Advertisement

அத்தியாயம் 03

 

லாரி மோதியதில் மலர் பறந்து விழுந்திட , அந்த ட்ரைவரே மலரை தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.

இங்கே பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த நரேன் நீரு இருவரும் மலரை தேட , அவர் இல்லாமல் போயிடவே நீரு பயந்து போனாள்.

அதற்குள் வேலை முடித்து வந்த தங்கராஜ் , இருவரின் பயந்த முகத்தை கண்டு ” என்ன ஆச்சி ரெண்டு பேருக்கும்..? ஏன் இப்படி பயந்து போய் இருக்கீங்க ” என்று பொறுமையாக கேட்க

” அப்பா ” ” மாமா ” என்று இரு குரல்களும் நடுக்கத்தில் வந்தது.

” என்ன ஆச்சி ..??மலர் எங்க போய் தொலஞ்சா” என்றவர் ” மலரு  மலரு ” என்று அழைத்தார்.

மலர் வராமல் போகவே உள்ளே சென்று ” மலர் “

” மலர் ” என்று அழைத்திட

” அப்பா அம்மா வீட்ல இல்ல பா நானும் திராவும் தேடி பாத்தோம் அம்மாவ காணோம் ” என்று அழுதிடும் குரலில் கூறினாலும் நீரு அழ வில்லை.

உள்ளுக்குள் தங்கராஜ் பயந்து போனாலும் வெளியில் ” இங்க எங்கயாவது தான் கடைக்கு பொய் இருப்பாங்க சீக்கிரமே வந்துடுவாங்க டா போய் ட்ரெஸ் மாத்திட்டு வா ” என்று அனுப்பி வைத்தார்.

உள்ளுக்குள் அனுப்பி வைத்தவர் வெளியே சென்று தேடவும் முடியாமல் இங்கேயே இருக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டு இருக்க , அந்த நேரம் பார்த்து வருகை புரிந்தார் அமுதவேல்.

தன் நண்பனின் தவிப்பை அறியாது வேகமாக வந்தவர் , ” ராஜூ இந்த குளிருல வெளியே என்ன பண்ணிட்டு இருக்க , எப்படி  மலரு உன்ன இங்க நிக்க சம்மதிச்சா ” என்று கேட்டிட

” அமுதா ” என்று அவன் தோளில் சாய்ந்து அழுகத் தொடங்கினான்.

நண்பனின் கண்ணீரில் ஒன்றும் புரியாமல் தவித்த அமுதவேல் , அவரை தன்னிடம் இருந்து பிரித்து ” என்ன ஆச்சி ராஜூ எதுக்கு இப்போ அழுகுற..??” என்று கண்ணீரை துடைத்த படி கேட்டார்.

” அமுதா மலரு வீட்ல இல்ல டா .எங்க போன்னான்னு தெரியல. புள்ளைங்கள தனியா விட்டுட்டு தேடவும் போக முடியல ” என்று தன்னிலையை கூறிட.,

” மலருக்கு ஒன்னும் ஆயிருக்காது டா .நீ எதுக்கும் கவலபடாம இரு .இப்போ வந்துடுவா பாரு ” என்று ஆறுதல் படுத்த முயன்ற அமுதவேலை கண்டு ” நான் பசங்களுக்கு சொல்லி சமாளிச்சதையே எனக்கும் சொல்றியா டா ” என்க

” சரி வா அக்கம் பக்கத்துல போய் விசாரிக்கலாம் டா ” என்று அவரை அழைத்துக் கொண்டு செல்ல

கேட்ட அனைவரின் பதிலும் ” தான் பார்க்கவில்லை ” என்று தான் வந்தது.

நேரம் ஆக ஆக அனைவருக்கும் பயம் தொற்றிக் கொள்ள என்ன செய்வது ஏது செய்வது எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியாமல் தவித்து போயினர்.

அமுதவேல் தான் ” இனியும் நாம தாமதிக்க வேணாம் போலிஸ் கம்ப்ளெண்ட் கொடுத்துடலாம் ” என்று அறிவுரை சொல்ல தங்கராஜூக்கும் சரி என்று படவே இருவரும் கிளம்ப தயாராயினர்.

