Advertisement

எந்தன் காதல் நீதானே

அத்தியாயம் 21 

அகல்யா வீட்டினர் சம்மதம் சொன்னதும், புகழ் வீட்டினர் நேரம் எடுத்துக்கொள்ளவே இல்லை. மறுவாரமே பெண் பார்க்க வந்தனர். 


அகல்யாவை வெண்ணிலா தன் அறையில் வைத்து அலங்காரம் செய்தாள். அதோடு தன்னுடைய நகைகளை வேறு அணிவித்திருக்க, அந்நேரம் அறைக்கு வந்த ஜெய்யிடம் எப்படி இருக்கிறது எனக் காட்டி பெருமையாகக் கேட்க, 

ஏற இறங்க தங்கையைப் பார்த்தவன், “நல்லாத்தான் இருக்கு. ஆனா உன்னுடைய நகையைக் கழட்டிட்டு, அகல்யாவோடதையே போடு.” என்றவன், தங்கையின் நகைகளையும் கொண்டு வந்திருந்தான். அடகில் இருந்த நகையையும் மீட்டு இருந்தான். வெண்ணிலாவுக்குக் கோபம் வந்துவிட்டது. 

“சும்மா அலங்காரத்திற்குத் தான, யார் நகையா இருந்தா என்ன?” 

“அது நமக்குத் தெரியும், வர்றவங்களுக்குத் தெரியுமா? அவங்க அவளோட நகைன்னு நினைச்சுக்கப் போறாங்க.” 

“சில பேர் கவரிங் கூடப் போடுவாங்க. அதுக்காகக் கவரிங்க் நகையைப் போட்டா அனுப்புவாங்க.” என, ஜெய் அதையெல்லாம் காதிலேயே வாங்கவில்லை. அண்ணன் சொல்லிவிட்டால் அகல்யாவுக்குத்தான் வேத வாக்காயிற்றே, அவள் வெண்ணிலாவின் நகைகளைக் கழட்ட துவங்கி இருந்தாள். 

“ரொம்ப அநியாயம் பண்றீங்க நீங்க.” என வெண்ணிலா வெளிப்படையாக மனக்குமுறலை கொட்டத்தான் செய்தாள். 

“அகல்யா அக்கா தானே போட்டுக்கக் கூடாது. நான் போட்டுக்கிறேன்.” என ராதிகா போட்டுக் கொண்டாள். 

“ராதிகா அணிந்து கொண்டு அழகாக இருக்கிறதா?” எனக் கேட்க, 

“நல்லாத்தான் இருக்கு. ஆனா அகல்யாவுக்கு மேல நீ இவ்வளவு நகை போட்டுட்டு நின்னா நல்லவா இருக்கும்.” என வெண்ணிலா சொல்ல, ஆமாம் அதுவும் சரிதான் என ராதிகா பெரிய ஆரத்தை கழட்ட, “நெக்லஸ் மட்டும் போட்டுக்கோ.” என்றவள், மற்ற நகைகளை வாங்கிப் பத்திரப்படுத்தினாள். 

வெண்ணிலா ஏற்கனவே விழாவுக்கு ஏற்றது போல அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் தெரியாமல், பான்சி பட்டும் அதற்குப் பொருத்தமான நகைகளும் அணிந்து இருந்தாள். 

பெண் பார்க்கத்தானே என்று மகேஸ்வரி மட்டும் தான் வந்திருந்தார். அருகில் இருப்பதால் விமலா குடும்பத்துடனும், அதோடு அமுதாவின் உடன்பிறந்தவர்கள் என வீட்டில் சின்னக் கூட்டம் இருந்தது. 

மாப்பிள்ளை வீட்டினரும் அவர்களின் நெருங்கிய சொந்தங்களை அழைத்துக் கொண்டு வந்திருந்தனர். அதுவும் கிட்டத்தட்ட எல்லாம் முடிவான நிலை என்பதால்… பெண் பார்த்த அன்றே சம்ரதாயதிற்குத் தட்டும் மாற்றிக் கொள்ளும் எண்ணத்தில் தயராகவே வந்திருந்தனர். 

