Advertisement

எந்தன் காதல் நீதானே

அத்தியாயம் 3 

கரன் பேசியது பற்றி வெண்ணிலா வீட்டில் ஒன்றும் சொல்லவில்லை. அவன் அவளிடமே விளக்கமாக ஒன்றும் சொல்லவில்லை. பிறகு அவள் என்னவென்று சொல்லுவாள். 


மூன்று நாட்களாகக் கரனை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவனுக்கு எதோ ஆகி விட்டது என அவன் பெற்றோர் பதற… இந்தத் திருமணத்தை நிறுத்த அவன் எதோ முடிவு செய்து விட்டான் என வெண்ணிலாவுக்குப் புரிந்தது. 

அவன் வீட்டில் சொன்ன போது எல்லாம் பேசாமல் இருந்துவிட்டு.. இப்போது திருமணம் நெருங்கும் வேளையில், அவன் பின்வாங்கியது எவ்வளவு பெரிய துரோகம். 

இவனின் அம்மாவின் ஆசைக்காகத் தானே… வெண்ணிலாவின் பெற்றோர் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்தனர். ஆனால் யாரைப் பற்றியும் நினைக்காமல் கரன் சுயநலமாக முடிவெடுத்தது வெண்ணிலாவால் ஏற்கவே முடியவில்லை. 

மகனுக்கு எதோ ஆகிவிட்டது என அன்பரசி பயந்து விட்டார். கரனை தேடிக்கொண்டு சென்னைக்குக் கிளம்பினர். கரனின் பெற்றோரோடு வெண்ணிலாவின் அண்ணன் யுவராஜும் சென்றான். 

சென்னையில் கரன் நண்பர்களோடு தான் தங்கி இருந்தான். அதனால் அவன் தனியிருந்த வீட்டிற்கே சென்றனர். முதலில் தெரியாது எனச் சொல்லி விடுவோம் என்றுதான் நண்பர்கள் நினைத்தனர். ஆனால் அவர்கள் போலீஸ்க்கு செல்லப் போவதாகச் சொல்ல… கரன் வெளிநாட்டில் வேலை கிடைத்து சென்று விட்டான். அவனே உங்களைத் தொடர்பு கொள்வான் என்றனர். 

மகனுக்கு எதோ நடந்து விட்டது எனப் பயந்திருந்த பெற்றோருக்கு அவன் நலமாகத் தான் இருக்கிறான் என்றதும், மற்றது பின்னுக்குச் சென்றுவிட்டது. ஆனால் யுவராஜ்க்கு தங்கையின் வாழ்க்கை முக்கியம் அல்லவா… 

“விருப்பம் இல்லைனா முன்னாடியே சொல்றதுக்கு என்ன? இப்ப வெண்ணிலாவுக்கு என்ன பதில்?” என யுவராஜ் கொதிக்க… 

“அவன் அதுக்குள்ள வந்திடுவானா இருக்கும். அதெல்லாம் கண்டிப்பா வந்திடுவான்.” என அன்பரசி சொல்ல.. யுவராஜுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் உண்மையில் அன்பரசி அப்படித்தான் நம்பிக் கொண்டு இருந்தார். 

ஐந்து நாட்கள் சென்றுதான் கரன் அழைத்தான். அவனின் நலம் விசாரித்த அன்பரசி, “ஏன் டா வெளிநாடு போறவன் சொல்லிட்டு போக மாட்டியா?” என… 

“எனக்கு எவ்வளவு பெரிய கம்பெனியில வேலை கிடைச்சிருக்கு தெரியுமா? சொன்னா விடுவீங்களா?”

“எப்ப வருவ… கல்யாணத்துக்கு நாலு நாள் முன்னாடி வந்திடுவியா?” எனக் கேட்க, 


“நான் வந்திருக்கிறது அமெரிக்கா… அப்படி உடனே எல்லாம் திரும்பி வர முடியாது.” 

“என்ன டா சொல்ற அப்ப கல்யாணம்.” 

“நான் ஒரு வருஷத்துக்கு அங்க வர்றதா இல்லை.” 

