Advertisement

கைப்பேசியை லாக் போட்டு வைத்திருந்தாள். இதைப் பாருடா என ஜெய் யஸ்வந்திடம் கொடுத்து விட்டு, கட்டிலில் ராதிகாவின் அருகே உட்கார்ந்தவன், ராதிகாவை எழுப்ப… அவள் எரிச்சலில் உச் என்றாள். 

“செல்லை லாக் பண்ணாதேன்னு சொல்லி இருக்கேன் தானே…. பாஸ்வோர்ட் என்ன?” எனக் கேட்க, 

உறக்க கலக்கத்திலும் அவள் ஆள்காட்டி விரலை நீட்ட, யஸ்வந்த் வந்து அவள் ரேகையைக் கைபேசியில் வைக்க, கைபேசி திறந்து கொண்டது. 

யஸ்வந்த் செல்லை ஆராய, ஜெய் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். 

அவன் ஒண்ணுமில்லை என்றதும் ஜெய் எழுந்துகொள்ள, உறக்கம் களைந்து விழித்த ராதிகா, “என்னை நம்புண்ணே நான் நல்ல பொண்ணு தான்.” என்றதும் ஜெய்கு சிரிப்பு வந்துவிட்டது. 

“பிறகு ஏன் அப்படிச் சொன்னே?” எனக் கேட்டதும், “அது உன்னை டென்ஷன் பண்ண சொன்னேன். பார்த்தியா நீ நிஜமாவே டென்ஷன் ஆகிட்ட.” 

“இன்னொரு தடவை இப்படிப் பேசு பிறகு தெரியும்.” என்றவன் எழுந்து வெளியே வர, அவனைப் பார்த்த ஜெயராமன், “வெண்ணிலா அப்பா இன்னைக்கு வளைகாப்பு பத்தி பேசினார்.” என்றவர் சுருக்கமாக விஷயத்தைச் சொல்ல, 

“இன்னும் பத்து நாள்தான் இருக்கா வெண்ணிலா கிளம்ப…” என நினைத்தவனின் முகம் வாட, தந்தையிடம் சரியெனச் சொல்லிவிட்டு மாடி ஏறினான். 

இவன் வருவதற்குள் வெண்ணிலாவும் உடம்புக்கு வெந்நீர் ஊற்றி உடைமாற்றி இருந்தாள். அறைக்கு வந்த ஜெய் அமைதியாக இருந்தான். 

“ஏன் ஒருமாதிரி இருக்கீங்க. உங்க தங்கச்சி யாரையும் லவ் எல்லாம் பண்ணலை.” வெண்ணிலா அவளாகவே சொல்ல, 

“அதில்லை… அப்பா உன் வளைகாப்பை பத்தி சொன்னார். இன்னும் பத்து நாள் தான் இருக்கு.” 

ஓ இதற்குத் தானா என்பது போலப் பார்த்தவள், கணவனின் எதிரில் சென்று நின்று அவன் தலையைக் கோதி கொடுத்தவள், “கரூர் ஒன்னும் ரொம்பத் தூரம் இல்லை. நீங்க எப்ப வேணா வரலாம். வெள்ளிக்கிழமை வேலை முடிஞ்சதும் கிளம்பி வந்திட்டு, திங்கள்கிழமை காலையில கூடக் கிளம்பி வேலைக்குப் போகலாம்.” என்றதும், 

“இது யோசனையா இல்லை உத்தரவா மேடம்.” என ஜெய் புன்னகைக்க, 

அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்து அருகில் இழுத்தவள், “வராம இருந்து பாருங்களேன் தெரியும்.” என்றாள் மையளாக. 

“என்னையே மிரட்டுற? வாராவாரம் அங்க வர சொல்ற. ஒரு வாரம் விட்டு மறுவாரம் வேணா வரேன்.” என்றதும், 

“அப்படியாவது வந்தா சரிதான்.” என்றாள். 

