Advertisement

எந்தன் காதல் நீதானே

அத்தியாயம் 25 

ஜெய் எவ்வளவு நேரம் ஹாலில் உட்கார்ந்து மாமனார் மைத்துனனுடன் பேசிக் கொண்டிருப்பான். அவன் பொறுமை குறைந்து கொண்டிருக்க, மனைவியை கைப்பேசியில் அழைத்தான். 

அதிக நேரம் எல்லாம் தனது கோபத்தைக் காட்ட முடியாது என வெண்ணிலாவுக்குமே தெரியும். கணவன் அழைக்கும் போதே சென்று விடுவோம், இல்லயென்றால் அவன் சரிதான் போடி என்று கிளம்பி விடுவான் என நினைத்தவள், அறையை விட்டு வெளியே வந்து, மகனை ஜெய்யின் மடியில் கிடத்திவிட்டு, மகேஸ்வரிக்கு உதவுவது போலச் சமையல் அறையில் சென்று நின்று கொண்டாள். 

மனைவி கண்ணை விட்டுச் மறையும் வரை அவளையே பார்த்திருந்தவன், பிறகு மடியில் கிடந்த மகனிடம் பார்வையைத் திருப்பினான். 

கால்களை உதைத்தபடி மலர்ந்த முகத்துடன் கட்டை விரலை வாயுக்குள் நுழைத்துக் கொண்டிருந்தது அவனது வாரிசு.பால் நிற தேகம், நெற்றியிலும் கன்னத்திலும் பெரிய கருப்பு பொட்டு வைத்து, கையில் வசம்பு கயிறுடன் தங்க காப்பும், காலில் வெள்ளித் தண்டையும் அணிந்து, முன்பு பார்த்ததற்கு இப்போது நன்றாகவே வளர்ந்து இருந்தான். 

மகனைப் பார்த்ததும் மற்றது பின்னுக்குச் சென்று விட, மகனை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றவன், அவனைக் கட்டிலில் படுக்க வைத்து தானும் அருகில் படுத்து அவனைக் கொஞ்சுவதும், பேசுவதுமாக இருந்தான்.

மகனோடு இருந்ததும் நேரம் போனதே தெரியவில்லை. அவனது அத்தை வந்து இரவு உணவு உண்ண அழைக்க, கற்பகத்திடம் மகனை கொடுத்து விட்டு மாமனார் மைத்துனன் உடன் உணவு உண்ண அமர்ந்தான். 

“அப்பா, நீங்க அத்தை சொன்னதை நம்புறீங்களா? கரண் கூட வேலைப் பார்க்கிறவர் சொல்லிதான் இந்தச் சம்பந்தம் வந்ததுன்னு.” என யுவராஜ் கேட்க, 

“என்னவாவது இருந்திட்டு போகட்டும் நமக்கு என்ன வந்தது?” என்றார் ராஜகோபால் அக்கறை இல்லாமல். 

இரவு உணவுக்குப் பிறகு ஜெய் ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்தவன், வெண்ணிலா உண்டு விட்டு அறைக்கு வரவும் அவனும் எழுந்து உள்ளே சென்றான். வெண்ணிலா நைட்டி மாற்றி விட்டு வந்த பிறகு தான் அவனிடம் பேசவே செய்தாள். 

“என்ன சந்தேகமெல்லாம் போச்சா?” என அவள் கேட்க, ஜெய் புரியாமல் பார்த்தவன், 

“நான் சொன்ன விளக்கமெல்லாம் திருப்தியா இருந்துச்சா…. இல்லைனா இன்னும் நம்பலையா?” என வெண்ணிலா கேட்டதும் புரிந்து கொண்டவனுக்கு, சட்டென்று கோபம் உச்சிக்கு செல்ல, 

“யாருடி உன்னைச் சந்தேகப்பட்டா? எதாவது தெரியாம பேசின, அறைஞ்சிடுவேன் ஜாக்கிரதை.”  

“என்னைப் பார்த்ததும் பாதியில நிறுத்திட்ட, உன் அத்தைங்க அதையும் அறையும் கொறையுமா புரிஞ்சிட்டு, நீ இன்னும் உன் அத்தை மகனுக்குச் சப்போர்ட்டுக்கு வரன்னு நினைச்சிட போறாங்கன்னு தான் பேச சொன்னேன்.” 

“அதுக்குள்ள என்னை எவ்வளவு கேவலமா நினைச்சிட்ட.” 

அவன் பேச்சுச் செல்லும் பாதையை உணர்ந்தவள், “கேவலமா எல்லாம் ஒன்னும் நினைக்கலை… நீங்களா எதாவது சொல்லாதீங்க.” என்றாள். 

