Advertisement

எந்தன் காதல் நீதானே

அத்தியாயம் 24 

செவிலியர் தூக்கிக் கொண்டு வந்து கொடுத்த மகனை கையில் வாங்கி உச்சி முகர்ந்தவன், “இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தா அவளுக்கு ரூம்லையே பிரசவம் ஆகி இருக்கும். என்ன வைத்தியம் பார்க்கிறீங்க நீங்க? அவ வலி அதிகமா இருக்குன்னு சொன்னா தானே.” என ஜெய் அவரிடம் எகிற, 


“இன்னும் இவன் விடலையா?” எனச் செவிலியர் பயந்து போய்ப் பார்க்க, 

“விடுப்பா அதுதான் குழந்தை நல்லபடியா பிறந்திடுச்சே. குழந்தையைக் கொடுத்திட்டு நீ போய் எல்லோருக்கும் ஸ்வீட் வாங்கிட்டு வந்து கொடு.” எனக் கற்பகம் சொல்ல,
வெண்ணிலா ரூமுக்கு வந்ததும் போறேன் என்றவன், தனது அத்தையிடம் குழந்தையைக் கொடுத்தான். அவனது பெற்றோரும் அந்த நேரம் வந்து விட்டனர். 

வெண்ணிலா அறைக்கு வர மேலும் ஒரு மணி நேரம் ஆகியது. அவள் வந்த பிறகு அவள் நலத்தைக் கேட்டு அறிந்தவன், பிறகே இனிப்பு வாங்க சென்றான். 

கற்பகத்தைத் துணைக்கு வைத்து விட்டு மகேஸ்வரி தனது அண்ணன் அண்ணியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினார். 

அவர்கள் சென்றதும் கற்பகம் அவன் பேசியதை சொன்னவர், “உன் புருஷனை கொஞ்சம் அடக்கி வை. இல்லைனா நம்மை இன்னைக்கே இங்க இருந்து துரத்திடுவாங்க.” எனச் சொல்ல, சொன்னால் கேட்பவனா என்ன வெண்ணிலா நினைத்துக் கொண்டாள். 

மாலை தான் பாவையளர்கள் நேரம் என்பதால் அப்போது ராஜகோபால், யுவராஜ், வெண்ணிலாவின் அத்தைகள் இன்னும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் என மருத்துவமனைக்குப் படையெடுக்க, ஜெய்யின் பெற்றோர் ஏழு மணி வரை இருந்துவிட்டு, மருத்துவமனியில் இருந்தே நேராக ஊருக்கு கிளம்பி விட்டனர். மறுநாள் சந்திரனும் காமாட்சியும் வருவதாக இருந்தது.
மகேஸ்வரி இரவு உணவை எடுத்து வந்ததும் கற்பகம் வீட்டிற்குக் கிளம்ப, ஜெய் மருத்துவமனையிலேயே இருந்து கொள்வதாகச் சொல்ல, 

“அதெல்லாம் ஒரு ஆள் தான் கூட இருக்கணும். நீங்க கிளம்புங்க.” எனச் செவிலியர் சொல்ல, ஜெய் மறுக்க, 

நேற்றில் இருந்து அவன் படுத்திய பாட்டில் கடுப்பில் இருந்து மருத்துவரும் செவிலியரும், “ஒருத்தர் தான் கூட இருக்கலாம். உங்களுக்கு உள்ளே எல்லாம் இடம் இல்லை.” எனத் துரத்தி விட,
“நீங்க வீட்டுக்கு போயிட்டு காலையில வாங்க.” என வெண்ணிலாவும் சொல்ல, ஜெய் முறைத்துக் கொண்டுதான் கிளம்பினான். 

வெண்ணிலா இல்லாமல் அவள் வீட்டில் இருப்பது அவனுக்குச் சங்கோஜமாக இருந்தது. அதுவும் காலை உணவை கற்பகம் பரிமாறி உண்ட போது மேலும் சங்கடமாக இருக்க, அன்று வந்த அவனாவது சித்தப்பா சித்தியுடன் அவனும் ஊருக்கு கிளம்பி விட்டான். 

