Advertisement

எந்தன் காதல் நீதானே

அத்தியாயம் 4 

ஜெயராமன் மகேஸ்வரி முதல் மாடியில் இருந்த பால்கனியில் நின்று தான் பேசிக்கொண்டிருந்தனர். இரண்டாம் மாடி பால்கனியில் நின்று அவை அனைத்தையும் ஜெய் கேட்டிருந்தான். இரவின் நிசப்தத்தில் அவர்கள் பேசியது அவனுக்குத் தெளிவாகவே கேட்டிருந்தது. 


சின்ன வயதில் இருந்தே ஜெய்க்கு வெண்ணிலாவை பிடிக்கும். பாட்டி அவளை நன்றாகக் கவனித்துக் கொள்வதைப் பார்த்து தான் அவனும் ஆரம்பித்தான். எப்போதுமே அவள் முகம் வாடுவதை அவனால் பொறுக்க முடியாது. ஆனால் எப்போது அவள் மீது வைத்திருந்த பிரியம் காதலாக மாறியது என்பது அவனுக்கே தெரியாது. 

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி படித்துக் கொண்டிருந்தான். விடுதியில் தங்கித்தான் படித்தான். எல்லோரையும் போலக் கல்லூரி வாழ்க்கை என்பது அவனுக்கும் இனிமையானவையே…. உடன்படித்த தோழியின் பார்வை தன் மீது நட்பையும் தாண்டி ஆர்வமாகப் படிவதை உணர்ந்தான். 

மனதில் பட்டாம்பூச்சி பறப்பதை விட்டு, ஒருவிதமான சங்கடமே எழுந்தது. அதன் பிறகு அந்தப் பெண்ணைப் பார்ப்பதையும் தவிர்த்தான். அந்த முறை அத்தை வீட்டிற்குச் சென்ற போது வீட்டில் கற்பகம் இல்லை. எப்போதும் கொடுக்க வந்ததைக் கொடுத்துவிட்டு உடனே கிளம்புபவன், இந்தமுறை அத்தை பரிமாற உணவு உண்டான். வெண்ணிலாவும் அவனோடு உணவு அருந்தினாள்.

ஜெய் இளநிலை படிப்பின் இறுதி ஆண்டிலும், வெண்ணிலா ஒன்பதாம் வகுப்பிலும் இருந்தனர். 


மகேஸ்வரி, காலை உணவுக்குத் தோசையும், கறிக் குழம்பும் செய்திருந்தார். உண்டு விட்டு கணவர் வெளி வேலையாகச் சென்றிருக்க, மகனும் பாட்டியை அத்தை வீட்டில் விடச் சென்றிருந்தான். ஞாயிறு அன்று தான் நிதானமாகத் தலைக்கு எண்ணெய் வைத்து வெண்ணிலா குளிப்பாள். அதனால் நிதானமாகத் தான் உண்ணுவாள். 

அவள் மட்டும் உண்ணாமல் இருக்க…. அண்ணன் மகன் வருவது மகேஸ்வரிக்குத் தெரியாது. ஜெய்யை பார்த்ததும் வேகமாகப் பூரிக்கு மாவு பிசைத்து சுட்டு எடுத்தவர், மகளையும் அழைத்து இருவருக்கும் ஒன்றாகப் பரிமாறினார். 

முதல் தடவை பரிமாறி விட்டு பூரி சுட மகேஸ்வரி உள்ளே சென்றிருக்க… குழம்பு கொஞ்சமாக இருந்ததால்… ஜெய்க்கு இருக்கட்டும் என்று வெண்ணிலா லேசாகத் தொட்டுக் கொண்டு உண்ண, அதைக் கவனித்த ஜெய் ஏன் என்று கேட்க, வெண்ணிலா சும்மாதான் என்றாள். 