தட்டு மாற்றிக் கொள்ளும் முன்பு உறவினர் ஒருவர், “ பெண்ணுக்கு என்ன செய்வீங்க? இப்பவே சபையில சொல்லிடுங்க. அதே போல நீங்க என்ன எதிர்ப்பார்க்கிறீங்க சொல்லிடுங்க. ” என மாப்பிள்ளை வீட்டினரையும் கேட்க, 
“அவங்க செய்றது செய்யட்டும்.” என்றனர் புகழின் வீட்டினர். 

“பெண்ணுக்கு மாப்பிள்ளைக்கும் சேர்த்து என்பது பவுன் போடுறோம். அதோடு சீர் வரிசை செஞ்சிடுறோம். எங்க காலத்திற்குப் பிறகு பெண்களுக்குக் கொடுக்க இடம் வச்சிருக்கோம். ரெண்டு பெண்களுக்கும் அதுல சரிபாதி.” என்றார் ஜெயராமன். 

மகனின் விருப்பம் இந்தத் திருமணம் என்பதால்… புகழின் பெற்றோர் பெரிய எதிர்பார்ப்பு வைத்திருக்கவில்லை. ஆனால் ஜெயராமன் சொன்ன பிறகு புகழின் பெற்றோருக்கு வெகு திருப்தி. புகழ் அவர்களுக்கு ஒரே பிள்ளை. அவர்களுக்கு ஏற்ற விதத்தில் சீர் வரிசையோடு பெண் வரும்போது, இன்னும் மகிழ்ச்சியே. 

அப்போதே அகல்யாவுக்கு வாங்கி வந்திருந்த புடவையைக் கொடுத்து மாற்றி வர வைத்து தாம்புல தட்டும் மாற்றிக் கொண்டனர். கிட்டத்தட்ட நிச்சயதார்த்தம் தான். 

தாம்பூலம் மாற்றித் திருமணத் தேதி குறிக்கும் நேரத்தில், பொளாச்சியில் நல்ல உணவகத்தில் இருந்து, ஜெய் மதிய உணவை வரவழைத்து இருந்தான். அதனால் மாப்பிள்ளை வீட்டினர் இருந்து மதிய விருந்து உண்டு விட்டே சென்றனர். 

அகல்யாவின் திருமணத்தை முன்னிட்டு வெண்ணிலாவின் வளைகாப்பு ஒன்பதாம் மாதத்தில் வைத்துக்கொள்ளலாம் என முடிவானது. 

திருமணத்திற்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்க, கல்யாண வேலையில் எல்லோரும் மும்முரமாக இருந்தனர். யஸ்வந்த் அவன் பங்கு பணத்தை லோன் போட்டுத்தான் கொண்டு வந்து கொடுத்திருந்தான். ஜெய் இன்னும் பணத்திற்கு ஏற்பாடு செய்யவில்லை.
வெண்ணிலா கணவனிடம் மீண்டும் சொல்லிப் பார்த்தாள். 

“என்னோட நகையில கொஞ்சம் வச்சு அகல்யாவுக்கு இப்ப செய்வோம். நீங்க பிறகு என்னோடதை திருப்பிக் கொடுங்க. நாம சொல்லாம யாருக்கும் தெரியாது, நாம யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்.” எனக் கூடச் சொல்லிப் பார்த்தாள். ஜெய் கேட்க வேண்டும் அல்லவா. 

நல்லவேளை அந்த நேரம் பார்த்து பெரிய கட்டுமான நிறுவனம் அவர்கள் கட்டும் வில்லாவுக்குத் தோட்டம் அமைக்கும் பணியை ஜெய்க்கு கொடுத்தனர். அதற்கு வந்த முன்பணத்தை ஜெய் அப்படியே தங்கைக்கு என எடுத்து வைத்தான். 

பணத்திற்கு என்ன செய்வான் என்ற கவலையில இருந்தவளுக்கு, பணம் பிரச்சனை தீர்ந்ததில் வெண்ணிலாவுக்கும் நிம்மதிதான். 

