Advertisement

எந்தன் காதல் நீதானே

அத்தியாயம் 5

ஜெய் மட்டும் வர… “எங்கே உன் அம்மாவும் தங்கையும் என ராஜகோபால் கேட்க,
அதற்குப் பதில் சொல்லாமல், “பாட்டி எங்க?” என ராஜ் அவரைக் கேட்க, 


“உங்க அத்தை வீட்டுக்குத்தான் போயிருக்காங்க.” என்றார். 

“அம்மாவும் வெண்ணிலாவும் வரலை. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வரேன்னு சொன்னாங்க.” 

“ஏன்?” 

“அப்பா நான் ஒன்னு சொல்லட்டா… மாமா வீடும் இப்ப வசதி தான். அதுவும் ஜெய் அத்தான் கவர்மென்ட் வேலையில் இருக்கார். பேசாம வெண்ணிலாவை அவருக்கே கல்யாணம் பண்ணி கொடுத்தடலாமா?” 

“இதை நீ சொல்றியா? இல்ல உங்க அம்மா யோசனையா?” 

“அம்மாவும் சொன்னாங்க. ஆனா எனக்கும் சரின்னு தோணுது.” 

“இதுக்குதான் உங்க அம்மா அங்க உட்கார்ந்துட்டு வரலையா?” 

ராஜ் பதில் சொல்லாமல் இருக்க… ராஜகோபால் கைபேசியில் மனைவியை அழைத்தவர், “என்ன உனக்குத் திமிரா? நீயே எல்லாம் முடிவு பண்ண ஆரம்பிச்சிட்ட.” என்றார் கோபமாக. 

எப்போதும் கணவரின் கோபத்திற்கு அடங்கிப் போய் விடும் மகேஸ்வரி, இந்த முறை அப்படியில்லை. “ஆமாம் உங்க பேச்சையும் உங்க அம்மா பேச்சையும் கேட்டுத்தான் என் பெண்ணுக்கு இந்த நிலைமை. இனியாவது என் பொண்ணு வாழ்க்கையை நான் முடிவு பண்றேன்.” என்றார் திமிராகவே.

“அதுக்காக இப்படியா? நீ முதல்ல இங்க வா… நாம வேற நல்ல இடம் பார்க்கலாம்.” 


“எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைக்காதீங்க. உங்க அம்மா இன்னும் வெண்ணிலாவை கரனுக்குச் செய்யத்தான் நினைக்கிறாங்க. என் பொண்ணு வாழ்க்கையைப் பத்தி அக்கறை இல்லாம போனவனை, நான் திரும்பி எப்படி என் பொண்ணுக்கு கட்டி வைப்பேன்.” 

“அதோட உங்க அம்மா, என் பொண்ணு என்னவோ கல்யாணம் நின்னதுனால சாகப்போன மாதிரி வெளிய பரப்பி விட்டுடாங்க. இனி யாரு அவளைக் கல்யாணம் பண்ணிப்பா…அப்படி கல்யாணம் பண்ணிட்டு போனாலும் சொல்லி காட்ட மாட்டாங்களா.”

“எங்க அண்ணன் வீட்லன்னா அந்தப் பிரச்சனை இல்லை. அவங்க வெண்ணிலாவை கேட்கிறாங்க. அதோட வெண்ணிலாவுக்கும் இஷ்ட்டம். அப்புறம் உங்களுக்கு என்ன கஷ்ட்டம் இங்க செய்யுறதுல?” 


“ஓ வெண்ணிலாவுக்கும் இஷ்ட்டமா… அப்ப நீயே எல்லாம் பேசி முடிவு பண்ணிட்ட.” 

“நான் எதுவும் முடிவு பண்ணலை. எங்க விருப்பத்தைச் சொன்னோம் அவ்வளவு தான். உங்க பெண்ணை நான் பிடிச்சு வைக்கலை… ஆனா என் பொண்ணு கல்யாணம் கூட என் இஷ்ட்டபடி நடக்கலைனா.. அப்புறம் நான் எதுக்கு அங்க இருந்திட்டு?”

