Advertisement

பேரன்பு பிரவாகம் 

 Epilogue(1)

மிருணாளினி இயக்கிய இரண்டாவது படம் நேற்றைய முன்தினம்தான் வெளியாகி இருந்தது.

நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன. சுமாரான வெற்றியை பெற்று விடும் என விநியோகஸ்தர்கள் சொன்னார்கள். பட விளம்பர பணி முடித்து விட்டு வீடு வந்தாள் மிருணா.

கீழே கிளினிக், மேலே வீடு என இருந்தது அவர்களின் குடியிருப்பு. முதலில் வாடகைக்குதான் இருந்தனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த இடம் விலைக்கு வர விஷ்ணுவே வாங்கி விட்டான்.

அவர்களது மகள் லயா பிறந்து நான்கு மாதங்களில் மிருணாவின் முதல் படத்தின் படப் பிடிப்பு ஆரம்பமாகி விட்டது. காந்திமதி அக்கா எப்போதும் வீட்டோடு இருக்கும் படி பணி அமர்ந்தி விட்டான் விஷ்ணு. கணவன் இருக்க மகளை பற்றிய கவலை இல்லாமல் படம் இயக்கினாள் மிருணா. இப்போது வரை அவனுடைய முழு ஆதரவும் அவளுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

விஷ்ணு போலவே அத்தனை அமைதி லயா. அப்பா சொன்னால் என்ன என்றாலும் கேட்டுக் கொள்வாள். அதிக பிடிவாதம் இல்லாததால் மகளை வளர்க்க அவனும் கஷ்டபடவில்லை.

மிருணாதான் அவ்வப்போது மகளை மிஸ் செய்வாள்.

“முடிஞ்சப்போ எல்லாம் அவ கூடதானே இருக்க? டிஸ்ட்ராக்ட் ஆகாத” என விஷ்ணுதான் சமாதானம் செய்வான்.

அவனும் ஒரே இடத்தில் பிராக்டீஸ் செய்வதால் அந்த பகுதியில் பிரபலமாகி விட்டான். மிருணாவின் முதல் படத்திற்கு கிடைத்த சம்பளத் தொகையில் பக்கத்தில் இடம் வாங்கி போட்டு விட்டான். அவனது சேமிப்பு கொஞ்சம் மிச்சத்திற்கு லோன் எடுத்து என அங்கு வீடு கட்டும் வேலையும் மிருணாவின் இரண்டாவது படத்துக்கு கிடைத்த சம்பளம் கொண்டு கிளினிக்கின் முதல் மாடியை உள் நோயாளிகள் வார்டாக மாற்றும் வேலையும் நடந்து கொண்டிருக்கின்றன.

அடுத்த இரண்டு வருடங்களில் உள் நோயாளிகள் வார்டுக்கு மேலும் ஒரு கட்டிடம் எழுப்பலாம் என இருக்கிறான்.

அவனும் அவன் மனைவியுமாக சேர்ந்து முன்னேற்றம் காண்பதில் அவர்களின் பிணைப்பு இன்னும் இன்னும் பலமானது. நல்ல மன நிறைவையும் கொடுத்தது. அவர்களுக்கு அதுதான் மகிழ்ச்சி என புரிந்து, தங்கைக்கு சேர வேண்டியதை தங்கை மகளுக்கு கொடுத்து விடலாம் என்ற முடிவோடு பிரவாகனும் விட்டுவிட்டான்.

மகளோடு விளையாடி அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து உணவூட்டி என மிருணாவின் நேரம் இனிமையாக சென்றது. மகள் உறங்கியதும் காந்திமதியையும் உறங்க போக சொன்னவள் கணவனுக்காக காத்திருந்தாள்.

பத்து மணிக்கு மேல்தான் வந்தான் விஷ்ணு. அவன் குளித்து வரவும் அவனோடு சேர்ந்துதான் இரவு உணவு சாப்பிட்டாள்.