ஜெய் குழம்பை அவள் பக்கம் தள்ளி வைக்க, வெண்ணிலா ஜெய் பக்கம் நகர்த்தி வைத்தாள். இப்படியே இருவரும் மாறி மாறிச் செய்ய… இது வேலைக்கு ஆகாது என நினைத்த ஜெய், தனக்குத் தேவையானதை போட்டுக் கொண்டு கொடுக்க… அதன் பிறகே வெண்ணிலா எடுத்துக் கொண்டாள். 

“பிடிவாதம்.” என ஜெய் சொல்ல.. வெண்ணிலா அவனைப் பொய்யாக முறைத்தபடி உண்டாள். 

“ஜெய், மதியம் சாப்பிட்டு போ டா…” என மகேஸ்வரி சொல்ல… அவனும் சரியென்றான். 

உண்டு முடித்து ஜெய் டிவி பார்த்துக் கொண்டிருக்க…. மகளின் தலையில் இருந்த துண்டை உருவிய மகேஸ்வரி, மகளுக்குத் தலை துவட்ட ஆரம்பிக்க… “இது கூட நீ பண்ண மாட்டியா?” என ஜெய் கேட்க… 

“நிறைய முடி இருக்கு இல்ல… கை வலிக்குது.” என்றாள். அவளைப் பார்த்து ஜெய் சிரித்தான். உண்மையில் வெண்ணிலாவுக்கு நல்ல நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் தான்.

அப்போது கற்பகம் வந்து விட… இவர்கள் மூவரும் ஒன்றாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து முகம் மாறினார். 


ஜெய் அவரைப் பார்த்ததும் எழுந்து நிற்க, அவர் அவனைக் கண்டுகொள்ளவே இல்லை. வா என்று கூடச் சொல்லவில்லை. அவருக்கு வெண்ணிலாஅவனோடு பேசிக் கொண்டிருந்தது மிகுந்த கோபம். 

அந்த நேரம் வேலைக்காரி வர… ஐந்து நிமிடம் தாமதமாக வந்தவளை, கொலை குத்தம் செய்தது போல… திட்டி தீர்த்தார். வேலைக்காரிக்கு இல்லை தனக்குத்தான் அந்தப் பேச்சு என அறியாதவன் இல்லை ஜெய். இந்தப் பேச்சுக்கு பயந்து தான் பாட்டியோ மற்றவர்களோ இங்கே வருவது இல்லை. 

“சரி அத்தை நான் கிளம்புறேன்.” என ஜெய் உடனே கிளம்பி விட… 

தாங்கள் அங்கே போனால் எப்படிக் கவனிப்பார்கள் என்று வெண்ணிலாவுக்குத் தெரியும். மதியம் உணவு அருந்திவிட்டுப் போகலாம் என்றிருந்தவன், உடனே கிளம்பவும், அவள் முகம் வாடி விட்டது. அந்நேரம் மழை பெரிதாகப் பெய்ய… அதைக் கூடப் பொருட்படுத்தாமல் ஜெய் கிளம்ப…
“மழை விட்டதும் போ டா…” என மகேஸ்வரி சொன்னதைக் கூடக் கேட்காமல் அவன் செல்ல… 

“வெண்ணிலா குடை எடுத்திட்டு வந்து கொடு.” எனத் தன் அம்மாவின் குரல் கேட்டு, வெண்ணிலா குடையை எடுத்துக் கொண்டு ஓடினாள். 

ஜெய் வாசலை தாண்டி சென்றிருக்க, அவன் பின்னால் ஓடி சென்று அவள் குடையைக் கொடுக்க… 

வேண்டாம் என மறுக்க வந்தவன், வெண்ணிலாவின் கண்கள் கலங்கி இருபதைப் பார்த்து வாங்கிக் கொண்டான். 
“தலைக்குக் குளிச்சிட்டு மழையில நனையாத.” என்றபடி குடையை விரித்து அவளுக்குக் கொடுத்து விட்டு, மழையில் நனைந்தபடி சென்றுவிட்டான். 

