Advertisement

யுவராஜ் வெளியில் நின்று போன் பேச, உட்கார்ந்த இடத்தில் இருந்தே வீட்டை ஆராய்ந்த கற்பகம், “உண்மையிலேயே உன் நாத்தனாருக்கு என்பது சவரன் போட்டீங்களா?” எனக் கேட்க, பிறகு பொய்யா சொல்வார்கள் என்பது போல வெண்ணிலா முறைத்துப் பார்க்க, 

“அவ்வளவு பணம் இங்க இருக்கா என்ன? உன் நகை நீ போட்டிருக்கிறது போக மிச்சம் எங்க?” என்றார் சந்தேகமாக, வேறு யாரும் வந்து இவர் பேசியதை கேட்டால் என்ன ஆகும் என்ற அச்சத்தில் அவசரமாக வாயிலைப் பார்த்தவள், “பாட்டி, உங்களுக்கு ஏன் இப்படியெல்லாம் தோணுது. என் நகையை வாங்கி அகல்யாவுக்குப் போடுவாங்களா? நானே கொடுத்தாலும் இந்த வீட்ல யாரும் வாங்க மாட்டாங்க.” என, 

“நீ கொடுக்கிறேன்னு சொன்னியா?” எனக் கற்பகம் சரியாகப் படிக்க, வெண்ணிலா வெலவெலத்துப் போனாள். 

தான் சொல்லும் பதிலில் தன் கணவனின் கவுரவம் இருக்கிறது என்பதை உணர்ந்தவள், “அதுக்கெல்லாம் அவசியமே இல்லை. ஏற்கனவே அகல்யா கல்யாணத்துக்கு நகை சேர்த்திருந்தாங்க. அதோட என் வீட்டுகாரரும் நல்ல வேலையில் இருக்கார். அவர் தம்பியும் நல்ல வேலையில இருக்கார். இவ்வளவு கூடச் செய்ய மாட்டாங்களா என்ன?” 

“இன்னுமே செஞ்சிருப்பாங்க. மாமா தான் இடம் வேற கொடுக்கிறோம் போதும்னு சொல்லிட்டாங்க.” 

“நான் எவ்வளவு நகை போட்டு வந்தேன். என்ன கொண்டு வந்தேன்னு கூட என் மாமாவோ அத்தையோ இல்ல இவரோ கூடக் கேட்டது இல்லை.” 

“என் நகை எல்லாம் லாக்கர்ல பத்திரமா இருக்கு. நீங்க இப்படிக் கேட்டது தெரிஞ்சது. என் வீட்டுகாரர் எல்லா நகையும் திருப்பிக் கூடக் கொடுக்கச் சொல்லிடுவார். இனி விளையாட்டுக்கு கூட இப்படிப் பேசாதீங்க பாட்டி.” என மூச்சு வாங்கசொல்லி முடித்தாள். அவள் இருப்பதைப் பார்த்துக் கற்பகம் பயந்தே போனார். 

“நான் சாதாரணமா தான் கேட்டேன். நீ ஏன் இப்படி டென்ஷன் ஆகிற? எதாவது சாப்பிடு இல்லைனா குடிச்சிட்டு கொஞ்ச நேரம் படு.” என்றார். 

வெண்ணிலாவும் பால் குடித்து விட்டு வந்து அறையில் இருந்த கட்டிலில் படுத்தவள், அசதியில் உறங்கியும் போனாள். கற்பகம் பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தார். 

வெண்ணிலா இவ்வளவு பேசி அவர் இன்றுதான் கேட்கிறார். இந்த விஷயத்திற்கு அவள் இத்தனை உணர்ச்சி வசப்படுவாள் என அவருமே நினைக்கவில்லை. 

மதிய உணவை எடுத்துக் கொண்டு ஜெய்யே வந்துவிட்டான். அவன் வந்து எழுப்பவும் தான் வெண்ணிலா எழுந்தாள். அவன் வந்ததும் கற்பகம் அறையில் இருந்து வெளியே வந்துவிட்டார். 

“ஏன் ஒரு மாதிரி இருக்க? உடம்புக்கு எதுவும் பண்ணுதா?” என அவன் கேட்க, 

“இப்பத்தானே தூங்கி எழுந்தேன். அதுதான் வேற ஒன்னும் இல்லை.” என்றாள். 

“நீங்க எங்க இங்க வந்தீங்க?” 

“அகல்யாவை அழைச்சிட்டு மாப்பிள்ளை வீட்டுக்கு போயிருக்காங்க. இன்னும் அவங்க வரலை. சமையல் ரெடி ஆகிடுச்சு. உனக்குப் பசிக்குமேன்னு கொண்டு வந்தேன்.” 

