என்று கேட்டான் முகில்.
 
கவலையில் ஒழுங்காக தூங்காமல், ஒரு துளி சாப்பாடு கூட சாப்பிடாமல், ஒழுங்காக குளிக்காமல், கண்ணில் கருவலையத்தோடு இருந்தாள் நேவா. ஆனாலும் அவளுடைய மனைவியை அவனே அப்படி சொல்லலாமா?
 
நேவாவின் உலகம் அப்படியே நின்றது. அவளுடைய இதயமே ஒரு நிமிடம் நின்று பின் துடித்தது போல இருந்தது.
 
ஒற்றை வார்த்தையில் அவள் உயிரை கொண்டு விட்டான். சந்தோசத்துடன் பறந்து கொண்டிருக்கும் போது றெக்கையை அறுத்து போட்ட வலியை உணர்ந்து, உள்ளுக்குள்  துடித்தாள் நேவா.
 
அவனுடைய கேள்வியில் அப்படியே இரண்டடி பின்னே எடுத்து வைத்தாள் நேவா. அவள் உதட்டில் ஒரு விரக்தி சிரிப்பு வந்தது.
 
அடுத்து ஒரு வார்த்தை யாரையும் பேச விடாமல் வசந்தி முன்னே வந்து “அது உங்க அப்பாக்கு சொந்த கார பொண்ணு பா. யாரும் இல்லாத  அனாதை. ஐயோ பாவம்னு இங்க கூட்டிட்டு வந்துட்டாரு”, என்றாள்.
 
அதிர்ச்சியாகி வசந்தியை பார்த்தாள் நேவா.
 
ஓ அப்படியா? சாரி பா, டிரஸ் எல்லாம் கொஞ்சம் ஒரு மாதிரி இருந்த உடனே தப்பா நினைச்சிட்டேன்.  இன்னைக்கு டேட் என்ன? எத்தனை நாள் ஹாஸ்பிட்டலில் இருந்தேன்?”, என்று கேட்டான்.
 
வசந்தி தேதியைச் சொன்னதும் “என்னது ரெண்டு வருசம் ஓடிட்டா. எம்.பி. ஏ படிச்சு முடிச்சது தான் பா ஞாபகம் இருக்கு. அதுக்கு பிறகு எதுவுமே நினைவு இல்லை. நான் ரெண்டு வருசம் என்ன செஞ்சேன்?”, என்று கேட்டான் முகில்.
 
எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். “நீ அப்பா எஸ்டேட்டை  தான் பா, பாத்து கிட்ட”, என்றாள் வசந்தி.
 
ஓ சாரி மா, மறந்துட்டேன் போல? எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை. நான் போய் ரெஸ்ட் எடுக்குறேன்”, என்று தன் அறைக்கு சென்றான்.
 
அவன் போன பின்பு அங்கே அப்படி ஒரு அமைதி. “என்ன வசந்தி, இவன் இப்படி சொல்லிட்டு போறான்? கடைசி ரெண்டு வருசம் நடந்தது அவனுக்கு எதுவும் நினைவு இல்லையாம்”, என்றார் மேக நாதன்.
 
எல்லாம் நல்லதுக்கு தான். இப்ப இவளை வீட்டை விட்டு அனுப்பணும்”, என்றாள் வசந்தி.
 
கண்ணில் நீர் வழிய அவளை ஏறெடுத்து பார்த்தாள் நேவா. அவளை பரிதாபமாக பார்த்தார் மேகநாதன்.
 
அது தப்பு வசந்தி, அவ அவனோட பொண்டாட்டி. என்னைக்கு ஞாபகம் வந்தாலும் இந்த பொண்ணை அவன் கேப்பான். அவளை இங்க இருந்து அனுப்ப நமக்கு உரிமை இல்லை”, என்றார் மேகநாதன்.
 
என்னைக்கு நீங்க மூளையோட யோசிச்சிருக்கீங்க? சரி இவ உங்க சொந்த கார பொண்ணாவே இங்க இருக்கட்டும். நம்ம வீட்டில் இனி இவ தான் வேலைக்காரி”, என்று அவரிடம் சொன்னவள், நேவா புறம் திரும்பி  “ஏய் அவனுக்கு மூளையில் எதுவோ அடி பட்டிருக்காம். அதிர்ச்சியான விசயமோ அவன் மறந்த விசயமோ நினைவு படுத்தினால் அவன் உயிருக்கு ஆபத்தாம். அதனால், நீ உன் வாயை மூடிகிட்டு இங்க இருக்கதா இருந்தா இரு. இல்லை  உன் மூட்டை முடிச்சை கட்டு”, என்றாள்.
 
நான் செத்தாலும் அவருக்கு எதையும் ஞாபக படுத்த மாட்டேன் மா. அவர் நிழலில் மட்டும் இருந்துக்குறேன். இங்க இருந்து அனுப்பாதீங்க!”, என்று கெஞ்சினாள் நேவா.
 
சரி அந்த ரூம் தான் உனக்கு. எல்லா வேலையும் நீ தான் செய்ற. அதுவும் மத்த எல்லாருக்கும் மட்டும் தான். அவனுக்கு நீ எதுவுமே செய்ய கூடாது. புரிஞ்சது தான?”
 
ஹ்ம்ம் சரி மா!”
 
அவ இந்த வீட்டில் வேலைக்காரி மட்டும் தான், மத்த எல்லாருக்கும் புரிஞ்சது தானே?”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் வசந்தி.
 