“சண்டே கோவை போயிட்டு வரலாமா மிரு? அம்மாவை பார்த்திட்டு வரலாம்” என்றான் விஷ்ணு.

உடனே சரி என்றவள், “லயா தனியா இருக்காளே… அவளுக்கு துணையா யாரையும் கொண்டு வரலாமா?” என்றாள்.

நெற்றி சுருக்கியவன், “அவளுக்கு துணையா நான் இருக்கேன், காந்தி அக்கா இருக்காங்க, இன்னும் யார் வேணும் அவளுக்கு?” எனக் கேட்டான்.

“ஹையோ மழலைகள் டாக்டரே! உங்களுக்கு இன்னொரு மழலை வேணுமான்னு கேட்டேன்” என மிருணா கேட்க விஷ்ணு சிரித்த சிரிப்பில் அவனுக்கு புரையேறி விட்டது.

சாப்பிட்டு முடித்ததும், “ஆர் யூ சீரியஸ்?” எனக் கேட்டான்.

ஆம் என்றவளின் தோளை சுற்றி கை போட்டு அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பு சொன்னது உன் விருப்பம் எதுவாகினும் உனக்கு துணையாக இருப்பேன் என.

“இந்த முறை பாப்பாக்கு ரெண்டு வயசு ஆகுற வரை நானே பார்த்துப்பேன்” என்றாள்.

மனைவியை பார்த்த நாளில் முளைத்த காதலும் ஆசையும் குறையாமல் விஷ்ணு பார்க்க அவனை பார்த்து கண்கள் சிமிட்டி சிரித்த மிருணா, “ரூம்ல இருங்க, வந்திடுறேன்” என சொல்லி பாத்திரங்களை சமையலறையில் எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

இருவர் முகங்களிலும் அடக்க பட்ட நாணச் சிரிப்பு மலர துடித்துக் கொண்டிருந்தது!

******

“நான் சொன்னதெல்லாம் ஆச்சா தமன்?” எனக் கேட்டான் பிரவாகன்.

“இந்த சிட்டில இருக்க எல்லா சினிமா ஹால்லேயும் ஒரு ஷோ இந்த படத்துக்குன்னு ஏற்பாடு பண்ணியாச்சுங்க ஸார். எல்லா ஸ்டாஃப்ஸுக்கும் அவங்க ஃபேமிலிக்கும் சேர்த்து மூவி டிக்கெட்ஸ் கொடுத்தாச்சுங்க ஸார், அடுத்த ரெண்டு நாள் கோயம்பத்தூர்ல மேடம் படம் ஹவுஸ்ஃபுல்தான் ஸார்” என்றான் தமன்.

“ரிவ்யூலாம் எப்படி?”

“ஆஹா ஒஹோன்னு சொல்ல வச்சாச்சுங்க ஸார். நம்ம ஐ டி விங் கூட படத்தை ப்ரோமோட் பண்ற வேலைலதான் இருக்காங்க. இப்படிலாம் செலவு பண்றதுக்கு நீங்களே அவங்க படத்தை ப்ரொட்யூஸ் பண்ணியிருக்கலாம், உங்க செலவுல எவனோ லாபம் பார்க்கிறான்”

“நானா மாட்டேன்னு சொல்றேன், சொன்னா மிருணா கேட்டாதானே? விடு, அவ அடுத்த படத்தை நாமளே ப்ரொட்யூஸ் பண்ணிடுவோம்… அவளுக்கு தெரியாம” என்றான்.

ஆ என தமன் பார்த்துக் கொண்டிருக்க, “ரெண்டு படம் பண்ணிட்டாளே… அவார்டு எதுவும் கிடைக்க ஏற்பாடு பண்ணலாமா தமன்?” எனக் கேட்டான்.

“உங்களுக்கே ஓவரா தெரியலைங்களா ஸார், மிருணாளினி மேடம் அவார்டு படமா எடுத்து வச்சிருக்காங்க?”

“அது படம் எப்படி இருந்தா என்னடா? அவார்ட் நாமளா ஏற்பாடு பண்ணினா போச்சுடா?”