“நீங்க உங்க பெண்ணைக் கூப்பிட்டுகோங்க. நான் எங்க அண்ணன் வீட்ல வீட்டு வேலை செஞ்சே காலத்தைப் போக்கிடுறேன். உங்க வீட்ல அதுதானே செய்றேன்.” என மகேஸ்வரி போன்னை வைத்து விட… 


“இத்தனை நான் இல்லாத தைரியம் இப்போது எப்படி வந்தது?” என ராஜகோபால் கொதித்துப் போனார். 

“என்ன டா உங்க அம்மா ரொம்பப் பேசுறா? வெண்ணிலாவை அவ அண்ணன் பையனுக்குக் கொடுக்கலைனா, அவ இங்க வர மாட்டாளாம். வெண்ணிலாவுக்கும் இஷ்டம்ன்னு சொல்றா?” 

“ஆமாம் எல்லார் முன்னடியும் தான் வெண்ணிலாவை கூப்பிட்டு கேட்டாங்க. அவ இஷ்ட்டம், அதோட அங்க இருக்கத் தான் பிடிச்சிருக்குன்னு வேற சொன்னா.” என யுவராஜ் சொல்ல…. 

“அம்மாவும் மகளும் திட்டம் போட்டு செய்றாங்க.” என்றார். 

“அப்பா, பாட்டி சொல்றது போலக் கரனை நம்பி எதுவும் செய்ய முடியாது. கொஞ்ச நாள் வீட்ல வச்சிருந்து வேற இடம் பார்க்கலாம். ஆனா வெண்ணிலாவுக்குப் பிடிச்சிருக்குன்னா நாம மாமா வீட்லயே செஞ்சிட்டுப் போகலாம். தெரிஞ்ச இடம். அதோட அங்க வெண்ணிலாவை எல்லோருக்கும் பிடிக்கும்.” 

ராஜகோபால் பதில் சொல்லாமல் இருக்க… இவ்வளவு பேச விட்டு அவர் கேட்டதே பெரிது என்பதால்… யுவராஜ் மேற்கொண்டு பேசி அவர் கோபத்திற்கு ஆளாக விரும்பவில்லை. அதனால் அங்கிருந்து சென்றான். 

மகள் வீட்டில் இருந்து வந்த கற்பகம், மருமகளும் பேத்தியும் வரவில்லை என்பது தெரிந்து கொதித்துப் போனார். ஆனால் அவரிடம் வேறு விஷயம் ஏதும் சொல்லவில்லை. 

“அவ வீட்டுக்கு போனாலே உங்க அம்மாவுக்குத் திமிரு வந்திடும். இவ இருக்கிறதுன்னா இருந்து தொலைக்கிறது தானே… வெண்ணிலாவையும் ஏன் அங்க வச்சிருக்கா?” எனக் கத்திக் கொண்டு இருந்தார். 

“உங்க பேரன் ஒழுங்கா இருந்திருந்தா, அவ இந்த நேரம் ஏன் அங்கப் போறா?” என யுவராஜ் திருப்பிக் கேட்க, 

“அது தானே எனக்கும் ஒன்னும் புரியலை… வெளிநாட்டு வேலை உடனே போகணுமோ என்னவோ…” 

“ம்ம்… இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்லாதீங்க.” என்றான் ராஜ் கோபமாக. 
மறுநாள் காலை தரகர் வீட்டிற்கு வந்திருந்தார். ராஜகோபால் அவரை உட்கார் வைத்து பேசிக் கொண்டிருந்தவர், கற்பகத்தைக் காபி கொண்டு வர சொன்னார். 

“நான் சொன்ன இடத்தில பேசினீங்களா?” 

