எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 9
அன்று எல்லோருமே மிகவும் களைத்துப் போனதால்… இரவு உணவு உண்டதுமே, “எல்லாம் போய்ப் படுங்க. காலையில பேசலாம்.” என்றார் அமுதா.
அகல்யாவும் ராதிகாவும் கீழே இருக்கும் இரண்டு படுக்கை அறைகளில் ஒன்றில் தான் உறங்குவார்கள். அவர்கள் இருவரும் அறைக்குள் சென்றதும், வெண்ணிலாவிடம் பால் எடுத்துக் கொண்டு அறைக்குச் செல்லும்படி அமுதா சொல்ல, அவளும் பாலை எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்றாள்.
அவள் அறைக்குச் சென்றபோது, ஜெய் உடைமாற்றிப் படுக்கத் தயாரானவன், “எனக்குக் கீழே படுத்தா தான் தூக்கம் வரும். நீ மேல படுத்துக்கோ.” என்றவன், அவனது படுக்கையை விரித்துப் படுத்தும் கொண்டான்.
வெண்ணிலா இன்னும் பட்டுப் புடவையில் தான் இருந்தாள். அவளின் சாமான்கள் அறையின் ஓரத்தில் இருக்க, அதில் நைட்டி இருந்த பையைத் தேடி எடுத்து, குளியல் அறைக்குள் சென்று உடைமாற்றி வந்தவள், அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழட்டி அங்கிருந்த அலமாரியில் பத்திரபடுத்தினாள்.
அறையில் விளக்கு எரிந்ததால் ஜெய் தன் கைக் கொண்டு கண்ணை மறைத்தபடி படுத்திருந்தான். அதைப் பார்த்ததும் விளக்கணைக்கச் சென்றவள், பிறகே எடுத்து வந்த பாலைக் கவனித்தாள்.
“அத்தான், அத்தை பால் கொடுத்து விட்டாங்க. சொல்ல மறந்திட்டேன்.” என்றாள்.
“நீயே குடி.” என்றான்.
“உங்களுக்குப் பால் பிடிக்காதா.. நேத்தும் நான்தான் குடிச்சேன். நாளைக்கு அத்தைகிட்ட எனக்கு மட்டும் கொடுக்கச் சொல்றேன்.” என்றதும், பட்டென்று எழுந்து அமர்ந்தவன், “அம்மா தாயே, அப்படி எதாவது உளறி வைக்காத. கொடு அந்தப் பாலை.” என்றான்.
வெண்ணிலா எடுத்து வந்து கொடுத்துவிட்டு கீழே அமர்ந்து கொண்டாள். அவன் அண்ணாந்து மடமடவெனக் குடிக்க… வெண்ணிலா அவனையே பார்த்துக் கொண்டிருக்க…
“இந்தா உன்னோட பங்கு.” என மீதி இருந்த பாலைக் அவளிடம் கொடுக்க… வாங்கிக் கொண்டவள், நிதானமாக அருந்த ஆரம்பித்தாள்.
ஜெய் சென்று வாய் கொப்பளித்து மண்பானையில் இருந்த தண்ணீரை எடுத்து அருந்தியவன், மீண்டும் படுக்கச் செல்ல…
“அத்தான், இந்த நெக்லஸ் கொஞ்சம் கழட்டி விடுங்களேன். கழட்ட வரலை… போட்டுட்டு தூங்க முடியாது கழுத்தை அழுத்தும்.” என்றவள், திரும்பி உட்கார்ந்து கொண்டு, கூந்தலை எடுத்து முன்புறம் போட்டுக் கொண்டாள்.
நெக்லஸில் அவளது தலை முடி சுற்றியிருந்தது. அதனால் தான் அவளுக்குக் கழட்ட வரவில்லை.
ஜெய் சிக்கியிருந்த கூந்தலை மெதுவாக எடுத்தான். மனைவியின் அருகாமையும், அவள் கூந்தலில் இருந்த மல்லிகையின் மனமும் அவனைக் கிறங்க செய்யப் போதுமானதாக இருக்க… மனதை அடக்குவது மிகவும் சிரமமாக இருந்தது.
என்ன டா இது சோதனை. நாமே அடங்கி இருந்தாலும் இவ இருக்க விட மாட்டா போலவே என நினைத்தாலும், இந்த நேரத்தில் தன்னை விட்டால், அவள் வேறு யாரிடம் கேட்க முடியும் என நினைத்தவன், முதலில் நெக்லசில் இருந்து அவளது கூந்தலை பிரித்து எடுத்தான்.
பிறகு அவளது கழுத்தணியைக் கழட்ட… வெண்ணிலாவுக்கு எதிலிருந்தோ விடு பட்ட உணர்வு. கழுத்தை தேய்த்து விட்டவள், கனமான தாலி சங்கிலியை தூக்கி நெற்றியில் வைத்துக் கொண்டாள்.
பார்த்த ஜெய்க்கு அவளது கஷ்டம் புரிந்தது. நகை என்பது பெண்களுக்கு அழகு தான். ஆனால் அதுவும் சில நேரம் தொல்லைதான்.
நகையை அலமாரியில் சென்று வைத்தவன், வெண்ணிலா மிகவும் களைத்திருப்பதைப் பார்த்து, ஒரு துண்டை நனைத்து வந்து அவளின் பின்னங் கழுத்தில் வைத்து அழுத்தி விட… அவளுக்கு இதமாக இருக்க, அவன் கையில் இருந்து வாங்கி அவளே கழுத்தை துடைத்துக் கொண்டாள்.