அப்போது ஒரு இளைஞன் அவர்களை நோக்கி வந்தவன் ” அங்கிள் அங்க உங்க ஒய்ஃப் மலர் ஆண்டிக்கு ” என்றவனுக்கு மூச்சு வாங்க

” சொல்லு தம்பி மலருக்கு என்ன ஆச்சி ” என்று தவிப்புடனும் பதற்றத்துடனும் கேட்க

” அது வந்து அங்கிள் மலர் ஆண்டிக்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சி ஜிஹேச்ல சேர்த்துருக்காங்க ” என்றான் வந்தவன்..

அவன் கூறியதை கேட்ட தங்கராஜ் இடிந்து போய் கீழே மடிந்து சரிந்தார்.

அமுதவேல் அவனையும் பிள்ளைகளையும் கூடிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.

மருத்துவமனைக்கு வந்தவர் , ” கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஆக்சிடன்ட் கேஸ் ஒன்னு வந்துச்சி அந்த பேஷண்ட் இப்போ எங்க இருக்காங்கன்னு தெரியுமா ” என்று அமுதவேல் கேட்டிட

” இப்போ தான் ஆப்ரேஷன் தேட்டர்ல இருந்து வந்துச்சி .நீங்க போய் பாருங்க ” என்று அனுப்பி வைத்தாள் அந்த ரிசப்ஷனிஸ்ட்.

அவரின் சொல்லை சரியாக கவனித்த நீரு , கனத்த மனதுடன் உள்ளே சென்றாள்.

அங்கே சென்றவர்கள் பார்த்தது என்னவோ  உயிர் தனியாக உடல் தனியாக  என்று இருந்த மலரின் உடலை தான்…

மலர்விழியின் உயிரற்ற உடலை கண்ட தங்கராஜ் மடிந்து சரிந்து அழத் தொடங்கினார்.

அமுதவேலும் நரேனும் கூட அழுது கொண்டு இருந்தனர். ஆனால் நீரு ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை. கல்லை போன்று நின்றிருந்தாள்.

நரேன் தான் தன்னை தேற்றி கொண்டு நீருவை சமாதானம் படுத்த எழ , ஆனால் அதற்குள் அவள் அவனிடம் வந்து ” அழாத திரா‌ அம்மா எங்கேயும் போகல நம்ம கூடவே தான் இருப்பாங்க ஆனா உடலால இல்லை மனதார இருப்பாங்க ” என்று ஆறுதல் படுத்தினாள்.

” நீரு ” என்று அவளை இறுக்கி அணைத்து அழுது தீர்த்தான். அதில் காதல் இல்லை மோகம் இல்லை காமம் இல்லை வெறும் பாசம் அக்கறை கவலை மட்டுமே இருந்தது.ஒரு சேயாய் மாறி அவனை அணைத்துக் கொண்டாள்.

அமுதவேலை நெறுங்கி வந்த மருத்துவர் , ” நீங்க யாரு ..?? ” என்று கேட்க

” இவரு தான் அவுங்களோட புருஷன் நான் அவளோட அண்ணன் ” என்றார் அமுதவேல்.

” சரிங்க சார் கொஞ்சம் ஃபார்மாலிட்டிஸ் இருக்கு அத முடிச்சிட்டு நீங்க பாடிய எடுத்து போகலாம் ” என்றார்.

நீரு அந்த மருத்துவரிடம் சென்றவள் ,” டாக்டர் ” என்று அழைத்திட‌ ,

” சொல்லு மா “

” டாக்டர் எங்க அம்மா தான் இப்போ உயிரோட இல்ல அவுங்களோட உறுப்புகளாவது உயிர் வாழட்டுமே .அதுனால அவுங்களோட ஆர்கன்ஸ நான் டொனேட் பண்றேன் டாக்டர் நீங்க அவுங்கள உயிரோட வாழ வைங்க ” என்று தன் வயதிற்கும் மீறிய யோசனையை சொன்னாள்.

