Advertisement

எந்தன் காதல் நீதானே

அத்தியாயம் 18 

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு ஜெய் வெண்ணிலாவை அவள் வீட்டில் சென்று விட்டுவிட்டு உடனே திரும்பி இருந்தான். 


திருமணம் திண்டுக்கல்லில் என்பதால் திருமணத்திற்கு முன்தினம் மதியம் போலக் காரில் கிளம்பி சென்றனர். 

ஏற்கனவே கற்பகமும் அவரின் மகள்களும் முன்தினமே திருமணத்திற்குச் சென்றிருந்தனர். ஜெய் வரவில்லை என்பது இன்னமும் வெண்ணிலாவுக்கு வருத்தமே. 

மண்டபத்திற்குச் சென்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில், உடைமாற்றி அலங்கரித்துக் கொண்டு வெண்ணிலா வரவேற்புக்கு தயாராகி வர… திருமணத்திற்குப் பிறகு அவளை இப்போதுதான் பார்ப்பதால்… உறவினர்கள் அவளை நலம் விசாரித்தனர். 

ஜெய் வெண்ணிலாவின் திருமணத்திற்கு அவள் வீட்டினர் எல்லோரையும் அழைக்கவில்லை. முதலில் நிச்சயகபட்ட திருமணம் நின்று போனதால், முக்கியமானவர்களை மட்டுமே அழைத்திருந்தனர். 

சிலருக்கு அவளுக்குத் திருமணம் ஆனதே தெரியவில்லை. அதனால் அவளது திருமணக் கதை தான் அலசி ஆராயப்பட்டது. அவளைப் பார்ப்பதும் பிறகு தங்களுக்குள் ரகசியம் பேசுவதையும் வைத்து வெண்ணிலாவுக்கும் விஷயம் புரிந்தது. 

நம் கணவன் தீர்க்கதரிசி தான். இதுதான் நடக்கும் என்று முன்பே சொன்னான் தானே. நல்லவேளை அவன் வரவில்லை. இதெல்லாம் பார்த்தால் இந்நேரம் கடுப்பாகி இருப்பான் என நினைத்தவள், மணமகளுடன் மேடையில் சென்று நின்று கொண்டாள். 

மறுநாள் அதிகாலை முகுர்த்தத்தில் திருமணம் முடிந்து, அன்று மதியமே விருந்தும் உண்டுவிட்டு வெண்ணிலா வீட்டினர் கிளம்பினர். கற்பகமும் இவர்களுடனே வந்துவிட்டார்.
உண்டுவிட்டு உடனே கிளம்பியதினாலோ என்னாவோ, வெண்ணிலா செல்லும் வழியில் வாந்தி வருவதாகச் சொல்ல, யுவராஜ் வண்டியை ஓரம் கட்டி நிறுத்தினான். 

உண்டது எல்லாம் வாந்தி எடுத்த பிறகு மிகவும் களைத்துப் போனாள். பிறகும் அசதியாக இருக்க, தன் அன்னையின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு வந்தாள். 

மறுநாளும் அவள் தெளியாமல் இருக்க, “ஏன் டி அம்மா வீட்டுக்கு வந்தா படுத்துகிட்டே இருக்கனும்னு இருக்கா என்ன? உங்க அம்மா தனியா வேலைப் பார்க்கிறா, நீயும் போய்க் கொஞ்சம் கூடமாட ஒத்தாசை செய்யக் கூடாது.” என்ற பாட்டியிடம், 

“எனக்கு மட்டும் இல்லையா பாட்டி. ஆனா எழுந்துக்கவே முடியலை. படுத்தே இருக்கணும் போல இருக்கு.” என்றவளை பார்வையால் ஆராய்ந்த கற்பகம், “மசக்கையா இருக்கியோ என்னவோ.” என்றதும், மகேஸ்வரியின் முகம் மலர, மகளை விசாரிக்க ஆரம்பித்தார். 

ஐந்து நாட்கள் தான் தள்ளி இருந்தது. கர்ப்பமா எனச் சோதித்துப் பார்க்க நாற்பது நாட்கள் ஆகட்டும் என்றார் கற்பகம். 

