Advertisement

எந்தன் காதல் நீதானே

அத்தியாயம் 19 

அன்று மாலையே மகேஸ்வரி திரும்ப வேண்டும் என்பதால், காலையே கிளம்பி வந்திருந்தனர். ஞாயிற்றுக் கிழமை என்பதால் எல்லோரும் வீட்டில் தான் இருந்தனர். ஆனால் ஜெய் மட்டும் இல்லை. தெரிந்த கதை தானே என வெண்ணிலா மனதில் நினைத்துக் கொண்டாலும், வெளியே காட்டிக்கொள்ளாமல் மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள். 


வெண்ணிலாவை பார்க்க அன்று விமலாவும் தன் பிள்ளைகளோடு வந்திருந்தார்.

மதிய உணவு தடபுடலாகச் சமைத்திருந்தனர். எல்லோரும் உணவு உண்ண அமரும் நேரம் ஜெய்யும் வந்துவிட்டான். 


“வாங்க அத்தை.” என்றவன், “கார்ல வரும் போது எதுவும் பிரச்சனை இல்லையே?” என மனைவியையும் நலம் விசாரிக்க, 

“ம்ம்… இல்லை.” என்றாள். அவன் சாதாரணமாகப் பேசவும் வெண்ணிலாவுக்கு ஒரே குழப்பம். நம்ம மேல கோபம் இல்லையா? நாமதான் தேவையில்லாம பயந்திட்டு இருந்தோமா என நினைத்தவள், அவளும் அதன்பிறகே இயல்பாக இருந்தாள். 

உணவு மேஜையில் எல்லோரும் உட்கார முடியாது என ஹாலில் உட்கார பந்திப் பாய் விரித்து, வாழை இலையில் உணவு பரிமாறினர். 

வெண்ணிலா பரிமாறச் செல்ல, கீழே குனிந்து பரிமாறச் சிரமமாக இருக்கும் என அமுதா அவளை வேண்டாம் என்றுவிட… அவளும் கணவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.
காமாட்சியும் அகல்யாவும் எல்லோருக்கும் பரிமாறிவிட்டு, அவர்களும் மற்றவர்களோடு சேர்ந்து உண்ண அமர்ந்தனர். 

“எவ்வளவு நாளாச்சு இப்படி எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு. அம்மா இருக்கும் போது இப்படிச் சாப்பிட்டது.” என மகேஸ்வரி சொல்ல, 

“ஆமாம் அதுக்குப் பிறகு நீ எங்க வந்து நம்ம வீட்ல தங்கின.” என்ற விமலா, “இப்பவும் உன் மகளை இங்க செஞ்சிருக்கிறதுனால வந்திருக்க… இல்லைனா உன் வீட்டு ஆளுங்க விடுவாங்களா என்ன?” என்றார். 

“ஆமாம் இப்படியெல்லாம் நடக்கும்னு நானே எதிர்ப்பார்க்கலை. பிறந்த வீட்டு சொந்தம்னு இல்லாமலே போயிடுமோன்னு எல்லாம் பயந்திருக்கேன். நல்லவேளை அப்படி எதுவும் நடக்காம கடவுள் காப்பாத்தினார்.” 

“ஜெய் காப்பாத்தினான்னு சொல்லு.” என விமலா சொல்லவும் மற்றவர்கள் சிரித்தனர்.
பேச்சும் சிரிப்புமாக மதிய உணவு முடிந்தது. எல்லாம் எடுத்து வைத்த பிறகு பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்க, தனது நாத்தனார்களுடன் இருந்த வெண்ணிலாவை ஜெய் சென்று அழைக்க… 

“அதெல்லாம் இப்ப விட முடியாது. நாங்களே ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்குத்தான் சேர்ந்திருக்கோம். என்னை அத்தை வீட்டுக்கு போக விடலை இல்லை. நாங்க பேசிட்டுதான் நீ பேசணும்.” என ராதிகா வெண்ணிலாவை பிடித்து வைத்துக்கொள்ள, 