இதனை கேட்ட மருத்துவர் மற்றவர்களை நோக்க , தன் மகளின் எண்ண படியே ஆகட்டும் என்றெண்ணி சம்மதித்தார்.

மருத்துவரும் செவிலியரை அழைத்து சொல்லிட , அவரும் தங்கராஜிடம் கை எழுத்து வாங்கி விட்டு ஆப்ரேஷன் தேட்டருக்கு மலரை அழைத்து சென்றனர்.

சிறிது நேரத்திலே மலரின் உடலை முழுவதும் வெள்ளை துணியிட்டு கட்டி எடுத்து வந்தனர்.

பின்னர் வீட்டிற்கு எடுத்துச் சென்று செய்ய வேண்டிய இறுதி சடங்கு அனைத்தையும் செய்து முடித்து அவரின் உடலை பூத உலகிற்குள் அனுப்பி வைத்தனர்….

நீரு தன் அன்னையின் உடலை பார்த்தவாறே இருந்தாலே தவிர ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை..

எங்கு தான் கண்ணீர் சிந்தினால் அது தன்னவனுக்கு வலிக்குமோ என்றே கண்ணீரை சுரக்க வில்லை…

அதன் பின் வந்த நாட்களில் வடிவுக்கரசி எதை நினைத்து அப்படி பேசினாரோ தெரியவில்லை. ஆனால் நரேன் அவளுடனே முழு நேரத்தையும் கடத்த தொடங்கி இருந்தான்.

அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வந்தான். அதை பார்த்து மகிழ்ந்தாலும் நீருவினால் நிம்மதியாக வாழ முடியவில்லை.

மலர்விழியின் கண்கள் எடுக்கப் பட்ட இரண்டு நாளிலே ஒரு குழந்தைக்கு வைத்து அவளின் பார்வை மீட்டெடுத்தனர்.

அவளுக்கு துயரம் வரும் நேரங்களில் அந்த குழந்தையை சென்று காண்பது உண்டு. ஏனோ அந்த குழந்தை ஒரு குழந்தையாக தோன்றாமல் தன் அன்னையாகவே தோன்றிட அவளை சென்று பார்த்து விட்டு வருவாள்.

நரேன் தன் பள்ளி படிப்பை முடித்து கொண்டு கல்லூரி வாழ்க்கையை நோக்கி பயணிக்க , நீருவை பிரிந்து செல்வதை எண்ணி மிகவும் சிரமப்பட்டான்.

ஒரு குழந்தையை போல் அடம் பிடிக்க தொடங்கி இருந்தான்.

நீரு தான் அவனை சமாதானம் செய்து கல்லூரிக்கு அனுப்பி வைத்தாள்.

இப்போது நீரு பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்க , நரேனும் இல்லாமல் மலரும் இல்லாமல் நீரு தவித்து போனாள்.

ஏனோ அவளுக்கு தனிமை வாட்டியது. தினமும் அவனின் அழைப்பிற்காக காத்திருக்க தொடங்கி இருந்தாள்.

அவனிடம் பேசிய பின்பு தான் , அந்த நாளே முழுமையுற்றது போல் தோன்றும்.

கோவையில் நரேனும் வாரந்தோறும் வரும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைக்காக காத்திருக்க தொடங்கினான்.

வார இறுதி நாட்களே அவன் வாழ்வை கடுத்துவதற்கு காரணமாக அமைந்திருந்தது.

அந்த இரண்டு நாட்களில் நரேன் நீருவுடன் நேரத்தை கழித்து அந்த நேரத்தை எல்லாம் மனதினுள் சேமித்து வைத்துக் கொள்வான்.

காலங்கள் அதன் வேகத்தில் ஓடத் துவங்க , நீருவும் தன் பள்ளி படிப்பை முடித்திருந்தாள்.

அதேநேரம் கோவையிலும் நரேன் அவனது UG படிப்பை முடித்தான்.

அடுத்ததாக வடிவுக்கரசி அவனை வந்து தந்தையின் பிஸ்னஸை பார்த்துக் கொள்ள சொல்ல , நரேன் வம்படியாக முடியாது என்று கூறி நீரு சேர்ந்த கல்லூரியிலேயே பீஜி சேர்ந்து விட்டான்.