தான் சொல்வதில் அவளுக்கு நம்பிக்கை இல்லை என்பதை உணர்ந்தவன், அவளை இழுத்து தன் மடியில் உட்கார வைத்து, அவளின் பெரிய வயிற்ரை தனது இரண்டு கரங்களால் அனைத்துக் கொள்ள, அந்த நேரம் அவன் பிள்ளை, அவன் கையிலேயே ஒரு உதைக்  கொடுக்க, 

“ஹே எப்படி உதைக்கிறான் பாரு… இப்பவே அம்மாவுக்குச் சப்போர்ட்டா? கண்டிப்பா என்னோட ரெண்டு செல்ல குட்டியும் பார்க்க வரேன்…” என்றவன், வெண்ணிலாவின் கன்னத்தில் அழுத்தி முத்தமிட, அவளும் கணவனின் பக்கம் திரும்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். 

இரண்டு நாட்கள் சென்று மணமக்கள் அவர்களின் வீட்டிற்குச் சென்று விட, அகல்யா ஒருத்தி இல்லாததே பெரிய குறையாகத் தோன்றியது. 

திருமணப் பரபரப்பில் ஒன்றும் தெரியவில்லை. இரண்டு நாட்கள் சென்று வெண்ணிலாவுக்கு ஒரே உடம்பு வலி… நிறை மாத வயிற்றை வைத்துக் கொண்டு இங்கும் அங்கும் நடமாடியது அவளுக்கு முடியவில்லை. 

அவள் சொல்லவில்லை என்றாலும், அவளின் உடல்மொழியே காட்டிக் கொடுக்க, இந்த நேரத்தில அகல்யாவின் திருமணத்தை வைத்திருக்க வேண்டாமோ என வீட்டில் பெரியவர்கள் வருந்தினர். 

வெண்ணிலா இருப்பதைப் பார்த்து ஜெய்யே விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் தான் இருந்தான். வெண்ணிலாவை ஒரு வேலையும் செய்ய விடாமல் ஓய்விலேயே வைத்திருந்தனர்.
நான்கு நாட்களுக்குப் பிறகு சற்று பரவாயில்லை. அதன் பிறகு தான் ஜெய் அலுவலகம் சென்று வந்தான். 

வளைகாப்பிற்கு முன் தினமே அகல்யாவும் புகழும் வந்துவிட… வீடே திருவிழா கோலம் கொண்டது. மறுநாள் நல்ல நேரத்தில் வெண்ணிலாவிற்கு வளையல் போட்டு, ஐந்து வகைக் கலந்த சாதத்தோடு வடை பாயசம் என விருந்து களைகட்டியது. 

நான்கு மணி போல நல்ல நேரத்தில் வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு அவள் வீட்டினர் கிளம்பியதும், ஜெய்க்கு வீடே வெறிச்சென்று தோன்றியது. 

அன்றே கிளம்ப இருந்த அகல்யாவை, மறுநாள் செல்லலாம் என்றான். ஆனால் அவளோடு பேசவும் இல்லை. அவன் இருப்பதைப் பார்த்த புகழ், “என்ன டா?” என்றதும், 

“அந்தக் கிழவி என்னைக் கூட வரக் கூடாதுன்னு சொல்லிடுச்சு.” என்றான். 

“ஆமாம் டா அப்படித்தான் கூடப் போகக் கூடாதுன்னு சொல்வாங்க.” 

“என்ன சாஸ்த்திரமோ?” என்றான் கடுப்பாக. 

“வேணா நாளைக்கே கூடப் போ யாரு வேண்டாம்னு சொன்னா…” 

அவன் ஆமாம் என்றும் சொல்லவில்லை இல்லை என்றும் சொல்லவில்லை. அமைதியாக உட்கார்ந்து இருந்தான். அவன் டென்ஷனாக இருப்பதை உணர்ந்து புகழும் டிவி பார்ப்பது போல அங்கேயே இருந்தான். 

வெண்ணிலா அவள் வீட்டிற்குச் சென்றதும், கைபேசியில் அழைத்துச் சொல்ல, அதன் பிறகே எழுந்து சென்று உண்டவன், பிறகே எல்லோரோடும் சாதாரணமாகப் பேசிக்கொண்டு இருந்தான். 

அந்த வாரம் வெள்ளிக்கிழமை அலுவலகம் கிளம்பும் போது, “நான் சாயங்காலம் வேலை முடிஞ்சு கரூர் போறேன்.” எனப் பெற்றோரிடம் பொதுவாகச் சொல்லிவிட்டுச் சென்றான். 