அன்று பெரியவர்கள் வீட்டில் இல்லை. இளையவர்கள் மட்டுமே இருந்தனர். அகல்யா புகழோடு போன்னில் பேசுவதற்காக மாடிக்கு சென்றிருந்தாள். மற்றவர்கள் ஹாலில் இருந்தனர். 

பையன்கள் சேர்ந்தால் அப்பாமார்களைக் கிண்டல் செய்வது வழக்கம் தானே… அது போல அன்றும் கிண்டல் செய்து பேசிக்கொண்டிருந்தனர். 

“அகல்யா அக்கா கல்யாணத்துல செண்டு மேளம் வைப்போமா?” எனச் சத்யா கேட்க, 

“டேய் நீ பாட்டுக்கு எதாவது சொல்லாத, பெரிய பண்ணையும் சின்னப் பண்ணையும் டென்ஷன் ஆகிடுவாங்க. ஏற்கனவே செலவை நினைச்சு ரெண்டு பேரும் டென்ஷனா சுத்திட்டு இருக்காங்க.” என்றான் ஜெய். 

“எப்ப சந்தோஷமா செலவு பண்ணி இருக்காங்க சொல்லுங்க. பெரியப்பா கூடப் பரவாயில்லை. எங்க அப்பா இருக்காரே.” எனச் சத்யா சொன்னதற்கு ஜெய் சிரிக்க, 

ஏற்கனவே தனது அம்மாவை எல்லோரின் முன்பும் வைத்து காட்டிக் கொடுத்தான் என ஜெய் மீது ராதிகாவுக்குக் கோபம் இருந்தது. அதோடு இதுவும் சேர்ந்துகொள்ள, 

“எங்க அப்பாவை பார்த்தா உங்களுக்குக் கிண்டலா இருக்கா?” 

“பெரியப்பா தோட்டத்தை மட்டும் தான் பார்க்கிறாங்க. ஆனா எங்க அப்பா கடையும் பார்த்திட்டு தோட்டத்திற்கும் போறாங்க. அதிகமா வேலை செய்றது எங்க அப்பாதான். ஆனா எங்கப்பாவுக்கு அவரோட உழைப்புக்கு ஏற்ற வருமானம் வருதா? இல்லையே… எங்க அப்பாத்தான் இந்தக் குடும்பத்திலேயே இளிச்சவாயன்.” என்ற ரீதியில் அவள் பேச, 

“உனக்குத் தெரியாம உளறக் கூடாது. குற்றம் சொல்றதுக்கு முன்னாடி நல்லா தெரிஞ்சிட்டு பேசு.” என்றான் ஜெய். 

“உண்மையைச் சொன்னதும் உனக்குக் கோபம் வருதா? எப்பவுமே நீதான் புத்திசாலின்னு நினைக்காத. உனக்கு மட்டும் தான் பேச தெரியுமா என்ன? நான் கேட்டா நீ தாங்க மாட்ட.” என ராதிகா பேச, பேச்சுத் திசை திரும்புவதை உணர்ந்த வெண்ணிலா, 
“இப்படித்தான் உங்க அண்ணாகிட்ட பேசுவியா?” எனக் கேட்க, 

“எங்க அண்ணன் நான் பேசுவேன். நீ ஏன் நடுவுல வர?” என்றாள் வெண்ணிலாவையும் எடுத்தெறிந்து. 

“என் முன்னாடி அவரைப் பேசாத. என் முன்னாடி பேசினா நான் கேட்பேன்.” என வெண்ணிலாவும் திருப்பிக் கொடுக்க, 

“நான் பேசிக்கிறோம் நீ நடுவுல வராத.” எனக் கணவனும் சொல்ல, அதைக் கேட்டு ராதிகா வெண்ணிலாவை நக்கல் பார்வைப் பார்க்க, கோபத்தில் வெண்ணிலா அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள். 