வடிவுக்கு தான் ஆத்திர ஆத்திரமாக வந்தது. தான் சொல்வதை அவன் கேட்பதில்லை என்று…

அந்த ஆத்திரத்தை யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் சிறிது சிறிதாக தன் கணவரிடமே காட்ட தொடங்கினார்.

நீரு நரேன் பி.எஸ்.சி சிஎஸ் எடுத்ததால் அவளும் பி.எஸ்.சி சிஎஸ் எடுத்து படிக்க தொடங்கினாள்.

நரேன் எப்போதும் அவள் கூடவே இருப்பதனால் யாரும் அவளை நெருங்க வில்லை.

அப்படி நெருங்கிய யாரும் வீட்டிற்கு ஒழுங்காக சென்றதில்லை. அதனாலையே என்னவோ அவளிடம் நட்பு பாராட்டவும் பலர் பயந்தனர்.

அதில் அவளுக்கு தோழியாக கிடைத்ததே சாதனா .நீருவை போல் எல்லாத்தையும் மனதில் வைத்துக் கொண்டு வெளியில் மற்றவர்களுக்காக சிரிக்கும் பெண் அல்ல.

எதையும் வெளிப்படையாக கூறும் பெண். மனதில் தோன்றியதை அப்படியே கூறி  பலரின் முகத்தை சுளிக்க செய்து இருக்கிறாள்.

அனைவரிடமும் சிரித்து பேசிய பழகிய பெண்ணிற்கு நீருவின் அமைதி அவளை வெகுவாக ஈர்த்தது.

அதனால் அவளாகவே முன் வந்து நட்பு பாராட்டினாள்.

நீருவும் சாதனாவின் குணத்தை கண்டு வியந்திருக்கிறாள். கல்லூரியில் சேர்ந்த இந்த ஒரு மாதத்திலே அவளுக்கென்ன ஒரு கூட்டத்தை உருவாக்கிக் கொண்டாள்.

” ஹோய் ஐம் சாதனா ” என்று நட்பு பாராட்ட அவள் கையை நீட்ட

” ஹாய் ” என்றவள் நோட்ஸை பார்க்க

” என்ன எப்ப பாரும் படிச்சிட்டு தான் இருப்பியா எங்க கூடலாம் பேசவே மாட்டியா என்ன ” என்று கேட்க

” அப்படிலாம் இல்லையே ” என்று அமைதியாகி விட

” இந்த ஒரு லைன் ஆன்சர் எல்லாம் எனக்கு தேவையில்லை வா என்கூட ” என்று அவளை அழைத்துச் இல்லை இல்லை இழுத்துச் சென்றாள் .

நேராக சிட் ஔடிற்கு வந்தவள் ,” ஹே பட்டிஸ் இது நம்மளோட நீயூ ஃப்ரேண்ட் நீர்த்து” என்று அறிமுகம் படுத்தி வைக்க..

” என்னது இவ நம்ம ஃப்ரேண்டா .எப்படி இவளோட ஆளு இவள தனியா விட்டாரு ” என்று கேலி செய்ய

உள்ளுக்குள் அதை இரசித்தாலும் வெளியில் , ” திரா ஒன்னும் என்னோட ஆளு கிடையாது .என்னோட மாமா பையன் அவ்வுளவு தான் ” என்று சொன்னாலும் அவளின் விழிகள் பளிச்சிட்டது.

தூரத்தில் இருந்து இதனை கண்ட நரேன் , அவர்கள் இருக்கும் இடத்திற்கு வருகை தர அதனை கண்ட ஒருவன் ” டேய் சீனியர் வராரு டா ” என்று சொல்ல

அனைவரும் அவனை திரும்பி பார்த்தனர். நீருவும் திரும்பி பார்த்து அவனை இரசிக்க தொடங்கினாள்.

அவளின் பார்வையை அறிந்துக் கொண்டாள் சாதனா.