மறுநாள் ஜெய் வெண்ணிலாவை அழைக்க வருவதாக இருந்தது. இந்த நேரம் மகளை அனுப்ப மகேஸ்வரிக்கு விருப்பம் இல்லை. 

“நான் உங்க அத்தைகிட்ட பேசுறேன்.” என்றார். 

“அம்மா வேண்டாம் மா.. உறுதியானதும் சொல்லிக்கலாம். ஏற்கனவே அத்தை ரொம்ப ஆர்வமா எதிர்பார்த்திட்டு இருந்தாங்க. சொல்லிட்டு அப்புறம் இல்லைனா கஷ்டமா போயிடும்.” என வெண்ணிலா அஞ்சுவதைப் பார்த்து மகேஸ்வரிக்கும் யோசனையாக இருந்தது. 

திருமணம் முடிந்த இரண்டாம் மாதத்தில் இருந்தே அமுதா வெண்ணிலாவிடம் ஆர்வமாகக் கேட்கும் விஷயம் தான். ஒருமுறை ஜெய் இருப்பது தெரியாமல் கேட்டுவிட்டு, அவனிடம் நன்றாக வாங்கியும் கட்டிக் கொண்டார். 

“இருந்தா நாங்களே சொல்ல மாட்டோமா…. கல்யாணம் பண்ணதும் குழந்தை பெத்து குடுத்திடனும்னு எதாவது சட்டம் இருக்கா என்ன?” 

“கல்யாணம் ஆனதும் இன்னும் ஒன்னும் இல்லையா இல்லையான்னு கேட்டு கேட்டே… நிறையப் பேருக்கு மனஉளைச்சல் வந்திடுது. அதுவே சில நேரம் அழுத்தமா மாறி, நல்லா இருந்தா கூடக் குழந்தை உண்டாக நாள் ஆகும் தெரியுமா?” என அவன் பேசுவதைக் கேட்டு அமுதா பயந்து போனார். அன்றிலிருந்து மகனுக்குப் பயந்து வாய் திறந்து கேட்கவில்லை என்றாலும், மனதில் எதிர்பார்ப்போடு தான் இருந்தார். 

“நான் அத்தான்கிட்ட பேசிக்கிறேன். உறுதியானதும் அத்தைகிட்ட சொல்லலாம்.” 

அன்று இரவு வெண்ணிலா ஜெய்யை அழைத்துச் சொல்ல, அதுவரை குழந்தையைப் பற்றிப் பெரிய எதிர்பார்ப்பு இல்லையென்றாலும், அந்த நேரம் இது குழந்தையாகவே இருக்க வேண்டும் என மனம் விரும்பியது. 

மனைவியின் உடல்நலம் பற்றி விசரித்தவன், “சரி நீ டென்ஷன் ஆகாம இரு. இங்க நான் பார்த்துகிறேன்.” எனச் சொல்லிவிட்டு வைத்தான். 

அதிகாலையே ஜெயராமனும் சந்திரனும் தோட்டத்திற்குச் சென்று விடுவார்கள். பிறகு வந்து குளித்துக் காலை உணவு உண்டுவிட்டு மீண்டும் ஜெயராமன் தோட்டத்திற்கும் சந்திரன் உரக்கடைக்கும் செல்வார்கள். 

அன்று வங்கிக்கு செல்ல வேண்டும் என ஜெயராமன் சீக்கிரமே வீடு திரும்பினார். அவர் வந்த போது ஜெய் அலுவலகம் செல்லக் கிளம்பி காலை உணவை உண்டு கொண்டிருந்தான். 

“ஆபீஸ் முடிஞ்சதும் அப்படியே போய் வெண்ணிலாவை கூப்பிட போறியா? இருந்திட்டு நாளைக்குத் தான வருவ?” என அவர் கேட்க, 

“இல்லை… எனக்கு ஒரு வேலை இருக்கு. அதனால இன்னைக்குப் போகலை. போனதுக்கு அவ ஒருவாரம் கூட இருந்திட்டு வரட்டுமே. இப்ப என்ன அவசரம்?” என ஜெய் சொல்ல, 

“இவன் தானே கூப்பிட போறேன்னு சொல்லிட்டு இருந்தான். இப்ப எப்படிப் பேசுறான் பாரு.” என மனைவியிடத்தில் முனங்கியபடி ஜெயராமன் உள்ளே செல்ல, அதுதானே என்பது போல அமுதாவும் பார்த்தார். 