“பேசினோம். ஆனா அவங்க என்ன சொல்றாங்கன்னா… பொண்ணு இப்ப மனசு சரியில்லாம இருக்கும். இந்த நேரத்தில கல்யாணம் பண்ணி பொண்ணு எதாவது பண்ணிகிட்டா… எல்லோருக்கும் தானே மனக்கஷ்டம். அதனால வேற இடம் பாருங்கன்னு சொல்றாங்க. ஆனா நான் சொன்ன இன்னொரு இடம் இருக்கு. அவங்களுக்கு இஷ்ட்டம் தான்.” 

“அந்த வசதியில்லாத வீட்டு பையன் தானே… அந்த இடம் வேண்டாம். அவங்க எங்க வசதி பார்த்து சொல்றாங்க. நாளைக்கு எப்படி நடந்துப்பாங்களோ தெரியாது.” 

“சரி நான் வேற எதுவும் இடம் வந்தா சொல்றேன்.” எனத் தரகர் சென்று விட…

“இப்போ எதுக்கு அவசரமா வரன் பார்க்கிற? கொஞ்ச நாள் ஆறப்போடு.” 


“எதுக்கு உங்க பேரன் வருவான்னு நம்பிட்டு சொல்றீங்களா?”

“இல்லை… அதுக்கு மட்டும் இல்லை. கொஞ்ச நாள் கழிச்சு பார்க்கலாமே சொன்னேன்.” 

“வெண்ணிலாவுக்கு இந்த மாசத்தில பண்ணலைன்னா… அப்புறம் நாலு வருஷம் கழிச்சு தான் மாலை நோக்கம் இருக்கு. நாம அதை அலடிச்சியபடுத்தி கல்யாணம் பண்ணாலும், அவ வாழ்க்கை நல்லா இருக்காதுன்னு ஜோசியர் சொன்னார். அதுதான் வரன் பார்த்தேன். ஆனா ஒன்னும் அமையலை…” 

“எல்லாம் உங்க பேரன் பண்ணது தான். அவன் மட்டும் என் கையில கிடைக்கட்டும் அப்புறம் இருக்கு. என்னை எல்லார் முன்னாடியும் தலை குனிய வச்சு… இன்னைக்கு என் பொண்டாட்டி பொண்ணு கூட என் பேச்சுக் கேட்கிறது இல்லாம பண்ணிட்டான்.” 

கற்பகம் முன்னதை விட்டு விட்டு, மகன் கடைசியில் சொன்னதை மட்டும் பிடித்துக் கொண்டார்.
“ஏன் அவளுங்க என்ன செஞ்சாளுங்க?” 

“ம்ம்… அவங்க அண்ணன் மகனுக்கு வெண்ணிலாவை கட்டி வைக்கணுமாம். இல்லைனா அவ இங்க வர மாட்டாளாம்.” 

“திமிரை பார்த்தியா? வெண்ணிலாவை மட்டும் வர சொல்லிட்டு, அவளை அங்க அவ அண்ணன் வீட்லயே கிடக்கட்டும்னு விட்டுடு.” என்றார் கற்பகம் மருமகள் மீது வஞ்சம் வைத்து.

“எங்க அதுதான் வெண்ணிலாவுக்கு எதுவும் வரன்தான் அமையலையே…. என் மகள் கல்யாணம் ஆகாம இருக்கட்டும்னு விட முடியுமா?” 


“அப்ப அங்க செய்யப் போறியா நீ?” 

“வேற வழி என்ன இருக்கு?” 

“நம்ம அந்தஸ்த்துக்கு அவங்க பாதிக் கூட வரமாட்டாங்க. அதுவும் மூன்னு பசங்க அந்த வீட்ல…. அதுக்கு அந்த ஒரு வீடு காணுமா?” 

“விடுங்க… இப்பதான் அங்க பசங்க தலையெடுக்கிறாங்க. எல்லோரும் நல்லா படிச்சிருக்காங்க. பின்னாடி நல்லா வருவாங்க.” 