ஜெய் அவளை முறைத்தபடி வெண்ணிலாவை அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்றான். தனியாக வந்ததும், “நீ அகல்யாகிட்ட புகழை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமான்னு கேளு.” என, இப்போதா என்பது போல வெண்ணிலா பார்க்க, 

“ஆமாம் இப்பத்தான். நான் வீட்ல பேசணும்.” என்றதும், வெண்ணிலா அகல்யாவிடம் எதோ கேட்பது போல, அவளைத் தனியாக அழைத்துச் சென்றவள், ஜெய் சொன்னதைச் சொல்லி அவளின் சம்மதம் கேட்க, 

“அண்ணன் எது செஞ்சாலும் என் நல்லதுக்குதான் இருக்கும்.” என்றால் அவள் நாத்தனார். 

“இந்தப் பாசமலர் கதை எல்லாம் வேண்டாம். உங்க அண்ணன் அவர் விருப்பத்துக்குதான் கல்யாணம் பண்ணார். அதை நினைவுல வை. உனக்குப் பிடிச்சிருக்கா இல்லையா அதுதான் கேள்வி.” 

“எனக்குப் பிடிச்சிருக்கு.” என அகல்யா சொல்ல, வெண்ணிலா அவளை நிஜம் தானா என்பது போலப் பார்க்க, 

“உண்மையாவே பிடிச்சிருக்கு.” என அகல்யா சிரித்தபடி சொல்ல, பிறகே வெண்ணிலா அங்கிருந்து சென்றாள். 

ஹாலில் மற்றவர்களுடன் அமர்ந்திருந்த ஜெய் வெண்ணிலா வருவதைப் பார்த்து, அவளை ஆவலாக நோக்க, சம்மதம் என்பதாக வெண்ணிலா தலையசைக்க, ஜெய் அப்போதே வீட்டில் சொல்லிவிட்டான். 

“உங்க எல்லோருக்கும் புகழை தெரியும். அவனுக்கு அகல்யாவை கேட்கிறாங்க. நான் செய்யலாம்னு நினைக்கிறேன்.” 

அவன் சொன்ன தொனியே, அவன் சம்மதம் கேட்கவில்லை. தகவல் தான் சொல்கிறேன் என்பது போல இருக்க.. ஜெயராமனுக்குக் கடுப்பாக இருந்தது. 

“நீ எங்ககிட்ட சம்மதம் கேட்கிறியா? இல்லை தகவல் சொல்றியா?” 

“நீங்க எப்படி நினைக்கிறீங்களோ அப்படி” என ஜெய் தோளைக் குலுக்க,
இவன் அடங்கமாட்டான் என நினைத்த வெண்ணிலா, 

“அவர் சொல்ற இடம் நல்ல இடம் தானே மாமா. அதோட புகழ் அண்ணாவை நம்ம எல்லோருக்கும் தெரியும். வெளிய எங்கையோ செய்றதுக்கு இது பரவாயில்லை இல்லையா?” என வெண்ணிலா கணவன் சார்பாகப் பேச, 

“நல்ல இடம்தான் இல்லைன்னு சொல்லலை மா.. ஆனா அவங்க நம்மை விட வசதி. அவங்க எதிர்ப்பார்க்களைனாலும், நாம அவங்க அளவுக்குச் செய்யணும்.” 

“அதுகென்ன நாமும் செய்யலாம்.” என்றான் ஜெய். 

“அகல்யாவுக்குச் செய்யுற அளவு ராதிகாவுக்கும் செய்யணும்.பொதுவுல இருந்து அவ்வளவு செய்ய முடியாது. அவ்வளவு வருமானமும் இல்லை.” 

“நீங்க செய்யுறது செய்யுங்க. மிச்சத்தை நான் செய்யுறேன். யஸ்வந்தும் வேலைக்குப் போறான்.” 

“அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன். ஒரே வீட்ல இருந்து ஒரு பெண்ணுக்கு அதிகமாகவும், இன்னொரு பெண்ணுக்கு கம்மியாவும் செய்யுறது நியாயம் இல்லை.” 

