Advertisement

மாயம் 02
அமுதவேல் பிறப்பிலிருந்தே பெரிய பணக்காரர் இல்லை என்றாலும் நாலு பேருக்கு சம்பளம் தரும் அளவிற்கு பணமிருந்தது.
அவரின் பருவக் கால முயற்சியில் தான் அவரின் கம்பெனி மேலும் மேலும் வளர்த்தொடங்கிருந்தது.
இதற்கு உறுதுணையாக இருந்தது அவனின் நண்பன் மற்றும் தொழிலாளியான தங்கராஜ் தான்.
வடிவுக்கரசியை அமுதவேலுக்காக பெண் பார்த்ததே தங்கராஜ் தான். அவனுக்கு ஒன்னு விட்ட தங்கையே வடிவுக்கரசி.
இருவருக்கும் திருமணம் ஆன புதிதில் இருவருக்குள்ளும் இருக்கும் பிணைப்பை கண்டு மகிழ்வுற்றார் தங்கராஜ்.
ஒரு மாத காலத்திலே வடிவுக்கரசி கருவுற்று விட , அமுதவேல் ஒரு அன்னையாய் இருந்து அவளை கவனித்து கொண்டான்.
மாதங்கள் போக போக வடிவுக்கரசியை பத்திரமாக பார்த்துக் கொள்ள அந்த நேரத்தில் தங்கராஜிற்கு மலர்விழி என்பவளுடன் திருமணம் நடந்தேறியது.
ஒன்பது மாதம் ஆகயில் ,வடிவுக்கரசிக்கு வலைக்காப்பு வைத்தனர்.
சிறிது நாளிலேயே வடிவுக்கு வலி எடுக்கவே ,அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.
மலர்விழி வடிவுக் கூடவே இருந்து அனைத்தும்  கவனித்துக் கொண்டார்.
சிறிது நேரத்திலேயே அழுகையுடன் ஆண் குழந்தை பிறந்திட , அக்குழந்தையை தூக்கி கொண்டு வந்து அமுதவேலிடம் ஒப்படைத்தார்.
மூன்று நாளிலே வடிவு வீட்டிற்கு வந்து விட குழந்தையையும் தாயையும் நன்றாக கவனித்து கொண்டார் மலர்.
ஆண் பிள்ளை பிறந்த பதினாறு நாளிலேயே அனைவரும் சேர்ந்து நரேந்திரன் என்று பெயர் சூட்டினர்.
நாட்கள் நகர நகர வடிவுக்கரசி சோசியல் ஆக்ட்டிவிட்டிஸ் க்ளப் என்று செல்ல தொடங்கினார்.
அதனால் குழந்தையின் பொறுப்பு முழுவதும் மலரின் கைக்கு கிடைக்கவே , ஆசையாய் வளர்க்க தொடங்கினார்.
அமுதவேல் ஆசைப்பட்ட படியே நரேந்திரன் எளிமையாக வளர அப்படியே இரண்டு வருடங்கள் சென்று விட்டது.
அமுதவேல் ஏதோ வேலை விஷயமாக ஃபாரின் சென்று வந்தார்.
வந்தவர் தன் மகனுக்காக சில விளையாட்டு பொருட்கள் எல்லாம் வாங்கி வந்திருந்தார்.
” நரேன் இங்க வாங்க அப்பா உங்களுக்கு என்ன எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன் பாருங்க ” என்று அவர் கையில் வைத்திருந்த விளையாட்டு பொம்மை எல்லாத்தையும் நீட்ட ,
” அய்..!! பொம்ம ” என்று தன் பிஞ்சு விரலால் வாங்கியவன் குதுகலித்தான்.
” அப்பா அப்பா சூப்பரா இதுக்கு பா ” என்று மழலை மொழியில் கூறியவன் ,” இத போய் நான் அத்த கிட்ட காத்திட்டு வரேன் ” என்று சந்தோஷமாக ஓட்டம் பிடித்தான்.
அந்த நேரம் பார்த்து உள்ளே வந்த வடிவு ” நரேன் கண்ணா அம்மா கிட்ட வாங்க பாப்போம் ” என்று கையை நீட்டி பாசமாக அழைக்க ,
” போ மா மீ அத்து மா வீட்டுக்கு போய் இத காத்திட்டு வத போது ” என்று விட்டு ஓட்டம் பிடித்தான் தங்கராஜின் வீட்டிற்கு.
இதனை கண்ட வடிவுக்கு முதல் முறை அந்த வீட்டின் மீது கோபம் வந்தது. ஆனால் தான் அவனுடன் இல்லாததால் தான் அவன் இப்படி செய்கிறான் என்று அறியாமல் அந்த குடும்பத்தின் மீது கோபம் கொண்டார்.
