Advertisement

எந்தன் காதல் நீதானே 

அத்தியாயம் 2 

திருமணத்திற்குப் பத்திரிகை அடித்து வந்துவிட்டது. அதைக் குல தெய்வ கோவிலில் வைக்க இரண்டு குடும்பமும் பொள்ளாச்சி அருகில் இருக்கும், அவர்கள் பூர்வீக ஊருக்கு சென்றனர். 


வேலை இருக்கிறது எனச் சொல்லி கரன் வரவில்லை. வெண்ணிலாவை மட்டும் தனியே வீட்டில் விட முடியாது என அவளையும் அழைத்துக் கொண்டு இரு குடும்பமும் சென்றனர். அப்படியே திரும்பி வரும் வழியில் அவர்கள் சொந்த ஊரில் இருக்கும் உறவினர்களுக்குப் பத்திரிகை வைத்து விட்டு வந்து விடலாம் என எண்ணம். 

இன்னும் திருமணத்திற்கு ஒரு மாதமே இருக்க… சற்றுத் தொலைவில் இருப்பவர்களுக்கு வைத்து விட்டு வந்தால்… உள்ளுரில் இருப்பவர்களுக்குப் பத்து நாட்கள் கழித்துக் கொடுக்க ஆரம்பிக்கலாம் என ராஜகோபால் நினைத்து இருந்தார். 

விடியற்காலை நான்கு மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி பொள்ளாச்சி அருகில் இருக்கும் அவர்கள் கோவிலுக்கு எட்டு மணிக்கு வந்து விட்டனர். வெண்ணிலாவின் அண்ணன் யுவராஜ் தான் காரை ஓட்டிக் கொண்டு வந்தான். 

கோவிலில் பொங்கல் வைத்து படைத்து பூஜை முடித்து, கொண்டு வந்த இட்லியோடு, பொங்கலையும் வைத்து உண்டு விட்டு, சிறிது நேரம் கோவிலில் இருந்து ஓய்வு எடுத்தனர். பிறகு அங்கிருந்து கிளம்பி, முதலில் மகேஸ்வரியின் பிறந்த வீடு வரும் என்பதால்… அங்கே பத்திரிக்கை வைக்கச் சென்றனர். 

வெகு நாட்கள் கழித்துப் பாட்டி வீட்டிற்குச் செல்லும் குஷியில் வெண்ணிலா இருந்தாள். 

செல்லும் வழியாவும் சின்ன வயது நினைவுகள் தான். பாட்டியின் வீடு பெரிதாக இருக்கும். அந்தக் கால வீடு. வாசலில் திண்ணை, நடுவில் திறந்த வடிவிலான முற்றம், பின் கட்டில் பெரிய கிணறு எனப் பழமை மாறாமல் இருக்கும். 

முற்றத்தில் அந்தக் காலப் பெரிய வெள்ளை ஆட்டுகல் இருக்கும். சின்ன ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டு ஒருவர் மாவு அரைக்க மற்றவர் தள்ளி விடுவர். 

ஒரு நாள் கிரைண்டர் பழுது என அத்தை உரலில் ஆட்ட, நான் தள்ளி விடுறேன் என வெண்ணிலா ஆசைப்பட்டுக் கேட்க, அமுதாவும் சரியென்றார். அப்போது அவள் ஏழாம் வகுப்பில் இருந்தாள். அமுதா அரைக்க, வெண்ணிலா அரிசியைத் தள்ளி விட்டுக் கொண்டிருந்தாள். அப்போது அவள் தெரியாமல் விரலை உரலில் கொடுத்து விட, அமுதாவும் கவனிக்காமல் அவள் விரலை நசுக்கி விட்டார். 

வெண்ணிலா வலியில் துடிக்க, அமுதா தண்ணீர் இருந்த பாத்திரத்தில் அவள் கையை விடச் சொல்லிக் கொண்டிருந்தார். 
அந்த நேரம் வெளியில் இருந்து வந்த ஜெய், என்ன நடந்தது எனக் கேட்டு தெரிந்து கொண்டவன், வெண்ணிலாவின் கண்ணில் கண்ணீரை பார்க்கவும் தாங்க முடியாமல், “அதுதான் வீட்ல கிரைண்டர் இருக்கு இல்ல… பிறகு ஏன் இதுல ஆட்டி, அந்தப் பிள்ளை கையை நசுக்கிறீங்க. இது இருந்தா தானே ஆட்டுவீங்க.” என்றவன்,
எல்லோரும் கத்த கத்த, ஆட்டும் குழவியைத் தூக்கி சென்று பின்கட்டில் போட்டு விட்டு வர… அவன் அடிக்கும் கூத்தை பார்த்து, வீட்டில் இருந்தவர்களுக்கு ஒரே சிரிப்பு. 