“என்னைத் தான் அங்க இருக்க விடாம துரத்திடீங்க. அகல்யா போகும் போது ரொம்ப அழுதாளா.” 

“ம்ம்… ஆமாம். இங்க பாரு என் சட்டையை நனைச்சி வச்சிட்டு போயிருக்கா உன் நாத்தனார்.” 

“நீங்கஅழுதீங்களா?” 

“ஆமாம் அழுகிறாங்க. நான் நினைச்ச உடனே பார்க்கிற தூரத்தில தான டி என் தங்கச்சியைக் கொடுத்திருக்கேன். பிறகு எதுக்கு அழுகிறேன்.” 

“நல்ல விவரமான ஆள் ஆச்சே.”

“சரி நீ வந்து சாப்பிடு. நான் மண்டபத்துக்குக் கிளம்பனும்.” 


அவர்கள் இருவரும் பேசுவது கற்பகம் காதிலும் விழவே செய்தது. மிகவும் அன்யோன்யமாக இருக்கிறார்கள் எனப் புரிந்தது. 

“பாட்டி, நீங்க மண்டபத்துக்கு வந்து சாப்பிடுறீங்களா? இல்லை இங்கேயே சாப்பிடுறதுனாலும் சாப்பிடுங்க. உங்களுக்கும் சேர்த்து தான் கொண்டு வந்திருக்கேன்.” என ஜெய் சொல்ல, 

“என்னால திரும்பி மண்டபத்துக்கு அலைய முடியாது. நான் இங்கேயே சாப்பிடுறேன்.” என்றார். 

“சரி நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க. நாங்க கிளம்புறோம்.” என ஜெய் யுவராஜுடன் கிளம்பி சென்றான். 

அவர்கள் சென்றதும் கதவை சாற்றிவிட்டு வந்தவள், நல்ல பசியில் இருக்க, கற்பகத்திற்குப் பரிமாறி விட்டு தனக்கும் சூடான மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் வறுவலை இலையில் பரிமாறிக்கொண்டு உண்ண ஆரம்பித்தாள். 

நான்கு வைத்தான் உண்டிருப்பாள். அந்நேரம் வாயில் மணி அடிக்க, வெண்ணிலா சென்று கதவை திறக்க், அமுதாவும் சத்யாவும் வந்தனர். 

“என்ன அத்தை இப்ப வந்திருக்கீங்க?” 

“பிள்ளைதாச்சி பொண்ணு பசியில இருப்பியேன்னு பிரியாணி கொண்டு வந்தேன்.” எனத் தூக்குவாளியை காட்ட, 

“ஐயோ அத்தை, இப்பத்தான் உங்க மகன் வந்து கொடுத்திட்டு போனார்.” 

“யாரு ஜெய்யா?” 

அவன் வந்திருந்தானா தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்க மாட்டேனே இப்படியெல்லாம் சொல்லாமல். “பொண்டாட்டி பசியோட இருப்பான்னு சாப்பாடு கொண்டு வந்திருக்கானே சந்தோஷம்.” 

“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திடுவாங்க. நான் அங்க கிளம்புறேன். நீ சாப்பிடு.” என அவர் கொண்டு வந்ததையும் மருமகளிடம் கொடுக்க, 

“இங்க தான் இருக்கே அத்தை, இதை நீங்களே எடுத்திட்டு போயிடுங்க.” 

“கொண்டு வந்ததைத் திருப்பி எடுத்திட்டு போக வேண்டாம். நீ சாயந்திரம் ஒரு தடவை போட்டு சாப்பிடு.” எனக் கொடுத்துவிட்டு, அவர் வாயிலோடு திரும்ப, கற்பகம் எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருந்தார். 

அவர்கள் கிளம்பியதும் வெண்ணிலா மீண்டும் வந்து உண்ண ஆரம்பிக்க, சிறிது நேரத்தில் மீண்டும் வாயில் மணி அடித்தது. இந்த முறை சந்திரன் மருமகளுக்குப் பிரியாணி கொண்டு வந்திருந்தார். 

வெண்ணிலா மீண்டும் அதே கதையைப் படிக்க, “பரவாயில்ல இருக்கட்டும். இந்தா நான் உனக்குச் சிக்கன் வறுவல் கொண்டு வந்தேன். சூடா இருக்கும் போதே சாப்பிடு.” என அவள் தட்டில் நிறைய எடுத்து வைத்து விட்டு சென்றார். 

