Advertisement

எந்தன் காதல் நீதானே 

அத்தியாயம் 6 

அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த ஜெய்யை அவன் தந்தை அழைக்க, எங்கே என்று பார்த்தால்… அவர் அறையில் இருந்தார். உடன் அமுதாவும். 


அப்பா அறைக்குள் அழைத்துப் பேசுகிறார் என்றால்… நன்றாகத் திட்ட போகிறார் என்று அர்த்தம். காப்பாற்ற வேறு வீட்டில் யாரும் இல்லை. 

சந்திரன் அவர்கள் உரக் கடைக்குச் சென்றிருக்க, தங்கைகள் இருவரும் கல்லூரிக்கு சென்றிருந்தனர். யஸ்வந்த் பொறியியல் முடித்துக் கோயம்புத்தூரில் வேலையில் இருக்கிறான். சனி ஞாயிறு மட்டுமே வீட்டுக்கு வருவான். சத்யா பதினோராம் வகுப்புப் பொள்ளாச்சியில் படிக்கிறான். 

காமாட்சியும் காலை வேலைகள் முடிந்து, அவர் அறைக்குச் சென்றிருந்தார். இனி குளித்துத் துவைக்க வேண்டிய துணிகளைத் துவைத்துவிட்டு பதினோரு மணிப் போலத்தான் கீழே இறங்கி வருவார். 

“என்னப்பா கூப்பிடீங்களா?” என்ற மகனை ஏற இறங்க பார்த்தவர், “வெண்ணிலாவை கேட்காம நீயாவே அவளுக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம்னு சொல்லி இருக்க…” என்றதும், 

ஐயையோ, அதுக்குள்ள மாட்டிகிட்டோமா என விழித்தவன், வெண்ணிலாவுக்கும் தெரிந்திருக்குமே, அவள் எப்படிசமாளித்தாளோ… அவளிடம் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டான். 

வெண்ணிலா வீட்டில் இருந்து தகவல் வரும் போது அவன் வீட்டில் இல்லை. அவன் வருவதற்குள் மகேஸ்வரியும் வெண்ணிலாவும் புறப்பட்டுச் சென்றிருந்தனர். இல்லையென்றால் அவனே வெண்ணிலாவிடம் சொல்லி இருப்பான். 

“பேசுடா இப்படிப் பேசாம நின்னா என்ன அர்த்தம்?” 

“எனக்கு வேற வழியில்லை. வெண்ணிலாவுக்கு இஷ்டம்னு சொன்னதுனால தான், இந்தக் கல்யாண விஷயத்தைப் பேசவே ஆரம்பிச்சீங்க. இல்லைனா என்னோட விருப்பத்தை இங்க யாரு மதிக்கப் போறா?” 

“உன் விருப்பத்தை மதிக்கக் கூடாதுன்னு எங்களுக்கு ஆசைப் பாரு.” 

பேச்சுத் திசை மாறுவதை உணர்ந்த அமுதா, கணவனுக்கும் மகனுக்குமான பேச்சில் குறுக்கிட்டார். 

“போதும், இப்ப ஏன் இந்தப் பேச்சு? அதுதான் கல்யாணம் முடிவு ஆகியிருக்கு இல்ல.. அதுக்கான வேலையைப் பாருங்க.” 

“பெரிய இடத்தில பொண்ணு எடுக்கனும்னு ஆசைபட்டா போதாதது, அதுக்கு ஏத்த மாதிரி நாமும் செய்யனும்.” 

“பதினோரு பவுனுக்குத் தாலி, முகுர்த்த புடவை, கல்யாண மண்டபம் என ஏகப்பட்ட செலவு இருக்கு. ஆனா கையில கொஞ்சம்தான் பணம் இருக்கு. சார் எதுவும் ஐடியா வச்சிருக்காரா?” 

சமீபத்தில் தான் வீடு கட்டினார்கள். அதனால் நிறையப் பணம் அதற்கே செலவாகி இருந்தது. பத்தாததற்கு அமுதா மற்றும் காமாக்ஷியின் நகையை வேறு அடகு வைத்திருந்தனர். ஜெய் ஆனந்தனும் லோன் போட்டு வீட்டுக்குப் பணம் கொடுத்திருந்தான். 