மழை பெய்வது எல்லாம் ஜெய்க்கு உறைக்கவே இல்லை. அவர்கள் ஊருக்குச் செல்லும் பஸ்சில் ஏறி உட்கார்ந்த பிறகும், வெண்ணிலாவை பற்றிய நினைவு தான். அவளின் பெரிய விழிகள் கண்ணீரில் மிதந்தே, மனதை கனக்க செய்ய… அன்றுதான் உணர்ந்தான் அவள் மீது இருந்த காதலை. 

அன்றுதான் கற்பகமும் வீட்டில் பெரிய பிரச்சனை செய்து மகேஸ்வரியை பாடாய்ப்படுத்த, வெண்ணிலா நொந்து போய் இனி ஜெய் வந்தாலும் அவனுடன் பேசக் கூடாது என முடிவெடுத்தாள். ஜெய் வந்தாலும் உடனே கிளம்பி விடுவான். அவளைப் பார்ப்பதே போதும் என்றிருந்தான்.
அவளிடம் காதலை சொல்லி காதலிக்க வைக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. கரனோடு அவளுக்குத் திருமணம் எனப் பேசி வைத்திருந்ததை, அவன் மதிக்கவே இல்லை. 
வெண்ணிலாவை திருமணம் செய்ய வேண்டும். அதற்குத் தக்க தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாகப் படித்து முதுகலைப் படிப்பும் முடித்து அரசாங்க வேலையும் வாங்கி விட்டான். வீட்டையும் பெரிதாகக் கட்டி, அவன் வீட்டினரை பெண் கேட்க சொல்ல… வீட்டில் பெரிய தகராறே நடந்தது. 

“நான் வெண்ணிலாகிட்ட பேசிக்கிறேன்.” எனச் சென்றவன், சுவற்றில் அடித்த பந்தாகத் திரும்பி வந்தான். அவன் முகத்தில் இருந்தே ஒன்றும் நடக்கவில்லை எனத் தெரியும். அதன் பிறகு வெண்ணிலா பற்றி அந்த வீட்டில் பேசுவது இல்லை. 

திருமண நாள் நெருங்க நெருங்க ஜெய் இன்னும் இருக்கிப்போய் இருந்தான். எப்படித் தன்னுடையவள் வேறு ஒருவனைத் திருமணம் செய்யலாம் என்ற எண்ணமே… அவன் காதலின் வலிமையோ… அல்லது விதியோ… வெண்ணிலாவின் திருமணமும் நின்று போனது. இனி? 

வெண்ணிலாவுக்கு இங்கே அகல்யா ராதிகாவோடு நேரம் போனது. அகல்யா கல்லூரி இறுதி ஆண்டில் இருக்கிறாள். ராதிகா பள்ளி இறுதி. இருந்தாலும், இப்போது இருவருக்கும் விடுமுறை என்பதால்…மூவரும் சேர்ந்து இருந்தது வெண்ணிலாவுக்குப் பல விஷயங்களை யோசிக்க விடாமல் செய்தது. சில நேரம் கவிதாவும் சேர்ந்து கொள்வாள். 

கவிதாவுக்கு எதையும் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள முடியாது. ஏனென்றால் இந்த வீட்டில் அப்படியொரு திருமணப் பேச்சு வார்த்தை வந்தது போலவே காட்டிக்கொள்ள மாட்டார்கள். 
காமாக்ஷி மட்டும் “என்ன வரப்போற மாமியார் வீடு எப்படியிருக்குன்னு இப்பவே அடிக்கடி வந்து பார்த்துகிறியா?” எனக் கேலியாகக் கேட்பது போலப் பேசினாலும், மற்றவர்கள் அது காதில் விழாதது போல இருப்பார்கள். ஆனால் வெண்ணிலா மட்டும் ஜெய் கவிதாவை திருமணம் செய்யப்போவதாக நினைத்துக் கொண்டிருந்தாள். 

சில நாட்கள் கோவில் ஷாப்பிங் எனச் சென்று நேரத்தை கழித்துக் கொண்டிருந்தனர். மற்ற நேரம் பெரிய வீடு என்பதால் ஆளுக்கு ஒரு வேலையும் இருக்கும். வீட்டு வேலைக்கு எல்லாம் ஆட்கள் இல்லை. அவர்கள் தான் செய்து கொள்வது.
வெண்ணிலா முற்றத்தில் இருக்கும் செடிகளுக்கு மற்றும் மொட்டை மாடி தோட்டத்திற்கு நீறுற்றும் வேலையை, அவள் எடுத்துக் கொண்டாள். 