இப்போது வீடு எப்படி இருக்கிறது எனத் தெரியவில்லை. பாட்டி இறந்த பிறகு வீட்டை இடித்துக் கட்டினார்கள். ஆனால் வெண்ணிலா இன்னும் அந்த வீட்டை பார்க்க வில்லை. 

மதியம் போலக் கோட்டூர் சென்று சேர்ந்து விட்டனர். காரில் இருந்து இறங்கி வீட்டை பார்த்தவளுக்கு ஒரே பிரமிப்பு தான். ஓட்டு வீடு இப்போது இரண்டு அடுக்குகளைக் கொண்ட மாடி வீடாக இருந்தது. 

மற்றவர்களுக்கும் அப்படித்தான். இப்படி வீடு பெரிதாக இருக்கும் எனக் கற்பகமே எதிர்பார்க்கவில்லை. வீடு பால் காய்ச்சும் போது மகேஸ்வரி மட்டுமே வந்திருந்தார். 

மகன் தலையெடுத்ததும் நல்ல வசதிதான் போல…. என நினைத்தபடி கற்பகம் உள்ளே சென்றார். வீட்டில் அனைவரும் இவர்களை ஆவலாக வரவேற்றனர். 

அண்ணன் தம்பி இருவரும் இன்னும் கூட்டுக் குடும்பமாக இருந்தனர். மூத்தவர் ஜெயராமன் அவர் மனைவி அமுதா அவர்களது பிள்ளைகளில் மூத்தவன் ஜெய் ஆனந்தன், இளைய மகன் யஸ்வந்த், கடைசி மகள் அகல்யா அதே போல இளையவர் ஜெய்சந்திரன் அவர் மனைவி காமாக்ஷி அவர்களது பிள்ளைகளில் மூத்தவள் ராதிகா, இளையவன் சத்யா எனப் பெரிய குடும்பம் அவர்களுடையது. 

முன்தினமே வருதாகச் சொல்லி இருந்ததால்… விருந்தும் தயராகிக் கொண்டிருந்தது. முதலில் பத்திரிகை கொடுத்து விடலாம் எனப் புதுத் தாம்பளத்தில் பூ, பழங்கள் மற்றும் இனிப்போடு பத்திரிக்கையை வைத்து ராஜகோபாலும் மகேஸ்வரியும் தம்பதி சகிதமாக நின்று ஜெயராமன் ஜெயச்சந்திரன் இருவரிடமும் பொதுவாகக் கொடுத்தனர். 

“எல்லோரும் கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்திடுங்க.” என அன்பரசி சொல்ல, 

“நம்ம வீட்டுக் கல்யாணம் இல்ல அதெப்படி நாங்க இல்லாம. அம்மா இருந்திருந்தா ரொம்பச் சந்தோஷப்பட்டிருப்பாங்க.” என்றார் ஜெயராமன். 

“ஆமாம் அண்ணா, வெண்ணிலா கல்யாணத்து வரையாவது அம்மா இருந்திருக்காலாம்.” என்றார் மகேஸ்வரியும். 

“சரி இனி அதைப் பேசி என்ன ஆகப்போகுது. சாப்பாடு எடுத்து வைக்கிறேன். எல்லோரும் சாப்பிட வாங்க.” என அமுதா சொல்ல, தயாராக இருந்த உணவுகளை உண்டனர். 

உணவருந்தி முடித்ததும் மகேஸ்வரியின் தங்கை மற்றும் இன்னும் சில சொந்தங்களுக்குப் பத்திரிகை வைக்க வெண்ணிலாவை தவிர மற்றவர்கள் கிளம்பி செல்ல.. அதன் பிறகு தான் வெண்ணிலாவால் இயல்பாக இருக்க முடிந்தது. 

ஜெய் மட்டும் தான் அங்கே இல்லை. “ஜெய் அத்தான் எங்க?” என அவள் கேட்க, அங்கே ஒரு சங்கடமான மௌனம். 

“இப்ப சாப்பிட வருவான்.” எனச் சொல்லிவிட்டு ஜெயராமன் உள்ளே சென்று விட்டார். அன்று சின்ன அத்தையின் ஒன்று விட்ட அண்ணன் மகள் கவிதாவும் இருந்தாள். 

அகல்யாவோடு வெண்ணிலா வீட்டை சுற்றிப் பார்த்தாள். முன்பு இருந்த ஓட்டு வீடு அவளுக்கு மிகவும் பிடிக்கும். பாரம்பரியமாக இருக்கும். 