வேகமாக மலரின் வீட்டிற்க்கு வந்த நரேன் , ” அத்த அத்த ” என்று வீடே அதிரும் படி கத்திக் கொண்டே உள்ளே வந்தான்.
” நரேன் கண்ணா இங்க வாங்க நான் இங்க தான் இருக்கேன் ” என்று சமையலறையில் இருந்து குரல் கொடுத்தாள் மலர்விழி.
” அத்த ” என்று தன் பிஞ்சு கைகளில் இருந்த விளையாட்டு பொம்மையை காட்டினான்.
” அப்பா வந்துட்டாறா கண்ணா ” என்று மலர் கேட்க
” ஆமா அத்த இதுலாம் அப்பா தான் வாங்கி தந்தாரு ” என்று பெருமையாக கூறிட ” சரி டா கண்ணா நீ போய் இத வச்சி விளையாடுவியாம் நான் சமையல் வேலை முடிச்சிட்டு வருவேனாம் ” என்றாள்.
” இல்ல அத்த நீயும் வா நாம சேந்து விதையாடலாம் ” என்று அவளின் முந்தானையை பிடித்து இழுத்து அடம்பிடிக்க
” இல்லடா கண்ணா அத்தைக்கு கொஞ்சம் வேலை இருக்காம் நீங்க போய் அமைதியா விளையாடுவீங்களாம் ” என்று சமாதான படுத்த முயல அவனோ மேலும் அடம்பிடிக்க தீடிரென மலர்விழி மயங்கி விழுந்தாள்.
தன் அத்தை மயங்கி விழுந்ததை கண்ட நரேன் பயந்து போய் வெளியில் இருந்த தன் மாமாவை அழைத்தான் அழுத்துக் கொண்டே..
அவரும் வேகத்துடன் வந்து தன் மனைவியை தூக்கியவர் , அறையை திறந்து படுக்கையில் படுக்க வைத்து வேகமாக அழைப்பேசியில் மருத்துவரை அழைத்து வர சொன்னார்.
நரேன் பயந்த படியே தன் அத்தையின் முகத்தினை பார்த்த படி நின்றிருந்தான்.
சிறிது நேரத்திலே மருத்துவர் வந்து பரிசோதனை செய்து பார்த்தவர் , வெளியே வந்து நற்செய்தியை கூறினார்.
மலரின் கர்பத்தை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சியுற்றவர் நரேனை தூக்கி தட்டாமாலை சுற்றினார்.
மருத்துவர் கூறிச் சென்றது அவனுக்கு புரியவில்லை எனினும் தங்கராஜின் மகிழ்ச்சியை எண்ணி தன் அத்தைக்கு ஒன்றுமில்லை என்று எண்ணிக் கொண்டான்.
அமுதவேலுக்கும் வடிவுக்கரசிக்கும் விஷயம் தெரிவிக்க பட அதில் மிகுந்த மகிழ்ச்சியுற்றது அமுதவேலே..
நரேனுக்கு தன்னுடன் விளையாட இன்னும் பத்து மாதத்தில் ஒரு குழந்தை வர போகுது என்று அவனுக்கு புரியும் படி கூறியிருந்தார் தங்கராஜ்.
தங்கராஜ் கூறிய நாளில் இருந்து அந்த குழந்தையின் வருகைக்காக காத்திருக்க தொடங்கினான்.
தினமும் வந்து மலர்விழியின் வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் ஆயிரம் கதை பேசுவான்.
அவனால் ஒரு நாள் கூட அந்த பிறக்காத குழந்தையிடம் பேசாமல் இருக்க முடியாது.
நாட்கள் மாதங்களாகி நகரத் தொடங்க , மலர்விழியின் வயிரும் பெரிதாக தொடங்கி இருந்தது.
ஏழாம் மாதத்திலே மலர்விழிக்கு வலைக்காப்பு நடத்தி அவளின் பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைத்து விட , அன்றைய நாளில் நரேன் அனைவரையும் படுத்தி எடுத்து விட்டான் மலர்விழியை கேட்டு.
அவர்கள் அவனை எவ்வளவு சமாளித்து பார்த்து முடியாமல் போனது.
அவனின் அலிச்ட்சாட்டியம் தாங்கி கொள்ள முடியாமல் அடுத்து வந்த ஒரு வாரத்திலேயே மலர்விழியை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார் தங்கராஜ்.
அன்றைய நாளிலே மலர்விழியின் வயிற்றில் மெதுவாக பிஞ்சு கைகளால் தொட்டு பார்த்திட உள்ளிருந்த குழந்தை தன் தாயை எட்டி உதைத்தது.
” உனக்கு தெரியுமா பேபி நான் உன்ன எவ்ளோ மிஸ் பண்ணேன்னு. நீ வெளிய வந்ததும் என் கூடவே தான் இருக்கனும் சரியா . நான் உன்ன எங்கையும் தனியா அனுப்பவே மாட்டேன் ” என்று அந்த குழந்தையிடம் பேச மீண்டும் ஒரு உதை.