“டேய் பத்திரிகை அடிச்சுப் பாதிப் பேருக்கு கொடுத்த பிறகு இப்படிச் சொன்னா எப்படி டா?” 

“நான் ரொம்ப நாள் இந்த வேலைக்காகக் காத்திருந்தேன். இனி வராதுன்னு நினைச்சு தான் கல்யாணத்துக்குச் சரின்னு சொன்னேன். ஆனா இப்ப இந்த வாய்ப்பு வந்திடுச்சு. சொன்னா விட மாட்டீங்க. அதனாலதான் சொல்லலை…” 

“அப்ப கல்யாணம்.” 

“அது என்ன கொஞ்ச நாள் கழிச்சுப் பண்ணா போச்சு.” எல்லா அதிர்ச்சியும் ஒரே நேரத்தில் கொடுக்க வேண்டாம் என நினைத்து கரன், மற்றதை மறைத்தான். 

“டேய் கல்யாணத்தைப் பண்ணிட்டுப் போயிருக்கக் கூடாதா? நான் உன் மாமாவுக்கு என்ன பதில் சொல்வேன். கல்யாணம் நின்னா அவருக்கு எவ்வளவு அவமானம். எப்படியாவது வந்து கல்யாணத்தை பண்ணிட்டு போ டா…”

“எதாவது சமாளிங்க மா… இனி ஒன்னும் பண்ண முடியாது.” 

“போ டா… உன்னை நம்பினத்துக்கு எங்களை இப்படி நட்ட ஆத்துல நிறுத்திட்ட…” என ஆத்திரமாகச் சொல்லிவிட்டு அன்பரசி வைத்து விட்டார். 

அன்பரசியும் அவர் கணவரும் வீட்டிற்கே வந்து கரன் சொன்னதைச் சொல்ல… 

“அப்ப அவன் வந்ததும் கல்யாணத்தை வச்சுப்போமா?” எனக் கற்பகம் கேட்க,  

“அம்மா, அப்படி வெண்ணிலாவை கல்யாணம் பண்றவனா இருந்தாதான், கல்யாணத்துக்குப் பிறகு வெளிநாடு போயிருப்பானே… இனி அவனே வந்தாலும், நான் ஏன் பெண்ணைக் கொடுக்க மாட்டேன்.” என்றார் ராஜகோபால். 

“இல்லை பா…” எனக் கற்பகம் எதோ சொல்ல வர… 

“போதும், நீங்க எல்லாம் பண்ணின வேலை தான். சின்ன வயசுலேயே பேசி வச்சது. நானும் அப்ப பார்க்கலாம்னு சொல்லாம, உங்க பேச்சுக்கு தலையாட்டினேன் பாருங்க, என்னைச் சொல்லணும்.” 

“இனி எதுவும் பேசாதீங்க.” என ராஜகோபால் கோபமாகச் சொல்ல… 

“அத்தை உங்க மகனை வெளிநாட்டிலேயே இருக்கச் சொல்லுங்க. வந்தா அவனுக்கு என் கையாள தான் சாவு. கல்யாணத்துல இஷ்ட்டம் இல்லைனா நிச்சயத்துக்கு முன்னாடி சொல்லி இருக்கலாம் இல்ல… இப்ப நாங்களும் இல்ல சேர்ந்து அசிங்கப்படனும்.” என யுவராஜும் நன்றாகப் பேசிவிட…
கணவனும் மனைவியும் மகன் செய்த செயலுக்குத் தலை குனிந்தபடி வீடு திரும்பினர். 

மகளின் திருமணம் இப்படி நின்று போகும் என ராஜகோபாலும் மகேஸ்வரியும் நினைக்கவே இல்லை. பெருத்த அதிர்ச்சி அவர்களுக்கு. ஊரில் பெரிய மனிதர் ராஜகோபால், வெளியே செல்லவே சங்கடப்பட்டு அவர் வீட்டுக்குள் அடைந்து கிடக்க..

மகேஸ்வரி கண்ணீரும் கம்பலையுமாக இருக்க… பெற்றோரின் நிலை பார்த்து வெண்ணிலாவுக்கு மிகுந்த துயரம். 


