Advertisement

எந்தன் காதல் நீதானே

அத்தியாயம் 17

ஜெய் சொன்னது போல அந்த வாரம் சனிக்கிழமை பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இருந்த இடங்களுக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றான். ஜெயராமனும் சந்திரனும் வரவில்லை என்றுவிட, அமுதாவும் காமாட்சியும் மட்டும் வருதாக இருந்தனர். 


“சாப்பாடு கட்டி எடுத்திட்டு போவோமா?” என அமுதா கேட்க, “ஒரு நாளாவது சமைக்காம இருங்க. அதெல்லாம் உங்க பையன் வெளிய வாங்கித் தருவார்.” என வெண்ணிலா கணவனை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டு சொல்ல… 

“எங்க எப்படியும் உன் பெரிய மாமாவுக்கும் சின்ன மாமாவுக்கும் செஞ்சு வச்சிட்டு தான் போகணும். அது கூடச் சேர்ந்து எல்லோருக்கும் கட்டு சாதமே பண்ணிடவா அதுதான் கேட்டேன்.” 

“அதுதான் உங்க மருமகள் சொல்றாளே… அவங்க ரெண்டு பேருக்கும் சிம்பிள்லா எதாவது செஞ்சு வச்சிட்டு வாங்க.” என்றான் ஜெய். 

யஸ்வந்த் வெள்ளி இரவே வந்துவிட… சனிக்கிழமை அதிகாலையே வீடு பரபரப்பாகியது. வெண்ணிலா, அகல்யா ராதிகா மூவரும் ஒரே மாதிரி சுடிதார் அணிந்து வந்தனர். 

ஜெய் அவனின் நண்பனின் சுமோவை அவனே ஓட்டிக் கொண்டு வந்தான். வெண்ணிலா ஜெய்யின் அருகே முன்புறம் அமர்ந்துகொள்ள, பெரியவர்கள் நடு இருக்கையிலும், இளையவர்கள் கடைசி இருக்கையிலும் உட்கார்ந்து கொண்டனர். 

“புகழ் அண்ணா வண்டியா?” வெண்ணிலா கேட்க ஜெய் ஆமாம் என்றான். 

“உங்களுக்குக் கார் ஓட்ட தெரியுமா?” 

“இப்படியெல்லாம் உனக்குச் சந்தேகம் வருமா… இப்ப என்ன பண்ணிட்டு இருக்கேன்?” 

“சின்ன அத்தை வீட்டுக்கு போனோமே, அன்னைக்கு எங்க வீட்டு காரை நீங்களே ஓட்டி இருக்கலாமே. அதுதான் கேட்டேன்.” 

“அன்னைக்கு உங்க வீட்ல யாராவது எனக்கு வண்டி ஓட்ட தெரியுமான்னு கேட்டீங்களா? எங்ககிட்ட கார் இல்லை. அதனால நீங்களாவே ஓட்ட தெரியாதுன்னு முடிவு பண்ணிடீங்க.” 

“அதோட உங்களோடது புது வண்டி. ரொம்ப ஷார்ப்பா இருக்கும். நான் எங்காவது இடிச்சு வச்சேன்னு வை. வீணா மனஸ்தாபம் வரும். நான் பணம் கொடுத்தாலும் உங்க வீட்ல வாங்க மாட்டாங்க. அதுதான் நானும் ஓட்றேன்னு சொல்லலை.” 

“இது என் பிரண்ட் வண்டி. நான் என்ன பண்ணாலும் ஏன்டான்னு கேட்க மாட்டான். அதனால எனக்கு டென்ஷன் இல்லை. அப்படியே எதாவது ஆனாலும், நானும் சரி பண்ணித்தான் கொடுப்பேன்.” 

கணவன் சொன்னதும் வெண்ணிலாவுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. பேச்சை மாற்றும் பொருட்டு, “நீங்களும் புகழ் அண்ணாவும் ரொம்ப க்ளோஸ் இல்லை. ஆனா அவங்க நம்ம வீட்டுக்கு ரொம்ப வர மாட்டேங்கிறாங்களே.” என்றாள். 