தன் ரோஜா பாதத்தால்
உதைத்து அவனின் செவிகளுக்கு
இசைந்து கொடுத்தது..!!!
மலர்விழிக்கு ஆச்சரியம் தன்னுடைய பேச்சிற்கு மட்டுமே இசைந்து கொடுப்பவள், ஏன் தந்தையின் பேச்சிற்கு கூட அசையாது வயிற்றினுள் இருப்பவள் நரேனின் பேச்சிற்கு குழந்தையின் செவி சாய்ப்பு அவளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இரண்டு மாதங்களில் நரேன் பாதி நேரம் மலருடனே செலவழித்து குழந்தையின் வருகைக்காக காத்திருக்க தொடங்கினான்.
அவனின் காத்திருப்புக்கு , மலரின் அலறலுடன் குழந்தையின் அழுகையுடன் பிறந்தாள் அவனின் தேவதை..
செவிலியர் குழந்தையை கொண்டு வந்து கொடுத்து விட்டு செல்ல நரேன் அமைதியாக அந்த பிஞ்சுவின் முகத்தையே பார்த்திருந்தான்.
மூன்று நாட்களிலே மலரையும் குழந்தையையும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
குழந்தைக்கு பெயர் சூட்டு விழா வைக்க நினைக்க , என்ன பெயர் வைக்கலாம் என்று பொதுவாக பேசிக் கொண்டு இருக்கும்போது ” நான் தான் குழந்தைக்கு நேம் வைப்பேன்.‌ இவ என்னோட டாலி இவளுக்கு நான் மட்டும் தான் பெயர் வைப்பேன் ” என்று இருகைகளையும் இடுப்பில் வைத்த படியே கூறிட அவனின் குணம் அறிந்த மலர் ” சரி நீயே உன் டாலிக்கு நேம் வை ” என்றாள்.
” ஓகே ” என்றவன் குழந்தையை காண உள்ளே சென்று விட்டான்.
பெயர் சூட்டும் விழா தொடங்கிட , குழந்தையின் பெற்றோராக மலர்விழி தங்கராஜ் அமர்ந்திருக்க ..
” என்னோட மடியில தான் என்னோட டாலிய அமர வைக்கனும் ” என்று சண்டை பிடித்து அவர்களுக்கு நடுவில் அமர்ந்து குழந்தையை மடியில் தாங்கினான்.
” சரி பிள்ளையாண்ட காதில மூணு தடவா பெயர ஓதுங்கோ ” என்று ஐயர் சொல்ல
” நரேன் கண்ணா உன்னோட டாலிக்கு என்ன நேம் சூஸ் பண்ணி இருக்கீங்க சொல்லுங்க ” என்று மலர் ஆசையாக கேட்டிட
” அது வந்து ” என்றவன் யோசிப்பது போல் பாவனை செய்ய , அனைவரும் அவனையே பார்த்திருந்தனர்.
” என்னோட நேம் ஸ்டார்ட் ஆகுற லெட்டர் ந (N) சோ என்னோட டாலியோட நேமும் அதே லெட்டர்ல தான் இருக்கனும் ” என்று சொல்லி குழந்தையின் செவி அருகே சென்று நீர்த்திகா நீர்த்திகா நீர்த்திகா என்றான்.
அனைவருக்கும் அவனின் செயல் ஆச்சரியத்தை வெளிபடுத்த வைத்தது.
” எல்லாருக்கும் என்னோட டாலி இனிமேல் நீர்த்திகா ஆனா எனக்கு மட்டும் இனி இவ நீரு யாரும் இவள நீருன்னு சொல்லி கூப்பிட கூடாது ” என்று எச்சரித்தான்.
அனைவரும் சிரித்து விட்டு” சரி பா யாரும் உங்க நீருவ நீருன்னு சொல்ல மாட்டோம் போதுமா ” என்றார் அமுதவேல்.
” டன் ” என்று கட்டை விரலை தூக்கி காட்டினான். அங்கு சிரிப்பொலியாக இருந்தது.
காலம் செல்ல செல்ல நரேன் நீருவுடனே தன் நேரத்தை செலவழிக்க தொடங்கினான்.
அவளை விட்டு அகலாது அவளுடனே ஒவ்வொரு நேரத்தையும் தன் பொக்கிஷமாக கழித்து வந்தவனை வழுக்கட்டாயமாக பள்ளியில் சேர்த்தனர் வடிவுக்கரசியும் அமுதவேலும்.
நரேனை விட அதிகமாக அழுதது என்னவோ இரண்டரை  வயதுடைய நீருவே. அவளின் அழுகையை பார்த்தவாறே பள்ளிக்கு சென்றான்.