மாதாமாதம் லோன் கட்டியது போக ஒரு லட்சம் கையில் இருந்தது. ஆனால் அது பத்தாது என அவனுக்குத் தெரியும். திரும்ப அவன் இன்னொரு லோன் தான் போட வேண்டும். அப்படிப் போட்டால்… வாங்கும் சம்பளம் முக்கால்வாசி கடனை அடைக்கவே சென்று விடும். 

என்ன செய்வது என அவன் யோசனையில் இருக்க, “இந்தக் கல்யாணம் நம்ம கவுரவம். நாம என்ன செய்றோம்னு உங்க அத்தை வீட்ல கண்ணுல விளக்கெண்ணை விட்டுட்டு பார்ப்பாங்க. அவங்க முன்னால நாம இந்தக் கல்யாணத்தை நல்லா நடத்தனும்.” என்றவர், “அமுதா, லாக்கர்ல இருந்து எடுத்து வந்த அகல்யாவோட நகை பீரோவில் இருக்கு அதை எடு.” என்றவர், மனைவி எடுத்து வந்து கொடுத்த நகையை மகனிடம் கொடுத்து, “இதை வச்சுப் பணம் வாங்கிட்டு வா.. அகல்யாவுக்குக் கல்யாணம் செய்ய இன்னும் ஒரு வருஷம் ஆகும். அதுக்குள்ள மீட்டுடலாம்.” என்றார்.

தங்கைக்குக் கல்யாணம் முடியாமல் தான் திருமணம் செய்வதே தவறு, இதில் அவள் நகையை வைத்துத் திருமணம் செய்துகொள்ள ஜெய்க்கு மனமில்லை. 


“நான் பணம் ஏற்பாடு பண்றேன்.” என்றான். 

“வேண்டாம், நாள் சுருக்கமா இருக்கு. யார்கிட்டையோ கடன் வாங்கிறதுக்கு, நம்ம வீட்டு நகையை அடமானம் வைக்கிறோம். நகை நட்டுன்னு இருக்கிறது எதுக்கு? இந்த மாதிரி நேரத்தில உதவத்தான்.” 

நகையை வைக்காமல் சமாளிக்க முடியாது என ஜெய்க்கும் தெரியும். ஆனால் அதே சமயம் எல்லா நகையையும் அடகு வைக்கவும் அவன் விரும்பவில்லை. 

தன்னால் எவ்வளவுக்கு லோன் போட்டால் சமாளிக்க முடியும் என்பதை யோசித்து, மீதிக்கு மட்டும் நகையை எடுத்துக் கொண்டான். 

இருந்த நாற்பது பவுனில் ஒரு பதினைந்து பவுன் மட்டுமே எடுத்துக் கொண்டான். தங்கையின் நகையை வைக்க வேண்டியது வந்ததும், அதிலேயே அவனுக்கு திருமணம் குறித்த உற்சாகம் குறைந்து விட்டது. கல்யாண வேலைகளும் வரிசைகட்டி நிற்க, அவன் வெண்ணிலாவோடு பேச வேண்டும் என நினைத்ததைச் செயல்படுத்த முடியவில்லை.
நிச்சயம் என்று முன்னர் எதுவும் நடக்காததால்… திருமணதிற்கு முன்தினமே நிச்சயதார்த்தம் வைத்திருந்தனர். 

பெண் வீட்டினர் வர தாமதம் ஆனதால்… அதன் பிறகு வெண்ணிலாவுக்கு அலங்காரம் செய்து, நிச்சயம் முடித்து, நலங்கு வைக்க இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது. 

ஏற்கனவே நிச்சயம் செய்த திருமணம் நின்றிருக்க, இது இரண்டாவது முறை. உறவினர்கள் எல்லோரும் தன்னைப் பற்றிக் கேலியாகத்தானே நினைத்திருப்பர்கள். ஏனோ எல்லோரும் தன்னைப் பற்றிப் பேசுவது போலவே அவளுக்கு எண்ணம். அதனால் வெண்ணிலா தலை நிமிரவே இல்லை. 

நண்பர்களோடு உட்கார்ந்திருந்த ஜெய், அவள் ஒருமுறையாவது தன்னை நிமிர்ந்து பார்த்து விட மாட்டாளா எனப் பார்வையால் தவம் கிடந்தான். 

