Advertisement

“எங்கங்க இருக்கீங்க?” 

“நீ வெளியில வா…” என ஜெய் கைப்பேசியை வைத்து விட, 

“அவர்தான் வெளியில வர சொல்றார்.” என்றவள், மகனை கற்பகத்திடம் இருந்து வாங்கிக் கொண்ட வாயிலுக்கு விரைந்தாள். 

“பார்த்து போ விழுந்து வைக்காத.” கற்பகம் சொன்னதை அவள் காதில் வாங்கினால் தானே…. கணவனைக் காணும் ஆவலில் வாயிலுக்கு விரைந்திருந்தாள்.

வெளியே ஜெய் ஒரு புத்தம் புதுக் காரின் முன்பு நின்றிருந்தான். வெண்ணிலாவுக்கு அப்போது கூடக் கணவன் மட்டும் தான் கண்ணுக்குத் தெரிந்தான். 

“வாங்க…” என அவனைப் புன்னகையுடன் வரவேற்றவள், காரின் பின்னிருக்கையில் இருந்த தனது மாமியார்களையும் வரவேற்றாள். காரில் இருந்து இறங்கிய அமுதா, அவள் கையில் இருந்த பேரனை வாங்கிக் கொண்டார். 

அவர்களை உள்ளே அனுப்பி விட்டு, ஜெய் அங்கேயே நின்றவன், மனைவியின் முகத்தையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். 

“வாங்க உள்ளே போகலாம்.” என வெண்ணிலா அழைக்க, 

“ம்ம்… முதல்ல நீ காரைப் பாரு.” என்றான். பிறகே காரில் இருந்த ரிப்பனை கவனித்தாள். 

“புதுக் காரா… புகழ் அண்ணா வாங்கி இருக்காங்களா?” என்றதும், ஜெய் அவளை முறைக்க, 

“நீங்க வாங்கி இருக்கீங்களா?” என்றவளின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிய…. 

“கார் எப்படி இருக்கு? உனக்குப் பிடிச்சிருக்கா?” எனக் கேட்டான். 

“சூப்பரா இருக்கு. ஆமாம் எதுக்கு இப்ப கார் வாங்கினீங்க?” 

“உனக்குதான் பஸ்ல போனா ஆக மாட்டேங்குதே…. உனக்காகத்தான் வாங்கினேன்.” என்ற கணவனைப் பெரிமிதமாகப் பார்த்தவள், காரை நன்றாகச் சுற்றிப் பார்த்தாள். 

“வா ஒரு ரவுண்டு போகலாம்.” என ஜெய் அழைக்க, 

“இருங்க வீட்ல சொல்லிட்டு வரேன்.” என்றவள், உள்ளே சென்று ஜெய் கார் வாங்கி இருப்பதை எல்லோருக்கும் சொன்னவள், “நாங்க ஒரு ரவுண்டு போயிட்டு வரோம்.” என மகனை வாங்கிக்கொள்ள, அவளோடு மற்றவர்களும் வந்து காரைப் பார்த்தனர். 

இப்போது வந்த புது மாடல் கார். வெண்ணிலா முன் இருக்கையில் மகனை மடியில் வைத்து உட்கார்ந்து கொள்ள, ஜெய் காரை எடுத்தான். 

“இப்ப தானே அகல்யா கல்யாணத்துக்கு நிறையச் செலவு பண்ணீங்க. அதுக்குள்ள கார் வாங்கணுமா?” 

“நான் என்ன அகல்யா கல்யாணத்துக்குக் கடனா வாங்கினேன். தோட்டம் போட வாங்கின பணம் தானே… இப்ப தோட்டம் போட்டு முடிச்சு, மீதி பணமும் வாங்கிட்டேன்.” 

“பாதிப் பணம் கொடுத்திட்டு மீதிக்கு லோன் போட்டிருக்கேன்.” 

“இல்லை ராதிகாவுக்கும் செய்யணும். அகல்யா கல்யாணத்துல மாதிரி கடைசி நேரம் வரை பணம் புரட்டாம முன்னாடியே சேர்த்து வச்சா நல்லது தானே.” 

“ராதிகாவுக்குத் தானே செய்யலாம். அடுத்த முறை பெரிய தொகை வரும் போது அவளுக்கு எடுத்து வச்சிடுறேன்.” 