“யாரு ராதிகாவுக்குக் கம்மியா செய்யலாம்னு சொன்னது? அவளுக்கும் செய்யலாம் பா… அதுக்கு இன்னும் மூன்னு வருஷம் இருக்கு. அதுக்குள்ள சேர்த்திடலாம்.” என்றான் ஜெய். 

“இன்னைக்குப் பேசுவீங்க டா… ஆனா உங்க குடும்பம் பெரிசானா, உங்களுக்கு அந்தச் செலவே பெரிசா தெரியும். எதுக்கு அதெல்லாம், நாங்க எங்களுக்கு ஏத்த இடத்தில செஞ்சிட்டு போறோம்.” 

“அதுதானே நான் ஒன்னு சொல்லி நீங்க கேட்டுட்டாத்தான் அதிசயமே. பிள்ளைகளையும் கொஞ்சம் நம்புங்கப்பா. எப்பவும் இப்படியே இருக்க மாட்டோம். நாமும் முன்னேறுவோம்.” 

ஜெயராமன் மறுப்பாகவே தலையசைக்க, “இவர் தானும் வாழ மாட்டார். மத்தவங்களையும் வாழ விட மாட்டார்.” என ஜெய் ஆவேசமாகத் தொடங்க, 

“ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க? மாமாவுக்கு விருப்பம் இல்லைனா விடுங்க.” என்றாள் வெண்ணிலா. 

“டிரைவருக்குச் சாப்பாடு கொடுத்தீங்களா?” என ஜெயராமன் பேச்சை மாற்ற, “தோட்டத்தில இருக்கவருக்கு அப்பவே சத்யா போய்க் கொடுத்திட்டு வந்திட்டான்.” என்றார் அமுதா.
சரி என ஜெயராமன் அறைக்குள் சென்றுவிட, ஜெய்க்கு கடுப்பாக இருந்தது. “எந்நேரம் ஆனாலும் இன்னைக்கு இருந்து அகல்யா கல்யாணத்தை முடிவு பண்ணிட்டு தான் நீங்க ரெண்டு பேரும் போறீங்க.” 

“உங்க அண்ணனை ஒத்துக்க வைக்கிறது உங்கப்பாடு. நான் அகல்யாவை புகழுக்குத்தான் செய்வேன்.” எனத் தன் அத்தைகளிடம் சொல்லிவிட்டு ஜெய் எழுந்துகொள்ள, 

“எங்க அம்மாவை ஏன் மாட்டிவிடுறீங்க. அவங்க இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பினாத்தான் நைட் வீடு போய்ச் சேர முடியும்.” என வெண்ணிலா சொல்ல, 

“அத்தை, மாமாகிட்ட போன் பண்ணி நாளைக்குத்தான் வருவேன்னு சொல்லுங்க. என்ன பண்ணிடுறார் இவங்க அப்பான்னு நானும் பாரிக்கிறேன்.” என்ற ஜெய்யை வெண்ணிலா முறைக்க, 

“சும்மா உங்க அப்பாவுக்குப் பயந்திட்டே எல்லாம் இருக்க முடியாது. முன்னாடி பொண்ணு கொடுத்திருந்தோம், இப்ப எடுத்திருக்கோம். அவர்தான் எங்களுக்குப் பயப்படனும்.” என்றவன், 
“என்ன அத்தை?” என மகேஸ்வரியை பார்க்க, அவர் புன்னகையுடன் ஆமோதித்தார். 

ஜெய் மாடிக்கு செல்ல, இவன் ஹீரோவா இல்லை வில்லனானே தெரியலை என வெண்ணிலாவால் புலம்பத் தான் முடிந்தது. 

மகேஸ்வரி தன் கணவனை அழைத்தவர், “அகல்யாவுக்கு ஒரு சம்பந்தம் வந்திருக்கு. அவங்க வசதியை பார்த்து அண்ணன் யோசிக்கிறார். இருந்து பேசிட்டு போங்கன்னு ஜெய் சொல்றான். நான் நாளைக்கு வரட்டுமா?” என மருமகனையும் அவர் இழுத்து விட, 

“நாளைக்குன்னா எப்ப?” என ராஜகோபால் கேட்க, 

“விடிய காலையில கிளம்பி வந்திடுறேன். அதுக்கு மேல லேட் பண்ணலை.” என்றார். 