“அந்த வீடு ரொம்ப நல்லா இருக்கும் இல்ல… முத்தம் எல்லாம் வச்சு.” என வெண்ணிலா பழைய நினைவில் இருக்க…

“இங்கேயும் இருக்கே…” என்ற அகல்யா உணவு அறையின் பக்கவாட்டு கண்ணாடி கதவைத் திறக்க, இப்போது இருக்கும் காலத்திற்கு ஏற்ற வகையில் முற்றம் இருந்தது. சுற்றிலும் ரோஜா செடிகள் வைத்து, வெளியே இருந்து யாரும் வந்துவிடாமல் இருக்க, பாதுகாப்பிற்கு உருளையான கம்பிகள் இடைவெளி விட்டு அமைத்திருந்தனர். 

ரொம்ப வெயிலும் விழாமல், அதே சமயம் வெளிச்சமும் காற்றும் வரும்படி, அந்த இடம் இருக்க,
“வாவ் ரொம்ப நல்லா இருக்கு.” என்ற வெண்ணிலா அங்கிருந்த கிரானைட் கல்லில் உட்கார்ந்து கொள்ள… 

“ஜெய் அண்ணன் தான் இது வச்சே ஆகணும்னு பிடிவாதம்.” என்றாள் அகல்யா.

முதல் மாடியில் சின்ன ஹால் தான். அறைகள் தான் நிறைய இருந்தது. அது தவிர மொட்டை மாடியில் ஒரு அறை. அறை நல்ல விசாலமாக இருக்க, அது ஜெயின் அறை. இருந்த மீதி இடத்தில் தோட்டம் அமைத்திருந்தனர். 


வீட்டை சுற்றிப் பார்த்துவிட்டு ஹாலில் வந்து உட்கார, வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டு வெண்ணிலா ஆவலாக வாசலைப் பார்க்க, அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் வந்தது ஜெய் ஆனந்தன் தான். 

அவனைப் பார்த்ததும் வரவேற்கும் விதமாக மலர்ந்த முகத்துடன், வெண்ணிலா எழுந்து நிற்க, அவளைப் பார்த்ததும் கண்டுகொள்ளாது ஜெய் அவளைக் கடந்து செல்ல, அடிவாங்கிய குழந்தை போல வெண்ணிலாவின் முகம் மாறி விட்டது. 

அவள் மீண்டும் சோபாவில் அமர்ந்து கொள்ள, வீட்டினருக்கே சங்கடமாக இருக்க, கவிதா மட்டும் சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

ஜெய் உணவைக் கூட மாடிக்கு வரவழைத்து உண்டான். பாட்டி வீடென்றால் பாட்டிக்கு பிறகு நியாபகம் வருவது ஜெய் தான். ஆனால் இன்று அவன் அவளைப் பார்க்க கூட விரும்பாதது மிகுந்த வலியை கொடுத்தது. 

அதன் பிறகு வெண்ணிலாவின் கலகலப்பு குறைந்து அமைதியாக இருந்தாள். பத்திரிக்கை வைக்கச் சென்றவர்கள் மாலைதான் திரும்பினர். அவர்கள் வந்ததும் சிற்றுண்டி, டீ என அமர்க்களப்பட… 

அமுதா வெண்ணிலாவை பூஜை அறைக்கு அழைத்துச் சென்று, ஒரு தட்டில் பட்டுப் புடவை, பூ, பழம், இனிப்பு என எல்லாம் வைத்துக் கொடுத்தவர், “நம்மதுல கல்யாணத்தன்னைக்குக் குளிச்சிட்டு முதல்ல தாய் மாமன் கொடுக்கிற புடவையைத் தான் கட்டனும். பிறகு தான் கல்யாணப் புடவை. உன்கிட்டயே நேர்ல கொடுத்திடலாம்னு எடுத்து வச்சோம்.” என்றவர், கல்யாணத்துக்குப் பிறகு உன் வீட்டுக்காரரோட நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வரணும்.” எனவும் சொல்ல, 

“இன்னைக்கு என்னை இங்க வர விட்டதே பெரிசு. நான் ரொம்ப அசையா வந்தேன். ஜெய் அத்தான் என்னோட பேசவே இல்லை. அதுதான் எனக்கு வருத்தம். இனி நான் எப்ப இங்க வருவேன்னு கூடத் தெரியாது.” சொல்லும் போதே வெண்ணிலாவின் கண்கள் கண்ணீரை சிந்த, 

“அவனுக்கு உன் மேல மட்டும் இல்லை. எங்க எல்லார் மேலும் கோபம்.” 

“ஏன்?” 