கொஞ்சம் ஓவரா தான் போறோமே என ஜெய்க்கே தோன்றியது. இருக்கட்டும் இன்னும் நாலு நாள்தான். அதுவரை இப்படிதான் சமாளிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

நாற்பதாவது நாள் மருத்துவமனை சென்று ஸ்கேன் செய்து பார்த்துக் கர்ப்பம் என உறுதியானதும் தான் நிம்மதியானது. அதன் பிறகு வெண்ணிலா சியை அழைத்துச் சொல்ல, மகேஸ்வரி தன் அண்ணியிடம் விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார். 

வெண்ணிலா கர்ப்பம் எனத் தெரிந்ததும், அவளைப் பார்க்க வேண்டும் என ஒட்டு மொத்த குடும்பமும் கிளம்ப, அதுவும் ராதிகா ஆர்வமாகக் கிளம்ப, அதைக் கவனித்த ஜெய், “ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். அவ இங்கதான் வருவா, அப்ப பார்த்துக்கலாம்.” என, 

“சும்மா எதாவது சொல்லாத. முறைன்னு ஒன்னு இருக்கு. கர்ப்பமா இருக்கப் பெண்ணைப் பார்க்க போக வேண்டாமா?” என ஜெயராமன் கடிந்துகொள்ள, 

“பெரியவங்க மட்டும் வாங்க. மத்தவங்க எல்லாம் வேண்டாம்.” என்றான். ராதிகா அவனை முறைக்க, மற்றவர்களுக்கு அவன் சொல்வது சரியெனப்பட, பெரியவர்கள் மட்டும் கிளம்பினர். அன்றும் ஜெய் புகழின் வண்டியைத்தான் எடுத்துக் கொண்டு வந்தான். 

தோட்டத்தில் விளைந்த காய், கனிகள், வாழை, கடலையோடு மருமகளுக்குப் பிடிக்கும் என அமுதா ஆற்று மீன் குழம்பும் வைத்துக் கொண்டு வந்திருந்தார். 

மருமகளின் கன்னம் வழித்துத் திருஷ்ட்டி கழித்தவர், அவளுக்குப் பிடித்த மல்லிகை பூவையும் தலையில் வைத்து விட, எல்லோரும் சந்தோஷமாகப் பார்க்க, இது என்ன பெரிய அதிசயம் என்பது போலக் கற்பகம் பார்த்துக் கொண்டிருந்தார். 

“இதெல்லாம் உங்க தோட்டத்துல இருந்தா?” எனக் கேட்டவர், “பரவாயில்லை சும்மாவே எல்லாம் கிடைச்சிடுது.” என வாய்விட, அதுவரை முழுக் கவனத்தையும் மனைவி மேல் வைத்திருந்தாலும், கற்பகம் சொன்னதும் ஜெய்க்கு சுர்ரென்று ஏறிவிட்டது. 

காசு கொடுத்தா வாங்கி வந்தார்கள், எல்லாம் ஓசி தானே என்ற அர்த்தத்தில் தான் கற்பகம் சொன்னதும். 

“என்னது இதெல்லாம் சும்மா வந்ததா?” 

“எப்படி? ஒண்ணுமே பண்ணாம எல்லாம் சும்மா வருமா?” 

“என் அப்பாவும், சித்தப்பாவும் தோட்டத்தில பாடுபட்டு உருவாகினது. இதுல எதாவது ஒன்னு நீங்க விளையவச்சு காட்டிடுங்களேன் பார்க்கலாம்.” என ஜெய் வரிந்து கட்ட,
தான் பேசியதை அவன் இப்படிப் பிடித்துக்கொள்வான் எனக் கற்பகம் நினைக்கவில்லை. 