“சரி டிரைவர் இருப்பானா கேட்டுக்கோ.” என்றவர், யுவராஜிடம் போன்னைக் கொடுக்க, 

மகேஸ்வரி அவனிடம் விவரம் சொல்லி டிரைவரிடம் பேச சொல்ல, “நாம பணம் கொடுத்தா இருக்கப் போறான். அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை நான் பார்த்துகிறேன்.” என்றான். 

மகேஸ்வரி போன் பேசி முடித்து விட்டு அண்ணனின் அறைக்குச் செல்ல, எப்படி எல்லாரையும் இவன் இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கிறான் என நினைத்த வெண்ணிலாவுக்குக் களைப்பாக இருக்க, என்னவோ பண்ணட்டும் எனக் கீழே இருந்த அறையில் சென்று படுத்து உறங்கி விட்டாள்.
மகேஸ்வரி ஜெயராமனிடம் பேசி பார்க்க, அவர் முன்பு சொன்னதைத் தான் சொன்னார். 

“இவனுங்க அகல்யாவுக்குச் செய்வானுங்க. ஆனா ராதிகாவுக்குச் செய்வானுங்கன்னு உறுதியா சொல்ல முடியாது. அதோட அவனுங்களைச் செய்யுங்கன்னு எதிர்பார்க்கவும் முடியாது.” 

“நமக்கு ஏத்த இடத்தில செஞ்சா பிரச்சனை இல்லை. என் பொண்ணுக்கு என்னால செய்ய முடிஞ்சதை செய்றேன்.” கணவன் சொல்வதை அமுதாவும் ஆதரித்தார்.
அண்ணன் சொல்வதில் உள்ள நியாயம் மகேஸ்வரிக்குப் புரியாமல் இல்லை. 

வெளியில் காமாட்சியும் விமலாவும் பேசிக்கொண்டு இருந்தனர். “பொதுவுல இருந்து அம்பது பவுன் போட்டா, அப்ப அதுக்குள்ள தான் சம்பந்தம் பார்க்கணுமா? போற இடம் வசதியா இருந்தாத்தானே நம்ம பிள்ளைங்க கஷ்டப்படாம இருக்கும்.” 

“நான் என் பெண்ணுக்கு வெறும் அம்பது சவரன் மட்டும் போட ஒத்துக்க மாட்டேன். என்பது சவரனாவது போடணும்.” எனக் காமாக்ஷி சொல்ல, 

“நீ பேசாம இருக்க மாட்டியா?” எனச் சந்திரன் சொல்ல, 

“நீங்க போடலைனாலும் நான் என்னோட நகையை என் மகளுக்குச் சேர்த்து என்பது சவரன் செய்வேன். நான் இப்பவே சொல்லிட்டேன். உங்க அண்ணன் அவர் பெண்ணுக்கு செஞ்சது தான் செய்யணும்னு எல்லாம் நீங்க சொல்லக் கூடாது.” என்றார் காமாக்ஷி கறாராக. 

மகேஸ்வரி வந்ததும் அவரும் விமலாவும் ஜெய் இருந்த அறைக்குச் சென்றனர். இவர்களைப் பார்த்ததும் கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தான். இவர்களும் ஆளுக்கு ஒரு பக்கம் உட்கார்ந்தனர். அப்போது யஸ்வந்தும் அங்கு வந்து நின்றான். 

மகேஸ்வரி அவரது அண்ணன் சொன்னதைச் சொல்ல, விமலாவும் காமாக்ஷி பேசியதை சொன்னார். 

“எனக்கு என்னவோ சின்ன அண்ணி ஏற்கனவே ராதிகாவுக்குத் தனியா சேர்த்து வச்ச மாதிரி இருக்கு.” என விமலா சொல்ல, 

“அவங்க தினமும் சித்தப்பாவுக்குச் சாயங்காலம் டீ எடுத்திட்டுப் போறாங்களே எதுக்குன்னு நினைச்சீங்க. சித்தப்பாவை தனியா பார்த்து அந்தச் செலவு இந்தச் செலவுன்னு பணம் வாங்கிட்டு வந்திடுவாங்க. அது எல்லோருக்கும் தெரியும்.” என்றான் யஸ்வந்த். 