நிஜமாகவே அவளுக்கு மனம் விட்டுப் போய் விட்டது. பணமாகவோ பொருளாகவோ தான் அவள் உதவியை அவன் ஏற்பது இல்லையென்றால்.. அவனுக்குச் சார்பாகப் பேசவும் அவளுக்கு உரிமை இல்லையா? என மனதிற்குள் பெரும் கோபமே எழுந்தது. ஆனால் அகல்யா கல்யாணத்தை முன்னிட்டு எதையும் காட்டிக்கொள்ளாமல் இருந்தாள். 

சின்னப் பெண் புரியாமல் பேசுகிறாள் என ராதிகா பேசியதை ஜெய் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சத்யா தன் அப்பாவிடம் அன்று இரவே ராதிகா பேசியதை சொல்லிவிட, சந்திரனுக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. 

மாடியில் வைத்து அவர் ராதிகாவிற்கு நன்றாக டோஸ் கொடுத்தார். அவர் சத்தமாகப் பேசியதால்… எல்லோருக்கும் நன்றாகவே கேட்டது. 

அவர் ராதிகாவை அடித்து விடப் போகிறார் என அச்சத்தில், ஜெய் அவர்கள் அறையின் படியில் நின்று கொண்டிருந்தான். 

மகளை நன்றாகப் பேசிவிட்டு, “இதெல்லாம் உன்னாலதான் நீதான் தப்புத் தப்பா சொல்லிக் கொடுக்கிற.” என அவர் மனைவியிடம் பாய, 

“நான் எதுவும் சொல்லலைங்க.” என்றார் காமாக்ஷி. 

சந்திரன் திரும்ப ராதிகாவிடம் வர, “போதும் சித்தப்பா, அதுதான் சொல்லிட்டீங்க இல்ல… விடுங்க. கோபம் வந்தா கண்டதையும் பேசுவான்னு எல்லோருக்கும் தெரிஞ்சது தானே.” என ஜெய் சொன்னதற்கு, 

“நீயும் அப்படித்தான். நீ மட்டும் ஒழுங்கு இல்லை.” எனக் கண்ணீருடன் ராதிகா சொல்ல, 

“உன்னை மாதிரி தெரியாம பேச மாட்டேன். ஒழுங்கா உங்க அப்பாகிட்ட உதை வாங்காம போ டி.” என்றான். ராதிகாவும் விட்டால் போதும் என்று கீழே சென்று விட, அதன்பிறகே சந்திரன் அறைக்குச் சென்றார். மற்றவர்களும் படுக்கச் சென்றனர். 

வெண்ணிலா எதிலும் பட்டுக்கொள்ளவில்லை. அவள் உடைமாற்றிப் படுத்து உறங்கி விட்டாள். 

ஜெய் அலுவலகம் முடிந்தால் தோட்ட வேலை அல்லது கல்யாண வேலை எனச் சுற்றிக்கொண்டிருந்தான். அவன் தாமதமாக வந்தாலும் வெண்ணிலாவும் எதுவும் கேட்பது இல்லை. 

ஐந்தாம் மாதம் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்பதையே காமாக்ஷி சொல்லித்தான் ஜெய் அவளை அழைத்துக் கொண்டு சென்றான். 

திருமணத்திற்கு ஒரு மாதமே இருக்க, பத்திரிகை வைக்கும் வேலை தொடங்கியது. ஜெயச்சந்திரன் அமுதாவுடன் காமாட்சியும் பத்திரிகை வைக்கச் சென்று விடுவார். முதலில் கல்யாணத்திற்குத் தேவையான சீர் வரிசை புடவை என அலைந்து கொண்டிருந்தனர். இப்போது பத்திரிகை வைக்கும் வேலை. 

காலையில் சென்றால் அவர்கள் திரும்ப இரவு ஆகும். வெண்ணிலாலவுக்குத் தான் அதிக வேலை. மதிய சமையல் இரவு சமையல் என வேலை அதிகம் இருந்தது. அகல்யா உதவுவாள் தான். ஆனால் புகழ் கைப்பேசியில் அடிக்கடி அழைப்பதால் பேச சென்று விடுவாள். 