“அதை விடு வந்ததும் கதவை சாத்திட்டு ரூம்குள்ள உட்கார்ந்திட்டியே…. நான் அப்படியே போயிருப்பேன், உங்க அப்பா இருந்தாறேன்னு விட்டுட்டேன்.” 

“ம்ம்… இத்தனை நாள் கழிச்சு தான எங்களை நியாபகம் வந்தது. நீங்க பொறுமையா தானே பார்க்க வந்தீங்க. நானும் எனக்கு எப்ப தோணுதா அப்ப வந்து பேசலாம்னு இருந்தேன்.” 

“நல்லா விளக்கம் சொல்ற டி.” என்றவன், சற்று நேரம் மெளனமாக இருந்தான். 

“குழந்தையைப் பார்க்க யாராவது வீட்டுக்கு வர்றாங்க. அத்தைக்கு ஏற்கனவே ரொம்ப வேலை. இதுல நானும் வந்து உட்கார்ந்துகிட்டா அவங்களுக்கு மேலும் கஷ்டம் தானே.” 

“நீங்க இதுக்காத்தான் வரலையா…. நான் கூடத் தோட்டம் போடுற வேலையோன்னு நினைச்சேன். அப்ப நீங்க சும்மா இருந்திட்டே வரலை. இதை என்னை நம்பச் சொல்றீங்க.” 

“ஆமாம் டி தோட்டம் போடுற வேலை இருந்துச்சு தான் இல்லைன்னு சொல்லலை.” எனக் கணவன் சொன்னதும், அதுதானே என்பது போல வெண்ணிலா பார்க்க, 

“வெண்ணிலா, நீ ஒன்னு புரிஞ்சிக்கோ… எனக்கு இப்பவும் உங்க வீட்டுக்கு வந்து சாதாரணமா இருக்க முடியலை. முன்னாடி எல்லாம் எங்களை வேண்டாத விருந்தாளியா தான் இந்த வீட்ல இருக்கிறவங்க நடத்தினாங்க. இப்பவும் என்னால அதை ஒதுக்க முடியலை.” என்றதும், வெண்ணிலா கணவனின் அருகில் சென்று உட்கார்ந்தவள், “சரி விடுங்க எனக்குப் புரியுது. நான் வேணா நாளைக்கு உங்களோடவே வந்திடவா…” என்றாள். 

“இல்லை அஞ்சு மாசம் ஆகட்டும் பிறகே வா… இன்னும் கொஞ்ச நாள் தானே…” 

“நிஜமாதானே சொல்றீங்க. கோபம் ஒன்னும் இல்லையே…” 

“எனக்கு ஒன்னும் கோபமில்லை. நீதான் கோபமா இருந்த.” 

“சாரி… இந்த வாரம் வருவீங்க, அடுத்த வாரம் வருவீங்கன்னு பார்த்து ஏமாந்து போனேனா… அதுதான் உங்களைப் பார்த்ததும் காட்டிட்டேன்.” என்றவள், கணவனின் மடியில் தலை வைத்து படுத்துக் கொள்ள, ஜெய் மனைவியின் முகத்தை வருடிக் கொடுத்தான். 

அர்ஜுனும் மாலை உறங்கி எழுந்ததால்… இரவு வெகு நேரம் வரை உறங்காமல் இருக்க, மகனை நடுவில் படுக்க வைத்து இருவரும் நள்ளிரவு வரை பேசிக் கொண்டு இருந்தனர். மறுநாள் காலையே ஜெய் கிளம்பி சென்று விட்டான். 

இங்கே ஒருமாதிரி எல்லோரையும் தயார் செய்துவிட்டு, கரண் ஊருக்கு வந்திருந்தான். 
வெளிநாட்டில் இருந்து ஒரு மாதத்திற்கு முன்பே வந்திருந்தான். சென்னையிலேயே தங்கி இருந்தவன், பெற்றோர் திருமணத்திற்குச் சம்மதம் சொன்னதும்தான் இங்கே வந்தான்.
திருமணத்தை எப்படி நடத்துவது எனப் பேச்சு வர, அப்போதுதான் தனக்கு ஏற்கனவே பதிவு திருமணமாகி விட்டது என வாய்த் திறந்தான். 

அன்பரசி உடைந்தே போனார். கற்பகத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பேரன் செய்த செய்யலை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவனிடம் அழுது சண்டை பிடித்து எனக் கற்பகம் மிகவும் நொடிந்து போனார். 