“அப்ப நீ செய்றதுன்னு முடிவு பண்ணிட்ட.” 

“நான்தான் சொல்றேனே… இதை விட்டா வெண்ணிலாவுக்குக் கல்யாணம் பண்ண நாலு வருஷம் ஆகும். அதுவரை நான் வயசு பெண்ணை வச்சு பாதுகாத்திட்டு இருக்கணும். அப்புறம் வயசும் ஆகிடும். நல்ல வரன் எதுவும் வரலைனா… அதுக்கு நான் இப்பவே அவங்க மாமா வீட்ல செஞ்சிட்டு போறேன்.” 

“அவங்ககிட்ட போய்ச் சம்பந்தம் பண்ண போறியா?” 

“எனக்கு வேற வழி இல்லை. நானும் வேற இடம் பார்க்கத்தான் செஞ்சேன். ஒன்னும் அமையலை. நான் என்ன செய்ய?” 

கற்பகமும் இந்தத் திருமணத்தை நிறுத்த எதாவது கிடைக்காதா எனத் தேடி அலைந்தார். ஜாதகம் பாரு என்றார். உடனே வாட்ஸ் அப்பில் ஜாதகம் வந்தது. இருவருக்கும் பத்திற்கு ஒன்பது பொருத்தம் இருந்தது. அதுவும் எல்லா முக்கியப் பொருத்தங்களும் இருந்தது. 

ராஜகோபாலுக்கு ஜாதகம் ஜோசியம் இதில் எல்லாம் மிகுந்த நம்பிக்கை உண்டு. உங்க தங்கை பையன் ஜாதகத்தை விட இதுதான் பொருத்தமா இருக்கு. இந்த இடத்தையே முடிச்சிடுங்க. அப்புறம் இது போல வரன் அமையாம போகலாம் என்றார் ஜோசியர்.

ஜாதகமும் பார்த்து அதுவும் பொருந்திப் போக… “சரி இந்த மாசம் கடைசியில கல்யாணத்தை வச்சுக்கலாம். உங்க அண்ணனை வந்து பேச சொல்லு.” என ராஜகோபால் சொன்னதை யாராலும் நம்பவே முடியவில்லை.

தான் இங்கே இருக்கக் காரணம் ஜெய் தான் என்ற நன்றியுனர்ச்சியில், கோபத்தைக் கைவிட்டு வெண்ணிலா எப்பவும் போல அவனுடன் சகஜமாகப் பேச, எல்லோரும் வெண்ணிலா விரும்பியே திருமணத்திற்குச் சம்மதம் சொன்னதாக நினைத்திருந்தனர். அதோடு ஜெய்யே வெண்ணிலாவுக்கு அவர்கள் திருமணம் குறித்து நடக்கும் ஏற்பாட்டைச் சொல்லுகிறான் என்றுதான் நினைத்திருந்தனர்.

பெரியவர்கள் தான் பேசிக் கொண்டு இருந்தனர். இன்னும் இளையவர்களுக்கு விஷயம் தெரியாது. உறுதியானதும் சொல்லலாம் என்றிருந்தனர். 

கணவர் அழைத்துச் சொன்னதும், தாங்கள் உடனே ஊருக்குச் செல்வதாக மகேஸ்வரி சொல்ல… அவர்களை விட்டுவிட்டு அப்படியே திருமணத்தைக் குறித்துப் பேசி விடலாம் என ஜெயராமன் அவர்களுடன் கிளம்பினர். வாடகைக்கு ஒரு கார் பிடித்துச் சென்றனர். 

செல்லும் வழியில் திருமணத்தை இப்படி நடத்த வேண்டும் அப்படி நடத்த வேண்டும் எனப் பேச… “யாருக்கு கல்யாணம்?” என வெண்ணிலா கேட்க, 

“என்ன டி தெரியாத மாதிரி கேட்கிற. உனக்குத்தான் கல்யாணம்.” 