காலை மாலை இருவேளையும் அதிக நேரம் அங்கேதான் இருப்பாள். ஜெய் இருக்கும் வரை மேல் மாடிக்கு செல்ல மாட்டாள். அவன் இல்லாத நேரம் தான் செல்வது. 

மேல் மாடி தோட்டத்திற்கு ஜெய்யின் அறையில் இருந்து மட்டும் அல்ல, இரண்டாம் மாடியில் இருந்தும் படி இருக்கும். அதன் வழியாகச் சென்றுவிட்டு வருவாள். 

வெண்ணிலா வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. அன்று மாலை எல்லோரும் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். ஜெய் எதோ எடுக்க வீட்டுக்கு வந்தவன், எல்லோரும் ஒரே இடத்தில் இருப்பதைப் பார்த்து அங்கு வந்தான். 

அவனைப் பார்த்ததும் அமுதா அவனுக்கு டீ கொண்டு வந்து கொடுத்தார். அதைக் குடித்தபடி அங்கேயே நின்று விட்டவன், “என்ன மாநாடு இங்க?” எனக் கேட்க, 

“நாம தண்ணி ஊத்தும் போது கூட இவ்வளவு பூ பூக்களையே, வெண்ணிலா ஊத்தும் போது மட்டும் பூக்குதே… அதுதான் வெண்ணிலாவை எல்லோரும் பாராட்டிட்டு இருக்காங்க.” என்றாள் அகல்யா. 

“ம்ம்.. உரம் கொண்டு வந்து வச்சது நானு. வெறும் தண்ணி ஊத்தினவங்களுக்குப் பாராட்டா?” ஜெய் கேட்க, வெண்ணிலாவுக்கே சிரிப்பு வந்துவிடும் போல இருந்தது. அவள் கஷ்ட்டப்பட்டுச் சிரிப்பை அடக்க… 

“அண்ணன் சொல்றதும் சரிதான். இதுல அண்ணனுக்குப் பங்கு இருக்கு.” என ராதிகா சொல்ல… 

“நீ ஒரு வேலையும் பண்ணாத… ஆனா இந்தப் பஞ்சாயத்து எல்லாம் நல்லா பண்ணு.” என்றவன், அவளின் தலையில் கொட்டி விட்டு செல்ல…வலிக்கவில்லை என்றாலும் ராதிகா பொய்யாக வலிப்பது போல நடித்தாள். 

மறுநாள் காலை ஜெய் அவன் அறையில் இருந்து இறங்கி வர… வெண்ணிலா மேலேறிக் கொண்டிருந்தாள். அவள் முகம் மிகவும் வாடி இருக்க… நல்லாத்தானே இருந்தா, என்ன ஆனது என யோசித்தபடி ஜெய் வந்தவன், ஹாலில் இருந்த யுவராஜை பார்த்ததும் ஒரு நொடி திகைத்து, வா ராஜ் என்றான். 

சம்ரதாய நல விசாரிப்புகளுக்குப் பிறகு… “நீயும் ராஜ்ஜோடு சாப்பிடு.” என அமுதா அழைக்க, இருவரும் சாப்பிட உட்கார்ந்தனர். 

“அம்மாவையும் வெண்ணிலாவையும் கூடிட்டு போக வந்தேன்.”  ராஜ் சொல்ல… வெண்ணிலாவின் வாட்டத்திற்கான காரணம் விளங்கியது. சின்ன வயதிலேயே அவள் அப்படித்தான், வெண்ணிலா வரும் போது குஷியாக வருவாள். திரும்பச் செல்லும் போது அழுது கொண்டு தான் செல்வாள். இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே இன்னும் டூ டேஸ், ஒன் டே தான் எனச் சொல்லிக் கொண்டிருப்பாள். 