அந்த வார இறுதியில் மீண்டும் வந்திருந்தான். குழந்தையைப் பார்க்க யாராவது வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். 

கற்பகம் தான் குழந்தைக்குக் குளிக்க ஊற்றுவது மருந்து கொடுப்பது எல்லாம். வெண்ணிலா அவர் அறையில் தான் இருந்தாள். 

மகேஸ்வரிக்கு எப்போதும் இருக்கும் வேலையோடு, வெண்ணிலாவுக்குப் பத்திய சமையல் எனச் செய்ய வேண்டியது இருந்தது. அதோடு வரும் விருந்தினர்களுக்குக் காபி பலகாரம் கொடுப்பது என அவருக்கு அதிக வேலைகள். 

ஜெய் ஒரு வாரம் விட்டு ஒருவாரம் என வந்து இருவரையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். குழந்தைக்கு ஒரு மாதம் ஆனவுடன் பெயர் சூட்டும் விழா எடுத்தனர். 

உறவினர்களை அழைத்து வீட்டிலேயே விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

மலர்களால் அலங்கரித்த தொட்டிலில் குழந்தையைப் படுக்க வைத்து, அர்ஜுன் எனப் பெயரிட்டனர். ஜெய் குழந்தைக்கு எனத் தங்கத்தில் செயின் அணிவித்தான். அதையும் வெண்ணிலவின் அத்தைகள் கிண்டலாகத்தான் பார்த்தனர். 

விழா முடிந்து உறவினர்கள் கிளம்பி இருக்க, தங்களுடன் அன்றே வெண்ணிலாவை அழைத்துச் செல்ல ஜெய் கேட்டான். 

ஒரு மாதத்தில் எப்படி அனுப்புவது என எல்லோருக்குமே யோசனை தான். மகன் சட்டென்று கேட்பான் என ஜெயராமனும்  எதிர்பார்க்கவில்லை. அவன் கேட்ட பிறகு தான் வேண்டாம் என்றால் நன்றாக இருக்காது. வெண்ணிலா வீட்டினரே முடிவு செய்து கொள்ளட்டும் என அமைதியாக இருந்தார். 

இப்போதே எப்படி அனுப்புவது என ஒரு தாயாக மகேஸ்வரி தவிக்க, தாங்கள் அனுப்பவில்லை என்றால் தவறாக நினைத்து விடுவார்களோ, அவர்கள் வீட்டிலும் தான் நிறையப் பேர் இருக்கிறார்களே பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் ராஜகோபால் எதற்கும் வெண்ணிலாவிடம் கேட்போம் என நினைத்து அவளைப் பார்க்க, தாயின் தவிப்பை பார்த்த யுவராஜ், இப்போது அனுப்ப முடியாது. ஐந்து மாதங்கள் ஆனப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் எனச் சொல்லிவிட, “ஆமாம் பச்சை உடம்புக்காரியை இப்போ எப்படி அனுப்புறது.” எனக் கற்பகமும் சொல்ல, 

“மருமகள் இருந்திட்டே வரட்டும்.” என ஜெயராமன் சொல்லி விட, இந்தப் பேச்சு வார்த்தை நடக்கும் போது ஜெய் மனைவியின் முகத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
தான் யார் பக்கம் பேசினாலும் பிரச்சனை தான் என்பதை உணர்ந்து வெண்ணிலா குனிந்த தலை நிமிரவில்லை. 

பிறகு ஜெய்யும் அதைப் பற்றி வெண்ணிலாவிடம் பேசவில்லை. அவன் வீட்டினருடன் முறையாகத்தான் விடைபெற்றுச் சென்றான். 

அன்று சென்றவன் தான். ஜெய் ஐந்து வாரங்களாக வரவே இல்லை. “முன்னாடி தான் அப்படி இருந்தாருன்னு பார்த்தா, நீ பிறந்த பிறகும் அப்படித்தான் இருகாரு பாரு. நல்லவேளை நீ பையனா பிறந்த, இல்லை என் பொண்ணு கல்யாணத்துக்குச் சேர்க்கிறேன்னு உன் அப்பா இப்பவே ஆரம்பிச்சிருப்பார்.” என மகனிடம் தனது மனக் குமுறலை கொட்டிக் கொண்டிருந்தாள். 