விருந்தினர்கள் பாதிப் பேர் உணவு உண்ண சென்றிருக்க, நண்பர்களோடு ஜெய் மேடை ஏறினான். அப்போது தான் வெண்ணிலா அவனைப் பார்த்தாள். அவன் வந்ததும் அவளுக்கு ஒரே படபடப்பு. பார்வையைத் திருப்பும் போது வேறு முன் வரிசையில் இருந்த கற்பகத்தையும் அன்பரசியையும் பார்த்து விட்டாள். 

என்னவோ அவளே ஏற்பாடு செய்து கொண்ட திருமணம் போல இருவரும் அவளை முறைத்தனர். 

ஜெய் ஆனந்தனும் வெண்ணிலாவும் நண்பர்களின் கேலிக்கு மத்தியில் இருவரும் புகைப்படம் எடுக்க, அவர்களில் மோதிரம் மாற்றும் வழக்கம் இல்லை. ஆனால் ஜெய் அவளைக் கையைக் கொடு எனச் சொல்ல.. வெண்ணிலாவுக்கு மிகுந்த தயக்கம், அவனே அவள் கையை எடுத்து மோதிர விரலில் அழகான தங்க மோதிரம் அணிவித்தான். 

அவன் மோதிரம் போட்டதை மற்றவர்கள் சந்தோஷமாகப் பார்க்க, கற்பகம் முகம் இன்னும் கருத்தது. 

அந்த நேரம் உறவினர்கள் அனைவரும் உணவு உண்டிருக்க, வீட்டினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே. அதனால் ஜெய் வெண்ணிலாவுடனே சேர்ந்து உணவு உண்டான். 

ஜெய் அவளுடன் பேச வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. அவன் நண்பர்களோடு பேசியபடி உணவு உண்ண… எதுவும் கேட்பானோ என்ற பயத்தில், வெண்ணிலா உண்ணுவதைப் போல… குனிந்து இலையையே பார்த்து இருக்க… ஜெய்யும் அதைக் கவனித்து இருந்தான். 

“என்ன பார்த்தாலே பசி தீருமுன்னு நினைப்பா… நான் கிளம்புறேன், நீ ஒழுங்க சாப்பிடு.” எனச் சொல்லிவிட்டு எழுந்து சென்றான். 

உண்மையில் அவன் அருகில் இருந்தவரை உண்ணவே இல்லை. அதன் பிறகே உண்ண ஆரம்பித்தாள். அவளுக்கு அந்தப் பக்கம் அகல்யாவும் ராதிகாவும் இருந்தனர். 

உண்டு முடித்து அறைக்கு வந்தவளிடம், “இன்னும் கல்யாணமே ஆகலை. அதுக்குள்ள அவனோடு உட்கார்ந்து ஒட்டி உரசி சாப்பிடுறது எல்லாம் பார்க்க நல்லாவே இல்லை.” 

“நம்ம சொந்தக்காரங்க என்ன நினைப்பாங்க. கொஞ்சம் அடக்கமா இரு.” எனக் கற்பகம் பொரிய, தான் எதோ வேண்டுமென்றே ஒட்டி உரசியது போல அவர் பேசியது மனதை நோக செய்ய… வெண்ணிலா அழுகையை அடக்கிக் கொண்டு இருந்தாள். 

அவர் திட்டியதில் பயந்து அகல்யாவும் ராதிகாவும் அங்கிருந்து சென்றவர்கள், தங்கள் பகுதிக்கு வந்து நடந்ததைச் சொன்னவர்கள், வெண்ணிலா கண் கலங்கி நின்றதையும் சொல்ல, ஜெய்க்கு அப்படியொரு கோபம் வந்தது. 

மகனின் முகத்தைக் கவனித்த ஜெயராமன், “விடுங்க, அவங்களைப் பற்றித் தெரிஞ்சது தானே…” என்றார். மகள் இன்னும் என்ன பேச்சு கேட்கிறாளோ என்ற கவலையில், மகேஸ்வரி உடனே மகளைத் தேடி சென்றார். 

“அந்தப் பாட்டிக்கு ஏன் நம்மைக் கண்டாலே ஆக மாட்டேங்குது. நாளைக்கு அந்தப் பாட்டியை வெறுப்பேத்துவது தான் நம்ம வேலை.” என்றான் யஸ்வந்த், அதற்கு அந்த வீட்டின் இளைய பட்டாளம் சரி என ஆமோதித்தது. 