“நீங்கதான் செய்றீங்கன்னு மிருணா மேடத்தோட பொண்ணு கூட கண்டு பிடிச்சிடும் ஸார்”

‘மாமா மாமா…’ என தன் மேல் பாசத்தை பொழியும் தன் மருமகள் லயாவின் நினைவில் புன்னகைத்தவன், “சரி விடு, அடுத்த படத்துக்கு பார்த்துக்கலாம்” என்றான்.

“விட்டா மலர் மேடத்துக்கு கூட அவார்டு கிடைக்க வைப்பீங்க ஸார்” கிண்டலாக சொன்னான்.

“அவளுக்கு எதுக்குடா அவார்டு?”

“சேவை செய்றாங்களே ஸார், அத பாராட்டி கொடுப்பீங்கன்னு நினைச்சேன்”

“ஹான்! இப்பவே ஹாஸ்பிடல கட்டிகிட்டு அழுவுறா, அவார்டெல்லாம் கொடுத்தா வீடுன்னு ஒண்ணு இருக்கிறதையே மறந்து போயிடுவா, என்னை பார்த்து யாருடா நீன்னு கேள்வி கேட்பா. இப்ப வேணாம், ஒரு அஞ்சு வருஷம் போகட்டும் டா, சென்ட்ரல் மினிஸ்டர் யாரையாவது வரவச்சு நாமளே அவார்ட் ஃபங்ஷன் பண்ணிடலாம்” நெட்டி முறித்துக் கொண்டே சர்வ சாதாரணமாக சொன்னான்.

 “அடுத்த ஜென்மத்துல உங்க வீட்டு நாய்குட்டியாவாவது பொறக்கணும் ஸார் நான்” என்றான் தமன்.

“ஏன் மேன் உனக்கு இந்த விபரீத ஆசை?”

“இப்படி நாய் பொழப்பு பொழைக்கிறதுக்கு அது பரவாயில்லிங்க, மூணு வேளையும் தங்க பிஸ்கட் போட்டு வளக்க மாட்டீங்க?”

“டேய் தொண்டை அடைச்சுக்கும் டா”

“போகுது ஸார், போற உசுரு தங்கம் தின்னு போனதா இருக்கட்டும்”

“அவ்ளோ சீக்கிரம்லாம் உன் உசுர போக விடறதா இல்லையே தமன்”

“என் உசுரை கொஞ்சம் கொஞ்சமா வாங்குறேன்னு சொல்றீங்களா?”

“பேச்ச குறைச்சிட்டு வேலைய பார்டா அதிக பிரசங்கி” என பிரவா பொய்யாக அவனை கடிய, அவனும் பொய்யாக சலித்துக் கொண்டே வெளியேறி விட்டான்.

அரை மணி நேரத்தில் “உங்க மச்சான் வந்திருக்கார் ஸார் உங்கள பார்க்க” என தமன் சொல்ல, யோசனையோடு பரத்தை உள்ளே வர சொன்னான் பிரவா.

பரத் எம் பி பி எஸ் முடித்து விட்டு இங்கேயே பொது மருத்துவம் படிக்கிறான்.

இதே கல்லூரியில் கடைசி வருடம் மருத்துவம் பயிலும் நவ்யா எனும் பெண்ணை விரும்புகிறான். கேரளத்தில் பெரிய அரசியல் பின்புலம் உள்ள பெண் அவள்.

 அவளது படிப்பு முடிவடையவும் அவர்கள் சொந்தத்தில் உள்ள பையனையே திருமணம் செய்து வைக்க போகிறார்களாம். காதல் திருமணத்திற்கு அதுவும் வேற்று மாநில பையனுக்கு ஒத்துக் கொள்ளவே மாட்டாராம் நவ்யாவின் தந்தை.

அனைத்தையும் சொன்ன பரத், “இன்னும் யார்கிட்டேயும் நான் சொல்லலை, உங்ககிட்டதான் முதல்ல சொல்றேன், நீங்கதான் ஹெல்ப் பண்ணனும் மாமா” என்றான்.