“வீட்ல தங்கச்சிங்க இருக்கிறதுனால அப்பா யாரையும் வீட்டுக்கு கூடிட்டு வரக் கூடாதுன்னு சொல்லுவார். அதோட அவன் வேலைப் பார்க்கிற இடமும் வேற… அதனால அடிக்கடி பார்க்க முடியறது இல்ல. தோட்டம் போடுற வேலை இல்லைனா… ஞாயிற்றுக்கிழமை ஒன்னாத்தான் சுத்திட்டு இருப்போம். சில நேரம் அவனுமே என்னோட தோட்டம் போடுற இடத்துக்கு வருவான்.”

“நாங்க தினமும் பார்க்கிறதோ பேசுறதோ இல்லை தான். ஆனா எனக்கு ஒண்ணுன்னா அவன்தான் முதல்ல வருவான். அதே போலத்தான் அவனுக்கு நானும்.” 


கணவன் நண்பனை பற்றிப் பேசியது கேட்டு வெண்ணிலாவுக்குச் சிறிது பொறாமைதான். அதனால் “போதும் உங்க நட்புக்காகக் கதை போர் அடிக்குது.” என, 

“திமிரு டி உனக்கு.” என்றான். 

காரில் பாடல் சத்தமாக ஒலித்ததால்… அதோடு இருவரும் மெதுவாகப் பேசிக்கொண்டு வந்ததால்.. மற்றவர்களுக்குக் கேட்கவில்லை. 

நடு இருக்கையில் இருந்த அமுதாவும் காமாட்சியும் அவர்கள் இருவருமாகப் பேசிக் கொண்டிருக்க, பின் இருக்கையில் இளையபட்டாலம் அரட்டையில் இருந்தனர். 

முதலில் செல்லும் வழியில் ஒரு ஹோட்டலில் நிறுத்தி காலை உணவை உண்டனர். பின்னே அங்கிருந்து அணைக்குச் சென்று சுற்றிப்பார்த்தவர்கள், அருகில் இருந்த நீர் வீழ்ச்சிக்கு சென்று மதியம் வரை அருவியில் ஆடினார். 

வேறு உடை மாற்றிக் கொண்டு மதிய உணவுக்குச் சென்றவர்கள், பிறகு அங்கே பிரசித்தி பெற்ற சில கோவில்களுக்குச் சென்றுவிட்டு, மாலை ஏழு மணி போல வீடு திரும்பினர். 

எல்லோரும் சேர்ந்து சென்றது மிகவும் ஆனந்தமாக இருந்தது. வரும் வழியிலேயே இரவு உணவையும் வாங்கிக் கொண்டு வீடு வந்தனர்.

இருந்த களைப்பில் வந்ததும் எல்லோரும் ஆளுக்கு ஒருபக்கம் உட்கார்ந்து விட, அகல்யா தான் எல்லோருக்கும் உணவு எடுத்து வைத்தாள். எல்லோரும் உண்டுவிட்டு நேரமே படுக்கச் சென்றனர். 


முன்தினம் அருவில் ஆடிவிட்டு வெண்ணிலா சரியாகத் தலையைக் காய வைக்காதது, காலையில் எழும் போதே தலை பாரமாக இருக்க, இதில் ஜெய் வேறு அறையில் இல்லை. குளித்துக் கீழே வந்தால்… அவன் கீழேயும் இல்லை. வேலை என வெளியே சென்றிருக்க… அவள் எதிர்பார்த்தது என்றாலும், அன்று ஏனோ எரிச்சலாக இருந்தது. 

காலை உணவு முடிந்து, மதியம் மீன் குழம்பு என்பதால் அமுதாவே செய்தார். சீக்கிரமே மற்ற வேலைகள் முடிந்து விட…. இருந்த அலுப்பிற்கு வெண்ணிலா அவள் அறைக்குச் சென்று படுத்து நன்றாக உறங்கி விட்டாள். 