மகேஸ்வரி சென்றபோது, அதற்குள் அதைக் கற்பகம் மகனிடமும் பேரனிடமும் சொல்லியவர், “கல்யாணத்துக்கு முன்னாடி சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுறது எல்லாம் வழக்கமே இல்லை. இது கூடத் தெரியாதா? என்ன குடும்பமோ.” என வத்தி வைத்துக் கொண்டிருந்தார். அதைக் கேட்டு ராஜகோபாலும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார். 

தங்கையின் முகத்தைப் பார்த்த யுவராஜ், “அவங்க ஒன்னும் அந்நியம் இல்லையே பாட்டி. மாமா வீடு தானே… அதனால சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டு இருப்பாங்க. அதோட இதெல்லாம் இப்ப ஒண்ணுமே இல்லை.” எனச் சொல்ல… 

“என்னவோ பா… எனக்கு இதெல்லாம் பார்த்தா படபடன்னு வருது.” என்றார் கற்பகம். அதைக் கேட்டு மகேஸ்வரிக்கு ஆத்திரமாக வந்தது. 

எப்போதுமே அவர் அப்படித்தான். எதாவது என்றால் உடனே…. உயிரே போவது போல அலட்டுவார். ஆனால் நன்றாகக் கெதியாகத்தான் இருப்பார். இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த நடிப்பு என எரிச்சலாக இருந்தது. 

மகேஸ்வரி அதன் பிறகு மகளை விட்டு நகராமல் இருந்தார். கற்பகமும் வெளியே சென்று விட்டார். 

மறுநாள் அதிகாலை முஹுர்த்தம். அவர்கள் ஊர் சிவன் கோவிலில் தான் திருமணம். அதனால் யாருக்கும் எதற்கும் நேரமில்லாமல் கிளம்பிக் கொண்டிருந்தனர். காலை நாலு மணிக்கே வெண்ணிலாவுக்கு அலங்காரம் தொடக்கி விட்டது. 

கொஞ்சம் கொஞ்சம் பேராகக் கிளம்பி கோவிலுக்குச் சென்றனர். வெண்ணிலா பக்க உறவினர்கள் அந்தப் பெரிய கோவிலைப் பார்த்து அசந்து நின்றனர். இந்த ஊரில் இப்படி ஒரு கோவிலா என வியந்தனர். 

தெப்பக் குளம் எல்லாம் வைத்து பெரிய கோவிலாக இருந்தது. ஒரு பக்கம் திருமணதிற்கு உரிய வேலைகள் நடக்க, வந்த விருந்தினர்கள் எம்பெருமான் மற்றும் தாயரை தரிசனம் செய்து, அந்தப் பெரிய கோவிலை வலம் வந்தபடி இருந்தனர். 

ஐந்தரைப் போல வெண்ணிலா இருந்த அறைக்குள் வந்த ஜெய், “போகலாமா டைம் ஆகிடுச்சு.” எனச் சொல்ல, அவனே வருவான் என எதிர்பாராததால் வெண்ணிலா வேகமாக எழுந்து நின்றாள். 

“வா டைம் ஆகிடுச்சு.” என அவன் படபடக்க, அவளுக்கும் படபடப்புத் தொற்றிக்கொள்ள, அறையை விட்டு வெளியே செல்ல முயல… அதற்குள் மற்றவர்கள் சென்றிருந்தனர்.
அவசரம் என்றவனோ அறைக்குள்ளேயே இருக்க, எதையும் விட்டு விட்டோமோ என வெண்ணிலாவும் நின்றாள். 

அவள் என்ன என்பது போல ஜெய்யை பார்க்க, “செம அழகா இருக்க வெண்ணிலா…என் கண்ணே பட்டுடும் போல.” என்றவன், அவன் கையை உயர்த்த, வெண்ணிலாவின் பெரிய விழிகள், இன்னும் பெரிதாக, அவள் கண்ணில் இருந்தே  மையைத் தொட்டு எடுத்து, அவள் உதடுக்கு கீழே டிஷ்ட்டி பொட்டு வைக்க, வெண்ணிலாவுக்கு எல்லாமே மறந்து போனது. முகம் சூடாகி சிவந்து போக, அதன் பிறகே அவளும் அவனை நன்றாகப் பார்த்தாள். அவனின் கோதுமை நிறத்துக்கும் உயரத்துக்கும் பட்டு வேட்டி சட்டையில் அவனும் கண்ணுக்கு நிறைவாகவே இருக்க, அவளுக்குள் எதோ மாற்றம். வெளியே இருந்து வந்த அழைப்பில் இருவரும் வெளியே சென்றனர். 