“ஒன்னு புரிஞ்சிக்கோ வெண்ணிலா… காதலிக்கிறது கல்யாணம் பண்ணிக்கிறதோட முடிஞ்சதுன்னு இருக்கக் கூடாது. கல்யாணம் பண்ணி கூட்டி வந்த பெண்ணை நல்லா வாழவும் வைக்கணும். நீ உங்க வீட்ல வசதியா வளர்ந்த பொண்ணு. எங்க வீட்லயும் அப்படி இருந்தா தானே… உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கும் சந்தோஷமா இருக்கும்.” 

“என்னோட சந்தோஷத்துக்காக நீங்க கஷ்ட்டப்பட்டு எதுவும் செய்யாதீங்க.” 

“கஷ்ட்டமெல்லாம் எதுவும் இல்லை. நீ வீணா குழப்பிக்காத. அகல்யா கல்யாணம் முடிஞ்சதும் கார் வாங்கனும்னு முன்னாடியே நினைச்சிருந்தேன்.” 

கணவனும் மனைவியும் பேசியபடி காரில் சென்றவர்கள்,  வெண்ணிலா ஐஸ் கிரீம் கேட்க, ஜெய் ஒரு இடத்தில் நிறுத்தி வாங்கிக் கொடுத்தான். விரலால் சிறிது ஐஸ்கிரீம் எடுத்து வெண்ணிலா மகனின் வாயில் வைக்க,, அதன் ருசி பிடித்து, அர்ஜுன் வாயை சப்புக் கொட்ட, கணவனு மனைவியும் அதைப் பார்த்து ரசித்துச் சிரித்தனர். 

மற்றவர்களுக்கும் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு காரில் வீடு திரும்பினர். ஜெய்யைப் பார்த்தும் மகேஸ்வரி உணவு உண்ண அழைக்க, வெண்ணிலாவும் கற்பகத்திடம் மகனை கொடுத்து விட்டு கணவனுடன் உணவு உண்ண அமர்ந்தாள். 

மற்றவர்கள் முன்பே உண்டிருக்க, யுவராஜா இவர்களுடன் உணவு அருந்தினான். யுவராஜ் அப்போது சொன்னது போலவே, இப்போதும் கரண் திருமணம் வரை வெண்ணிலா இங்கே இருக்கலாம் எனச் சொல்ல, என்னவோ எனக் கேட்டுக்  கொண்டிருந்த ஜெய் புரிந்த நொடி, உண்பதை நிறுத்திவிட்டு, “உனக்கு ஏன் என் மேல கொலை வெறி?” என்றவன், “இப்போதான் கார் இருக்கே. நான் உன் தங்கையை அப்போ கண்டிப்பா கூட்டிட்டு வரேன்.” என்றதும், வெண்ணிலாவும் யுவராஜும் சிரித்து விட்டனர். 

அவர்கள் சிரித்ததும் ஜெய் கண்டு கொண்டான். “சும்மா என்னை டென்ஷன் பண்ணவா.” என்றதும், யுவராஜ் வெண்ணிலா பதறி அடித்துப் பயந்து போனதையும் சொல்ல… ஜெயிக்கும் ஒரே சிரிப்பு. 

ஜெய் உணவு உண்டு ஹாலில் இருந்தவன், கரனோடு ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசவும் செய்தான். அதற்குள் வெண்ணிலா மகனுக்குப் பால் கொடுத்து, உடை மாற்றித் தானும் தயாராகிக் கிளம்பி இருந்தாள்.

“இனி இந்தக் குட்டி இல்லாம வீடே வெறிச்சுன்னு இருக்குமே.” என்றபடி மகேஸ்வரி பேரனை வாங்க, ராஜகோபால் கற்பகம் என அர்ஜுனை மாற்றி மாற்றிக் கொஞ்சியர்கள், குழந்தைக்குத் திருநீறு பூசி கையில் பணமும் கொடுத்தனர். யுவராஜ், அன்பரசி, கரணும் திருநீறு பூசி பணம் கொடுக்க, அதுவே சிறிது நேரம் சென்றது. 