அவர்களிடம் வந்தவன் நீரு பக்கத்தில் நின்றுக் கொண்டு ஒரு பார்வை பார்க்க , நீரு அதனை இரசித்து பார்த்தாள்.

சாதனா தான் அவளின் கையை பிடித்து அழுத்தம் கொடுத்திட அதில் சுயநினைவு பெற்றவள் , ” திரா இது சாதனா என்னோட க்ளாஸ்மேட் அண்ட் ப்ரெண்ட். இவுங்க எல்லோரும் அவளோட ப்ரெண்ட்ஸ் இனி எனக்கும் ஃப்ரெண்ட்ஸ் “என்றாள் புன்னகை மாறாமல்..

” ஹோ ” என்றவன் ” அப்போ இனி நானும் உங்களோட ப்ரெண்ட் ஓகே வா ” என்றிட

அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பார்த்து கொள்ள இறுதியில் டன் சீனியர் என்றனர்.

அதன்பின் வந்த நாட்களில் நீரு அவர்களுடன் இருந்தால் மட்டுமே நரேன் அவனது கூட்டத்துடன் இருப்பான். அதில் தான் அவனுக்கு ஆதித்யா நண்பனானது. அது மட்டுமின்றி  ஆதித்யாவின் காதலி தான் சாதனா. அதுனாலே அவர்கள் இருவருக்குள்ளும் நட்பு மலர்ந்தது.

இவர்களின் நட்பு வளர்ந்துக் கொண்டே சென்றது. அனைவரிடத்திலும் நீரு பழகினாலும் சாதனாவிடன் சற்று அதிகமாக ஒட்டிக் கொண்டாள்.

நாட்கள் செல்ல செல்ல நீருவிற்கு நரேனின் மீதுள்ள காதல் பிணைப்பு அதிகரித்து கொண்டே இருந்தது.

இருவரும் தனித்தனியாக இருந்தாலும் மதிய நேரத்தில் நரேன் ஊட்டி விட்டாள் மட்டுமே அவள் உண்பாள்.

அவனுக்குமே நீருவுக்கு ஊட்டி விட்டால் தான் அன்றைய நாளே முழுமை அடைந்தது போல் உணர்வான்.

முதல் செமஸ்டர் நடைபெற , நரேன் அவளுக்கு முழு மூச்சாக கல்லூரியில் இருந்து சொல்லி கொடுத்தான்.

அவளும் அவனுக்காக கவனமாக படித்தாள் , முதல் பரிட்சை அதுவும் கல்லூரியில்.. சிறிது பயமாகவும் இருந்தது அவளுக்கு…

அவளின் பயத்தின் வெளிப்பாடாக கைகள் லேசாக நடுங்க செய்ய அதனை உணர்ந்த நரேன் அவளின் கைகளை இறுக்க பிடித்து , ” இப்போ எதுக்கு பயப்படுற நீரு மா .இது ஒரு சாதாரண எக்ஸாம் இதுக்கெல்லாம் பயந்தா எப்படி. இந்த நரேனோட நீருவா கெத்தா இருக்க வேண்டாமா என்ன இப்படி பயந்துட்டு இருக்க .இது மட்டும் அந்த சாதனாவுக்கு தெரிஞ்சது என்ன கலாய்ச்சு தள்ளிடுவா ” என்றான்.

உன் விரலழகை

இரசித்துக்கொண்டே

இருக்கத் தான்

உன் கைகோர்த்து

என்நாளும் நடக்க

ஆசைப்படுகிறேனே டா..!!!!

நரேனையே அவ்வளவு ஆசையாக பார்வையில் அத்தனை காதலை தேக்கி வைத்து பார்த்திருந்தாள்.

அதற்குள் ஆதி சாதனா வருகை தர , அத்தனை காதலையும் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு சாதாரண பார்வையை வீசினாள்.

பின்னர் , இருவரும் தேர்வு வகுப்பிற்கு சென்று நல்ல படியாக தேர்வு எழுதி முடித்தனர்.