“அண்ணி இதை நீங்கத்தான் எடுத்திட்டு வரணுமாம்.” எனக் தேங்காய் இருந்த கலசத்தை, அவள் கையில் அகல்யா கொடுத்தாள்.  பெரியவர்கள் அனைவரும் முன்பே கோவிலுக்கு சென்றிருந்தனர். 

மேள வாத்தியங்கள் இசைக்க, ஜெய் ஆனந்தன் பக்கத்தில் கலசத்துடன் வெண்ணிலா நடந்து வர… அவர்களோடு அகல்யா, ராதிகா, யஸ்வந்த, சத்யா, யுவராஜ் மற்றும் இருந்த சில உறவினர்கள் என எல்லோரும் நடந்தே அருகில் இருந்த கோவிலுக்குச் சென்றனர். 

இருவரும் செருப்பு அணியவில்லை. தெருவெங்கும் சரளி கற்களாக இருக்க, அவள் நடக்கச் சிரமம்ப்படுவதைப் பார்த்து, “கல் குத்தும், மெதுவா நட… நான் வேணா கலசத்தை வச்சுக்கவா…” என ஜெய் கேட்க, 

இப்படி மகாராணி போல நடத்தினால் எந்தப் பெண்ணாக இருந்தாலும் மனம் இளகவே செய்யும். அதுவும் வெண்ணிலா ஏற்கனவே இளகிய மனம் படைத்தவள், “நானே வச்சுகிறேன்.” என்றவளுக்கு வெட்கம் வர, இப்போது தான் தனக்குத் திருமணம் என்ற உணர்வே வந்தது. 

மணமக்கள் சாமி தரிசனம் செய்து விட்டு மணமேடையில் அமர, வேத மந்திரங்கள் ஒலிக்க, குறித்த முஹுர்த்தத்தில் ஜெய் ஆனந்தன் கையில் திருமாங்கல்யத்தைக் கொடுக்க, ஒரு நொடி கண் மூடி வேண்டி விட்டே, அவன் வெண்ணிலாவின் கழுத்தில் தாலி கட்டினான். 

அவள் கழுத்தில் இருந்த மாலை, தலை அலங்காரம் எல்லாம் தாண்டி, அவள் கழுத்தில் தாலி கட்டுவதே பெரிய சவாலாக இருக்க… எல்லா மணமகனுக்குமே அது பெரிய சவால் தான்.
ஜெய் தாலி கட்டிவிட்டு, சரியாகத்தான் கட்டி இருக்கிறோமா என்று வேறு பார்த்து உறுதி செய்துகொள்ள, வெண்ணிலாவுக்கே சிரிப்பு வந்துவிட்டது. 

திருமணம் முடித்து மீண்டும் ஒருமுறை சாமி தரிசனம் செய்து விட்டு, கோவிலை விட்டு வெளியே வந்தால்… அங்கே சாரட் வண்டி நின்றிருக்க, மணமக்களை அதில் உட்கார வைத்து, பின்னே உறவினர்கள் நடந்து வர… ஊரை ஒருமுறை வலம் வந்தே மீண்டும் திருமண மண்டபத்திற்கு வந்தனர். 

இப்படி எல்லாம் திருமணம் நடக்கும் என வெண்ணிலாவுக்குமே தெரியாது. அவளுக்கு வேறு எதுவும் அந்த நேரத்தில் நினைவு இல்லை. அவள் எல்லாவற்றையும் அமைதியாக அனுபவித்தாள். 

மண்டபத்திற்குச் சென்று காலை உணவை முடித்து, ஜெய் மட்டும் கோட் சூட் மாற்றிக்கொள்ள, அவர்களின் வரவேற்பு துவங்கியது. மதியம் வரை வரவேற்பு நடக்க… மதிய உணவும் சிறப்பாக இருந்தது.

என்ன அப்படிப் பெரிதாகத் திருமணத்தை நடத்தி விடப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் இருந்த கற்பகம் மற்றும் அவரின் பிள்ளைகள் எல்லாம் திருமணம் நடந்த முறையில் ஆடித்தான் போயிருந்தனர்.