“அவளுக்கு விசா வாங்கத் தான் அவசரமா பதிவு திருமணம் பண்ணோம். இப்ப அவளுக்கு அங்கேயே வேலை கிடைச்சிடுச்சு. அதுதான் உங்ககிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணோம்.” என்றவன், 

“என்னை விட அவளுக்குத்தான் சம்பளம் அதிகம். நாங்க அங்க ஒரு பெரிய வீடு வாங்கப் போறோம். நீங்களும் அப்பாவும் வந்து எங்களோட வருஷத்துல ஆறு மாசம் இருக்கலாம். அப்படி இப்படியெனக் கரண் பேசப் பேசியே எல்லோரையும் அவன் வழிக்குக் கொண்டு வந்துவிட்டான்.
திருமணத்தைக் கோவிலில் வைத்து விட்டு, வரவேற்ப்பு மட்டும் மண்டபத்தில் வைக்கலாம் என முடிவாகியது. 

அன்பரசி ஒருநாள் கரனை அழைத்துக் கொண்டு அண்ணன் வீட்டிற்கு வந்திருந்தார். என்ன இருந்தாலும் நீ வெண்ணிலாவுக்குச் செஞ்சது துரோகம், நீயே வந்து பேசு என அழைத்து வந்திருந்தார். 

கரணுக்குமே தன்னால் தான் வெண்ணிலவுக்கு இங்கே திருமணம் நடந்தது, இல்லையென்றால் இன்னும் நல்ல இடத்திலேயே திருமணம் நடந்திருக்கும் என எண்ணம். அதனால் வருவதற்கு ஒப்புக் கொண்டான்.

அவர்கள் அங்கே சென்ற போது,வெண்ணிலா எந்தப் பாதிப்பும் இல்லாமல் அவனை வரவேற்றாள். 

தன்னிடம் எப்படி நடந்து கொள்வார்களோ என்ற பதைபதைப்பு அவனுக்கு உள்ளுக்குள் இருக்கத்தான் செய்தது. ஆனால் அவனைப் பார்த்ததும் யாரும் முகம் கூட மாறவில்லை. இயல்பாகத்தான் இருந்தனர். 

வெண்ணிலா ஒரு இடத்தில் இல்லாமல் அங்கே இங்கே என நடந்து கொண்டே இருக்க, தன்னைத் தவிர்க்கவே அப்படிச் செய்கிறாளோ எனக் கரண் நினைத்தாலும், வெண்ணிலாவின் முகத்தில் இருந்த மலர்ச்சி, அவனைக் குழப்பியது. 

அதைக் கவனித்த கற்பகம், “இன்னைக்கு அவ வீட்ல இருந்து அவளைக் கூப்பிட்டு போக வர்றாங்க. அதுதான் ஒரு இடத்தில இருக்காம சுத்திட்டு இருக்கா….” என்றார்.

“ஏன் டி நாங்க என்ன உன்னை நல்லா பார்த்துக்காமலா  இருந்தோம். இப்படிப் புருஷன் வீட்டுக்குப் போகப் பறக்கிற.” எனக் கற்பகம் பேத்தியை கிண்டல் செய்ய… 

“ஆமாம் என்ன இருந்தாலும், எங்க வீடு போல வருமா…” என வெண்ணிலாவும் விட்டுக் கொடுக்காமல் பதில் பேச, 
“அம்மா, இன்னைக்குப் பொள்ளாச்சி போயிட்டு இவ திரும்பக் காரனோட கல்யாணத்துக்கு வர்றதுக்கு, கல்யாணம் முடியுற வரை இங்கேயே இருக்கலாமே… நான் வேணா ஜெய் அத்தான் கிட்ட பேசணும்.” என வேண்டுமென்றே யுவராஜ் வெண்ணிலவை வம்பிழுக்க, மகேஸ்வரியும் புரிந்து கொண்டு, “அப்படிக் கூடச் செய்யலாமே, வீணா எதுக்கு அலைச்சல்?” எனச் சொல்ல, வெண்ணிலாவின் முகம் சட்டென்று மாறிவிட்டது. 

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். மாமாவும் அத்தையும் நான் அங்க இல்லாம வீடே வெறிச்சுன்னு இருக்குன்னு சொல்றாங்க. அகல்யா வேற மாசமா இருக்கா… அவளும் வந்து போய் இருப்பா. நான் அங்க இருக்கணும். கல்யாணத்துக்கு தான் ஒருமாசம் இருக்கே, நான் அப்பா வரேன்.” என அவள் நிறுத்தாமல் பொரிய…. யுவராஜ் சத்தமாகச் சிரித்தான். 

அதன் பிறகே வெண்ணிலாவுக்கு அவன் கிண்டலுக்குச் சொல்கிறான் எனப் புரிந்தது. அண்ணனை பார்த்து முறைத்தாள். கரணுக்கு இதையெல்லாம் பார்க்க பார்க்க ஆச்சர்யமே, வெண்ணிலா இவ்வளவு எல்லாம் பேசுவாளா என்பது போலத்தான் பார்த்திருந்தான். 

வெண்ணிலாவின் கைபேசி அழைக்க, ஜெய் தான் அழைத்திருந்தான். 
 

Advertisement