“என்னது எனக்குக் கல்யாணமா? எனக்கு எதுக்குக் கல்யாணம் அதெல்லாம் நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.” என்றாள் பட்டென்று. 

“என்ன இப்படிச் சொல்ற? நம்ம ஜெய்தான் மாப்பிள்ளை. நீ கூட அன்னைக்குச் சரின்னு சொன்னியே?” 

“நான் எப்ப சொன்னேன்?” என வெண்ணிலா கேட்க, 

மகன் எதோ தகிடுதத்தம் செய்திருக்கிறான் என ஜெயராமனுக்குப் புரிந்து விட… “அன்னைக்கு உங்க அண்ணன் வந்திருந்த போது, உனக்கு விருப்பமான்னு கேட்க, நீயும் ஆமான்னு சொன்னியே, அது எதுக்கு மா?” என அவர் வெண்ணிலாவிடம் கேட்க, 

“அது நான் நம்ம வீட்ல இருக்க விருப்பம்னு சொன்னேன் மாமா. ஜெய் அத்தான் என்கிட்டே அப்படித்தான் சொன்னாங்க. உனக்கு இஷ்ட்டம்ன்னா உங்க அப்பா உன்னை இங்க இருக்கச் சொன்னாருன்னு சொன்னாங்க.” 

ஜெயராமனுக்கு மகன் செய்து வைத்த வேலையை நினைத்துக் கோபமாக வந்தது. “தெரியும், இவன் இப்படித்தான் எதாவது பண்ணியிருப்பான் நினைச்சேன்.” என்றார். 

“சரி விடுங்க அண்ணா. அவன் வெண்ணிலா மேல உள்ள ஆசையில அப்படிச் சொல்லிட்டான். எல்லாம் நல்லதுக்குத்தான்.” 

“வெண்ணிலா நான் சொல்றது நல்லா கேட்டுக்கோ…” என்றவர், அவளுக்கும் ஜெயிக்கும் திருமணப் பேச்சு ஆரம்பித்ததில் இருந்து, தான் கணவரிடம் சண்டை போட்டது வரை எல்லாம் சொல்லிவிட்டு, “உங்க அப்பா உனக்கும் இந்தக் கல்யாணத்துல இஷ்டம்னு நினைச்சிருக்கார். நீ எதுவும் இல்லைன்னு சொல்லிடாத… அப்புறம் என்னை வெட்டி போட்டுடுவார்.” என்றும் சொல்ல, வெண்ணிலா மிகவும் பயந்து போனாள். 

“ஏன் மா இப்படியெல்லாம் பண்ணீங்க. அப்பா ரொம்பக் கோபமா இருப்பார்.” 

“போடி உங்க அப்பாவுக்குப் பயந்து பயந்து தான் இந்த நிலைமை. உங்க அத்தை வீட்டுக்குக் கல்யாணம் பண்ணி போயிருந்தா, என் நிலைமை தான் உனக்கும். நாம நினைச்சது பேசவோ, ஏன் நம்ம வாழ்க்கையைக் கூட நாம வாழ முடியாது.” 

“உங்க மாமா வீட்ல அப்படியில்லை. அங்க நீ நீயா இருக்கலாம். சும்மா எல்லாத்துக்கும் பயப்படாத. நான் பார்த்துகிறேன். நீ தைரியமா இரு.” 

ஜெயராமன் வேறு உடனிருந்ததால்… அதற்கு மேல் வெண்ணிலா எதுவும் பேசவில்லை.
ராஜகோபால் வந்த மனைவி மகளிடம் பேசவில்லை. ஆனால் ஜெயராமனிடம் நன்றாகத்தான் பேசினார். இவர்கள் வந்தது தெரிந்தும், கற்பகம் அறைக்குள் இருந்து வரவில்லை. யுவராஜும் அப்போது இருந்தான். 