ஜெய்யின் நண்பர்கள் பெரிய கேக்கை கொண்டு வர, ஜெய் வெண்ணிலாவின் கைபிடித்துக் கேக்கை வெட்டியவன், அவளுக்கு எடுத்து ஊட்டி விட, கற்பகத்திற்கு வயிறு எரிந்தது. 

நேற்று இருவரும் ஒன்றாக உண்டதற்கு கற்பகம் என்ன பேச்சு பேசினார். இப்போது தான் திருமணம் முடிந்து விட்டதே, என் மனைவி என் உரிமை என்பது போல, ஜெய் வெண்ணிலாவுடன் விதவிதமாக நின்று புகைப்படங்கள் எடுக்க… படம் எடுப்பவர் கூட அறைக்குள் போய் விடலாமா எனக் கேட்க, “இங்கத்தான் அலங்காரம், லைட்டிங் நல்லா இருக்கு. இங்கேயே எடுங்க.” என்றவன், வேண்டுமென்றே வெண்ணிலாவுடன் நெருக்கமாக போஸ் கொடுத்தான். 
வெண்ணிலாவுக்கு அவன் எதற்கு செய்கிறான் என புரியாமல் இல்லை. அவளால் அவனை தடுக்க முடியுமா என்ன? 

அவன் ஒருபக்கம் வெறுப்பேற்றினால்… யஸ்வந்தும் சத்யாவும் இன்னொரு பக்கம் வெறுப்பேற்றினார்கள். 

“ஆடாம ஜெயிச்சோமடா… நம் மேனி வாடாமல் ஜெயிச்சோமடா….
ஓடாம ரன் எடுத்தோம். சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம்.” பாடலை ஒலிக்க விட்டு, மேடை அதிரும் வகையில் நண்பர்களோடு சேர்ந்து குத்தாட்டம் போட்டனர்.
கற்பகம் உச்சபச்ச கொதிப்பில் இருந்தார். “எனக்குப் படபடன்னு வருது… நான் வீட்டுக்கு போறேன். என்னை முதல்ல இங்க இருந்து அனுப்பி விடு.” எனக் அவர் மகனிடம் ஆரம்பிக்க, உணவு உண்டு முடித்த உறவினர்களோடு அவரையும் முதலில் ஒரு வேன்னில் ராஜகோபால் அனுப்பி வைத்தார். 

புகுந்த வீட்டில் அடியெடுத்து வைத்த வெண்ணிலாவுக்கு மகிழ்ச்சியே. அவள் இலகுவாக இருப்பதற்காக, ஜெய்யும் விலகி இருந்தான். 

மாலை மணமக்கள் பெண் வீட்டிற்குச் செல்ல வேண்டும். மணமக்களை அழைத்து வர, சில உறவினர்களை விட்டு, மகேஸ்வரி முன்பே கணவரோடு வீட்டிற்குச் சென்றிருந்தார்.
கீழே உறவினர்கள் இருக்க, முதல் தளத்தில் குளித்து வேறு பட்டு புடவை கட்டி, தலை நிறையப் பூ வைத்து வெண்ணிலா அவள் வீட்டிற்குச் செல்ல தயராகி வெளியே வர…  

“நான் நாளைக்குப் போறேனே…” என ஜெய் சொல்லிக் கொண்டிருக்க, 

“ஏன் டா?” என அமுதா கேட்க, 

“ஐயோ… அங்க போனா அந்தப் பாட்டி இருக்குமே…” என அவன் நொந்துகொள்ள,  

“உனக்கு வெண்ணிலாவோட தான் ப்ரஸ்ட் நைட். பாட்டி கூட இல்லை.” என அவன் சித்தி கேலி செய்ய… அதற்கு எல்லோரும் சிரிக்க, 

“உங்களுக்கு என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கா… அங்க போனா என்னை எதோ வேற்று கிரகவாசி மாதிரி அந்தப் பாட்டி பார்க்குமே…” என்றான்.  

அவனுக்க இவ்வளவு யோசிக்கிறானே… என்னை என்ன பாடுபடுத்தினார். இத்தனை நாள் தான் பட்ட துன்பத்திற்கு இவன் தானே காரணம் என வெண்ணிலாவுக்குக் கோபமாக வந்தது. 

எல்லாவற்றையும் மறந்து இருந்தவளுக்கு இவனே நியாபகப்படுத்தி விட்டான்.

Advertisement