“என்னால தானே மா உங்களுக்கு இவ்வளவு கஷ்ட்டம்.” என அதைப் பார்த்து வெண்ணிலா வேறு ஒரே அழுகை. 

யுவராஜ் தான் திருமணம் இப்போதைக்கு இல்லை என பத்திரிகை வைத்தவர்களுக்கு எல்லாம் அழைத்து சொல்லிக் கொண்டிருந்தான். 

கரன் வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருந்தால் கூட… இதுதான் காரணம் எனத் தெரிந்திருக்கும். அவன் பாட்டிற்குச் சொல்லாமல் வெளிநாடு சென்றது, இங்கே எல்லோரின் பேச்சும் வெண்ணிலாவை தான் பதம் பார்த்தது. 

இதில் கற்பகம் வேறு, பேரன் செய்த தவறை அப்படியே பூசி மொழுகி பேச… எல்லோரும் வெண்ணிலாவை தான் சந்தேகமாகப் பார்த்தனர். 

“போறவன் கல்யணம் பண்ணிட்டு போய் இருக்கலாமே… இந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்ட்டம் இல்லையோ.” 

“ஒரு வேளை பெண்ணுக்கு எதுவும் காதலோ… அது தெரிஞ்சு பையன் வேண்டாம்ன்னு போயிட்டானோ… இப்படி ஆளுக்கு ஒன்று பேச…” வெண்ணிலா வீட்டினர் மனம் உடைந்து போனார்கள். 

“பேரன் ஒரு வருடம் கழித்து வருவான்… வந்து எப்படியும் வெண்ணிலாவை திருமணம் செய்வான்.” எனக் கற்பகம் வாய்வட… 

“போதும் உங்களையும் உங்க மகளையும் நம்பி என் பொண்ணு வாழ்க்கையை ஒப்படைச்சத்துக்கு என்ன பண்ணணுமோ பண்ணிட்டீங்க. திரும்ப உங்க பேரனுக்கு என் பெண்ணைச் செய்யணும்ன்னு பேச்சை ஆரம்பிச்சிசீங்க அவ்வளவு தான்.” 

“எங்க பொண்ணு வாழ்க்கை அதை நாங்க பார்த்துக்கிறோம்.” என மகேஸ்வரி ஆத்திரமாகச் சொல்ல.. 

“பார்த்தியா டா உன் பொண்டாட்டி எப்படிப் பேசுறான்னு. எங்களுக்கு வெண்ணிலா வாழ்க்கை மேல அக்கறை இல்லையா” எனக் கற்பகம் அப்போதும் அதை ஒரு பிரச்சனையாக்க… 

“என்னால ஏன் நீங்க சண்டை போடுறீங்க. நான் வேணா செத்து போறேன்.” என்ற வெண்ணிலா, அறைக்குள் சென்று கதவை சாற்றிக் கொண்டாள். 

வெண்ணிலா கோபத்தில் தான் கதவை மூடினாள். ஆனால் அவள் ஏதோ தவறான முடிவு எடுத்தது போலக் கற்பகம் போட்ட சத்தத்தில், அந்நேரம் வீட்டிற்கு வந்த உறவினர், அக்கம் பக்கம் இருந்தவர்கள் என வாசலில் ஒரு கூட்டமே கூடி விட்டது. 
எல்லோரும் கதவை தட்ட, வெண்ணிலா அவளாகவே கதவை திறந்து விட்டாள். 

“அவனுக்குக் கொடுப்பினை இல்லைடா தங்கம், நீ ஏன் உயிரை விடணும்.” எனக் கற்பகத்தின் பாசம் கூட வெண்ணிலாவுக்குப் பாதகமாகவே அமைந்தது. இவள் எதோ கரனோடு கல்யாணம் நின்றதற்காகச் சாகத் துணிந்தது போல ஆனது. 

“பாட்டி நீங்க கொஞ்சம் பேசாம இருக்கீங்களா… அவ நல்லாத்தானே இருக்கா.” என யுவராஜ் போட்ட சத்தத்தில் தான் கற்பகம் அடங்கினார். 