அவன் இந்த வாரமே வந்து நிற்பான் என வெண்ணிலா நிஜமாகவே எதிர்பார்க்கவில்லை. அடுத்த வாரம் தான் வருவான் என நினைத்திருந்தாள். கணவனைப் பார்த்ததும் அவளுக்கு மிகுந்த சந்தோஷம். 

வரவேற்ற கற்பகத்திடம் அளவாகத்தான் பேசினான். அவர் உடன் வரக் கூடாது என்று சொன்னது, அவனுக்கு இன்னமும் கோபம். அதை வேறு யாரும் சொல்லி இருந்தால் கூட அவனுக்கு இவ்வளவு கோபம் வந்திருக்காது. முன்பு அவர் குத்தலாகப் பேசியது போல இப்போதும் நினைத்துக் கொண்டான். கற்பகதிற்கும் அது புரிந்தது. 

தான் இருந்தால் அவன் இயல்பாக இருக்க மாட்டான் என நினைத்தாரோ என்னவோ, மறுநாள் மகள் வீட்டில் சென்று இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வருவதாகக் கிளம்பி விட்டார். 

இரண்டு நாட்கள் மனைவியோடு கோவில் கடை வீதி எனச் சென்றவன், ஞாயிறு அன்று மாலை அங்கருந்து கிளம்பி விட்டான். 

மறுவாரம் வர முடியாது என்றுதான் சொல்லி இருந்தான். ஆனால்  வெள்ளிக்கிழமை என்றதும் ஏனோ பரபரவென்று இருந்தது. அவன் வருவதற்காகவே காத்திருந்தது போல, அன்று நள்ளிரவில் இருந்தே வெண்ணிலாவுக்கு லேசான வலி ஆரம்பிக்க, இன்னும் பிரசவத்திற்குப் பத்து நாட்கள் இருக்க, இது என்ன வலி எனத் தெரியாமல் எல்லோரும் குழம்பினர். 

கற்பகம் கஷாயம் வைத்து கொடுத்து பார்த்தார். ஆனால் வலி அதிகரிக்கவே மருத்துவமனை சென்றனர். சனிக்கிழமை மாலை ஆரம்பித்த வலி, ஞாயிறு காலை வரையும் தொடர, மனைவி வலியால் துடிப்பதை பார்த்து ஜெய் தான் துடித்துப் போனான். 

வெண்ணிலா வலியில் அவதி படும் போதெல்லாம் மருத்துவரை சென்று அழைப்பான். அவர் வந்து பார்த்து விட்டு, இன்னும் வலி வரணும் என்றால்… ஜெய்க்கு கொலை வெறியே வரும். 

“என்னது இன்னும் வலிக்கனுமா? இதையே அவளால தாங்க முடியலை. இன்னும் வலி எப்படித் தாங்குவா.” என மருத்துவரிடம் அவன் சண்டைக்குச் செல்ல, 

“பிள்ளை பிறக்கும் போது தான் பிறக்கும். உன் புருஷன் அவசரத்துக்கு எல்லாம் பிறக்காது.” எனக் கற்பகம் சொல்ல, ஜெய் அவரைப் பார்த்து முறைத்தான். 

விட்டால் இவன் எல்லோரிடமும் சண்டைக்குச் சென்று விடுவானோ என்ற அச்சத்தில், வெண்ணிலா வலியை பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டு இருந்தாள். அவள் வாய்விட்டு கூட அழவில்லை. 

இன்னும் போதிய வலி வரவில்லை என மருத்துவர் நினைத்திருக்க, அடுத்தச் சில நிமிடங்களில் வெண்ணிலா வலி குறைந்து, வேறு மாற்றத்தை உணர்ந்தவள், அதை மருத்துவரிடம் சொல்ல, அவர் நம்பிக்கை இல்லாமல் தான் சோதித்தார். ஆனால் உடனேயே, “சீக்கிரம் பிரசவ வார்டுக்கு வா.” என வெண்ணிலாவை நடத்தியே தான் அழைத்துக் கொண்டு சென்றார். 

ஜெய்கு ஒன்றுமே புரியவில்லை. இன்னும் எவ்வளவு நேரமோ என்ற கவலையில் இருந்தவனுக்கு அடுத்த ஐந்து நிமிடத்தில் குழந்தையின் அழு குரல் காதில் தேனாகப் பாய்ந்தது. 

Advertisement