அன்று ஜெய் சீக்கிரமே வீடு திரும்பி இருந்தான். வெண்ணிலா இரவு சமையலுக்குத் தயார் செய்து கொண்டிருந்தாள். பெரிய வயிறோடு அவள் மட்டுமே வேலை செய்வதைப் பார்த்ததும் தான் சுற்று வட்டாரத்தைக் கவனிக்க ஆரம்பித்தான். அகல்யா போன்னிலும், ராதிகா டிவியிலும் ஆழ்ந்து இருந்தனர். 

சிறிது நேரத்தில் பத்திரிகை வைக்கச் சென்றவர்களும் வந்து விட, அலைந்து விட்டு வந்ததில் அமுதாவும் காமாட்சியும் களைப்பாக இருக்க, வெண்ணிலா சமைத்து வைத்திருந்ததை எடுத்துக் கொண்டு உண்ண அமர்ந்தனர். 

அவர்கள் உண்டு முடிக்கும் வரை ஜெய் பேசவில்லை. பிறகு ஆரம்பித்தவன் தான் எல்லோருக்கும் போதும் போதுமெனும் அளவுக்குக் கிடைத்தது. 

“அண்ணி மாசமா இருக்கா, அவளை வேலைப் பார்க்க போட்டுட்டு நீ போன் பேசிட்டு இருக்க, போன் பேச வேண்டாம்னு சொல்லலை. ஆனா வேலை முடிச்சிட்டு பேச வேண்டியது தான. இதுக் கூட நான் சொல்லணுமா?” என அகல்யாவிடம் ஆரம்பித்து, 

“வீட்டு வேலை செய்ய உனக்கு வயசு பத்தாதா? அவ்வளவு பெரிய வயிறு வச்சிட்டு அவ தனியா வேலைப் பார்க்க, நீ உட்கார்ந்து டிவி பார்க்கிற.” என ராதிகாவுக்கும் கொடுத்து, 

“ஏன் மா பத்திரிகை வைக்க, நீங்க சித்தி ரெண்டு பேரும் போகணுமா. ஒருநாள் நீங்களும் அப்பாவும் போனா, ஒருநாள் சித்தாபாவும் சித்தியும் போகட்டும். பிள்ளைதாச்சி பெண்ணை வேலைப் பார்க்க போட்டுட்டு ரெண்டு பேரும் போயிட்டா என்ன அர்த்தம்.” 

“நீங்க இப்படி அவளை வேலைப் பார்க்க போட்டா, நான் அவளை அவ அம்மா வீட்டுக்கு அனுப்ப போறேன். கல்யாணத்துக்கு அவ அத்தையோட வரட்டும். கல்யாணத்துக்காக வளைகாப்பை வேற ஒன்பதாவது மாசம் வச்சாச்சு.” எனப் பெரியவர்களையும் அவன் பிடிக்க, 

அவன் சொன்ன பிறகே எல்லோருக்கும் தாங்கள் செய்த தவறு புரிந்தது. கல்யாண வேலையில் வெண்ணிலாவைப் பற்றி யோசிக்கவில்லை. அவள் இருந்ததால் தான் எந்தக் கவலையும் இல்லாமல் இருந்தனர். 

“வீணா அலையை வைக்க வேண்டாம். ஜெய் சொல்ற மாதிரி பண்ணிக்கலாம்.” ஜெயராமன் சொன்னதும், அதுவரை அமைதியாக இருந்த வெண்ணிலா வாய் திறந்தாள். 

“நீங்க இவர் சொல்றது எல்லாம் கேட்காதீங்க மாமா. இவர் இப்படித்தான் எதாவது சொல்லிட்டு இருப்பார்.” என்றவள், கணவனிடம், “நான் உங்ககிட்ட என்னால வேலை செய்ய முடியலைன்னு சொன்னேனா? எதுக்குத் தேவையில்லாம பேசுறீங்க. எனக்கு முடியலைன்னா நானே சொல்வேன்.” என்றாள். 

மனைவியை முறைத்தவன், “என்னவோ பண்ணித் தொலைங்க.” என அறைக்குச் சென்றுவிட்டான். 