பெட்டி பைகள் அர்ஜுனுக்கு இவர்கள் வாங்கிய விளையாட்டுச் சாமான்கள். வெள்ளி சீர்வரிசை எனக் காரின் பின் பகுதி நிறைந்து விட, அன்பரசி பேரனை வைத்துக் கொண்டு பின் இருக்கையில் அமர, அவருடன் காமாட்சியும் உட்கார்ந்துகொள்ள, வெண்ணிலா எல்லோரிடமும் விடைபெற்று கணவனுடன் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு சென்றாள். 
கார் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்து விட்டு, எல்லோரும் வீட்டிற்குள் சென்றனர். 

“நான் இப்படித்தானே மகன், மருமகள், பேரப் பிள்ளைன்னு இருக்கனும்னு நினைச்சேன். இவன் எல்லாத்தையும் கெடுத்தானே….” என அன்பரசி வருந்த, 

“யாருக்கு எங்கையோ அங்கதான் அமையும். வெண்ணிலா கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கிறது போல, கரணும் இருப்பான் அண்ணி.” என மகேஸ்வரி சொல்ல, 

“எங்க அண்ணி சந்தோஷமா இருக்கிறது. இவன் ஒரு இடத்தில, நாங்க ஒரு இடத்தில. அங்க நாங்க போகவே ஒரு நாள் ஆகுமாம். அதுவும் ஆறு மாசம் தான் இருக்க முடியும். என் வாழ்க்கை காடு ஆறு மாசம், நாடு ஆறு மாசமுன்னு இருக்கும் போல….இங்க வந்து நாங்களும் ஒத்தையில தானே இருக்கணும்.” என்றதும்,
கற்பகம் மகளைப் பாவமாகப் பார்த்தவர், “எல்லாம் இவனால. உங்க அம்மா உன்னை நினைச்சு எவ்வளவு கற்பனை செய்திருந்தா… இப்படி எதையும் இல்லாம பண்ணிட்டியே. ஆனா ஒன்னு வெண்ணிலா உன்னைக் கல்யாணம் பண்ணி இருந்தா கூடச் சந்தோஷமா இருந்திருப்பாளா தெரியாது. ஆனா இப்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கா… அவளை அப்படித் தாங்கிற புகுந்த வீடு. நீ உங்க அம்மாவைதான் ஏமாத்திட்ட.” எனப் படபடப்பாகப் பேச… 

“பாட்டி நீங்க அமைதியா இருங்க. அத்தை நீங்க ஏன் கவலைப்படுறீங்க. உங்களுக்கு நாங்க இருக்கோம். நீங்க இங்க இருக்கும் போது நான் உங்களைப் பார்த்துகிறேன்.” என யுவராஜ் சொல்ல, தன்னுடைய வெளிநாட்டு வேலையோ வசதியோ வாய்ப்போ எல்லாம் இங்கே யாருக்கும் பெரிதாகத் தெரியவில்லை என்பது கரணுக்கு எரிச்சலாக இருந்தது. 

பணம் மட்டுமே எப்போதும் மகிழ்ச்சியைத் தராது என்பதை அவன் உணரும் காலமும் வரும். 

இவர்கள் ஊர் போய்ச் சேர்ந்த போது, இரவு உணவுவேளை நெருங்கி இருக்க, மொத்த வீடும் இவர்கள் வருகைக்காக ஆவலுடன் வெளியவே நின்றிருந்தனர். 

ராதிகா கொண்டு வந்த ஆரத்தியை வாங்கிக் காமாக்ஷி எடுக்க, யார் முதலில் அர்ஜுனை தூக்குவது என யஸ்வந்த், சத்யா, ராதிகாவுக்கு நடுவில் பெரிய போட்டியே இருக்க… மூவரும் போடும் போட்டியைப் பார்த்து மகனை கொடுக்கலாமா… இல்லை வந்த வழியிலேயே ஓடி விடலாமா என்பது போல வெண்ணிலா நிற்க, 

“பயப்படாம கொடு… இனி அவன் இங்கே தானே இருப்பான். அவனும் எல்லாத்துக்கும் பழகிப்பான்.” என ஜெய் சிரித்து விட்டு உள்ளே செல்ல, மூவரில் யாரிடம் கொடுத்தாலும், மற்றவர் கோபிப்பர் என்பதால்…வெண்ணிலா தனது மாமனார் ஜெயராமனிடம் மகனை கொடுத்து விட்டு தப்பித்து உள்ளே சென்றுவிட்டாள்.

Advertisement