மதிய உணவு நேரத்திற்கு வந்த அகல்யா, அவள் உறங்குவதைப் பார்த்து எழுப்பாமல் சென்றுவிட்டாள். வெண்ணிலா விழித்தபோது மூன்று மணி. 

வாயிறு பசிக்க எழுந்து முகம் கழுவி அவள் கீழே செல்ல… ஜெய் அப்போதுதான் வந்தவன், கைகழுவிட்டு உணவருந்த உட்கார, பரிமாற வந்த அகல்யா, இன்னும் அண்ணி உண்ணவில்லை என, ஜெய் மனைவியை அழைக்க எழுந்தவன், அவளே  வருவதைப் பார்த்து, “இன்னும் சாப்பிடலையா நீ. வா சாப்பிடுவோம்.” என்றான். 

ரொம்பத்தான் அக்கறை என மனதிற்குள் நினைத்தவள், பதில் சொல்லாமல் தட்டு எடுத்து வந்து இருவருக்கும் பரிமாறினாள். அவள் தான் வந்துவிட்டாளே என அகல்யா அறைக்குள் சென்றுவிட்டாள். 

மற்றவர்களும் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்ததால்… இவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர்.
“என்ன செம தூக்கமா?” என ஜெய் கேட்க, 

வெண்ணிலாவுக்குப் பதில் சொல்ல விருப்பம் இல்லை. இருந்தாலும், “ம்ம்… அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? நான் என்னமும் பண்றேன்.” என வெடுக்கென அவள் பதில் சொல்ல, அவள் நல்ல மனநிலையில் இல்லை என ஜெய்க்குப் புரிந்தது. 

“என்ன கோபம்?” என்றான் தணிவாகவே. 

“ஞாயிற்றுக் கிழமை கூட வீட்ல இருக்கிறது இல்லை. இதுல நான் என்ன பண்ணா உங்களுக்கு என்ன?” என்றாள் கடுப்பாக. 

“நேத்து முழுக்க உன்னோட தானே இருந்தேன். வேலையை விட்டுட்டு உன்னோட வீட்லயே உட்கார்ந்துக்கவா.. அப்ப உனக்குச் சந்தோஷமா இருக்குமா?” 

“வேலைக்குப் போக வேண்டாம்னு யாரும் சொல்லலை. வேலைக்கு மட்டும் போங்கன்னு தான் சொல்றேன்.”

“வேலைக்கு போகாம ஊராடி சுத்திட்டு இருக்கேன். நான் கலக்டர் வேலை பார்க்கலை. வர்ற சம்பளம் போதும்ன்னு இருக்க.” 


“வசதி வாய்ப்பு இருக்கும் போது சம்பாதிச்சா தான்.”
“இங்க பணத்தை வச்சு தான் மதிப்பு. முதல்ல பணம் இல்லைனா உங்க வீட்ல மதிச்சாங்களா… பேச வந்துட்டா.”

“மனுஷன் பசியில சாப்பிட வந்தா நிம்மதியா சாப்பிட முடியுதா? “ என ஜெய் குரலை உயர்த்த,

இவனிடம் எதற்கு வாய் கொடுத்தோம் என வெண்ணிலா நினைக்க, அறையில் படுத்திருந்த ஜெயராமனும் அமுதாவும் வந்துவிட அதே போல அகல்யாவும் ராதிகாவும் வந்துவிட்டனர். எதோ சத்தம் போடுகிறான் என்றுதான் தெரியும், என்ன சொன்னான் என யாருக்கும் கேட்கவில்லை. 