மூன்று மணி நேரம் கழித்து வெளியே வந்த நீருவின் பார்வை தன்னவனையே தேடிட , பலச்சாற்றுடன் அவள் முன் தரிசனம் அளித்தான் அவளின் திரா.

அவனை கண்டதும் வேகமாக வந்தவள் , மூச்சிரைக்க ” திரா கொஞ்சம் குமியேன் ” என்று சொல்ல

அவளின் சொல்லுக்கு இணங்க குமிந்த நரேனின் நெற்றியில் முதல் இதழ் முத்தத்தை பதித்தாள்.

சத்தமொன்று மில்லாமல்

நித்தம் நின்றன் நாவிலே

நானெழுதும் கவிதை

முத்தம்.!!!!!

அவளின் செய்கையில் திகைத்து போய் நின்ற நரேனை நடப்பிற்கு கொண்டு வந்தாள் நீரு.

” இன்னைக்கு எக்ஸாம் சூப்பரா பண்ணேன் திரா. அதுக்கு காரணம் நீ தான் நீ மட்டும் தான் ” என்றாள் உணர்ச்சி கொள்ளாமல்…

” ஓகே ஓகே ரிலாக்ஸ் நீரு மா .இந்தா இந்த ஜூஸ குடி ” என்று அவளை குடிக்க வைத்து ஹாஸ்டலிற்கு அனுப்பி வைத்தான்.

இதேபோல் தான் அந்த ஒரு வார காலமும் சென்றது…

அதன் பின் அவனுக்கு தேர்வுகள் நடக்க , ஒன்றாக சேர்ந்து ஊருக்கு செல்லும் நாளுக்காக காத்திருக்க தொடங்கினாள்.

காத்திருப்பேன்னடா உனக்காக

இந்த ஜென்மம்மின்றி

இன்னும் ஏழேழு ஜென்மத்திற்கும்

உந்தன் அன்பு காதலை நாடி.!!!

இருவரும் சேர்ந்து ஊட்டி சென்று ஒரு மாத கால விடுமுறையை கழித்தனர்.

அதன் பின் மீண்டும் கல்லூரி வர இறுதியில் ஊட்டி ,தேர்வு என வருடங்கள் ஓடிவிட , நரேன் நீருக்காக அங்கேயே ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தான்.

நீரு அந்த நேரத்தில் அவனின் திராவை நினைத்து வருந்தினாள். அவனுடன் இருந்த நேரங்கள் யாவும் தனிமையில் கடத்த நாள்தோறும் பார்த்துக் கொண்டிருந்த அவனை எப்போ பார்ப்போம் என்று ஏங்கும் அளவிற்கு கொண்டு வந்து விட்டது அவளை..

அவளின் ஏக்கமும் காதலாக மாறி அவன் மேல் பைத்தியமாக மாற வைத்திருந்தது.

நீருவும் இறுதி ஆண்டில் இறுதி செமஸ்டரில் இருக்க , அவளின் காதலினால் நீரு இழைத்து போய் இருந்தாள். இதனை அனைத்தையும் கண்ட சாதனா அவளிடம் பேச முடிவெடுத்து தனியாக அழைத்துச் சென்றாள்.

இருவர் மட்டும் அல்லாமல் இன்னும் சில மாணவர்கள் அந்த பூங்காவில் அமர்ந்திருக்க ஒரு இருக்கையில் இருவரும் அமர்ந்திருந்தனர்.

இருவரிடமும் கனத்த மௌனம் நிலவிட அதை கலைக்கும் விதமாக சாதனாவே” நீர்த்து ” என்று அழைத்தாள்.

” சொல்லு சாது மா எதுக்கு இப்போ என்ன இங்க அழைச்சிட்டு வந்துருக்க ” என்று கேட்க

” நீ இப்படி இருக்கிறது நல்லது இல்ல நீர்த்து ” என்றாள்.

சட்டென நிமிர்ந்தவள் ” என்ன சொல்ற நீ நான் எப்போதும் போல தான் இருக்கேன் ” என்றாள்.

” எங்க இத நீ என்னோட கண்ண பார்த்து சொல்லு பாப்போம் ” என்று திடமாக கேட்க நீரு தான் சிறிது தடுமாறினாள்.