வகுப்பில் விட்டுவிட்டு வந்துவிட்டனர் அவனது பெற்றோர்கள்.
” எப்படியாவது இங்கிருந்து தப்பிக்கனுமே பாவம் என் நீரு ” என்று மனதில் நினைத்தவன் அதற்காக பலமாக யோசிக்க தொடங்கினான்.
எப்படி தப்பிப்பது எப்படி தப்பிப்பது என்று சிந்தித்தவனுக்கு யோசனை வந்து போனது..
நேராக அவனின் மிஸ்ஸை காணச் சென்றவன் , அவரது கையில் நறுக்கென்று கடித்து வைத்து விட்டு ஓடிவிட்டான்.
இவனின் செய்கையில் கோபம் கொண்ட ஆசிரியர் உடனே அவரின் தந்தை அழைத்து உடனடியாக பள்ளிக்கு வரும்மாறு அழைத்து சொல்ல , அமுதவேல் பயந்த படியே வேகமாக பள்ளிக்கு விரைந்தார்.
அவனின் க்லாஸிற்கு வந்து நின்றவுடன் , நரேன் அழுகையுடன் ‘அப்பா’ என்றவாறு அவரின் கால்லை கட்டிக் கொண்டான்.
  ” அப்பா அப்பா என்ன இந்த மிஸ் அடிக்கிறாங்க பா ” என்று கதறி அழுது பெர்ஃபான் செய்திட
அவனை தூக்கியவர் சமாதானம் செய்தபடியே ஆசிரியரிடம் வந்து என்னவென்று கேட்க , அவரோ ஒரு பெரிய லிஸ்டே அடுக்கிக்கொண்டே சென்றார்.
” வந்த ஒரே நாள்ளையே உங்க மகனோட சேட்டைய தாங்க முடியல சார் .பசங்க கொண்டு வந்த நோட் எல்லாத்தையும் கிழிச்சு போட்டு பேக்ல தண்ணிய ஊத்தி வச்சி க்ளாஸையே ஒரு வழி பண்ணிட்டான். ப்ளிஸ் உங்க பையன‌ இன்னைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போங்க ” என்று கை எடுத்து கும்பிடாத குறையாக சொல்லி அனுப்பி வைத்தார் அந்த ஆசிரியர்.
அதுவரை அவன் முகத்தில் இருந்த சோகம் மறைந்து ஒரு மந்தாசக புன்னகை வெளிப்பட்டது.
அமுதவேல் அவனை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.
அந்த நேரம் வடிவுக்கரசி வீட்டில் இல்லை என்றும் , நரேன் நேராக நீருவின் வீட்டிற்கு ஓடி விட்டான்.
மலர்விழி தான் அவனுக்கு பல பல அறிவுரைகளை கூறி அவனை பள்ளிக்கு சென்று வர வைத்தாள்.
பள்ளியை விட்டு வந்தவுடன் நேராக அவன் சென்று பார்ப்பது நீருவை மட்டுமே.
வருடங்கள் செல்ல செல்ல நரேன் நீருவின் பிணைப்பு அதிகரித்து கொண்டே இருந்தது.
காலத்தின் ஓட்டத்தில் நரேனின் ஆறாவது வயதில் அவன் படிக்கும் பள்ளியிலேயே நீருவையும் சேர்த்து விட்டனர்.
நரேனுக்கு ஏக குஷியாக இருந்தது. அவளை பிரிந்து இரண்டு வருடங்களில் எட்டு மணி நேரத்தை தினந்தோறும் கடத்தி சிரம பட்டவனுக்கு அந்த குளிரிலும் மேலும் சிலிர்த்து உஷ்ணத்தை ஏற்படுத்தியது.
பின் இருவரும் சேர்ந்து பள்ளிக்கு சென்று வருவது உண்டு.
தினமும் மலரின் வீட்டிற்க்கு தான் பள்ளி முடித்து வருவான்.
அவளோடு சேர்ந்து விளையாடுவது , படிப்பது , டிவி பார்ப்பது , மலர்விழியிடம் கதை கேட்பது என்று அவனுடைய நேரத்தை எல்லாம் நீருவுடனே கழிப்பான்.
இதுமட்டுமின்றி தினமும் இரவு உணவும் அவனுக்கு மலர் வீட்டில் நீருவின் கையில் தான் உண்டு முடிப்பான்.
பிறப்பதற்கு முன்பே அவனின் பேச்சை கேட்டவள் பிறந்த பின்பா அவனை மதியாமல் சென்று விடுவாள்.
நரேன் மட்டுமே அவளின் உலகாய் மாறி போனான். அவனை கண்ட பின்பே அந்த பிஞ்சு முகத்தில் புன்னகை அரும்பும்.
அன்றும் எப்போதும் போல் இருவரும் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டார் தங்கராஜ்.

Advertisement