தந்தையைப் பார்த்ததும், “இத்தனை பேர் வீட்ல இருந்தே… வீட்ல இருங்கன்னு நை நின்னு நொச்சி எடுக்கிறா, இதுல நீங்க தனியா வேற போகச் சொல்றீங்க. நான் வேலை வெட்டிக்கு போன மாதிரி தான்.” என்றவன் கைகழுவி விட்டு வர, 

“போச்சு போச்சு நம்ம மானம் போச்சு.” என வெண்ணிலா நினைக்க, 

“ஞாயிற்றுக்கிழமை புருஷன் வீட்ல இருக்கணும்னு நினைக்குது. அந்தப் பொண்ணு மேல என்ன தப்பு.” என்றார் ஜெயராமன். 

“இவரு ஞாயிற்றுக்கிழமை வீட்லதான் இருக்காறா மா…” என அமுதாவிடம் ஜெய் கேட்க, அகல்யாவுக்கும் யஸ்வந்துக்கும் சிரிப்பு வந்துவிட்டது. 

“எனக்கு எல்லாக் கிழமையும் ஒண்ணுதான்.” அமுதா சலிக்க, 

“எங்களை மாதிரி இருக்க வேண்டாம்ன்னு தானே டா…உங்களைப் படிக்க வச்சோம்.” என்ற ஜெயராமன் “அது வசதியான வீட்டுப் பொண்ணு. நம்ம நிலவரம் தெரியுமா? நீதானே விரும்பி கட்டின. அவங்க வீட்ல பார்த்திருந்தா… அவங்களுக்கு ஏத்த இடத்தில தான் பார்த்திருப்பாங்க. தப்பு உன் மேலதான்.” எனச் சொல்ல, 

“ஆமாம் நான் இவளை கடத்திட்டு வந்து கல்யாணம் பண்ண மாதிரி பேசுங்க.” 

“ஏய் உன்னைக் கட்டாயப் படுத்தியா கல்யாணம் பண்ணேன். சொல்லு உங்க மாமாகிட்ட.” என ஜெய் வெண்ணிலாவிடம் பாய, 

எங்கே தந்தைக்கும் மகனுக்கும் இடையே சண்டை வந்துவிடுமோ எனப் பயந்த வெண்ணிலா, “தப்பு என் மேலத்தான் மாமா. நான் கேட்டேன்னு தான் நேத்து வெளிய கூடிட்டு போனாங்க. காலையில இருந்து தலைவலி, அதுதான் இவர் வீட்ல இல்லாதது ஒருமாதிரி இருந்தது.” என, 

தான் தனிக்குய்த்தனம் போகச் சொன்னது மகனை மிகவும் பாதித்திருக்கிறது என ஜெயராமனுக்குப் புரிந்தது. அன்று சந்திரன் குடும்பம் வீட்டில் இல்லை. காமாக்ஷியின் அண்ணன் வீட்டில் எதோ சாமி கும்பிடு என அங்கே சென்றிருந்தனர். 

“நான் உங்களுக்காகத்தான் தனிக் குடித்தனம் போகச் சொன்னேன். கூட்டு குடும்பத்துல இருக்கும் போது சில விஷயங்கள் கூடக் குறையத்தான் இருக்கும்.” 

“அவங்க பேசி, பதிலுக்கு நீ பேசி, ஒரு சண்டைன்னு வந்திட்டா… பிறகு நாம எப்படி ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்திட்டு இந்த வீட்ல இருக்கிறது.” 

“தனியா போய் அவங்கவங்க வசதிக்கு சந்தோஷமா இருக்கட்டுமேன்னு நினைச்சேன்.” 

“நான் சண்டை போடுற அளவுக்குப் போவேனா என்ன?” ஜெய் சொல்ல, 

“கல்யாணத்துக்கு முன்னாடி நீ என்ன பேசினாலும் பெரிசா தெரியாது, கல்யாணத்துக்குப் பின்னாடி வேற மாதிரி தெரியும்.” 

“புரியுதுப்பா, நான் பார்த்து இருந்துக்கிறேன்.” 

சரியென ஜெயராமன் டிவி பார்க்க உட்கார்ந்து விட, அமுதா சமையல் அறைக்குச் செல்ல, மற்றவர்கள் முற்றத்திற்குச் சென்றனர். 