“லாஸ்ட் பேட்ச் ஃபேர்வெல் ஃபங்ஷன் அப்போ ஒரு பொண்ணு கூட டான்ஸ் ஆடுனியே…” பிரவா சொல்லிக் கொண்டிருக்க, “அவளேதான் மாமா” என்றான் பரத்.

“ம்ம்… என்னடா நம்ம மச்சானுக்கு இவ்ளோ தூரம் இடுப்ப வளைக்க தெரியுமான்னு அப்பவே நினைச்சேன், சும்மா ஒண்ணும் உன் இடுப்பு வளையல, காரியமாதான் வளைஞ்சிருக்கு என்ன?”

“மாமா…” சிணுங்கலாக அழைத்தான்.

“ஆமா… உன் அக்காவுக்கு என்னடா பதில் சொல்றது நான்? ஒண்ணும் தெரியாத பச்ச மண்ண நான்தான் கெடுத்திட்டேன்னு பக்கம் பக்கமா பேசுவாளே”

பரத் பாவமாக பார்க்க, “அட என்னங்க ஸார்… லவ் மேட்டர்னு வந்து நிக்கும் போது ஜவ்வு மாதிரி நீட்டி முழக்கி பேசிக்கிட்டு” என்றான் தமன்.

“அப்ப நீ போய் பேசி முடிச்சி வைடா, போடா” என்றான் பிரவா.

“ம்க்கும்… அந்த தில்லு எனக்கிருந்தா நான் ஏன் உங்களுக்கு கீழ வேலை செய்றேன்”

“தெரியுதில்ல… அப்ப…”

“ஷட் பண்ணிட்டேன் ஸார்” என சொல்லி வாயை மூடிக் கொண்டான் தமன்.

“உங்களால முடியாதா மாமா?” பாவமாக கேட்டான் பரத்.

“ஹான்! முடியாதுங்கிற வார்த்தையே நம்ம டிக்ஷனரில கிடையாது. பிரவாவோட மச்சானுக்கு பொண்ணு கிடையாதுன்னு சொல்ற தில்லு எவனுக்குடா இருக்கு?” என அலட்சியமாக கேட்ட பிரவா, “தமன்…” என அழைத்தான்.

“மலையாளம் கத்துக்கிற புக் எதுவும் வேணுங்களா ஸார்?” என தமன் கேட்க, பிரவா நன்றாக முறைத்தான்.

“சம்பந்தம் பேசும் போது லாங்க்வேஜ் பிராப்லம் வரக்கூடாதில்லீங்கள ஸார், அதுக்காக கேட்டேன்” என சின்ன குரலில் சொன்னான்.

“இந்த காமெடிக்கு நாளான்னைக்கு சிரிக்கிறேன். நவ்யா அப்பாவோட வீக்னெஸ் அவரோட பேக் கிரவுண்ட்னு எல்லாமே ஒரு இண்டு இக்கு விடாம எனக்கு தெரியணும். நவ்யா படிப்பை முடிக்கும் போது அந்தாள் ஏதாவது ஒரு விஷயத்துல நம்மகிட்ட லாக் ஆகி இருக்கணும், புரியுதா?” எனக் கேட்டான்.

தமன் சரி என தலையாட்டிக் கொள்ள, பயந்து போயிருந்த பரத்தை பார்த்த பிரவா, “என்னடா உன் லுக் சரியில்லை, இப்படித்தான் உன் கல்யாணம் நடக்கும், இல்லன்னா வாய்ப்பில்ல. என் முன்னால சைலன்ட்டா உட்கார்ந்து இருந்திட்டு அப்படியால போய் உன் அக்காட்ட கோள் மூட்டலாம்னு யோசிக்கிறியா?” எனக் கேட்டான்.

“ஐயையோ மாமா! நீங்க என்ன செஞ்சாலும் சரிதான்” என்றான் பரத்.