அறைக்குச் சென்ற பிறகு யோசனையிலேயே இருந்தான். வெண்ணிலா அவனிடம் முன்பு போல எதுவும் பேசுவதே இல்லை. அதற்குக் காரணம் தான் தான் என்பதும் அவனுக்குப் புரிந்தது. 

“கல்யாணம் கட்டி கூட்டி வந்து கொஞ்சம் படுத்திதான் வைக்கிறோமோ.” என நினைத்தும் கொண்டான். 

வெண்ணிலா மெதுவாகத்தான் வந்தாள். அவள் உடைமாற்றி வரும்வரை பொறுமையாக இருந்தவன், “நிலா, என் மேல உனக்குக் கோபமா? நீ முன்னாடி மாதிரி என்னோட பேசுறது கூட இல்லை.” என்றதற்கு, 

“எனக்கு என்ன உங்க மேல கோபம்? கோபப்பட எனக்கு உரிமை இருக்கா என்ன? உங்களுக்காக நான் பேசினா கூட உங்களுக்குப் பிடிக்காது.” என்றால் வெண்ணிலாவும் நறுக்கென்று. 

“அன்னைக்கு ராதிகா கூட நடந்த சண்டையைத் தான சொல்ற. அன்னைக்கு ஏன் அப்படிச் சொன்னேன் தெரியுமா? அவ என்னை எதாவது சொன்னா பரவாயில்லை. உன்னைச் சொல்லிட்டா என்னால தாங்க முடியாது. ராதிகா கோபத்துல என்ன வேணா பேசுவா, அதனால அப்படிச் சொன்னேன்.” 

“உங்களுக்கு என்னைச் சொன்னா தாங்க முடியாது. ஆனா எனக்கு மட்டும் உங்களைப் பேசினா இனிக்கும் பாருங்க.” என்ற மனைவியின் ஆதங்கம் ஜெய்க்கு அப்போதுதான் புரிந்தது. 

இவனுக்கு மனைவியை மற்றவர் பேசினால் தாங்க முடியாது என்பதைப் போலத்தானே அவளுக்கும் இருக்கும். 

“ரொம்பச் சொதப்புற டா…” என நினைத்தவனுக்கு வெண்ணிலாவை எப்படிச் சமாதானம் செய்வது என்றே புரியவில்லை. 

வெண்ணிலா அவன் சமாதானத்தை ஏற்கும் மனநிலையிலும் இல்லை. 

“இன்னைக்கு எதுக்கு எல்லோரையும் கத்தினீங்க. அவங்க நான் சொல்லித்தானே நீங்க பேசுறதா நினைப்பாங்க.” 

“நீங்க உங்க வேலையைப் பாருங்க. எனக்கு என்னைப் பார்த்துக்கத் தெரியும். ரொம்ப அக்கறை இருக்க மாதிரி நடிக்க வேண்டாம்.” 

“நீங்க பாட்டுக்கு எதாவது பேசி வைக்க வேண்டியது. நான் எப்படி அவங்களைப் பார்ப்பேன்.” 

“உண்மையாவே எனக்கு இங்க வேலை செய்றது எல்லாம் பிரச்சனை இல்லை. நீங்க இப்படி பேசி வைக்கிறதுதான் பிரச்சனை.”
“ரொம்ப அக்கறை இருக்கிறவரா இருந்தா, வேலை முடிஞ்சு வந்து என்னோட இருக்க வேண்டியது தான. உங்களால அது முடியாது தான. உங்களுக்கு வேலை இருக்கிறது போலத்தான் மத்தவங்களுக்கு அவங்க வேலை முக்கியம்.”
“உங்களால நிஜமாவே எனக்கு நிம்மதி இல்லை. எப்போ எங்க அம்மா வீட்டுக்கு போவோம்ன்னு இருக்கு.” என்ற வெண்ணிலா கண்ணீர் சிந்த, 

அவள் கொஞ்சம் கலங்கினாலே அவனால் தாங்க முடியாது. இப்போது கண்ணீரே சிந்தவும் ஜெய்க்கு தாங்கவே முடியவில்லை. அதுவும் அந்த அழுகைக்குக் காரணம் அவன் என்னும் போது, இன்னும் வலித்தது.

Advertisement