“நீ டென்ஷன் ஆனா எல்லாரையும் ஏன் அண்ணா டென்ஷன் பண்ற? என அகல்யா சொல்ல, 

“நல்லா சொல்லு, வீட்ல இருந்தா என்னன்னு தெரியாம கேட்டுட்டேன்.” என வெண்ணிலா கணவனை முறைக்க, 

“இனிமே கேட்ப?” என யஸ்வந்த் வெண்ணிலாவைப் பார்த்து சிரிக்க, 

“ம்ம்… எல்லாம் ஒன்னு சேர்ந்திட்டு என்னை ஏதோ வில்லன் மாதிரி பார்க்கிறீங்க.” என்றான் ஜெய்.

“நீ பண்றது எல்லாம் வில்லன் வேலைதான் அண்ணா.” 

“ஆமாம் சரியா சொன்ன அகல்யா. எதாவது சாதாரணமா சொன்னாக் கூட எண்ணையில தெளிச்ச தண்ணி மாதிரி பட்டு பட்டுன்னு வெடிக்க ஆரம்பிச்சிடுவார்.” 

“எண்ணையில எதுக்கு டி தண்ணியைத் தெளிக்கிற லூசா நீ?” ஜெய் கேட்க, 

“உங்களைக் கல்யாணம் பண்ணி இருக்கேன் இல்லை. நான் லூசுதான்.” என வெண்ணிலா சொல்ல, அதைக் கேட்டு அகல்யாவுக்கும் யஸ்வந்துக்கும் ஒரே சிரிப்பு. 

“இன்னும் சத்தமா உங்க மாமா காதுல விழுகிற மாதிரி சொல்லு… திரும்ப அவர் சுப்ரபாதத்தை ஆரம்பிக்கட்டும்.” 

“ஆமாம் எனக்கு வேற வேலை இல்லை பாருங்க.” 

இவர்கள் இருவரும் சண்டையிடுவதை அகல்யாவும் யஸ்வந்தும் ஆர்வமாகப் பார்க்க, 

“படிக்கிற வேலை இல்லையா உனக்கு. இங்க என்ன வாய் பார்க்கிற? டேய், நீ வந்தா தோட்டத்துப் பக்கம் எல்லாம் எட்டி பார்க்கிறது இல்லை. இப்படி வீட்ல பொம்பளைங்க கூடவே பொழுதை போக்கிடுற.” என ஜெய் தன் தம்பி தங்கையிடம் பாய… விட்டால் போதுமென்று இருவரும் வீட்டிற்குள் ஓடிவிட்டனர். 

கணவனைப் பார்த்து முறைத்த வெண்ணிலா, “உங்களுக்குதான் ஆபீஸ் நாள் லீவ் நாள் எல்லாம் ஒன்னு. அவங்களையும் ஏன் படுத்துறீங்க?” என, 

“ஆமாம் பேசவே தெரியாத அப்பாவியா முகத்தை வச்சிட்டு இருப்பியே… அது நீ தானே…முன்னாடி எல்லாம் இவ்வளவு பேச மாட்டியே, இப்ப என்ன இவ்வளவு பேசுற?” என்ற கணவனைப் பார்த்து கும்பிட்டவள், 

“போதும் என்னை விடுங்க. நீங்க டென்ஷன் ஆனா எல்லாரையும் டென்ஷன் ஆக்கிடுவீங்கன்னு அகல்யா சொன்னது உண்மைதான்.” என வெண்ணிலாவும் உள்ளே ஓடிவிட, 

பண்றது எல்லாம் இவ பண்ணிட்டு என்னைச் சொல்றா என ஜெய் கடுப்பில் இருந்தான். அன்று இரவு அறைக்கு வந்ததும், “என் மேல கோபமா?” என வெண்ணிலா கேட்க, 

“ஒரு கோபமும் இல்லை. திரும்ப ஆரம்பிக்காத.” என்றான். 