திருமணத்தை ஜெயராமன் தங்கள் ஊரில் வைத்துக் கொள்வதாகச் சொல்ல… ஏற்கனவே ஏற்பாடு செய்த திருமணம் நின்ற நிலையில் மீண்டும் எல்லா ஏற்பாடுகளும் செய்ய, ராஜகோபாலுக்கும் மனதிலும் உடலிலும் அவ்வளவு தெம்பு இல்லை. அதனால் சரியென்றார். 

அதை உணர்ந்தது போல… “பத்திரிகை கூட ரெண்டு வீட்டு அழைப்பா, நாங்களே அடிச்சிடுறோம்.” என்றார். 

அப்போதே நேரம் நன்றாக இருந்ததால்… மஞ்சள் தடவிய வெள்ளைத் தாளில் திருமணப் பத்திரிகை எழுத ஆரம்பித்தனர். இருவரும் சேர்ந்து பேசிதான் எழுதினர். 

மகேஸ்வரி எல்லோருக்கும் டீ கொண்டு வந்து கொடுத்தார். 

“இதைச் சாமி படம் முன்னாடி வச்சு எடுத்திட்டு வா…” என ஜெயராமன் எழுதிய பத்திரிக்கையைக் கொடுக்க… மகேஸ்வரியும் அப்படியே செய்ய… டீ குடித்துவிட்டு, மற்ற விவரங்கள் போன்னில் பேசிக்கொள்ளலாம் என ஜெயராமன் விடைபெற்று சென்றார். அதுவரையுமே கற்பகம் வெளிவரவில்லை.

ராஜகோபால் யுவராஜ்க்கு வேலை கொடுத்து அனுப்பி விட்டு அறைக்குள் சென்று விட… அதன் பிறகே கற்பகம் எழுந்து வெளியே வந்தார். ஆனால் அப்போதும் இருவரிடமும் பேசவில்லை. 
வெண்ணிலா பேச சென்றதுக்கும், “போதும் நீதான் நீயே மாப்பிள்ளை பார்த்துக்கிற அளவுக்குப் பெரிய மனுஷி ஆகிட்டியே… உன்னோட எல்லாம் பேசுறதுக்கு ஒண்ணுமில்லை.” என்றார். 

என்ன நடந்தாலும் திருமணம் நடக்கும் வரை வாயே திறப்பதில்லை என மகேஸ்வரி இருந்தார். மகளை உள்ளே போ என ஜாடை காட்டிவிட்டு, அவரும் உள்ளே சென்று விட்டார். 

ராஜகோபாலும் மனைவியிடம் முகம் கொடுத்து பேசவில்லை. தேவைக்கு மட்டுமே பேசினார்.
மறுநாளே திருமணப் பத்திரிக்கை அடித்து, கோவிலில் வைத்து பூஜை செய்து ஜெயராமன் தன் இளைய மகன் மூலம் கொடுத்து விட்டார். ராஜகோபாலும் மகேஸ்வரியும் பத்திரிகை வைக்கச் சென்று விட… கற்பகத்திற்கு வெண்ணிலாவை குத்தி காட்டி பேச வசதியாகி விட்டது. 

அன்றும் அது போலப் பெற்றோர் வெளியே சென்றிருக்க, மதிய சமையல் செய்வது வெண்ணிலா தான். அவள் சமைத்துக் கொண்டிருக்க, அன்பரசி வீட்டிற்கு வந்திருந்தார்.

தங்கள் வீட்டுக்கு வர வேண்டிய பெண், வேறு வீட்டுக்கு மருமகளாகச் செல்வது அவருக்கும் வருத்தம்தான். அதனால் வெண்ணிலாவுடன் முகம் கொடுத்து பேசவில்லை. 