கையைக் காலை ஆட்டிக் கொண்டிருந்த மகன் லேசாகச் சிரிக்க, “உனக்கும் என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கா. படவா ராஸ்கல் இந்த வாரம் மட்டும் உங்க அப்பா வரலை… அவ்வளவு தான்.” 

வெண்ணிலா பேசுவதைக் கேட்டுக் கொண்டே வந்த யுவராஜ், “உன் புருஷனை கேட்க வேண்டியதை இவன்கிட்ட கேட்டு என்ன பிரோஜனம்? அவன் பேசமாட்டான்னு தைரியம் தானே உனக்கு.” என்றான். 

“பார்த்தியா பட்டு குட்டி, உன் அம்மா உன்னைத் திட்டுறா?” என, வெண்ணிலா பதிலுக்குச் சிரித்தாள். 

“உன் புருஷனுக்கு நாங்க உன்னை முப்பது நாள்ல அனுப்பலைன்னு கோபமா இருக்கும்.”
“நான் அதையும் கேட்டுட்டேனே இல்லைன்னு சொல்றார். அவர் தோட்டம் போடுற வேலையில பிஸியா இருப்பார்.” 

“அவர் கூப்பிட்ட போது உன்னை அனுப்பலைன்னு உனக்குக் கோபமா வெண்ணிலா.” 

“இந்த மாதிரி நேரத்தில் தான் நீ இங்க அதிக நாள் தங்க முடியும். உன் பையன் ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சிட்டா… அவனுக்கு லீவ் விட்டாத்தான் வருவ.” 

“எங்களுக்கு இந்தப் பட்டுக் குட்டியோட இருக்கனும்னு ஆசை இருக்கும் தான… அதோட நீயும் இங்க இருந்தா ரெஸ்ட் எடுப்ப. அதை நினைச்சு தான் நான் அஞ்சு மாசத்தில தான் அனுப்புவேன்னு சொன்னேன்.” 

“எனக்குத் தெரியும் அண்ணா. நீ விளக்கவெல்லாம் வேணாம். அவருக்கும் புரியும், அவர் மட்டும் இப்ப அகல்யா உண்டாகி இருக்கான்னு, எங்க வீட்ல தானே பிடிச்சு வச்சிருக்கார்.” 

“ஆனாலும் உன் புருஷன் கொஞ்சம் அடாவடி தான்.” எனச் சொல்லிவிட்டு யுவராஜ் தங்கையின் முகத்தைக் குறுகுறுவெனப் பார்க்க, 

“அவர் பேசுற விதம் தான் அப்படி. ஆனா அவர் பேசுற விஷயம் நியாயமாத்தான் இருக்கும்.” 

“கொஞ்சம் கூட உன் புருஷனை விட்டுக் கொடுக்க மாட்டியே… அப்ப ஏன் உன்னையும் குழந்தையும் பார்க்க வராம இருக்கார்.” யுவராஜ் கேட்டதற்கு வெண்ணிலாவுக்குத் தெரிந்தாள் தானே பதில் சொல்வாள். 

கணவன் என்ன மனநிலையில் இருக்கிறான் என்று அவளுக்கு ஒன்றும் புரியாத நிலை. கோபமா எனக் கேட்டால் இல்லை என்றுதான் சொன்னான். ஆனாலும் இங்கே வரவில்லை. 

கற்பகத்தின் முகம் இரண்டு மூன்று நாட்களாகவே சரியில்லை. அடிக்கடி தனியாக் சென்று கைபேசியில் பேசிவிட்டு வந்தார். வெண்ணிலாவும் கற்பகமும் ஒரு அறையில் இருப்பதால் வெண்ணிலாவுக்குக் குழப்பமாக இருந்தது. 