 “ம்ம்ம்… எம்மேல நம்பிக்கை வச்சு தைரியமா இரு. நான் சொல்ற வரை விஷயம் லீக் ஆகக் கூடாது. நான் நடத்தி வைக்கிறேன் உன் மேரேஜை” என உறுதி தந்தான்.

எழுந்த பரத் மாமனை அணைத்துக் கொள்ள வர, “டேய் டேய்… போடா, உன் அக்காவை கல்யாணம் பேச வந்தப்போ உர்ராங்குட்டான் மாதிரி இருந்த பயதானே நீ? மறக்கலடா நான்” என கிண்டலாக சொன்னான் பிரவா.

“அது அப்ப மாமா, இப்ப நானும் என் அக்கா மாதிரியே ஐ லவ் யூ!” என்றவன் பிரவாகனின் தோளை அணைத்து விலகினான்.

அவன் தோளில் தட்டிக் கொடுத்த பிரவா, “உன் அக்கா மாதிரி யாராலேயும் என்னை லவ் பண்ண முடியாது, நீ அந்த பொண்ணு கூட அதிகமா வெளில சுத்திட்டு இல்லாம ஒழுங்கா படி, நவ்யாவையும் படிக்க விடு” என சொல்லி அனுப்பி வைத்தான்.

பரத்திடம் எப்போதும் கிண்டல், கேலி என வார்த்தையாடும் பிரவா மறந்தும் மிருணா திருமணத்தின் போது பரத்தும் உடந்தையாக இருந்தது பற்றி வாய் திறக்க மாட்டான்.

இப்போது என்றில்லை, இதற்கு முன்னரும் கூட சொல்லிக் காட்டியது இல்லை. எப்போதுமே பழைய விஷயங்களை திரும்பி பார்க்காமல் ஓடிக் கொண்டே இருக்கும் பிரவாகனாகத்தான் இருந்தான். அதனால்தான் முதல் முறை ஆய்விலேயே ஜே சி ஐ அங்கீகாரத்தை தன் மருத்துவமனைக்கு பெற்று விட்டான்.

நேரத்தை பார்த்த பிரவா, “அவ வேலைய முடிச்சு ஹாஸ்பிடல் விட்டு வெளில வந்தாளா இல்லயா தமன்?” எனக் கேட்டான்.

“எமர்ஜென்ஸி சிசேரியன் அட்டெண்ட் பண்ண போயிட்டாங்க ஸார் மேடம்” என்றான் தமன்.

மகப்பேறு மருத்துவம் படித்து முடித்து விட்ட மலர் இலவச மருத்துவமனையில்தான் பணி செய்கிறாள். அறக்கட்டளையின் அறங்காவலர் அவள்தான். அறக்கட்டளையின் உறுப்பினர்கள் கூட மாறி விட்டனர். அறக்கட்டளை சுதந்திரமாக வெளிப்படைத் தன்மையோடு இயங்குகிறது.

இப்போதும் பிரவாகன் இலவச பிரிவு பக்கம் வருவதில்லை. உன் வசம் பொறுப்பு வந்து விட்டது, நீயே பார்த்துக் கொள் என மலரிடமே விட்டு விட்டான்.

பொது மருத்துவம் படித்து முடித்த கிஷோரும் மீண்டும் இங்கேயே வந்து விட்டான். மருத்துவர்கள் கிருஷ்ணகுமார், கமலவேணி, பத்மநாதன் போன்ற சிறப்பானவர்கள் அவளுக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

மருத்துவத்தை வியாபாரமாக பார்க்காத வெகு சில மருத்துவர்களில் இவளும் ஒருத்தி. நிஜமாகவே சேவைதான் செய்கிறாள். அதில்தான் அவளுக்கு மன நிறைவு. முகம் தெரியாத தன் அன்னையின் ஆத்மசாந்தியை நோயிலிருந்து விடுபடும் எளியவர்களின் முகங்களில் காண்கிறாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement