Advertisement

எந்தன் காதல் நீதானே

அத்தியாயம் 8 

காலை உணவு முடித்து, ஜெய் ஹாலில் உட்கார்ந்து டிவி பார்க்க, கற்பகத்தின் இரண்டு மகள்களும் இன்னும் அருகில் இருந்த சில உறவினர்களும் காலை உணவுக்கு வந்துவிட… அவர்கள் உண்ணட்டும் என ஜெய் எழுந்து அறைக்குள் சென்று விட்டான். 


காலை உணவை மகேஸ்வரியும் விமலாவுமே சமைத்திருந்தனர். பூரி வடையோடு கொஞ்சம் இட்லியும் செய்து காலை உணவை முடித்து விட்டனர். வெண்ணிலா சிறிது நேரம் நின்று பரிமாறினாள். 

“ஜெய் தனியாக இருக்கிறான் போ…” என மகேஸ்வரி அவளை அனுப்பி விட… அவள் அறைக்குச் சென்றபோது, ஜெய் கட்டிலில் படுத்து செல்லைப் பார்த்துக் கொண்டிருந்தான். 

வெண்ணிலாவை பார்த்ததும் புன்னகையுடன் எழுந்து உட்கார்ந்தவன், “முதல்ல ஒரு வண்டியில வீட்டு ஆட்கள் வர்றாங்களாம்.” 

“மத்தவங்களைக் கூடிட்டு சித்தப்பாவும் சித்தியும் பின்னாடி வேன்ல வருவாங்களாம். இப்பத்தான் யஸ்வந்த் போன் பண்ணான்.” என்றான். 

“ஓ… நான் அப்ப அவங்க வர்றதுக்குள்ள ரெடி ஆகிடுறேன்.” என்றவள், முகம் கழுவிவிட்டு வந்து, குளித்து வெறுமனே முடிந்து வைத்திருந்த கூந்தலை, ட்ரையர் போட்டு காய வைத்தவள், சிக்கெடுத்து கூந்தலை தூக்கி ரப்பர் பேன்ட் போட்டு விட்டு விட… 

“தலைப் பின்னலை..” ஜெய் கேட்க, 

“அம்மா வந்து வாரி விடுவாங்க.” என்றதும், ஜெய் பயந்து விட்டான். 

“தலை கூட வார தெரியாதா… நம்ம வீட்டுக்கு வந்ததும், எப்படி? நான் உனக்குத் தலை வாரி விடணுமா?” என அவன் சீரியசாகக் கேட்க?, 

“ஐயோ அத்தான். இன்னைக்குக் கொஞ்சம் வித்தியாசமா வாரணும் அதுதான் அம்மா வர்றேன்னு சொன்னாங்க. தலை கூட வார தெரியாம இருப்பாங்களா?” என வெண்ணிலா சிணுங்க… 

“இல்லை இப்போ எதோ டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ் சொல்றாங்களே.. அப்படியின்னு நினைச்சு பயந்திட்டேன்.” ஜெய் சிரித்துக் கொண்டு சொல்ல, வெண்ணிலா முறைத்தாள். 

இப்படியே முறைச்சு முறைச்சு அந்த முட்டக் கண்ணு இன்னும் பெரிசாகப் போகுது பாரு… அப்புறம் பார்க்க காளி போல இருப்ப… 

என்னவோ சொல்லிக்கொள் என்பது போலப் பார்த்தவள், பெட்டியை எடுத்து வைத்து அதில் அலமாரியில் இருந்த உடைகளை எடுத்து அடுக்க ஆரம்பித்தாள். 

ஏற்கனவே திருமணம் முடித்துச் சென்றபோது புகுந்த வீட்டில் இரண்டு பெட்டிகளை வைத்து விட்டு வந்திருந்தாள். இப்போது இன்னும் இரண்டு பெட்டிகளில் அவள் அடுக்க… 

“எதுக்கு டி இவ்வளவு. வீட்டையே காலி பண்ணிட்டு தான் வருவியா?” ஜெய் கேட்க, 

“அம்மா தான் எடுத்து வைக்கச் சொன்னாங்க.” என்றாள். 

ஒரு பெட்டியில் வெறும் பட்டுப் புடவைகளாக அடுக்கியவள், இன்னொன்றில் டிஸைனர் புடவைகளை அடுக்கினாள். அவளுக்குச் சரியாக அடுக்கத் தெரியவில்லை… அதைக் கவனித்த ஜெய், “தள்ளு நான் அடுக்கிறேன்.” என்றவன், புடவைகளை இடம் பார்த்து அடுக்கி பெட்டியை மூட… வெண்ணிலா இன்னும் இரண்டு பைகளில் சுடிதார்களை அடுக்கினாள். 

இன்னும் முடியலையா என்பது போல ஜெய் பார்க்க, வெண்ணிலா அதைக் கவனிக்கும் நிலையில் இல்லை. இன்னும் வேறு என்னென்ன எடுத்து வைக்க வேண்டுமோ, அதெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். 

எல்லாம் எடுத்து வைத்து முடித்தவள், மிதமான ஒப்பனை செய்து, விருந்துக்கு அணிய வேண்டிய புடவையைக் கையில் எடுத்தவள், “அத்தான்…” என ஜெய்யை பார்க்க… புரிந்து கொண்டு ஜெய் வெளியே சென்றான். 

ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த கற்பகம், அவனைப் பார்க்காதது போல மேடை ரகியம் பேசினார். “என்னவோ கல்யாணம் நின்னதும் சாகப் போனா… இப்ப பகல்ன்னு கூடப் பார்க்காம கதவை அடைச்சிட்டு இருக்கா…” எனச் சொல்ல… அவரின் இளைய மகளோ… “ஆமாம் கல்யாணம் நின்ன வருத்தம் கொஞ்சமாவது இருக்கா பாரேன். அக்கா, நல்லவேளை இவ உனக்கு மருமகளா வரலை.” என அன்பரசியிடம் சொல்ல… அவரும் அதை ஆமோதித்தார். 

அவர்கள் பேசியதை ஜெய் மட்டும் அல்ல… கணவன் வெளியே சென்றதும், கதவை தாழ் போட வந்த வெண்ணிலாவும் கேட்டு இருந்தாள். அவளுக்கு மிகவும் அவமானமாக இருந்தது. முகம் சிவந்து கண்கள் கலங்கி விட… புடவை மாற்றாமலே கட்டிலில் சென்று படுத்து விட்டாள். 

ஜெய் அவர்கள் பேசியது கேட்காதது போல வெளியே சென்று விட… வெளியில் இருந்து வந்த மகேஸ்வரி, கையில் வைத்திருந்த இளநீரை அவனிடம் கொடுத்தார். 

எதையும் காட்டிக்கொள்ளாமல் ஜெய் அதை வாங்கிக் கொண்டு, வெளியே தோட்டத்தில் சென்று நின்று கொண்டான். வெண்ணிலா தற்கொலைக்கு முயன்றாள் என்பது அவனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. அவனுக்கு இந்த விஷயம் தெரியாது. ஆனால் ஒன்றும் இல்லாததைக் கற்பகம் பெரிது படுத்தினார் என்பதை அவன் வீட்டினர் அறிவார்கள். 

திருமணம் நடந்த மகிழ்ச்சி எல்லாம் அவனுக்கு முற்றிலும் வடிந்து விட்டது. வெண்ணிலாவுக்குக் கரணை அவ்வளவு பிடிக்குமா என்ன? அவனுக்காகச் சாகத் துணிந்தாளா? அப்படியென்றால் அவனை விரும்பினாளா… தான் எதோ அவசரப்பட்டு அவளுக்கு அநியாயம் செய்தது போல அவனுக்குத் தோன்றிவிட்டது. அவளிடம் பேசி இருக்க வேண்டும் என இப்போது நினைத்தான். 

திருமணமே முடிந்து விட்டது. இனி என்ன கேட்பது? நீ கரணை விரும்பினாயா என அவளைக் கேட்க முடியுமா என்ன? 

மருமகன் வெளியே இருந்ததால், மகேஸ்வரி மகளைக் கவனிக்கச் சென்றார். அவள் அம்மாவின் குரல் கேட்டு வெண்ணிலா குளியல் அறைக்குச் சென்று முகம் கழுவி விட்டு வந்து கதவைத் திறந்தாள். 

மகேஸ்வரி மகளுக்குத் தலை வாரி, அவள் புடவை மாற்றும் வரை உடன் இருந்தவர், அவள் அணிந்துகொள்ள வேண்டிய நகைகளையும், கொடுத்து அணிந்து கொள்ள வைத்தவர், மீதி இருந்த நகைகளை அவள் பெட்டியிலும் அடுக்கி பத்திரப் படுத்தினார். பிறகே அறையில் இருந்து வெளியே வந்தார். 

அவர் அறையில் இருக்கும் போதே முதல் வண்டியில் ஜெயின் வீட்டினர் வந்து விட்டிருந்தனர். வெண்ணிலா தயராகிக் கொண்டிருக்கிறாள் என்றதும், பயணத்தில் கசங்கி விடும் என விருந்துக்கு அணிய கொண்டு வந்திருந்த உடையை, நாமும் மாற்றி விடுவோம் என்றாள் அகல்யா ராதிகாவிடம். 

விருந்து நேரத்திற்கு மாற்றிக்கொள்ளப் பட்டுப் புடவையை அகல்யா கொண்டு வந்திருக்க, ராதிகாவும் வேறு உடை கொண்டு வந்திருந்தாள். இருவரும் எங்குச் சென்று மாற்றுவது எனப் பார்த்தவர்கள், திறந்திருந்த இன்னொரு அறையின் பக்கம் செல்ல, 

“ஏய் பொண்ணுகளா எங்கப் போறீங்க? அது என் பேரனோடு ரூம்… உங்க அண்ணிக்காரி ரூமுக்கு போங்க..” எனக் கற்பகம் அவர்களை விரட்ட, அவர்கள் இருவரின் முகமும் வாட திரும்பி செல்லுவதைப், அப்போது வீட்டிற்கு வந்திருந்த யுவராஜ்ம் பார்த்தான். 

“அண்ணன் தங்கை எல்லாம் நல்லா விவரம்.” எனக் கற்பகம் தனது மகள்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தார். 

“ஆமாம் இந்த அம்மா பேரனை நாங்க அப்படியே தூக்கிட்டு போயிட போறோம்.” என நொந்து கொண்டே அகல்யா செல்ல, 

“என்ன அகல்யா எப்ப வந்தீங்க?” என யுவராஜ் கேட்க, 

“அப்பவே வந்திட்டோம் அத்தான்.” எனச் சொல்லிவிட்டு அகல்யா அங்கிருந்து செல்லவே பார்க்க… ஆனால் யுவராஜ் வேண்டுமென்றே அவர்களை நிற்க வைத்துப் பேசினான். 

அவனுக்குக் கற்பகம் செய்வது பிடிக்கவில்லை. இவர் என்ன அவர்களை அதட்டுவது என நினைத்தவன், வேண்டுமென்றே அவர்களிடம் பேச… அந்த நேரம் ஜெய் வெளியே இருந்து உள்ளே வந்தவன், அவர்கள் இருவரையும் கவனித்து அங்கே வந்தான். 

அவன் அகல்யாவைப் பார்த்து போ… என்றவன், யுவராஜிடம் “மண்டபத்தில வேலை எல்லாம் முடிஞ்சிடுச்சா?” எனக் கேட்க, 

“முடிஞ்சது அத்தான். டிரஸ் மாத்திட்டு போகலாம்னு வந்தேன்.” என்ற ராஜ், அறைக்குச் சென்று விட, ஜெய் தங்கைகளைத் தேடி சென்றான். அவர்களிடம் சென்று என்ன நடந்தது எனக் கேட்க, அகல்யா கற்பகம் பேசியதில் இருந்து எல்லாம் சொன்னாள். 

“இவங்க கால்லயே விழுந்து கேட்டாலும், இவங்க வீட்டுக்கு என் தங்கைகளை நான் அனுப்புவேனா… பணம் இருந்தா போதுமா, வாழ வர பெண்ணுக்கு நிம்மதி வேண்டாமா?” 

“நீ எதுவும் மனசுல நினைக்காத அகல்யா?” என ஜெய் சொல்ல… 

“அப்படியெல்லாம் விடக் கூடாது அண்ணா. இந்த வீட்டுக்கே அகல்யா அக்கா மருமகளா வந்து, இந்தப் பாட்டியை உண்டு இல்லைன்னு பண்ணனும்.” என ராதிகா சொல்ல… 

“நீ வாயை மூடு. தினமும் இந்த அம்மா தேளு மாதிரி கொட்டிட்டு இருக்கும். அதைக் கேட்டுட்டு இருக்கணும்னு இங்க யாருக்கும் தழையேளுத்து இல்லை புரியுதா… அகல்யா, நீ இவ சொல்றான்னு மனசுல எதுவும் நினைக்காத.” என்றன் ஜெய். 
அவனுக்கு ஒரே பயம் தங்கை எதுவும் யுவராஜை நினைத்து மனதில் ஆசையை வளர்த்துக் கொள்வாளோ என்று… 

“நான் ஒன்னும் நினைக்கலைணா…” அகல்யா சொல்ல…. 

“நீ நினைக்கலைனா போ… நான் வேணா வந்துக்கிறேன்.” என ராதிகா துடுக்காகச் சொல்ல… 

“என்ன வந்துப்ப?” அடிச்சேனா பல்லு பேந்துடும். அப்படியெல்லாம் ஆசை இருந்தா, அதை இன்னையோட அழிச்சிடு. போற இடத்தில பணம் இருக்கோ இல்லையோ நிம்மதி இருக்கணும். இன்னொரு தடவை நீ இப்படிப் பேசின.. அவ்வளவு தான்.” என ஜெய் கோபப்பட… ராதிகா சிரிக்க… 

“அண்ணா அவ வேணுமுன்னே பண்றா உனக்குப் புரியலையா?” என அகல்யா சொல்ல… 

“போய் உங்க அண்ணி இருக்கிற ரூம்ல டிரஸ் மாத்துங்க.” என இருவரையும் ஜெய் அனுப்பி வைத்தான். அதன் பிறகு தங்கைகள் இருவரையும் ராஜ் இருக்கும் பக்கம் கூட அவன் பார்க்க விடவில்லை. 

வெண்ணிலா தங்க நிலவாக வெளியில் வர… ஜெய்யும் வேறு ஆடை உடுத்தி வந்ததும், எல்லோரும் மண்டபத்திற்குச் செல்ல.. அங்கே உறவினர்கள் வருகை… பிறகு விருந்து என நேரம் பறந்தது. 

வேண்டுமென்றே ஜெய்யை வம்பிழுக்க… ராதிகா எதாவது செய்வதும், ஜெய் அவளை முறைப்பதுமாக இருக்க… எதற்கோ யுவராஜ் இருக்கும் பக்கம் வந்த அகல்யா… அங்கே அவன் நிற்பதை பார்த்தும் திரும்பி விட… தன்னைப் பார்த்து தான் அவள் திரும்பி செல்கிறாள் என அவனுக்குப் புரிந்தது. 

மாலையில் ஐந்தரை வரையே நல்ல நேரம் இருக்க… அதற்குள் மணமக்களை அழைத்துக் கொண்டு கிளம்பி விடலாம் என்றார் ஜெயராமன். 

மணமக்கள் பெரியவர்களின் காலில் விழுந்து வணங்க… எல்லோரும் விபூதி வைத்து, தம்பதிகளுக்குப் பணம் கொடுத்தனர். ஜெய் தனக்குக் கொடுத்ததையும் வெண்ணிலாவிடமே கொடுத்து விட்டான். 

கிளம்பும் சமயம் கற்பகம் வேண்டுமென்றே, “அவ இங்க ரொம்ப வேலை எல்லாம் பார்த்தது இல்லை. உங்க குடும்பம் ரொம்பப் பெரிசு… அவளைப் போட்டு ரொம்ப வேலை எல்லாம் வாங்காதீங்க.” என்றதும், எல்லோருக்கும் முகம் மாறி விட… 

“அதெல்லாம் வெண்ணிலா எங்க இருந்தாலும் சமாளிப்பா… என்ன கொஞ்சம் மெதுவா செய்வா.” என்றார் மகேஸ்வரி. 

“இப்பத்தான் கல்யாணம் ஆகி இருக்கு. கொஞ்ச நாள் ப்ரீயா இருக்கட்டும். அதோட நாங்க அவ்வளவு பேர் இருக்கோம், சேர்ந்து தான் செய்வோம்.” என்றார் அமுதா. 

“சரி கிளம்பலாம்.” என ஜெயராமன் சொல்ல.. எல்லோரும் விடைபெற்று வாகனத்தில் சென்று ஏற… வெண்ணிலாவும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு செல்ல… அதுவரை யுவராஜிற்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் கடைசி நொடியில் தங்கையின் பிரிவு அவனைத் தாக்கியது. 

கண்கள் கலங்கி விட… தன்னைக் கட்டுப்படுத்தியவன், காரின் அருகே வந்ததும், தான் வைத்திருந்த பரிசை அவளிடம் கொடுத்தான். 

“என்னது?” என வெண்ணிலா வியக்க… 

“அப்புறம் பிரிச்சு பாரு.” என்றவன், தனது பர்சில் இருந்து பணத்தை எடுத்து, மொத்தமாக அவள் கையில் திணித்தான். 

“வேண்டாம்…” என வெண்ணிலா மறுக்க… 

“இல்லை வச்சுக்கோ…” என அவள் கையை அழுத்தியவன், “போயிட்டு வா…” என, அண்ணனைப் பார்த்து வெண்ணிலாவுக்கும் அழுகை முட்டிக் கொண்டு வர.. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு காரில் ஏறினாள். 

ஜெய் எல்லாம் அமைதியாகப் பார்த்து இருந்தான். அவனுக்கும் தங்கை இருக்கிறாள். அவனால் அவர்களின் வலியை புரிந்து கொள்ள முடியும். 

பெரியவர்களை எல்லாம் வேன்னில் ஏற்றிவிட்டு இளையவர்கள் மட்டும் சுமோவில் சென்றனர்.
கற்பகத்தைக் கடுப்பேற்ற வேண்டுமென்றே ராதிகா, “அத்தான் போயிட்டு வரோம். நீங்க உங்க தங்கச்சியைப் பார்க்க அடிக்கடி நம்ம வீட்டுக்கு வரணும்.” எனக் காருக்குள் இருந்தபடி எட்டிப் பார்த்து சொல்ல… கற்பகம் முகம் கடுத்தார். 

அவள் வேண்டுமென்றே தன்னை வம்பிளுக்கிறாள் என யுவராஜிற்குப் புரிந்தது. அவன் ராதிகாவின் அருகில் இருந்த அகல்யாவைப் பார்க்க.. அவள் அவனைப் பார்க்கவே இல்லை. 

“என்ன என்னை வச்சு எதுவும் காமெடி பண்ணிட்டு இருக்கியா?” என அவன் ராதிகாவிடம் கேட்க, ஜெய் தங்கையை முறைத்தவன், “வரோம் மாப்பிள்ளை.” என, வெண்ணிலா தமையனைப் பார்த்து கையசைக்க… பதிலுக்கு இவனும் கையசைக்க… கார் கிளம்பி விட்டது. 

ராதிகா மட்டும் எட்டி பார்த்து, “பாய் அத்தான். பாய் பாட்டி.” எனக் கையசைக்க.. ஓ பாட்டி பேசியதற்கு வெறுப்பேற்ற செய்கிறாள் என யுவராஜிற்குப் புரிய.. சிரிப்பை அடக்கியபடி உள்ளே சென்றான். 

“எவ்வளவு கொழுப்பு. ஒரு மட்டு மரியாதை தெரியாத குடும்பம்.” எனக் கற்பகம் வசைபாடியபடி உள்ளே சென்றார். 

மகளின் பிரிவு தாங்காமல் மகேஸ்வரிதான் உடைந்து போனார். 

“நீங்க போய் ரெஸ்ட் எடுங்க மா… நைட்டுக்கு வெளியே வாங்கிப்போம்.” என ராஜ் அவரை அறைக்கு அனுப்ப… உடன் விமலாவும் சென்றார். அக்காவிற்கு ஒத்தாசைக்கு என அவர் மட்டும் தங்கி விட்டார். 

வெண்ணிலா சிறிது நேரம் சோர்வாக இருந்தாள். பிறகு அவள் அண்ணன் கொடுத்த பணத்தை எங்கே வைப்பது என்பது போலப் பார்த்தவள், ஜெய்யிடம் கொடுக்க, 
“வீட்டுக்கு வந்து வாங்கிக்க…” என்றபடி பணத்தை வாங்கி வைத்துக் கொண்டான். எல்லாம் இரண்டாயிரம் நோட்டு. எப்படியும் இருபதாயிரம் இருக்கும்.
வெண்ணிலா அண்ணன் கொடுத்த பரிசை பிரிக்க… அதில் அவள் வெகு நாட்களாக கேட்டுக் கொண்டிருந்த கைப்பேசி இருந்தது. 
அதைப் பார்த்த ஜெய்,” இப்படி இவனுங்களே எல்லாம் வாங்கி கொடுத்திட்டா… அப்புறம் நாம என்னதான் வாங்கி கொடுப்பது.” என எண்ணிக் கொண்டான். 
அகல்யா ராதிகா யஸ்வந்த என மாறி மாறி யாராவது எதாவது சொல்லிக் கொண்டு வர… அவர்கள் கலாட்டவில் வெண்ணிலாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ஜெய் அமைதியாக வந்தான். 

வீட்டிற்கு வந்ததும் ஜெய் அவனது அறைக்குச் சென்றவன், அங்கே இருந்த புதுக் கட்டில், மெத்தை, பெரிய ஸ்டீல் பீரோ, வாஷிங் மெஷின் எல்லாம் பார்த்துக் கடுப்பானான். காலையில் தான் வெண்ணிலாவின் வீட்டினர் மகளுக்குச் சீர் அனுப்பி இருந்தனர். 

இதெல்லாம் யாரு கேட்டது எனக் கோபமாக வந்தது. இதெல்லாம் ஒரு திருமணத்தில் இயல்பாகக் கொடுப்பது தான். ஆனால் காலையில் கற்பகம் பேசியதை கேட்ட பிறகு இருந்து, மனதிற்குள் ஒரே குழப்பம். 

அவர்கள் விரும்பி வெண்ணிலாவை அவனுக்குக் கொடுக்கவில்லை. வெண்ணிலாவின் விருப்பத்தின் பேரிலும் இந்தத் திருமணம் நடக்கவில்லை. அப்படியிருக்க…. இந்தச் சீர் எல்லாம் வாங்கிக்கொள்வது அவனுக்குப் பிடிக்கவே இல்லை. 

கீழே இருந்து அவனை அழைக்கும் குரல் கேட்க, வேகமாக உடைமாற்றி முகம் கழுவி கீழே சென்றான். 

விருந்தினர் எல்லாம் திருமணப் பலகாரம் வாங்கிக் கொண்டு, வந்த உடனே கிளம்பி இருந்தனர். எஞ்சியிருந்தது வீட்டு ஆட்கள் மட்டுமே. 

இரவு உணவு வெளியே இருந்து வாங்கி இருந்தனர். ஹாலில் வைத்து, தரையில் அமர்ந்து, வாழை இலை போட்டு, எல்லோரும் சேர்ந்து உண்டனர். 

அகல்யா, அண்ணனுக்கும் அண்ணிக்கும் சேர்த்து ஒரே இலையில் பரிமாறினாள். 

“ஏன் டி இலை இல்லையா?” ஜெய் கேட்க, 

“நாம ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்குத்தான் எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுறோம். அதனால இப்படிச் சேர்ந்து தான் சாப்பிடப் போறோம்,” என்றவள், அவள் ராதிகா யஸ்வந்த் சத்யா எனச் சேர்ந்து உண்ண வசதியாக… ஒரே பெரிய இலையாகப் போட்டு, உணவை பரிமாற… பெரியவர்களுக்கும் அப்படித்தான். தம்பதிகள் ஒரே இலையில் வெட்கப்பட்டுக்கொண்டே உண்டனர். 

ஜெய் வெண்ணிலாவின் முகம் பார்க்க… அவள் முகத்தில் பிடித்தம் இல்லை என்பது போல எதுவும் தெரியவில்லை. அதன் பிறகே உண்ண ஆரம்பித்தான். 

எல்லோரும் பேசிக்கொண்டே உண்டதில்… பேச்சுச் சுவாரசியத்தில் எதுவும் நினைக்கவும் தோன்றவில்லை. மகிழ்ச்சியும் சந்தோஷமும் மட்டுமே அங்கே நிறைந்திருந்தது.

“ஆயிரம் ஜன்னல் வீடு
இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது
எங்க ஆணி வேரு யாரு?”

Advertisement