“இங்க இருந்தா உங்க அம்மா வரப் போறவங்ககிட்ட புலம்பியே என் பெண்ணைக் கொன்னுடுவாங்க. நான் என் அண்ணன் வீட்டுக்கு போறேன்.” என மகேஸ்வரி சொல்ல… சில நாட்கள் வெண்ணிலா இங்கில்லாமல் இருப்பது நல்லது என நினைத்த ராஜகோபால், சரியென்று அப்போதே மனைவி மகளை மகனின் துணையோடு காரில் ஊருக்கு அனுப்பி வைத்தனர். 

கற்பகம் அப்போதும் அவர்களைத் தடுக்கவே பார்த்தார். “அங்க போறதுக்கு நம்ம சின்னவ வீட்டுக்கு போகலாமே.” என அவர் சொல்ல.. மகேஸ்வரி அவரை முறைத்த முறைப்பில் வாயை மூடிக் கொண்டார். 

யுவராஜ் அம்மாவையும் தங்கையையும் இறக்கி விட்டு அப்பாவின் துணைக்காக உடனே ஊர் திரும்பி விட… மன அமைதிக்காக வந்த தங்கையையும், அவள் மகளையும் அந்தக் குடும்பம் தாங்கிக் கொண்டது. 

வெண்ணிலா வரும் போது, ஜெய் வீட்டில் இல்லை. எப்படி அவளைப் பார்ப்பது என்றுதான் வராமல் தள்ளி போட்டுக் கொண்டே இருந்தான். இரவு வீடு திரும்பியவனிடம், மகேஸ்வரி ஒரு மூச்சு எல்லாவற்றையும் சொல்லி அழ… 

“கரன் முன்னாடியே சொல்லி இருக்கலாம். ஆனா இஷ்ட்டம் இல்லாதவனுக்குக் கட்டி வச்சாலும், அவன் பின்னாடி இப்படிப் பண்ணி வச்சா.. நம்ம பெண்ணுக்கு எவ்வளவு பாதிப்பு. அந்த வகையில தப்பிச்சிட்டதா நினைங்க அத்தை.” 

“ஆமாம் நீ சொல்றதும் சரிதான்.” 

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது வெண்ணிலா அங்கு இல்லை. அவளைப் பார்க்க ஜெய் அவளைத் தேடி செல்ல… அவள் மாடி தோட்டத்தில் நின்று வானத்தை வெறித்துக் கொண்டு இருந்தாள் . 

சிறிது நேரம் நின்று பார்த்த ஜெய், அவள் பார்வை படும் இடத்தில் சென்று நிற்க, யாரோ என நினைத்து பார்த்தவள், ஜெய் என்றதும், அன்று அவனைப் போல, இன்று அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்ல… ஜெய்க்குச் சிரிப்பு தான் வந்தது. 

இரண்டு நாட்கள் வீடே சோகத்தில் மூழ்கிக் கிடக்க… மதிய உணவுக்கு வந்த ஜெய், வீட்டினர் ஆளுக்கு ஒருபுறம் படுத்து கிடப்பதைப் பார்த்தவன், 

“இப்ப என்ன ஆச்சுன்னு ஆளுக்கு ஒருபக்கம் இப்படிப் படுத்து கிடக்கீங்க.” என்றவன், “எங்கே வெண்ணிலா?” என சத்தமாகக் குரல் கொடுக்க… 

முற்றத்தில் இருந்த கல்லில் படுத்து கிடந்தவள், அவன் குரல் கேட்டு எழுந்து உட்கார்ந்தாள். அவளிடம் வந்தவன், “எதுக்கு இப்ப இவ்வளவு சோகம்? அவன் என்ன செத்தா போயிட்டான்.” 

“உனக்கு அவன்தான் வேணுமா சொல்லு… வா இப்பவே உன்னைக் கொண்டு போய் அவன்கிட்ட விடுறேன்.” என வெண்ணிலாவின் கைப்பற்றி இழுக்க, 

அவனிடம் இருந்து விலகிய வெண்ணிலா, “நான் உங்ககிட்ட அப்படிச் சொன்னேனா?” என்றாள் அவனை முறைத்துக் கொண்டு. 