அவர் சென்றதும் வெண்ணிலா கணவனை அழைத்தவள், “எனக்குச் சாப்பாடு வந்திடுச்சுன்னு தயவு செஞ்சு நம்ம வீட்டு ஆளுங்களுக்குச் சொல்லிடுங்க. ஆளாளுக்கு இங்க கொண்டு வந்தா, அங்க விருந்துக்குப் பிரியாணி பத்தாம போயிடப் போகுது.” என அவளின் கவலையைப் கேட்டு ஜெய்க்கு ஒரே சிரிப்பு. 

அவன் அப்போதே அங்கிருந்த வீட்டினரிடம் சொல்ல, “இன்னும் என்னோட பங்கு இருக்கு.” என யஸ்வந்தும், “மாப்பிள்ளை வீடு சார்பாவும் ஒரு பங்கு வருதுன்னு தங்கச்சிகிட்ட சொல்லு.” எனப் புகழும் சொல்ல, அதை ஜெய் அப்படியே சொல்ல, 

“இதுக்கு மேல தாங்காது சாமி ஆளை விடுங்க.” என வெண்ணிலா வைத்து விட்டாள். அவளுக்கும் நினைத்து நினைத்துச் சிரிப்பு தான். 

உணவு உண்டபடி கற்பகம் பேத்தியைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தார். 

தங்கையின் திருமணத்தில் எவ்வளவு வேலையில் ஜெய் சுற்றிக் கொண்டிருந்தான் என்பதை அவரும் அறிவார். இருந்தாலும் மனைவியை மறந்து விடாமல், அவள் பசியறிந்து உணவு கொண்டு வந்தானே. 

அவனை விட மாமியார் அவ்வளவு வேலையிலும் மருமகள் எங்கே பசியோடு இருந்து விடுவாளோ என இந்த வயதிலும் உணவோடு ஓடிவருகிறாள். 

சின்ன மாமனும் மருமகளைத் தாங்குவதைப் பார்த்ததும், தன் பேத்தி கொடுத்து வைத்தவள் என்றே தோன்றியது. அதனால் தான் இந்தப் பெண் அவர்கள் வீட்டைப் பற்றி ஒரு வார்த்தை சொன்னாலும் பொருக்க முடியாது, தனது நிலையையும் மீறி உணர்ச்சி வசப்பட்டாள் என நினைத்துக் கொண்டார். 

“உங்க தாத்தாவும் இப்படித்தான். நான் மாசமா இருக்கும்போது பசியோட இருப்பேன்னு ஓடி வருவார். முதல் பிரசவத்துக்குத்தான் அம்மா வீட்டுக்கு அனுப்பினாங்க. அடுத்ததெல்லாம் உங்க தாத்தா தான். பச்சை உடம்புன்னு என்னைச் சமைக்க விடாமே அவரே சமைப்பார். ஒரு காரக் குழம்பு வச்சாக் கூட அவ்வளவு ருசியா இருக்கும்.” எனக் கற்பகம் தன் கணவரை நினைத்து பெருமூச்சு விட, 
வெண்ணிலாவுக்கு இந்தக் கதை எல்லாம் தெரியும். கற்பகம் எல்லாவற்றையும் சொல்லி இருக்கிறார். சின்ன வயதிலேயே கணவனை இழந்தவர். அதனாலோ என்னவோ ராஜகோபால் அவரின் விருப்பத்திற்கே விட்டு விடுவார். அந்தச் சந்தோஷமாவது அவருக்கு இருக்கட்டும் என நினைத்திருக்கலாம். 

பாவம் பாட்டி, அன்பான கணவரை இழந்தது மிகவும் துயரம் தானே என நினைத்துக் கொண்டாள்.
பாட்டியும் பேத்தியும் முன்பெல்லாம் மிகுந்த ராசிதான். கரணோடு திருமணம் எனப் பேசிய பிறகுதான் மாறிப் போனார். அதோடு ஜெய்யை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு உள்ளுணர்வு எதோ சொல்லிக் கொண்டிருந்தது. அதனால்தான் மிகுந்த கடினமாக நடந்து கொண்டார். 

தான் என்ன நினைத்தாலும், யாருக்கு எங்கு ப்ரப்தாமோ அங்குதான் அமையும். வெண்ணிலா ஜெய் ஆனந்தனுக்கு என்பது கடவுள் போட்ட முடிச்சு. அதை யாரால் மாற்ற முடியும் என நினைத்துக் கொண்டார். 

“இந்தக் கரணுக்கும் ஒரு நல்ல இடத்தில பொண்ணு அமைஞ்சிட்டா நான் நிம்மதியா இருப்பேன்.” என்றார். பாட்டியின் மாற்றம் வெண்ணிலாவுக்கும் புரிந்தது. ஆனால் கரணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது எனத் தெரிந்தால் கற்பகத்தின் நிலை?

Advertisement