“எனக்கு இதெல்லாம் தெரியாது பா… நாங்க காசு கொடுத்து தான் வாங்குவோம்.” என அவரும் நக்கலாகப் பதில் கொடுக்க, 

“நீங்க என்னதான் கடையில காசு கொடுத்து வாங்கினாலும், இது மாதிரி இயற்கை உரம் போட்டு விளைய வச்சது எல்லாம் கிடைக்காது.” என்றதும், “அது என்னவோ வாஸ்த்தவம் தான்.” என்றார் ராஜகோபால். 

“கெமிக்கல் உரம் போடாததுன்னு சொல்லி நிறைய விலைக்குக் காய்கறி விற்கிறாங்க. மக்களும் காசு அதிகமா கொடுத்து வாங்கிட்டு போறாங்க. ஆனா உண்மையா அப்படிதான்னு யாருக்கு தெரியும்.” 

“ம்ம்… ஆமாம் மாமா. அந்த ஏமாத்து வேலையும் நடக்குது. அத்தை வெண்ணிலாவுக்கு நம்ம தோட்டத்து காய்கறியே கொடுங்க. கடையில வாங்கினது எல்லாம் வேண்டாம். நமக்குத் தெரிஞ்ச வண்டி வரும், அதுல நான் வாரவாரம் கொடுத்து விடுறேன்.” 

“நீங்க இப்ப கொண்டு வந்ததே ரெண்டு வாரத்துக்கு வரும். நானே காலி ஆனதும் சொல்றேன்.” 

“சரிங்க அத்தை.” 

தான் அவனை மட்டம் தட்ட நினைத்தால்… அவன் அல்லவா தன்னை மட்டம் தட்டி விட்டான். அதுவும் மகனும் மருமகனுக்கு ஒத்து ஊதியதும், அந்தக் கடுப்பில் அங்கிருந்து எழுந்து சென்ற கற்பகம், அறைக்கு வந்ததும் தன் மகள்களை அழைத்து, எல்லாம் சொல்லிவிட்டார். அவருக்கு இங்கே நடக்கும் விஷயத்தை உடனே மகள்களிடம் சொல்லாவிட்டால் தலை வெடித்து விடும். 

ஆண்கள் எல்லோரும் சேர்ந்து உண்ணும் போதே, கற்பகம் தனக்குத் தட்டில் உணவைப் போட்டு அறைக்கு எடுத்து சென்று விட்டார். ஆண்கள் உண்டதும் தன் அண்ணிகளுக்குப் பரிமாறிய மகேஸ்வரி, மகளைத் தேட அவள் அறையில் கணவனோடு பேசிக்கொண்டு இருந்தாள்.
அவளுக்கு உணவை அறையில் சென்று கொடுத்துவிட்டு வந்து, அவரும் அண்ணிகளோடு பேசியபடி உணவு உண்டார். 

கணவனோடு பேசிக்கொண்டே மெதுவாக வெண்ணிலா உணவு உண்டு முடித்தவள், கதவை தாளிட்டு வந்தவள், கணவனின் அருகில் கட்டிலில் சென்று படுத்துக்கொள்ள, அவள் பக்கம் நன்றாகத் திரும்பி படுத்த ஜெய், அவள் வயிற்ரை மெதுவாக வருடிக் கொடுத்தான். 

“நானும் உங்களோட வரட்டுமா?” 

“இப்ப எப்படி உடனே வருவ? உங்க வீட்ல முதல்ல அனுப்புவாங்களா? அறுபது நாள்ல இன்னொரு ஸ்கேன் எடுக்கனுமாமே… அதை எடுத்திட்டு வா…” 

“ம்ம்… ஆமாம் எடுக்கணும். நீங்க அடுத்து எப்ப வர்றீங்க?” 

“இப்பவே எப்படிச் சொல்றது? வேலை இல்லாத நாளா பார்த்து வரேன்.” 

வேலை இல்லாத நாள் தானே அப்படி ஒன்று வரவே வராது என வெண்ணிலாவுக்குத் தெரியும். ஆனால் அப்போதைக்கு எதுவும் சொல்லவில்லை. 