ஜெய் சாப்பிடும் போதும் தீவிர சிந்தனையிலேயே இருந்தான். இன்று போக விட்டால் திரும்ப அவளைப் பார்ப்பதே அரிதாகி விடும் என அவனுக்குத் தெரியும். போய் விடுவாளோ என மனம் படப்டத்தாலும், வெளியே அமைதியாக இருந்தான். 

“இன்னும் கொஞ்ச நாள் வெண்ணிலா இங்க இருந்தா அவளுக்கு நல்லா இருக்கும்.” என அமுதா பரிமாறியபடி சொல்ல… 

ராஜ்க்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் வீட்டில் பாட்டி, ஒரே நச்சரிப்பு. “அங்கே ஏன் இருக்கணும்? அவங்களை இங்கே வர சொல்லு.” என ஒரே தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார். அதனால் ராஜகோபாலும் அவர்களை அழைத்து வர சொல்லி விட்டார். 

வேறு ஏதும் சொல்லாமல், “அப்பாதான் அத்தை கூடிட்டு வர சொன்னாங்க.” என்றான். 

உணவு உண்டு விட்டு “சீக்கிரம் கிளம்புங்க.” என ராஜ் தன் அம்மாவை பார்த்து சொல்ல, “மெதுவா போகலாம். வா.. நம்ம தோட்டம் வரை போய்ட்டு வரலாம்.” என அழைத்தான் ஜெய். ராஜும் மறுக்க முடியாமல் உடன் சென்றான். 

பொள்ளாச்சியில் இருக்கும் அவன் வேலைப் பார்க்கும் அலுவலகம், பிறகு அவர்கள் தோட்டம் என அழைத்துச் சென்று காட்டிவிட்டு வீட்டுக்கு அழைத்து வந்தான். எதுக்கு இப்ப இதெல்லாம் அழைத்துச் சென்று காட்டுகிறான் என ராஜ்க்கு புரியவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் புரிந்தது. 

வீட்டிற்கு வந்தவன், கொஞ்சம் பேசணும் என அவன் அப்பாவையும் சித்தப்பாவையும் வீட்டிற்கு அழைத்தவன், அவர்கள் வருவதற்குள், வெண்ணிலா மாடியில் இருப்பதை உறுதி செய்து கொண்டு, அவ கீழ வராம பார்த்துக்கோ என அகல்யாவை அனுப்பி வைத்தான். ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்த ராதிகாவையும் மாடிக்கு விரட்டினான். தம்பிகள் வீட்டில் இல்லை. 

சிறிது நேரத்தில் அவன் அப்பாவும் சித்தப்பாவும் வந்து விட, ஹாலில் எல்லோரும் இருக்க, “வெண்ணிலாவுக்கு எப்படியும் இன்னொரு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணத்தான் போறாங்க. அது ஏன் நானா இருக்கக் கூடாது? எனக்கு வெண்ணிலாவை கல்யாணம் பண்ணி வைங்க.” என ஜெய் நேரடியாகக் கேட்க, 

இதை ஜெயராமன் எதிர்பார்த்தார் என்பதால் அதிர்ச்சி இல்லை. “இதை எங்ககிட்ட கேட்க கூடாது. பெண்ணைப் பெத்தவர்கிட்ட கேட்கணும்.” என்றார். 

“ஏன் நீங்க எனக்காகக் கேட்க மாட்டீங்களா?” 

“கொடுப்பாங்கன்னா கேட்கலாம். ஆனா கொடுக்க மாட்டாங்க. அப்புறம் எதுக்குக் கேட்டுட்டு.” என்றார். 

“அத்தை, நீங்க என்ன சொல்றீங்க?” ஜெய் மகேஸ்வரியிடம் கேட்க, 

“எனக்கு இஷ்ட்டம்தான் ஜெய்.” என்றார். 