“ஆனா எனக்கு உங்க மேல கோபம் தான். நீங்க திட்றதுன்னா என்னைத் தனியா திட்ட வேண்டியது தானே… எதுக்கு எல்லார் முன்னாடியும் திட்டினீங்க.” 

“நான் எங்கே எல்லார் முன்னாடியும் திட்டினேன். அதோட அவர் உன் தாய் மாமா தானே… அதுவும் அவர் உனக்குத்தானே சப்போர்ட் பண்ணார்.” 

வெண்ணிலா அவனையே பார்க்க, “நான் உனக்காகத்தான் சீக்கிரம் வந்தேன். இல்லைனா சாயங்காலம் வரை வேலை இருந்தது. வந்ததும் நீ முகத்தைத் தூக்கி வச்சதும், அதோட நான் காலையில வேற சாப்பிடலை பசியில இருந்தேன். அதுதான் கோபம் வந்திடுச்சு.” என்றான்.

வெண்ணிலாவுக்குமே தான் அவசரப்பட்டுப் பேசியிருக்க வேண்டாம் என்று தோன்றியது. கணவனும் மனைவியும் மீண்டும் ராசியாகி விட்டனர். 

அதன் பிறகு சண்டை சச்சரவு இல்லாமல் நாட்கள் செல்ல, கற்பகத்தின் தங்கை பேத்திக்குத் திருமணம். இவர்களுக்கும் பத்திரிகை வைத்திருந்தனர். 

“நீ உங்க வீட்டோட போயிட்டு வா… நான் வரலை.” என ஜெய் சொல்லிவிட… கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் ஒரு வாக்குவாதம் ஆரம்பித்தது. 

“ஏன்?” 

“எனக்கு வரணும்னு தோணலை.” 

“இதெல்லாம் ஒரு காரணமா?” என வெண்ணிலா கோபப்பட…. 

“இங்க பாரு நம்ம கல்யாணம் திடிர்னு நடந்தது. என்னை எல்லோரும் எதோ வேடிக்கை பொருள் மாதிரி பார்த்தா எனக்குப் பிடிக்காது. கொஞ்ச நாள் போகட்டும். அதுக்குள்ள வேற விஷயம் கிடைக்கலாம்.” என்றான். 

“நீங்களா எதாவது கற்பனை பண்ணிக்கிட்டு பேசுங்க. இப்படியெல்லாம் யோசிக்கிறவர் என்னைக் கல்யாணம் பண்ணி இருக்கக் கூடாது.” என வெண்ணிலாவும் பட்டென்று சொல்லிவிட, 

“ஏன் டி? ஏன்? உன்னை விரும்பி தொலைச்சேன்னு உனக்குத் தெரியும் தானே. பிறகும் இப்படிக் கேட்டு வச்சேன்னு வை… பளார்ன்னு அறைதான் விழும்.” 

“நான் உன்னை விரும்பி கல்யாணம் பண்ணது நமக்குத்தான் தெரியும். மத்தவங்களைப் பொறுத்தவரை, நான் திடீர் மாப்பிள்ளை தான்.” 

“நம்மைப் பார்த்தா அங்க கல்யாணத்துல உட்கார்ந்து அலசி ஆராய்வாங்க. அது தேவையா? அதோட இது ஒன்னும் அப்படி முக்கியமான கல்யாணம் இல்லை. நீ உங்க வீட்டோட போயிட்டு வா…” என்றான் முடிவாக. 

இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி இதுவரை வேறு எந்தத் திருமணத்திற்கும் செல்லவில்லை. உள்ளுரில் வந்த சில திருமணங்களுக்குத் தூரத்துச் சொந்தம் என்பதால் பெரியவர்களே சென்று வந்திருந்தனர். 

முதல்முறையாகக் கணவனோடு திருமணத்திற்குச் செல்லும் ஆசையில் நிறையவே கற்பனை செய்து வைத்திருந்தாள். 

இனிமேல் இவனை நம்பி எந்தக் கற்பனையும் செய்யக் கூடாது என நினைத்துக் கொண்டாள். 
 

Advertisement