“அவங்க நகை சீட்டுப் போடுறது. அது முடிஞ்சதும் நகையை வாங்கி அவங்க அண்ணன் வீட்ல வைக்கிறதுன்னு எல்லாமே எனக்கும் தெரியும். ஏன்னா அவங்க நகை வாங்கிற கடை எனக்குத் தெரிஞ்ச கடைதான்.” எனத் தனக்குத் தெரிந்த விவரத்தை ஜெய் சொன்னான். 

“அடிப்பாவி… அவன் தனியா சேர்த்து வச்சாலும், அதுவும் பொதுவுல இருந்து வந்தது தானே.” என்றார் மகேஸ்வரி. 

“ம்ம்… ஆமாம் ஆனா அது வெளியுல வராது. நான் வர வைக்கிறேன் பாருங்க.” என்றான் ஜெய்.
முதலில் மகேஸ்வரியும் விமலாவும் கீழே இறங்கி வந்துவிட, வெண்ணிலா அப்போதுதான் தனது குட்டி உறக்கத்தில் இருந்து விழித்து இருந்தாள். 

அவள் எல்லோருக்கும் டீ வைக்க, அவளுக்கு உதவுவது போலச் சமையல் அறைக்குச் சென்ற மகேஸ்வரி மகளிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். 

“ஐயையோ இவருக்கு வேற தெரிஞ்சிடுச்சா, போச்சு இன்னைக்கு எல்லாரையும் ஒருவழி பண்ணப் போறார். எதுக்கும் நான் பெட்டி கட்டி வைக்கிறேன். மாமா எங்களை எப்படியும் வீட்டை விட்டு துரத்திடுவார்.” என்ற மகளின் கவலையைப் பார்த்து மகேஸ்வரிக்குச் சிரிப்புதான் வந்தது. 

வெண்ணிலா அதன் பிறகு பதட்டமாகவே இருந்தாள். கணவனிடம் சென்று டீயை கொடுத்தவள், “ஒரு நிமிஷம் வாங்க, உங்கிட்ட பேசணும்.” என அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிவிட்டு வந்தாள். 

ஜெய் வருவதைப் பார்த்தவள், சமையல் அறையில் இருக்கும் பின் கதவு வழியாக வெளியே செல்ல, அவனும் அவளைப் பின் தொடர்ந்தான். 

“ஆமாம் நீங்க இப்ப என்ன பேசப் போறீங்க? தேவையில்லாம வாய்விட்டு பெரிய பிரச்சனை ஆக்காதீங்க சொல்லிட்டேன். பிறகு உங்க தலைத்தான் உருளும். மாமா நம்மைத் தனியா போகச் சொல்வார்.” 

“சண்டை வராம நான் பார்த்துகிறேன். நீ அமைதியா இரு.” 

“ஒன்னும் தேவை இல்லை. நீங்க மாமா சொல்றபடி செஞ்சிட்டு பேசாம இருங்க. கண்டிப்பா நீங்க சின்ன அத்தை நகை சேர்த்து வச்சிருக்கிறது சொன்னீங்கன்னா பெரிய பிரச்சனை ஆகும்.” 

“நான் சொல்ல மாட்டேன் சரியா?” 

“எனக்குப் பயமா இருக்கு ப்ளீஸ் விட்டுடுங்களேன்.” 

“நான்தான் பார்த்துகிறேன்னு சொல்றேன் இல்ல…” என்றான் சற்று அதட்டலாக. அதில் வெண்ணிலாவின் முகம் வாட…. இவர்கள் இருவரும் வழக்காடுவது சமையல் அறைக்கு வந்த அமுதா, காமாக்ஷி, மகேஸ்வரி என மூவரின் கண்ணிலும் பட்டது. 