” உன்னால சொல்ல முடியலல அப்புறம் எதுக்கு டி இந்த காதல் கத்திரிக்காய்லாம் உனக்கு சொல்லு ” என்று துளிர் விட்ட கோபத்துடன் கேட்டாள் சாதனா.

விழி விரிய ஆச்சரியத்துடன் நோக்கினாள் நீர்த்திகா.

” என்ன எனக்கு எப்படி டா தெரிஞ்சதுன்னு பாக்குறீயா ..??” என்று கேள்வியாக புருவம் உயர்த்தி கேட்க, நீரு அனிச்சையாக ஆமாம் என்று மேலும் கீழுமாக மண்டையை ஆட்டினாள்.

” இது என்ன பெரிய விஷயமா கண்டு பிடிக்காம இருக்க .உன்னோட பார்வையே நீ நரேன் ப்ரோ மேல வச்சிருக்கிற காதல சொல்லுதே ” என்றாள்.

” அவ்ளோ வெளிப்படையாவா தெரியுது ” என்று பாவம் போல் முகத்தை வைத்து கேட்ட நீருவை கண்டு சிரிப்பு தான் வந்தது சாதனாவிற்கு.

அவள் தலையை தட்டியவள் ” ஆமா டி அமுல் பேபி ” என்றாள் புன்னகையாய்..

” இப்போ என்ன பண்றது சாது ” என்று கேள்வியாய் சாதனாவை நோக்கினாள் நீரு.

” அதான் வேலன்டைன்ஸ் டே வருது ல .அப்போ போய் உன்னோட காதல சொல்லு ” என்றாள் சாதனா.

அதனை கேட்டவள் ” அது எப்படி சொல்ல முடியும் சொல்லு ” என்றிட

” அடியேய் ஐ லவ் யூன்னு சொல்றதுல என்ன டி கஷ்டம் உனக்கு . நான் தான் முதல என்னோட காதல ஆதிக்கிட்ட சொன்ன. அவனும் உடனே எனக்கு சரின்னு சொல்லிட்டான். கொஞ்ச நாள் பார்த்து பழகின என்னையே ஆதி ஓகே சொல்லும் போது நீங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே ஒன்னா இருக்கீங்க அப்போ கண்டிப்பா உன்னோட காதலுக்கு ப்ரோ ஓகே சொல்லிடுவாறு டி. இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு அதுக்குள்ள ப்ரிப்பெர் ஆகிக்கோ டி உன்னோட காதல சொல்ல ” என்று மெல்லிய குரலில் அவளுக்கு புரியும் படி சொன்னாள் சாதனா.நீருவும் தலையை தலையை ஆட்டி வைத்தாள். 

அதன் பின் இருவரும் ஹாஸ்டலுக்கு சென்று அவர் அவர்கள் வேலையில் மூழ்கினர்.

இங்கோ நீரு அவளுக்குள் இருக்கும் காதலில் மூழ்கி போய் இருக்க , அவளின் காதலுக்குரியவனே மொபைலில் அழைத்திருந்தான்.

” ஹலோ நீரு ” என்க

“…”

” ஹலோ நீரு மா ” என்றிட

” ஹ..ஹலோ ” என்றாள் சிறிது தடுமாற்றத்துடன்…

” என்ன ஆச்சி எனி ப்ராப்ளம்..?பசங்க எதாவது பிரச்சினை பண்றாங்களா இல்லை எதாவது மந்த்லி  ப்ராப்ளமா” என்று அக்கறையுடன் கேட்டிட நீரு அதில் கரைந்து தான் போனாள்…

நீருவிடம் பெருத்த அமைதி நிலவியது…

” நீரு ” என்று அழைத்திட ,

” சொல்லு திரா “

” என்ன பிரச்சினை ” என்றான் .

” காதல பத்தி என்ன நினைக்கிற திரா ” என்றாள் சடாரென்று…

” இது என்ன கேள்வி..??இப்போ எதுக்கு கேக்குற “

” பச்..!! சொல்லு திரா ” என்றாள் அடம்பிடிக்கும் குரலில்..