“இனி தெரிஞ்சு ஒன்னும் ஆகப்போறது இல்லை. நீ சந்தோஷமா போய்ட்டு வா…” என அமுதா சொல்லும் போதே…. 

“இவ எங்கப் போனா?” எனக் கற்பகம் வர… வெண்ணிலா கண்ணீரை வேகமாகத் துடைத்து விட்டு வெளியே சென்றாள். 

பெரிய விழிகள் சிவந்து, அவள் அழுத சுவடு நன்றாகத் தெரிய, யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் சென்று காரில் ஏறினாள். கார் கிளம்பும் போது கூட, எங்காவது ஜெய் தென்படுகிறானா என அவள் விழிகள் தேடி அலைந்தது. 

அவளை நிம்மதி இழக்க செய்த ஜெய் மட்டும் நிம்மதியாக இருந்து விடுவானா என்ன?
காரில் திரும்ப வரும்போது கற்பகம் மருமகளிடம், “உங்க வீட்ல வேற ஒரு பொண்ணு இருந்துச்சே யாரு?” என்றதற்கு, 

“அது எங்க சின்ன அண்ணியோட அண்ணன் பொண்ணு. அவங்களுக்குக் கவிதாவை ஜெய்க்குச் செய்ய விருப்பம். கேட்டுட்டு இருக்காங்க. ஆனா அண்ணன் இன்னும் ஒன்னும் சொல்லலை.” என்றார் மகேஸ்வரி. அந்த விஷயம் வெண்ணிலாவுக்கே அப்போதுதான் தெரியும். 

வீட்டிற்கு வந்து சேர்ந்த போது நள்ளிரவுக்கு மேலாகி இருக்க, அதுவும் ஒரே நாள் நீண்ட தூரபயணம் எல்லோரையும் களைப்படைய செய்திருந்தது. வந்ததும் படுத்து உறங்கி, மறுநாள் தாமதமாகத்தான் எழுந்தனர். 

தனக்குத் திருமணம் என்ற உற்சாகமே வெண்ணிலாவிடம் இல்லை. ஒருவேளை கரன் ஆர்வம் காட்டியிருந்தால் கூட, அவளுக்கும் வந்திருக்குமோ என்னவோ. 

இதில் கற்பகமும், அன்பரசியும் வேறு கரனிடம் எதாவது கேட்க வேண்டும் என்றாள்.. வெண்ணிலாவை தான் அழைத்துக் கேட்க சொல்வர். 

ஒரே நாளில் இரண்டுமுறை அழைத்திருந்தவள், மீண்டும் எதோ கேட்க அழைக்க, “இப்ப என்ன?” என்ற கரனின் குரலில் எரிச்சல் இருக்க, 

“எனக்கும் ஒன்னும் உங்களுக்குப் போன் பண்ணனும்னு ஆசை இல்லை. பாட்டி தான் கேட்க சொன்னாங்க.” அவனுக்குக் குறையாத எரிச்சலில் வெண்ணிலாவும் பட்டென்று சொல்லி விட… ஒரு நொடி அந்தப் பக்கம் கனத்த மௌனம். 

ச்ச ஏன் இப்படிப் பேசினோம் என வெண்ணிலா நினைக்கும் போதே, 

“ஒரு வருங்காலக் கணவன்கிட்ட பேசுற மாதிரியா பேசுற?” என்ற கரன், “அப்படியெல்லாம் பேச உனக்கு வரலை இல்லை வெண்ணிலா. எனக்கும் உன்கிட்ட வரலை.” என அவன் சொன்னதும், முதலில் அவன் என்ன சொல்ல வருகிறான் என்றே வெண்ணிலாவுக்குப் புரியவில்லை. 

“நமக்குக் கல்யாணம்னா எப்படி இருக்கணும். ஆனா எனக்கு அப்படி ஒரு பீலே வர மாட்டேங்குது. இன்னைக்கு வீட்ல சொல்றாங்கன்னு கல்யாணம் பண்ணிட்டு. நாளைக்குக் கல்யாணத்துக்குப் பிறகும் நாம மத்தவங்களுக்காக வாழ முடியாது இல்லையா?” 

இப்போதுதான் அவனின் பேச்சு போகும் திசை வெண்ணிலாவுக்குப் புரிய ஆரம்பிக்க, “அதுக்கு?” என இவள் கேட்க, 

“இப்படி நாம மத்தவங்களுக்காகக் கல்யாணம் பண்ணிக்கனுமா?” எனக் கரன் சொல்லியே விட… 

“இது உங்களுக்கு இப்பத்தான் தோணுதா? பத்திரிக்கை அடிச்சு… சில பேருக்கு கொடுக்கவும் செஞ்சிட்டாங்க.” 