அவள் அதைத் தனது அம்மா மற்றும் அண்ணனிடம் பகிர்ந்துகொள்ள, 

“கத்திரிக்காய் முத்தினா கடை தெருவுக்கு வந்துதான் ஆகணும். எதுவா இருந்தாலும் அவங்க வாயில இருந்தே வரட்டும்.” என்றான் யுவராஜ். 

இரண்டு நாட்கள் சென்று அன்பரசியும், வசுமதியும் வீட்டிற்கு வந்திருந்தனர். அன்பரசி கரணுக்கு பொண்ணு பார்த்திருக்கோம் என்றார். 

“எதுக்கும் அவனை நல்லா கேட்டுடுங்க. இந்த முறையும் சொல்லாம கொள்ளாம ஓடிட போறான்.” என யுவராஜ் கிண்டலாகச் சொல்ல, அன்பரசியின் முகம் வாடியது. 

“இந்த முறை அப்படியெல்லாம் நடக்காது டா…” என வசுமதி சொல்ல, என்னவோ செய்யுங்க என்றபடி யுவராஜ் அலட்சியமாகத் தோளைக் குலுக்கினான். 

“யாரு பொண்ணு? எந்த ஊரு?” என ராஜகோபால் விசாரிக்க, அன்பரசி பதில் சொல்லவே தயங்கினார். 

“பொண்ணு நீங்க பார்த்தீங்களா இல்லை உங்க மகனா?” என யுவராஜ் சரியாகக் கணிக்க, 

“அது வந்து அவன் வேலை பார்க்கிற இடத்தில இந்தப் பெண்ணும் வேலைப் பார்க்கிறாளாம். அவங்க மேல் அதிகாரிதான் சொன்னாராம். இந்தப் பெண்ணை உனக்குப் பார்க்கலாமே பொருத்தமா இருக்கும்னு சொன்னாராம். கரண் அதை எங்ககிட்ட சொன்னான்.” என வசுமதி சொன்னதும், 

“ஓ… இந்தக் கதையை எங்களை நம்பச் சொல்றீங்களா? உங்களைப் பார்த்தா பாவமா இருக்கு அத்தை. இப்படி அவன் சொல்றதை எல்லாம் நம்புறீங்களே…” என யுவராஜ் போலி பரிதாபம் காட்ட, 

“ஏய் உனக்கு என்ன டா வந்தது. அது அவங்க இஷ்டம்.” என மகனை கண்டித்த ராஜகோபால், “உனக்குப் பிடிச்சா செஞ்சிட்டு போ.” என்றார் தங்கையிடம். மகளையே வேண்டாம் எனச் சொல்லிவிட்டான் இனி அவன் யாரைக் கட்டினால் என்ன என்ற எண்ணம் அவருக்கு. 

“அது எப்படிப்பா அப்படி விட முடியும்? நாம பட்ட அவமானம் கொஞ்சமா நஞ்சமா? இவானால வெண்ணிலாவும் தானே கஷ்ட்டபட்டா? அவன் இங்க வரட்டும், நான் அவன் சட்டையைப் பிடிச்சு கேட்பேன்.” 

“வெளிநாட்டில போய் உட்கார்ந்துகிட்டான் இல்ல… இல்லைனா அன்னைக்கே என் கையாள அவனுக்கு அடி கிடைச்சிருக்கும். வரட்டும் என்ன பண்றேன்னு பாருங்க.” யுவராஜ் பேசப் பேச எல்லோரும் அவனைக் கலவரமாகப் பார்க்க, 

“நீ கரண் அத்தானை ஒன்னும் கேட்க கூடாது. என் மேல உண்மையிலேயே பாசம் இருந்தா, நீ அவங்களை எதுவும் கேட்கக் கூடாது.” என வெண்ணிலா கட்டளையைப் போலச் சொல்ல, 

“ஏன் இப்போ நீ அவனுக்குப் பரிஞ்சிட்டு வர?” என யுவராஜ் கேட்க,
ஐந்து வாரங்களாக வராத ஜெய் அன்று பார்த்து வந்துவிட்டவன், இவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டு இருந்தான். 