” நான் காதல பத்தி இப்ப எதுவும் நினைக்கல நீரு . இப்போதைக்கு உன்னோட சேஃப்டிய பத்தி தான் நினைச்சிட்டு இருக்கேன் ” என்றான்.

அவனின் குரலில் கோபம் தெரிந்தது. நீருவிற்கு அவனின் கோபத்தை கண்டு புன்னகை மெலிதாய் அரும்பியது..

” சரி இப்ப சொல்லு எதாவது பசங்க வந்து பிரச்சினை பண்றாங்களா ” என்று தனக்கு வேண்டிய பதிலிற்க்கான கேள்வியிலே மீண்டும் வந்து நின்றான்.

” அப்படி லாம் ஒன்னும் இல்ல திரா .சரி நான் நாளைக்கு பேசுறேன் ப்ராஜெக்ட் ஒர்க் கொஞ்சம் இருக்கு பாய் ” என்று கட் செய்து விட்டாள்.

தான் காதலை சொல்ல போகும் நாளுக்காக காத்திருக்க தொடங்க , நரேனே நீருவிற்கு அழைத்து ஒரு பூங்காவின் பெயரை சொல்லி அங்கே வர சொல்லி இருந்தான்.

அந்த நாளும் அழகாய் பிறந்திட நீரு சந்தோஷத்துடன் அந்த நேரத்தை இரசிக்க தொடங்கினாள்.

அவனுக்காக பிடித்த உடையை தேர்ந்தெடுத்து அணிந்தாள். அவனுக்கு பிடித்த மஞ்சள் மற்றும் ஊதா நிறத்தில் வேலைப்பாடுகள் நிறைந்த புடவையை அணிந்து கொண்டாள். அதற்கு ஏற்றார் போல் காதனியையும் அணிந்தவள், அந்த புடவையில் தேவதை போல் ஜொலித்திருந்தாள்.

நரேன் சொன்ன இடத்திற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பே வந்தவள் , அவனுக்காக காத்திருக்க தொடங்கினாள். ஒவ்வொரு நிமிடங்களும் அவளுக்கு யுகங்களாக செல்ல எதிர்ப்பார்ப்பை தாண்டிய பயம் ஏதோ அவளுக்குள் சூழ்ந்தது.

காத்திருப்பின் பரிசாக நரேன் ஃபார்மல்ஸ் ஆடையில் அதுவும் அவளுக்கு பிடித்த லைட் ப்ளு கலரில் சட்டை அணிந்து ப்லக் பேண்ட் அணிந்திருந்தான். அவனையே இமைக்க மறந்து பார்வையால் அவனை பருகி கொண்டு இருக்க அதை கலைக்கும் விதமாக அவன் கைக்குள் இன்னொரு பெண்ணின் கை ஒன்றோடு ஒன்று இணைந்திருந்து இருவரும் ஜோடியாக வருகை தந்தனர்..

” ஹே நீரு ” என்று கை அசைத்த படியே அந்த பெண்ணுடன் பேசிய படி வந்தான்.

ஆயிரம் ஆசைகளுடன் வருகை தந்தவளின் மனதை ஒரு நொடியில் சிதைத்தெறிந்தான் அவன்.

புன்னகைக்க முடியாமல் புன்னகைத்தவள் ” ஹாய் திரா ” என்றாள்.

” ஹே என்ன புதுசா சேரிலாம் வியர் பண்ணி இருக்க ” என்று கேள்வியாய் நோக்க

” சும்மா தான் ” என்றாள் கடினப் பட்டு..

” ம்ம் நல்லா இருக்கு ” என்றவன் கூட நின்றிருந்த பெண்ணின்  தோளில் மீது கைப் போட்டு ” மீட் மிஸ் சந்தியா கூடிய சீக்கிரத்தில மிஸஸ் நரேந்திரன் ஆக போறவ ” என்றான்.

அந்த ஒற்றை வாக்கியத்தில் அவளின் மொத்த உயிரும் பறிபோனது…

Advertisement