அம்மா பின்னாடியே சென்றாள், வானதி.
 
அடுத்து அந்த வீட்டின் வேலைக்காரியாவே மாறி விட்டாள் நேவா. அவர்கள் மாதிரியே சேலை இறக்கி கட்ட கற்று கொண்டாள். கழுத்தில் அவன்   அணிவித்த தாலி மட்டும் போட்டு கொண்டு மற்ற அனைத்தையும் கழற்றி அவள் பையில் வைத்தாள்.
 
ஆனால், அவனை தான் அவள் கண்ணிலே காட்டாமல் மறைத்து வைத்தாள் வசந்தி.
 
அவனுடைய சிறு பார்வைக்காக, அவன் காதலுக்காக ஏங்கினாள் நேவா.
 
காலையில் சீக்கிரம் எழுவது ஒன்றும் அவளுக்கு கடினமாக இல்லை. துணி துவைப்பது, பாத்திரம்  கழுவுவது, வீடு கூட்டி துடைப்பது, இதெல்லாம் சாதாரண வேலைகள் தான். அதுவும் அவளுக்கு கஷ்டமாக இல்லை.
 
அதே போல, சமையலும் அவளுக்கு தெரிஞ்ச வேலை தான். ஆனால், அவனுக்கு பிடிச்சதை ஆசையாக செஞ்சி கொடுத்தாலும் அவனுக்கு பரிமாற அவளால் முடியாது.
 
எல்லாவற்றையும் எடுத்து வைப்பதோடு, அவள் அங்கே இருந்து அகன்று விட வேண்டும். அது தான் அவளுக்கு கஷ்டமாக இருந்தது.
 
ஆனால், அதை விட கொடுமை என்னவென்றால், அவனே அவள் எப்போதாவது கண்ணில் பட்டால் ஒரு வித முக சுழிப்புடன் அகன்று விடுவான். மனதின் பாரத்தை தாங்க முடியாமல், இறக்கி வைக்க ஆளில்லாமல் துடித்தாள் நேவா. வானதி கூட அவள் முகத்தை பார்த்தாலே திருப்பி கொண்டு போய் விடுவாள். மொத்தத்தில் தனி தீவில் தவித்தாள் நேவா.
 
அவன் பார்க்கும் காதல் பார்வைக்காக மனம் ஏங்கியது. அவன் நெஞ்சில் முகம் புதைக்க அத்தனை ஏக்கம் வந்தது. ஆனால் வழி தான் இல்லை.
 
அப்போது இரண்டு நாள் கழித்து ராம் முகிலை போனில் அழைத்தான்.
 
சொல்லு டா”ன்றான் முகில்.
 
சாரி டா அம்மாக்கு உடம்பு சரி இல்லை. அதான், உன்னை வந்து பாக்க  முடியலை. இப்ப உடம்பு எப்படி இருக்கு?”
 
நான் நல்லா தான் இருக்கேன், அம்மா இப்ப எப்படி இருக்காங்க?”
 
இப்ப நல்லா இருக்காங்க! அப்புறம் முகில் நீ கேட்டது மெயில்  அனுப்பிட்டேன் டா! சந்தோசமா?”, என்று கேட்டான்.
 
ஆஃபீஸ் விசயம் தான?”, என்று கேட்டான் முகில்.
 
ஆமா டா! ஆஃபீஸ் விசயமே தான்”, என்று சிரித்து கொண்டே சொன்னான் ராம்.
 
எப்படி சொல்றான் பாரு? புருசன் பொண்டாட்டி போட்டோவை வித்தியாச  வித்தியாசமா எடிட் செஞ்சி எல்லா போட்டோவையும் தேதி படி அரேஞ் பண்ணு, அப்புறம் கல்யாண போட்டோ பெஸ்ட்டா மாத்தி ஆல்பத்தோட  அனுப்புன்னு, அன்னைக்கு ஆர்டர் போட்டான். இப்ப ஆஃபீஸ் விசயமான்னு கேக்குறான். சரி சர்பிரைசா இருக்கட்டும்”, என்று நினைத்து கொண்டான் ராம்.
 
அப்படி அவன் சிரிக்கும் போது தான், அவன் சந்தோசத்தில்  குண்டை போட்டான் முகில்.
 
அப்புறம்க்குறேன் டா!”என்ற முகில் சொன்னதும் “ஏன் டா?”, என்று கேட்க வந்த ராம், முகில் அடுத்து சொன்ன வார்த்தையில் பேச மறந்தான்.
 
வீட்டில் ஒருத்தி இருக்கா டா, அச்சு அசல் பிச்சை காரி மாதிரியே. முதல் நாள் பயந்தே போய்ட்டேன். இப்ப கொஞ்சம் பரவால்ல. ஆனா அம்மா கிட்ட, அவளை என் கண் முன்னாடியே வர கூடாதுன்னு சொல்லிருக்கேன்”, என்றான்.
 
மொட்டை மாடிக்கு துணிகளை காய போட போன நேவா, அவன் அறையைக் கடக்கும் போது அவன் பேசிய அனைத்தையும் கேட்டாள். யாரோ நெஞ்சுக்குள் கையை விட்டு, இதயத்தை கொத்தாக பிடித்து தூர எறிந்தது போன்ற வலியை அனுபவித்தாள். அதற்கு மேல் கண்ணீரை அடக்க  முடியாமல், மேலே போய் விட்டாள்.

Advertisement