அவன் உள்ளே வரும் போது யுவராஜ் சத்தம் போடுவது எதோ வாக்குவாதம் போல இருக்க, உள்ளே போகலாமா வேண்டாமா எனத் தயங்கியபடி வாயிலேயே நின்றிருந்தான். 

அவன் ஒருவழியாக உள்ளே வர, மனைவியின் வாயில் இருந்து உதிர்ந்த வார்த்தைகளைக் கேட்டவனுக்கு, இப்போது எப்படி நடந்து கொள்வது என ஒன்றும் புரியாத நிலை. கணவனைப் பார்த்த வெண்ணிலாவுக்கும் அதிர்ச்சி தான். 

மகேஸ்வரி தான் முதலில் சுதாரித்தார், “வா ஜெய்…” என்றவர், வெண்ணிலா என்ன பார்த்திட்டே இருக்க என மகளைப் பார்த்து சொல்ல, 

“வாங்க….” என்றவள் உள்ளே செல்ல திரும்ப, 

“நீ பேசினதை பேசி முடிச்சிட்டு போ.” என்றான் ஜெய். 

“ஐயோ இவன் என்ன கேட்டான்? என்ன புரிஞ்சிகிட்டான்னு தெரியலையே. அண்ணனே நீ எதுக்குக் கரணுக்கு பரிஞ்சு பேசுறேன்னு தானே கேட்டான். இவன் என்ன நினைப்பான்.” என வெண்ணிலா கலவரமாகப் பார்க்க, 

“நீ கரணை யுவராஜ் எதுவும் கேட்க கூடாதுன்னு சொன்ன காரணம் சொல்லிட்டு போ.” என்றான் ஜெய் அழுத்தமாக. 

சொல்லவில்லை என்றால் விட மாட்டான் என்று தெரியும். அதோடு வேறு அர்த்தம் புரிந்து கொள்ளப் போகிறானோ என்ற அச்சத்தில், “கரண் அத்தான் அப்படிச் செஞ்சதுனாலதான் நான் உங்களைக் கல்யாணம் பண்ணேன். எனக்குக் கரண் அத்தான் நல்லது தான் பண்ணி இருக்காங்க. அதனால என்னைக் காரணமா வச்சு எதுவும் கேட்காதேன்னு சொன்னேன்.” என்றாள் வெண்ணிலா தெளிவாக. 

இதுதான் காரணம் என ஜெய்க்கு தெரியும். அதனால் அவனிடம் பெரிய மாற்றம் இல்லை. ஆனால் கேட்ட மற்றவர்களின் முகம் மலர, பாவம் அன்பரசி தான் வாடிப் போனார். 

“பெரிய இவன் இவனைக் கட்டிடோம்னு சந்தோசம் வேற…” என நினைப்பதை வசுமதியின் ஏளன பார்வையே சொன்னது. சிலர் இப்படித்தான் என்ன நடந்தாலும் திருந்தாத ஜென்மங்கள். இவர்களைத் திருத்துவது நமது வேலையும் இல்லை. 

“சரி அன்பு, உன் மகன் விருப்பத்துக்கே விட்டுடு. நமக்கு என்ன அவன் நல்லா இருக்கணும் அவ்வளவு தானே.” என ராஜகோபால் சொன்னதும், அன்பரசியும் நல்ல மனநிலையிலேயே கிளம்பி சென்றார்.

வெண்ணிலா குழந்தைக்குப் பால் கொடுப்பது போலச் சென்று அறையின் கதவை தாழிட்டுக் கொண்டாள். மற்றவர்கள் முன்னே சென்று கதவை தட்ட சங்கோஜம் கொண்டு ஜெய் ஹாலிலேயே இருந்தான். மனைவி வேண்டுமென்றே செய்கிறாள் என அவனுக்குப் புரியாமல் இல்லை. 

அவனுக்கு மட்டும் இல்லை. அவன் இத்தனை நாள் வராத கோபத்தில் வெண்ணிலா இருக்கிறாள் என மற்றவர்களுக்கும் புரிந்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் அவர்களும் சாதாரணமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டனர். 

Advertisement