எதற்கு இந்த வாக்குவாதம் எனப் புரியாத குழப்பத்தில் அமுதா, “மாசமா இருக்கப் பெண்ணை என்ன சொல்றான்னு தெரியலையே…” எனப் புலம்ப, என்ன பேசி இருப்பார்கள் என மகேஸ்வரியால் யூகிக்க முடிந்தது. 

“புருஷன் பொண்டாட்டின்னா அதுக்காக எந்நேரமும் சிரிச்சு மட்டும் பேசிட்டு இருக்க முடியுமா? அதெல்லாம் கண்டுக்காதீங்க விடுங்க.” என்றார். 

எல்லோரும் மீண்டும் ஹாலில் இருந்த நேரம் ஜெய் தான் ஆரம்பித்தான். 

“அத்தை நீங்க வெண்ணிலாவுக்குப் போட்ட நகை எல்லாம் நல்லா இருந்தது எங்க வாங்கினீங்க?” 

“நான் சேலத்துல தான் நகை வாங்குவேன். அகல்யாவுக்கும் அங்கேயே வாங்குவோமா?” மருமகன் எதற்காகக் கேட்கிறான் எனப் புரிந்து மகேஸ்வரி பதில் கொடுக்க, 

“இல்லை அகல்யாவுக்கு இங்க பொள்ளாச்சியிலேயே வாங்கிடலாம். நம்ம சித்திக்கு தெரிஞ்ச கடை இருக்கு. அவங்களே அங்க போறாங்கன்னா அப்ப நல்லாத்தான் இருக்கும்.” என அவன் சொல்ல, எல்லோரின் பார்வையும் காமக்ஷியின் பக்கம் செல்ல, 

இனிமேல் தான் சமாளிக்க முடியாது. அவன் தெரிந்து தான் சொல்கிறான் எனக் காமாட்சிக்கு புரிந்து விட்டது. 

“ஆமாம் நாம என்ன மொத்தமா போய் நகை வாங்கிற மாதிரி குடும்பத்திலேயா இருக்கோம். உங்க சித்தப்பா செலவுக்குக் கொடுக்கிற காசை மிச்சம் பிடிச்சு, எதோ சீட்டு போட்டுக் கொஞ்சம் வாங்குவேன்.” என்றார் சமாளிக்கும் விதமாக. 

அவர் சொன்னதைக் கேட்டு யாருமே பேசவில்லை. ஆனால் எப்போதும் அமைதியாகப் போய்விடும் அமுதா அன்று, “நகை வாங்கிற அளவா கொழுந்தன் கொடுக்கிற காசுல உனக்கு மிச்சம் படுத்த முடியுது. ஆனா எனக்கு இவரு கொடுக்கிற காசுல மிச்சமே இருக்கிறது இல்லையே…” என அப்பாவியாகச் சொல்ல, 

நல்லா கேட்டுக்கோங்க என்பது போல ஜெய் தனது தந்தையைப் பார்க்க, 

இதற்கு மேல் இந்த விஷயம் பேசினால். ஒருவருக்கொருவர் சண்டை வரும் என்பதை உணர்ந்த ஜெயராமன், “நான் மதியம் யோசிச்சேன். உன் ரெண்டு அத்தையும் வேற ரொம்பச் சொல்றாங்க. நாம அகல்யாவுக்குப் புகழையே பார்ப்போம். நீ சொல்ற மாதிரியே செஞ்சிடலாம். நான் தோட்டம் வரை போயிட்டு வரேன்.” எனச் சொல்லிவிட்டு அவர் எழுந்து சென்று விட்டார். அவர் திருமணதிற்கு ஒத்துக்கொண்டது மகிழ்ச்சியே. 

எந்த நிமிடம் சண்டை வருமோ எனப் பயந்து கொண்டிருந்த வெண்ணிலாவும் நிம்மதியாக மூச்சு விட, தன்னை யாரும் மேலும் துருவவில்லை என்பதில் காமாக்ஷி நிம்மதி அடைந்தார். 

வெண்ணிலாவை பார்த்த ஜெய் என்ன நினைத்தானோ, “தோட்டத்துக்குப் போகலாமா?” என்றதும், எல்லோரும் உற்சாகமாக கிளம்பினர்.

Advertisement