“அதுக்காக எல்லாம் பார்த்தா நம்ம வாழ்க்கை தான் நரகமாகிடும்.” 

“எனக்கு அதெல்லாம் தெரியாது. இதெல்லாம் நீங்க நிச்சயத்துக்கு முன்னாடி சொல்லி இருக்கணும். இப்ப கல்யாணம் நின்னா எல்லாருக்கும்தான் அசிங்கம்.” என்றாள் வெண்ணிலா. 

“உனக்கு இந்தக் கல்யாணம் ஒகே வா…” 

“எங்க அப்பா அம்மா எனக்கு எது செஞ்சாலும் நல்லதுக்குதான் இருக்கும். அது தவிர நான் வேற எதுவும் யோசிக்கலை. யோசிக்கவும் விரும்பலை.” என்ற வெண்ணிலா போன்னை வைத்து விட…
இப்ப என்ன டா செய்வது எனக் கரன் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான்.
அவனுடைய எதிர்பார்ப்பு வேறு…. அவன் ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்ய வேண்டும். அதோடு அந்தப் பெண் நன்றாகப் படித்து, நல்ல வேலையில் இருக்க வேண்டும். அவளோடு உலகமெல்லாம் சுற்ற வேண்டும் என்பது அவனது ஆசை. 

அவனின் பதின் பருவத்தில் வெண்ணிலா அவனுக்குத் தேவதையாகத்தான் தெரிந்தாள். அப்போது வீட்டில் சொல்லும்போது மறுக்கவும் தோன்றவில்லை. ஆனால் வீட்டை விட்டு படிக்க என வந்து வெளியுலகை பார்த்த பிறகு, அவனுடைய விருப்பங்கள் மாறி விட்டது. அதோடு அவன் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் இருந்த அஞ்சனாவை பார்த்ததும், வெண்ணிலாவோடு திருமணம் என்பது முடியாது என்றே தோன்றி விட்டது. 

இத்தனைக்கும் இன்னும் அஞ்சனாவிடம் அவன் காதலை சொல்லி இருக்கவில்லை. இருவருக்கும் இடையே பிடித்தம் உருவாகி இருந்தது. 

கரனுக்கு அமெரிக்காவில் பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்க… அவனைத் திருமணம் செய்தால்… தானும் வெளிநாடு சென்று விடலாம். தனக்கும் அங்கே வேலை கிடைக்கும். பிறகு வளமான வாழ்க்கை என்ற எண்ணத்தில் அஞ்சனா கரனிடம், “நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோமா?” எனக் கேட்டிருந்தாள். 

இப்படியெல்லாம் தனக்குப் பெரிய வாய்ப்பு வரும் எனக் கரன் எண்ணி இருக்கவில்லை. இப்போது அஞ்சனா கேட்டதும், நல்ல வளமான வாழ்க்கையை நழுவ விட வேண்டுமா எனத் தோன்றி விட்டது. 

கரன் வெளிநாட்டில் வேலை கிடைக்கும் போல என்று சொன்னதற்க்கே… “அதெல்லாம் வேணாம். சென்னையில இருக்கிறதுனா இரு. இல்லைனா வேலையை விட்டுட்டு வா… என்னைக்கா இருந்தாலும், நீதான் நம்ம பிஸ்னஸ் பார்க்கணும்.” என அன்பரசி சொல்லி இருக்க… அதன் பிறகு கரன் வீட்டில் எதையுமே சொல்லவில்லை. 

வெண்ணிலா என்ன எண்ணத்தில் இருக்கிறாள் எனத் தெரிந்துகொள்ளவே அவளிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். அவள் பதிலும் அவனுக்குச் சாதகமாக இல்லை. 

தன்னுடைய விருப்பமா வீட்டினரா என்ற குழப்பத்தில் இருந்தவன், மற்றவர்களுக்காகத் தன்னுடைய விருப்பத்தை விட வேண்டுமா? கல்யாணம் நின்றால், இரண்டு நாட்கள் அழுவார்கள். பிறகு தானே சமாதானம் ஆகி விடுவார்கள் என்ற நம்பிக்கையில். வீட்டில் சொல்லாமலே கரன் வெளிநாடு சென்று விட்டான்.

இங்கிருந்தால் அவனை மிரட்டி உருட்டி வெண்ணிலாவுடன் திருமணத்தை நடத்தி விடுவர் என தெரியும். அவன்  சென்னையில் இருந்ததால்… யாருக்கும் தெரியாமல் அவனால் கிளம்பவும் முடிந்தது.

Advertisement