“எனக்கு என்னவோ இவ மேலதான் சந்தேகமா இருக்கு. அந்தப் பையன் முன்னாடியும் இங்க வந்து போய்த் தான் இருந்தான். எதுவும் ரெண்டு பேருக்கும் காதல் இருக்குமோ… அது தெரிஞ்சு தான் உன் பையன் விலகிட்டானோ…” எனக் கற்பகம் பத்த வைக்க, அன்பரசிக்கும் அப்படியும் இருக்குமோ எனத் தோன்றிவிட்டது. 

கற்பகம் அதை மகன், பேரன் என எல்லோரிடமும் சொல்ல… “என்னவோ இருந்திட்டு போகட்டும், கல்யாணம் பண்ணி வைக்கிறது என் கடமை. நான் பண்ணி வைக்கிறேன்.” என்றார் ராஜகோபால். 

தந்தை தன்னை நம்பாதது ஏற்கனவே வெண்ணிலாவை பாதித்து இருக்க, “ஏய், ஒருவேளை பாட்டி சொல்றது போல இருக்குமோ… இல்லேன்னா அன்னைக்குக் கேட்டதும், எப்படி உடனே ஜெய் அத்தானை கல்யாணம் பண்ண ஒத்துகிட்ட.” என யுவராஜ் கேட்க, 

வெண்ணிலாவால் ஜெய்யைக் காட்டிக் கொடுக்கவும் முடியவில்லை. 

“என்னை யாருமே நம்பாதீங்க. எல்லாத்துக்கும் நான்தான் காரணம். அப்படியே வச்சுக்கோங்க.” என்றவள், உள்ளே செல்ல திரும்ப, அவளைப் பிடித்து நிறுத்திய யுவராஜ், “ஏய் நான் சும்மா சொன்னேன் டி.” என்றான். 

வெண்ணிலாவின் கண்கள் சிவந்து கலங்கி கண்ணீரை கொட்ட ஆரம்பிக்க, விடுண்ணே என்றவள், அவன் கையை விலக்கிவிட்டு உள்ளே சென்று விட்டாள். 

அங்கே கையில் திருமணப் பத்திரிக்கை வைத்து பார்த்துக் கொண்டிருந்த ஜெய்க்கு நம்பவே முடியவில்லை. நிறையச் சண்டை எல்லாம் போட வேண்டியது இருக்கும். எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என இருந்தான். ஆனால் இவ்வளவு விரைவாகத் திருமணத்தில் வந்து நிற்கும் என அவனே எதிர்பார்த்திருக்கவில்லை. வெண்ணிலாவின் ஜாதகம் தான் அவர்கள் திருமணத்திற்குக் காரணம். 

“நிஜமா தானா… யாரும் கனவுன்னு எழுப்பி விட்டுட மாட்டாங்களே…” என நினைத்தவன், 

“ஏய் அகல், இது கனவு இல்லையே?” என அருகில் நின்ற தங்கையிடம் கேட்க, 

“இந்தச் சந்தேகம் எல்லாம் உனக்கு வரக் கூடாது.” என்றவள், அவன் கையைப் பிடித்து நறுக்கென்று கடிக்க… 

“வலிக்குது அப்ப உண்மை தான்.” என ஜெய் சிரிக்க, 

“அடப்பாவி அண்ணா இப்படி ஆகிட்டியே… கல்யாணம் நிச்சயம் ஆனதுக்கே இப்படி, இன்னும் கல்யாணம் ஆகிடுச்சுன்னா… எப்படி இருப்ப?” 

ஜெய் பதில் சொல்லும் நிலையிலேயே இல்லை. அவன்தான் கனவில் மிதந்துக் கொண்டிருந்தானே.

“கையில் மிதக்கும் கனவா நீ 
கை கால் முளைத்த காற்றா நீ 
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே 
நுரையால் செய்த சிலையா நீ”
என கையில் இருந்த பத்திரிக்கையை வெண்ணிலாவாக நினைத்து பாடிக் கொண்டிருந்தான்.

Advertisement