இதற்கு மேலும் இங்கிருந்தால்… வேறு எதாவது செய்து விடுவோமோ என்ற அச்சத்தில் எழுந்த ஜெய், “நீ படு. நான் கொஞ்ச நேரத்தில் வரேன்.” என்றவன், அறையின் இன்னொரு கதவை திறந்து மாடியில் சென்று நின்று கொண்டான்.
இப்போது தான் வளர்பிறையின் ஆரம்பம் என்பதால்… வானில் நிலவு இன்னும் முழுதாக வரைந்து முடிக்காமல் இருக்க… காற்று வேறு சிலுசிலுவென அடிக்க… வீட்டிற்குள் இருந்த வெண்ணிலவோ, வீசிய காற்றில் சுகமாகத் தரையில் படுத்தே உறங்கி இருந்தாள்.
சிறிது நேரம் சென்று அறைக்கு வந்த ஜெய்க்கு, இப்போது தான் எங்கே படுப்பது எனக் குழப்பம். இவ மனசில என்ன இருக்குன்னே தெரியலையே… என நொந்து கொண்டவன், அவளைத் தட்டி எழுப்பினான்.
யாரோ எழுப்புவது போல இருந்தாலும், வெண்ணிலாவுக்கு எழும்பவே முடியவில்லை.
“வெண்ணிலா…” என ஜெய்யின் குரல் கேட்டதும், மெல்ல விழித்துப் பார்த்தாள்.
“வெறும் தரையில படுத்திருக்க… நைட் ரொம்பக் குளிரும். எழுந்து கட்டில்ல படு.” என்றதும், இதற்குத்தானா? என்பது போலப் பார்த்தவள், மீண்டும் உறக்கத்தைத் தொடர..
“சரி நான் உன்னைத் தூக்கி தான் கட்டில்ல படுக்க வைக்கணும்.” என்றதும், பட்டென்று எழுந்து கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள்.
“அந்தப் பயம் இருக்கட்டும்.” என்ற ஜெய்க்குச் சிரிப்பு வர… அவன் கீழே படுக்கத் தயாராக…அதைப் பார்த்தவள்,
“நேத்தெல்லாம் எங்க வீட்ல கட்டில்ல படுத்து நல்லாத்தான் தூங்கினீங்க.” என்றவள், உடனே உறங்கியும் போனாள்.
அவன் படுக்க இடம் விட்டுத் தள்ளித்தான் படுத்திருந்தாள். ஒரு நொடி யோசித்தவன், அவளே தானே சொல்கிறாள் எனக் கட்டிலில் அவள் அருகிலேயே படுத்துக் கொண்டான்.
அருகில் புத்தும் புது மனைவியை வைத்துக் கொண்டு, ஒன்றும் செய்யாமல் இருப்பது, எவ்வளவு கஷ்டம் என மனதிற்குள் புலம்பியவன், வெகு நேரம் சென்றே உறங்கினான்.
காலை பறவைகளின் கீச் கீச் சத்தத்தில் வெண்ணிலாவுக்கு விழுப்பு வந்துவிட்டது. இரவு நன்றாக உறங்கி இருந்ததால்… விடியல் புத்துணர்ச்சியைக் கொடுக்க… ஜெய்யின் உறக்கம் கலையாமல் மெதுவாகக் கட்டிலில் இருந்து இறங்கியவள், வெளி மாடியின் கதவைத் திறந்து சென்று விடியலை ரசித்தாள்.
அவர்கள் தெருவில் வீடுகள் தள்ளித் தான் இருக்கும். அதுவும் எல்லா வீடுகளிலும் சுற்றிலும் மரங்கள் வைத்து அந்தப் பகுதியே பசுமையாகத்தான் இருக்கும். அதனால் நிறையப் பறவைகளும் இருக்கும்.
பணியில் நனைந்த பூக்கள், செடி கொடிகள், பறவைகள் எனப் பார்த்து ரசித்தவள், மாடியில் இருந்து பக்கவாட்டு வழியாகக் கீழே பார்க்க… அங்கே முற்றத்தில் அகல்யாவும் ராதிகாவும் இருந்தனர்.
வெண்ணிலா அவர்களை இங்கிருந்தே அழைக்க… “ஹாய் எழுந்துட்டியா..இரு வரோம்.” என்றவர்கள். முதல் மாடியின் பால்கனியில் இருந்த இரும்பு ஏணி வழியாக மேலே வந்தனர். மூவரும் சேர்ந்ததும் ஒரே அரட்டை தான்.
வெண்ணிலா அறையின் கதவை மூடி தான் வைத்திருந்தாள். ஆனால் ஜெய்க்கு அவர்களின் பேச்சுச் சத்தம் கேட்க, உறக்கம் களைந்து எழுந்தவன், ஓய்வு அறைக்குச் சென்று பல் துலக்கி முகம் கழுவி கொண்டு வெளியே வந்தான்.
“காலையிலே ஆரம்பிச்சுடீங்களா… மூன்னு பேரும் இங்க நின்னு அரட்டை அடிக்கிறதுக்கு. கீழே போய் எதாவது வேலைப் பார்க்கலாம். அம்மாவும் சித்தியும் தனியா பண்ணிட்டு இருப்பாங்க.” என்றதும்,
தங்கைகள் இருவரும் வந்த வழியே திரும்பி செல்ல… வெண்ணிலாவும் ஜெய்யை முறைத்தபடி குளிக்கச் சென்றாள்.Advertisements
அவள் வந்ததும், ஜெய்யும் குளித்து விட்டு வந்தான். வெண்ணிலா ஒரு பெட்டியை பிரித்து அதில் இருந்த அவளது நகைகளை எடுத்துக் கட்டிலில் பரப்பி வைத்திருக்க…
Advertisements