“அம்மா…” என யுவராஜ் அவரை அடக்க, 

“ஏன்?” என்பது போல ஜெய் அவனைப் பார்க்க, 

பாட்டி மற்றும் அப்பாவை எல்லாம் சம்மதிக்க வைப்பது அவ்வளவு எளிதல்ல என ராஜ் நினைத்தான். அதைச் சொல்ல முடியாமல், “வெண்ணிலாவுக்கு இஷ்ட்டமான்னு தெரியாம. நாமே எப்படி முடிவு பண்றது?” என்றான்.  
“கரனோட நிச்சயம் பண்ணும் போது, அவள் விருப்பம் கேட்டீங்களா?” ஜெய் கேட்க, 
“அது எதுக்கு உனக்கு?” என்றார் ஜெயராமன். 
“வெண்ணிலாவுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்ட்டம் தான். இருங்க நான் அவளைக் கூடிட்டு வரேன்.” என்றவன், மாடிக்கு சென்று, வெண்ணிலாவை தனியே அழைத்துச் சென்று பேசினான். 

“வெண்ணிலா, உங்க அண்ணன் உன்னை ஊருக்குக் கூப்பிடுறான். ஆனா நீ இங்க இருக்க இஷ்ட்டபட்டா… இங்கேயே இருக்கலாம் சொல்றான். நீ என்ன சொல்ற?” 

“நான் இருக்கேன்.” என்றாள் வெண்ணிலா சந்தோஷமாக. அங்கே சென்றால் நின்று போன திருமணம் அல்லது கரனைப் பற்றிப் பேசியே கொல்வார்கள் என்ற அச்சத்தில், உடனே அவள் சம்மதிக்க… உங்க அண்ணன்கிட்ட சொல்லு வா என அழைத்துச் சென்றான். 

கீழே எல்லோர் முன்பும் வைத்து, “என்கிட்டே சொன்னே இல்ல… உனக்கு விருப்பம் தானே…” என அவன் கேட்க, திருமணத்திற்கு என்று தெரியாமல் ஊருக்கு என நினைத்து வெண்ணிலா சம்மதமாகத் தலையசைத்தவள், “எனக்கு இங்கதான் பிடிச்சிருக்கு.” எனச் சேர்த்து சொல்ல… அது இன்னும் ஜெய்யின் பக்கம் வலு சேர்க்க, “சரி மாடிக்கு போ…” என அனுப்பி வைத்தவன், “இப்ப என்ன சொல்றீங்க?” என்றான் பொதுவாக. 

“அப்பாகிட்ட கேட்கணும்.” என்றான் ராஜ். 

“சரி கேளுங்க. ஆனா அத்தையும் வெண்ணிலாவும் இங்க இருக்கட்டும்.” என ஜெய் சொல்ல… 

“ஆமாம் அங்க வந்தா உங்க அப்பாவும் பாட்டியும் பேசியே என்னை ஒரு வழியாக்கிடுவாங்க. நாங்க இங்கேயே இருக்கோம்.” என்றார் மகேஸ்வரி. 

என்ன பேச்சு கேட்க வேண்டியது வருமோ என்ற அச்சத்தில் ராஜ் சென்றான். வெண்ணிலாவுக்குத் திருமணம் நடக்குமா தெரியாது. ஆனால் தன் அம்மாவுக்கு விவாகரத்துக் கிடைப்பது உறுதி. தேவையில்லாத வேலை அம்மா செய்கிறார் என நினைத்தான். 

இது எதுவும் தெரியாது, வெண்ணிலா இங்கேயே இருக்கப் போகும் மகிழ்ச்சியில் சந்தோஷமாக இருந்தாள். கண்டிப்பாக ஜெய் உண்மையைச் சொல்லி கேட்டிருந்தால்.. ஒத்துக் கொண்டிருக்கவே மாட்டாள். அவள் அப்பா மற்றும் பாட்டிக்கு அவ்வளவு பயம். அது தெரிந்து தான் ஜெய் மாற்றிக் கேட்டான். 

எதுவாக இருந்தாலும் வருவதைப் பார்க்கலாம் என ஜெய் இருந்தான்.

Everything is fair in Love and War.

Advertisement