“அப்ப ஒழுங்கா இரு. நீ இப்படி இருந்தா… உன்னைப் பார்த்து அத்தையும் அழுகிறாங்க.” என அவன் சொல்ல, வெண்ணிலா அவன் சொன்னதுக்குப் பதில் சொல்லாமல் இருக்க.. ஒரு தோள் குலுக்கலுடன் அங்கிருந்து சென்றான். ஆனால் அதன் பிறகு அவள் சாதரணமாக இருக்க… மகளைப் பார்த்து மகேஸ்வரியின் கண்ணீரும் நின்றது. 

“அண்ணே நான் ஒன்னு சொல்வேன், நீங்க மறுக்கக் கூடாது.” என மகேஸ்வரி தனது மூத்த அண்ணனிடம் தனிமையில் கேட்க, 

“என்னன்னு சொல்லு?” என்றார். 

“குறிச்ச முஹுர்த்தத்தில ஜெயிக்கும் வெண்ணிலாவுக்கும்  கல்யாணத்தை முடிச்சிடலாமா?” 

“இதை நீயும் நானும் முடிவு பண்ணா போதுமா? உன் வீட்டு ஆளுங்க எதோ இங்க ஒரு மாறுதலுக்காக உங்களை இங்க அனுப்பி வச்சிருக்காங்க. பொண்ணு கேட்டு அந்த மரியாதையும் குறைச்சுக்கச் சொல்றியா?” 

“ஏற்கனவே ஜெய்க்கு வெண்ணிலா மேல எவ்வளவு விருப்பம்னு உனக்குத் தெரியும்.” 

“இந்த வீட்டை அவன் அவசரமா கட்டினதுக்கு காரணமே, நாங்க நல்லா இருக்கிறதை பார்த்தாவது, உங்க வீட்ல வெண்ணிலாவை தனக்குக் கொடுக்க மாட்டாங்களான்னு ஆசையில தான்.” 

“ஆனா உன் வீட்டு ஆளுங்க, இந்த வீடு பால் காய்ச்ச கூட வராம அவமானப் படுத்தினாங்க. வெண்ணிலாவை பொண்ணு கேளுங்கன்னு நின்னவனை சரி கட்டுறதுகுள்ள, நாங்க அந்தப் பாடு பட்டோம்.” 
“கேட்டா உங்க வீட்ல கொடுக்க போறாங்களா… அதுவும் தங்கச்சி வீட்ல பேசி வச்சிருக்கும் போது.” 

“வெண்ணிலா கல்யாணம் முடியாம அவன் யாரையும் கட்ட சம்மதிக்க மாட்டான். அது தான் வெண்ணிலா கல்யாணம் முடியட்டும்ன்னு இருந்தோம். ஆனா இப்ப வெண்ணிலா கல்யாணம் வேற நின்னு போச்சு…” 

“அவன் எந்த நினைப்புல இருக்கான்னே தெரியலை…” 

“இதுல நான் பொண்ணு கேட்டு, உன் வீட்டு ஆளுங்க மறுத்திட்டா… அவன் ரொம்ப உடைஞ்சு போயிடுவான்.”

“இது சரி வராது. உன் ஆசையை விட்டுடு.” எனச் சொல்லிவிட்டு ஜெயராமன் சென்று விட… 


தான் பெற்ற பெண்ணுக்கு, மாப்பிள்ளை பார்க்கும் உரிமை கூடத் தனக்கு இல்லாது போனது நினைத்து மகேஸ்வரி வருந்தினார். 

அன்று வெண்ணிலாவுடன் பேசியது தான். அதன் பிறகு ஜெய்யும் அவளுடன் பேசவில்லை. அவளும் அவனைக் கண்டுகொள்ளாமல், அகல்யா மற்றும் ராதிகாவுடன் நேரத்தை செலவு செய்தாள். 

என்ன டா இவ கல்யாணம் பண்ணிட்டு போயிடுவான்னு பார்த்தா, இங்க வந்து உட்கார்ந்திருக்கா… ஜெய் தனக்கு இல்லாமல் போய் விடுவானோ என்ற கவலையில் கவிதா இருந்தாள். 

Advertisement