“வெண்ணிலா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்றேன். உன்கிட்ட தான் முதல்ல சொல்றேன்.” 

“என்னது?” என வெண்ணிலா ஆர்வமாக. 

“நம்ம அகல்யாவை புகழுக்கே செய்யலாம்னு பார்க்கிறேன்.” 

“நீங்க நினைச்சா போதுமா? மாமா ஒத்துப்பாங்களா? புகழ் அண்ணனுக்கு விருப்பமான்னு தெரிய வேண்டாமா?” 

“அவனுக்கு இஷ்டம் தான்.” 

“நீங்க கேட்டீங்களா?” 

“இல்லை” 

“பிறகு எப்படிச் சொல்றீங்க?”

“எங்க ரெண்டு பேருக்கும் பொதுவா இன்னொரு ப்ரண்ட் இருக்கான். அவன்தான் சொன்னான், புகழுக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்குன்னு.” 

“புகழ் சொல்லித்தான் அவன் என்கிட்டே சொல்றான். எனக்கு அதுவும் தெரியும்.” 

“சின்ன வயசுல இருந்து புகழைத் தெரியும். எந்தத் தப்பு தன்டாவுக்கும் போனது இல்லை. அகல்யாவை விரும்பிக் கேட்கும் போது அவளை நல்லாவும் பார்த்துப்பான். அதோட அகல்யாவும் நம்ம பக்கத்தில இருப்பா.” 

“ம்ம்… எல்லாம் சரிதான். வீட்ல ஒத்துப்பாங்களா?” 

“அவங்க ஒத்துப்பாங்க. ஆனா வீட்ல இப்ப சொல்ல வேண்டாம். அகல்யா படிப்பை முடிக்கட்டும். அதுகுள்ள நாமும் கல்யாணத்துக்குக் கொஞ்சம் சேர்த்துக்கலாம்.” 

“புரியுது நான் யார்கிட்டயும் சொல்லலை. ஆனா அகல்யாவுக்கு விருப்பமான்னு கேட்டுக்கோங்க.” 

“நீ வந்த பிறகு. நீயே அவகிட்ட கேளு. அவ சரின்னு தான் சொல்லுவா.” 

“கிளம்புவோமா?” என வெளியே ஜெயராமனின் குரல் கேட்க, 

மனைவியை அவசரமாக அணைத்த ஜெய், “பார்த்து இரு…. எப்பவும் போலக் கொறிக்காம ஒழுங்கா சாப்பிடு. பேபி அம்மாவை பார்த்துக்கோ டா… அம்மாவை விட நீ சமத்து.” என அவள் வயிற்றில் முத்தம் வைத்து விட்டு எழுந்தவனை வெண்ணிலா முறைக்க, அவளுக்கும் அழுத்தமாக இதழ் ஒற்றல் ஒன்றை வழங்க… 

“எனக்கு ஒன்னும் வேண்டாம். உங்க பிள்ளை வர்றதுக்குள்ளேயே இப்படி, இன்னும் வந்திட்டா… என்னைக் கண்டுக்கவே மாட்டீங்க தெரியும்.” 

“ஹே… நீதான் டி ப்ரஸ்ட்.” 

“போதும் நம்பிட்டேன் கிளம்புங்க.” 

“அச்சச்சோ நம்ம மாட்டேங்கிற பார்த்தியா.” 

“அடுத்த வாரம் என்னைப் பார்க்க வாங்க நம்புறேன்.” 

“இதுக்காகவே வரேன் பாரு.” எனச் சொல்லி சென்றவன்தான். அதன் பிறகு ஆளே வரவில்லை.
அறுபது நாளில் ஸ்கேன் எடுத்து குழந்தையின் நலம் அறிந்த பிறகும் அவன் வருவதாகத் தெரியவில்லை. 

“என்னங்க நீங்க என்னை எப்ப கூப்பிட வருவீங்க?” எனக் கேட்டால்… 

“இரு இப்ப இங்க வந்து என்ன பண்ணப் போற? ரெஸ்ட் எடுத்திட்டு வா…” என்பான்.
பொறுத்துப் பொறுத்துப் பாத்து வெண்ணிலாவின் பொறுமை பறக்க, ஒருநாள் போன்னில் கத்தி விட்டாள். 

“நிஜமா என்னை விரும்பித்தான் கல்யாணம் பண்ணீங்களா? 

“என்ன நிலா இப்படிப் பேசுற?” 

“பிறகு எப்படிப் பேசுவாங்க. விட்டது தொலைன்னு என்னை இங்க விட்டுட்டு, நீங்க அங்க நிம்மதியா இருக்கீங்க.” 

“நான் அங்க இருந்தா வீட்டுக்கு வாங்கன்னு தொல்லை பண்ணுவேன். நான் அங்க இல்லைனா நீங்க நல்லா சம்பாதிப்பீங்க அதுக்குத்தானே என்னைக் கூப்பிட வரலை.” 

“குழந்தை வந்தாச்சு, இனி நான் அங்க இருந்தாலும் இல்லைனாலும் உங்களுக்கு ஒன்னும் இல்லை. அப்படித்தானே…” 

“வெண்ணிலா ரொம்பப் பேசுற… நேர்ல இருந்திருந்தா இந்நேரம் அறை வாங்கி இருப்ப.” 

“அடிக்கிறதைத் தவிர என்ன தெரியும் உங்களுக்கு.” 

“ஒரு தடவை கை நீட்டினதுக்கு என்னவோ உன்னைத் தினமும் அடிச்ச மாதிரி பேசுறியே டி…” 

“நீங்க தானே இப்ப அடிப்பேன்னு சொன்னீங்க.” 

“மசக்கையா இருக்கப் பெண்ணை அடிப்பேனா…” 

“அப்ப குழந்தை இல்லைனா அடிப்பீங்க.” 

“வெண்ணிலா முடியலை டி…. நான் உன்னைக் கூப்பிட வாராததுக்குக் காரணம் என்ன தெரியுமா?” 

“எனக்கு ஒன்னும் தெரிய வேண்டாம். நீங்க என்னைக் கூப்பிட வர வேண்டாம். நானே வந்துக்கிறேன்.” என்றவள், போன்னை வைத்து விட… தான் சொல்ல வந்ததைக் கேட்கவில்லை என்ற கோபத்தில் ஜெய்யும் திரும்ப அழைக்கவில்லை. 

நல்லநாள் பார்த்து மகேஸ்வரியே மகளை அழைத்துக் கொண்டு கிளம்ப, வேலை இருந்ததால் நல்ல ஓட்டுனர் பார்த்து ஏற்பாடு செய்து, யுவராஜ் அவர்களை அனுப்பி வைத்தான்.
செல்லும் வழியில் மகேஸ்வரி மகளிடம் பேசிக்கொண்டு வந்தார். 

“சும்மா இங்கேயும் அங்கயும் அலைய வேண்டாம். ஏழாம் மாசம் வளைகாப்பு போட்டு இங்க வந்துக்கலாம்.” 

“நான் கூட அண்ணிகிட்ட ஸ்கேன் பார்த்ததும் கொண்டு வந்து விடட்டுமான்னு கேட்டேன்.” 

“அண்ணிதான் மூன்னு மாசம் முடியட்டும்னு சொல்லிட்டாங்க. அங்கே இருந்தா வெண்ணிலா ரெஸ்ட் எடுப்பா.. இங்க யாரும் எதுவும் சொல்லிடுவாங்களோன்னு பயத்திலேயே முடியலைனாலும் வேலை செய்வா….அதனால மூன்னு மாசம் முடிஞ்சே வரட்டும்னு சொல்லிட்டாங்க.”

அமுதா காமாட்சியை நினைத்துதான் அப்படிச் சொல்லி இருக்கிறார் எனப் புரியாமல் இல்லை. இதைதான் அன்று ஜெய்யும் சொல்ல வந்திருப்பான். அதைக் கேட்க கூடப் பொறுமை இல்லை. தேவையில்லாமல் நிறையப் பேசி விட்டாள்.

“ஐயோ, கொல்லப் போறான்.” எனப் பயந்து கொண்டே சென்றாள்.

Advertisement